Friday 29 June 2012

இன்னும் சில ஆண்டுகளில் ...


காட்டாற்று வெள்ளத்தில் 

அழுக்குகள் எல்லாம் 

அடித்துச் செல்வதுபோலவே 

காலம் காலமாய் 

சொல்லப்பட்ட கருத்துக்கள் 

எல்லாம் 

அறிவியல் வெள்ளத்தில் 

அடித்துச் செல்லப்படும் 

நீங்களும் நானும் 

விரும்பினாலும் 

விரும்பாவிட்டாலும் ! 


சொர்க்கமும் நரகமும் 

மட்டுமல்ல 

அதற்காகச் சொல்லப்பட்ட 

சொர்க்க இன்பங்களும் 

நரகச் 

சித்ரவதைகளும் 

சிறுவர்களுக்குச் 

சொல்லப்படும் கதைகளாய் 

மாறக்கூடும் ! 


அனைத்து மனிதர்களும் 

ஆப்பிரிக்காவில் தோன்றியவர்களே ! 

சிவப்பும் வெளுப்பும் 

நம் மூதாதையர் தோலின் நிறமல்ல 

கருப்பு மட்டுமே நமது 

மூதாதையர் நிறம் ! 


எங்கோ தோன்றி உலகெங்கும் 

பரவி நிற்கும் உருளைக்கிழங்கு போலவே 

ஆப்பிரிக்காவில் தோன்றி 

உலகெங்கும் விரவி நிற்கிறது 

மனித இனம் என்பது 

அறிவியலின் வழியே 

நிருபிக்கப்படும்பொழுது 

இன்றைய பக்தர்களும்கூட 

அன்றைக்கு 

ஒப்புக்கொள்ளக்கூடும் 

மனிதர்கள் கடவுள் 

என்பவரால் படைக்கப்பட்டவர்களல்ல! 

பரிணாம வளர்ச்சியால் 

வளர்ச்சி பெற்றவர்கள் என்பதை ! 


தேவைக்கேற்ற வகையில் 

மனிதர்கள் செயற்கையாய் 

உருவாக்கப்படும்பொழுது 

பக்தர்களும் கூட 

நம்பக்கூடும் 

மாற்றுத்திறனாளிகளாய் 

பிறப்பது முன் ஜென்மப் 

பாவமல்ல - 

மாற்றி அமைந்திட்ட 

சில ஜீன்களின் செயல் என்று ! 


உலகில் உள்ள மக்களெல்லாம் 

என்னுடன் பிறந்த பட்டாளம் 

என்று அறிவியல் நிருபிக்கும் 

நேரத்தில் 

செயற்கையாய் மனிதர்கள் 

உருவாக்கிய ஜாதிகளும் 

மதங்களும் ஏன் 

நாடுகள் எனும் சுவர்களும்கூட 

சுக்கு நூறாய் உடையக்கூடும் 

மனிதர்கள் அனைவரும் உலகில் 

ஒரு தாய் மக்கள் எனும் 

உணர்வில் வாழக்கூடும்.

                                            வா. நேரு 
- வெளியிட்ட eluthu.com-ற்கு(28.05.2012)க்கு நன்றி 

Wednesday 27 June 2012

அண்மையில் படித்த புத்தகம் : அனுராதா



நூலின் தலைப்பு : அனுராதா

வங்க மொழியில் எழுதியவர் : சரத் சந்திரர்

தமிழ் மொழிபெயர்ப்பு : சு.கிருஷ்ண்மூர்த்தி

வெளியிட்டவர்கள் : சந்தியா பதிப்பகம், நியூடெக் வைபவ், 57-A,53-வது தெரு,
                                             அசோக் நகர் ,சென்னை-83  பேச : 044-24896979/55855704.
முதல் பதிப்பு : 2005
விலை ரூ 60
மொத்த் பக்கங்கள் : 144

                                             சரத் சந்திரர் என்னும் வங்க எழுத்தாளரை அறிமுகப்படுத்த "தேவதாஸ் " என்னும் கதாபாத்திரத்தை சொன்னாலே புரியும். இப்பொழுதும் யாராவது தாடி வைத்துக்கொண்டு அலைந்தால் என்ன தேவதாஸ் மாதிரி அலைகிறாய் என்று சொல்வதைப் பார்க்கின்றோம். திரைப்படமாக வந்து கூட வருடக்கணக்கில் ஓடிய கதை அது . அப்படிப்பட்ட சரத் சந்திரர் எழுதிய 5 சிறுகதைகளின் தொகுப்புதான் " அனுராதா " என்னும் தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

முத்ல்கதை , "வழக்கின் முடிவு", இரண்டாவது கதை "அபாகியின் சுவர்க்கம்", மூன்றாவது கதை " ஏகாதாசி பைராகி", நாலாவது கதை " அனுராதா", ஐந்தாவது கதை " மகேஷ்" . . ஒரு 150 ஆண்டுகளுக்கு முன்னால் நிலவிய ஜமீந்தாரிய ஆட்சிமுறை, அதில் சாதாரண மக்கள் பட்ட துயரங்கள், துன்பங்கள், கொடுமையான ஜாதிய முறை அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரம் - இவைதான் பொதுவான கதைக்கரு என்று எடுத்துக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக் 5-வது கதையான மகேஷ் என்னும் கதை ஓர் எருதுவைப் பற்றிய கதை . கபூர், அவரது மகள் அமீனா, அந்த ஊரின் பிராமண ஜமீந்தார், அவரது வெலையாட்கள் - மகேஷ் என்னும் மாடு இவர்கள்தான் கதையின் மாந்தர்கள்.  கிராமத்தில் நிலவும் வறுமை, குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அலையும் நிலைமை, ஜமீந்தார் வீட்டுக்கு மட்டும் தனிக்கிணறு ஆனால் மற்றவர்கள் அதில் தண்ணீர் எடுக்க முடியாது, அமீனா முஸ்லீம் என்பதால் பொதுக்கிணற்றில் போய் எடுக்க முடியாது, யாராவது பிடித்து ஊற்ற வேண்டும், யாரும் ஊற்ற வில்லையென்றால் நின்று கொண்டே இருக்க வேண்டியதுதான் போன்ற அந்தக்கால் சமூக நிலைமைகள் மனித நேயத்தோடு சொல்லப்பட்டிருக்கும் விதம் நம்மை நெகிழ வைக்கிறது. அடுத்த வேளைக்கு அல்லாடும் குடும்பத்தில் இருக்கும் மகேஷ் என்னும் பெயர் கொண்ட  மாட்டுக்கு போட வைக்கோல் இல்லை, குடிக்க வைக்க த்ண்ணீர் இல்லை ,விளைந்த வைக்கோல் அனைத்தையும் ஜமீந்தார் ஆட்கள் கடனுக்காக எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள். அடி மாடாக விற்க சம்மதித்து அட்வான்ஸ் பணம் வாங்கி பின்பு மாட்டை பிடிக்க வந்தவனை திட்டி அட்வான்ஸ் பணத்தை திருப்பிக்கொடுத்து விடுகிறான் கபூர்.மாடு அவிழ்த்துக்கொண்டு ஓடி  அடுத்தவன் காட்டில் மேய்ந்ததால் அடியும் அவமான்மும் படுகிறான்.மூக்கைத் தரையில் தேயத்துக்கொண்டே தரையில் சுற்றி சுற்றி நடப்பது என்னும் தண்டனை என்று சொல்கின்றார் கதாசிரியர். முடிவில் அரும்பாடுபட்டு தன் மக்ள் கொண்டுவரும் தண்ணீரை மகேஷ் தட்டி விடுவதால் கலப்பையைக் கொண்டு அடிக்க, மகேஷ் இறந்து விடுகிறது. ஜமிந்தாருக்கு கட்ட வேண்டிய அபராதப் பணத்திற்கு பயந்து அப்பா கபீரும் , மகள் அமீனாவும் கிராமத்தை விட்டு இரவோடு இரவாக வெளியேறுகிறார்கள். அல்லா மீது நம்பிக்கை கொண்ட கபூர் கடைசியில் சொல்வது " அல்லா , நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் சரி ! ஆனா என்னோட மகேஷ் தாகத்தோடு செத்துப்போயிடுச்சு . அது மேயறதுக்குக் கொஞ்ச நெலங்கூட யாரும் மிச்சம் வைக்கல்லே. நீ கொடுத்த பூமியிலே வெளையற புல்லையும் நீ கொடுத்த தண்ணியையும் அதுக்குக் குடுக்காதவனோட குற்றத்தை மட்டும் நீ ஒருபோதும் மன்னிக்காதே " . இன்றைக்கும் கிராமங்களில் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் நல்ல தண்ணீர் குடிக்க கிடைக்கவில்லை. மாடுகளுக்கு தீவனுமும் இல்லை. வறுமையில் இருக்கும் விவசாயி மாடுகளை வித்தால் , பசு புனிதமானது அடிமாட்டுக்கு விற்கக்கூடாது என்று மதவாதிகள் வந்து விடுகின்றார்கள். சமீபத்தில் தர்மபுரி பக்கத்தில் வியாபாரிகளை  வாங்கிச் சென்ற மாடுகளை லாரியில் இருந்து கட்டாயமாக இறக்கி வாங்கிச் செனறவர்களை விரட்டியிருக்கிறார்கள் சில பேர்.மனிதர்கள் வாழவும் , அவர்கள் வளர்க்கும் மாடுகள் வாழவும் வழியில்லாத நிலைமை ஏன்? என்று சிந்திக்க மறுக்கும் மதவாதிகள் கட்டாய்ம படிக்க வேண்டிய கதை இது.
 
                             இரண்டாவது கதையான "அபாகியின் சுவர்க்கம் " இறந்த பின்பு சுடுகாட்டில் நிலவும் சாதியத்தை சொல்லும் கதை. ஒரு பார்ப்பணப் பெண் இறக்கிறார். அவரது உடலை  சந்தனக் கட்டைகளால் அடிக்கி வைத்து எரிக்கிறார்கள். அந்தப் பெண் எரிக்கப்படுவதை தாழ்த்த்ப்பட்ட பெண்ணான அபாகி பார்த்துக்கொண்டிருக்கிறாள். ஒரு விழா போல செய்யப்படும் சடங்குகளை விவரிக்கிறார் எழுத்தாளர், அபாகியின் பக்கத்தில் வரும் தன் மகனிடன் தான் இறந்தால் , சந்தனக் கட்டைகளை வைத்து எரிக்க வேண்டாம் , நமக்கு வசதி கிடையாது, ஆனால் நம்து வீட்டின் முன்னால் நாம் வளர்க்கும்  மரத்தினை வெட்டி அக்கட்டையை வைத்து எரிக்க மகனை கேட்டுக்கொள்கிறாள். அபாகி இறந்த அன்று அந்த மரத்தை வெட்ட அனுமதி ஜமீந்தார் ஆட்களால் மறுக்கப்படுகிறது. இந்த ஜாதிக்கு கட்டையை வைத்து எரிக்க ஆசையா . அதெல்லாம் கூடாது என்று மறுக்கப்படுகிறது. தனது அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற அலையும் மகன், அதனை சாதி அடிப்ப்டையில் மறுக்கும் சமூகம் , கடைசியில் கட்டை இல்லாமல் எரிக்கப்படும் அம்மா - இதுதான் கதை . ஜாதியக்கொடுமையை , இல்லாதவர்களின் ஆசை எப்படி நகைப்புக்கு உள்ளாகப்படுகிறது என்பதும் சொல்லப்படுகின்றது.

                                     மனதை நெகிழ வைக்கும் கதைகளாக இவைகள் உள்ளன. சரத் சந்திரரைப் பற்றிய முழுமையான அறிமுகம் இப்புத்தகத்தின் முன்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. பிறப்பால் பார்ப்பனர் என்றாலும் ஜாதிய ரீதியான கொடுமைகளை மிக நுட்பமாகவும், கூர்மையாகவும் பதிவு செய்கிறார் சரத் சந்திரர். அவரின் ஊர் சுற்றிய தன்மையே அவரது எழுத்தின் வெற்றிக்கு காரணம் எனலாம்.மொழி பெயர்ப்பு செய்த சு,கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு மொழி பெயர்ப்பு நூல் என்ற உணர்வே நமக்கு வராத அளவுக்கு இயல்பாக மொழி பெயர்த்திருக்கிறார்.

                                          படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு "அனுராதா" . மதுரை சிம்மக்கல் பொது நூலகத்தின் எண்  166328 . வீட்டு நூலகத்தில் வாங்கி வைக்க வேண்டிய புத்தகம்.

Tuesday 19 June 2012

மதுரையில் தமிழில் இணைய தளம் பயிற்சி


மதுரையில் தமிழில் இணைய தளம் பயிற்சி பெரியார் மணியம்மை பல்கலைக்கழகமும் பகுத்தறிவாளர் கழகமும் இணைந்து நடத்தியது

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
மதுரை, ஜூன் 19- 17.6.2012 ஞாயிற்றுக் கிழமை காலை 10 மணி முதல் மாலை 5.30 வரை மதுரை மன்னர் திரு மலை நாயக்கர் கல் லூரியில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்க விழாவில் பகுத்தறிவா ளர் கழக மாவட்ட செய லாளர் சுப.முருகானந் தம் அனைவரையும் வர வேற்றார். பகுத்தறிவா ளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர் வா. நேரு தலைமை தாங் கினார்.
இணைய தள பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது
திராவிடர் கழ கத்தின் தலைமைச் செயற் குழு உறுப்பினர் தே. எடிசன் ராஜா, மதுரை மண்டல தி.க. செய லாளர் வே.செல்வம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசி ரியர் ஜி.ஜெகஜோதி ஆகி யோர் முன்னிலை வகித் தனர்.
ப.க. மாநிலச் செய லாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் அறிமுக வுரையாற்றினார். அவர் தனது உரையில் தமிழில் இணையதளப் பயிற்சி, தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் நடை பெறுகிறது.
நமது எதி ரிகள் இணையதளத்தில் பல்வேறு பொய் செய் திகளைப் பரப்புகிறார் கள். எடுத்துக்காட்டாக , விற்பனைக்கு என்று வெளிநாட்டில் விளம் பரம் செய்யப்பட்ட வீட்டை முன்னாள் மத் திய அமைச்சர் ஆ.ராசா வின் வீடு என்று இணை யத்தில் பொய்யாய்ப் பரப்பினார்கள்.
இப்படி பொய், பொய் யாய்ப் பார்ப்பனர்களும், ஊடகங்களும் பரப்பும் பொய்மைக்கு எதிராக இணையதளத்தில் கருத்துப்போராட்டம் நடத்த வேண்டியிருக் கிறது. அதற்கு இப்படிப் பட்ட தமிழ் இணைய தளப் பயிற்சி தேவைப் படுகின்றது என்று குறிப் பிட்டார்.
தலைமை வகித்த வா.நேரு தனது உரையில்  இக்கல்லூரி யில் பயிலரங்கம் நடத்த அனுமதி அளித்த மன் னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் செயலாளர் அய்யா எம்.விஜய ராகவன் அவர்களுக்கும், முதல்வர் ச.நேரு, சுய நிதிப் பிரிவு இயக்குநர் இராஜா.கோவிந்தசாமி அவர்களுக்கும் பேருதவி புரியும் பேரா.நம்.சீனி வாசன் அவர்களுக்கும் - பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்திற்கும் நன்றியைக்கூறி , இப்பயி லரங்க வகுப்பை முழு மையாகப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பயிற்சி யாளர்களைக் கேட்டுக் கொண்டார்.
குடியரசுத் தலைவ ரின் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்ற  புதுச்சேரியைச் சார்ந்த பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகப் பங் கேற்று வகுப்புக்களை நடத்தினார்.
தமிழ் இணையம் - தோற்றம், வளர்ச்சி, தமிழில் இணை யத்தை பய்ன்படுத்துவ தற்காக உழைத்த பெரு மக்களை அவர்களின் புகைப்படங்களோடு குறிப்பிட்டு அவர்களின் பங்களிப்பை விளக் கினார். தமிழ் இணைய மாநாடுகள்,சென்னை தமிழ் இணைய மாநாடு 99-ஆம் ஆண்டு நடை பெற்றதன் பயனாக ஒருங் குறி (ரஉடினந) உருவாக் கம் போன்ற வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிட் டார்.
மின்னஞ்சல் பயன் பாடுகள், வலைப்பூ உருவாக்கம்,வலைப்பூவில் எப்படி படங்களை ஏற் றுவது, எப்படி செய்தி களை ஏற்றுவது போன் றவற்றை விளக்கிக் கூறி னார். தமிழில் எப்படி தேடுவது, எப்படி டைப் செய்வது போன்றவற்றை விளக்கிப் பயிற்சியளித் தார். அடுத்த  வகுப்பில் , தமிழ் விக்கிபீடியா, இணைய இதழ்கள், பல் வேறு வலைத்தளங்கள், தமிழ் இணையப் பல் கலைக்கழகம்  போன்ற தலைப்புகளில் செய் முறையோடு  பேராசிரி யர் முனைவர் மு.இளங் கோவன் பாடம் நடத் தினார்.
விடுதலை இணைய தளம், அதில் உள்ள பெரியார் வலைக்காட்சி, பெரியார் பண்பலை, உண்மை, பெரியார் பிஞ்சு, தி மாடர்ன் ரேசன லிஸ்டு போன்ற இதழ் களை எப்படி படிப்பது, கழக நிகழ்ச்சிகளை எப் படிப் பார்ப்பது, விடு தலை குழுமத்தில் எப் படி இணைவது, பேஸ் புக் போன்ற சமூக தளங் களை எப்படிப்பார்ப் பது போன்றவற்றை ச.பிரின்சு என்னாரெசு பெரியார் விளக்கினார்.
பங்கேற்ற மாணவ மாண விகள் கணினி செயல் முறை வகுப்புகளின் மூலம் தமிழில் இணைய தளத்தைப் பயன்படுத் தவும், தமிழில் உள்ள இணையதளங்களைப் பற்றி அறிந்துகொள்ள வும் மிகப்பெரிய வாய்ப் பாக இப்பயிலரங்கம் அமைந்தது.
மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் மதுரை புற நகர் மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் மா.பவுன்ராசா, மாநகர் மாவட்ட பகுத்தறிவா ளர் கழகத் தலைவர் சே.முனியசாமி ஆகி யோர் முன்னிலை வகித் தனர். மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் நம்.சீனி வாசன், பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் க.நல்லதம்பி, பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் பேரா.ஜெகஜோதி  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பங்கேற்பா ளர்கள் சார்பாக சுசீலா வேல்முருகன், கவிஞர் கோ ஆகியோர் தாங்கள் பயன்பெற்றது பற்றி கருத்துக் கூறினர்.
கவிஞர் கோ, தற் செயலாக இப்பயிலரங் கம் பற்றி கேள்விப்பட்ட தாகவும், இன்றைக்கு வராமல் போயிருந்தால் எவ்வளவு பெரிய வாய்ப் பைத் தவற விட்டிருப் பேன் என்று குறிப்பிட்டு சிறப்பாக பயிலரங்கம் நடைபெற்றதற்கு நன்றி தெரிவித்தார்.   பங்கு பெற்ற மாணவ மாணவி களுக்கு சான்றிதழ்கள் வழங்கி, ஓய்வு பெற்ற நீதிபதி பொ.நடராசன் சிறப்புரையாற்றினார் .
அவர் தனது உரையில் கணினி இன்றைய நிலை யில் எல்லா நேரங்க ளிலும் தேவைப்படுகின் றது. மதுரையில் இன் னும் இதனைப் போல 4, 5 தமிழ் இணையப் பயிலரங்கங்கள் நடை பெற வேண்டும். அப்படி நடைபெற அனைத்து விதமான உதவிகளை யும் வழங்கத் தான் தயாராக  இருப்பதாக வும் தெரிவித்தார்.
மன் னர் திருமலை நாயக்கர் கல்லூரி கணினி பயிற்சி கத்தில் பணியாற்றும் பேராசிரியர் கண்ணன் மற்றும் ஊழியர்களுக் கும், பெரியார் மணி யம்மை பல்கலைக் கழகப்பேராசிரியர்கள் அருணா, ஜி.ஜெகஜோதி அவர்களுக்கும் புத்தங் கங்கள் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினர்களுக் கும், வலைப்பூவை சிறப் பாக வடிவமைத்து தொடர்ந்து இயஙகும் தோழர் பழனி வ.மாரி முத்து(த மிழோவியா. பிளாக்ஸ் பாட்.காம்) ஆகியோர்களுக்கு சிறப் புகள் செய்யப்பட்டன. மதிய உணவு, தேநீர், மினரல் வாட்டர், குறிப் பேடு உள்ளிட்டவைகள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.
நிகழ்வின் இறுதியில்  மதுரைபுறநகர் மாவட்ட திராவிடர் கழக செய லாளர் அ.வேல்முருகன் நன்றி கூறினார்.

Friday 1 June 2012

தமிழ் இணையப் பயிலரங்கம்


தமிழ் இணையப் பயிலரங்கம்

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
மக்கள் பல்கலைக்கழகமாம் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தில், ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யத்தின் சார்பாக தமிழ் இணையப் பயிலரங்கம் 20.05.2012 காலை 10 மணி முதல் மாலை 7 வரை நடைபெற்றது. தந்தை பெரியாரின் வழிமுறையே மக்கள் நலனை முன்னிட்டு வேறு யாரும் சிந்திக்காத வழியில் சிந்திப்பது, அதனை செயல்படுத்த எத்தனை இடை யூறுகள் வந்தாலும் எதிர்கொள்வது, இறுதி வெற்றி நமதே என்னும் நம்பிக்கையில் தொடர்ந்து பயணிப்பது, வெற்றி பெறுவது என்னும் வழிமுறையாகும். அந்த வழியில் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் நடைபெற்ற இந்த தமிழ் இணையப் பயிலரங்கத்தில் பங்கு பெற்றோருக்கு ஒரு புதிய  அனுபவமாகவும் அமைந்தது. தொடக்க விழா தொடக்க விழாவில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அனைவரையும் வரவேற்றார். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் துணை முதன்மையர் பேரா.க. திருச்செல்வி தலைமையுரையாற்றினார். பகுத்தறி வாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் வா.நேரு அறிமுகவுரையாற்றினார். மக்கள் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் நல்.இராமச் சந்திரன் அவர்கள் தொடக்கவுரையாற்றினார்.
கிராமப் பகுதிகளிலிருந்து வந்திருந்த மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதத்தில் அவரது உரை அமைந்தது. மிக சமீபத்தில் வெளிவந்த சுபாரட்டோ பாக்சி என்பவர் எழுதிய ஆங்கிலப் புத்தகமான M.B.A. at 16 A teenagers guide to Business... என்னும் புத்தகத்தில் இருந்த வாழ்க்கை வரலாறுகளை சுட்டிக்காட்டினார். சாதாரண கிராமத் தில் பிறந்து வளர்ந்த அவர்கள் எப்படி பெரிய ஆட்களாக வளர்ந்தார்கள் என்பதனையும், அதற்கு இணையம் எவ்வளவு உதவியாக இருந்தது என்பதனை யும் புத்தகத்திலிருந்து மேற்கோள்கள் காட்டி உரை யாற்றினார். இணையத் தினை சரியாகப்பயன்படுத்து வதன் மூலம் பலவகை களில் முன்னேறலாம் என்பதனை எடுத்துக்காட்டினார். தொடர்ந்து திராவிடர் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் உரத்தநாடு குணசேகரன் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் கணினி அறிவியல் துறை இணைப் பேராசிரியர் கா.செந்தில்குமார் அவர்கள் நன்றி கூற காலை தொடக்க விழா முடி வுற்றது. வந்திருந்த பயிற்சியாளர்கள், விருந்தினர்கள் அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டு, கணினி அறைக்கு வந்து சேர்ந்தோம்.
திராவிடர் கழக தலைமை நிலையச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் மாணவர்களுக்கு வழிகாட்டுதல் உரையாற்றினார். (20.5.2012 வல்லம்)
பயிற்சியின் ஆரம்பத்தில் தடுமாற்றம்
ஏறத்தாழ 150க்கும் மேற்பட்ட  பயிற்சியாளர்கள், அனைவரும் லேப்டாப் எனப்படும் மடிக் கணினி முன் அமர்ந்தனர். பயிற்சியாளர்களில் 80 சதவீதம் 21 வயதுக்கு உட்பட்டவர்கள். பெரும்பாலோர் இப்போது தான் கணினியைப் பயன்படுத்துகிறோம் என்று கூறிட கணினி வகுப்பினை ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் எடுக்க ஆரம்பித்தார். கணினியைப் பற்றி, இணையம் பற்றிய வரலாறுகளை எடுத்துக்கூறிவிட்டு , நோட்பேடு எனப்படும் கணினி மென்பொருளை திறந்து ஆங்கிலத்தில் டைப் செய்யுங்கள் என பணித்தார். பல பேர் அப்போதுதான் தட்டுத்தடுமாறி கணினி விசைப்பலகையில் தட்டச்சு செய்ய ஆரம்பித்தனர். அடுத்து தேடு தளம் என்றால் என்ன என்பதனைக் கூறி  கூகிள் என்னும் தேடுதளம் பற்றிய குறிப்புகளைத் தந்தார். கூகிள் என்னும் தேடுதளத்தில் தமிழிலேயே நீங்கள் தேடலாம் என்பதனைத் தெளிவுபடுத்தினார். தமிழில் நீங்கள் தட்டச்சு செய்யலாம் என்பதனைக் குறிப்பிட்டு தமிழெழுதி என்னும் (Tamil editor)   இணைய தளத்தினை பயிற்சியாளர்களுக்கு அறிமுகப் படுத்தினார். தமிழ் எழுதி என்னும் பகுதிக்குச் சென்று தங்கள் பெயரை, தங்கள் ஊர்ப்பெயரை எல்லாம் அடிக்க ஆரம்பித்தவுடனேயே பயிற்சி பெறுபவர்களிடம் ஓர் உற்சாகம் பற்றிக்கொண்டது. கணிப்பொறியைக் கையாளுவது மட்டுமல்ல, அதில் தமிழில் தாங்கள் விரும்பியவண்ணம் அடிக்கலாம் என்பதனை நேரடியாகக்  கற்றுக்கொண்டனர். கணினி கற்றுக் கொள்வது கடினமல்ல, இணைய இணைப்பு இருந்தால் தமிழில் நமது கருத்துகளை பகிர்ந்து கொள்வது கடினமல்ல என்பதனை உணர்ந்து கொண்டனர். கணினியில் தட்டச்சு செய்வதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் கை தூக்குங்கள் எனச்சொல்ல, அப்படி கை தூக்கியவர்களிடத்தில் அருகில் சென்று எப்படி தட்டச்சு செய்வது என்பதனை தெளிவுபடுத்தினர். தெளிவுபடுத்தும் பணியில் ஏறத்தாழ 10க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஆர்வமாக இந்த பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு தெளிவுபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
மின்னஞ்சலும் நடைமுறை வாழ்வும்
அருமையான மதிய உணவு பல்கலைக்கழகத்தின் சார்பாக வழங்கப்பட்டது. மதிய உணவுக்குப்பின் பயிற்சி பெறுபவர்கள் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டனர். ஏற்கெனவே கணினி தெரிந்தவர்களுக்கு, மேலும் பல செய்திகளை வழங்கும்முகமாக பிரின்சு என்னாரெசு பெரியார் வகுப்பு எடுத்தார். ஜிமெயிலில் மின்னஞ்சல் உருவாக்குவது எப்படி என்பதனை வா.நேரு விளக்கிக்கூறி, ஒவ்வொரு படியாக கேட்கும் விவரங்களை பதிவு செய்யச் சொல்ல, பயிற்சி பெறுவோர் தங்களுக்குரிய மின்னஞ்சல்களை உருவாக்கிக்கொண்டனர். மின்னஞ் சல் அனுப்புவது எப்படி, மின்னஞ்சலில் உள்ள பல்வேறு வசதிகள் போன்றவை சொல்லித்தரப்பட்டது.  சமூக வலைத்தளங்கள் என்றால் என்ன? பேஸ் புக்கைப் பயன்படுத்துவது எப்படி, நாம் எப்படி கேள்விகள் கேட்கலாம், பதில்கள் எப்படிக் கொடுக்கலாம் போன்ற வற்றை பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில துணைத் தலைவர் தகடூர் தமிழ்ச் செல்வி விளக்கினார். எங்கு போனாலும் மின்னஞ்சல் இனித் தேவை, மின்னஞ்சலின் பாஸ்வேர்டை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள் என்பதும் சொல்லப்பட்டது. விக்கிபீடியா என்னும் இணைய தளத்தின் பயன், அதில் சென்று எப்படி கருத்துக்களை எழுதுவது, தவறாக யாரும் எழுதி யிருந்தால் எப்படி சரி செய்வது போன்றவை விளக்கிக் கூறப்பட்டன.
இணைய இணைப்பில் நீங்கள் தனியாக அமர்ந்திருந் தாலும், நீங்கள் கண்காணிக்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றீர்கள் என்னும் உண்மையை உணர்ந்து செயல்படுங்கள். ஒவ்வொரு வீட்டிற்கும் கதவு எண்ணும், தெருப்பெயர், ஊர்ப்பெயர் இருப்பதைப் போலவே, ஒவ்வொரு இணைய இணைப்பிற்கும் அய்.பி. எனப்படும் இணைய முகவரி இருக்கிறது, எளிதாக யார், எதனை எங்கிருந்து அனுப்பியிருக்கின்றார்கள் என்பதனை கண்டுபிடிக்க இயலும் என்பவை போன்ற நடைமுறை உண்மைகளை,  பயிற்சியாளர்களுக்கு செய்தித்தாள் களில் வந்த சில செய்திகளைக் குறிப்பிட்டு பயிற்றுநர்கள் விளக்கினர்.
நமது வலைதளங்கள்
நமது விடுதலை இணைய தளத்தின் முகவரி, விடுதலை இணைய தளத்தில் உள்ள Periyar.org மற்றும் பெரியார் பண்பலை , எப்படி விடுதலை இணைய தளத்தில் சென்று நமது கருத்துகளை எழுதுவது போன்ற பல்வேறு செய்திகள் விளக்கப்பட்டன. உண்மை, தி மாடர்ன் ரேசனலிஸ்ட், பெரியார் பிஞ்சு என நமது பத்திரிகைகள் அனைத்திற்கும் இருக்கும் வலைத் தளங்கள் விளக்கப் பட்டன.
நடக்க இருப்பவை பகுதியில் எப்படி கழக நிகழ்வுகளைப் பார்ப்பது என்பது விளக்கப்பட்டது. பின்பு பிளாக் என்றால் என்ன? பழனி மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் தோழர் வ.மாரிமுத்துவின் தமிழோ வியா.பிளாக்ஸ்பாட். காம் (tamizhoviya.blogspot.com..) மற்றும் பல தனிப்பட்ட மனிதர்களால் இயக்கப்படும் வலைத் தளங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. பயிலரங்கத்தின் இறுதிப் பகுதியில் திராவிடர் கழகத்தின் தலைமை நிலைய செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள் கலந்து கொண்டார்.  தோழர்களின் வினாக்களுக்கு விடைகள் அளிக்கப்பட்டு சந்தேகங்கள் தீர்க்கப்பட்டன.
சான்றிதழும் நன்றியும்
பயிலரங்கத்தில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மாலை 5.30 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அய்ன்ஸ்டீன் அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்வுக்கு பல்கலைக் கழகப் பதிவாளர் முனைவர் மு. அய்யாவு அவர்கள் தலைமையு ரையாற்றினார். அவர் தனது உரையில் ஏன் கணினி கற்றுக் கொள்ள வேண்டும் என்பதனை விளக்கி மாணவர்கள் மனதில் பதியும் வண்ணம் உரையாற்றினார். சான்றிதழ் வழங்கிய தலைமை நிலைய செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள், இந்த பயிற்சி ஒரு தொடக்கமே, இப்பயிற்சியினைத்  தொடர்ந்து முயற்சி எடுத்து நல்ல நிலையில் கணினியைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதனைக் குறிப்பிட்டு 1998-இல் முதன்முதலில் தான் கணினியை இயக்கிய சூழலை எடுத்துரைத்தார். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சென்ற வருடம் தந்தை பெரியார் பிறந்தநாள் ஆண்டு மலரில் இந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்கள். இங்கு சிறப்பாக நடந்து முடிந்தி ருக்கிறது.இன்னும் பல ஊர்களில் இந்த தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார். இந்த பயிலரங்கம் சிறப்பாக நடைபெற ஒத்துழைத்த மாநில இளைஞரணி செயலாளர் தஞ்சை இரா.ஜெயக் குமார், மாநில மாணவரணி தோழர் திராவிட எழில் மற்றும் பேராசிரியர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் அனைவருக்கும் பொன்னாடை  போர்த்தி சிறப்பித்தார் தலைமை நிலையச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்கள். தொடர்ந்துஅனைவ ருக்கும் சான்றிதழ்களை வழங்கினார்.
பயிலரங்கத்தில் கலந்து கொண்டவர்கள் தங்கள் கருத்துக்களை மேடையில் வந்து தெரிவித்தனர். கணினி பயிற்சி பெற்ற கொத்தனார் முருகேசன் சொன்னார், நான் 6ஆம் வகுப்புதான் படித்திருக் கிறேன். கணினியை என் னால் இயக்க முடியும் என்று நினைத்ததே இல்லை, இன்று இயக்கினேன், மிக்க நன்றி என்றார், கும்பகோணத்தை  சேர்ந்த நாட்டியக் கலைஞர் தமிழ்விழி  சொன்னார், நான் மட்டும் இங்கு வந்து கணினி கற்றுக்கொள்ளவில்லை, , எங்கள் அம்மாவும்  வந்து கற்றுக்கொண்டார்கள்,மிக்க மகிழ்ச்சி என்றார்.
வடசேரி பன்னீர்செல்வம் தனது மகளோடு ஒரு விண்ணப்பத்தை நிரப்பும்போது , மின்னஞ்சல் இல்லாமல் அந்த இடத்தை நிரப்ப முடியவில்லை , இப்போது கற்றுக்கொண்டேன் , மிக மிக நன்றி என்றார்.  ஓவியர் சுந்தர் , சிறீரங்கம் தமிழ் செல்வன்,ஆசிரியர் அன்பரசு எனக் கருத்து தெரிவித்த  அனைவருமே மிகப் பயனுள்ள பயிற்சி  எனத் தெரிவித்தனர்.இறுதியாக ஊரக வளர்ச்சி உயராய்வு மய்யத்தின் கூடுதல் இயக்குநர் பேரா. முனைவர்.ந.சிவசாமி அவர்கள் நன்றி கூறினார். கணினி கற்றவர்களே, அடுத்த வேலை என்ன? வலைத் தளங்கள் என்பது இன்றைக்கு பெரும்பாலும் பார்ப்பனர்கள் கையில் உள்ளது. திராவிட இயக்கத் தலைவர்களைப் பற்றி, திராவிட இயக்கம்  பற்றி கண்டபடி எழுதுகிறார்கள்.பதிலடி கொடுக்காமல் பார்ப்பனர்கள் திருந்த மாட்டார்கள். அவர்கள் எந்த மொழியில், நடையில் எழுது கிறார்களோ அதே மொழியில், அதே நடையில் நமது தோழர்கள் பதில் கொடுக்க வேண்டும். வரலாற்றைத் திரித்து எழுதுவோர்க்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும். விடுதலை இணைய தளத்தை தோழர்கள் மத்தியில் பரப்ப வேண்டும். பொதுவானவர்கள் என்ற போர்வை போர்த்தி பேஸ்புக் போன்ற இணைய தளங்களில் இடக்கு மடக்காய் எழுதுவோர்க்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.
மின்னஞ்சலை நன்றாகக் கையாளத் தெரிய வேண்டும். நக்கீரன் போன்ற பத்திரிகைகள் 500 வார்த்தைகளுக்குள் கருத்துக்கூற வசதி செய்து கொடுக்கின்றார்கள். நறுக்கென்று சுருக்கமாய் செய்தியை சொல்லத் தெரியவேண்டும், ஆதாரத் தோடு சொல்லத் தெரியவேண்டும்.பேஸ் புக் போன்ற சமூக வலைத்தளங்களில் நமது இயக்க தோழர் களோடு நட்பில் இருந்து கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நமது மரியாதைக்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவது போல " நமது இயக்கம் பிரச்சார இயக்கம்". இந்த பிரச்சார இயக்கத்தின் மூலமாக  தமிழ் இணைய தளப் பயிற்சியினைப் பெற்றவர்கள்  இணைய வழிப் பிரச்சாரத்தை செய்தல் வேண்டும், அதுவே உண்மை யான நன்றியாகும்.  தோழர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் அவர்கள் கணினி ஆசிரியராய் வகுப்பெடுத்தார், கணினி இணைப்பில் தொழில்நுட்ப மேலாளராய் சரி செய்தார், பேஸ் புக் , மற்றும் நமது விடுதலை இணைய தளத்தில் சென்றபோது  இயக்கத்தோழராய் கருத்து களை முன்வைத்தார். வலைத்தள உருவாக்கத்தில் கணினி மென்பொருள் வல்லுநராய் கணினி நுட்பங் களைச் சொன்னார்.
இந்தப் பயிலரங்கத்தில் அவரின் பன்முகப்பணி பெரிதும் பாராட்டத்தக்கது.துணைவேந்தர் அவர் களின் வழிகாட்டுதலில் பேரா.கா.செந்தில்குமார், பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அதிகாரி திரு. பாண்டியன், பேரா. இளங்கோ, முனைவர் அதிரடி க.அன்பழகன் என ஒரு பேராசிரியர்கள் குழுவே  முனைப்புடன் செயல்பட்டு இந்த நிகழ்வை வெற்றி கரமாக நடத்திட பேருதவி புரிந்தன