Sunday, 20 April 2014

கையில் குழ்ந்தையோடும் கண்களில் வழியும் நீரோடும் ...

கையில் குழந்தையோடும்
கண்களில் ஆறாய்
வழியும் நீரோடும்
தெருத்தெருவாய் வந்தான் அவன் !
ஆண்டுகள் பல
ஆன போதும்
அந்த அழுகைமுகம்
நெஞ்சில் பதிவாய் இன்றும் !

ஏதும் சொல்லவில்லை
அவன் ! எவரிடத்தும்
முறையிடவில்லை !
தனக்கு இழைக்கப்பட்ட
துரோகத்திற்காக
மண்ணை வாரித்
தூற்றினான் என்றார்கள் !

நகையும் சதையுமாய்
தன்னில் ஒருவளாய்
இருந்த ஒருத்தி
தன் உதிரத்திலிருந்து
தன்னைப் போலவே
ஒரு குழுந்தையை
நகலெடுத்துக் கொடுத்த
அந்த ஒருத்தி
செய்த செய்கையால்
செய்வதறியாது
திகைத்துப் போன
அவன்
கையில் குழ்ந்தையோடும்
கண்களில் வழியும்
நீரோடும்
தெருத்தெருவாய் வந்தான் !

அந்தப் பணக்காரரின்
பண்ணையில் அவன்
வேலைக்கு அமர்ந்தபோதே
அருகில் இருந்தவர்கள்
சொன்னார்கள் !
அழகான மனைவி
வைத்திருக்கிறாய் - நீ
அவரிடம் வேலைக்குப்
போகாதே என்று !

அப்படிச்சொன்னவர்களிடம்
அபரிதமான
நம்பிக்கையோடு சொன்னான்
என் மனைவி அனல்
அண்ட முடியாது அவளிடம்
அக்கினியாய் பொசுக்கி
விடுவாள் என்றான்

அக்கினி பன்னீராக மாறி
அடுத்த உடலை
அலங்கரித்தபொழுது
தணலில் விழுந்த
புழுவாய்த் துடித்த அவன்
கையில் குழ்ந்தையோடும்
கண்களில் வழியும் நீரோடும்
தெருத்தெருவாய் வந்தான்
அவன் !

உடம்பில் இருக்கும்
தழும்பு போல
நினைவில் இருக்கும்
தழும்புகளாய்
சில் நினைவுகள் ....
                                     வா. நேரு .....
நன்றி : எழுத்து.காம்

Saturday, 12 April 2014

புல் திட்டுக்களாய் நண்பர்கள் !....




ஆழமாய் ஓடும் நதி
அங்கங்கே புல் திட்டுக்கள்

வெள்ளத்தால் இழுத்துச்
செல்லப்படும் விலங்கென
ஓடும் வாழ்க்கை ....

புல் திட்டுக்களாய் நண்பர்கள்
ஆண்களாய், பெண்களாய்
நண்பர்கள்....

புரிதல் மட்டுமே
பரிமாற்றமாய்
வெள்ளத்தனைய
மலர் நீட்டம்
உள்ளத்து உயர்வு
மட்டுமே இணைப்புக்களாய்
வாழும் நட்பு

படிப்பதுவும்
எழுதுவதும்
மனதில் தைத்ததைப்
பகிர்வதும்
பகிர்வதைப் பரப்புவதுமாய்
உயிர் வாழ்தலுக்கான
ஆக்சிஜன் காற்றாய்
வாழும் நட்பு
                            --வா. நேரு---
Nantri : Eluthu.com

நிகழ்வும் நினைப்பும் (21) :மான் கராத்தே சினிமாவிற்கு போன கதை

சில நாட்களுக்கு முன்னால் , பக்கத்து வீட்லே தண்ணீர் வரலைன்னு, போர் போட, மொத்த குடும்பமே என்னைய மட்டும் மதுரையில விட்டுட்டு , திண்டுக்கல்லுக்கு எஸ்கேப். போர் போடற சத்தமும், 10 நிமிடத்திற்கு ஒரு தரம் அது ஏறி இறங்கும் கொடூரமான சத்தமும் தாங்க முடியலை, தூங்க முடியலை. திடீர்ன்னு எங்கே போய் தூங்குவது என்று ஒரு குழப்பம். யாராவது நண்பர் வீட்டிற்கு போய்த்தூங்கலாமா என்று நினைத்தேன். திடீரென்று இரவு 8 மணிக்கு அழைத்து , உங்க வீட்டுக்கு தூங்க வாரேன் என்று சொல்வது நன்றாகவா இருக்கும் என்று யோசித்தேன். அப்படி சொன்னாலும், வா என்று சொல்லக்கூடிய நண்பர்கள் இருக்கின்றார்கள் மதுரையில் என்றாலும் எவரையும் அழைக்கவில்லை. நண்பர் புத்தகத்தூதன் பா.சடகோபன் கடைக்குச்சென்று நிதானமாக அமர்ந்து இலக்கியம், இயக்கம் என்று நிறையப் பேசிக்கொண்டிருந்தோம், தோழர் அழகுபாண்டியும் உடன் இருந்தார். மணி 10 ஆக, நான் எப்போது கடை அடைப்பீர்கள் என்றேன். எப்பவும் 9.30 க்கு அடைச்சிருவேன். நீங்க வந்து பேசிக்கொண்டிருந்ததால் இன்னும் அடைக்கவில்லை என்றார். மேலும் பசிக்கவில்லையா என்றார். நான் 8 மணிக்கு உங்க கடைக்கு வந்தப்பவே சாப்பிட்டு விட்டுத்தான் வந்தேன் என்றேன். ஏற இறங்கப் பார்த்தார் என்னை. . வீட்டில் எல்லோரும் திண்டுக்கல்லுக்கு போய்விட்டார்கள் என்று சொல்லி, கடையை அடைக்கச்சொன்னேன். அடைத்துவிட்டு, பசியைத் த்ணிக்கப் பறந்து விட்டார். மீண்டும் வீட்டிற்கு வந்தால் போர் சத்தம் நின்ற பாடில்லை. என்ன செய்வது என்று ஒரே யோசனை.

                            சினிமாவிற்கு போகலாம் என்று முடிவெடுத்து, மதுரை  ரிசர்வ் லைன் பக்கம் உள்ள தியேட்டருக்குச்சென்றேன்.   20 ஆண்டுகளுக்கு முன்னால் தென்காசியில் படம் பார்த்து விட்டு, குற்றாலத்திற்கு மழைத்தூறலோடு இரவு 1 மணிக்கு நடந்து வந்தது ஞாபகம் வந்தது. வாழ்க்கையிலே ஒரு 3 வருடத்திற்கு பிறகு  செகண்ட் சோ, அதுவும் தன்னந்தனியா. 3 வருடத்திற்கு முன் திராவிடர் கழகத்தின் தோழர் இராஜபாளையம் திருப்பதி அவர்களின் தூண்டுதலில்  ஒரு படம் பார்த்தேன். அய்யா சுப.வீ அவர்களோடு இராஜபாளையம் கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு, உணவெல்லாம் முடித்து தூங்குவோம் என்று நினைத்த வேளை , திருப்பதி சினிமாவுக்குப் போவோமா என்றார். அய்யா சுப.வீ. அவர்கள் உற்சாகத்தோடு போகலாமே என்றார்கள். அன்று இராஜபாளையத்தில் படம் பார்த்தது  செகண்ட் சோ.  அதற்குப் பிறகு இன்றைக்கு பக்கத்து வீட்டுக்காரர் போர் போடும் தூண்டுதலில் எங்காவது இரவைக் கழிக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் இன்றைக்கு இந்த செகண்ட் சோ.

                              . வண்டி நிபபாட்றதுக்கு டோக்கன் வாங்கிட்டு, ஏங்க இங்க ஓடுற இரண்டு படத்திலே எந்தப் படம் நல்லாயிருக்கின்னு, அவருகிட்ட கேட்டா, ஏற இறங்க என்னைப் பார்த்த டோக்கன் கொடுக்கிறவர் , இந்தப் படத்திற்குத் தான் நிறையப் பேர் போறாஙகே என்று மான் கராத்தே படத்தைக் காண்பித்தார். டிக்கெட் எங்கே வாங்குறது என்றவுடன் , தியேட்டருக்கு உள்ளேதான் சார் வாங்க்ணும் என்றார் சீரியசாக. பின்பு கையைக் காட்டினார். ஒரு கூட்டமும் இல்லை, டிக்கெட் வாங்கும் இடத்தில். டிக்கெட் வாங்கிட்டு உள்ளே போனேன். பஸ்ட் கிளாஸ் என்று டிக்கெட் கொடுத்தார்கள் . ஆனால் சீட்டில் நம்பர் போட்டு , கிட்டத்தட்ட திரைக்கு மிக அருகில் உட்கார வைத்து விட்டார்கள். எல்லோருக்கும் ஒரே டிக்கெட்தானாம். முன்னால் போனால் முன்னாடி போய்த்தான் உட்காரணுமாம். திரைக்குப் பக்கத்தில் உட்காருவதற்கு , முன்னாடியெல்லாம் டிக்கெட் விலை குறையாக இருக்கும். பின்னாடி வர வர டிக்கெட் விலை கூடும். இப்போ எல்லாம் ஒன்று தானாம். தியேட்டரில் திரைக்குப் பக்கத்தில் உட்கார்ந்தால் , உருவங்கள் எல்லாமே பெரிது , பெரிதாய்த் தெரிந்தது

                                     மான் கராத்தே படம். சிவ கார்த்திகேயன் கதாநாயகனாக நடித்து உள்ள படம். எடுத்தவுடன் பி.எஸ்.என்.எல். லோகோவைக் காட்டினார்கள். பின்பு பீட்டர் பி.எஸ்.என்.எல்.லில் வேலை பார்ப்பவர் மகன் என்றார்கள். படம் எடுத்தவரோ, நடித்தவரோ  பி.எஸ்.என்.எல்.லில் வேலை பார்ப்பவர் பிள்ளையாக இருப்பார் போலும். எப்படியோ நாம் வேலை பார்க்கும் நிறுவனத்தை விளம்பரம் செய்கிறார்கள் என்பது  மகிழ்ச்சிதான் ஒரு லாஜிக்கும் இல்லை, ஒரு உருப்படியான கதையும் இல்லை, ஆனால் 3 மணி நேரம் ஓடியது தெரியவில்லை. குததாட்டம், கும்மாளம், அரை குறை ஆடை டான்ஸ்.,மொத்தமாய் பாடிக்கிட்டே குடி , அடி, .... பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற ஆளு கைதட்டறான், விசில் அடிக்கிறான் , நான் மட்டும் அமைதியாக உட்கார்ந்து படம் பார்த்துக்கிட்டு இருந்தேன்.

                                   ஒரு சாமியார் ஆய்த பூசைக்கு மறு நாள் வந்த தினத்தந்தி பேப்பரை( 22 வருடமாக நாங்கள் ஆயுத பூசை அன்று பிரிண்ட் செய்வதில்லை என்று தினத்தந்தி  பத்திரிகை ஆசிரியர் பேட்டி வேறு )  ஆகாயத்தில் இருந்து எடுத்துத்தர, அதை ஐ.டி. படித்து வேலை பார்க்கும் 5 பேர் ஆராய, 4 மாதங்களுக்குப் பிறகு தேதியிட்ட அந்தச்செய்தி எல்லாம் உண்மையாக நடக்க, 2 கோடி ரூபாய் அடைவதற்காக ஒரு தொத்த ஆளை  , வீரனாக்கி, குத்துச்சண்டை போட்டியிலே ஜெயிக்க வைப்பதுதான் மான் கராத்தே படத்தின் கதை.ரெண்டு பீட்டர், கொஞ்சம் செண்டிமண்ட், கொஞ்சம் காதல் , கொஞ்சம் காமெடி அதற்காக குத்துச்சண்டை மைதானத்தையே காமடியாக்கிறது ரொம்ப ஓவர்,  ஆரம்பமே மூட நம்பிக்கை . அப்புறம் எல்லாம் அபத்தம். எப்படியோ மூன்று மணி நேரம் ஓடியது. இரவு 1 மணிக்கு வந்தால் போர் சத்தம் நின்றிருந்தது. இப்படி எல்லாம் மூட நம்பிக்கையை அடிப்படையாக வைத்து, ஏற்கனவே படிச்சவன் பாதிப்பேரு மந்திரிச்சுகிட்டு, ஜோசியம் பார்த்துக்கிட்டு அலையுற சமயத்திலே, இப்படி படங்கள் வேறயா, கொடுமையடா என்று எண்ணங்கள் ஓட ஆரம்பிக்க, தூக்கம் போனது


                                  

Friday, 11 April 2014

அண்மையில் படித்த புத்தகம் : தொட்டில் சூரியன்

அண்மையில் படித்த புத்தகம் : தொட்டில் சூரியன்
எழுதியவர் : தி.அமிர்த கணேசன்(எ) அகன்
ஆங்கில மொழியாக்கம் : டி.ஜோசப் சூலியஸ்
வெளியீடு : தருண் பதிப்பகம், சீர்காழி- சட்ட நாத புரம்
முதல் பதிப்பு : 2013, பக்கங்கள் : 104, விலை ரூ 75.

புதுச்சேரியின் முதல் பேரத் தமிழ் நூல் என்ற குறிப்போடு வெளி வந்திருக்கும் இந்த நூல் , பேரனைப் பற்றி தாத்தா எழுதிய நூல். புதுமையான முயற்சி. எதை எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்பது ஒரு எழுத்தாளரின் உரிமை. எப்படி இந்த நூல் புதுமை என்றால், தமிழ்க் கவிதை இடது புறத்தில், அதற்கு ஒரு அருமையான மொழி பெயர்ப்பை- ஆங்கிலத்தில் டி.ஜோசப் ஜீலியஸ் அவர்கள் கொடுத்திருக்கின்றார்கள். தமிழிலும் ஆங்கிலத்திலும் கவிதையை ஒரே நேரத்தில் படிக்கலாம்,

'தொட்டில் சூரியனுக்குத் தாத்தாவின் தாலாட்டு ' என்று அணிந்துரையை கவிஞர் ஈரோடு தமிழன்பன் கொடுத்திருக்கின்றார். அணிந்துரையும் கூட அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்களின் கவிதையைப் போல துள்ளி விளையாடுகிறது " அமிர்தகணேசனுக்கும் அவர் வார்த்தைகளுக்கும் இடையே கவிதையும் தன்னை இழந்த இன்பமயக்கத்தில் கூத்தாடுகிறது; கொண்டாட்டம் போடுகிறது,வாழ்வின் பொருண்மைகள் வியப்புத் தளங்களைக் கைப்பற்றி வெளிச்சம் பாய்ச்சுகின்றன. கொண்டாட்டமான கவிதை-தொட்டில் உற்சவம் நடத்துகிறது, ஒளிக்கள் அருந்திய மதர்ப்பு விசித்திர வண்ணக் கோலங்களைப் படைத்துத் தள்ளுகிறது....." எழுதிக் கொண்டே போகலாம். கரந்தைப் புலவர் அய்யா ந.இராமநாதன் அவர்கள் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களைப் பற்றிப் பாடம் எடுத்தது ஞாபகம் வருகிறது எனக்கு. அய்யா ஈரோடு தமிழன்பன் அவர்கள் அவ்வளவு ஈடுபாட்டோடு இந்த அணிந்துரையை அளித்துள்ளார்கள்.

" This is a pure literary creation in which the author having a comprehensive view of the world is trying to teach his grandson ,every thing under the sun " என்று ஆரம்பிக்கும் டி.ஜோசப் ஜீலியஸ் அவர்களின் அணிந்துரை தொட்டுச்செல்லும் தூரங்கள் அதிகம். வாழ்த்துக்கள், வாழ்த்துக்கள், தங்களின் மொழிபெயர்ப்புக்கு என்று சொல்லும் அளவுக்கு மொழி பெயர்ப்பும் , ஆங்கில அணிந்துரையும்.
" உணர்வைக் கிளர்த்தி அதன் உட்பொருளைக் கிரகித்து கொள்ளச்செய்வதன்றி, ஒரு கவிதையின் செயல் வேறு எதுவும் இருக்காது என்றே கருதுகிறேன் . சூழல் இயல் குறித்தும், மொழி உணர்வு குறித்தும் ஒரு பேரனுக்குச்சொல்வதுதான் இன்றைய ஆகப்பெரும் தேவை. அதை அமிர்தகணேசன் வெகு செப்பமாகச் செய்திருக்கிறார்..." என்று சொல்லும் கவிஞர் யுகபாரதியின் ' தமிழ்த்தாத்தாவின் அமிர்தம்' எனும் அணிந்துரை, ஆங்கிலத்தில் டி.ஜோசப் ஜீலியஸ் அவர்கள் மொழிபெயர்த்தால் நான் மரபுக் கவிதையாக இப்புதுக் கவிதையை மாற்றுகிறேன் பார் என ' மடிக்குள் பெய்த மழை ....' என அய்யா எசேக்கியல் காளியப்பன், ' ஒற்றை மலருக்கல்ல , இது....மொத்தத் தோட்டத்திற்கும் 'என சரவணன் ஜெகன்நாதன் என அனைவரும் படைப்பாளி அகன் அவர்களின் படைப்பாக்கத்தை பல கோணங்களில் படம் பிடித்துக்காட்டுகின்றனர் . தி.அமிர்தகணேசன் அவர்களின் என்னுரை, இந்தப் படைப்பு எழுந்ததன் பின்னணியை, அதற்குக் கை கொடுத்தவர்களை பட்டியலிட்டுக் காட்டுகிறது,.

இந்த நூலை மூன்று பாகங்களாகப் பிரிக்கலாம்.
" வணக்கம் என்றே வாய் மலர்ந்து
வளர் தமிழில்
சுணக்கமின்றிச்சொல்லிப் பழகு .
சுகம் காண் ..." என்று தொடங்கும் முதல் பாகம் , இன்று நீ .... என்று

"தங்கத் தொட்டிலிடப் பெருஞ்செல்வம்
இல்லையாதலால்
சந்த்த் தொட்டிலில் தாலாட்டுகிறேன்
உறங்கடா நீ

காணி நிலமில்லை
கை நிறையப் பொருள் இல்லை
மேனி முழுதும் வற்றா
அன்புண்டு என்னிடம் காண் ' என்று அன்பை, பாசத்தைக் கொட்டும் கவிதைகளாக, ஆலம் கட்டி மழை போல அன்பு கொட்டும் பா துளிகளாக வாசிப்போரை பரவசப் படுத்துகிறது. வார்த்தைகள் இயல்பாய் வந்து விழும் வேகம் ,
"புல்லினம் பூவினம்
வண்டினம்- பல் புள்ளினம்
துள்ளிடும் மானினம்
உன்னினம் நேசங்கொள் " - வியக்க வைக்கிற்து.உணர்ச்சிக் கொட்டலாய் பக்கம் 28 முதல் 63 வரை முதல் பாகம்.

இவர்களோடு நீ
என அடுத்த பாகம். பேரனுக்கு அவன் யார் என்பதையும், அவனது உறவுகள் சாதி கடந்த, மதம் கடந்த தமிழ் உறவுகள் என்பதையும் படம் பிடித்துக் காட்டும் பாகமாக அமைந்துள்ளது.
" பொய்ம்மையை அறிந்திட
மெய்யாய இருந்திடப் -பா
நெய்யும் நெசவாளி
'தமிழ்ன்பன் உன் உறவு காண்....

மண்ணில் நீயுமோர்
மனிதன் மண்ணன்று என்று
பண்ணில் பொழிந்த
பாரதிதாசன் உன் நில உறவு "
என்று பட்டியலிடும் கவிஞர் , பேரனுக்கு தாய் வழி உறவுகளையும், தந்தை வழி உறவுகளையும், தமிழ் வழி உறவுகளையும் கவிதையால் பட்டியலிடும் பகுதியாக இரண்டாம் பாகம்

நாளை நீ
என்னும் மூன்றாம் பாகம் தன் பேரன் எப்படி வரவேண்டும் என்பதையும் , எதை எதைக் கற்க வேண்டும், என்ன என்ன ஆற்றல் பெற வேண்டும் என்பதையும் பட்டியலிடுகின்றர்ர்.
" பாராடா உன்னுடன் பிறந்த பட்டாளம் " என்று புரட்சிக் கவிஞர் முழுங்குவதைப் போல
' விழி, கதிர் முன் நாளும்
விரி பார்வை புவியெங்கும்
மொழி, தமிழில் மட்டும்
உயர் வளர்ச்சி காண்....

யாரோடும் நட்புக் கொள்
க்ண்டம் மற
ஊரோடும் சேர்ந்து வாழ்
உயர்வுண்டு காண் "

என முழுங்குகின்றார். அறிவுரைக் கொத்துக்களாய், கவிதை மூலம் பரப்ப விரும்பும் நல் முத்துக்களாய் இந்த மூன்றாம் பாகம் அமைந்துள்ளது.
முடிவாக புதிய ஆத்திசூடி உனக்களிப்பேன் பூபாளப் புயலே " எனப் புதிய ஆத்தி சூடி பாடி முடிக்கின்றார்
நான் கொள்கை அளவில் மாறுபடும் இடங்களும் இத் தொகுப்பில் உள்ளன.
'இறை உணர்வு
இன்பம் ஏற்றிடு -அன்றியும்
கறை அதில் மூட நம்பிக்கை
தூற்றி எறிந்திடு " எனப் பக்கம் 92-ல் குறிப்பிடுகின்றார். இறை உணர்வு என்றாலே மூட நம்பிக்கை குவியல்தானே, அதில் எப்படி நீக்குவது எனும் கேள்வி எழுந்தது என்னுள்.

ஒரு மாறுபட்ட வாசிப்பு அனுபவத்தை, பல புதுமைகளைப் புகுத்தியுள்ள ஒரு நூலினை படித்தோம் என்னும் மன நிறைவை, மழலையின் குறும்புகளை, அசைவுகளை உங்கள் மனக்கண் முன்னால் நிறுத்தும் கவிதை மழலை ஓவியத்தை நீங்கள் காண் இயலும் , இந்த தொட்டில் சூரியன் நூலை வாசிப்பதால். வாசியுங்கள், நீங்களும் அந்த மழலை உலகத்திற்குள் சென்று வாருங்கள்.