Monday 27 May 2013

நிறைந்திருக்கிறாய் அம்மா!


குடத்திற்குள்
நிறைந்திருக்கும் நீர்போல
நினைவுகள் முழுக்க
நிறைந்திருக்கிறாய் அம்மா!

இறந்து விட்டாய்
என்றாலும்
கிராமத்து வீட்டின்
ஒவ்வொரு பொருளும்
ஓராயிரம் நிகழ்வுகளை
உனது நினைவுகளை
அடித்து ஒலிக்கும்
அலாரமாய் எழுப்புகின்றன
அம்மா ! என் மனதில்

எம்.ஏ.தேர்வில் வெற்றி என்றவுடன்
பருத்த உடலோடு
ஓடிவந்து என் கையைப்பிடித்து
வாழ்த்துச்சொன்ன கைகள்
மரத்துப்போய் கிடைக்கும்
நிலையில் மனதில்
மோதும் நினைவுகள்

உனக்காக நூலகத்தில்
புத்தகம் எடுக்கப்போனேன் சிறுவயதில்
பற்றிக்கொண்ட படிக்கும்
பழக்கமே
உயர்ந்தோர் பலரிடம்
பழகும் வாய்ப்பாய் அமைந்தது அம்மா !

ஏழு வயதில் தந்தையை
இழந்த என் வளர்ச்சியில்
தந்தையுமாய் தாயுமாய்
செடியை வளர்க்கும்
சூரிய ஒளி போல
அருகில் இருந்தபோதும்
தூரத்தில் இருந்தபோதும்
ஒளியூட்டினாய்
உணர்வூட்டினாய்
நிறைவூட்டினாய்
செறிவூட்டினாய்
என் வாழ்வை அம்மா !

பசுவினை இழந்த கன்றாய்
கதறுகின்ற நிலையிலும்
வருத்தம் தோய்ந்த நிலையில்
நான் அமர்ந்திருந்த நிலையிலும்
நேரிலும் கைபேசியிலும்
ஆறுதல் தந்த உறவுகளும்
தேறுதல் தந்த நட்புகளும்
பிறந்த ஒவ்வொருவரும்
இறப்பது உறுதியென்னும்
நிலையால் ஆறுதல்
அடைகின்றேன் அம்மா !

Sunday 12 May 2013

அணமையில் படித்த புத்தகம் : ஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி

`
நூலின் தலைப்பு          : ஆமென்-ஒரு கன்னிகாஸ்திரியின் தன் வரலாறு
மலையாள ஆசிரியர் :சிஸ்டர் ஜெஸ்மி
தமிழில்                            : குளச்சல் மு.யூசுப்
வெளியீடு                       : காலச்சுவடு பதிப்பகம்
இரண்டாம் பதிப்பு       : நவம்பர் 2011
பக்கங்கள்                       : 224 , விலை ரூ 175

                                            " என்னுடைய எல்லாமுமாகிய இயேசுவிற்கும் அவரது அன்பிற்கும் பாசத்திற்கும் " இந்த் நூல் காணிக்கை என்று குறிப்பிடுகின்றார் சிஸ்டர் ஜெஸ்மி. குழந்தைக்காலம் முதல்  இன்றுவரை இயேசுவை நம்பும் ஜெஸ்மி, கட்டமைக்கப்பட்ட இயேசுவின்   நிறுவனங்களில்   நடக்கும் அடக்குமுறைகளை, அத்துமீறல்களை விவரிக்கும் அவரின் சோகக்கதைதான் இது.

                                                                                    ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்விக்கண் திற்ந்ததில் , இந்தியாவில் உள்ள கிறித்துவ தேவலாயங்களுக்கு கட்டாயம் மிகப்பெரிய இடம் உண்டு. ஆனால் கல்வி கற்றுக்கொடுக்கும் ஒரு மேலான பணியை மேற்கொள்ளும் கன்னியாஸ்திரிகள் எப்படி கலவிக்காக மறைமுகமாகவும் , நேர்முகமாகவும் துன்புறுத்தப்படுகின்றார்கள் என்பதுதான் இந்த உண்மைக் கதையின் உள்ளடக்கம். " மேலதிகாரிகள்  விதிகளை அமலாக்கம் செய்வதிலும், தண்டனை கொடுப்பதிலும் காட்டுகிற 'இரட்டைத் தாழ்ப்பாள் ' அணுகுமுறையைப் பார்த்து நான் ஆச்சரியப்படுவதுண்டு " (பக்கம் 88) " இந்த அருட்சகோதரி , ஒரு அருட்தந்தையின் அறையில் ஒரு நாள் , அர்த்த ராத்திரியில் கையோடு பிடிபட்ட சம்பவத்தை மதர் என்னிடம் விவரித்தார். இந்தச்சகோதரிக்கு , ஆயர் இல்லத்திலும் சபையின் தலைமை அலுவலகத்திலும் அதிகாரிகளிடமும்  நல்ல செல்வாக்கிருப்பதால் சிறு வடுகூட ஏற்படாமல் தப்பித்துவிட்டார். கிரைம் வார இதழில் இவரைப்பற்றிய செய்தி , பெரிய அளவில் அப்போது வெளிவந்திருந்தபோது கூட அதிகாரிகள் இதைப் பார்க்காததுபோல் நடித்தார்கள் " (பக்கம்  89) போன்ற ஒழுகக்கக் கேடுகள் பல இடங்க்ளில் ஜெஸ்மியால் சுட்டிக்காட்டப்படுகிறது.

                                                               வீட்டிலிருந்து வெளியேறி , கன்னியாஸ்திரியாகி படிப்படியாக படித்து , பின்பு கல்லூரி முதல்வர் என்னும் நிலைமை வரை உயரும் ஜெஸ்மி, இயல்பாகவே இலக்கியம் மீதும் சினிமாவின் மீதும் ஈர்ப்பு கொண்டு, இறைப்பணிக்குக் கூட குறும்படங்களைப் பயன்படுத்தவேண்டும் என்று மாணவிகளை ஊக்குவிக்கும் ஜெஸ்மி, அபாண்டமாய் தன்னைப் பற்றி கல்லூரி மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்கின்றார், பாலியல் வக்கிரங்களை ஊக்குவிக்கின்றார் என்று வீண் பழி சுமக்கும் ஜெஸ்மி , தன்னைச்சுற்றி ஒரு சதி வலை பின்னப்படுகின்றது, தனக்கு மேலே உள்ளவர்களின் இச்சைகளுக்கும்,கொள்ளையடிப்பிற்கும் துணை போகாததால் என்பது தெரிந்தாலும் அதனை எப்படி எதிர்கொள்வது என்பது அறியாமல் மீண்டும் மீண்டும் இயேசுவிடம் பிரார்த்தினை செய்து கொண்டு தனிமையில் அழுகின்ற ஜெஸ்மி, ஏழை என்பதால் படிப்பு தடைபடக்கூடாது என்பதற்காக தனது மாணவிக்காக போராடி அவள் படிப்பிற்கு வழி வகுக்கும் ஜெஸ்மி என்று பல கோணங்களில் தன்னுடைய வாழ்க்கை வரலாற்றை ஜெஸ்மி குறிப்பிடுகின்றார்.

                                                        கடவுளுக்கு உரியவர்கள் என்று சொல்லிப் பெண்களை பொட்டுக்கட்டி விடும் பழக்கம் தந்தை பெரியார் அவர்களால் , முத்துலெட்சுமி ரெட்டியார் வழியாக .சுயமரியாதை இயக்கத்தால்  ஒழிக்கப்பட்டது.  இயேசுவின் மனைவி என்றே தன்னை பல நேரங்களில் கருதுவதாக ஜெஸ்மி இந்த நூலில் குறிப்பிடுகின்றார்.இயேசுவின் பெயரால், கிறித்துவ மதத்தின் பொட்டுக் கட்டி விடும் கொடுமையோ என்று எண்ணுகின்ற அளவில்  தனக்கு நேர்ந்த பல அவலங்களை ஜெஸ்மி சுட்டிக்காட்டுகின்றார். ஒரே ஊழியம் என்ற வகையில் இருந்தாலும் பெண்களுக்கும்(கன்னியாஸ்திரிகள்) , ஆண்களுக்கும்(பாதிரியார்களுக்கும்)  காட்டப்படுகின்ற வேறுபாட்டை நன்றாக பட்டியலிடுகின்றார் ஜெஸ்மி.

                                                      " அருட்தந்தைகளுக்கு ஆன்மிக வேசத்தில் பயணம் செய்யலாம்.திரைப்படம் பார்க்கப்போகலாம், திருமணம் என்னும் வாழ்வியல் சடங்குகளை நிறைவேற்றலாம். கொண்டாட்டங்களில் பங்கெடுக்கலாம். மதுகூட அருந்தலாம். அவர்களுடைய பொருளாதார நிலைமை மிகவும் பாதுகாப்பானது. ஆனால் கன்யாஸ்திரிகளால் இவற்றைக் கனவுகூட காண இயலாது. ...(பக்கம் 146) .அதனைப் போல ஆன்மிகம் என்பதனைப் பற்றிய தனது கேள்விகளைப் பல இடங்களில் கேள்வி கேட்கின்றார். " ஒருவர் அணிகிற ஆடை சார்ந்த விசயமல்ல ஆன்மிகம் " (பக்கம் -147).

                                                        இய்சுவிடம் பிரார்த்திப்பது, இயேசுவிடம் கேள்விக்கான விடையைப் பெற்றது, இயெசுவின் தூண்டுதலால் உயர் கல்வி படித்தது,இயேசு தனக்கு சரியான வழி காட்டியது, இந்த் இடத்திற்கு போக வேண்டாமென இயேசு தனக்கு அறிகுறி காட்டியது என்று பல்வேறு இடங்களில் தனது வாழ்க்கை முழுவதும்   இயெசு தனக்கு வழிகாட்டியதாகக்கூறுகின்ற ஜெஸ்மி, அப்படி ஒருவர் இருந்திருந்தால், ஆண்டவர் என்று ஒருவர் இருந்தால், ஆண்டவருடைய இல்லம் என்று சொல்லப்படும் இடத்தில் இப்படியெல்லாம் நடக்குமா? என்ற கேள்வியை எந்த இடத்திலும் கேட்கவில்லை. கடவுள் இருக்கின்றாரா? என்னும் சந்தேகம் வாழ்நாள் முழுவதும் அவருக்கு வரவேயில்லை. பல இடங்களில் இயேசுவைப் பற்றிப்  பேசுகின்ற இடங்களில் மந்தையில் மாட்டிக்கொண்ட ஆடாகவே பேசுகின்றார், மேய்ப்பவர் இருப்பதாக எண்ணிக்கொண்டு.

                                          என்னைப் போன்ற நாத்திகவாதிகள் இந்தப்புத்தகத்தைப் படிக்க வேண்டும் என்றாலும், கிறித்துவ மதத்தைச்சேர்ந்த நண்பர்கள் இதனைப் படிக்க வேண்டும்..பாலியல் தேவை என்பது ஒவ்வொரு உயிருக்கும் உலகில் தேவையானது, அதன் தேவை இயற்கை. அதனை மறக்கிறேன் என்று ஒருபக்கம் சொல்லிக்கொண்டே அதற்கு மாற்றாக வாழ்வது, வாழ்வதற்கு வற்புறுத்துவது சரிதானா என்னும் கேள்வி படிக்கும் நண்பர்களுக்கு எழும். கிறித்துவ மதம் மேலை நாடுகளில் மெல்ல மெல்ல மறைந்துகொண்டிருக்கிறது. கடவுள் நம்பிக்கைகள் குறைவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.  . அவை மேலும் குறைவதற்கான ஒரு புத்தகத்தை, தனது வாழ்க்கை அனுபவம் மூலம் கொடுத்திருக்கின்றார் சிஸ்டர் ஜெஸ்மி. சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற சென்னை புத்த்கச்சங்கமத்தில் வாங்கிய புத்தகம்.படித்துப்பாருங்கள். நன்றி.