Sunday 25 November 2018

அண்மையில் படித்த புத்தகம் : அமினா..முகமது உமர் (நைஜீரியா)....தமிழில் தருமி

அண்மையில் படித்த புத்தகம் : அமினா
மூல நூல் ஆசிரியர்         : முகமது உமர் (நைஜீரியா)
தமிழ் மொழிபெயர்ப்பு        : தருமி
முதல் பதிப்பு               : ஜீலை 2009
மொத்த பக்கங்கள்           : 368, விலை ரூ 200
மதுரை மைய நூலக எண்    : 187630

                       " ஒரு நைஜீரிய பெண் போராளியின் உணர்ச்சிகரமான வாழ்க்கை. 29 மொழிகளில் வெளிவந்து உலகக் கவனத்தை ஈர்த்த நாவல்" என முன் அட்டையில் அச்சிடப்பட்டிருக்கின்றது. மொத்தம் 27 அத்தியாயங்கள் கொண்ட ஒரு மொழிபெயர்ப்பு நாவல்.முதலில் மொழி பெயர்ப்பாளர் முன்னாள் அமெரிக்கன் கல்லூரி பேராசிரியர் தருமி அவர்களுக்கு பாராட்டுகள். வாசிக்கும்பொழுது எந்த இடத்திலும் ஒரு அன்னிய மொழி நாவலை, மொழி பெயர்ப்பு நாவலைப் படிக்கின்றோம் என்ற எண்ணமே ஏற்படாத வண்ணம் மொழி பெயர்ப்பு செய்தமைக்கு பாராட்டுகள் வாழ்த்துகள். இது ஒரு பெண்ணிய அரசியல் நாவல். பெண்ணியமா? அரசியலா?  அச்சச்சோ என்று நினைக்கிறவங்க  எல்லாம் இதற்கு மேல் படிக்கவேண்டாம்....




                    பல்கலைக் கழக விடுதியிலிருந்து வெளியே வரும் ஒரு மாணவியாக அமினா அறிமுகப்படுத்தப்படுகின்றாள்.அவள் பல்கலைக் கழக மாணவி மட்டுமல்ல நைஜீரிய நாட்டின் மாநில மக்களைவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்ஹாஜி ஹருணாவின் 4-வது மனைவி என்றும் அறிமுகப்படுத்தப்படுகின்றாள். மூன்று மனைவிகள் உயிரோடு இருக்கும்போது 4-வது மனைவியாக அந்தப் பெரிய அரசியல்வாதி பணக்காரனுக்கு வாக்கப்படுகின்றாள் அமினா. அமினாவின் கணவனது செல்வச்செழிப்பும் அதனால் அமினாவுக்கு கிடைக்கும் சுகபோக வாழ்க்கையும் நாவலின் ஆரம்பத்தில் வர்ணிக்கப்படுகின்றது. தான் தனியாகத் தொழில் ஆரம்பித்து இன்னும் பெரிய பணக்காரி ஆக வேண்டும் என்பதுதான் அமினாவின் ஆசையாக திருமணம் முடிந்தவுடன் இருக்கின்றது.அமினாவைப் போன்றே மிகப்பெரிய பணக்காரியாக இருக்கும் குலு ஒரு பெரிய அரசு அதிகாரியின் மனைவி. அவள் இன்னும் பெரிய பணக்காரி ஆக வேண்டும் என ஆசை கொண்டவள். அமினாவைத் தன் பக்கம் இழுத்து தொழில் அதிபராக ஆக்கவேண்டும் என்பது குலுவின் எண்ணம்.

                 அமினாவின் பல்கலைக் கழகத்தோழி பாத்திமா. பெரிய பணக்காரனுக்கு வாக்கப்பட்டு விவாகரத்து செய்யப்பட்டவள். பெரிய பணக்காரனின் மகள். தன் அப்பாவும், கணவனும் பணத்திற்காக என்னவெல்லாம் செய்கின்றார்கள் என்பதனை அமினாவுக்கு எடுத்துச்சொல்கின்றாள். பாத்திமா ,நாட்டில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காக உழைக்கும் ஒரு அமைப்பில் உறுப்பினராக இருக்கின்றாள். அமைப்பாகத் திரள்வதற்கு வேண்டிய வேலைகளைத் தீவிரமாகச்செய்கின்றாள். அவளது அமைப்பு பல்கலைக் கழகத்தில் அரசால் தடை செய்யப்படுகின்றது. ஆனால் அடுத்த கட்டத்திட்டங்களைச்செயல்படுத்த வேண்டும். அதற்கு கூடிப்பேச ஓர் இடம் வேண்டும். அமினாவின் வீட்டில் வந்து பேச அனுமதி கேட்கின்றாள் பாத்திமா. தோழி என்ற முறையில் வா, வந்து பேசுங்கள். நான் டீ,பிஸ்கட் தந்து உபசரிக்கின்றேன். எனக்கு அரசியல் தேவையில்லை என்று அமினா சொல்கின்றாள். அதே மாதிரியே செய்கின்றாள், தனது இயகக்திற்கு ஏதேனும் உதவி புரிவாள் என்று எதிர்பார்த்த பாத்திமாவிற்கு ஏமாற்றம் ஏற்படுகின்றது. இருந்தாலும் பாத்திமா நாட்டில் நடைபெறும் அரசியல் பற்றியும், படித்த அதிகாரிகளின் பேராசை பற்றியும், சொத்து சேகரிப்பு பற்றியும், அரசியல்வாதிகளின் ஆடம்பர ஊதாரி வாழ்க்கைகள் பற்றியும் பேசிக்கொண்டே இருக்கின்றாள். அமினாவிற்கு அதில் ஈடுபாடு ஏற்படவில்லை. 

                அமினா 4-வது மனைவி. அவள் கணவனின் 3-வது மனைவி அமினா பற்றி வத்தி வைத்து விடுகின்றாள். மாதம் ஒரு நாள் ,இரு நாள் மட்டும் வீட்டிற்கு வரும் அமினாவின் கணவன் ஒரு நாள் வந்து அமினாவை தாறு மாறாக அடிக்கின்றான். இவள் எதற்கு அடிக்கின்றான் எனப்புரியாமலேயே அழுகின்றாள். தான் செய்த குற்றம் என்ன என்று கேட்கிறாள். உனக்கும் நம் பங்களா கார் டிரைவருக்கும் தொடர்பு எனக் குற்றம் சாட்டுகிறான். தொலைத்துவிடுவேன் என்று எச்சரித்து உடம்பு முழுவதையும் ரண களமாக்கி விட்டு வெளியேறி விடுகின்றான். அவள் கணவனின் மூத்த மனைவி வந்து ஆறுதல் கூறி மருந்தெல்லாம் கொடுக்கின்றாள். அபாண்டமான குற்றச்சாட்டால் துவண்டு, நொந்து நூலாகிக் கிடக்கும் நிலையில் பாத்திமா வருகின்றாள்.கொடுமையைக் கண்டு அமினாவிடம் பேசுகின்றாள். " ஆண்கள் ஆளப்பிறந்தவர்கள். அதுதான் அல்லாவே விதிச்சது.அதை மாத்த யாரால் முடியும் ? " பக்கம்(35 ) என்று அமினா கூறுகின்றாள். பாத்திமா நம்மால் முடியும் என்று சொல்கின்றாள். அமினாவுக்கு உடன்பாடில்லை. பாத்திமா அப்பொழுது நீ அரசியலுக்கு எல்லாம் வரவேண்டாம். ஊருக்குள் சென்று சாதாரணப் பெண்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்று பார் எனச்சொல்லி, ஒரு முகவரியைக் கொடுத்து லாரா என்னும் பெண்ணைப் போய் பார்க்கச்சொல்கின்றாள். 

               மறுநாள் அந்த லாரா என்ற பெண்ணைப் பார்க்க அமினா செல்கின்றாள்.13 வயதில் திருமணம் செய்து கொடுக்கப்பட்டு, 14 வயதில் ஒரு குழந்தைக்குத் தாயாகி,15 வயதில் சிறு நீரகத்தொற்று ஏற்பட்டு, ஒரு குடிசையில் குழந்தைக்கு கொடுக்க பாலில்லாமல் வற்றி வதஙகிப் போய் கிடக்கும் லாராவையும், அந்தச்சூழலையும் பார்த்தவுடன் அமினாவிற்கு புத்தருக்கு அரண்மனையை விட்டு வெளியில் வந்தவுடன் கிடைத்த அனுபவம் போல கிடைக்கின்றது. உனது கணவனை எங்கே என்று அமினா லாராவிடம் கேட்க ,அவன் வேறு ஒரு திருமணம் முடித்துக்கொண்டு சென்று விட்ட கதையை லாரா சொல்கின்றாள். லாராவையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு, தனது வீட்டில் ஒரு பகுதியில் இருக்கச்சொல்லி, உணவு கொடுக்க ஏற்பாடு செய்கின்றாள்.மருத்துவம் பார்க்கச்செய்கின்றாள். லாரா அமினாவிற்கு மிக நெருக்கமாகின்றாள். தன்னைப்போன்ற பல பெண்கள் இருப்பதையும் அவர்கள் கதையையும் அமினாவிடம் சொல்கின்றாள். இப்படிப்பட்ட பெண்களுக்கு உதவி செய்வதற்காக தான் வாழும் பகுதியான பக்காரோவின் அடிப்படையில் 'பக்காரோ உதவிக்குழு ' என்னும் பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி, பெண்களை ஒன்றுதிரட்டவும் அவர்களுக்கு கற்பிக்கவும் அமினா முற்படுகின்றாள். 

               அடித்த கணவன் மறுபடியும் வந்து அமினாவிடம் மன்னிப்பு கேட்கின்றான்.அமினா சமாதானமாகின்றாள். அமினாவிற்கு ஒரு ஆண்குழந்தை பிறக்கின்றது.பக்காரா உதவிக்குழுவில் நேரடியாகச்
செயல்படமுடியவில்லை என்றாலும் ஆலோசனைகள் சொல்கின்றாள்,வழிகாட்டுகின்றாள். பின் மூன்றுமாதம் கழித்து மறுபடியும் முழு மூச்சாக இறங்கி,சாதாரணப்பெண்களோடு இணைந்து வேலை செய்கின்றாள். பெண்களின் கல்வி,சுகாதாரம், வேலை வாய்ப்பு போன்றவைகளோடு கைவிடப்பட்ட பெண்களைப் பற்றியும் நிறையப்பேசுகின்றாள். அரசியல்வாதியான கணவன், இந்த வேலையெல்லாம் நமக்கெதற்கு ? நன்றாக உல்லாசமாக இருக்க, அனுபவிக்க பழகு என்று சொல்கின்றான். இவளுக்கு நாட்டமில்லை. கணவன் அமினா வீட்டிற்கு வருவதைக் குறைத்துக்கொள்கின்றான்.

              ஒரு நாள் அமினாவின் ஆறுமாதக் குழந்தைக்கு காய்ச்சல் மிக அதிகமாக அடிக்கின்றது.ஒரு கட்டத்தில் காய்ச்சலால் வலிப்பு வருகின்றது. உதவிக்கு யாரும் அருகில் இல்லாமல், மாத்திரை ,மருந்து வாங்க ஆளில்லாமல் தவிக்கின்றாள். இரவு நேரம் என்பதால், குதிரை மேய்க்கும் வேலைக்காரப்பையனை அழைத்து மாத்திரை வாங்கி வரச்சொல்கின்றாள், வாங்கி வருகின்றான்.அந்த மாத்திரையை தண்ணீரில் கலக்கிவிட்டு குழந்தைக்கு ஊற்றுவதற்காக அந்தப்பையனை உதவி செய்யச்சொல்லி, குழந்தைக்கு மருந்து ஊற்றிக்கொண்டிருக்கின்றாள். அப்பொழுது அங்கு வரும் அமினாவின் கணவன், அவளைச்சந்தேகப்பட்டு, அடிக்கின்றான். குழந்தைக்கு முடியவில்லை என்பதனைக் கவனித்திலேயே கொள்ள மறுக்கின்றான். விழுந்த அடியால் அமினாவிற்கு நகர முடியாத நிலைமை.வலிப்பால் துடிக்கும் குழந்தை... .அப்படியே போட்டுவிட்டு கணவன் போய்விடுகின்றான். குழந்தை இறந்து விடுகின்றது. உலகமே வெறுத்துப்போய் கொஞ்ச நாட்கள் இருந்த அமினா, நீண்டும் பக்காரோ உதவிக்குழுவில் மிகத்தீவிரமாக இயங்க ஆரம்பிக்கின்றாள்.

               பக்காரோ உதவிக்குழுவைப் பார்த்து அரசாங்கம் பயப்படுகின்றது. இவர்கள் புரட்சியெல்லாம் பேசவில்லை, பெண்களின் பிரச்சனைகளைப் பேசுகின்றார்கள், அதற்கு தீர்வு என்ன என்பதனைக் கேட்கின்றார்கள் என்று சொல்லும்போது அமினாவை மறைமுகமாகப் பயமுறுத்துகின்றார்கள். பணக்காரி குலுவை வைத்து ஆசை காட்டுகின்றார்கள். அமினா மயங்கவில்லை.அமினாவின் கணவனின் நண்பன் ஒரு வெளிநாட்டுக்காரன் வெள்ளைக்காரன்  வந்து அமினாவிடம் தொழில் தொடங்குவது பற்றிப் பேசுகின்றான். அவர்களின் திருட்டுத்தனத்தை,மொள்ள மாரித்தனத்தை பிட்டு பிட்டு அமினா வைக்க அவன் நைஜீரியா நாட்டில் தொழிலே தொடங்கவில்லை என்று ஓடி விடுகின்றான்.

               பெண்கள் ஒன்று சேரக்கூடாது,உரிமைகள் கேட்கக்கூடாது என்பதற்காக அந்த நாடு ஒரு சட்டம் போடுகின்றது. முழுக்க முழுக்க ஆணாதிக்கம் கொண்ட, பெண்களுக்கு எதிரான அந்தச்சட்டத்தை அமினாவும் பக்காரோ உதவிக்குழு அமைப்பும் எதிர்க்கின்றனர். பெண்கள் ஒன்றிணைகின்றனர். அமைதியாக ஓரிடத்தில் அமர்ந்து தங்கள் கோரிக்கையை நிறைவேற்றச்சொல்லி போராடுகின்றனர். ஆனால் அவர்களின் நியாயமான போராட்டத்தை உருக்குலைக்க அரசு வன்முறையைக் கையில் எடுக்கின்றது. அந்த அமைப்பின் ஒரு தலைவி சுட்டுக்கொல்லப்படுகின்றாள். பெண்கள் அனைவரும் குண்டாந்தடிகளால் தாக்கப்படுகின்றனர். அரசு முழுமையான வன்முறையை தூத்துக்குடி போல உபயோகிக்கின்றது. அமினா குறிவைத்து தாக்கப்படுகின்றாள்.ஊமைக்காயங்களாக அரசு அதிகாரிகள் அவளுக்கு ஏற்படுத்துகின்றனர். சிறையில் அடைக்கப்படுகின்றாள். ஜெயிலுக்கு வரும் அமினாவின் கணவன் அவளைக் குறை கூறுகின்றான். இந்த வேளை உனக்கு எதற்கு என்று சொல்கின்றான். 
தன்னை நிரந்தரமாக சிறையில் வைக்க வேலைகள் நடப்பதை அமினா உணர்கின்றாள். 

              விசாரணை நீதிபதி நியாயமாக நடந்து கொள்கின்றார். அமினாவின் மீது குற்றமில்லை என்று உணர்கின்றார்.ஆனால் ஆண்களுக்கு எதிராக, அரசாங்கத்திற்கு எதிராக இப்படி போராடுவது தவறில்லையா என்று கேட்கின்றார். அமினா பதில் சொல்கின்றாள். அமினாவின் கல்லூரித் தோழி ,இப்போது வழக்கறிஞராக இருப்பவள் அமினா வழக்கை எடுத்து நடத்துகின்றாள். சிறைத்தண்டனை இல்லாமல் அமினாவும் அவளது தோழியர்களும்  விடுதலை செய்யப்படுகின்றார்கள்.

                    இதுதான் சுருக்கமான கதை. ஆனால் நாவலுக்குள் பெரும் அரசியல் உரையாடல் இருக்கின்றது. மதங்களைப் பற்றிய விமர்சனங்கள் இருக்கின்றன. உண்மையிலேயே கடவுள் பக்தனாகக் காட்டிக்கொள்ளும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் கடவுளுக்குப் பயப்படுவதில்லை என்னும் செய்திகள் இருக்கின்றன. உலகம் முழுவதும் இருக்கும் பெண்கள் நிலைமை, ஏன் இப்படி என்னும் கேள்விகள், அதற்கான பதில்கள் இருக்கின்றன. மார்ச்-8  சர்வதேசப்பெண்கள் தினத்தில் பக்காரோ உதவிக்குழு கூட்டத்தில் ஒவ்வொரு பெண்ணும் தங்கள் அனுபவங்களை, வேதனைகளைப் பகிர்ந்து கொள்ளும் பதிவு உலகம் முழுவதும் இருக்கும் பெண்களின் துன்பங்களைச்சொல்வது போல் இருக்கின்றது. 

                    மிக ஆழமான விவாதங்கள். நேரிடையாகக் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை, ஆனால் நிகழ்வுகள் மூலம் அப்படியெல்லாம் ஒருவன் இல்லை என்பது அழுத்தமாகச்சொல்லப்படுகின்றது. பெண்கள் இணைந்தால் எவ்வளவு பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும், பெண்கள் தங்கள் பிரச்சனைகளை பொதுவான அரங்கில் பகிர்ந்துகொள்ளும்போது எப்படிப்பட்ட உத்வேகத்தை அது தரும்,மாற்றத்திற்கு எப்படி காரணமாகும் என்பது போன்றவை சொல்லப்பட்டிருக்கின்றன. தங்கள் வீட்டுப்பெண்களாக இருந்தால்கூட அரசியல்ரீதியாக பெண்கள் ஒன்றிணையும்போது அரசியல்வாதிகள் எவ்வளவு கொடூரமாக,மோசமாக மாறுவார்கள் என்பதெல்லாம் இந்த நூலில் சொல்லப்பட்டிருக்கின்றது.இந்தியாவிற்கு, தமிழகத்திற்கு அப்படியே பொருந்தும் நாவல் இது. 

                  .முடிவாக மார்ட்டின் லூதர் கிங் ஜீனியர் சொன்னதாக புத்தகத்தின் உள்ளே போடப்பட்டிருக்கும் வாசகத்தோடு முடிக்கின்றேன். " நம்மை பாதிக்கும் விசயங்கள் குறித்து நாம் அமைதி காக்கத் தொடங்கும் தினத்தில் நம் வாழ்க்கை முடிவு பெற ஆரம்பிக்கிறது " ... மார்க்சீம் கார்க்கியின் 'தாய் ' நாவலைப் படித்து முடித்தவுடன் மனதில் ஏற்பட்ட ஒரு எழுச்சி போல எனக்கு இந்த 'அmiனா' நாவலைப் படித்து முடித்தவுடன் ஏற்பட்டது. முழுக்க முழுக்க பெண்களின் போராட்ட பங்களிப்பை, பெண்களின் ஒருங்கிணைப்பின் அவசியத்தை வலியுறுத்தும் அதே நேரத்தில் அவர்களுக்கு உதவும் சில ஆண்களையும் குறிப்பிடும் நாவல் இது



   

Sunday 18 November 2018

அண்மையில் படித்த புத்தகம் : வகுப்பறைக்கு வெளியே ! ...இரா.தட்சனாமூர்த்தி

அண்மையில் படித்த புத்தகம் : வகுப்பறைக்கு வெளியே
நூல் ஆசிரியர்              : இரா.தட்சனா மூர்த்தி
வெளியீடு                  : புக்ஸ் பார் சில்ரன் -புதுவை அறிவியல் இயக்கம்,சென்னை-18
முதல் பதிப்பு               : நவம்பர் 2014, இரண்டாம் பதிப்பு : 2015. மொத்த பக்கங்கள் : 64 விலை ரூ 40

                            இந்த நூல் ஆசிரியர் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் எனக் குறிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. தனது பணி அனுபவத்தில் நிகழ்ந்த சில நிகழ்வுகளை கட்டுரைகளாக வடித்து நம்முன் சில கேள்விகளை முன் வைக்கின்றார். ஒரு மாணவனோ, மாணவியோ பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருக்கும்பொழுது, பள்ளிக்கு வராமல் இடை நிற்கின்றார்கள் என்றால் அதற்கு யார் காரணம் என்பதுதான் முக்கியமான கேள்வி. அதற்கான விடைகள் என்ன என்பதனை விட அந்தக் குழந்தைகள் ஏன் பள்ளிக்கூடத்திற்கு வராமல் நிற்கின்றார்கள் என்பதனை சமூகப்பார்வையோடு சொல்லக்க்கூடிய புத்தகம் இது.

                       'கனவு ஆசிரியர் ' என்னும் நூலில் எழுத்தாளர் பிரபஞ்சன் புதுச்சேரி மாநில கல்விமுறையை தமிழகக் கல்விமுறையோடு ஒப்பிட்டு பாராட்டுவார். ஆனால் இந்தப்புத்தகத்தைப் படித்தபின்பு புதுச்சேரி கல்விமுறையிலும் உள்ள சில கோளாறுகளை நாம் புரிந்துகொள்ள முடிகின்றது. அப்பாவை இழந்த ஒரு மாணவி,வீட்டில் அண்ணன் முறை வைத்து கூப்பிட்டுப் பழகிய ஒருவர் திடீரென்று தனது அம்மாவை திருமணம் செய்துகொள்ளப்போகிறார் என்று தெரிந்தவுடன், உங்களை அண்ணன் என்று சொல்வதா ,அப்பா என்று சொல்வதா எனக்கடிதம் எழுதுவதாக வரும் முதல் கதை 'சுமை',இப்படி இளம்பிஞ்சுகள் இவ்வளவு மனச்சுமையோடு வந்தால் எப்படி படிப்பார்கள் என்னும் கேள்வியை எழுப்பும் கட்டுரை.

                      கல்யாண வீடுகளில் சாப்பிட்ட இலையை எடுத்துப்போடும்  அம்மாவின் பையன் 'பரமசிவம் ', அம்மா கொண்டு வந்து தரும் பாயாசத்தால் 'பாயாசம் பரமசிவம்' ஆகி வகுப்பில் மற்ற மாணவர்களால் கேலிக்கு உள்ளாகும் 'பாயாசம் பரமசிவம் ' இரண்டு மாதங்களாக பள்ளிக்கு வரவில்லை. பின்னால் குழந்தைத் தொழிலாளியாக அவனைப் பார்க்கும் நேரத்தில் அம்மாவுக்கு கால் ஒடிய அவளுக்கும் தனக்குமான கஞ்சிக்காக கம்பி கிரில் வேலை செய்வதை சொல்கிறான். பரமசிவம் பள்ளியை விட்டு நின்று போனது யார் குற்றம் ?என்று கேள்வி கேட்கின்றார்.

                   மணல் அடிக்கும் வண்டிக்காரனின் மகனாக பள்ளிக்கு வரும் இருசப்பன் பற்றிய கட்டுரை 'வண்டிக்காரன்' ...பகுதி நேரமாக மணல் அடிக்கும் வேளைக்குப் போகும் இருசப்பன் பின்பு அப்பாவின் உடல் நலக்குறைவால் முழு நேர வண்டிக்காரனாக மாறிப்போவதை இந்தக் கட்டுரை விரிவாகச்சொல்கின்றது. 

                ஒரு பாடத்தில் அனைத்து மாணவர்களும் பொதுத்தேர்வில் வெற்றி பெற்றால் அந்த ஆசிரியருக்கு கேடயமும் பரிசுத்தொகையும் கிடைக்கும் ,எல்லோரும் நூறு சதவீதம் வெற்றி பெற்றால் அந்தப்பள்ளிக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசு என அறிவித்த கல்வித்துறையின் செயல்பாட்டை ,நிகழும் நிகழ்வுகளால் விமர்சனம் செய்யும் 'எனக்கு இங்கிலீஷ் வரலை...' என்னும் கட்டுரை புத்தகத்திலேயே மிக ஆழமான கட்டுரை. முடிவாக இந்தக் கட்டுரை முடிவில் சில கேள்விகளைக் கேட்டிருந்தார் நூல் ஆசிரியர் ...அவை பின் வருமாறு...

1.நூறு சதம் வேண்டி மூன்று மாணவர்களைப் பள்ளியை விட்டு விரட்டியது சரியா ?
2. மனித வளத்துறை என்ற பெயரில் உள்ள கல்வித்துறை மதிப்பெண் மட்டுமே மாணவனின் தகுதி தேர்ச்சியாக கருதப்படும் கல்விமுறை சரியா ?
3.அந்நிய மொழி ஆங்கிலத்தைக் கற்க வேண்டி மாணவர்களை கட்டாயப்படுத்தும் நிலையில் ,பல மாணவர்கள் பெயிலாகும் நிலை சரியா ?
4. மூன்று மாணவர்களைப் பள்ளியைவிட்டு துரத்தியது பள்ளியா? ஆசிரியரா?கல்விமுறையா?போதனா முறையா ?பெற்றோரின் அறியாமையா ? அரசின் நிலைபாடா ?அந்நிய மொழி ஆங்கிலமா? நூறுசதம் தேர்ச்சியின் அரசுப் பரிசு திட்டமா? விவாதியுங்கள்...முடிவை வாசகர்களே தீர்மானியுங்கள்... என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.

இந்த நூலினை வாசித்த எனது முன்னாள் தலைமை ஆசிரியர் திரு.வி.வீரி(செட்டி) சார் அவர்கள் இந்தக் கேள்விகளுக்கு பதிலாக " சந்தேகமில்லாமல் ஆசிரியர்தான் காரணம் ' என்று நூலில் விடை எழுதியிருக்கின்றார்.

                      பள்ளிக்கு வரும் பிள்ளைகள் திடீர் திடீரென நின்று போகின்றார்களா? அவர்கள் நிற்பதற்கான காரணம் எத்தனை ஆசிரியர்களுக்குத் தெரியும்? ஏன் நின்றார்கள் என்ற காரணத்தை தெரிந்து கொள்ள முயற்சித்திருக்கின்றார்களா? தெரிந்தால் அவர்களால் தீர்க்கக்கூடிய பிரச்சனைகளால் வகுப்புக்கு வராமல் நின்று போனார்களா? எனப் பல கேள்விகளை வாசிப்பவர்கள் மனதில் எழுப்பும் புத்தகம் இது. பணக்காரர்கள்,பெரிய வீட்டுப் பிள்ளைகள் இந்த மாதிரியான புத்தகங்களை வாசிக்கும் நிலைமையை வகுப்பறைக்குள் கொண்டுவர வேண்டும். கொண்டு வந்தால் அவர்களுக்கும் கொஞ்சம் சமூகத்தைப் பற்றிய புரிதல் கிடைக்கும்.

                     " இந்த நூலைப் படிக்கும்போது மேலோட்டமாகப் பார்த்தால் பொருளாதாரக்காரணங்கள் மாணவர்களின் இடை விலகல்களுக்குக் காரணமாகிறது என எண்ணத்தோன்றும். ஆனால் நாம் இன்னும் கொஞ்சம் ஆழமாகப் போய்ப்பார்த்தால் இந்த நூலின் கதாநாயகர்கள் படிக்காமல் போனதற்குக் குடும்பமும் பள்ளியும் காரணம். குடும்பத்திற்குப் பின்னால் சமூகமும் பள்ளிக்குப் பின்னால் அரசும் இருக்கின்றன என்பதை நாம் அறிவோம் " என அணிந்துரையில் த.பரசுராமன் குறிப்பிடுவதை நூலைப் படிக்கும்போது விரிவாக உணர முடிகின்றது.பள்ளிச்சூழல் பற்றிக் கவலை கொள்பவர்கள், கவனம் கொள்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகம் இது. 


Sunday 11 November 2018

அண்மையில் படித்த புத்தகம் : ஜாதி கெடுத்தவள்...திருமகள் இறையன்

அண்மையில் படித்த புத்தகம் : ஜாதி கெடுத்தவள்
ஆசிரியர்                   : திருமகள் இறையன்
வெளியீடு                  : திராவிடன் குரல் வெளியீடு,சென்னை-56.
மொத்த பக்கங்கள்           : 96, விலை ரூ 60

                         திராவிடர் கழகத்தின் ஆளுமை மிக்க பெண் தலைமைப் பொறுப்பாளர்களில் ஒருவராக  இருந்து மறைந்த அம்மா திருமகள் இறையன் அவர்களின் தன் வரலாறு இந்த நூல்.அவர்கள் உயிரோடு இருக்கும்போது வெளிவந்த நூல். இன்று அவர்கள் இல்லை, ஆனால் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையையும்,ஜாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் ஏற்பட்ட இன்னல்களையும் அதில் இருந்து மீண்டு வந்த வரலாற்றையும் சிறு சிறு கட்டுரைகளாக எழுதி அதனை அருமையாகத்  தொகுத்துத் தந்திருக்கின்றார்கள்.



                       அணிந்துரையை 'காவியம் போல் ஒரு வாழ்க்கை! கவிதையைப் போல் ஒரு வரலாறு 'என்று தோழியர் வழக்குரைஞர் அ.அருள்மொழி கொடுத்திருக்கின்றார்.ஆமாம், காவியம் போல திரைப்படம் எடுக்கும் அளவிற்கு திருப்பங்களும் திகில்களும் நிறைந்த துவக்க வாழ்க்கையாகத்தான் இறையனார்-திருமகள் இணையர்களின் வாழ்க்கை இருந்திருக்கின்றது.அதனை வழக்கறிஞர் அருள்மொழி " ஆதிக்க உணர்வுடைய ஒரு ஜாதியில் பிறந்து,ஜாதி உரையாடல்களையே தன் இளம் வயது முதல் கேட்டு வளர்ந்த திருமகள் அவர்கள் அந்த ஜாதிப்பற்றை எவ்வளவு வெறுத்தார் என்பதையும்,ஜாதி என்ற அடையாளத்தையே மறுத்து தன் வாழ்க்கையில் எப்படி சாதித்துக்காட்டினார் என்பதையும் அவர் சொல்லிக்கொண்டே போக கதை கேட்டபடியே நாமும் நடந்து போகிறோம் அவரது வாழ்க்கையுடன் " என்று சொல்கின்றார்.மேலும் " பெண்ணியம் பற்றி புத்தகம் படித்து பேசும் பலரைவிட பெரியாரியல் வாழ்க்கை வாழ்ந்து அதில் இருந்து பெண்களின் உடல் பிரச்சனைகளைக் குறித்தும் , படித்த பெண்களின் கடமைகளைப் பற்றியும் அம்மா கூறியிருக்கும் கருத்துகள் பெரியாரின் பெண்ணியத்தின் விளக்கமாகும்." என்று குறிப்பிடுகின்றார்.ஆம், இன்று பெரியாரியலைப் பேசுகிறவர்களை விட பெரியாரியல் அடிப்படையில் வாழ்பவர்கள்,வாழ்ந்தவர்களின் ,அனுபங்களின் பகிர்வுதான் தேவை.இன்றைய இளைஞர்கள் நேற்றைய முட்புதர்கள் நிறைந்த பாதைகளைத் தெரிந்துகொண்டால்தான் இன்றைய தெளிவான பாதைக்கு உழைத்தவர்களைத் தெரியும். அந்த வகையில் இந்த 'ஜாதி கெடுத்தவள் ' என்னும் திருமகள் இறையன் அவர்களின் புத்தகம் மிக மிக குறிப்பிடத்தகுந்த புத்தகம். 

                      என்னுரையே பெரியார் சொல்வதைப் போல நேரடியாக இருக்கின்றது. ஜாதியாம் ஜாதி , என்னங்கடா உங்க ஜாதி என்று கேட்பதுபோல " தெருவில் நடக்க முடியாத ஜாதி, செருப்பு அணிந்து நடக்கக்கூடாத ஜாதி,...." என வரிசையாக அடுக்கும் பகுதியை மட்டும் தனியாக துண்டறிக்கையாக கொடுக்கலாம். அவ்வளவு கோபமும்,உணர்ச்சியும் இருக்கிறது. " இப்படிப்பட்ட ஏராளமான பிரிவுகளையும் ,பிற்போக்குகளையும், மனிதத்தன்மையற்ற போக்குகளைக் கடைபிடித்த கேவலமான ஜாதி முறையை அடிப்படையாகக் கொண்டு இருக்கும் சமூகத்தில் ,காட்டுமிராண்டித்தனத்தையே ஒரு அடையாளமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்து ,1959 மார்ச் 10ல் மானமிகு இறையன் அவர்களை இணையராக ஏற்றுக்கொண்டது முதல் ,கடந்த 55 ஆண்டுகளாக இந்தச்சமூகத்தில் திராவிடர் இயக்கத்தில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களின் ஒரு சிறிய திரட்டுதான் இந்த புத்தகம் " என்று குறிப்பிடுகின்றார்.

                     பிறப்பும் ,தொடக்கக் கல்வியும் எனும்  முதல் கட்டுரை தொடங்கி , இருபத்து மூன்றாவதாக உள்ள 'என்றும் நான் மறக்க(கூடாத) முடியாத சிலர் ' என்னும் கட்டுரை வரை அம்மா திருமகள் இறையன் அவர்களின் வாழ்க்கையும், அவரது இணையர், அவரது பிள்ளைகள் , அவருக்கு ஆபத்துக்காலத்தில் உதவியவர்கள் என அவர் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட பல்வேறு நிகழ்வுகளும் விவரிக்கப்பட்டிருக்கிறது. பின் இணைப்புகளாக அவர் எழுதிய கட்டுரைகள் 'சோதிடம்,தாலி ஒரு வேலி, மகளிர் அன்றும் இன்றும் ,பெண்களைப் பற்றிய வேதங்களின் பார்வை, மகளிர் கடமை,மன்றல் 2012, ஜாதி மறுப்புத் திருமணங்களின் பட்டியல் ' போன்றவை இணைக்கப்பட்டுள்ளன.

                     சின்ன சின்ன கட்டுரைகள் என்றாலும் ஒவ்வொரு கட்டுரையும் ஒவ்வொரு  செய்தியைச்சொல்கின்றது.அவரது இளமைக்காலத்தில் ஜாதிக்கொடுமை எப்படியெல்லாம் இருந்தது. தன் குடும்பத்தைச்சார்ந்தவர்களே எப்படி ஜாதி வெறி பிடித்து பேசுவார்கள் என்பதையெல்லாம் பட்டியலிட்டிருக்கின்றார். அய்யா இறையனார் அவர்களைத் திருமணம் செய்தது, அதன் விளைவுகள், உயிருக்கு பயந்து ஒவ்வொரு ஊராக ஒளிந்து மறைந்து வாழ்ந்தது, ஆசிரியர் பணிக்கு சென்றது, ஆசிரியர் பணியில் ஏற்பட்ட அனுபவங்கள்,4 குழந்தைகள் பிறந்தது,அவர்கள் வளர்ந்தது, அவர்கள் அனைவருக்கும் ஜாதி மறுப்பு திருமணங்கள் செய்துவைத்தது,அவர்களின் வாழ்க்கை, அவர்களின் குழந்தைகள்( அத்தனையும் தமிழ்ப்பெயர்கள்) என விவரித்து செல்வதோடு தந்தை பெரியாரை முதலில் சந்தித்தது, நெருக்கடி காலத்தில் அன்னை மணியம்மையார் அவர்களோடு இணைந்து இயக்க வேலைகள் செய்தது, பின்பு தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்களின் தலைமையில் பணியாற்றியது எனப் பல்வேறு செய்திகளை அவருக்கே உரித்தான பாணியில் நூலாசிரியர் திருமகள் இறையனார் அவர்கள் சொல்லிச்செல்கின்றார்.

                     பேரறிஞர் அண்ணா, திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கெல்லாம் காண்டேகரின் நூல்கள் என்றால் மிகவும் பிடிக்கும் எனக் கேள்விப்பட்டிருக்கின்றேன். இந்த நூலில் அன்னை மணியம்மையார் அவர்களுக்கும் காண்டேகரின் நூல் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதனை நூலாசிரியர் "அன்னையாரின் உள்ளம் பாதிப்புக்கு ஆளாகும்போதெல்லாம் காண்டேகர் எழுதிய 'வெறுங்கோயில் ' என்ற நாவலை பலமுறை படிப்பேன் என்பார்கள். அன்றைய காலப்பெண்களுக்கு (படித்த) அந்த நாவல் அருமருந்தாகப் பயன்பட்டிருக்கிறது (பக்கம் 47)" எனக்குறிப்பிடுகின்றார். நெருக்கடி நிலை காலத்தில் நெல்லையில் நடந்த   பொறியாளர் அண்ணன் மனோகரன்-கசுதூரி திருமணம் பற்றி எழுதியிருக்கின்றார். அண்ணன் மனோகரன் அவர்களும் அம்மா திருமகள் அவர்களும் பேசும்போது கேட்க வேண்டும். அவ்வளவு கேலியும் கிண்டலும், உரிமையும் நட்பும் கொள்கை உறவும் அப்பப்பா....இருவரும் இல்லை இப்போது.....அன்னை மணியம்மையாரின் நூற்றாண்டு (2019) வரும் இந்த நேரத்தில் அவரைப் பற்றிய பல செய்திகளை நூலாசிரியர் இந்த நூலில் குறிப்பிடுகின்றார்.

                   முடிவாக 1995 முதல் தான் சுயமரியாதை இயக்க திருமண நிலையத்தின் இயக்குநராக இருந்ததையும் அங்கு சுயமரியாதைத் திருமணம் நடத்திக்கொண்டவர்களின் பட்டியலையும் கொடுத்து " சென்னை ,பெரியார் திடலிலுள்ள பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தில் நடந்த ஜாதி மறுப்புத் திருமணங்களே இந்தப் பட்டியலில் உள்ளவை.இவற்றில் 90 விழுக்காடு காதல் திருமணங்களே! இவை இல்லாமல் இங்கே பதிவு செய்து தமிழ் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான ஜாதி மறுப்புத் திருமணங்களும் நடைபெற்றுள்ளன.ஜாதி கெட்டவளாக கூறப்பட்டு வாழ்க்கையைத் தொடங்கிய நான் இந்த சுயமரியாதை திருமணங்களை செய்து வைப்பதன் விளைவாக 'ஜாதி கெடுத்தவள் ' என்ற பெருமையைப் பெற்றுள்ளேன்.இது தமிழர் தலைவரால் எனக்கு கிடைக்கப்பெற்ற பேறு ..." என்று குறிப்பிட்டுள்ளார். 


                   திராவிடர் கழகத்தினைச்சார்ந்த ஒவ்வொருவருக்கும் வாழ்க்கை என்பது சவால்.....அவர்களின் வாழ்க்கை போராட்டமே...ஆனால் போராட்டத்தில் எப்போதும் வெற்றி பெறக்கூடியவர்களாகவே.வெற்றி பெறுபவர்களாகவே  பெரியார் சித்தாந்தத்தை ஏற்றவர்கள் இருக்கின்றார்கள்.அவர்கள் தங்கள் வாழ்க்கையை தன் வரலாறாகப் பதியும்போது இளைஞர்களுக்கும் புதியவர்களுக்கும் அது ஒரு பாடமாக அமையும் என்பதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு இந்த 'ஜாதி கெடுத்தவள் ' என்னும் புத்தகம். இன்னும் 'ஜாதி கெடுத்தவர்கள் ' பலர் என் முன்னே இருக்கின்றார்கள். அவர்களும் தங்கள் தங்கள் வரலாறைப் பதியும்போது இன்னும் களமும் விரிவாகும்,களத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளின் விவரிப்பும் கூடுதலாகும்.எதிர்பார்ப்போம்.படித்துப்பாருங்கள். மற்றவர்களையும் படிக்கச்சொல்லுங்கள். சென்னை பெரியார் திடலில் உள்ள பெரியார் சுயமரியாதைப் புத்தக நிலையத்தில் இப்புத்தகம் கிடைக்கிறது. புத்தகச்சந்தைகளிலும் கிடைக்கிறது. 

                        

  

Wednesday 7 November 2018

'நெருப்பினுள் துஞ்சல் ' வாசிப்பு அனுபவம்......சுப்ரமணியன்.

            'நெருப்பினுள் துஞ்சல் ' வாசிப்பு அனுபவம்.

முனைவர் வா.நேருவின் 'நெருப்பினுள் துஞ்சல் ' வாசித்தேன்.நேருவின் முதல் சிறுகதைத் தொகுதி என்று பார்த்தால் இன்னும் அநேக தொகுதிகள் வெளியிடுமளவு தேறிவிட்டார் என்றே தோன்றுகிறது.நேரு தன்னைச்சுற்றி நடப்பவைகளையும் ,மனிதர்களையுன் நன்கு கவனிக்கிறார் என்று அவர் கதைகளைப் படிக்கும்போது தெரிகிறது.ஒரே துறை என்று மட்டுமல்ல,பொதுவாகவும் அவரின் கதாபாத்திரங்கள் அனைவருமே நாம் சந்தித்த,பழகிய மனிதர்களாய் இருப்பது கதைகளைப் படிக்க ஆவலைத் தூண்டுகிறது. கதைகளின் தலைப்புகள் கவித்துவமாக இருக்கின்றன.கதாசிரியர் கவிஞரூம் கூட என்பதால் இப்படித் தலைப்புக்கள் அமைந்துள்ளன என்று நினைக்கிறேன்.


'சீரு சுமந்த சாதி சனம் ': மொய் செய்யும் பழக்கத்தை புதிய கோணத்தில் அணுகியிருக்கிறார்.நமக்குச்செய்ததைத் திரும்பச் செய்யாவிட்டால் கேவலம்.அவமானம்.அதையும் நமக்கு வந்ததைக் காட்டிலும் கூடுதலாகச் செய்வதே கெளரவம் என்பது எழுதப்படாத விதி.அது எப்படி உழைக்கும் வர்க்கத்தை கசக்கிப்பிழிகிறது என்று உணர்வு பூரணமாகப் படைக்கிறார்.

'உயிர் ஈறும் வாளது ': ஒரு கனவுத் தொழிற்சங்கத் தலைவனை மாவட்டச்செயலாளர் மூலம் படைத்துள்ளார்.

'யார் யார் வாய் கேட்பினும்': விழிப்புணர்வு படைப்பு.படிக்கும்போதே முடிவை ஊகிக்க முடிந்தது.

'முட்டுச்சுவரு ': பெற்றோர்கள் தம் கனவுகளைப் பிள்ளைகள் மேல் திணிப்பதும் ,பிள்ளைகள் அதன் பாரம் தாங்காமல் தடம் புரளுவதுமான கதை.

'நெருப்பினுள் துஞ்சல்': புரோட்டாக் கடை நிகழ்வுகளை ஆசிரியர் விவரிப்பது அவரின் கூர்ந்து கவனித்து உள் வாங்கும் திறனை வெளிப்படுத்துகிறது.வாசிக்கும்போது நான் புரோட்டாக் கடையில் நிற்பதுபோலவே உணர்ந்தேன்.'இலவசம்,இலவசம்னு நாட்டைக் கெடுத்தாட்டங்க சார்,எதுவாக இருந்தாலும் இலவசமாகக் கொடுக்கக் கூடாது சார் " என்று மனோகரன் சொல்லும்போது மணியின் மனதிற்குள் "நீ பணக்காரனாகப் பிறந்திட்ட,உங்க அப்பா உனக்குக் கொடுப்பதெல்லாம் இலவசம் மாதிரிதானே.என்னைக்கு நீ உழச்சு ஒரு வாய் சோறு சாப்பிட்ட ' என்று பொறுமுவது முத்தாய்ப்பு.இலவசத்திற்கு இப்படி ஒரு முகம் இருப்பதை எடுத்துக்காட்டுகிறார்.

உண்மையில் இலவசத்தை எதிர்ப்பவர்கள் அது தேவையில்லாதவர்கள்தாம் என்று போகிற போக்கில் சொல்லிவிட்டுப் போகிறார்.எனினும் ஆசிரியர் இலவசங்களை ஆதரிக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறது.கல்வி,மருத்துவம்,வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு உணவு தானியங்களில் மானியம் என்பதைத் தவிர்த்து பிற அனைத்து இலவசங்களும் மக்களைச் சோம்பேறியாக்குகின்றன என்பதில் ஆசிரியர் உடன்பட வில்லையா ?

இந்தத் தொகுப்பிலேயே சிறுகதைக்கான அனைத்து அம்சங்களையும் கொண்டு மிகச்சிறப்பாக வந்திருப்பது 'அடி உதவுறது மாதிரி(?) ' என்ற கதைதான்.படிப்பு வராது என்ற மன நிலையில் இருந்த மதியை அவனின் அண்ணன் பேரின்பம் அடித்து நொறுக்க,அதைத் தடுத்த முத்து,மதிக்குப் புரியும்படியான மொழியில் நடைமுறையில் சாத்தியமான வழிமுறைகளை சொல்லி நேர்படுத்துகிறான்.ஆனால் பேரின்பமோ கதையில் முடிவில், தான் கொடுத்த அடியினால்தான் மதியின் படிப்பில் முன்னேற்றம் என முத்துவிடமே பெருமைப் பட்டுக்கொள்கிறான். இந்த இடத்தில் ஆங்கில சிறுகதை மன்னன் ஓ ஹென்றி நினைவுக்கு வருகிறார். அந்த அளவு மிகத் தரமான கதை.

வா.நேருவின் கதைகளில் பொதுவான அம்சம்,எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய சரளமான நடை.எழுத்தில் ஆடம்பரமோ தன் திறமையைப் பறை சாற்றும் பகட்டோ இல்லை.மற்றொரு அம்சம் சமூக அக்கறை.கதை மாந்தர்கள் அனைவரும் எளியவர்கள்,தேவைகள் அதிகமில்லாதவர்கள்.அடிப்படைத் தேவைகளுக்காகப் போராடுபவர்கள்.

இப்புத்தகத்தை எடுத்தவுடன் நேரடியாகக் கதைகளை வாசிக்க ஆரம்பித்துவிட்டேன். அணிந்துரை,விமர்சனங்கள் ஆகியவற்றைத் தவிர்த்து விட்டேன். காரணம் அவற்றின் தாக்கம் என்னுடைய வாசிப்பு அனுபவத்தில் இருக்கக்கூடாது என்பதால். இந்த நிமிடம் வரை அவற்றைப் படிக்கவில்லை.

புத்தக ஆக்கம்,வடிவமைப்பு இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.அச்சு இன்னும் தெளிவாக,வாசிக்க இலகுவாக இருந்திருக்கலாம்.

வா.நேரு தம் படைப்புகள் வழியாக சமூக நீதி,பகுத்தறிவு,முற்போக்கு சிந்தனைகள் ஆகியவற்றை கடத்துகிறார். அதனால் சில கதைகளில் பிரச்சார நெடி சற்று தூக்கலாக இருக்கின்றது.நேரு இன்னும் பரந்துபட்டு சிறகுகளை நன்கு விரித்து புதிய எல்லைகளைத் தொடவேண்டும்.

வாழ்த்துகள் !
சுப்ரமணியன்.

'நெருப்பினுள் துஞ்சல் ' வாசிப்பு அனுபவம் -என்னும் இந்த விமர்சனத்தை எழுதியவர் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் கோட்டப்பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற திரு.எஸ்.சுப்ரமணியன் அவர்கள். அலுவலக நண்பர்களால் எஸ்.எஸ். என்று அழைக்கப்படுபவர். வாசிப்பினை வாழ்க்கையின் இன்னொரு மூச்சுவிடுதலாகக் கொண்டு வாழ்ந்து வருபவர். நிறைய வாசித்தாலும் படைப்பில் ஆர்வம் காட்டாமல் வாசிப்பனுவத்திற்காகவே வாசிப்பவர். "சமீபத்தில் படித்தவை : சிவகாமியின் 'உயிர் ' நாவல்,எம்.வி.வெங்கட்ராமனின் 'பனிமுடி மீது ஒரு கண்ணகி' சிறுகதைத் தொகுதி,வண்ண நிலவனின் 'எம்.எல்.'நாவல்,அர்ஷியாவின் 'சொட்டாங்கல் 'நாவல்,வா.நேருவின் 'நெருப்பினுள் துஞ்சல்' சிறுகதைத் தொகுதி ஆகியவற்றுடன் இரண்டாம் உலகப்போரின் பின்னணியில் ஆஸ்திரேலிய எழுத்தாளர்  Markus Zusak எழுதிய ' The Book Thief ' நாவல். இது 2013-ல் திரைப்படமாகவும் வந்துள்ளது.அந்த படத்தையும் நான் பார்த்துள்ளேன். இவற்றுள் சிவகாமியின் 'உயிர்', அர்ஷியாவின் 'சொட்டாங்கல்',நேருவின் 'நெருப்பினுள் துஞ்சல் 'ஆகியவை பற்றிய எனது வாசிப்பு அனுபவத்தை விரைவில் பகிர்ந்து கொள்கின்றேன் " என்று வாட்சப்பில் கொடுத்திருந்தார். அனுபவத்தை பகிர்ந்திருக்கும் அவருக்கு எனது உளப்பூர்வமான நன்றியும் மகிழ்ச்சியும்.......

Sunday 4 November 2018

அண்மையில் படித்த புத்தகம் : கரும் பலகைக்கு அப்பால் ....கலகல வகுப்பறை சிவா

அண்மையில் படித்த புத்தகம் : கரும் பலகைக்கு அப்பால் ....
ஆசிரியர்                   : கலகல வகுப்பறை சிவா
வெளியீடு                  : நீலவால் குருவி ,சென்னை -24 பேச: 9442890626
முதல் பதிப்பு               : ஜனவரி 2018, 80 பக்கங்கள், விலை ரூ 70

                            இந்த வருடம் மதுரை புத்தகச்சந்தையில் வாங்கிய புத்தகம். இந்தப்புத்தகத்தின் ஆசிரியர் கலகல வகுப்பறை சிவா தனது முன்னோட்டத்தில் ' ஆசிரியர்களுக்கான ஏராளமான திரைப்படங்கள் உலகெங்கும் எடுக்கப்பட்டுகொண்டே இருக்கின்றன.உலகமெங்கும் ஆசிரியர்கள்,குழந்தைகள் சந்திக்கும் பல்வேறு பிரச்சனைகள் அவற்றிலிருந்து அவர்கள் எவ்வாறு புதிய தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறார்கள் என்பதை இப்படங்கள் வாயிலாக அறிய முடியும்.அத்தகைய படங்களைப் பார்ப்பதும் அது குறித்துக் கலந்துரையாடுவதும் நல்ல பலன்களைத்தரும் " எனக்குறிப்பிடுகின்றார். ஆமாம், தான் பார்த்த ,ரசித்த ஆசிரியர்கள்,மாணவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் குறித்த 12 திரைப்படங்களைப் பற்றிய கட்டுரைகள்தான் இந்தப் புத்தகம்.



                            கரும்பலகைக்கு அப்பால், தி இந்து தமிழ் பத்திரிக்கையில் வரும் தொடர் கட்டுரைத் தலைப்பு. 2011-ல் வெளியான "Beyond the Blackboard " என்னும் படத்தைப் பற்றியதுதான் முதல் கட்டுரை. இதுதான் புத்தகத்தின் தலைப்புக்கும் கூட.சில ஆசிரியர்கள், நானே கூட எனது கல்லூரிக் காலத்தில் சந்தித்ததுண்டு. கைகளில் நோட்ஸ்களோடு  வருவார்கள், வருகைப் பதிவேட்டை எடுப்பார்கள். பின்பு எழுதிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு 40,45 நிமிடம் கரும்பலகையில் எழுதி மட்டும் போட்டு விட்டு சென்றுவிடுவார்கள். சில விளக்கங்கள் சொல்வார்கள், ஆனால் அது உருப்படியாக இருக்காது. இன்றைக்கும் பல ஆசிரியர்கள் அப்படி இருக்கக்கூடும்.பாடங்களைப் புரிவது, மாணவர்களைப் புரிவது, மாணவர்களின் வீட்டுச்சூழலைப் புரிவது எனப் பல புரிதல்களோடு வகுப்பறையில் இருக்கும் ஆசிரியரால் மட்டுமே , காலம் கடந்து நிற்கும் ஆசிரியராக நிற்கமுடியும். "டேசி பெஸ் என்ற ஆசிரியை தனது பள்ளி அனுபவங்கள் குறித்து எழுதிய 'Nobody Don't Love Nobody " என்ற நூலில் குறிப்பிட்டுள்ள உண்மைச்சம்பங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் " Beyond the Blackboard " என்று நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.கல்லூரிப் படிப்பு முடிந்ததும் கனவுகளோடு ஆசிரியராகப்போகும் டேசி பெஸ், எதார்த்தங்களால் உடைந்து போவதும், மேல் அதிகாரிகளிடம் திட்டு வாங்குவதும் பின்பு சூழலை உள்வாங்கிக்கொண்டு மிகச்சிறந்த ஆசிரியராக, பள்ளியில் படிக்கும் அத்தனை மாணவர்களும், மாணவிகளும் நேசிக்கும் ஆசிரியராக எப்படி மாறுகிறார் என்பதுதான் திரைப்படத்தின் கதை என்பதனை நூலாசிரியர் குறிப்பிட்டு விவரிக்கின்றார்." இயல்பான கலந்துரையாடலே கற்பித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது " " வகுப்பறை மாற்றங்களை சந்திக்கும்போது சுற்றுப்புறமும் மாறுகிறது " (பக்கம் 12), "ஆசிரியர் என்ற பெருமிதத்தை பார்ப்பவர்க்கும் வழங்குவதே, Beyond the Blackboard "  திரைப்படம் எனக்குறிப்பிடுகின்றார்.

                      குறைபாடு உள்ள பிராட் என்னும் குழந்தை , பின்பு அந்தக் குறைபாட்டை ஏற்றுக்கொண்டு அதனை மற்றவர்களுக்கும் விளக்கி, அந்தக் குறைபாட்டை வைத்துக்கொண்டே படித்து பின்பு  மிகச்சிறந்த ஆசிரியராக எப்படி மாறுகின்றார் என்பதனை விளக்கும் ஆங்கில மொழியில் வந்த " Front of the Class " என்னும் திரைப்படத்தை அடுத்த கட்டுரை விவரிக்கின்றது. "குழந்தைகளிடம் காணப்படும் குறைபாடுகள் குறித்த தெளிவான அறிதல்கள் ஆசிரியருக்கு மிகவும் அவசியம்" பக்கம் 17 ...இதனை ஆசிரியர்களின் ஓய்வறையில் ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் எழுதி வைக்கலாம்.

                    நமது அண்டை மாநிலமான கேராளாவில் சமூக அக்கறையோடு கூடிய பல படங்கள் பல காலமாக எடுக்கப்படுகின்றன. (தமிழில் அப்படியான போக்கு இப்போதுதான் காணப்படுகின்றது. அது மகிழ்ச்சியே ).மலையாள மொழியில் 2012 எடுக்கப்பட்ட " Last Bench " என்னும் படம் பற்றியது அடுத்த கட்டுரை. " ஆசிரியர்களும்,பெற்றோர்களும் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுவதோடு மட்டுமல்லாமல் முன் மாதிரியாக இருக்கவேண்டும் .(பக்கம் 28 ).என்பதனை கடைசி பெஞ்சின் படிக்காத மாணவர்களை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் பற்றியது. 

               சீன மொழியில் 1999-ல் எடுக்கப்பட்ட " Not One Less "   என்னும் திரைப்படம், 2016-ல் இந்தியில் வந்த " Chalk n duster " என்னும் திரைப்படம்,1984-ல் ஆங்கில மொழியில் வந்த "Teachers " என்னும் திரைப்படம்,'அறிவுக்கு நிறம் இல்லை என்பதனை அழுத்தமாகச்சொல்லும்- 2007-ல் வெளிவந்த " The Great Debaters " என்னும் திரைப்படம், 2004-ல் கொரிய மொழியில் வெளிவந்த " Lovely Rivals " என்னும் திரைப்படம், 1981-ல் அமெரிக்காவில் வெளிவந்த " The Marva Collins Story " ,2005-ல் ஆங்கில மொழியில் வெளியான "School of Life " ,1989-ல் ஆங்கிலத்தில் அமெரிக்காவில்  வெளியான "Lean on Me " ,றைவாக அமெரிக்கக் கல்வி பற்றிய 2010-ஆம் ஆண்டு ஆவணப்படமான  " Waiting for Superman " என்னும் படத்தைப் பற்றிய கட்டுரையோடு புத்தகம் முடிகின்றது.

             ஒவ்வொரு திரைப்படத்தினையும் தன்னுடைய ஆசிரியர் அனுபவத்தோடு இணைத்து, இன்றைய சூழலில் இருக்கும் சமூகச்சூழலையும் சுட்டிக்காட்டி இந்த நூலை நூலாசிரியர் படைத்திருக்கின்றார்.பாராட்டுக்குரிய பணி. பின்லாந்து நாடு முன்னேறியதற்குக் காரணம் அதனுடைய கல்வி முறைதான் என்று மாற்றி மாற்றி கட்செவியில் செய்திகள் வந்துகொண்டேயிருக்கின்றன. கடவுளைப் பற்றிக் கவலைப்படாத பின்லாந்து நாடு, மிகத்தீவிரமாக கல்வி பற்றிக்கவலைப்படுகின்றது. நமது நாடு அதற்கு நேர் எதிராக கடவுள்களைப் பற்றிக் கவலைப்பட்டுக்கொண்டு, கல்வியை பற்றிக் கவலைப்படாமல் இருக்கின்றது. ஆசிரியர்கள் பெற்றோர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டிய நேரமிது. சாதிகளால், மதங்களால்,சுய நலமிக்க அரசியல்வாதிகளால் பிளவுண்டு கிடக்கும் அடித்தட்டு மக்கள் முன்னேற ஒரே வழி கல்வியே. கல்விக்கூடங்களையும்,கல்வியையும் நேசிக்கும் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. இந்தப்புத்தகத்தைப் படித்தவுடன் கல்லூரியில் படிக்கும் எனது மகன் ,இந்த நூலில் சொல்லப்பட்டுள்ள மூன்று திரைப்படங்களைப் பார்த்துவிட்டான். " அப்பா, கணினியில் எடுத்துவைத்திருக்கிறேன், நீங்களும் பாருங்கள் " என்று சொல்லியிருக்கிறான்.பார்க்க வேண்டும்.

           எனது முன்னாள் தலைமை ஆசிரியர் ,திரு.வீ.வீரி(செட்டி) அவர்கள் இந்தப்புத்தகத்தைப் படித்துவிட்டு ," எல்லா வாத்தியார்களும் இதனைக் கட்டாயம் படிக்கவேண்டும்.படிக்கவேண்டும் " என்றார். 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராக,தலைமை ஆசிரியராக, முதன்மைக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றிய அவர் சொன்னதை நானும் வழிமொழிகின்றேன் " ஆசிரியர்களாக இருப்பவர்கள், இருக்க விருப்பபடுபவர்கள்,பெற்றோர்கள் " கட்டாயம் படிக்க வேண்டிய புத்தகம்.