Wednesday, 27 June 2018

நிகழ்வும் நினைப்பும் 2018(2) : மூட நம்பிக்கை முடை நாற்றம்....

நிகழ்வும் நினைப்பும் 2018(2) : மூட நம்பிக்கை முடை நாற்றம்....

பாராட்டப்பட வேண்டிய சட்டமன்ற உறுப்பினர்:
                                          ஆந்திர மாநிலம் சட்டமன்ற உறுப்பினர் நிம்மல ராம (நாயுடு) அவர்கள் உண்மையிலேயே பாராட்டப்படவேண்டியவர். வாழ்த்தப்படவேண்டியவர்.மூட நம்பிக்கை முடை நாற்றம் வீசுகின்ற நமது நாட்டில் ,அந்த முடை நாற்றத்தை தனது ஓட்டு வங்கியாக மாற்றுவது எப்படி எனும் கலை பல சட்டமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் மக்களுக்கு உண்மையிலேயே நன்மை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் முதலில் அகற்ற நினைப்பது இந்த மூட நம்பிக்கை முடை நாற்றத்தை அகற்றுவதைத்தான். அதுவும் அறிவியல் கண்டுபிடிப்புகளான கணினி,செல்பேசி பொன்றவற்றைப் பயன்படுத்தி அரண்டு போய் இருக்கும் மக்களை மேலும் மேலும் அரள வைக்கும் வகையில் பேய்,பிசாசு மூட நம்பிக்கை கதைகள் திட்டமிட்டுப்பரப்படுகின்றன. ஒலி,ஒளிபரப்பபடுகின்றன. இதனை முறியடிக்கும் வகையில் செயல்பட்ட நிம்மல ராம(நாயுடு) அவர்களைப் பாராட்டுவோம்.

பேய்', பிசாசுகள்' பயத்தைப் போக்க சுடுகாட்டில் உண்டு, உறங்கிய எம்.எல்.ஏ

அமராவதி, ஜூன் 26 ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள பால கோல் சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் நிம்மல ராம நாயுடு. தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த இவர், தனது தொகுதியில் உள்ள பாலகோல் புறநகர் பகுதியில் இருக்கும் சுடுகாடு ஒன்றில் நேற்று முன் தினம் இரவு உணவு சாப்பிட்டு அங்கேயே கட்டில் போட்டு தூங்கியுள்ளார்.

அந்தசுடுகாடுகடந்தபல ஆண்டுகளாக யாரும் பயன் படுத்தாமல் சிதிலமடைந்து இருந்துள்ளது. இதனை அடுத்து, ராம நாயுடுவின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு சுடுகாட்டை புனரமைக்க ரூ.3 கோடி ஒதுக்கியது. ஆனாலும், இந்த திட்டத்திற்கு யாருமே டெண்டர் எடுக்கவில்லை.

திட்டம் இழுபறியாககிடந்த நிலையில், ஒரு ஒப்பந்தக்காரர் முன்வந்தார். பணிகள் தொடங்கிய நிலையில், அங்கு பேய், பிசாசு உலவுவதாக வந்த வதந்தியை அடுத்து தொழிலாளர்கள் யாரும் பணி செய்ய முன்வரவில்லை. இதனால், கடுப்பான எம்.எல்.ஏ., ராமநாயுடு, நேற்று முன்தினம் கட்டிலுடன் சுடுகாட்டுக்கு வருகை தந்தார்.

அங்கேயே இரவு உணவை முடித்த அவர், இரவு முழுவதும் அங்கேயே தூங்கினார். அவருடன் ஒரே ஒரு உதவியாளர் உடனிருந்ததாக கூறப்படுகிறது. மறுநாள் காலையில் தனது வீட்டுக்கு ராம நாயுடு புறப் பட்டுச்சென்றார்.அவரது இந்த அதிரடிக்கு பலனாக 50 தொழிலாளர்கள் வேலை செய்ய தொடங்கினர்.

இதனால்,மகிழ்ச்சி அடைந்த ராம நாயுடு, பேய், பிசாசு' பயத்தை போக்கவே இங்கு தூங்கினேன். இனி மேலும் பலர் பயமில்லாமல் வேலை செய்ய வருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. அனைத்துவசதிகளும்கொண்ட நவீன சுடுகாடாக இது மாற் றப்படும். எனக் கூறியவர், கொசுக்கடி மட்டும் அதிகமாக இருந்தது என  தெரிவித்துள்ளார்.

நன்றி : விடுதலை 26.06.2018

Saturday, 9 June 2018

நிகழ்வும் நினைப்பும் 2018 (1).....

நிகழ்வும் நினைப்பும் 2018 (1).....மதுரை நிகில் பவுண்டேசன்....





மதுரை நிகில் பவுண்டேசன் சார்பாக மாணவ மாணவிகளுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி இன்று எனது ஊரான சாப்டூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் 9,10 மற்றும் 12 மாணவ மாணவிகளுக்காக நடைபெற்றது. மொத்தம் சுமார் 120 மாணவ மாணவிகள் பங்குபெற்றனர். நிகில் பவுண்டேசன் நிறுவனர் மரியாதைக்குரிய மதுரை திரு.சோம.நாகலிங்கம் ஐ.ஆர்.எஸ். அவர்கள் நிகிழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்கள். நிகழ்ச்சிக்கு நான்(வா.நேரு) தலைமை தாங்கினேன். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தலைவர் திரு.மீனாட்சிசுந்தரம் அவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.சாப்டூர் அக்னி சிறகுகள் அறக்கட்டளை உறுப்பினர்கள் திரு.வணங்காமுடி,பொறியாளர் சு.இரா.மணிமாறன்,பொறியாளர் லட்சுமிகாந்த்,கணினி ஆசிரியர் பாண்டி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். பயிற்சியாளர்களாக மதுரை திரு.குமரகுருபரன் சார்,இராஜபாளையம் கண்மருத்துவர் பால்ராஜ் சார்,மதுரையினைச்சார்ந்த திரு தயாளன் சார் ஆகியோர் மிகச்சிறந்த பயிற்சியினை அளித்தனர். சாப்டூர் அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியர்கள் திருமதி சுகந்தி அவர்களும் முருகேஸ்வரி அவர்களும் விடுமுறை நாளில் காலையிலிருந்து மாலைவரை பயிற்சி நடக்கும் இடத்தில் இருந்ததோடு, மாணவ,மாணவிகளை ஒழுங்குபடுத்தி வகுப்பில் அமரவைத்து மிகப்பெரிய உதவியைச்செய்தார்கள். மதியம் உணவினை,காலையில் தேநீரை அக்னி சிறகுகள் அறக்கட்டளையின் சார்பாக வழங்கினார்கள்.

                            மதுரையிலிருந்து விருந்தினர்களை அழைத்துச்சென்று, எனது மகன் அன்புமணியும் , நானும் நிகழ்வில் கலந்துகொண்டோம். மிகப்பெரிய மன நிறைவினைக் கொடுத்த நாளாக இந்த நாள்(09.06.2018) அமைந்தது. நிகழ்ச்சியின் முடிவில் மாணவ, மாணவிகள் கொடுத்த நிகழ்வு மதிப்பீடு மனம் நெகிழும் அளவிற்கு அமைந்தது.சில ஆண்டுகளுக்கு முன்னால் பழனி ஆண்டவர் பெண்கள் கல்லூரியில் மதுரை ஸ்பார்க் செண்டர் பார் ஐ.ஏ.எஸ். ஸ்டடிஸ் சார்பாக நான்,திரு.இரா.சீனிவாசன், பேரா.சேகர்,பேரா.ஆண்டியப்பன் சார் போன்றவர்கள் கலந்துகொண்டு கொடுத்த ஒரு நாள் பயிற்சி முடிவில் ஒரு மாணவி  நிகழ்வு மதிப்பீடு சொல்லும்போது 'எனது வாழ்க்கையை இந்த பயிற்சிக்கு முன்/இந்த பயிற்சிக்குப் பின்  என்று பிரித்துக்கொள்ளலாம். அவ்வளவு செய்திகள் இன்று கற்றிருக்கின்றேன். இதனை வாழ்க்கையில் கடைப்பிடித்து வெற்றி பெறுவேன் 'என்றார். அதனைப் போல இன்றைக்கு சாப்டூர் அரசு உயர் நிலைப்பள்ளி +2 மாணவி தன்னுடைய வாழ்க்கையில் இலக்கினை முடிவு செய்ய இந்த நாள் உதவியிருக்கிறது. நான் தெளிவாக இந்தப்பயிற்சி உதவியிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி என்றார். மனம் மகிழ்வாக இருந்தது.  நிகில் பவுண்டேசன் வெளியீடான, திரு.சோம. நாகலிங்கம் அவர்கள் கருக்கொண்டு வடிவமைத்த 'வல்லமை காணீர் ' என்னும் புத்தகம் அனைவருக்கும்  வழங்கப்பட்டது.  


                               இது ஒரு நல்ல தொடக்கம். சாப்டூர் அரசு ஆரம்பப்பள்ளி, அரசு மேல் நிலைப்பள்ளி இரண்டின் வளர்ச்சிக்கான வேலைகளை அக்னி சிறகுகள் அறக்கட்டளையும், ஊரில் உள்ள பெரிய மனிதர்களும்  வெளியூரில் உள்ள பெரிய மனதுக்காரர்களும் செய்யத்தொடங்கியிருக்கின்றார்கள். அங்கங்கு இருக்கும் நல்ல உள்ளங்கள் தங்கள் கரங்களின் மூலமும் உள்ளங்களின் மூலமும் உதவத்தொடங்கியிருக்கின்றார்கள். திருப்பூரில் இருக்கும் அருமை நண்பர்கள் க.சுப்பிரமணியமும்,ஜொ.இராஜேந்திரனும் இணைந்து ரூ 2000 இந்த நிகழ்வுக்கு உதவியிருக்கின்றார்கள். மிக்க நன்றியும் பாராட்டுகளும் அவர்களுக்கு. சாப்டூர் அரசு ஆரம்பப்பள்ளியில் தங்கள் குழந்தைகளைச்சேர்த்த பெற்றோர்களுக்கு அக்னி அறக்கட்டளை சார்பாக பாரட்டு விழாவினை இன்றைக்கு நடத்திக்கொண்டிருக்கின்றார்கள். இதயம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் அவர்களுக்கு....

                  இணைவோம். சாப்டூர் அரசு ஆரம்பப்பள்ளி, அரசு மேல் நிலைப்பள்ளி இரண்டின் வளர்ச்சிக்கான
நல்லதை செய்வோம் .....   அதன் மூலம் மன நிறைவு கொள்வோம்

Sunday, 3 June 2018

நாடி நரம்புகளில் ஓடுவது......

                          கடந்து போன காலங்கள் 16


அதிகாலை எழுந்து
பள்ளிக்கு கிளம்பல் வேண்டும்....
யாரும் பள்ளிக்கு வராத நேரத்தில்
மரங்களைப் பார்த்து
பேசிக்கொண்டிருத்தல் வேண்டும்...
இல்லையெனில் பள்ளி
ஆரம்பித்தபின்னே அரைமணி நேரம்
தாமதமாகச்செல்லல் வேண்டும்....
அப்படித்தான் பேருந்து இருந்தது
எனது கிராமத்தில் இருந்து
தே.கல்லுப்பட்டிக்கு
நான் +2 படிக்கும் காலத்தில்

சில நாட்கள் அம்மா கட்டிக்கொடுக்கும்
பழைய சோற்றோடு
அதிகாலைப் பேருந்து....
சில நாட்கள் பழைய சோறு இல்லைடா
இரு இரு சுடுசொறு ஆக்கிவிடுகின்றேன்
என்று அம்மா சொல்ல
தாமதமாகப் பள்ளிக்கு பேருந்தில் சென்று
கல்லுப்பட்டி காந்தி நிகேதனில்
அடியோ.. திட்டோ வாங்கியதும் உண்டு.....

அதிகாலை 6.30க்கு பேருந்து
இல்லையெனில் 8.50 மணிக்குத்தான்
கல்லுப்பட்டிக்கு எமது ஊரிலிருந்து
பேருந்து எனும் நிலையில்
இடைப்பட்ட நேரத்தில்
ஏதேனும் பேருந்து எமது
ஊருக்கு வராதா ? என
ஏங்கியிருந்த வேளை.....

பாராளுமன்றத்திற்கு பெரியகுளம்
மக்களைவைத் தொகுதியின்
உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட
முறுக்கு மீசை அய்யா
கம்பம் நடராசன்
எங்கள் ஊராம் சாப்டூருக்கு
நன்றி சொல்ல வந்திருந்தார்.....

11-ஆம் வகுப்பு படிக்கும்
மாணவன் நான் !
பல பேரிடம் கையெழுத்தினை வாங்கி
அன்றைய எங்கள் ஊரின்
தி.மு.க.செயலாளர்
அய்யா ஜோதி அவர்களிடம் கூறிவிட்டு
எங்கள் ஊருக்கு கூடுதலாக
பேருந்து வரல் வேண்டும்
நாங்கள் பள்ளி செல்ல
மிகவும் வாய்ப்பாக அமையும்
என மேடையில் ஏறிப் பேசி
மனுவினைக் கொடுத்தேன்.....

இன்றைக்கும் கூட அந்த நிகழ்வு
கனவு போலத்தான் இருக்கிறது....
மனுவினை வாங்கிய நாலைந்து நாட்களில்
தே.கல்லுப்பட்டிக்கு செல்லும்
அரசு டவுன் பேருந்தோடு
ஊருக்குள் வந்தார் அய்யா
கம்பம் நடராஜன்......
காலை 7.30 மணிக்கு
அருமையாக வந்துசென்றது
அந்தப் பேருந்து.........
எங்கள் கவலை தீர்ந்தது ....

திராவிட இயக்கத்தினை
புரிந்து கொண்டவர்களின்
நாடி நரம்புகளில் ஓடுவது
படிப்பதற்கு உதவி செய்தல்...
படிப்பதற்கு வசதி செய்தல்......