Thursday, 24 January 2013

உழவும் உழவனும் மரணத்தின் விளிம்பிலே


மனு காலம் தொடங்கி
மக்களாட்சி காலம்வரை
அடிமாட்டுக்கென அழைத்துச்செல்லும்
மாடுகளைப் பார்க்கும்
மனப்பான்மையில் உழவர்களை
அதிகாரவர்க்கம் பார்க்கிற‌தே !

ஏர் பின்னது உலகம்
வள்ளுவரின் வார்த்தையை
மதிப்பிழக்கச்செய்தவர்களின்
அரசியலை அறியாது தடுக்க இயலுமோ
உழவர்களின் த்ற்கொலையை ?

வர்ணப் படிக்கட்டுகளில்
கீழ்த்தட்டில் அமர்த்தப்பட்டார்க்கு
உரியதாய் உழவு ஆனதால்தானே
அதிகாரவர்க்க‌த்தின் அலட்சியப் பார்வை?

கலப்பையை பிடித்தவாறு
ஏதேனும் கடவுள்கள் படம் இருக்கிறதா ?
நினைத்துப்பாருங்கள் !
நிற்கதியாய் உழவும் உழவனும் நிற்கும்
காரணம் புரியும் எளிதாய்

அதிகார மையங்களை உழவர்களின் மகன்கள்
கைப்பற்றி மாற்றும்போது மாறலாம்
அதுவரை உழவும் உழவனும்
மரணத்தின் விளிம்பிலே 

வா. நேரு  .

எழுத்து இணைய தளத்தில் நடைபெற்ற போட்டிக்காக அனுப்பப்பட்ட கவிதை- பரிசு பெறவில்லை. நண்பர்களின் பார்வைக்காக எனது வலைத்தளத்தில்

 

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! விமர்சனம் கவிஞர் இரா .இரவி .




பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .

விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

மானமிகு பதிப்பகம் 3/20 A.ஆதி பராசக்தி நகர் ,திருப்பாலை ,மதுரை .14.
விலை ரூபாய் 60.

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு .B.S.N.L நிறுவனத்தில் பணி
புரிந்துக் கொண்டே இலக்கியப் பணியும் செய்து வருபவர் .விடுதலை, உண்மை பத்திரிக்கைகளில் படைத்தது வரும் படைப்பாளி .முனைவர்
வெ .இறையன்பு அவர்களின் படைப்புகளை ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர். .முனைவர் பட்டநெறியாளர் பேராசிரியர் கலைமாமணி
கு .ஞானசம்பந்தன் .தியாகராசர் கல்லூரியில் நடைபெற்ற முனைவர் பட்ட தகுதித் தேர்வு அன்று சென்று இருந்தேன் .பலரும் பாரட்டினார்கள் நூல் ஆசிரியர் வா.நேருவை .

நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு என்னுரையில் மிக வித்தியாசமாக எழுதி உள்ளார் .
" நான் பிறவிக் கவிஞன் அல்ல .சரஸ்வதி நாவில் வந்து குடியேறினால்தான்
கவிதை வரும் என்று நம்புபவனும் அல்ல .என்னைப் பாதித்த ,எனக்கு
சரிஎனப்பட்ட  கருத்துக்களைக் கூற இக்கவிதை வடிவத்தை எடுத்திருக்கிறேன்..கொடுத்திருக்கிறேன் ."

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் ! நூலின் தலைப்பே வித்தியாசமாக
உள்ளது .நூலின் தலைப்பில் உள்ள கவிதையில் ஊரில் திருவிழா  என்றால்
வீட்டுக்கு ஆயிரம் ரூபாய் வீதம் ஆயிரம் வீடுகளில் வசூல் செய்து
கரகாட்டம், பட்டிமன்றம் ,டாஸ்மாக் என்று தட  புடலாக செலவு செய்வார்கள்
.ஆனால் ஊரில் உள்ள   பள்ளியை கண்டு கொள்ள மாட்டார்கள் .அதனை உணர்ந்து எழுதியுள்ள கவிதை நன்று .

பங்குனி உத்திரமும் பள்ளிக் கூடமும் !

ஊரில் உள்ள
ஒரே ஒரு பள்ளிக்கூடம்
கரும்பலகையும்
இல்லாமல்
ஒழுகும் கூரையோடு
கேட்பாரற்றுக் கிடக்கிறது
ரொம்ப நாளாய் !

இறுதி மூச்சு உள்ளவரை மனித சமுதாயத்திற்காக உழைத்திட்ட மாமனிதர் தந்தை பெரியார் பற்றிய கவிதை மிக நன்று .

மனிதருக்கெல்லாம்  மாமருந்தாய் !

ஈரோட்டுப் பூகம்பமே !
நீ மறைந்து ஆண்டுகள் பல ஆனாலும்
நீ ஏற்படுத்திய அதிர்வலைகள்
கடல் அலைகளாய்
ஓயாமல் உலகெங்கும் !

நூல் ஆசிரியர்  வா .நேரு  பகுத்தறிவாளர் கழகத்தில் மாநிலத் தலைவராக  உள்ள பகுத்தறிவாளர் என்பதால் ,சமரசத்திற்கு இடமின்றி மனதில் பட்ட கருத்துக்களை துணிவுடன் புதுக் கவிதையாக வடித்துள்ளார் .எதையும் ஏன் ? எதற்கு ? எப்படி ? எங்கு? எதனால் ?என்று தந்தை பெரியார் வழியில்  சிந்தித்த காரணத்தால் நன்கு படைத்துள்ளார் .

அறிஞர் அண்ணா  பற்றிய கவிதை நன்று .

உனது நூல்களே முறியடிக்கும் !

தந்தை பெரியாரின் தலைமகனே பிரிந்து விட்டார் !
தந்தையும் மகனும் அய்யாவின் கொள்கைக்கு கொள்ளி  வைப்பார் !
என்று எதிர்பார்த்த மூதறிஞர்களின் எதிர்பார்ப்பில்
மண்ணை அள்ளிப் போட்ட மகத்தான சரித்திரமே !

அறிஞர் அண்ணா தமிழக முதல்வரானதும் எனது ஆட்சியே தந்தை பெரியாருக்கு காணிக்கை என்று சொல்லி பெரியாரின் கொள்கைகளை சட்ட வடிவமாக்கியவர் .சுய மரியாதை திருமணத்திற்கு சட்ட வடிவம் தந்தவர் அறிஞர் அண்ணா.அறிஞர் அண்ணாபற்றிய மதிப்பீடு மிக நன்று .

மூட நம்பிக்கைகளை சாடி பல கவிதைகள் உள்ளது .பதச் சோறாக சில மட்டும்
உங்கள் பார்வைக்கு !

ஒரு பக்கம் சந்திரனைச் சென்றடைந்த
சந்திரயான் விண்கலம் !
மறு பக்கம் இருபத்தி எழு பெண்டாட்டி வீடுகள்
அதில் ஒரு வீடான தனுசுவிலிருந்து
இன்னொரு வீடான மகரத்திற்கு
குரு  பகவான்
போகின்றார் .
குரு  பெயர்வது கிடக்கட்டும்
இவர்களின் புத்தி பெயர்வு
எப்போது ?

மாணவர் தேர்வில் ராம ஜெயம் எழுதியதைக் கண்டு எழுதிய கவிதை ஒன்று !

நம் மூளையில் திணிக்கப்பட்டுள்ளது
திணிக்கப்பட்ட குப்பைகளை தூக்கி
வீசாமல்
முன்னேற்றம் என்பது
முயற்கொம்பே !

காதலைப் பாடாமல் கவிதை நிறைவு பெறாது .நூல் ஆசிரியர்  வா .நேருவும்
காதலைப் பாடி உள்ளார் .

ஆதலினால் காதலிப்பீர் !

காதல் வலு சேர்க்கும் !
காதல் சமூகத்தின்
சாதி நோய் போக்கும் !
காதல் சமூகத்தின்
மதப் பொய்மை நீக்கும் !
ஆதலினால் காதலிப்பீர் !

தீபாவளி  மூட நம்பிக்கை கதையைச் சாடி உள்ளார் .கவிதைகள் வசன நடையில் இருந்தாலும் சிந்திக்க வைத்து வெற்றி பெறுகின்றது.பாராட்டுக்கள்.

பிள்ளையார்  (சுழி ) அழி !

பிள்ளையார்  சுழி போட்டு
செயல் எதுவும் தொடங்கு  !
என நம்மை ஏமாற்றி
என்றும் ஏதுமறியா
சுழியன்களாய் நம்மை
வைத்திருக்க சூது செய்யும்
பிள்ளையார் ஊர்வலச்
சதி அறிவோம் !

என் கை பட்டால் நோய்கள் குணமாகும் என்று சொல்லி ஏமாற்றி பணம் பறிக்கும் சாமியார்களின் மோசடிகளை தோலுரிக்கும் விதமாக ஒரு கவிதை இதோ !

பக்தி வியாபாரிகள் !

அறிவியல் மருந்துகளை
மறுத்து வெறும் பிராத்தனையால்
ஓடி விடும் ! நோய்கள் !
என மன நோயாளிகளாய்மனிதர்களை மாற்றிவிடும்
அயோக்கியத்தனம் !

மூட நம்பிக்கையில் மூழ்கி கிடக்கும் சமுதாயம் திருந்தும் கவிதைகள் படைத்த நூல் ஆசிரியர் கவிஞர் முனைவர் வா .நேரு அவர்களுக்கு பாராட்டுக்கள்..தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள் .இந்நூலை தரமாக அச்சிட்டு  மானமிகு பதிப்பகத்தின் முதல் வெளியீடாக வெளியிட்ட பகுத்தறிவாளர் நண்பர்  பா .சடகோபன் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.

-----------------
எனது கவிதை நூலை  விமர்சனம் செய்து இணையதளத்தின் வழியாக பலருக்கும்  சென்று அடையக்கூடிய  பணியை எனது இனிய நண்பர், ஒரு பத்தாண்டுகளுக்கு முன்னால் பகுத்தறிவாளர் கழக மாவட்ட பொறுப்பில் என்னோடு சக பொறுப்பாளராய் பணியாற்றிய, இன்றும் எங்கும் நான் ஒரு பெரியார் கொள்கை வாழ்வியல் வழி நடப்பவன், கடவுள் மறுப்பாளன் என்பதனை அழுத்தம் திருத்தமாக சொல்லும்  , தொடர் உழைப்பின் வெற்றிக் குறியீடாய் , மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக  விளங்கும் ,  கவிஞர் இரா. இரவி அவர்களுக்கு எனது நன்றிகள்.   - வா. நேரு - 24-01-2012

Saturday, 12 January 2013

அணமையில் படித்த புத்தகம் : பள்ளிக்கூடத்தேர்தல் -பேரா. நா.மணி

அணமையில் படித்த புத்தகம் : பள்ளிக்கூடத்தேர்தல் -பேரா. நா.மணி

நூலின் தலைப்பு : பள்ளிக்கூடத் தேர்தல்- நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுத்த மாணவர்கள்
ஆசிரியர்                : பேரா. நா.மணி
பதிப்பகம்               :  பாரதி புத்தகாலயம்,சென்னை-18.
முதல் பதிப்பு       : செப்டம்பர்-2010
விலை                   : ரூ 20/ - பக்கங்கள் -48

                                                      'நல்லாசிரியர் விருது ' என ஆண்டுதோறும் அரசு , ஆசிரியர்களுக்கு விருது வழங்குகிறது. ஆனால் நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்கள் உண்மையிலேயே நல்ல ஆசிரியர்கள்தானா? சிலர் எப்படி இந்த விருதினைப் பெறுகின்றார்கள் என்னும் எதார்த்தத்தினை விளக்கி, மாணவர்களே நல்லாசிரியர்களைத் தேர்ந்தெடுத்தால் எப்படி இருக்கும் என்னும் சிந்தனையைச் செயல்படுத்திய அனுபவமே இந்தப் புத்தகம் . கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவிகள் , தாங்கள் படித்த 12-ஆம்  வகுப்பு வரையிலான படிப்பில் நல்ல ஆசிரியர்கள் யார் என்ப் பட்டியலிடுகிறார்கள், ஏன் அவர்கள் தங்களுக்கு நல்ல ஆசிரியர் என்பதனை விளக்கி எழுதிக் கொடுக்கின்றார்கள். எப்படி எல்லாம் அந்த ஆசிரியர்கள் , தாங்க்ள் முன்னேற உதவி புரிந்தார்கள் என்பதனை மாணவ, மாணவிகளே விவரிக்கும் விதத்தை ஒரு அத்தியாயமாக இந்த நூலின் ஆசிரியர் பேரா. ந.மணி குறிப்பிட்டிருக்கின்றார்.

                                                     மாணவர்களால் தேர்ந்த்டுக்கப்பட்ட நல்லாசிரியர்களை தான் வேலை பார்க்கும் கல்லூரிக்கு வரவழைத்து, அவர்களிடம் படித்த மாணவ, மாணவிகளால் சிறப்பு செய்ய்ச்சொல்லி, நினைவுப்பரிசினை அளிக்கின்றார்கள், அந்த ஆசிரியர்களின் நெகிழ்ச்சி, அந்த மாணவ மாணவிகளின் வார்த்தைகளை அந்த ஆசிரியர்கள் எவ்வளவு பெருமையாக எடுத்துக்கொள்கிறார்கள் என்பதனை விவரிக்கின்றார். பின்னர் அவர்களைப் பேட்டி எடுக்கின்றார். கல்வி சம்பந்தப்பட்ட ,புகழ்பெற்ற புத்தகங்களைப் படித்தவர்கள் அல்ல அவர்கள், ஆனால் டோட்டாசான், எனக்குரிய இடம் எங்கே ,பகல் கனவு, ஏன் டீச்சர் என்னைப் பெயிலாக்கினீங்கே போன்ற கல்வி குறித்த நூல்களைப் படித்திருந்தால் எவ்வளவு சிறப்பாக இருந்திருக்கும் என நினைக்கின்றார்கள், பேரா. ந,மணியும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தைச்சேர்ந்த பொறுப்பாளர்களும் .நிறையத்  தலைமை ஆசிரியர்கள் கலந்துகொள்ளும்  ஒரு கருத்தரங்கத்தில் கல்வி சம்பந்தப்பட்ட நூல்களின் கண்காட்சியை வைக்கின்றார்கள். ஆயிரக்கணக்கான நூல்கள் விற்கும் என்று நிறையச்செல்வு செய்து வைத்த கண்காட்சியில் வெறும் 54 ரூயாக்கு புத்தகங்கள் விற்கின்றது. நொந்து போகிறார்கள்  பேரா. ந.மணியும் ,மற்ற பொறுப்பாளர்களும்.

                                                 இன்றைய ஆசிரியர்கள் எப்படி இருக்கிறார்கள் , நன்றாகப் பாடம் நடத்துபவர் மட்டுமே நல்லாசிரியரா? உலக விசயங்களை, நாட்டு நடப்புகளை, நல்ல புத்தகங்களை மாணவர்கள் மத்தியில் சொல்ல் வேண்டாமா? போன்ற கேள்விகளை எழுப்புகின்றார். சமூக அக்கறையில்லாமல் ஆசிரியர்கள் இருக்கும் காரணம் என்ன? அதை எப்படி மாற்றலாம் போன்ற கருத்துக்களை பேரா. ந. மணி குறிப்பிட்டிருக்கின்றார்.

                                                சிறிய புத்தகம் , 48 பக்கம் உள்ள புத்தகம்தான் இது, ஆனால் மிக ஆழமான புத்தகம். மாணவர்களை, ஆசிரியர்களை உளவியல்ரீதியாக ஆராய்ந்துள்ள புத்தகம்.மிகப் பொறுப்போடு சமூக அக்கறையோடு எழுதப்பட்டுள்ள புத்தகம்.  கல்வி சம்பந்தப்பட்ட சில நூல்களை புத்தகத்தில் குறிப்பிடுகின்றார் ஆசிரியர். அவற்றில் டோட்டாசான், எனக்குரிய இடம் எங்கே போன்ற புத்தகங்களெல்லாம் நான் மிகவும் நேசிக்கும் புத்தகங்கள். அதிலும் குறிப்பாக டோட்டாசான்.  எனது நண்பன் இரா.சீனிவாசனும், நானும் மதுரை ஸ்பார்க சென்டர் பார் ஐ.ஏ.எஸ். ஸ்டடிஸ் சார்பாக பல கல்லூரிகள், பள்ளிகளில் மாணவ , மாணவிகளுக்கு வழகாட்டுதல் வகுப்புகள் நடத்தியிருக்கின்றோம். ஒருமுறை சீனி சொன்னான்,நேரு, நீ எந்தத் தலைப்பில் பேசினாலும், டோட்டாசான் புத்த்கத்தைத் தொடாமல்  ,அதைப்பத்திப் பேசாமல் நீ பேச நான் பார்க்கவில்லை என்றான். அந்த அளவிற்கு என்னை மிகவும் ஈர்த்த புத்தகம் .மாணவ, மாணவிகள் மத்தியில் ,ஆசிரியர்களிடத்தில் பேசுகிறேன் என்றால் கட்டாயம் டோட்டாசான் என் பேச்சில் இருக்கும். முத்ல் சில பக்கங்களில், ஒரு ரவுடியைபோல நான் மாணவர்களை அடக்கி வந்திருக்கிறேன் என்னும் பேரா.நா.மணியின் சுய விமர்சனம் படிக்கும் எந்த ஒரு ஆசிரியரையும் யோசிக்க வைக்கும்.20 ரூயாயில் மாற்றி யோசிக்க வைக்கும் புத்தகம், வாங்கிப் படித்துத்தான் பாருங்களேன்.

Saturday, 5 January 2013

பெண் ஏன் அடிமையானாள் ?






நன்றி : 05-01-2012 விடுதலை ஞாயிறு மலர்

Wednesday, 2 January 2013

ஜாதியும் ஜாதகமும்

                         

படிக்காத அப்பாவும்
படித்த மகனும்
சேர்ந்தே
தூக்கிக்கொண்டு
அலைகிறார்கள்
ஜாதகத்தை
வெகு காலமாய் !

இருபத்து ஐந்து வயதில்
மகனுக்கு பெண்ணைப்
பார்க்க ஆரம்பித்த அப்பா
அவனுக்கு வயது
முப்பத்தைந்தைக் கடந்த பின்பும்
ஒவ்வொரு ஜோதிடனாய்
பார்த்து பார்த்து
கேட்டு கேட்டு எழுகின்றார்
மகனுக்கு இன்னும்
பெண் அமைந்தபாடில்லை!

வசதி இருக்க
படிப்பு இருக்க
நன்றாய் வாழும்
வாய்ப்பு இருக்க
பாழாய்ப்போன
ஜாதக நோட்டைத்
தூக்கிக்கொண்டு
அலைகின்றார்
பரிதாபத்திற்குரியவர்களாய் !

போகும் இளமை
வருமா எனும் சிந்தனையில்லை !
பொன்னான வயதை
இழக்கின்றோமே எனும் புரிதலில்லை !
அடுத்தவர் உழைப்பில்
அள்ளிப்போடும்
பணத்தால் வாழும்
ஜோதிடர் சொல்படியே
ஆடுகின்றார் !
அவன் சொல்லும் சொல்லுக்கெல்லாம்
பரத நாட்டியம் போல்
மூட நம்பிக்கை நாட்டியம்
ஆடுகின்றார்!

மூளைக்குள்
ஏற்றிக்கொண்ட
மூட நம்பிக்கை
விலங்கினை
நொறுக்கத் துணிவின்றி
நொந்தும் வெந்தும்
புலம்பியே அலைகின்றார்
கோவில் கோவிலாய்
பரிகாரம் -தோசமென

பெண் கருப்போ
சிவப்போ பரவாயில்லை !
ப்ண் படித்தவளோ
படிக்காதவளோ பரவாயில்லை !
நம்ம பையனுக்கு
வயதாகி விட்டது பாருங்கள் !
ஜாதகம் மட்டும்
பொருந்தினால் போதும்
ஜாம் ஜாம் என நடத்திடலாம்
கல்யாணத்தை எனப்
பிதற்றினார் என்னிடத்தில்

தூக்கி தீயில் போடு
உனது மகன் ஜாதகத்தை !
ஜாதியும் ஜாதகமும்
தேவையில்லை எனத் துணிந்துசொல் !
அடுத்தவருடம் பேரப்பிள்ளையை
கொஞ்சும் சுகம்
உனக்கு உண்டு என்றேன் !

எழுதியவர் :வா. நேரு
நாள் :2012-12-30 06:33:13
Nantri : eluthu.com
கவிதைக்கு வந்த சில எதிர்வினைகள் உங்கள் பார்வைக்கு
இருபத்து ஐந்து வயதில்

மகனுக்கு பெண்ணைப்

பார்க்க ஆரம்பித்த அப்பா

அவனுக்கு வயது

முப்பத்தைந்தைக் கடந்த பின்பும்

ஒவ்வொரு ஜோதிடனாய்

பார்த்து பார்த்து

கேட்டு கேட்டு எழுகின்றார்

மகனுக்கு இன்னும்

பெண் அமைந்தபாடில்லை!

----யதார்த்த வரிகள் கோள்களை மனிதன் உற்று நோக்கினால் அறிவியல்

வான சாத்திரம். கோள்கள் தன்னை

நோக்கும் என்று நம்பினால் அது

ஜோதிடம் வாழ்க்கைக்கு வழி காட்டி

அதுவே வரம் தரும் மரம் என்று

நம்பினால் அது மனிதனின் சோம்பேறித்

தனம். ASTROLOGY IS ONLY INDICATIVE .

கோள்கள் ஒளிவீசும் இயற்கையின்

வடிவங்கள் அதன் அடிப்படை தெரியாமல் கண்மூடித்த் தனமாக

பின்பற்றினால் அது மனிதனின் தவறு

கவிதைக்கு நன்று எனும் * வா. நேரு

----அன்புடன்,கவின் சாரலன் என்ற சங்கரன் அய்யா

எதுவும் ஓர் எல்லைக்குட்பட்டே...

எதுவும் விளிம்பின் பீச்சலாய் இருப்பின் தவறே...agan

நல்லதொரு சமுதாய சிந்தனை அய்யா !

ஜோதிடம் என்பது

விஞ்ஞானமா ?

மெய்ஞானமா ?

அஞ்ஞானமா ?

மூன்றிலும் இருக்கும் இந்த ஜோதிட கணிப்பு !

அளவுக்கு மேல் எதையும் / எவரையும் நம்பும் போது தன்னம்பிக்கை தளர்ந்துவிட்டது, சுயஅறிவு சுருங்கிவிட்டது என்பது வெளிச்சமாகிறது !

துஸ்பிரயோகம் என்பது எதாவதொன்றினை அல்லது யாரையாவதொருவரை பிழையான எண்ணங்களில் பயன்படுத்தலைக் குறிக்கிறது.....!

யாரவது ஒருவரால் அல்லது எதாவது ஒன்றினால் தம்மைத் தாமே பிழையாக பயன்படுத்திக் கொள்ள இடம் கொடுப்பது சுய துஷ்பிரயோகமாகிறது !

பலரின் வாழ்க்கை கேள்விக்குறிக்குப் பினால் நிற்கிறது இது போன்ற துஷ்பிரயோகங்களால் !       K.S.Kalai