Wednesday 13 March 2013

மயங்கிய அந்த முதிய உயிர் !

எங்கள் ஊரில்
இன்றும் ஒரு
முதிய உயிர்
அரளிக் கொட்டையை
அரைத்துக் குடித்து
அகாலமாய்
விடை பெற்றிருக்கிறது !

நாற்பது வருடங்களுக்கு
முன்னால் கணவனை இழந்த கிழவி !
பிள்ளைகளே உலகம் என
உதிரத்தைக் கொடுத்து
அவர்களை வளர்த்த கிழவி !

பெற்ற இரண்டு
பிள்ளைகளும்
மனைவி சொல்லைத்
த்ட்ட முடியாமல்
பெற்றவளை
முறை வைத்து
மாற்றி மாற்றி
அலைக்கழித்தபோது
சொல்லி அழுத
அந்த முதிய உயிர்
யாரிடமும் சொல்லாமல்
கொள்ளாமல் விடை
பெற்றிருக்கிறது விரக்தியால் !

ஆளுக்கொரு மாதம்தானே
எதற்கு அவள் அதற்குள்
அவள் வீட்டில்
இருந்து வந்தாள் ?
என்று தான் கட்டிய
வீட்டிற்குள் தன்னை
விட மறுத்து இளையவள்
அடம் பிடித்த போது
அரண்டுதான் போனாள் கிழவி பாவம் !
ஆற்றாமையால் நொந்து அழுதாள் !


வெளியூர் போன மூத்த மகனோடு
போகப் பிடிக்கவில்லை என்றாள் கிழவி
எங்கேயாவது போய் அவளை
இருக்கச்சொல்
அல்லது ஏதேனும்
முதியோர் இல்லத்தில்
அவனைச்சேர்க்கச்சொல் !

அவள் இங்கு வந்தாள்
நான் எனது அப்பா வீட்டுக்குப்
போய் விடுவேன்
நீயுமாச்சு ,நீ பெத்த மூணு
பிள்ளையாமாச்சு என்று
அவள் கணவனை
மிரட்டியபோது
தான் கட்டிய வீட்டை
விட்டு வெளியில் வந்து
தெருக்களில் திரிந்த
அந்த முதிய உயிர்
அரளிக் கொட்டையைத் தின்று
அகாலமாய் விடை பெற்றிருக்கிறது !

இளையவள் வீட்டில்
நாயுண்டு நான் பார்த்திருக்கிறேன் !
நாலு வேளைச்சோறுண்டு
அதற்கு அவள் வீட்டில் !

ஒரு வேளைச்சோற்றை எவரிடம்
கேட்க என மானத்திற்கு அஞ்சி
மயங்கிய அந்த முதிய உயிர்
அரளிக்கொட்டை தின்று
சோறு கேட்கா நிலை
எய்துள்ள கொடுமையை
நான் என் சொல்ல !
எவரிடம் சொல்ல !
--------------------------------

எழுதியவர் :வா. நேரு
நாள் :2013-03-11 12:19:45
நன்றி : எழுத்து.காம்

Sunday 10 March 2013

அண்மையில் படித்த புத்தகம் : வெற்றிக்கு சில புத்தகங்கள்

அண்மையில் படித்த புத்தகம் : வெற்றிக்கு சில புத்தகங்கள்

நூலின் தலைப்பு : வெற்றிக்கு சில புத்தகங்கள்
நூலின் ஆசிரியர் : என். சொக்கன்
பதிப்பகம்         : மதி நிலையம் , சென்னை 86
மொத்த பக்கங்கள்: 184, விலை ரூ 120

                                   குமுதம் இதழில் வெளிவந்த ;வெற்றிக்கு ஒரு புத்தகம் ' என்னும் தொடரின் சில கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல் என்று நூலின் பின் அட்டையில் அச்சிட்டுக் கொடுத்திருக்கின்றார்கள். 32 நூல் அறிமுகங்களின் தொகுப்பு இந்த நூல் என்றாலும், தமிழில் அறிமுகம் செய்ய்ப்பட்டுள்ள அனைத்து நூல்களும் ஆங்கில நூல்கள். ஆங்கில நூல்களில் நல்லவற்றை , பயனுள்ள நூல்களைத் தேர்ந்தெடுத்து, அதனை முழுவதுமாக உள்வாங்கி, அந்த நூல் சொல்லும் கருத்தை சுருக்கமாகவும் , மனதில் நன்றாகப் பதியும் வண்ணமும் என்.சொக்கன் சொல்லியிருக்கின்றார். பாராட்டத்தக்க பணி.

                                     சுய முன்னேற்ற நூல்கள் தமிழிலும் வருகின்றன, ஆங்கிலத்திலும் வருகின்றன, ஆங்கில நூல்கள் வெறும் அறிவுரைகளின் கோர்வையாக இருப்பதில்லை, ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு அந்தப் பிரச்சனையை அக்கு வேறாக, ஆணி வேறாகப் பிரித்து அலசி பின்பு பிரச்சனைக்கு இப்படி , இப்படி தீர்வு எனச்சொல்வது போல பல ஆங்கிலப்புத்தகங்கள் அமைகின்றன, அப்படிப்பட்ட பல புத்தகங்களை எடுத்துக்கொடுத்திருக்கின்றார் திரு.என்.சொக்கன் அவர்கள்.

                            " The Houdini solution, Monkey Business, 8 Patterns Of Highly Effective Entrepreneurs, Juggling Elephants, The One Minute Sales Person, The Secret Monkey Business, The Family Wisdom, The Last Lecture, Every Child has a Thinking Style, SUMO, Imagining India, Why So Stupid, Outliers, The one minute apology, Drop the Pink Elephant, The Case of the  Bonsai Manager, A Better India- A Better World, Peaks and Valleys, The Leader in Me, Whale Done, How Full is Your Bucket, Sandbox Wisdom,Fish for Life, The 7 Levels of Change, The Magic Of Thinking Big, Sway, Made to Stick, The Shark and the Gold Fish, Say it Like Obama, The Aladdin Factor, The Dip " மேலே சொல்லப்பட்டிருக்கும் 32-ம் நூல் மதிப்புரையில் இடம் பெற்றிருக்கும் புத்தகத்தின் தலைப்புகள். யார் நூலின் ஆசிரியர், எந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது, இந்த நூலின் ஆசிரியர் எந்த நூலால் புகழ் பெற்றவர் ( The Family Wisdom - ஆசிரியர் ராபின்சர்மா The monk who sold his Ferrari என்னும் நூலால் புகழ்பெற்றவர்) போன்ற பல செய்திகளைச்சொல்லி, அந்த நூல் சொல்லும் முக்கியமான கருத்துக்களைக் கொடுத்துள்ளார். வெற்றிக்கு சில புத்தகங்கள் என்னும் இந்த நூலில் அவர் சொல்லும் நூலை மட்டுமல்ல , அந்த நூலின் ஆசிரியர் எழுதியுள்ள புகழ்பெற்ற நூலையும் படிக்கத்தூண்டும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது.

                             வேல் டன் என்னும் புத்தகத்தின் மதிப்புரை அருமையாக உள்ளது. திமிங்கலத்தைப் பழக்கப்படுத்தும் முறையும் அதன் மூலம் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடமும் என்னும் முறையில் 'நம்பிக்கை முக்கியம் ' என்று அழுத்தம் திருத்தமாகச்சொலவது அருமை. நம்பிக்கை இல்லா உறவோ, நட்போ வேதனையைத்தான் தருமே தவிர சாதனையைத் தராது  என்பது உண்மைதானே .

                          நீ எந்தத்துறையில் சாதனை புரிய நினைத்தாலும் குறைந்த பட்சம் பத்து ஆயிரம் மணி நேரம் உழைக்க வேண்டும் என்பதனைச்சொல்லும் Outliers புத்தக விமர்சனம் , உழைக்காமல் உட்கார்ந்துகொண்டு பொத்துன்னு நமக்கு மேன்மை வந்துடும் என்று ஜாதக நோட்டைத் தூக்கிக்கொண்டு அலைந்தால் ஒன்றும் கிடைக்காது என்பதனை மறைமுகமாகச்சொல்கிறது எனலாம்,

                           ராண்டி பாஷ் என்னும் பேராசிரியர் கொடுத்த The Last Lecture , அது சொல்லும் செய்தி , இறக்கப்போகிறோம் என்று தெரிந்த நிலையில் ராண்டி பாஷ் அவர்கள் கொடுத்த அந்த நம்பிக்கையூட்டும் பேச்சு, மற்றவர்களுக்கு கொடுத்த தன்னம்பிக்கை , வழிகாட்டுதல் பற்றிய விவரம் அந்தப்புத்தகத்தைத் தேடிப் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைக்கொடுத்திருக்கின்றது. 

                                                         ஸ்டீபன் கவே அவர்கள் எழுதிய The Leader in Me என்ற புத்தகத்தைக் குறிப்பிட்டு ' The Seven Habits of Highly effective People '  பற்றியும் கொடுத்துள்ளார் என்.சொக்கன் அவர்கள் . வாழ்வியல் சிந்தனைகள் நூலில் திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் எழுதப்பட்ட புத்தகம்  , நான் தேடி  வாங்கி பல பேருக்கு  படிக்கவும் , சில பேருக்கு பரிசாகவும் கொடுத்த நூல். உண்மையிலேயே  இந்தப் புத்தகத்தைப் படித்தால் உன்னிடத்தில் உறுதியாக மாற்றம் நிகழும் என்று நம்பிக்கையோடு நண்பர்களிடம் நான் சொல்லும் புத்தகம்.

                                                             படிக்கும் நமது பிள்ளைகள் ஆங்கிலத்தைத் தெரிந்து கொள்வதற்காக ஆங்கில நூல்களைப் படிக்கச்சொல்கின்றோம். அவர்களும் இர்விங் வாலஸ், ஜேம்ஸ் காட்லி சேஸ் என்று வாசிக்கின்றார்கள். வெறும் துப்பறியும் கதைகளாக அவை முடிந்து போகின்றன. அதற்கு மாற்றாக இந்த நூலின் ஆசிரியர் திரு.சொக்கன் அவர்கள் கொடுத்துள்ள நூல்களில் ஒன்றை வாசிக்கச்சொல்லலாம். பரிசாக கொடுப்பதற்கு ஆங்கில நூல் வேண்டுமென்றால் துணிந்து இவர் கொடுத்துள்ள பட்டியலில் இருந்து ஒன்றை வாங்கிக் கொடுக்கலாம். நூல்களின் தலைப்பைக் கொடுத்தாலே ,கூகிள் தேடுதளம் பல செய்திகளை நமக்கு அந்தந்த  நூல்களைப்  பற்றித் தருகின்றது. பயன்படுத்தலாம். எம்.பி.ஏ. போன்ற பாடங்கள் படிக்கும் நமது மாணவர்கள் மனித வள மேம்பாட்டுத்துறையில் சிறக்க, வாழ்வில் தன்னம்பிக்கையோடு முன்னேற இந்த நூலையும், நூலில் சொல்லியுள்ள நூல்களையும் பயன்படுத்தலாம்.
                              
                                   

                          

Tuesday 5 March 2013

அண்மையில் படித்த புத்தகம் : வி.ஸ. காண்டேகர் கதைகள்

நூலின் தலைப்பு    : வி.ஸ. காண்டேகர் கதைகள்  தொகுதி ஒன்று
தமிழ் வடிவம்          : கா.ஸ்ரீ.ஸ்ரீ.
பதிப்பகம்                  :   அல்லயன்ஸ் பதிப்பகம்
இரண்டாம் பதிப்பு :  டிசம்பர் 2004
மொத்த பக்கங்கள்: 216 விலை ரூ 50.00
மதுரை மைய நூலக எண் : 160859


                                          இந்தியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான காண்டேகரின் சிறுகதைத் தொகுப்பு இந்தப் புத்தகம் . காண்டேகரைப் பற்றி 'காண்டேகர் என்னும் சூறாவளி' என்னும் தலைப்பில்(பக்கம் 5-9 )  1940 முதல் 1970 வரை தமிழ் வாசகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டவர் என்பதனைக் கூறியிருக்கிறார்கள். 'திலீபன் ' என்னும் பெயர் தமிழர்களால் மறக்க முடியாத பெயர். இன்றைய இளம் பருவத்தினர் பலருக்கு திலீபன் என்னும் பெயர் இருப்பதைக் காண முடியும். தமிழ் ஈழப்போராட்டத்தில் தண்ணீர் கூட அருந்தாது, அகிம்சை வழியில் உயர் நீத்த மாவீரனின் பெயர் அது . ஆனால் ஒரு 60 , 70 வயதில் இருப்பவருக்கும் 'திலீபன் ' என்று பெயர் இருக்கிறதே என்று பார்த்தால் அது காண்டேகரின் கதாபாத்திரமான 'திலீபன் ' என்னும் பெயர் என்பது இதில் சுட்டப்பட்டிருக்கிறது.

                                கற்றவர்கள் பார்வையில் காண்டேகர் என்னும் தலைப்பில் பலரின் கருத்துரைகளை அடுத்து பக்கங்களில் (10-14)  கொடுத்திருக்கின்றார்கள் . பேரறிஞர் அண்ணா " சமூக அமைப்பு முறையிலே மிகப் புரட்சிகரமான மாறுதல் வேண்டும் என்பதற்கான போர் முரசு காண்டேகரின் கதைகள் " என்று சொல்லியிருக்கின்றார். " ,,, எழுதுகோலால் உலகை வாழ வைக்கும் உத்தமர்களில் காண்டேகர் ஒருவர் " என்று டாக்டர் மு.வ. , என்ப பலரும் , பல பத்திரிக்கைகளும் காண்டேகரின் எழுத்தைப் பாராட்டியதை பட்டியலிட்டுக் கொடுத்திருக்கின்றார்கள்,

                                     அதனைத் தொடர்ந்து தமிழ் மொழிபெயர்ப்பாளர் கா.ஸ்ரீ.ஸ்ரீ.," காண்டேகரும் நானும் " என்னும் தலைப்பில் தன்னுடைய கருத்துக்களைக் கூறியிருக்கின்றார்(பக்கம் 15-16) . மொழி பெயர்ப்பு நூலின் வெற்றிக்கு மூல் நூல் எவ்வளவு நல்லதாக இருந்தாலும் , அதனை வெற்றி நூலாக ஆக்குவதில் மொழி பெயர்ப்பாளரின் பங்கு என்பது மிக இன்றியமையாதது. கா.ஸ்ரீ.ஸ்ரீ -யின் மொழி பெயர்ப்பு எப்பொழுதுமே வேற்று மொழி நூல் என்று காட்டாது. அமையும் அருமையான மொழி பெயர்ப்பு.

                                      காண்டேகரின் கதைகள் எப்பொழுதுமே அமைதியாகப் பேசும் , ஆனால் ஆழமாகப் பேசும் வல்லமை உடையவை. மனிதர்களின் மனங்களின் ஊடாகப் பயணித்து, அவனுக்குள் நீர்த்துப்போயிருக்கும் மனிதத் தனமைகளை எடுத்துக்காட்டும் வல்லமை வாய்ந்தவை . இந்த நூலின் முதல் சிறுகதை ; கறுப்பு ரோஜா " அப்படித்தான் உள்ளது. இரண்டு தம்பதிகள். ஒரு தம்பதிக்கு பணம் இருக்கிறது, பதவி இருக்கிறது, ஆனால் குடும்பத்தில் அமைதி இல்லை, ஆனால் இன்னொரு தம்பதிக்கு படிப்பு மிக அதிக அளவில் இல்லை, பதவி பெரிய அளவில் இல்லை ,ஆனால் ஆழமான புரிதலின் காரணமாக தம்பதிகளுக்கு இடையே அன்பு இருக்கிறது. இதனை மிக அழகாக சுட்டிக்காட்டும் கதை, சிவப்பு ரோஜா, கறுப்பு ரோஜா என ஒப்பிட்டு. 

                                    'சித்தப்பாவின் உயில் ' என்னும் சிறுகதை உறவுகளுக்கு இடையே நிலவும் மனித நேயமற்ற தனைமையை சுட்டிக்காட்டும் சிறுகதை. 'சுதா' என்னும் பாத்திரம் பேராசைக் கணவனுக்கும் , பேராசை பிடித்த அப்பாவுக்கும் இடையே மாட்டிக்கொண்ட பெண் . கொடுத்தால்தான் அழைத்துப்போவேன் என அடம் பிடிக்கும் கணவன், எப்படியாவது எதனையாவது கொடுத்து கணவ்னோடு சுதாவை அனுப்பிவிடத் துடிக்கும் தந்தை என்று கதாபாத்திரங்களை விவரிக்கின்றார் காண்டேகர். சுதாவின் சித்தப்பா திடீரென்று இற்ந்து போகின்றார், சித்தப்பாவின் மகன் சிறுவன் சந்திரகாந்தன் சுதாவின் வீட்டிற்கு அடைக்கலமாக வருகின்றான். சுதா அவனிடம் அன்பு காட்டுகிறாள். அப்பாவும் , கணவனும் சேர்ந்து சித்தப்பாவின் சொத்தை அபகரிக்கத் திட்டம் போட , சுதா அதனை எதிர்த்து சந்திரகாந்தனோடு வீட்டை விட்டு வெளியேறுகிறாள் என்பது கதை. உறவுகளுக்கு இடையே இருக்கும் பண ஆசையை மிக நுட்பமாக எதார்த்தமான நடையில் சுட்டுகின்ற சிறுகதை இது.

                                   'இருபது ஜீன் ' என்னும் கதை,ஆசிரியராக வேலை பார்க்கும் குடும்பம் இல்லாத் ஒரு பெண்மணி, சிந்துவின் மன ஓட்டத்தைப் பற்றியது. ஒரே மாதிரியான வேலை, பொழுது எனப் போரடிக்கும் வாழ்க்கையாக தன் வாழ்க்கையை உணர்கின்றாள். தன்னுடைய தோழி குந்தம் என்பவளை சந்திக்கின்றாள். குழந்தை இல்லாது, மிக அன்பு செலுத்தும் கணவனோடு வாழ்பவள். அவள் வாழ்க்கையில் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்று நினைக்கின்றாள். ஆனால் குந்தம் தனக்கு முழு மகிழ்ச்சி குழ்ந்தை இன்மையால் இல்லை என்றும் தனது தங்கை மஞ்சு இரண்டு குழந்தைகளோடு மிக மகிழ்ச்சியாக இருக்கிறாள் என்றும் , அவள் பாக்கியம் செய்தவளென்றும் சொல்கின்றாள். மகிழ்ச்சியாக இருப்பதாகச்சொல்லப்படும் மஞ்சுவை சந்திக்கின்றாள், சிந்து. மஞ்சுவின் மூலமாக குடும்பம் என்ற அமைப்பைப் பற்றி ஆழமான கேள்விகளை முன் வைக்கின்றார் காண்டேகர் . இதோ அவரின் எழுத்துக்களிலேயே

                                "சிறிது நேரம் கழித்து மஞ்சு பேசினாள் " காலேஜில் படித்த நாளில் நானும் எப்போதும் மனக்கோட்டை கட்டி வந்தேன். பட்டம் பெற்றதும் வாத்தியாரம்மா ஆகவேண்டும் , ஆண்களைப் போலச்சுதந்திரமாக வாழவேண்டும், குழ்ந்தைகளுக்குக் கல்வி புகட்டும் தூய செயலைச்செய்யவேண்டும் என்றெல்லாம் நினைத்தேன். ஆனால் --- "
                               அவள் தயங்கிப் பேச்சை நிறுத்தினாள். அவளுடைய அழகிய கண்களில் சோர்வு பரவுவதை சிந்து நன்றாகக் கவனித்தாள். அவளுக்கு ஆறுதல் கூறுவதற்காக . "நாற்பது குழந்தைகளுக்கு வாத்தியாரம்மாவாக இருப்பதைவிட, இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக இருப்பதில் மிகுந்த சுகம் இருக்கிறது, மஞ்சு " என்றாள்

                               " சுகமாவது? குடும்பமும்,மலையும் தூரத்திலிருந்து பார்க்கத்தான் அழகானவை, சிந்து அம்மா! உலகத்தார் நான் சுகமாக வாழ்வதாக நினைக்கிறார்கள். ஆனால் உண்மையைச்சொல்லப்போனால் , எரிமலை உள்ளுக்குள்ளே குமுறுவதுபோல என் நிலைமை இருக்கிறது; கணவருடைய அன்பு இருக்கிறது.இரண்டு குழ்ந்தைகளும் இருக்கின்றன. ஆனால் ..."

                                 " சிந்து அம்மா, நான் காலேஜில் இருந்தபோது பிரசங்கப்போட்டியில் பொற்பதக்கம் பெற்றேன். இப்பொழுது ' காபி கொண்டு வரட்டுமா? ' என்று அவரைக் கேட்பதைத்தவிர என் பிரசங்க வன்மைக்கு எவ்விதப்பயனும் இல்லை. நான் கு வருசங்களில் இரண்டு குழந்தைகள் பிறந்து விட்டன. உலாவப்போவதோ, கூட்டத்துக்குப் போவதோ -எதுவுமே என்னால் செய்ய முடியவில்லை. கைக்குழந்தையைக் கூட்டத்துக்கு அழைத்துப்போனால் அங்கே அது அழுகிறது.எல்லோரும் நம்மை வெறுப்போடு பார்க்கிறார்கள்.ஒன்று மாற்றி ஒன்று, குழ்ந்தைகள் நோயாளிகளாக இருக்கின்றன. கவலையும் கண்விழிப்பும் ஓய்வதில்லை. குழந்தைகள் மலர்கள் என்று சொல்லும் கவிகளைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரிக்குத்தான் அனுப்ப வேண்டும். குழ்ந்தை என்பது தென்னை மரம். பத்துப் பன்னிரெண்டு வருடங்கள் கஷ்டபட்டு வளர்த்தால் ஒரு குழந்தை பெரிதாகும் ...." பக்கம் (156&157).

                         என்னைச்சுற்றி இருக்கும் பெண்களைப் பார்க்கிறேன். எனக்கு தெரிந்த ஒரு பெண், +2 -வில் அவ்வளவு துன்பப்பட்டு, உயர் மதிப்பெண் பெற்று மருத்துவக்கல்லூரியில் படித்து டாக்டரானாள். திருமணம் செய்ய வந்த மாப்பிள்ளை வீட்டார் மிகப்பெரிய பணக்கார இடம், அவர்கள் போட்ட் ஒரே  கட்டுப்பாடு, பெண் வேலைக்குப் போக வேண்டியதில்லை, பெண் வீட்டார் ஒத்துக்கொள்ள, அந்தப் பெண் திருமணம் முடிந்து போய்விட்டாள்,. தன்னுடைய பிள்ளைகளுக்கு மருந்து , மாத்திரை கொடுப்பதோடு சரி, எவ்வளவுதான் வாய்ப்பு, வசதிகள் இருந்தாலும் இளம் வய்தில் இருந்து தான் கண்ட கனவுக்காக உழைத்து, உயர் பட்டம் பெற்ற ஒருவரின் கனவு இப்படி கல்யாணம் மூலம் பறிக்கப்படலாமா? ஒரு ஆண் டாக்டரிடம் இப்படிச்சொல்ல இயலுமா? நிறைய சாப்ட்வேர் பொறியாளர்களின் நிபந்தனை, பெண் படித்திருக்க வேண்டும், ஆனால் வேலைக்குப் போகக்கூடாது, வீட்டில் இருந்து சாப்பாடு ஆக்கிப்போட்டாள் போதும் என்பதாகத்தான்  இருக்கிறது.  படிக்க வைக்கின்றோம், படிக்க வைத்த பின் நம்முடைய பெண் பிள்ளைகளின் மன ஓட்டத்திற்கு ஏற்ப அவர்களை வேலை பார்க்க அனுமதிக்கின்றோமா? என்பதுதான் இன்றைய உலகத்தின் கேள்வி. காண்டேகர் கேட்கின்றார் 80 ஆண்டுகளுக்கு முன்னால், தந்தை பெரியார் கேட்டது போலவே தன் எழுத்துக்களால் இன்றைய பெண்களின் கேள்வியை.

                            அதனைப் போலவே 'கல்லும் கரையும் ' என்னும் கதை ஒரு அரசனின் இறுமாப்பை தொண்டுள்ளம் கொண்ட நாட்டியக்காரி அகற்றி அவனைப் போர்க்களத்தில் அழவைக்கும் கதை.'திருட்டுத் தெய்வம் ' என்னும் கதை தலைப்பைப் பார்த்தவுடன் சிலர் கோபிக்கக்கூடும்,இரண்டு பிச்சைக்காரர்களைப் பற்றிய கதை. பிச்சை எடுக்கும் நிலையிலும் போகாத ஈகோ, மற்றவன் துன்பப்பட வேண்டும் என்பதே ஒருவனின் இலக்காக இருப்பதைச்சொல்லும் கதை.

                          'முதற்காதல் ' என்னும் சிறுகதையும் மிகவும் நன்றாக இருக்கிறது. காதல் என்பதை மிகவும் இயல்பாக எடுத்துக்கொண்டு பேசும் சிறுகதை, முதற்காதல் என்னும் நாவல் மிக நன்றாக விற்றுத் தீர்ந்து விட்டாலும் அதனை மீண்டும் பதிப்பிக்காமல் இருக்கும் நாவல் ஆசிரியரைச்சந்தித்து பேசும்போது முதல்காதலுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை, அது ஒரு வித இனக்கவர்ச்சி என்பதாகவும் அடுத்தடுத்து காதல் வரும் எனவும் கூறுவதாக விவரிக்கின்றார். இந்த சிறுகதையைப் பேசினால் 4,5 பக்கம் விரிவாகப் பேசலாம்.

                          " இப்பொழுதும் இவருடைய (காண்டேகருடைய ) புத்தகங்கள் அனைத்தையும் ஒருமுறை ஊன்றிப் படிப்பது எழுத்தாளர்களுக்கு எழுத்து வன்மையைக் கூட்டும் " என்று வலம்புரி சோமனாதன் என்பவர் குறிப்பிட்டிருப்பதை பக்கம் 10-ல் குறிப்பிட்டிருக்கின்றார்கள். உண்மைதான் , தமிழில் எழுத விரும்புகிறவர்களும், எழுத்தை விரும்புகிறவர்களும் கட்டாயம் காண்டேகரையும் படிக்கவேண்டும் என்பதே எனது கருத்தும்.

Saturday 2 March 2013

அடிக்கடி நடுங்குகின்றாய் நிலமே !

அடிக்கடி
நடுங்குகின்றாய் நிலமே!
இருப்போரை அச்சமூட்டி
எந்த நேரம் சுனாமியோ !
நில நடுக்கமோ என மக்கள்
நடுங்கும் வண்ணம்
அடிக்கடி நடுங்குகின்றாய் நிலமே !

மங்கைகள் பெயரையெல்லாம்
மா நதிகளுக்குச் சூட்டிவிட்டு
மண்ணில் மங்கையர்கள்
படும் இன்னல் கண்டு
நடுங்குகின்றாயோ நிலமே !

உழைப்போர் பசித்திருக்க
மண்ணில் உழையாதார்
அறுசுவை உண்டு
களித்திருப்பதைக் காண
முடியாமல் நடுங்குகின்றாயோ நிலமே !

அபார்ட்மெண்ட் என்று சிலர்
உன்னில் ஆழமாய்த் துளை போட
சுற்றியிருப்போர் எல்லாம்
தண்ணீருக்கு அலையும் நிலை
கண்டு நாணி நடுங்குகின்றாயோ நிலமே !

விளை நிலமெல்லாம்
வீடு கட்டும் பிளாட்டாக
மாறி வரல் கண்டு
எப்படிப் பிழைத்திருப்பாய் மனிதா !
செத்துத் தொலை எனச்
சீற்றம் கொண்டு நடுங்குகின்றாயோ நிலமே ?

ஏற்றத்தாழ்வு என்றும்
நிலைத்திருக்கும் ஏணிப்படிகள்
அமைப்பாம்
சாதி எனும் சதியால்
மக்கள் சாகும் நிலை
கண்டு நடுங்குகின்றாயோ நிலமே !

காணாத கடவுளுக்காய்
கலகம் மூட்டி
கடவுள் பெயர்சொல்லி
மக்களைக் கழுத்த்றுக்கும்
கொடுமை கண்டு
இந்த மனிதர்கள் இருந்தாலென்ன
செத்தாலென்ன என
நினைத்து நடுங்குகின்றாயோ நிலமே !

இய்ற்கை சீறினால்
இருப்பதெல்லாம்
ஒரு நொடியில் அழியும் !
உன்னைக் காப்பாற்ற
சுற்றுச்சூழலைக் காப்பாற்று
என அறிவுறுத்த
அடிக்கடி நடுங்குகின்றாயோ நிலமே !

எழுதியவர் :வா. நேரு

நாள் :2013-02-25 14:49:01

nantri : eluthu.com

போகிறபோக்கில்…-1-பொள்ளாச்சி அபி.

ஒரு எழுத்தாளரின் பாராட்டுரை - எழுத்து இணைய தளத்தில் எனக்கு.   வந்து 7, 8 மாதங்கள் ஆனபோதிலும் இதனை எனது வலைத்தளத்தில் பதிவிடுவதில் ஒரு தயக்கம் இருந்தது எனக்கு. பொள்ளாச்சி அபி என்னும் கவிஞரின் அறிமுகம் எழுத்து தளத்தில் மட்டும்தான். அவர் யார்? ஏதும்  இயக்கம் சார்ந்தவரா? இல்லையா? என்பது தெரியவில்லை. என்ன தொழில் செய்கின்றார் ? என்ன வயது ?  என்பதெல்லாம் தெரியவில்லை. நேரடியாகவோ, தொலைபேசி வழியாகவோ அவரிடம் தொடர்பு இல்லை.
தனக்குத் தானே பாராட்டுரைகள் எழுதிக்கொள்ளும் இந்த யுகத்தில் , வந்த பாராட்டைப்  பதிவிடுவதில் என்ன தயக்கம் என்றார் நண்பர்  ஒருவர். முகம் தெரியாத தோழரின் கருத்துக்கள் என் கவிதை பற்றி, நண்பர்களின் பார்வைக்காக !



28.5.12 .போகிறபோக்கில்…-1-பொள்ளாச்சி அபி.

கடந்த ஒரு வருடத்தில்,இந்தத்தளத்தில் எழுபத்தைந்து கவிதைகளைப் பதிவு செய்திருக்கிறார் வா.நேரு எனும் கவிஞர்.அதிலென்ன விசேஷசம்.? என்றா கேட்கிறீர்கள்..?
சமூகமாற்றத்திற்கான விருப்பத்தையும்,சமூகத்தில் நிலவும் கேடுகெட்ட பல்வேறு விஷயங்களையும் தனது கவிதைப் பொருளாகக் கொண்டு தனது கவிதைகளைப் படைத்திருக்கிறார் அவர்.சமூக சீரழிவுகள் அனைத்தையும் கேள்விகளால் துளைக்கிறது அவர் கவிதை.அவருடைய படைப்புகளை எங்கிருந்து பார்த்தாலும்,எந்த வகையில் விவாதித்தாலும் அவர் வெற்றிக்குரிய கவிஞராகவே மிளிர்கிறார்.
ஆனால் அவருடைய கவிதைகள் இந்தத் தளத்தில் 99 சதவீதம் கண்டுகொள்ளப்படவே இல்லை என்பது மிக வருத்தமான செய்தி.!.
ஆனாலும் அவர் அதனை எதிர்பார்க்காமல் என் பணி கவிதை செய்து கிடப்பதே என்று செயல்பட்டு அற்புதமான படைப்புகளை நமக்கு அளித்தே வந்திருக்கிறார்.
நல்ல கவிதைகளைத் தேடிப்பிடித்தேனும் படைக்கவேண்டும் என்ற ஆவல் யாருக்கு இருந்தாலும் வா.நேருவின் கவிதைகளை நிச்சயம் படிக்கவேண்டும்.
யாருடைய அங்கீகாரத்திற்கும் காத்திருக்காத அவருடைய மனப்போக்கிற்கு அவரின் படைப்புகளுக்கான சிபாரிசு அவருக்கு தேவையே இல்லாமலிருக்கலாம்.
ஆனால் நல்ல வாசகர்கள் என்ற முறையில் நாம் அப்படி விட்டுவிட முடியாதல்லவா.?.இத்தனை நாளும் அதனைப் பார்வையிடத் தவறிவிட்டோமே என்று இப்போது நான் உணரும் வேதனையை நீங்களும் அனுபவிக்கலாமா.?.
இந்தத் தளத்தில் உள்ள இன்னும் இதுபோல நல்லகவிதைகளைப் பார்வையிடும் நண்பர்கள் அதுகுறித்து அனைவருக்கும் தெரிவிக்கலாமே.!.
நல்லவற்றைப் படிப்பதன்மூலம்,நல்ல சிந்தனைகளை பிறரிடம் பகிர்ந்து கொள்ள நமக்கு மேலும் ஒரு சந்தர்ப்பம்.அதற்கான தீனியும்,திராணியும் கவிஞர் வா.நேருவிடம் நிச்சயம் இருக்கிறது.இவர் ஒரு பத்திரிகையாளர் என்றும் தெரிகிறது.!
உதிப்பதும் உயர்வதும் ஓய்வெடுப்பதும் எனது பணி.இதில் பயன்பெறுவதும் பதுங்கிக் கொள்வதும் உனது விருப்பம் என்றபடி வந்துகொண்டேயிருக்கும் சூரியன் போல எனக்குத் தெரிகிறார் இந்தக்கவிஞர்.
அன்புடன் பொள்ளாச்சி அபி.

நன்றி : எழுத்து.காம்