Tuesday 26 February 2013

தடுக்க இயலுமோ ?

முணு முணுப்புகள்
கேட்டுக் கொண்டேயிருக்கின்றன‌
மதத்திற்குள்ளும்
மதத்திற்கு வெளியிலும்
மதங்களின் பெயரால்
நடக்கும் கொலைகள்பற்றி

சத்தம் பெரிதானால்
குரல்வளை அறுக்கப்படுமோ
எனும் அச்சத்திலேயே
பெரும் சத்தமாய்
சத்தமிட எத்தனிப்பவர்கூட‌
பூனைகளைக் கண்டு
பதுங்கும் எலிகள்போல‌
பம்மி பம்மியே
முணு முணுக்கின்றனர்

இளைய சமூகம்
மூத்த சமூகத்தின்
மூதுரைகளை ஏற்க‌
மறுப்பதுவும்
கடவுள் படைத்த உலகம் பற்றி
எதிர் கேள்விகள்
கேட்பதுவும்
பரிணாம வழியில்
சிந்திப்பதும்
பெரும் கோபத்தைக்
கிளப்புகின்றன மதவாதிகளுக்கு !

ஆண்டாண்டு காலமாய்
ஆட்சி நடத்திய மதங்கள்
காட்சிப் பொருட்களாய்
மாறிடுமோ எனும் கவலை
கோபத்தைக் கிளப்புவதோடு
மொத்தமாய்
கோபக்குரல் எழுப்பவும்
தூண்டுகின்றன !

அறிவியல் யுகத்தில்
பழைய பஞ்சாங்கங்கள்
கிழிந்து தொங்குவதைத்
தடுக்க இயலுமோ
உன்னாலும் என்னாலும் ?

--------
எழுதியவர் :வா. நேரு

நாள் :2013-02-13 22:44:56

நன்றி : எழுத்து.காம்


Saturday 23 February 2013

அண்மையில் படித்த புத்தகம் : மாக்ஸிம் கார்க்கி- வாழ்க்கைக்கதை

அண்மையில் படித்த புத்தகம் : மாக்ஸிம் கார்க்கி- வாழ்க்கைக்கதை

நூலின் தலைப்பு : மாக்ஸிம் கார்க்கி- வாழ்க்கைக்கதை
ஆசிரியர்                : எம்.ஏ.பழனியப்பன்
பதிப்பகம்               :  செண்பகா பதிப்பகம் -சென்னை -17
இரண்டாம் பதிப்பு :ஆகஸ்ட் 2012
 மொத்த பக்கங்கள் :  296  விலை ரூ 150.00

                                     மாக்ஸிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாறாய் அமைந்த நூல் இது.    மாக்ஸிம் கார்க்கியின் சுய சரிதை  நூல்களான " எனது குழந்தைப் பருவம்", " யான் பெற்ற பயிற்சிகள் ", " யான் பயின்ற பல்கலைக் கழகங்கள் " என்ற மூன்று நூல்களை இணைத்து , இந்த நூலின் ஆசிரியர் இடை இடையே கொடுக்கும் வர்ணனைகள், கருத்துக்களோடு இணைந்து, படிப்பதற்கு தொய்வு இல்லாமல் , ஆர்வமாக நாம் படிக்க கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு புத்தகம் இந்தப் புத்தகம்.

                               பிறந்த சில வருடங்களிலேயே தந்தையை இழக்கும் கார்க்கி, தந்தை இறந்து விட்டார், இனி வரமாட்டார் என்னும் அறியா வயதிலேயே தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்யும் கார்க்கி, தாய் இன்னொருவரை மணந்து கொண்டு சென்று விட , முரடனான தனது தாத்தாவோடு வாழ்ந்து அடியும்  உதையும் பட்டு வாழ்வைக் கழிக்கும் கார்க்கி, பிச்சைக்காரியின் மகளான தனது பாட்டி சொல்லும் கடவுளர் கதைகளை, பிரார்த்தனைகளை கேட்டு வளரும் கார்க்கி, சூதாட்டக்காரனான தனது இரண்டாவது கண்வனால் கைவிடப்பட்ட கார்க்கியின் தாயும் சிறு வயதிலேயே இறந்து போக, அப்பா- அம்மா இல்லாமல் சாப்பிடுவதற்காக பல நூறு வேலைகள் செய்யும் கார்க்கி என அவரது குழந்தைப் பருவம் நம் கண்களில் நீர் வர வைக்கும் அளவுக்கு கொடுமையானதாய் , இரக்கமற்றதாய் அமைந்ததை இந்த நூல் ஆசிரியர் திரு.எம்.ஏ.பழனியப்பன் அவர்கள் மிகக்கோர்வையாகக் கொடுத்திருக்கின்றார்.

                           தொழில் பயிலும் இளைஞனாய் கார்க்கி, கானகத்தில் சென்று பறவைகளைப் பிடித்து  அதைத் தன் பாட்டியிடம் கொடுத்து அவர் விற்று வருவதால் வயிற்றைக் கழுவும் கார்க்கி, தெருத்தெருவாய் குப்பைகளைப் பொறுக்கி விற்கும் காக்கி, குப்பைகளைப் பொறுக்கிவிட்டு குளித்து விட்டு உடை மாற்றி பள்ளிக்கூடம் போனாலும் நாத்தம் அடிக்கிறது என்று சொல்லி மற்ற மாணவர்கள் ஒதுக்கியதால் நொந்து போன கார்க்கி, படிக்கும் வாய்ப்பு குறுகிய காலத்தில் பறி போக மீண்டும் வீட்டு வேலைகளுக்குச்செல்லும் கார்க்கி, கப்பலில் பயணிகள் சாப்பிடும் தட்டைக் கழுவி வைக்கும் கார்க்கி இப்படி பல கார்க்கிகளை நம் கண் முன்னே நிறுத்துகிறார் இந்த நூலின் ஆசிரியர் எம். ஏ . பழனியப்பன்.

                                                         கப்பலில் வேலை செய்யும் போது இரண்டு திருடர்கள் பிடிபடுகிறார்கள். .." உணர்விழக்கும் வரையில் திருடர்கள் அடிக்கப்பட்டு இருக்கின்றனர். அடுத்த துறைமுகத்தில் அவர்களைப் போலிசாரிடம் ஒப்படைத்தபோது , அவர்களால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை.

                                                       ஜனங்கள் உண்மையில் நல்லவர்களா? - கெட்டவர்களா? பணிவானர்களா?- அச்சுறுத்தக்கூடியவர்களா? என்று ஆச்சரியப்படத்தக்க வேதனை அளிக்கும் இத்தகைய பல நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. ஜனங்கள் ஏன் இப்படிக் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள் ? என்று எனக்குள்  நானே(மார்க்சிம் கார்க்கி) கேட்டுக்கொண்டேன். இதைப் பற்றி நான் சமையல்காரனிடம் கேட்ட பொழுது அவன் என்ன கூறினான் தெரியுமா?
" அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? உனக்கென்ன மனிதாபிமானம் அளவு கடந்து இருக்கின்றதா? ஜனங்கள், ஜனங்கள் தான் ! ஒருவன் சமர்த்தியசாலி ; மற்றவன் முட்டாள், மூளையைக் குழப்பிக் கொள்வதை நிறுத்திவிட்டு , புத்தகங்களைப் படி! உன் கேள்வி சரியானதாக இருந்தால் , அதற்குப் பதில் புத்தகத்தில் இருக்கும் " என்று கூறினான் அவன், அவன் கூறியது என் சிந்தனையைக் கிளறி விட்டது " பக்கம் (130 ) .  மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள புத்தகங்களைப் படி என்று ஒருவன் சொன்னதால் புத்தகங்களைத் தேடிப்படிக்க ஆரம்பிக்கின்றார் கார்க்கி.

                    புத்தகங்களைத் தேடி அலைகின்றார். ஒரு வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்யும் வேலைக்காரனாய் (13 வயது) கார்க்கி இருக்கின்றார். ஒரு தையல்காரரின் மனைவி நல்ல புத்தகங்களை கார்க்கிக்கு கொடுத்துப் படிக்கச்சொல்கின்றார். ஆனால் அதனை படிக்க வேலைக்காரனாய் இருக்கும் வீட்டு எஜமானி அனுமதி மறுக்கிறாள்  வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கின்றார். மெழுகுவர்த்தி செலவு ஆகிறது என்று எஜமானியம்மாள் திட்டுகிறாள். படிக்கக்கூடாது என்பதற்காக மெழுகுவர்த்தியை குச்சியால் அளந்து வைக்கிறாள் . அதனையும் தாண்டி புத்தகத்தைப் படிக்கின்றார். புத்தகம் படிப்பதற்காக கார்க்கி பட்ட இன்னல்களைப் பார்க்கிறபோது, அந்த மாபெரும் எழுத்தாளன் இளமையில் பட்ட துன்பங்களே பின்னாளில் அவரின் மனிதாபிமானம் மிக்க  எழுத்தக்களாய் வந்தது என்பது புரிகின்றது.ஒரு மாதிரியாய் இருக்கும் ஒரு சீமாட்டி நல்ல புத்தகங்களைக் கொடுக்கின்றாள் . அதனை வாங்கிப் படிக்கின்றார். புத்தகத்திற்கும்,  சாப்பாட்டிற்காக உழைத்து விட்டு நேரம் கிடைக்குமா . கொஞ்சம் படிக்க  என அவர் அலைந்த அலைச்சலையும் இன்றைய தலைமுறைக்கு கொஞ்சம் சொல்ல வேண்டும்.

                      வீடு முழுக்க புத்தகங்களால் நிறைத்திருக்கிறார் ஒரு நண்பர். அவரின் வாரிசுகள் அந்தப் புத்தகத்தின் பக்கமே செல்ல மறுக்கின்றன, நொந்து போகும் அவரைப் போன்றவர்களின் பிள்ளைகள் மாக்சிம் கார்க்கி புத்த்கம் படிப்பதற்காக பட்ட பாட்டை படிக்க வேண்டும். கையில் கிடைக்கும் அறிவுப் புதையல்களை அலட்சியப் படுத்துகிறோமே என்னும் உணர்வு வரும்.

                        கார்க்கி சொல்கின்றார். " நான் தொடர்ந்து பல புத்தகங்களைப் படித்து வந்தேன். அவற்றின் மூலம் மனித வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை நான் அறிந்து கொண்டேன். பல தீமைகளிலிருந்து புத்தகங்கள் என்னைக் காத்தன என்பதை என்னால் நிச்சயமாகச்சொல்ல முடியும் . ! குறிப்பாக ,ஜனங்கள் காதலுக்காக எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார்கள் என்னும் தகவல் , விபச்சார விடுதிக்குச்செல்வதிலிருந்து என்னைத் தடுத்தது....சந்தர்ப்பத்தால் ஏற்படும் சூழ்நிலையைப் பற்றின்றி எதிர்க்கும் கலையை புத்தகங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தன . (பக்கம் 170)

                          " நான் புத்தகங்களைத் தேடி அலைந்தேன். கிடைத்த புத்தகங்களில் உள்ள விஷ்யத்தைத் தொழிலாளர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு அப்புத்தகங்களை அவர்களுக்குப் படித்துக்காட்டினேன். இப்படிப் படித்துக்காட்டிய மாலை நேரங்கள் என் வாழ்வில்  மறக்க முடியாதவை. ....நான் வாசக சாலையில் அங்கத்தினராக இல்லையாதலால் புத்தகங்கள் சேகரிப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. பிச்சைக்காரனைப் போல் எல்லோரிடமும் கெஞ்சி நான் புத்தகங்களை வாங்கினேன். " பக்கம்(181) 

                          விக்கிரகத் தொழிற்சாலையில் வேலையாளாக சேர்கின்றார். இவரின் சேவையைப் பாராட்டி , பாராட்டு விழா நடக்கின்றது. அவருடைய தொழிலாளி நண்பர் ஸிக்காரெவ் " நீ யார் ? பதின்மூன்றே வயதான அனாதைச்சிறுவன். .எனினும் வாழ்க்கையிலிருந்து தப்பியோடாமல், வாழ்க்கையுடன் மல்லுக்கட்டும் உன்னை,உன்னை விட  4 மடங்கு வயதான நான் புகழ்கிறேன். பாராட்டுகிறேன். இதுதான் சரியான மார்க்கம். சதா வாழ்க்கையுடன் மல்லிட வேண்டும் " என்றான் எனச்சொல்கின்றார் (பக்கம் 184)

                            பல்கலைக் கழகத்தில் சேர்வது. புதிய நட்புகள், புரட்சிக்காரர்களோடு தொடர்பு, அறிவு வளர்ச்சி மன்றத்தில் உறுப்பினராவது, ரொட்டிக் கடையில் வேலை பார்த்துக்கொண்டே தகவல் தொடர்பு பரிமாற்றம் செய்வது, கிராமத்தில் வாழ்வது , நகரத்தில் வாழ்வது, கிராம வாழ்க்கையின் போலித்தனம், முட்டாள்தனம் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் , முதன் முதலில் கவிதைப் புத்தகம் வெளியிடுவது போன்ற செய்திகளும் , கடைசி அத்தியாத்தில் மார்க்சிம் கார்க்கியின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கைக்குறிப்புகள், லெனினுக்கும் அவருக்கும் ஏற்பட்ட தொடர்பு, லியோ டால்ஸ்டாயைச்சந்தித்து, "தாய் " நாவல் மற்றும் அவரது படைப்புகள் பட்டியல் என்று இணைக்கப்பட்டிருக்கின்றது.

                            தாய் நாவல் நான் பத்து ,இருபது ஆண்டுகளுக்கு முன்னால் படித்தது. அவரது சிறுகதைத் தொகுப்பையும் வாசித்திருக்கிறேன், ஆனால் அவரது துயரமிக்க குழந்தைப்பருவ, இளைமைப்ப்ருவ வாழ்க்கையை நான் அறிந்ததில்லை. ஒரு மாபெரும் எழுத்தாளன் எப்படி சோதனைகளை எல்லாம் கடந்து அன்பே பிரதானம் என்று நம்பியதால் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியோடு வாழ்ந்தான் , இரசியா என்னும் நாட்டின் மபெரும் மாற்றத்திற்கு எப்படி பங்களித்தான் என்னும் சரித்திரத்தை இந்தப் புத்தகத்தின் மூலம் அறியலாம். ஆனால் மார்க்சிம் கார்க்கி என்னும் எழுத்தாளனின் 30,35 வய்துக்கு மேற்பட்ட எழுத்தாளர் வாழ்க்கை இப்புத்தகத்தில் விரிவாக இல்லை. அப்படி ஏதேனும் புத்தகம் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே, நானும் படித்துக்கொள்கின்றேன்.



Tuesday 5 February 2013

அண்மையில் படித்த புத்தகம் : மிட்டாய் கதைகள் -கலீல் கிப்ரான்

அண்மையில் படித்த புத்தகம் : மிட்டாய் கதைகள் -கலீல் கிப்ரான்

நூலின் தலைப்பு : மிட்டாய் கதைகள்
ஆசிரியர்                : கலீல் கிப்ரான்
தமிழில்                  : என்.சொக்கன்
பதிப்பகம்               : கிழக்கு
முதல் பதிப்பு        : செப்டம்பர் 2005
பக்கங்கள்               :  94, விலை ரூ 40

                          " கிப்ரானின் கவிதைகளையும் , சின்னச்சின்ன பொன்மொழிகளையும் ஆங்காங்கே வாசித்திருக்கிறேன். பளிச்சென்ற கருத்துக்களை எளிய மொழியில் சொல்லும் அவரது பாணி, நேரடியானது. அதே சமயம் விஷ்ய கனத்தை சமரசம் செய்து கொள்ளாதது. " என்று முன்னுரையில் சொல்லும் இந்த் நூலின் மொழி பெயர்ப்பாளர் , என். சொக்கன் கதை சொல்லியாக கிப்ரான் தன்னைக் கவர்ந்த தன்மையை விவரித்திருக்கிறார். கிப்ரானின் பல நூல்களிலிருந்து இவற்றைத் தேடித் தொகுத்ததாக குறிப்பிட்டிருக்கின்றார். உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய பணி. ஆங்காங்கே பரவிக் கிடந்த முத்துக்களைத் தொகுத்து நல்ல ஆபரணமாய்  இந்த நூலைக் கொடுத்திருக்கின்றார் என்.சொக்கன் எனலாம்.
      
                            மொத்தம் 50 கதைகள். சின்னச்சின்ன கதைகள் .ஆனால்  சொல்லும் கருத்து பல நாள் சிந்தனையை அடைத்துக்கொள்ளும் அளவிற்கு வலிமையாய். சில எடுத்துக்காட்டுக்கள் மட்டும் இங்கு.

                           கதை 17. தலைப்பு : கைதிகள் . " என் அப்பாவின் தோட்டத்தில் இரண்டு கூண்டுகள் இருந்தன. ஒரு கூண்டில் , அப்பாவின் அடிமைகள் பிடித்து வந்த ஒரு சிங்கம் அடைக்கப்பட்டிருந்தது. இன்னொரு கூண்டில் , ஒரு சிறு குருவி இருந்தது. தினந்தோறும் பொழுது விடியும்போது, இந்தக் குருவி , வலிமையான அந்தச்சிங்கத்தை கை சொடுக்கி அழைத்து, ' என் சக கைதியே, குட்மார்னிங்' என்று சொல்லும் "

                        கதை 49 : தலைப்பு : தேவதைகளும் சாத்தான்களும். " தேவதைகளும் சாத்தான்களும் என்னைப் பார்ப்பதற்கு வருகின்றன. ஆனால், அவற்றை விரட்டுவதற்கு நான் ஒரு வழி கண்டு பிடித்துவிட்டேன்.
தேவதைகள் என்னைத் தேடி வந்தால், பழைய பிரார்த்தனைப் பாடல் ஒன்றைப் பாடுகிறேன். அவை சலிப்படைந்து , வெளியேறி விடுகின்றன.
சாத்தான்கள் என்னைப் பார்ப்பதற்கு வந்தால், பழைய பாவம் ஒன்றைச்செய்கிறேன். அவையும் சலிப்படைந்து ஓடிப்போய்விடுகின்றன. "

                         நிறையக் கதைகள், மிகவும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கின்றன. படித்துப் பார்ப்பதற்கு மட்டுமல்ல, மேடைகளில் கதை சொல்ல, தத்துவம் சொல்லப் பேச்சாளர்களுக்கு பயன்படும் நூல் . மற்றவர்கள் படித்து, ரசிக்கலாம், சில கதைகளைப் படித்து விட்டு சிரிக்கலாம். 

Saturday 2 February 2013

ஏய்த்துப்பிழைக்கும் தொழிலே -சரிதானா (3)

                                 ஏய்த்துப்பிழைக்கும் தொழிலே -சரிதானா (3)   
     
                    இனி ராக்கெட்டையும் விண்கலத் தையும் பார்ப்போம். ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையத் தாண்ட வேண்டுமானால் ஒரு வினாடிக்கு குறைந்தது 11.2 கிலோமீட்டர் அல்லது எட்டு மைல் வேகத்தில் அந்த ராக்கெட் போக வேண்டும். அப்போதுதான் பூமியின் ஈர்ப்பு விசையை (நுளஉயயீந எநடடிஉவைல)  மீறமுடியும். துல்லியமான கம்ப் யூட்டர் கணக்குகளில் ஒரு இம்மி பிசகானாலும் ராக்கெட்டோ விண்கலமோ அதன் இலக்கிலிருந்து பல கோடி மைல்கள் தள்ளிப் போய்விடும் .அல்லது புறப்பட்டவுடனே விழுந்துவிடும். பெரிய விண்கலம் ஆக இருந்தால் கூடுதல் எரிபொருளும் பெரிய ராக்கெட்டும் தேவைப்படும். கால நிலை முதலிய வற்றைக் கணக்கில் கொண்டு (டுயரஉ றனேடிற) ஒரு கால அட்ட வணை தயாரிக்க வேண்டும்.செவ்வாய் கிரகத்தை நோக்கி அனுப்பப்பட்ட பெரும்பாலான விண் கலங்கள் தோல்வியில் முடிந்தன. பல தோல்விகளுக்கு என்ன காரணம் என்று இன்னும் ஆராய்ந்து வரு கிறார்கள்.

                         இப்போது இதையே விசேஷ பிரார்த்தனையுடன் ஒப்பிடுங்கள். எப்படி ஈர்ப்பு விசையைத் தாண்ட வினா டிக்கு எட்டு மைல் வேகம் தேவையோ அப்படி நம்முடைய அகங்காரம், மமகாரம், தீய எண்ணங்கள், கோபம் தாபம் ஆகிவற்றைத் (ழுசயஎவைல) தாண்ட தீவிர பிரார்த்தனை வேண்டும்.
எப்படி சில நாட்களில் ஏவினால் கிரகங்களின் உந்துவிசை பயன்படு கிறதோ (ழுசயஎவையவடியேட ளடபேளாடிவ)  அப்படி விசேஷ நாட்களில் பிரார்த் தனை செய்தால் பிரார்த்தனைக்கு உந்து விசை கிடைக்கும். அப்போது நூறு முறை நாம ஜபம் செய்தாலும் அது பல்லாயிரம் மடங்காகும்.எப்படி குறிப்பிட்ட நாட்களில் (டுயரஉ றனேடிற) ஏவினால்தான் ராக்கெட்டுகள் எளிதாக இலக்கை அடையுமோ அப்படி பண்டிகை அல்லது கிரகண காலங்களில் செய்தால் எளிதில் நினைத்ததை அடைய  லாம்.

                    எப்படி குறிப்பிட்ட இடத்தில் உள்ள ஏவுதளத்திலிருந்து இலக்கை நோக்கி ஏவுகிறோமோ அப்படி குறிப்பிட்ட நேரத் தில் குறிப்பிட்ட இடத்தில் பிரார்த்தனை  செய்தால் பிரார்த்தனையின் முழுப் பலனும் கிடைக்கும்.
எப்படி பெரிய ராக்கெட்டுக்கு நிறைய எரிபொருள் தேவைப்படுகிறதோ அப்படி நம்முடைய பெரிய வேண்டுகோளுக்கு நிறைய பிரார்த்தனை தேவைப்படும். ஆனால் சில நாட்களில் கிரகங்கள் (செவ்வாய், சனி) அருகில் இருந்தால் அதன் ஈர்ப்புவிசை (ழுசயஎவையவடியேட ளடபேளாடிவ ) பயன்படுவது போல நமக்கு குறைந்த பிரார்த்தனைக்கு நிறைந்த பலன் கிடைக்கும்.ஆதி சங்கரர், சம்பந்தர் போன்றோ ருக்கு இந்த கணக்குகள் எல்லாம் ஞானக் கண்களால் தெரியும். ஆதலால் அவர்கள் நினைத்ததை முடிக்கிறார்கள். அவர்கள் கூறியது போல நாமும் பண்டிகை நாட்களில் ஒரே எண்ணத் தோடு ராக்கெட் போல குறி இலக்கு நிர்ணயித்தோமானால் எளிதில் பலன்கள் கிட்டும். நம்முடைய பிரார்த்தனைக்கும் ஒரு லாஞ்ச் விண்டோ தேவை." மேலே கண்ட செய்தியினை , தமிழும் வேதமும் என்னும் வலைத்தளத்தில் பதிந்திருக்கின் றார்கள்."

             ஏமாற்றுவதற்கு எப்படி அறிவியலையும், கடவுள் கதைகளையும் ஒப்பிடுகின்றார்கள் பாருங்கள். ஆதிசங்கரர், சம்பந்தர் போன்றோ ருக்கு ஞானக் கண்கள் இருந்ததாம், தெரிந்ததாம். நமக்கு இல்லையாம், ஆனாலும் நிறைய பிரார்த்தனை,அதீத பிரார்த்தனை செய்தால் பலன் கிட்டுமாம். இதனை நம்பக்கூடியவர்களும் நாட்டில் இருக்கின்றார்கள் என்பதனை நம்மைப் போன்றவர்கள் கணக்கில் எடுத்துக்  கொள்ள வேண்டும். பிரார்த்தனை வலிமையானது என்று சொல்கின்றார் கள். தீவிர பிரார்த்தனை , விசேச்  நாட் களில் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று சொல்கின்றார்கள்.

                பிரார்த் தனை பற்றி புகழ்பெற்ற கதை ஒன்று, கலீல் கிப்ரான் அவர்களின் கதை ஒன்று உள்ளது  அவரவர் கதை என்னும் தலைப்பில் தமிழில் மொழி பெயர்க் கப்பட்டுள்ளது. "ஒரு பூனை, நாயிடம் சொன்னது - 'நண்பா, நீ முழு மனத் துடன் பிரார்த்தனை செய். தொடர்ந்து நீ இப்படி கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டே இருந்தால், ஒரு நாள் ஆண்டவன்  உனக்கு அருளுவார். இதில் எந்த சந்தேகமும் இல்லை . கடவுளின் கருணைப் பார்வை உன்மேல் பட்டு விட்டால் போதும். வானத்தில் இருந்து எலிகளாகப் பொழியும். நீ விருப்பமுள்ள அளவுக்கு அள்ளித் தின்னலாம். இதைக் கேட்ட நாய் , விழுந்து விழுந்து சிரித்தது. - 'ஏ முட்டாள் பூனையே, எனக்கு ஒன்றுமே தெரியாது என்று முடிவு கட்டி விட்டாயா?என் வீட்டிலும் பெரிய வர்கள் இருக்கிறார்கள். அவர்களும் என் முன்னோர்களும், எங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள்- மனம் உருகிப் பிரார்த்தனை செய்தால், எலி மழை பொழியாது, எலும்பு மழைதான் பொழியும். அதை நாம் ஆசை தீரக் கடித்து மகிழலாம்" (மிட்டாய் கதைகள், கலீல் கிப்ரான், தமிழில் என்.சொக்கன், கிழக்கு பதிப்பகம், பக்கம்-68) .  இன்னும் நாம் எலி மழை பொழியும் , பிரார்த்தனை செய்தால் என்று நம்பும் நிலைமையில் தான்  இருக்க வேண்டுமா?

                    யோசித் துப்பாருங்கள்.  நம்மை ஏய்த்துப் பிழைப்போருக்கு பலிகடாவாக ஆகத்தான் வேண்டுமா?"நடவு செய்த தோழர் கூலி நாலணாவை ஏற்பதும் உடல் உழைப்பு இலாத செல்வர் உலகை ஆண்டு உலாவலும் கடவுள் ஆணை என்றுரைத்த கயவர் கூட்டம்" என்று புரட்சிக் கவிஞர் குறிப்பிட்டாரே அப்படி கடவுளாணை என்று சொல்லி இன்னும் நமது மக்களை கல்லாமையில், அறியாமையில் , மூட நம்பிக்கையில் ஆழ்த்தி வைத்திருக்க அவர்களின் கையில் உள்ள ஆயுதம் 'பிரார்த்தனை'. அந்த மோசடியின் பல்வேறு வடிவங் களைத் தோலுரிப்போம், வாருங்கள் தோழர்களே, தோழியர்களே.

நன்றி : விடுதலை - 1-02-13 


ஏய்த்துப்பிழைக்கும் தொழிலே -சரிதானா (2)

                                            ஏய்த்துப்பிழைக்கும் தொழிலே -சரிதானா (2)

திரு விளக்கு பூஜையில் கலந்து கொள்ளும் பெண்களுக்கு என்ன கிடைக்கும்? அது கிடைக்கும், இது கிடைக்கும் என்று விளம்பரத்தை அள்ளி விடுகின்றார்கள். உண்மையா, திருவிளக்குப் பூஜை செய்து, பிரார்த் தனை செய்தால் எல்லாம் கிடைத்து விடுமா? + 2, மற்றும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நெருங்குகின்றன, சில  ஊடகங்கள் திட்டமிட்டு , தேர் வில் அதிக மதிப்பெண் பெற அந்தக் கடவுளுக்கு பிரார்த்தனை செய் யுங்கள், இந்தக் கடவுளுக்கு பிரார்த் தனை செய்யுங்கள் என்று மாணவ, மாணவிகளுக்கும், அவர்தம் பெற்றோ ருக்கும் உபதேசம் செய்கிறார்கள், அதனைப் போலவே மற்ற மதத்தினைச் சேர்ந்தவர்களும், தேர்வு நேர சிறப்பு பிரார்த்தனை கூட்டங்களை ஏற்பாடு செய்கிறார்கள்.

                  நம்மைச்சுற்றிலும் ஒரே பிரார்த்தனை மயமாக இருக்கிறது. இந்த நிலையில் இரண்டு புத்தகங் களைப் படித்தேன். அதனை உங்க ளோடு பகிர்ந்து கொள்கின்றேன், ஒரு நூல் திராவிடர் கழகத் தலைவர் , ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்  "பிரார்த்தனை மோசடி" என்னும் நூல் ஆகும். இது ஒரு திராவிடர் கழக வெளியீடு ஆகும், தந்தை பெரியார் அவர்களின் 'பிரார்த்தனை ' என்னும் கட்டுரைக்கு பொழிப்புரையாக, விரிவுரையாக வந்துள்ள நூல் இந்த நூல்." பிரார்த்தனையின் அஸ்திவாரம் உலகத்தைப் படைத்துக் காத்துவரும் கடவுள் ஒருவர் இருக்கிறார் என்பதும் அவர் சர்வவல்லமையும் , சர்வ வியா பகமும் சர்வமும் அறியும் ஞானமும் உடையவர் என்பதும், அப்படிப்பட்ட அக்கடவுளை வணங்குவதால் ஒரு வனுக்கு வேண்டிய சகல காரியத்திலும் சித்தி பெறலாம் என்பதுமானைவை தான் கருத்தாயிருக்கிறது" என்று தந்தை பெரியார் தன் கட்டுரையில் கூறுவதைக் குறிப்பிட்டு விளக்கம் கொடுக்கின்றார் ஆசிரியர்.
                            பிரார்த் தனை என்பதற்கு வேறு வார்த்தையில் ஒரு மாற்றுப்பெயர் சொல்ல வேண்டு மானால் 'பேராசை ' என்றுதான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு மேல் விரும்புவது, வேலை செய்யாமல் கூலி பெறுவது, படித்துப்பாஸ் செய்ய வேண்டியவன் பிரார்த்தனையில் பாஸ் செய்வது என் றால், பணம் வேண்டியவன் , பிரார்த் தனையில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால், 'மோட்சத்துக்கு' போக வேண்டும் என்கிறவன் பிரார்த் தனையில் மோட்சத்துக்குப் போக வேண்டும் என்றால், இவைகளுக்கெல்லாம் பேராசை என்று மட்டும் சுருக்கமாகச் சொல்வ தோடு இல்லாமல் , வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும் மோசடியும் ஆகும் என்று சொல்லுவது தான் மிகப்பொருத்த மாகும். பேராசையும், சோம்பேறித்தனமும், ஏமாற்றும் தன்மை யும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமே இல்லை - (பக்கம் 11) என்று பிரார்த்தனை என்பதன் அடித்தளத்தை நமக்கு கோடிட்டு காட்டி அதற்கு பல் வேறு எடுத்துக்காட்டுகளை மேற்கண்ட புத்தகத்தில் கூறுகின்றார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 
                       பிரார்த் தனை என்பதனை சிலர் முழு ஈடு பாட்டுடன் கடவுளிடம் வேண்ட வேண்டும். அப்பொழுதுதான் அது நடக்கும் என்று சொல்கின்றனர். இது எவ்வளவு பெரிய ஏமாற்றும் தன்மை என்பதற்கு இணைய தளத்தில் ஒரு ஆதாரம் கிடைத்தது. இதோ, அது "ஆதி சங்கரர் கனக தாரா ஸ்தோத்திரம் செய்தால் ஏழை வீட்டில் தங்க மழை பெய்கிறது. முத்துசாமி தீட்சிதர் அமிர்தவர்ஷனி ராகத்தில் அம்பாளைப் பிரார்த்தித்தால் வறண்ட பூமியில் மழை பெய்கிறது. ஞான சம்பந்தர் பதிகம் பாடினால் இறந்துபோன பெண் அஸ்திக் கலச சாம்பல் எலும்பிலிருந்து எழுந்து வருகிறாள். நாமும் அதே ஸ்தோத்திரம் , பதிகம் பாடினால் ஏன் நமது பிரார்த்தனைகள் நிறைவேறு வதில்லை?
இதோ, கீழே இதற்கான விடை உள்ளது.
கிரகண நாட்களில் பிரார்த்தனை செய்தால் ஏன் பலன் பன் மடங்கு அதி கரிக்கிறது? சிவ ராத்திரி, வைகுண்ட ஏகாதசி, பிள்ளையார் சதுர்த்தி, துர்காஷ் டமி, ஜன்மாஷ்டமி, ராமநவமி ஆகிய நாட்களில் பூஜை செய்தால் ஏன் பல மடங்கு பலன் கிடைக்கும் என்று நமது மத நூல்களும், ஆச்சார்யர்களும் கூறுகிறார்கள்?
இதோ கீழே இதற்கான விடை உள்ளது.
இந்திய விண்கலம் சந்திரனுக்குச் சென்றதை எல்லோரும் அறிவர். அமெ ரிக்க ரஷிய விண்கலங்கள் செவ்வாய், சனி கிரகங்களுக்கு அவ்வப்போது ஏவப் படுகின்றன. பல விண்கலங்களும் பாதியில் கோளாறு ஆகி விழுகின்றன. ஏன் சில போயின, சில வெடித்து விழுந்தன? தவறான நேரம் அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இருக்கலாம். ஒவ்வொரு விண்கலம் ஏவப்படும் முன்பாக பல ஆண்டுகள் திட்டமிடுவார்கள். என்ன என்ன ஏற்பாடுகள் தேவை தெரியுமா?
ஒரு ஏவுதளம் வேண்டும். இது கடலுக்கருகில் அல்லது மனித நடமாட் டம் இல்லாத பாலவனத்தின் பக்கத் தில் இருக்க வேண்டும். அதுவும் நில நடுக் கோட்டுக்குப் பக்கத்தில் இருக்க வேண்டும். இதற்குப் பின் எந்த கிரகத்துக்கு அனுப்புகிறோமோ அதன் பாதை, வேகத்தைக் கவனித்து, அது பூமிக்கு அருகில் வரும் போது ஏவ வேண்டும். விண்வெளியில் அதிக எரிபொருள் செலவில்லாமல் பயணம் தொடர ஒவ்வொரு கிரகத்தின் ஈர்ப்பு உந்து விசையைப் (ழுசயஎவையவடியேட ளடபேளாடிவ) பயன்படுத்த உரிய தருணத்தில் அனுப்ப வேண்டும். இது தவறினால் சில நேரம் ஆண்டுக் கணக்கில் கூட காத்திருக்க வேண்டும்.....(தொடரும் )

நன்றி : விடுதலை (31-1-13)

ஏய்த்துப் பிழைக்கும் தொழிலே - சரிதானா?(1)

  ஏய்த்துப் பிழைக்கும் தொழிலே - சரிதானா?(1)
      (முனைவர் வா. நேரு தலைவர், மாநிலப் பகுத்தறிவாளர் கழகம்)

ஒரு விபத்து, உடன் வேலை பார்க்கும் ஒருவரின் பையன் இரு சக்கர வாகனத்தில் சென்று விபத்தில் அடிபட்டு, மருத்துவமனையில் இருந் தான் . நானும் என் துணைவியார் சொர்ணமும் பார்க்கச் சென்றிருந் தோம். மருத்துவமனையில் அடிபட்ட பையனோடு அவனது தாயார் இருந்தார். தைரியம் சொன்னோம், நமது கொள்கை பற்றி அறியாத அவர், என் மகன் மிகுந்த ஆபத்தில் இருக்கிறான், கடவுள்தான் அவனைக் காப்பாற்ற வேண்டும், தொடர்ந்து கடவுளைப் பிரார்த்தனை செய்து கொண்டே இருக்கின்றேன், கடவுள் என் மகனை எப்படியும் காப்பாற்றி விடுவான் என்றார். உடன் வந்திருந்த சிலர் நாங்களும் எங்கள் கடவுளிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறோம், சின்ன வயது, கடவுள் காப்பாற்றி விடுவான் என்றனர். நானும் என் துணைவியாரும் மனிதம் கருதி அந்த இடத்தில் ஒன்றும் விவாதம் செய்ய வில்லை.

பிரார்த்தனை செய்தால் கடவுள் காப்பாற்றி விடுவான் என்றால் மருத் துவமனைக்கே கொண்டு வரவேண்டிய அவசியமில்லையே, கசிந்துருகி கண்ணீர் மல்க பாட்டுப்பாடி பிரார்த் தனை செய்தே காப்பாற்றி விடலாமே என்று அந்த இடத்தில் கேட்கத் தோன் றவில்லை. மிகப்பெரிய இக்கட்டில் இருக்கும் சகோதரி தன்னுடைய ஆற்றாமையைத் தணிப்பதற்காக ஏதோ கடவுள் என்று கதைக்கிறாள் என்று வந்து விட்டோம். மருத்துவமனையில் இருந்த அந்தப் பையன் இறந்து விட்டான். சென்று வந்தோம். சில மாதங்களுக்குப் பின் அந்த பையனின் தாயாரைப் பார்க்க நேர்ந்தது.
பக்தி மார்க்கத்தின் மொத்த உருவமாக இருந்தார். பிரார்த்தனை செய்து, அந்தக் கடவுள் ஒன்றும் செய்ய வில்லையே, (ஏனெனில் கடவுள் இருப் பதாக நம்புகிறவர்கள் அவர்கள்)- கடவுள் மீது மொத்தக் கோபம் வந்து பக்தி மார்க்கத்தை கழற்றி வீசி எறிந்திருப்பார் என நினைத்ததால் இப்படி இருக்கிறாரே எனப் பேச்சுக் கொடுத்தேன். கடவுள் என்னை ரொம்பச்சோதிக்கிறான் சார், அதனாலே விடாமல் அவனைத் துதித்து, சோதனையக் குறைக்க வேண்டுகிறேன் என்றார். எனக்கு அழுவதா, சிரிப்பதா எனத் தெரியவில்லை- அவரது அறியாமையை நினைத்து.

நல்லது நடந்தால் பிரார்த் தனைக்கு பலன் கிடைத்து விட்டது, கெட்டது நடந்தால் கடவுள் சோதிக் கிறான், அட எப்படி என்றாலும் கடவுள் என்னும் கருத்துக்கு பங்கம் வராமல் நமது மக்கள் மூளையில் ஏற்றி வைத்திருக் கிறார்களே என்னும் எண்ணம் ஓடியது.         அலுவலகத்தில் தனிப்பட்ட முறையில் உடல் பிரச்சனை, குடும்பப்பிரச்சனை என்று பேசமுடியவில்லை என்றார் நண்பர் ஒருவர். ஏதாவது பிரச்சனை என்று சொன்னாலே இந்த ..... பிரிவு ஆட்கள் வந்து விடுகிறார்கள் சார். உங்கள் பிரச்சனை உடனே தீர்ந்து விடும், பிரார்த்தனைப் பெருவிழா அங்கு நடக்கிறது, இங்கு நடக்கிறது வாருங்கள், குடும்பத்தோடு வாருங்கள் என்று கூப்பிடுகிறார்கள்,நாம் வரவில்லை என்று சொன்னாலும், மறு நாள் வந்து எங்கள் கூட்டத்தில் உங்கள் பிரச்சனையைக் குறிப்பிட்டு, பிரார்த்தனை செய்தோம், எங்கள் பிரார்த்தனை மூலமாக உங்கள் பிரச்சனை முடிந்து விடும் என்று சொல்லி, ஒருவர் இருவர் அறிந்திருந்த பிரச்சனையை அலுவலகம் முழுக்க அறிந்த பிரச்சனையாக ஆக்கி விடு கிறார்கள் என்றார். அவர்களுக்கு எல்லாம் பிரேயர்தான். பக்கத்தில் இருந்த நண்பர் ஒருவர், நான் ஒரு நாள் இவர்களின் பிரேயர் கூட்டத்திற்குப் போயிருந்தேன், எதை, எதையோ உளறி விட்டு அந்நிய மொழியில் பேசினேன் என்று சொல்கிறார்கள் .என்றார்.

 சார், அலுவலகத்தில் இருந்த ஒரு நோட்டைப் பத்து நாளாக் காணாம். எங்கே, எங்கே என்று தேடினோம் , காணாம், திடீரென்று சிலர் , நாங்கள் சேர்ந்து பிரார்த்தனை செய்தோம், நோட்டைக் கண்டுபிடித்தோம் என்று சொல்கிறார்கள், என்றார் நண்பர்.  என்னத்ததான் இவர்கள் எம்.எஸ்.ஸி, எம்,இ, பி.இ. படித்தார்களோ தெரிய வில்லை என்றார், செவிடர்கள் கேட்கிறார்கள், குருடர்கள் பார்க் கிறார்கள், நடக்க முடியாதவர்கள் நடக்கிறார்கள் என்று கூசாமல் பொய்யைக் கதைக்கிறார்கள். ஆனால் ஒரு பெருங்கூட்டம் அவர்கள் சொல்வதை அப்படியே நம்புகிறதே, தான் படித்த அறிவியல் உண்மை களோடு ஒப்பிட்டுப் பார்க்க மறுக்  கிறார்களே, மெத்தப்படித்தவர்கள் கூட என என் மனம் எண்ணியது.

வீடு வாங்கணுமா? பிரார்த்தனை பண்ணுங்கள், காடு வாங்கணுமா? பிரார்த்தனை பண்ணுங்கள், உடல் நலம் பெற வேண்டுமா? பிரார்த்தனை பண்ணுங்கள் என்னும் சத்தம் நம்மைச் சுற்றி கேட்டுக்கொண்டேயிருக்கிறது. "திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு- திருவத்திபுரத்தில் உள்ள ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில், 13.3.12 அன்று சக்தி விகடனும், தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தி வரும் திருவிளக்கு பூஜை சிறப்பாக நடந்தது. சக்தி விகடனின் 82 ஆவது திருவிளக்கு பூஜையாம் இது! இந்தப் பக்கம் சென் னையில் இருந்தும் அந்தப் பக்கம் திருநெல்வேலியில் இருந்தும் என... பல ஊர்களில் இருந்தும் வாசகியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். ''சக்தி விகடன் நடத்தும் விளக்கு பூஜையில் நான் கலந்து கொள்வது, இது 6 ஆவது முறை. வீடு வாங் கணுங்கற பிரார்த்தனை முதல் எல்லாமே நிறைவேறிருக்கு'' என்றார் சென்னை வாசகி லீலாவதி. "இது பத்திரிக்கையில் வந்த செய்தி. சக்தி விகடனுக்கு பத்திரிகை விற்கும், எண்ணெய் நிறுவனத்திற்கு எண் ணெய் விற்கும்.......(தொடரும்) 

 நன்றி - விடுதலை ( 30-1-2013)