அண்மையில் படித்த புத்தகம் : கெடை காடு(நாவல்)
ஆசிரியர் : ஏக்நாத்
பதிப்பகம் : காவ்யா, சென்னை -24. 044- 23726882
முதல் பதிப்பு : 2014, 184 பக்கங்கள், விலை ரூ 170.
வாசிப்போர் களத்தில் கவிஞர் பாலகுமார் (JTO) அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட நாவல். அவரிடம் இரவல் வாங்கி வந்து படித்தேன். வித்தியாசமான வாசிப்பு அனுபவமாக இருந்தது . இன்று நகரத்தில் வேலைபார்க்கும் ஏக்நாத்தின் இளவயது அனுபவமாக , 1980-களின் இறுதியில் நிகழ்ந்த நிகழ்வாக இக்கதை சொல்லப்பட்டுள்ளது. என்னதான் நாம் நகரத்தில் கணினிக்கு முன் அமர்ந்து வேலை பார்த்தாலும், கிராமத்திலிருந்து வந்தவனுக்கு கிராமத்து ஓடையும் , கிணறும் , ஆடும், மாடும் அங்கு வாழும் பல்வகைக் குணமுடைய மனிதர்களும்தான் 20, 30 ஆண்டுகளுக்கு பின்னும் கூட நினைவில் இருக்கிறது. கிராமத்திலிருந்து வந்த ஏக்நாத் தன்னுடைய கிராமத்தை, மாடுகளை , மாடுகளைப் போலத் தெரியும் சில மனிதர்களை , அவர்களின் குணங்களை கதையாக வடித்திருக்கின்றார். நானும் ஒரு மேற்குத்தொடர்ச்சி மலைக்கு கீழே உள்ள சாப்டூர் கிராமத்தில் வளர்ந்தவன் என்பதலோ, கிடை அமர்த்தும் மனிதர்களை இளம் வயதில் நன்றாக அறிந்தவன் என்பதாலோ என்னவோ, மிகவும் நெருக்கமான ஒரு கதையாக இக்கதை வாசிப்பு எனக்கு அமைந்தது.
கிராமத்து மனிதர்களை அப்படியே வார்த்தைகளில் வார்த்தெடுத்திருப்பது இந்த நாவலின் சிறப்பு . முதல் பக்கத்தில் உச்சிமாகாளி என்னும் மனிதனை அறிமுகப்படுத்தும் வார்த்தைகளிலேயே , வர்ணனைகளிலேயே தான் ஒரு சிறந்த கதை சொல்பவன் என்பதனை நிருபித்துவிடுகின்றார் இந்த நாவலாசிரியர். கிராமத்தில் மாட்டுவண்டியில் படுத்திருப்பவனை அப்படியே மனக்கண்ணால் கொண்டுவருகின்றார். " வாதமடக்கி மர நிழலில் நின்றிருந்த மாட்டு வண்டியின் நோக்காலில் உட்கார்ந்திருந்தான் உச்சி மாகாளி. பொடதியில் கைகளை வைத்துக்கொண்டு பின்பக்கமாக அப்படியே படுத்தான். வாய் பிளந்து வந்த கொட்டாவியை விட்டுக்கொண்டு வானம் பார்த்தான். இப்போதுதான் விடிந்து ஈரப்பதம்கொண்ட காற்று மெதுவாக உடலைத்தேய்த்துக்கொண்டு சென்றது. ....." இந்தச்சித்தரிப்பு கதையின் கடைசி வரி வரை தொடர்வது இந்த நாவலின் சிறப்பு.
'குள்ராட்டி -மேற்கு மலைத்தொடர்ச்சியின் குளூ குளூ பிரதேசம்' என ஆரம்பித்து ஊரில் இருக்கும் 150 மாடுகளை காட்டுக்கு மேய்ச்சலுக்காகப் பத்திக்கொண்டு போய் காவல் காத்து திருப்பிக் கொண்டு வந்து 10 நாட்கள் கழித்து விடுவதுதான் இந்த நாவலின் கதை. காடு, காட்டு விலங்குகள், பாரஸ்டு அதிகாரிகள் வாங்கும் கையூட்டுகள், அவர்களின் அதிகாரங்கள், காட்டுக்குள் இருக்க நேரிடும் மனிதர்களின் பரஸ்பர உதவிகள், உபசரிப்புகள், பகிர்தல்கள், எப்போதுமே அச்சத்தோடு தூங்க நேரிடும் காடு , காட்டில் எழும் வேறுபட்ட ஒலிகள், புலிகளின் கால்தடம் கொடுக்கும் பயம், செந்நாயால் கடிக்கப்பட்டு இரத்தக்காயமான மாட்டிற்கு செய்யப்படும் சூடு மற்றும் மூலிகை மருத்துவம் எனக் காட்டின் கதை விரிகிறது . உச்சிமாகாளி, தவிட்டான், நொடிஞ்சான்,கந்தையா, கேசரி என்று மாட்டை பத்திக்கொண்டு குள்ராட்டிக்கு போகும் மனிதர்கள்,அவர்களின் கதைகள்; நொடிஞ்சான் திருமணம் முடித்த கதை, தவிட்டான் அத்தை மகளைத் திருமணம் முடிக்காமல் விட்ட கதை, உச்சிமாகாளியிம் அப்பன் செண்பகக்கோன், அவனது அம்மா புண்ணியதாக்கும் இடையிலான தாம்பத்ய உறவு இல்லாமை, பேச்சுவார்த்தை அறுந்து போன கதை என்று நிறையக் குட்டிக் குட்டிக்கதைகள், நாவலின் தொடர்ச்சியாக இணைப்பாக கொண்டு செல்லப்பட்டிருப்பது இந்த நாவல் ஆசிரியர் ஏக்நாத்தின் வெற்றி.
கிராமத்து சாதிச்சங்கம்.ராமசுப்பு என்னும் சங்கத்தலைவர். அவனது சல்லித்தனம். கல்யாணி என்னும் கணவரை இழந்த பெண். அவளது மகன். கோயிலுக்கு வீட்டு வீட்டுக்கு வரி. அதில் வரி கொடுக்கவில்லை என்று சொல்லி கல்யாணியை ஜாதியை விட்டுத்தள்ளி வைப்பது, அதனால் எழும் பிரச்சனைகள். கோயிலுக்கு வரி என்று சொல்லி ,வறுமையால் கொடுக்க முடியாதவர்களை எப்படி எல்லாம் பழி வாங்குகிறார்கள் என்பதனை மிக விரிவாகவே ஏக்நாத் எழுதியுள்ளார். சாதிக் கட்டுமானம் என்னும் பெயரில் நடைபெறும் அநீதிகளைத் தொட்டிக்காட்டியுள்ளார். இருபத்தி மூன்று வயதாகும் உச்சி மாகாளி காதலித்த, பழகிய பெண்களைப் பற்றி நிறைய எழுதியிருக்கின்றார். குறைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது எனக்கு.
இதுவரை எழுதாத ஒரு கதையை, தன்னுடைய இளமைக்கால அனுபவங்களால், கிராமத்து வாழ்க்கையால் எழுதியிருக்கும் ஏக்நாத் பாராட்டப்படவேண்டியவர். ஏதோ கற்பனையில் எழுதுவதுதான் சிறந்த கதை என்று சொல்லிக்கொள்பவர்களுக்கு மத்தியில் தனது மண்ணின் மைந்தர்களை, அவர்களது மாடுகளை கதாபாத்திரமாக எடுத்துக்கொண்டு அதனை கிராமத்து மொழியில் , அங்கு புழங்கும் வட்டார மொழிகளோடும், வசவு மொழிகளோடும் படைத்திருக்கின்றார். நகரத்துவாசிகள் எத்தனை பேருக்கு இந்தக் கதையின் மொழி புரியும் என்று தெரியவில்லை. ஆனால் கிராமத்துக்காரனுக்கு, கிராமத்திலிருந்து நகரத்திற்கு பிழைக்க வந்த அனைவருக்கும் இந்த நாவலின் மொழி புரியும் , பழைய நினைவுகளுக்கு கொண்டு செல்லும் ஆக்கபூர்வமான படைப்பு. வாழ்த்துக்கள் இளம் எழுத்தாளருக்கு.