வாசகர் கடிதம்
முனைவர் வா. நேரு
இனிப்பில் எதிரி ஜீலை -2012 மற்றும் ஆகஸ்ட்-2012 இதழ்களை வாசித்தேன் . ஜீலை இதழில் "கடவுளா- நம்பாதவர்களா யாரால் பிரச்சனை" கட்டுரை படித்தேன், அருமையான கட்டுரை. . எழுதிய அரசூரான் அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள். மிகவும் எளிமையாகவும் நடைமுறையில் நாம் காணக்கூடிய எடுத்துக்காட்டுகள் மூலமாகவும் விளக்கிய விதம் அருமை. கடவுளை நம்புகிறவர்கள் என்று சொல்லப்படுகிறவர்களை " கடவுளை நம்புவது போல நடிப்பவர்கள் அல்லது ஏமாற்றுபவர்கள் என்று வைத்துக்கொள்வது சரியாக இருக்கும் என்று எண்ணுகின்றேன்" என்று குறிப்பிட்டு அதற்கு ஆராய்ச்சி அடிப்படையில் விளக்கங்களைக் கொடுத்திருந்தார். உண்மை சுடத்தான் செய்யும் , ஆனால் நாம் என்ன செய்வது, உண்மையை உண்மையாக சொல்லித்தானே ஆகவேண்டும். இந்தக் கட்டுரைக்கு மதுரை கே.கே. நகர் பகுதியை சேர்ந்த திரு வி.வீரிசெட்டி அவர்கள் தனது பாராட்டைத் தெரிவித்திருந்தார்.
திரு அரசூரான் அவர்கள் ஒரு கண்காணிப்பாளர் இருந்தால் வேலை எல்லாம் நன்றாக நடக்கிறது, கண்காணிப்பாளர் இல்லை என்றால் கண்டபடி நடக்கிறது என்று பல எடுத்துக்காட்டுகளைக் குறிப்பிட்டிருந்தார். உலகத்தில் நடப்பவை எல்லாம் கண்டபடி நடக்கிறது, அப்படியென்றால் கண்காணிப்பாளர் இல்லை என்றுதானே அர்த்தம் என்பதைக் குறிப்பிட்டிருந்தார். ஒரு வலுவான வாதம் அவரால் முன்வைக்கப்பட்டுள்ளது.
நான் மதுரை மாவட்டம், சாப்டூர் அரசு உயர் நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரைப் படித்தேன். 9-ம் வகுப்பு படிக்கும் வரை பள்ளியில் எந்த மாற்றமும் இல்லை. ஆசிரியர்கள் இஷ்டப்பட்டால் வரலாம், அல்லது வராமல் இருக்கலாம். மாணவர்கள் படித்தால் படிக்கலாம், ஏன் படிக்கவில்லை என்று ஒருவரும் கேட்க மாட்டார்கள். நான் 10-ம் வகுப்பு படிக்கும்போது ஒரு புதிய தலைமை ஆசிரியர் வந்தார், அரசுப் பள்ளிக்கூடம் அப்படியே தலைகீழாக மாறியது.மாணவர்களுக்கு காலையில் ஸடடி, மாலையில் ஸடடி, வீட்டில் மின்சாரம் இல்லாத மாணவர்களைப் பள்ளிக்கு வரவழைத்து இரவில் மின்விளக்கில் அவர்களைப் படிக்க செய்து, சந்தேகங்களுக்குப் பதிலளித்து ஒரு அற்புதமான மாற்றத்தை மாணவர்கள் அத்தனைபேருக்கும் வாழ்க்கையில் ஏற்படுத்தினார். எக்ஸ்டிராவாக எங்களிடமிருந்து ஒரு பைசா கூட டியூசன் என்ற பெயரில் வாங்கவில்லை. தலைமை சரியானால் அத்தனையும் சரியாகும் என்பதற்கு என் வாழ்வில் அவரே உதாரணம் . அவர்தான் பெருமைக்குரிய பல பள்ளிகளில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியாகப் பணியாற்றியவர் , இன்றும் சைக்கிளில் எளிமையாகப் பயணம் செய்யும் எனது தலைமை ஆசிரியர் மதுரை கே.கே. நகர் பகுதியை சேர்ந்த திரு.வி.வீரிசெட்டி அவர்கள் .
இப்படி ஒரு பள்ளியை, நிறுவனத்தை ஒருவர் தலைகீழாக மாற்றம் செய்து எல்லோருக்கும் பலன் அளிக்க செய்ய முடியுமென்றால் , கடவுள் என்று ஒருவர் இருந்தால் அவரால் உலகத்தை சீர் செய்து, அனைத்தும் அனைவருக்கும் செய்ய முடியுமே, ஏன் செய்யவில்லை, கடவுள் என்று ஒருவர் இல்லை , அதனால் செய்யவில்லை என்பதுதானே உண்மை , அதனைத் தானே திரு. அரசூரான் அவர்கள் கூறியிருக்கின்றார்.
கடவுள் நம்பிக்கை என்னும் மண்பாண்டத்தை டொம் என்று திரு.அரசூரான் அவர்கள் தூக்கிப்போட்டு உடைத்ததை தாங்கமுடியாமல் , ஒரு ஆற்றாமைக் கட்டுரையாக இனிப்பில் எதிரி ஆகஸ்ட் இதழில் திரு. வேளாண். அ. செளந்தர பாண்டியன் அவர்களின் " பொய் முகங்கள் " கட்டுரை வந்துள்ளது. அவரின் கருத்துக்கும் மதிப்பளித்து வெளியிட்ட இனிப்பில் எதிரி இதழுக்கு வாழ்த்துக்கள். ஆயிரம் கருத்துக்கள் வரட்டும், ஆரோக்கியமான விவாதம் நடக்கட்டும் என்ற மன்ப்பான்மை இனிப்பில் எதிரிக்கு உள்ளது, பாராட்டுக்குரியது. "பொய் முகங்கள் " கட்டுரை தொடர்பாக எனது சில கேள்விகள் ;
"தனி மனிதனின் குணாதிசயக் குறைபாடுகளைக் குறிப்பிட்டிருக்கிறார் , இதில் கடவுள் எங்கிருந்து வருகிறார்" என்று கேட்டிருக்கிறார் . தனி மனிதனின் வாழ்க்கையில் ஏற்படும் நல்லது, கெட்டது அனைத்தும் கடவுளால்தான் நடக்கிறது என்று மதவாதிகள் கூறுகின்றார்கள். இன்னும் கேட்டால் காகித்ததில் சில கட்டங்களைப் போட்டுக்கொண்டு , ஜாதகம் -சோதிடம் என்னும் பெயரில் நடக்கும் ஏமாற்று இமாலய ஏமாற்று. அவனின்றி ஓர் அணுவும் அசையாது என்று கூறிவிட்டு , கடவுள் எங்கிருந்து வருகிறார் என்று திரு. வேளாண். அ. செளந்தர பாண்டியன் அவர்கள் கேட்கிறார். அரசூரான் ஏமாற்றுவதற்காக கொண்டு வரப்படுகிறார் என்பதனை விளக்கியுள்ளார்.
கடவுள் பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறது என்னும் வகையில் திரு. வேளாண். அ. செளந்தர பாண்டியன் அவர்கள் கருத்துக் கூறியிருக்கின்றார் (பக்கம் 68 ), மதுரையில் இருக்கும் இளைய ஆதினங்களைப் போன்றவர்களின் செய்திகளையெல்லாம் படித்துவிட்டு , பக்தி ஒழுக்கத்தை வளர்க்கிறது என்று சொன்னால் எப்படி சிரிப்பது என்று தெரியவில்லை. என்னோடு வேலை பார்ப்பவர் ஒருவர் சொன்னார், " சார், தப்பு பண்ணிட்டு பாவ மன்னிப்பு வாங்கிக்கிரலாம் சார் " என்று. தப்பு பண்ணுவதற்கு லைசன்ஸ் கொடுக்கத்தான் கடவுள் பக்தியே தவிர மனிதன் மனதார தப்புப் பண்ணுவதை தடுக்க அல்ல. கோடி கோடியாகக் கொள்ளை அடிப்பவன் தன்னை நல்லவனாக சமூகத்தில் காட்டிக்கொள்ளத்தான் சில ஆயிரங்களை கும்பாவிஷேகத்திற்கு அளிக்கிறான், பக்தி ஒழுக்கக்கேட்டை வளர்க்கிறது என்பதுதான் நடைமுறை உண்மை.
அறிவியல் பிரபஞ்சத்தைப் பற்றியும், உயிர்களின் தோற்றத்தைப் பற்றியும் பல புதிர்களை வரிசையாக விடுவித்துக்கொண்டு வருகின்றது. சூரியன் தினமும் காலையில் கிழக்கே உதிக்கிறது என்பது கடவுளின் செயல் , எனவே நீங்கள் கடவுள் காரியங்களுக்கு கொட்டிக்கொடுங்கள் என்பது என்ன வகையில் நியாயம்? . கரூர் அருகே பக்தி என்ற பெயரில் தேங்காய்களைத் தலையில் உடைத்து ஐம்பது பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். நரம்பியல் மருத்துவர்கள் சொன்னாலும் கேட்கமாட்டேன் என்று தலையில் தேங்காயை உடைப்பவர்களை என்ன செய்வது, இதைப் போன்ற நூற்றுக்கணக்கான மூட நம்பிக்கை செயல்களைப் பட்டியலிட முடியும் நம்மால். ஒரு கடவுளை நம்புவர்களுக்கும் , இன்னொரு கடவுளை நம்புகிறவர்களுக்கும் நடக்கும் சண்டதான் உலகின் 2000, 3000 ஆண்டு கால வரலாறு. இரண்டு உலகப்போரினால் இறந்தவர்களைவிட, மதச் சண்டைகளால் மாண்டவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பது புள்ளி விவரங்கள் தரும் தகவல்.
கடவுள் இல்லை என்பவர்கள் எதிர்மறையான சிந்தனையாளர்களாம், கடவுள் உண்டு என்பவர்கள் உடன்பாட்டு சிந்தனையாளர்களாம் (பக்கம் 72). எப்படி இப்படி திரு. வேளாண். அ. செளந்தர பாண்டியன் அவர்கள் எதிர்மறையாக சிந்திக்கிறார் என்பது புரியவில்லை தன்னை நம்பாமல், தலைவிதியை நம்பி கெட்டுப்போகிறவர்கள் கடவுள் உண்டு என்பவர்கள். தன்னை நம்பாமல், கோவில் ,கோவிலாக , தேவாலயம், தேவலாயமாக சென்று புலம்பி , விடை தேடுபவர்கள் கடவுள் உண்டு என்பவர்கள்.
தன்னால் எது முடியும் , எது முடியாது என்பதனைத் தெரிந்துகொண்டு உடன்பாட்டு சிந்தனையோடு சாதனை புரிபவர்கள் கடவுள் இல்லை என்பவர்கள். உலகத்தில் மனித நேயத்தை விரும்புகிறவர்கள், அமைதியை விரும்புகிறவர்கள், பெண்களுக்கு ஆண்களைப் போல அனைத்து உரிமைகளும் வேண்டும் என்பவர்கள், சாதிக் கொடுமைகள் , சாதி அழிய வேண்டும் என்று விரும்புகிற எங்களைப் போன்றவர்கள் எல்லாம் அரசூரான் அவர்கள் கூறும் கருத்துக் கட்சிக்காரர்கள்.
நன்றி : இனிப்பில் எதிரி -செப்டம்பர் 2012- பக்கம் -26-28