Friday 18 November 2016

திருமண விருந்தினரை சுட்ட பெண் சாமியார் கோர்ட்டில் சரண்....



திருமண கொண்டாட்டத்தின்போது துப்பாக்கி வேட்டுக்களை வானோக்கி சுட்ட பின்னர் மூன்று நாட்கள் தலைமறைவாக இருந்த பெண் சாமியார், சாத்வி தேவா தாக்கூர், நீதிமன்றம் ஒன்றில் சரணடைந்தார்.


இந்த துப்பாக்கிச்சூட்டில் மணமகனின் அத்தை கொல்லப்பட்டுள்ளார். உறவினர் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சர்ச்சைக்குரிய போதகர் பற்றி பிபிசியின் கீதா பாண்டே :

சாத்வி ஓர் ஆயுத விரும்பிImage copyrightMANOJ DHAKA

Image caption

சாத்வி ஓர் ஆயுத விரும்பி


இந்தியாவின் வடக்கேயுள்ள ஹரியானா மாநிலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த சம்பவம் பற்றி வெளியான காணொளியில், சாத்வி தேவ தாக்கூர் முதலில் ரிவால்வராலும், பின்னர் இரட்டைக் குழல் துப்பாக்கியாலும் சுடுவது தெரிகிறது.

அவரோடு சேர்ந்து அவருடைய சில பாதுகாப்பு பணியாளர்களும் சுடுகின்றனர்.

“புனிதப் பெண்” அல்லது “பெண் கடவுள்” என்று பொருள்படும் சாத்வி என்ற இந்தி மொழி சொல்லை தனது பெயரோடு இணைத்திருக்கும் சாத்வி தேவ தாக்கூர், நடன மேடைக்கு சென்று, அவர் விரும்புகிற ஒரு பாடலை ஒலிக்கவிட கேட்டு நடனமாடி, திருமணத்தில் கலந்து கொண்ட விருந்தினரை பிரமிக்க வைத்ததாக இந்திய ஊடகங்கள் கூறின .

எல்லோரும் சூழ்ந்திருக்கும் வேளையில் துப்பாக்கிச்சூடு நடத்த தொடங்கி அனைவரையும் அவர் பீதி அடைய செய்திருக்கிறார்.

மணமகன் மற்றும் மணமகளின் தரப்பினர் அவரை நிறுத்துவதற்கு கேட்டுகொண்டது செவிடன் காதில் ஒலித்த சங்காகிப் போனது.

தவறுதலாக சுடப்பட்ட துப்பாக்கி குண்டு மணமகளின் 50 வயது அத்தை ஒருவரை தாக்கி அவர் கீழே சரிந்தவுடனும், மூன்று உறவினர் படுகாயமுற்ற பின்னரும்தான் இந்த துப்பாக்கிக்சூடு நின்றது.

அப்போது உருவான குழப்பத்தில் சாத்வியும், அவருடைய ஆறு பாதுகாப்பு பணியாளர்களும் தப்பிவிட்டனர்.


நீதிமன்றத்தில் சரண்

அவர்கள் ஏழு பேர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் அவர்களை பிடிக்க தேடி வந்தனர்.

வெள்ளிக்கிழமை இந்த சாமியார் மேஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்றம் 5 நாட்கள் போலிஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. அவரது மெய்க்காப்பாளர்கள் இன்னும் பிடிபடவில்லை.

“நான் நிரபராதி, நான் எந்தத் தவறையும் செய்யவில்லை. இது எனக்கெதிராக போடப்பட்ட சதி”, என்று சரணடைந்த பின்னர் செய்தியாளர்களிடம் சாத்வி கூறினார். “இந்த நிகழ்வில் ஒருவர் இறந்துவிட்டார் என்பது குறித்து நான் மிகவும் வருந்துகிறேன்”, என்றார் சாத்வி.

சாத்விImage copyrightMANOJ DHAKA

Image caption

சாத்வியை பின்பற்றுவோரில் பெரும்பாலோர் உள்ளூர் கிராமவாசிகள்

சர்ச்சைக்குரிய கருத்துகள்

அனைத்திந்திய இந்து மகாசபை என்ற சிறியதொரு இந்து மத நிறுவனத்திற்கு துணை தலைவராக இருக்கும் சாத்வி தாக்குர், இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் செய்திகளில் அடிபடுவது இது முதல்முறையல்ல.


முஸ்லிம் மற்றும் கிறித்தவ மக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்துவதற்கு, அவர்களை மலடாக்க வேண்டும் என்று கூறியது தொடர்பாக கடந்த ஆண்டு காவல்துறை அவர் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறது.


"முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்கு முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் அதிக குழந்தைகளை பெற்றெடுப்பதை தடுக்கும் வகையில் அரசு சட்டம் கொண்டு வர வேண்டும். அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்காமல் இருப்பதற்கு அவர்களை மலடாக்குவது கட்டாயப்படுத்தப்பட வேண்டும்" என்று அவர் ஒரு கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

தங்களுடைய நாட்டில் சிறுபான்மையினரின் மதமாக மாறுகின்ற அச்சுறுத்தலை தடுக்கும் வகையில், இந்து மத பெண்கள் அதிக குழந்தைகளை பெற்றுகொள்ள வேண்டும் என்கிற இந்து மத தேசியவாத தலைவர்களின் பரிந்துரைகளை ஏற்றுகொள்வதாக சாத்வி தெரிவித்திருக்கிறார்.


கோட்சேக்கு சிலை வேண்டும் என்று கூறிய சாத்வி

"நீளமாக சென்று கொண்டிருக்கும் ஒரு கோட்டோடு நீங்கள் எவ்வாறு போட்டியிட முடியும்? அதற்கு பக்கத்தில் அதனைவிட நீள கோடு ஒன்றை வரைவதன் மூலம் தான்" என்று அவர் கூறியிருக்கிறார்.


இன்னொரு சர்ச்சைக்குரிய கருத்தாக, மசூதிகளிலும், தேவாலயங்களிலும், இந்து மத ஆண் மற்றும் பெண் கடவுள்களின் சிலைகள் வைக்கப்பட வேண்டும் என்றும், மகாத்மா காந்தியை சுட்டு கொன்ற நாதுராம் கோட்ஸேவின் சிலை ஒன்று ஹரியானாவில் நிறுவப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளதாக டிஎன்எ செய்தித்தாள் சாத்வியை மேற்கோள் காட்டியுள்ளது.

சாத்விImage copyrightMANOJ DHAKA

Image caption


சாத்வி சர்ச்சைக்குரிய வகையில் செய்திகளில் அடிபடுவது இது முதல்முறையல்ல

’தங்கம் , துப்பாக்கி விரும்பி’

கர்னால் மாவட்டத்திலுள்ள ஒரு சிறிய கிராமமான பிராஸில், சாத்வி பிறந்து வளர்ந்தார்.

சில ஆண்டுகளுக்கு முன்னால், அந்த கிராமத்தில் ஆசிரமம் ஒன்றை நிறுவியிருக்கிறார். அவரை பின்பற்றும் சிலரில் பெரும்பாலோர் உள்ளூர் கிராமவாசிகளாவர்.

நவீன வாழ்க்கைப்பாணியால் பிரபலத்தை தேடுபவராக சாத்வி அறியபடுகிறார் என்று உள்ளூர் பத்திரிகையாளர் ஒருவர் தெரிவிக்கிறார்.

தலை முதல் கால் வரை எப்போதும் காவி ஆடை அணிந்திருக்கும் 27 வயதான சாத்வி, பொன் ஆபரணங்கள் மற்றும் துப்பாக்கி விரும்பியாக தோன்றுகிறார்.


சகோதரர் ராஜீவ் தாக்குரால் நடத்தப்படும் அவருடைய முகநூல் பக்கம், சாத்வியை தேவா இந்திய பவுண்டேஷனின் இயக்குநர் என்றும், ஒரு தேசியவாதி என்றும் விவரிக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் இந்து மகாசபையில் இணைந்தார்.

சாத்வியோடு அவர்களது கட்சியின் டெல்லியிலுள்ள தலைமையகத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் பயணம் மேற்கொண்டதாக ஹரியானாவிலுள்ள இந்து மாகா சபை மூத்த உறுப்பினர் தராம்பால் சிவாச் பிபிசியிடம் தெரிவித்திருக்கிறார்.


"நான் அவருக்கு சார்பாக பேசிய பின்னர் கட்சியின் தேசிய துணை தலைவராக சாத்வி நியமிக்கப்பட்டார்" என்று அவர் கூறியிருக்கிறார்.

"அவர் துப்பாக்கிகளோடு புகைப்படங்களை எடுத்துகொள்வது எங்களுக்கு மிகவும் அசௌகரியம் அளித்தது. அதனால், எங்களுடைய கொண்டாட்டங்களுக்கும், நிகழ்ச்சிகளுக்கும் சாத்வியை அழைப்பதை விரைவில் நிறுத்திவிட்டோம்".

சாத்வி ஓர் ஆயுத விரும்பி என்பதற்கு செவ்வாய்க்கிழமை நிகழ்ந்த சோக சம்பவத்தின் காணொளி ஒரு சான்றாகும்.

இப்போது, சாத்வி தன்னை தானே சிக்கலுக்குட்படுத்திக்கொண்டதாகவே தோன்றுகிறது.


நன்றி : பி.பி.சி. 19.11.16( செய்தியில் இருந்த வண்ணப்புகைப்படங்கள் இணைக்கப்படவில்லை)

Thursday 17 November 2016

இன்றைய கார்ட்டூன்














Nantri- BBC  18.11.2016


தேர்தல் தோல்விக்கு பின் வீட்டை விட்டு வெளியே வரவே விரும்பவில்லை: ஹிலரி



ஒரு வாரத்துக்கு முன்பு வெளிவந்த அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளில் தோல்வியடைந்த பிறகு, தான் கலந்து கொண்ட முதல் பொது சந்திப்பில், அதிபர் தேர்தலில் தான் டொனால்ட் டிரம்பிடம் தோல்விடைந்ததால் ஏற்பட்ட ஏமாற்றத்தை தனது பேச்சில் ஹிலரி கிளிண்டன்அப்பட்டமாக வெளிப்படுத்தினார்.

வாஷிங்டன் டிசியில் உரையாற்றிய ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் மீண்டும் தனது வீட்டை விட்டு வெளியே செல்வதையே தான் விரும்பவில்லை என்று கூறினார்.
ஒரு குழந்தைகள் தொண்டு நிறுவன நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், அண்மைய அதிபர் தேர்தல் அமெரிக்கர்களை அவர்களின் ஆத்ம தேடலுக்கு தூண்டியதாக தெரிவித்தார்.
அதிபர் தேர்தலில், மக்களின் பெரும்பான்மையான வாக்குகளை ஹிலரி பெற்றாலும், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க தேர்தல் அவை வாக்குகளில் பெரும்பான்மை பெறும் போட்டியில் அவர் தோல்வியடைந்தார்.

ஹிலரி தோல்வி குறித்து மேலும் படிக்க:ஹிலரி ஏன் தோற்றார்?

குழந்தைகள் பாதுகாப்பு நிதி அமைப்பினால் கெளரவிக்கப்பட்ட ஹிலரி கிளிண்டன் அந்நிகழ்ச்சியில் பேசுகையில், ''இன்றிரவு இந்த விழாவுக்கு வருவது எனக்கு எளிதாக இருக்கவில்லை என்பதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.
தொடந்து அவர் உரையாற்றுகையில், ''தேர்தல் முடிவுகளால் உங்களில் பலர் ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். உங்களை போலவே, நானும் இது வரை வெளிப்படுத்த முடியாத அளவுக்கு ஏமாற்றம் அடைந்துள்ளேன்''
''இது எளிதில்லை என்பது எனக்கு தெரியும். கடந்த வாரத்தில் பலரும் நாம் நினைத்த அமெரிக்கா தானா இது என்று தங்களை தாங்களே கேட்டுக் கொள்கின்றனர் என்பது எனக்கு தெரியும்'' என்று தெரிவித்தார்.

நன்றி : பி.பி.சி.தமிழ் 17.11.2016

Wednesday 16 November 2016

காது கேட்காதோர் நாள்! (நவம்பர் 16).


இன்று பன்னாட்டு சகிப்புத் தன்மை நாள் - காது கேட்காதோர் நாள்! (நவம்பர் 16).

இந்நாள் உலக காலங்காட்டியில் இத்தலைப்பில் மக்களுக்கு அறி வுறுத்தும் ஒரு முக்கிய நாளாகக் கருதி, கொண்டாடப்பட வேண்டிய நாள் என்பது அதன் தத்துவம் ஆகும்.

வீட்டில், குடும்பத்தில், அமைப்பு களில், இயக்கங்களில், கட்சிகளில், மதங்களில் ஏன் அண்டை மாநிலங் களில், பற்பல நாடுகளிலும்கூட சகிப்புத்தன்மை காணாமற் போனதால் தான் உலக அமைதிக்கு எங்கெங்கும் அச்சுறுத்தல் ஆகும்!

பெரிய மீன், சிறிய மீன்களைப் பிடித்து விழுங்கி, ஏப்பம் விட்டு தனது வாழ்க்கையை வளப்படுத்திக் கொள்ளுவதுபோல், பாதிக்கப்பட்ட நாடுகள் பலவும் ஆதிக்க நாடு களின் அடாவடித்தனத்தால் அவதி யுறுகின்றன!

சகிப்புத்தன்மை என்பது நாகரி கமும், படிப்பும், அறிவியலும் வள ரும் நிலையில், பெருக வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது. ஆக்கிரமிப்புச் செயல் கள், அதீதமான சட்டபூர்வமற்ற நட வடிக்கைகள் காரணமாக சகிப்புத் தன்மை அறவே அரிய பொருளாகி விட்டது!

அடுத்த நாடான இலங்கையில் இன்று காலை வந்துள்ள மனிதாபி மானமற்ற, இரக்கமற்ற கொடுமையை அங்குள்ள புத்த பிக்குகளே கையாளு கிறார்கள் என்றொரு செய்தி, பவுத் தத்தை கொச்சைப்படுத்திடும் புத்தர் கொள்கை விரோதச் செயல் - சகிப்புத் தன்மை இன்மைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு!

‘‘ஏய் தமிழ் நாயே, நான் உன்னைக் கொல்லுவேன் -You Tamil  Dog, I will kill you, Buddhist monk - tells Tamils Government official in Batticaloa.


(அம்பீத்திலே சுமணா என்பவர் புத்த பிக்குவாம்! இப்படி ‘‘குரைத்தல்’’ இல்லை - முழங்கிய மாபெரும் மனிதர்?)

கவுதமபுத்தரின்அருள்அறம் கூட எப்படி சிதைத்து சின்னா பின்னப்படுத்தப்பட்டது என்பதற்கு இலங்கை நாட்டின், புத்த பிக்குகளே தகுந்த சான்று; மற்ற மதவெறியர்கள், யானைக்குப் பிடித்த மதவெறியை சிறிதாக்கிடும் நிலையில், இன ஒடுக்கு முறையின் முகவர்களாக இவர்கள் உள்ளனர்.

‘புத்தம் சரணம் கச்சாமி’ என்பது அங்கே

‘ரத்தம் சரணம் கொல்லு சாமி’

என்று உளறி தமிழின சொந்தக் குடிமக்களையே அழிக்கும் கொலை காரர்களாக மாறி வருவதைவிட பொருத்தமான உதாரணம் தேவையா?

இங்கே ‘‘இந்தியத் திருநாட்டில்’’ மட்டும் என்ன வாழுகிறது?

மதவெறியினால் பசு மாட்டைப் பாதுகாக்கும் படை என்பவர்களின் வெறி, தாழ்த்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினரையும் அடித்தே கொல்லும் அவலம் ஜனநாயக நாட்டில் அரங்கேறிக் கொட்டமடிக்கிறதே!

ஒரே மதத்தில் - ஹிந்து மதத்தில் உள்ளவர்கள் போடும் நாமம் - திருப்பதி வெங்கடாசலபதிக்கு வடகலை நாமம் போட்டு விட்டார் என்று திருப்பதி அர்ச்சகர்மீது, ஜீயர் என்ற மற்றொரு பிரிவு  தலைவர் குற்றம் சுமத்தி வாய்ச் சண்டை, கைச் சண்டையாக திருப்பதியில் சில நாள்களுக்கு முன்பு நடந்ததை ஏடுகளில் காண முடிந்தது.

தனக்குச் சொத்து தரவில்லை என்று சொந்தத் தாய், தகப்பனைக் கொல்லும் சோகச் சம்பவங்கள் அன் றாடச் செய்திகள் ஆகின்றனவே. எவ்வளவு சகிப்புத்தன்மை மறைந்து சுயநலம் படமெடுத்தாடிய கோரமான நிகழ்வு அது!

நண்பர்கள் மத்தியில்கூட ‘ஒருவர் பொறை; இருவர் நட்பு’ அல்லவா?

உலக நாள் என்பது காலண்டரில் அச்சடிக்கவா? இல்லை, நிச்சயமாக!

மக்களின் பண்புநலன்களில் மிகுந்த தலையானதாக வேண்டும் என்பதற்காகத்தானே உலக மக்களுக்கு அறிவுறுத்தும் நாள் - மறக்கலாமா?

அதுபோலவே, உடல் ஊனமுற்ற - பழுதடைந்தோர் - விழி இழந்தோர் - உடல்நலிவுற்று நோயுடன் போராடும் முதுமையாளர்கள் - இவர்களை அருள் கூர்ந்து அவர்கள் மனம் நோகும்படி நடக்காதீர் என்று இடித்துரைக்கவே, காது கேளாதோர் நாள்.

காது கேட்காதவர்கள், சிலர் பிறவியிலேயே என்ற நிலையில், மற்றும் முதுமையாலும், வேறு பல காரணங்களாலும் செவிப் புலன் செயல்தன்மை குறைந்துவிடுவதால், காது கேட்க முடியவில்லை - அவர் களை அரவணைத்துப் பழகுங்கள்!

அவர்களைச் ‘செவிடர்கள்’ என்று கேலி பேசுதலோ, சைகைகளால் அவமானப்படுத்துதலோ கூடாது; குறிப்பாக இளைஞர்கள் இதனைக் கடைப்பிடித்து மனிதநேயமும், பச் சாதாப குணத்தைக்காட்டி, தங்களை நன்கு செதுக்கிக் கொள்வது அவசர அவசியம் ஆகும்; இதே இளைஞர்கள் நாளை முதியவர்களாகி, முதுமையில் வாடும்போது, காது கேட்காத நிலை வரும்; அப்போது மற்றவர்கள் இவர்களைக் கேலியும், கிண்டலும் செய்தால், அவர்கள் உள்ளம் எவ் வளவு நொந்த உள்ளமாகும்; புண்படும் என்பதை அவர்களிடத்தில் உங்களை அமர்த்திக் கொண்டு ஒத்தறிவு (Empathy) டன் யோசியுங்கள்!

தவறான பல செய்திகள் நம் காதில் விழும்போது, நாம் ‘காது கேளாதவர்களாகியிருந்தால்’, எவ்வளவு நன்மை என்று நாமே கூட பற்பல நேரங்களில் சிந்திக்க வேண்டியுள்ளதே!

எனவே, பல நேரங்களில் காது கேளாமை பாதிப்பு; ஆனால், மேற் சொன்ன சந்தர்ப்பங்களில் அதுவே நமக்குக் கிடைத்த அருட்கொடை என்றும் எண்ணவேண்டியுள்ளது!

எனவே, சகிப்புத்தன்மை, அன்பு காட்டி செவித்திறன் குறைந்தோர்களை நீங்கள் அரவணைக்காவிட்டாலும் சரி, குறைந்தபட்சம் கேலியும்,  கிண்டலும் செய்யாமலிருந்தால் அதுவே போதும்!

மனிதத்தை இழந்துவிட்டு ‘மனிதர்களாக’ இருந்தால் அவர்கள் நடைபிணங்களேயாவார்கள்!


திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்- வாழ்வியல் சிந்தனைகள் காலண்டருக்காக அல்ல, வாழ்வுக்காக என்னும் தலைப்பில்

நன்றி : விடுதலை 16.11.16



Tuesday 15 November 2016

வாஸ்துவும் முதலமைச்சரும்.......இவர்கள்தான் நம்மை ஆளும் மன்னர்கள்!!!!!!



வாஸ்து சாஸ்திரப்படி அமையாததால், அது இந்தியாவின் புதிய மாநிலமான தெலங்கானாவின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்று கூறி, தலைமைச் செயலக கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட முதலமைச்சர் கே. சந்திரசேகர ராவ் முடிவெடுத்துள்ளார்.

ஹைதராபாத்தில் ஹூசைன் சாகர் ஏரியில் அமைந்துள்ள சைஃபாபாத் அரண்மனையின் கட்டடப் பணிகளைப் பார்வையிட, ஹைதராபாத்தின் 6-வது நிஜாம் மெஹபூப் அலி பாஷா, 1888-ம் ஆண்டில் அங்கு நேரடியாக வந்தார்.
நிஜாம் அந்த அரண்மனைக்கு வந்து குடியேறுவதை விரும்பாத இரண்டு முக்கிய பிரமுகர்கள், அவர் வரும்போது உடும்பு குறுக்கே செல்லுமாறு ஏற்பாடு செய்தார்கள். அதன்படி தனது வழியில் உடும்பு குறுக்கிடுவதைக் கண்ட நிஜாம், சைஃபாபாத் அரண்மனையை இழுத்துப்பூட்டுமாறு உத்தரவிட்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஹைதராபாத் பேரரசின் நிர்வாக அலுவலகமாக அந்த அரண்மனையை திவான் பயன்படுத்தினார்.
சைஃபாபாத் அரண்மனை, தற்போதைய தலைமைச் செயலக வளாகத்தில், இன்றும் பாரம்பரிய சின்னமாக நிற்கிறது. அதில், தெலங்கானா, ஆந்திரா ஆகிய இரு மாநில அரசு அலுவலகங்களும் உள்ளன.

ஆனால், தெலங்கானாவின் வளர்ச்சிக்கு தலைமைச் செயலக கட்டடம் தடையாக இருக்கும் என்று கூறி, அந்தக் கட்டடத்தை முழுமையாக இடித்துவிட்டு, புதிய வளாகம் கட்ட முதலமைச்சர் திட்டமிட்டுள்ளார்.
வாஸ்து நம்பிக்கை காரணமாக, சந்திரசேகர ராவ் தனது அலுவலகத்துக்கே வருவதில்லை. அமைச்சரவைக் கூட்டத்துக்குத் தலைமை வகிப்பதற்காக மாதத்தில் ஒன்று அல்லது இரு முறை மட்டும் வருகிறார். தலைமைச் செயலக கட்டடத்தின் வாஸ்து, தெலங்கானாவுக்கு சாதகமாக இல்லை என அவர் நம்புகிறார். வாஸ்து என்பது, கட்டடக் கலையின் அறிவியலாக புராதன காலத்தில் இருந்து பார்க்கப்படுகிறது. ஆனால் இது மூடநம்பிக்கை என விமர்சகர்கள் கண்டிக்கிறார்கள்.
கே சந்திரசேகர ராவ்Image copyrightAFP
Image caption
வாஸ்து சாஸ்திரப்படி இல்லாதது மாநிலத்துக்கு நல்லதில்லை என்கிறார் கேசிஆர்
அந்தக் கட்டடம் பழுதடைந்து, பயன்படுத்த முடியாத மோசமான நிலையில் இருந்தால் அதிக சர்ச்சை ஏற்பட்டிருக்காது. ஆனால், அக் கட்டடத்தின் பெரும்பகுதி புதிதாக கட்டப்பட்டவை. பத்து ஆண்டுகளுக்கும் குறைவானவை.
``நல்ல நிர்வாகம் நடத்துவதில் கவனம் செலுத்தாமல், அரசு கட்டடங்களைக் கட்டுவதில்தான் அக்கறை காட்டுகிறோம். தற்போதுள்ள கட்டடத்தின் தன்மை, வசதியைப் பற்றி ஆராயாமல் அலங்கார காரணங்களுக்காக அந்தக் கட்டடம் இடிக்கப்பட உள்ளது'' என்றார் அரசியல் ஆய்வாளர் கே. நாகேஸ்வர்.
ஆனால், வாஸ்து சரியில்லாத காரணத்தால்தான் நிஜாம் முதல், ஒன்றுபட்ட ஆந்திராவின் முதல்வராக இருந்த கிரண்குமார் ரெட்டி வரை வெற்றிகரமாக ஆட்சி செய்ய முடியவில்லை என்று முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் கூறுகிறார்.
பசுமை தலைமைச் செயலகம் கட்டும் முடிவு குறித்து சந்திரசேகர ராவிடம் கேட்டபோது, ``கண்டிப்பாக மோசமான வாஸ்துதான். வரலாறுதான் அதற்கு உதாரணம். ஆட்சியில் இருந்த யாரும் செழிக்க முடியவில்லை. தெலங்கானாவுக்கும் அந்த கதி ஏற்பட்டுவிடக்கூடாது'' என்றார் அவர்.
ஆனால், தனது தனிப்பட்ட நம்பிக்கைகளுக்காக மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அனைவருக்கும் பொதுவான வாஸ்து என ஒன்றில்லை. அது ஒவ்வொரு நபருக்கும் வேறுபடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, தெலங்கானா சட்டமேலவை எதிர்க் கட்சித் தலைவர் ஷபிர் அலி கூறும்போது, 2019-ஆம் ஆண்டு புதிய முதலமைச்சர் பதவிக்கு வந்து, வாஸ்து தனக்கு பொருத்தமாக இல்லை என்று கூறி மீண்டும் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்.
சைஃபாபாத் அரண்மனைImage copyrightTS SUDHIR
Image caption
19-ஆம் நூற்றாண்டு சைஃபாபாத் அரண்மனை அதிர்ஷ்டமில்லாதது என ஆட்சியாளர்களால் நம்பப்படுகிறது.
ஆனால், இதையெல்லாமல் காதில் போட்டுக் கொள்ள முதலமைச்சர் கேசிஆர் தயாராக இல்லை. ஆளுநரைச் சந்தித்து, தனது பங்கில் வைத்துள்ள கட்டடடத்தை ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு காலி செய்து தங்களிடம் ஒப்படைக்குமாறு தர அறிவுறுத்துமாறு கேட்டுக் கொண்டார்.
இந்த ஆண்டு இறுதியில் அந்தக் கட்டடத்தை தரைமட்டமாக்கிவிட்டு, ஹஃபீஸ் என்ற ஒப்பந்ததார் கொடுத்த திட்டப்படி புதிய கட்டடம் கட்ட கேசிஆர் திட்டமிட்டுள்ளார். அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், புதிய கட்டடம் கட்ட ரூ.350 கோடி முதல் ரூ.500 கோடி வரை ஆகலாம் என மதிப்பிடப்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் 1200 கோடி ரூபாய் என மதிப்பிட்டுள்ளது.
அலுவலகம் மட்டுமல்ல, அவரது வீடு மற்றும் முகாம் அலுவலகத்துக்கும் வாஸ்து சரியில்லை என கேசிஆர் நம்புகிறார். அந்தக் கட்டடம், ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி, முதலமைச்சராக இருந்தபோது, 2005-ஆம் ஆண்டு கட்டப்பட்டது, வாஸ்து நிபுணர்களின் ஆலோசனையுடன் கட்டப்பட்டது. அவர், 2009-ல் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார். அவரையடுத்து, கே. ரோசையா முதல்வரானார். வாஸ்து நிபுணர்களின் ஆலோசனைப்படி, அந்தக் கட்டடத்தில் மாற்றங்கள் செய்தார். ஆனால், ஒரே ஆண்டில் அதிகாரம் பறிபோனது. அவரையடுத்து வந்த கிரண்குமார் ரெட்டி, வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை இல்லாதவர். எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. தனது பதவிக்காலம் முழுவதும் ஆட்சியில் இருந்தார்.
கேசிஆருக்கு தற்போது 40 கோடி ரூபாயில் புதிய வீடு மற்றும் முகாம் அலுவலகம் இணைந்த கட்டடம் தயாராகி வருகிறது. நவம்பர் இறுதியில் அவர் அதில் குடியேற இருக்கிறார்.
``ஹைதராபாத்தின் புகழ்பெற்ற சார்மினார் கோபுரம், தெலங்கானாவுக்கு சரியான வாஸ்து இல்லை என கேசிஆர் முடிவெடுக்காமல் இருந்தால் நல்லது'' என நகைச்சுவையாகக் குறிப்பிட்டிருக்கிறார் ஷபிர் அலி.

நன்றி : பி.பி.சி. தமிழ் -15.11.2016

          

Monday 14 November 2016

வாசியுங்கள்...வாழ்நாள் அதிகரிக்கும்!

உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு! சிக்மண்ட் ஃப்ராய்ட் கிட்டத்தட்ட எல்லாருக் குமே தங்கள் வாழ்க்கை, தங்கள் வேலை, தங்கள் குடும்பம் என்ற கவலைகள், அக் கறைகள், ஆர்வங்கள் என  எல்லாம் தங்களைச் சுற்றியே அமைகின்றன. யாருமே இதை ஆழமாக உணர்வதில்லை.
இதனா லேயே பல நடைமுறைச் சிக்கல்கள். இப்படித் தோன்றும் சிக்கல்களையும் பிரச்னைகளை யும் சரிவரக் கையாள வேண்டும் என்றால், ஒவ்வொருவரும் தங்களை மீறி, தங்களுடைய குறுகிய உலகத்தைத் தாண்டிப் பார்க்க வேண் டும். அதற்கான மாற்று வழிதான் வாசிப்புப் பழக்கம். புத்தகம் வாசித்தால் உங்கள் அறிவு வளர்கிறதோ இல்லையோ ஆயுள் வளர்வது நிச்சயம் என்கிறது ஆராய்ச்சி.
ஆமாம்... சமீபத்தில் அமெரிக்க யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் வாசித்த லுக்கும், ஆயுளுக்கும் உண்டான நெருக் கத்தை  தாங்கள் மேற்கொண்ட ஆய்வில் கண்டறிந்துள்ளனர். 50 வயதுக்கு மேற்பட்ட வர்களில் சுமார் 3700 பேரிடம் அவர்களது வாழ்வியல் முறை, படிக்கும் பழக்கம் என்ற ரீதியில் ஆய்வினை மேற்கொண்டனர்.
காலையில் எழுந்தவுடன் செய்தித்தாளைப் படிப்பதே அவதார நோக்கமாக, முகத்தை மூடிக்கொள்பவர்கள் எனக்கு ஆயுள் கெட்டி என்று கர்வப்பட்டுக் கொள்ள வேண்டாம். செய்தித்தாள் அல்லாது பல்வேறு புத்தகங் களை படிப்பவர்களுக்குத்தான் நீண்ட ஆயுள் என சமூக அறிவியல் மற்றும் மருத்துவப் பத்திரிகையில் ஆய்வறிக்கை வெளியிடப் பட்டுள்ளது.
பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்யக்கூடிய திறமை நம்மிடம் இருந்தாலும் சில நேரங்களில் கவனச்சிதறல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. இன்பாக்ஸில் வந்து விழும் இமெயில்களுக்கு பதில் அனுப்பிக்கொண்டே, ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் பார்த்து லைக்ஸ் கொடுப்போம்.
அதேநேரத்தில் ஹெட்செட் டில் பாடல் களையும் கேட்டுக் கொண்டி ருப்போம். இவற்றையெல்லாம் முழுக்கவனத் தோடு செய்கிறோமா என்றால், இல்லை. எல்லாம் கடமைக்கே. ஆனால், அமைதியான இடத்தில் அமர்ந்து  5 நிமிடங்கள் புத்தகம் படிக்கும் போது மனதை ஒருமுகப்படுத்தி, கவனத்தை  வளர்த்துக்கொள்ளக்கூடிய நீண்டகால பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். நல்ல வாசிப்பிற்கு கவனம் முக்கியம். வாசிக்கும்போது செலுத்தும் கவனம், தகவல் களை உள்வாங்கிக் கொண்டு அதை தக்க வைத்துக் கொள்ளும் செயலில் மூளையை ஈடுபடுத்துகிறது.
இந்த செயல்முறை மூளையை கூர்மையாக்கி, நினைவுத்திறனை மேம்படுத்தும். வாசித்தலோடு தொடர்புடைய மொழியாற்றல், பார்வை, கற்றல் மற்றும் நரம் பியல் இணைப்பு போன்ற அனைத்து செயல்பாடுகளையும் இணைக்கும் சவாலான பணிகளை படிப்பு என்னும் ஒரே செயலால் செய்துவிட முடியும். மனதிற்குப் பிடித்த புத்தகத்தை படிக்கும் போது முதல் 6 நிமிடங்களுக்குள்ளாகவே 68 சதவிகித மன அழுத்தம் குறைந்துவிடுவதாக ஆய்வு கூறுகிறது. ஓர் இசையைக் கேட்பதாலும், நடைப்பயிற்சி மேற்கொள்வதாலும் குறையும் மனஅழுத்ததைக் காட்டிலும் படிப்பதால் மன அழுத்தம் அதிகம் குறையும்.
நீலக்கதிர்களைக் கக்கும் மொபைல், லேப்டாப், டேப்லெட், டி.வி எல்லாவற்றையும் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு, அரைமணி நேரம் அமைதியாக ஒரு புத்தகத்தை படி யுங்கள். அப்புறம் பாருங்கள்... தூக்கம் கண் களைத் தழுவும் மாயத்தை! தூக்க மாத் திரையின் அவசியமே இருக்காது. வாசிப்பின் மீது நேசம் வைத்து வளருங்கள்... உங்கள் சந்ததிக்கே அது நிழல் தரும்.
நன்றி : விடுதலை 14.11.2016



Monday 7 November 2016

எதிர் வண்ணங்களால் தீட்டப்பட்ட சுவர்களிடம் ......

அவனோடு  தீவிரமாய்
நான் வாதிடும் நேரம்
அமைதியாக
அமர்ந்திருக்கிறாய் நீ !

பல நேரங்களில்
என்னை விட தீவிரமாய்
வாதிடும் நீ .....
என்னை விட இவர்களை
எதிர்ப்பதற்கான
காரணங்களை அதிகமாக
தெரிந்துவைத்திருக்கும் நீ.....
அமைதியாக அமர்ந்திருக்கிறாய்
என்றாய் ஆத்திரத்தோடு....
நீ என்னிடம் ....

'அரங்கின்றி வட்டாடிடும்'
நபர் அவர் என்பதை
நான் அறிவேன்....
நீ அறியாய்.....
கல்லுளி மாங்கனாய்
எதிர்தரப்பு .....

'யாரு கையைப்பிடிச்சு
இழுத்தா' எனும்
நடிகர் வடிவேலு வசனம் போல
திரும்பத் திரும்ப
கேள்வி கேட்கும்
அவனின் நோக்கமறியாது
பச்சைப் பிள்ளைக்கு
பாடம் எடுக்கும் குரலில்
மீண்டும் மீண்டும்
தரவுகளால் நிரப்புகிறாய்
உனது வாதத்தை.....

தூங்குபவன் யார் ?
தூங்குவது போல
நடிப்பது யார் ?
எனும் தன்மை அறிந்து
உன் வாதங்களை
அடுக்கு ....
வென்றெடுக்க
சில நேரம் வாய்ப்பிருக்கலாம்....

எதிர் வண்ணங்களால்
குழைத்து குழைத்து
தீட்டப்பட்ட
சுவர்களிடம்
ஏதும் பேசாமல்
கடந்து செல்வதே மேல்.....

                                --வா.நேரு -
                                   07.11.2016


Tuesday 1 November 2016

இளந்தலைமுறையினருக்குப் பாடங்கள்.....

இளந்தலைமுறையினருக்குப் பாடங்கள் 

முனைவர் வா.நேரு
தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்

தகைசால் சான்றோர்களைக் கல்லூரிக்கு வரவழைப்பது, அவர்கள் சொல்லும் கருத்துகளை மாணவர்களைக் கேட்க வைப்பது, ‘கேட்பினும் கேளாத்தகையவாய்’ செவிகளை ஆக்காது, பல்வேறு கருத்துகளை மாணவர்களின் செவி களில் விழவைப்பது அதன்மூலமாக கற்கும் கல்விக்கு மெருகூட்டுவது என்பது நல்ல கல்லூரிகளின் செயல்பாடு. அந்த வழியில் திராவிடர் கழகத்தின் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்களை அழைத்து தங்கள் மாணவ, மாணவியர்கள் மத்தியில் உரையாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கிணங்க, பல்வேறு கல்லூரிகளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஆற்றிய  உரைவீச்சுகளின் தொகுப்பாக, ‘கல்லூரி, பல்கலைக் கழகங்களில் தமிழர் தலைவர்’ என்னும் புத்தகம் வெளிவந்திருக்கின்றது. நல்ல  பலன் தரும் முயற்சி.

25.7.1974 அன்று மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆற்றிய உரையில் ஆரம்பித்து, மதுரை மன்னர் திருமலைக் கல்லூரியில் 3.11.1998 அன்று ஆற்றிய உரை வரை ஏறத்தாழ 25 ஆண்டுகளில், 25 கல்லூரிகளில், பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் மத்தியில் ஆற்றிய உரைகளின் தொகுப்பாக இந்த நூல்.
இந்த நூலின் அறிமுகவுரையில் மதுரை மன்னர் திரு மலைக்கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் நம்.சீனிவாசன் அவர்கள் இந்த நூலின் சிறப்பினை சிறப்பாக சுட்டிக்காட்டியுள்ளார்.
‘‘கல்லூரிகளில், பல்கலைக் கழகங்களில் மாணவர்களி டையே உரை நிகழ்த்த அழைப்பு வரும்போதெல்லாம் பல்வேறு பணிகளுக்கிடையிலும் தமிழர் தலைவர் உற் சாகமாக ஒப்புதல் வழங்குகின்றார். இளைஞர்களின் உள்ளத் தில் கருத்துகளை விதைக்க வாய்ப்பாகக் கருதுகின்றார். மாணவர்கள் ஆர்வ மிகுதியினால் அழைத்தாலும், பேரா சிரியர்கள் விரும்பி வேண்டினாலும் தமிழர் தலைவர் நிகழ்ச்சியில் பங்கேற்க

ஒரு விதியினைக் கடைப்பிடிக்கின்றார். கல்லூரி முதல்வர் அல்லது பல்கலைக் கழக தலைமை அதிகாரி எழுத்து வடிவிலான அழைப்புக் கடிதம் அனுப் பினால் மட்டுமே இசைவு தெரிவிப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கின்றார். தமிழர் தலைவர் அவர்கள் கல்லூரி, பல்கலைக் கழகங்களில் ஆயிரக்கணக்கான கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றியிருக்கின்றார். ஆனால் அவை யாவும் தொகுக்கப்படவில்லை. இந்நூலில் 25 கல்லூரிகளில் நிகழ்த்திய உரைகள் மட்டுமே இடம் பெற்றிருக்கின்றது’’ எனக்குறிப்பிட்டுள்ளார்.
கற்பவையாக இளம்வயதிலேயே பெரியாரியலை ஏற்றுக் கொண்டு, கசடற பெரியாரியலைக் கற்றுக்கொண்டு வாழ்வில் கடைப்பிடித்ததால்,பெரியாரியலைப் பிஞ்சு வயதிலேயே  கற்றபின் தந்தை பெரியாரைப் பின்பற்றும் இலட்சக்கணக்கான தொண்டர்களுக்கு பெரியார் வழி நிற்பதற்கான வழியைக் கற்பிப்பதால் தனது தொண்டர்களால் ஆசிரியர் என அழைக்கப்படும் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் மாணவ, மாணவிகள் மத்தியில் கற்பிக்கும் ஆசிரியராய் நின்று கருத்துகளைக் கூறியதோடு மட்டுமல்லாது, மாணவ, மாணவியர்களின் கேள்விகளுக்கெல்லாம் பதிலும் அளித்த பதிவுகள் இவை.
அமெரிக்கன் கல்லூரியில் உரையைத் தொடங்கும்போதே ‘‘தந்தை பெரியார் அவர்கள் இரண்டு மணி நேரத்திற்குமேல் உரையாற்றினாலும் இறுதியாக ஒன்றை மறக்காமல் கூறு வார்கள். ‘நான் சொன்னேன் என்பதற்காக எதையும் நம்பி விடாதீர்கள், பகுத்தறிவோடு சிந்தியுங்கள், சரி எனப் பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் தள்ளி விடுங்கள்’ என்று சொல்வார்கள். அவர் முடிவில் சொல்வதை நான் தொடக்கத்திலேயே சொல்கிறேன். ஏனெனில் அவர்கள் முடித்த இடத்திலிருந்து நாங்கள் பணி தொடங்குகின்ற நிலையில் இருக்கிறோம். நாங்கள் கூறுகிற கருத்துக்கள் உங்களுக்குக் கசப்பானதாகவும்இருக்கலாம்.தேவையானதாகவும் இருக்கலாம். தேவையற்றதாகவும் இருக்கலாம். கொள்ளவேண்டி யதையும் தள்ள வேண்டியதையும் உங்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறேன்’’ எனச் சொல்லித்தான் தமிழர் தலைவர்  ஆரம்பிக்கின்றார்.
இந்தப் புத்தகத்தின் துவக்கத்திலேயே சரி எனப்பட்டால் ஏற்றுக்கொள்ளுங்கள், இல்லையென்றால் தள்ளி விடுங்கள் என்று  சொல்வதுமட்டுமல்ல உரையை முடிப்பதற்குமுன் (பக்கம்23) ‘‘நான் இங்குப் பேசிவிட்டுப்போன பிறகு இன்னொரு பேச்சாளரை எங்கள் கருத்துக்கு மாறுபாடானவர்களை அழைத்து எங்கள் கருத்துகளுக்கு மறுப்புக் கூறச் செய்யுங்கள். அப்பொழுதுதான் உங்களுக்கு உண்மை விளங்கும் . இருதரப்பு வாதங்களில் எங்கு வலிமை இருக்கிறது என்று புரிந்து கொள்ள உங்களுக்கு வாய்ப்பு ஏற்படும்’’ எனக் குறிப்பிடுகின்றார். தந்தை பெரியார் நான் சொன்னேன் என்பதற்காக நம்பாதீர் கள், பகுத்தறிவோடு சிந்தியுங்கள், சரி எனப்பட்டால் ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்று சொன்னார் என்றால், ஆசிரியர் அவர்களோ’’ எனக்கு மாறுபட்ட கருத்து கொண்டவர்களின் பேச்சுகளையும் கேளுங்கள். கேட்டபின்பு எது உண்மை என்பதனை நீங்களே முடிவு செய்யுங்கள்’’ என்று சொல்கின்றார். தான் சொல்லும் கருத்தின் உண்மைத்தன்மை மீதான நம்பிக்கை, நூறு சதவீதம் இருந்தால் மட்டும்தானே இப்படிச் சொல்ல இயலும், சொல்லியிருக்கின்றார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாணவர்கள் மத்தியில்.
தேர்ந்தெடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள இந்த நூலின் ஒவ்வொரு உரையும் தந்தை பெரியாரின் கொள்கை ஒன்றை விரிவாக அய்யா ஆசிரியர் அவர்கள் விளக்கும் விதமாக அமைந்துள்ளது சிறப்பாக உள்ளது. தமிழின் சிறப்பைக் குறிப்பிடும் ‘நந்தனம் கலைக் கல்லூரியில் ஆற்றிய உரை’ கோவிலுக்குள்ளே தமிழ் இருக்கிறதா என்னும் வினாவைத் தொடுத்து ஏன் இல்லை என்பதற்கான வரலாற்றை ஆசிரியர் கொடுப்பதாக உள்ளது. ‘எங்கள் இலட்சியம் எல்லாம் இந்த நாட்டில் ஜாதியற்ற சமுதாயம் அமையவேண்டும்.பேதமற்ற சமுதாயம் அமைய வேண்டும் என்பதுதான்’எனச்சொல்லும் மதுரை தியாகராசர் கல்லூரி உரை பொருளாதாரப் பேதத்திற்கும், ஜாதி பேதத்திற்கும் உள்ள வேறுபாட்டை சுட்டிக்காட்டுவதோடு, யாகம் என்ற பெயரில் வீணாக்கப்படும் பொருள்களைப் பட்டியலிட்டு இது நியாயமா என்னும் கேள்வியை மாணவர்கள் மத்தியில் எழுப்பும் வண்ணம் அமைந்துள்ளது. சுதந்திரச் சிந்தனையை வளர்க்கவேண்டும், அது ஏன் வளரவில்லை என்னும் வரலாற்றைச் சுட்டிக்காட்டுவதோடு, ஆசிரியருக்கே உரித் தான நகைச்சுவை உணர்வை வாசகர்கள் அறியும் வண்ணம் நம் நாட்டு மூட நம்பிக்கைக்கும், வேற்று நாட்டு மூட நம்பிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை ‘விருதாச்சலம் அரசு கலைக்கல்லூரியில் ஆற்றிய உரை காட்டுகிறது.
தந்தை பெரியாரை திரையிட்டு மறைக்கப் பார்த்தவர்கள் எல்லாம் இன்றைக்கு திகைத்துப் போயிருக்கின்றார்கள். ‘ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறை வதில்லை’ என்பதுபோல மொழி பெயர்க்கப்படும் மொழி களில் எல்லாம் தந்தை பெரியாரின் புத்தகங்கள் விற்றுத் தீர்கின்றன, அய்யாவின் புத்தகங்களை இன்றைக்குப் படிப்பவர்கள் 70, 80 ஆண்டுகளுக்குமுன்னால் இவ்வளவு புரட்சிகரமான பேச்சுகளைத் தந்தை பெரியார் பேசியிருக்கின்றாரா என  வியந்து நிற்கின்றார்கள். மனித நேயத் தின் மறுபெயராய், புரட்சி என்னும் சொல்லின் விளக்கமாக  நடமாடிய மனிதரல்லவோ பெரியார் என அதிசயத்துப் போகின்றார்கள்.
பல மொழிகளில், பல நாடுகளில் பெரியார் பன்னாட்டு மய்யம் போன்ற இயக்கங்கள்மூலமாக தந்தை பெரியாரின் கொள்கைகளைப் பரப்பும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி’ தந்தை பெரியார் அவர்களின் கருத்துகள் எல்லாம் இன்றைய இளைஞர்கள் எண்ணங்களிலே புகக் கூடாது. இதுபோன்ற மன்றங்களிலே நுழையவிடக்கூடாது. பேசப் படக்கூடாது என்று கிரகணத்தை உருவாக்கியவர்கள் உண்டு, அதைக் கண்டு பயந்தவர்கள் எல்லாம் உண்டு’ (பக்கம் 48) எனக்குறிப்பிட்டு மனிதர்களின் மனங்களிலே மாற்றம் வரவேண்டும் எனக் குறிப்பிடுகின்றார். ‘மாற்றம் என்பது உடையிலே இருந்து, முடியிலே இருந்து பயன் என்ன? மனிதன் சிந்தனைகளிலே மாற்றம் வேண்டும்! செயல் முறைகளிலே மாற்றம் வேண்டும்! அந்த மாற்றங்கள் சமுதாய நன்மைக்கு,  சமுதாய முன்னேற்றத்துக்குத் துணை செய்வதாக -வகை செய்வதாக அமைய வேண்டும்' என மாணவர்களிடம் அறிவுறுத்தும் ஆசிரியர் ‘வகுப்பறைக்கு வெளியே உள்ள உலகியலைக் கற்றுக்கொள்ளுங்கள். புத்துலகம் படைக்கலாம்' எனக் குறிப்பிடுகின்றார் தஞ்சை சரபோஜி கல்லூரியில் நடந்த விழாவில்.
மதுரை யாதவர் கல்லூரியில் மாணவர்களின் வினாக் களுக்கு தமிழர் தலைவரின்  பதில்களை இன்றைய மாணவ, மாணவிகள் கட்டாயம் படித்தல் வேண்டும். ‘திரு மணத்திற்கு பொருத்தம் பார்க்காது வரதட்சணை, ஜாதகம் என்று பார்க்கும் படித்த இளைஞர்களைப் பற்றி நீங்கள் என்ன எண்ணுகிறீர்கள்?’ என்பது கேள்வி. ஆசிரியரின் பதில் ‘மிகக் கேவலமாகக் கருதுகிறேன் நான்’ என்று ஆரம் பிக்கின்றது. பின் ஏன் அப்படிக் கருதுகிறேன் என்பதற்கு விளக்கம் தருகின்றார். இன்றைக்கு  நம்மை நோக்கி கேட்கும் பல கேள்விகளுக்கான பதிலை நாம் இதில் இருந்து பெற்றுக்கொள்ளலாம்.
சென்னைப் பல்கலைக் கழகத்தில் ஆற்றிய பேருரை, ‘இவ்வளவு பெரிய பல்கலைக் கழகத்திலே தாழ்த்தப்பட்டோர் ஆறு பேர் மட்டுமே என்பதை எண்ணும் போது நெஞ்சம் கொதிக்கிறது’ என்று குறிப்பிட்டு இட ஒதுக்கீட்டின் வரலாற்றை மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டு ஆற்றிய உரையாக இருக்கிறது. தான் கற்ற ‘சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில்’ தமிழர் தலைவர் ஆசிரியர் ‘தாய் வீடு’ எனக்குறிப்பிட்டு ஆற்றிய உரை சமூக நீதியின் வரலாற்றை குறிப்பிட்டு ‘நம்முடைய நாட்டிலே மண்ணுக்கு ஒருமைப்பாடு பேசுகிறோமே தவிர , மனிதனுக்கு ஒருமைப்பாடு பேசுவதாகத் தெரியவில்லை’ எனக்குறிப்பிட்டு பேதமை உண்டாக்கும் ஜாதியினை பாபு ஜெக ஜீவன்ராம் அவர்களின் வாழ்க்கை நிகழ்வுகளோடு ஒப்பிட்டு பேசுவதாக அமைந்துள்ளது.
பெண்களின் முன்னேற்றம் குறித்து தந்தை பெரியார் எப்படியெல்லாம் எண்ணினார், அதற்கு எந்த எந்த வகையில் எல்லாம் உழைத்தார் என்பதனை இளம் மாணவிகளுக்கு எடுத்துக்கூறும் விதமாக அய்யா ஆசிரியர் அவர்களின் ‘கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் ஆற்றிய உரை’யும், ‘தஞ்சை-வல்லம் பெரியார் நூற்றாண்டு மகளிர் தொழில் நுட்பக்கல்லூரியில் ஆற்றிய உரை’யும்  அமைந்துள்ளன. ‘பல்கலைக் கொள்கலனா’ய் அமைந்த அறிஞர் அண்ணா எப்படி கண்டதும் கொண்டதுமான தலைவராக தந்தை பெரியாரை வரித்துக்கொண்டார் என்பதும், அண்ணாவை பெரியார் எப்படியெல்லாம் உயர்வாக மதித்தார், நடத்தினார் என்பதையெல்லாம் வரலாற்றுச் சம்பவங்களோடு அய்யா ஆசிரியர் அவர்கள் விவரிக்கும் தனித்தன்மையான உரை யாக, ‘புதுவைப் பல்கலைக்கழகத்தில் ஆற்றிய உரை’ கொடுக்கப்பட்டுள்ளது.
‘இனி வரும் உலகம்‘ என்னும் அற்புதமான தந்தை பெரியாரின் கருத்துகளை தமிழர் தலைவர் தன்னுடைய நடையில் விவரிக்கும் மதுரை மன்னர் திருமலைக் கல்லூரி யில் ஆற்றிய உரை என ஒவ்வொரு உரையுமே தந்தை பெரியாரின் தத்துவங்களை, நடைமுறை உத்திகளை விவரிக்கும் தன்மையுடையதாக இருக்கிறது.
‘தங்கப் பதக்கம் வாங்கியவன் என்று அறிமுகப்படுத்திய தைவிட, தன்னை ‘தந்தை பெரியாருடைய தொண்டன்’ என்று அழைத்தற்காகவே, அறிமுகப்படுத்தியதற்காகவே தான் மிகுந்த மகிழ்ச்சியும், மன நிறைவும் கொள்கிறேன்’ என்று மதுரை மன்னர் திருமலைக்கல்லூரியில் ஆற்றிய உரையில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிடுகின்றார்.
தந்தை பெரியாரின் தொண்டனாய் ஒன்பது வயதில் திராவிடர் கழகக் கொடி பிடித்து, ஒரே தலைவர், ஒரே கொள்கை, ஒரே கொடி என தனது 84 வயதினை டிசம்பர் 2, 2016 இல் எட்டும் தமிழர் தலைவர் அவர்களின் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆற்றிய உரைகளின் தொகுப்பான இந்த நூல் கழகப் பொறுப்பாளர்கள், பேச்சாளர்கள் கைகளில் தவழ்வது மட்டுமல்ல, கல்லூரி, பல்கலைக் கழகங்களில் படிக்கும், படித்த தமிழர்கள் ஒவ்வொருவர் கையிலும் தவழ வேண்டிய புத்தகம், அவர்கள் பக்கம் பக்கமாகப் படித்து பலன் பெறவேண்டிய புத்தகம். ‘தகுதி-திறமை’ எனப் புரியாமல் பேசும் இளந்தலைமுறையினர் பலர் இந்த நூலைப் படித்தால், அறிவியல் மனப்பான்மையை, பெண்ணுரிமையை, பகுத்தறிவினை, தந்தை பெரியாரின் தனித்தன்மைகளை, தந்தை பெரியாரின் தன்னிகரில்லா போராட்ட உணர்வினை, திராவிட இயக்கத்தின் எதிர் நீச்சல் வரலாற்றைப்  பாடமாக கற்றுக்கொள்வார்கள் என்பது உறுதி.


நன்றி : விடுதலை 01.11.2016