Tuesday, 28 March 2023

வாங்க போய் வாங்கித் தின்னலாம் !

 சர்வாதிகார மிருகத்தின்

கொடூரமான நாக்குகள்

எட்டுத் திசைகளிலும்

எட்டும் திசைகளில்

எல்லாம் துழாவுகின்றன...


நாக்குகள் முழுக்க

நவீன கேமாராக்கள்...

எவரேனும் நம்மை எதிர்த்து

மூச்சு விட்டால் கூட

முழுமையாக முழுங்கிவிடுவோம்

என முடிவெடுத்து 

அலைகின்றன அந்த நாக்குகள்


புதிது புதிகாக கேமராக்கள்

வைத்திருக்கும் 

ஊடகங்களில் சில 

பதுங்கிக் கொண்டன...

சில ஊடகங்கள் 

பாதுகாப்புக் கருதி

பணத்தை வெகுமதியாய்ப்

பெற்றுக்கொண்டன...


நீதி தேவதையின் 

தராசுகளில் ஒருபக்கம்

துப்பாக்கிக் குண்டும்

இன்னொரு பக்கம்

ஓய்வுக்குப் பின்னான

சொகுசுப்பதவியும்

சரிசமமாக 

நிறுத்தப்பட்டிருக்கின்றன..

நிறுப்பவரின் விருப்பம்

எதைத் தராசுக் கல்லாய்

வைத்து நிறுப்பது என்பது...


.பங்கு மார்க்கெட்டில்

பணத்தை முதலீடு செய்யுங்கள்..

ஆன்லைனில் ரம்மி 

விளையாடுங்கள்...

ஆண்டாராய்டு போனைத் திறந்தால்

விதவிதமாய் 

விளம்பரங்கள் வருகின்றன...


கற்பனையில் திளைக்கணுமாம்...

குடிக்க கஞ்சி இல்லைனாலும்

உடுத்த துணி இல்லைனாலும்

கொட்டும் மழையில் ஒதுங்க

ஒரு வீடு இல்லைனாலும்

எதிர்த்து பேசக்கூடாதாம்...

ஏன்?எப்படின்னு எதுவும்

கேக்கலாம் கூடாதாம்...


அடடே...

சொல்ல மறந்துட்டேனே...

சுதந்திரம் வாங்கி

எழுபத்தைந்து வருசம் ஆச்சாம்...

பேருந்து நிலையத்தில்

மிட்டாய் தர்ராங்களாம்

வாங்க போய்

வாங்கித் தின்னலாம் ! 


                                                 வா.நேரு,

                                                  29.03.2023




.


Monday, 27 March 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள்(3)....முனைவர்.வா.நேரு

 

                                        வானத்தில் மிதப்பது போன்ற உணர்வு இருந்தது........


"வேலையில் சேராமல் திரும்பி வந்தீர்களா? ": வீட்டில் திட்ட வில்லையா?..மற்றவர்கள் ஒன்றும் சொல்லவில்லையா?மறுபடியும் ஒரு வேலை கிடைப்பது கடினம் என்று நீங்கள் நினைக்கவில்லையா ? " என்று கேட்ட  எனது அத்தனை கேள்விகளுக்கும் "இல்லை " என்ற பதிலைச்சொன்ன எங்கள் ஆசிரியர், " நான் தான் வீட்டில் மூத்த பிள்ளை,எனது அப்பா கடுமையான உழைப்பாளி,விவசாயி.படிப்பு,வேலை பற்றி அதிகம் தெரியாது. உனது விருப்பம் என்று எனது விருப்பத்தின்படியே விட்டு விட்டார் "என்றார்.


"சரி,வேலை வேண்டாம் என்று சொல்லி விட்டு வந்த பின்பு அடுத்ததாக என்ன செய்தீர்கள் ? " என்று கேட்டபோது 


" ஓராண்டு ஆசிரியர் பயிற்சியை புதுக்கோட்டை அரசு ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் முடித்து ஆசிரியர் பணிக்கு வந்தேன். நான் ஆசிரியர் பணிக்கு வந்த காலத்தில் தமிழ் நாடு அரசாங்கத்தில் பெருந்தலைவர் காமராசர் முதல்வராக இருந்தார்.அப்போதுதான் கிராமப்புறங்களில் ஏராளமான அரசு உயர் நிலைப்பள்ளிகளைத் தோற்றுவித்தார்கள்.கல்லூரியில் படித்தவர்கள் கிராமபுறத்தில் சென்று வேலை பார்ப்பதற்கான ஒரு வாய்ப்பு ஏற்பட்டது.நானும் ஆசிரியராக நியமிக்கப்பட்டேன்.கிராமப்புற உயர் நிலைக்குப் பள்ளிக்கு முதன்முதலாக நியமிக்கப்பட்டேன்.அதுவும் கொடைக்கானல் பகுதியில் பண்ணைக்காடு என்னும் கிராமத்தில் நியமிக்கப்பட்டேன் " என்று குறிப்பிட்டார்.ஆசிரியர் பணி முடித்தவுடன் அந்தக் காலத்தில் பட்டதாரி ஆசிரியருக்கு உடனே அரசு ஆசிரியர் வேலை கிடைத்திருக்கிறது.அன்றைக்கு ஆசிரியர் பயிற்சி முடித்தவர்கள் மிகக் குறைவு.தேவை அதிகமாக இருந்திருக்கிறது.


பண்ணைக்காடு என்னும் பேரூராட்சி பற்றி ,""மேற்கு தொடர்ச்சிமலையில் அடுக்கடுக்கு மலைத்தொடருக்குள் கடல் மட்டத்தில்  இருந்து 7200 அடி உயர உச்சியில் அமைந்துள்ளது பண்ணைக்காடு.. மலைகளின் இளவரசி எனப் புகழ் பெற்ற கொடைக்கானல் செல்லும் வழியில் வத்தலக்குண்டு-வில்  இருந்து 32-வது மைலில் நாற்புற்மும் மலைகளாலும் மலையில் தோன்றும் நதிகளாலும் சூழப்பட்டு கடல் மட்டத்திலிருந்து 4250 அடி உயரத்தில் எங்கு நோக்கினாலும் பச்சைக் கம்பளம் விரித்தாற்போல் அமைந்துள்ள ஊர் பண்ணைக்காடு பேரூராட்சி ஆகும். பண்ணைக்காடு மேற்கு தொடர்ச்சிமலைகளின் கீழ் மிளகுசுழி. அருங்கனால் மற்றும் சோலைவயல் போன்ற ஆறுகளினாலும். நீர் வீழ்ச்சிகளிலிருந்தும் சுத்தமான குடிநீர் புவீஈர்ப்பின் மூலம் பேரூராட்சி பகுதியில் உள்ள மேல்நிலை மற்றும் தரைமட்ட தொட்டிகளிலும் தங்கு தடையின்றி தினசரி பண்ணைக்காடு பேரூராட்சி பொது மக்களுக்கு குடிநீர் கிடைப்பது ஒரு வரப்பிரசாதமாகும். 

பண்ணைக்காடு, கொடைக்கானல் போன்ற கூடுதலான குளிர்ச்சியாகவும் இல்லாமல், கீழ் நாடுகள் போன்று கூடுதல் வெப்பத்துடன் இல்லாமல் அனைவரும் விரும்பும் வண்ணம் அமைந்துள்ளது. இங்கு கோவிலகள் அதிகமாக உள்ளது. பளியர்... போன்ற மலைச் சாதியினரும், மண்ணாடியார் என்ற இனத்தவரும் ஆங்காங்கே குடிசைகள் போட்டு தங்கி, காடுகளை அழித்து பண்ணைகள் அமைத்து வாழ்ந்த காரணத்தினால் பண்ணைக்காடு எனப் பெயர் பெற்றிருக்கலாம் என ஆன்றோர் கூறுகின்றனர். கற்கால மனிதர்கள் வசித்து வந்த பாறை வீடுகள் இப்போதும் காண இயலும் மற்றும் எதிரொலிக்கும் பாறை,. மாவிலிப்பாறை ஆகிய சிறப்புமிக்க இடங்கள் அமைந்துள்ளது. தேக்கு, குமுழ், சிங்கிட்டார். நாவல், வேங்கை, ஆமான் மற்றும் சந்தனம் போன்ற மரவகைகளும், முக்கனி வகைகளுடன் ஆரஞ்சு, கொய்யா, அன்னாசி, சீத்தா, அவகோட, நாரத்தை மற்றும் எலுமிச்சை போன்ற கனி வகைகளும் காப்பி, இஞ்சி, ஏலம், மிளகு, கொக்கோ, நெல்லி , கடுக்காய் போன்ற பணப்பொருட்களும், பீன்ஸ், செளசெள, முட்டைகோஸ்.கராட், பீட்ருட், காலிபிளவர் போன்ற காய்கறிகளும், கலைமன், சருகுமான், கேலையாடு, வரையாடு, காட்டு எருமை, காட்டுப் பன்றிகள், காட்டு முயல், சிறுத்தை, வரிப்புலி, மந்தி, குரங்குகள், வெளவால், போன்ற விலங்குகளும் காட்டு கோழி, காடை,கெளதாரி, பச்சைபுறா, கரும்புறா, தெல்லுபுறா, மாப்புறா நிறைந்துள்ள பகுதியே பண்ணைக்காடாகும். பட்டம் பெற்று பதவிகளில் இருக்கின்ற தொழிலதிபர்கள். பெரும் விவசாயப் பெருங்குடி மக்கள் நிறைந்த்து இவ்வூராகும்....." என்று இணையதளத்தில் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.


ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சியை முடித்தவுடன் நேரடியாகக் களப்பணி.அதுவும் மலைப்பகுதிக் கிராமத்தில்..எப்படி இருந்தது அந்த அனுபவம்.அவரின் சொற்களில் இருந்தே...


"உண்மையில் ஆசிரியராகப் பயிற்சி பெற்றிருந்தாலும் கூட சமூகப்பயிற்சி ஓராண்டாவது ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்பட்டிருக்கவெண்டும்.அது இல்லாததால் கல்லூரி மாணவர்களைப் போலவே நாங்களும் நடந்துகொண்டோம்.அதாவது கல்லூரியில் நாம் செய்யும் பணி உண்மையானதாகவும் நேர்மையானதாகவும் இருக்கவேண்டும் என்பது ஏற்கனவே எங்கள் மனதில் ஊறிய ஒன்று.இதில் எந்த வகையிலும் சுய நலம் தலைகாட்டவே இல்லை.எங்களின் அந்த மனப்பாங்கு மாணவர் சமுதாயத்திற்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்தது.என்னைப் போன்றவர்களுக்கு அந்தப் பணியில் இருக்கும்போது வானத்தில் மிதப்பது போன்ற உணர்வு இருந்தது.இந்த சிந்தனைகள் இருந்ததனால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் நன்மைக்காக நாங்கள் செயல்பட முடிந்தது" என்று குறிப்பிட்டார்.


ஆசிரியராக பணியில் சேர்ந்தவுடன் எல்லாம் நமக்குத் தெரிந்துவிடுமா? உறுதியாக மாணவர்களிடம் பழகப் பழக,கற்பிக்க கற்பிக்கத்தான் தெரிந்தது எது தெரியாதது எது என்பது தெரியும். ஆசிரியராக முதன் முதலில் சேர்ந்து பணியாற்றிய அனுபவத்தை " கல்விக்காக அரசு எல்லாவிதமான வசதிகளையும் செய்து கொடுத்துக்கொண்டுதான் இருந்தது.அதை நன்றாகப் பயன்படுத்த வேண்டியதுதான் இருந்தது.அதைச்செய்தோம்.வகுப்பில் பாடம் கற்பிக்கும்போதுதான் ஆசிரியர்களாகிய எங்களுக்கு என்ன தெரியவில்லை என்பதைத் தெரிந்துகொண்டோம் .அதாவது கற்பிப்பதுதான் பாடப்பகுதியிலும் சரி,மாணவர்களைக் கையாளுவதிலும் சரி,எங்களுக்கு இருந்த குறைபாடுகளைத் தெரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருந்தது.இந்தக் குறைகளைச் சரி செய்வதற்கு ,தவறு இல்லாமல் செய்வதற்கு ,ஆலோசனைகள் பெறுவதற்கு வாய்ப்புகள் இல்லாமல்தான் இருந்தது. நம்மை நாமே மாற்றிக்கொண்டால்தான் உண்டு என்ற நிலைதான் இருந்தது " என்றார்.

அன்றைய காலகட்டத்தில் 1960-களில் ஓர் அரசுப்பள்ளியில் தலைமை ஆசிரியருக்கு இருந்த அதிகாரம் எவ்வளவு?...அவர் சொன்ன சில தகவல்கள் வியப்பாக இருந்தது..அடுத்த கட்டுரையில் பார்ப்போம் அதனை...



(குறிப்பு : பண்ணைக்காட்டைச்சார்ந்த ,திரு.வீ.வீரிசெட்டி சாரின் பழைய மாணவர்களுக்கு இன்றைக்கு 78,80 வயது இருக்கும் ...இந்தப் பதிவைப் பார்க்கின்ற பண்ணைக்காட்டைச்சார்ந்த தோழர்கள்,நண்பர்கள் 78-80 வயதினைச்சார்ந்தவர்கள் யாரேனும் வீரிசெட்டி சாரின் பழைய மாணவர்கள் பண்ணைக்காட்டிலோ அல்லது வேறு ஊரிலோ இருக்கிறார்களா என்பதனை விசாரித்து ,இருந்தால் அவர்களிடம் கேட்டு,அவர்களின் நினைவுகளையும் பின்னோட்டமாக இந்தப் பதிவில் பதிவிடக் கேட்டுக்கொள்கின்றேன்).


Saturday, 25 March 2023

அனுபவத்தால் மாற்றியவரின் அனுபவங்கள் (2) --- வா. நேரு

 

                                   வேலை கிடைத்து வேலையில் சேராமல் திரும்பி வந்தேன்...


இந்தக் கட்டுரைகளின் நாயகர் திரு.வி.வீரி சார் அவர்கள் இப்போது இல்லை.2022,நவம்பர் 24-ஆம் நாள் கற்றுக்கொடுப்பதை நிறுத்திக்கொண்டார்.கடந்த 22,23 ஆண்டுகளாக ஒரு நெருங்கிய நண்பரைப்போல பழகி அறிவுரைகள் கூறி ஆற்றுப்படுத்தியவர் அவர். மதுரை தல்லாகுளம் தொலைபேசி நிலையத்தில் நான் வேலைபார்த்தபோது,அவரைப் பெரும்பாலும் வேலை நாட்களில் எல்லாம் சந்தித்திருக்கிறேன். மதுரை தல்லாகுளம் மைதானத்திற்கு அருகில் உள்ள கருப்பசாமி கோயில் என்பது மிகப்புகழ் பெற்றது. காலை 11 மணி அளவில் அங்கு கூட்டம் எதுவும் இருக்காது. உட்காருவதற்கு ஒரு நல்ல திண்ணை இருக்கும்.மாவட்ட கல்வி அதிகாரியாக(CEO) இருந்து ஓய்வு பெற்றாலும்,ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு என்று ஓர் அமைப்பு ஏற்படுத்தி அதில் அவர் பொறுப்பிலும் இருந்தார்.அவரோடு தலைமை ஆசிரியராகப் பணியாற்றியவர்கள்,ஆசிரியராகப் பணியாற்றியவர்கள்,அவரோடு பேச விரும்புகிறவர்கள் என்று எல்லோரும் காலையில் 11 மணிக்கு கருப்பசாமி கோயில் திண்ணை அருகில் கூடுவார்கள். நானும் தேநீர் குடிக்க கிடைக்கும் இடைவேளையில் அல்லது மதியம் 1 மணிக்கு சாப்பாட்டு இடைவேளையில் அவரைப் போய்ப் பார்ப்பேன்.பேசுவேன். நாத்திகனான நான் கருப்பசாமி கோயில் திண்ணையில் அவரோடு உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து சில நண்பர்கள் கேலி செய்திருக்கிறார்கள். அப்போதுதான் அவர் நிறையப்  புத்தகங்கள் படிப்பவர் என்பது தெரியவந்தது.நானும் தோளில் போட்டிருக்கும் ஒரு பையில் பெரும்பாலும் புத்தகங்கள் இருக்கும்.கொஞ்ச நாட்களில் நானும் அவரும் அவரவர் புத்தகங்களைப் பரிமாறக்கொள்ள ஆரம்பித்தோம்.


2000 ஆண்டுகளில் அவருக்கு வயது 60-தைத் தாண்டி இருந்தது.எனக்கு 36 வயது.நான் இருசக்கர வாகனம் வாங்கி அலுவலகத்திற்கு வர ஆரம்பித்திருந்தேன்.அவர் சைக்கிளில்தான் வருவார்.அவர் கருப்பசாமி கோயில் திண்ணையில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கும் நிலையில் அவரின் சைக்கிள் ஓரமாக இருக்கும்.ஒரு நாள் சைக்கிள் இல்லாமல் பஸ்ஸில் போகப்போகிறேன் என்றார். ஏன் சைக்கிள் ரிப்பேரா சார் என்றபோது. " இல்லை நிறுத்தி வைத்திருந்தேன்,யாரோ எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள்.சரி,இல்லாதவன்தானே,எடுத்துப்போயிருப்பான்,விடுங்கள் " என்று சொல்லிவிட்டு கொஞ்ச நாளில் புது சைக்கிள் வாங்கி சைக்கிளில் வர ஆரம்பித்தார். அவர் ஆரோக்கியமாக இருந்த காலம்வரை,ஏறத்தாழ அவரின் 75,76 வயதுவரை மதுரையில் சைக்கிளில்தான் பயணம் செய்தார்.வெள்ளை வேட்டி,வெள்ளை சட்டை,சட்டைக் காலருக்குப் பின்னால் ஒரு கைக்குட்டை.ஒரு சைக்கிள் இதுதான் அவரின் அடையாளம்.


ஒரு முறை "சார், நீங்கள் ஆசிரியர் பணிக்குத்தான் வரவேண்டும் என்று சின்னப்பிள்ளையாக இருக்கும்போதே நினைத்தீர்களா?" என்று கேட்டேன். " இல்லை " என்றார். ஆசிரியர்கள் பணிக்கு வருபவர்கள் எல்லாம் ஆசிரியர் பணிக்குத்தான் வரவேண்டும் என்று படித்தவர்கள் இல்லை.எனது இலட்சியம் ஆசிரியர் பணிதான் என்று வரித்துக்கொண்டவர்கள் இல்லை.ஏதேனும் ஒரு பணிக்கு,வேலைக்கு என்றுதான் படிக்கின்றார்கள்.ஆனால் உலகத்திலேயேமிக உயர்ந்த பணியான ஆசிரியர் பணிக்கு வந்தபிறகு அந்தப் பணிக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொண்டவர்கள், வடிவமைத்துக் கொண்டவர்கள், மாணவர்களின் நலனில் உண்மையான அக்கறை காட்டித் தங்களை மாற்றி ஆசிரியர் பணிக்கு,மாணவர்களின் நலனுக்குத் தங்களை ஒப்படைத்துக்கொண்டவர்கள் என்றென்றும் மாணவர்கள் மனதில் நிற்கின்றார்கள்.அப்படித்தான் எனது தலைமை ஆசிரியர் திரு.வி.வீரி சாரின் வாழ்க்கையும் இருந்திருக்கிறது.அவர் பணிக்கு வந்த காலம் 1960.நான் எல்லாம் பிறக்காத காலம்.தொலைபேசிகள் கூட இல்லாத,தகவல் தொடர்புகளே இல்லாமல் இருந்த காலம். தான் படித்த மதுரை தியாகராசர் கல்லூரியை நிறையப் புகழ்ந்து பேசுவார்.தன்னைப் போன்று கிராமத்திலிருந்து வந்தவர்களுக்கு அறிவுக் கதவு திறக்கக் காரணம் அந்தக் கல்லூரிதான் என்பார்.அந்தக் கல்லூரியில் இருந்த பேராசிரியர்கள் பற்றியெல்லாம் நிறையச்சொல்வார்.


 பேரறிஞர் அண்ணா, நாவலர் நெடுஞ்செழியன்,பேராசிரியர் அன்பழகன் போன்ற பெரும் தலைவர்கள் எல்லாம் தான் படித்த நேரத்தில் ,தங்கள் கல்லூரியில் வந்து பேசிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வார். பெரும் பெரும் காங்கிரசு தலை வர்களும் அந்தக் கால கட்டத்தில் தங்கள் கல்லூரியில் வந்து பேசியதை எல்லாம் நினைவு வைத்துக் கூறுவார்.அந்தக் கல்லூரியின் நூலகத்தை எப்படியெல்லாம் தான் பயன்படுத்தினேன் என்பதைப் பற்றி எல்லாம் அடிக்கடி என்னோடு பேசிய நேரங்களில் குறிப்பிடுவார்.


1960-களில் வேலை வாய்ப்பு எல்லாம் எப்படி இருந்தது. எளிதாக இருந்ததா என்று ஒருமுறை கேட்டேன்.அதற்கு அவர் அளித்த பதிலை அவருடைய சொற்களிலேயே படியுங்கள்." வணக்கம். நான் கல்லூரிப் படிப்பை முடித்து வெளியே வந்தபொழுது பொதுவாக ஏதேனும் ஓர் அரசுப்பணி கிடைக்குமா? என்ற தேடல்தான் இருந்தது.தற்போது உள்ளது போலவே மருத்துவம், பொறியியல், விவசாயம், தொழிற்கல்வி முறை போன்ற பிரிவுகள் அன்றும் இருந்தன.அது போக வேறு என்னென்ன பணிகள் உள்ளன என்ற பொதுஅறிவு கூட எங்களுக்குத் தெரியாது.தேடிப்பிடித்து  பல பெரியவர்களை அணுகி நாம் அரசுப்பணிக்கு செல்ல நாம் செய்யவேண்டிய வேலைகள் என்ன என்ன என்பதனை அறிந்து அரசு இளநிலை உதவியாளர் பணிக்குத் தேர்வு எழுதினேன்.அதில் வெற்றியும் பெற்றேன்.கோவை மாவட்ட ஆட்சி அலுவலகத்தில் பணி வழங்கப்பட்டிருந்தது.நான் 1960-ல் பணியில் சேரச்சென்றபோது அப்போது அங்கு பணியாற்றிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் நான் ஒரு பட்டதாரியாக இருப்பதைக் கண்டு எனக்கு அறிவுரை கூறினார்."பட்டதாரிகளுக்கு உரிய வேலை இது இல்லை.நீங்கள் தொடர்ந்து படியுங்கள்.மேலும் முன்னேறி வரவேண்டும்.கல்லூரிப் படிப்பு வீணாகக் கூடாது " என்று கூறி என்னை அனுப்பி விட்டார். நானும் வந்து விட்டேன்".

உண்மையிலேயே 1960-ல் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தவருக்குத்தான் என்னைப் போன்ற வி.வீரி-சாரிடம் படித்த மாணவர்கள் எல்லோரும் நன்றி சொல்லவேண்டும். அவர் இவரைத் திருப்பி அனுப்பாவிட்டால், ஓர் அருமையான ஆசிரியர்,தலைமை ஆசிரியர் எங்களைப் போன்றவர்களுக்கு கிடைத்திருக்க மாட்டார்."வேலையில் சேராமல் திரும்பி வந்தீர்களா? ": வீட்டில் திட்ட வில்லையா?..மற்றவர்கள் ஒன்றும் சொல்லவில்லையா?மறுபடியும் ஒரு வேலை கிடைப்பது கடினம் என்று நீங்கள் நினைக்கவில்லையா ? " என்று தொடர்ந்து பல கேள்விகளை அவரிடம் கேட்டேன்.படிக்கும் காலத்தில் அவரிடம் கேட்ட கேள்விகளை விட மதுரைக்கு பணிக்கு வந்த பின்பு கேட்ட கேள்விகள் அதிகம். அவரின் பதில் அடுத்த கட்டுரையில்...

Tuesday, 21 March 2023

என்ன செய்யும் கவிதை?

 என்ன செய்யும் கவிதை?

எதை எதையோ செய்யும்...


"இருட்டில் வாங்கினோம்

இன்னும் விடியவே இல்லை" ..

எதார்த்தத்தை ஒரு சில 

வரிகளில் போட்டுடைத்து செல்லும்...


"எல்லாந்தான் படிச்சீங்க..

என்ன பண்ணி கிழிச்சீங்க..."

எனப் படித்தவனை

நார் நாராய்க் கிழிக்கும்...


மானே என்றாய் தேனே என்றாய்

மனுசி என்று எப்படா

எங்களை நினைக்கப்போறீங்க...?

என்று கோபத்தை எல்லாம்

கொட்டித் தீர்க்கும்...


"மனுசங்கடா நாங்க மனுசங்கடா

உன்னைப் போல அவனைப்போல

மனுசங்கடா நாங்க மனுசங்கடா"

என மண்டையில் அடிக்கும்....


கறுப்பு உயிர்களும் உயிர்களே

இயக்கத்து தோழிகள்

கொட்டித் தீர்த்தார்களே...

பல நூற்றாண்டுக் கோபத்தை

எல்லாம்  கவிதைகளாக..

உலகம் முழுக்க பரவ வைத்தார்களே

அப்படிப் பரவவைப்பது கவிதை..

புரட்சியைப் பற்றவைப்பது கவிதை...


காதலை எழுதுவது மட்டும் கவிதையல்ல

உள்ளத்துக் கனலை எழுதுவது கவிதை

ஆர்ட்டீசியன் ஊற்று போல

அடக்குமுறைகளுக்கு எதிராக

பொங்கி வருவது கவிதை....

உணர்ச்சிகளை சொற்களுக்குள் செலுத்தி

வாசிப்பவனின் மனதில்

கருத்து வெடிகுண்டுகளை 

வெடிக்கச்செய்வது கவிதை...


உலகத்து கவிதைகளை 

எல்லாம் வாசிப்போம்...

அடக்குமுறைகளுக்கு எதிராக

ஆர்த்தெழுந்து கவிதையெழுதும்

கவிஞர்களை என்றும் நேசிப்போம்...

உலகக் கவிதை நாள் வாழ்த்துகள்..


                           வா.நேரு,

                            21.03.2023


Sunday, 19 March 2023

உலகக் கவிதை நாளும் திராவிட இயக்கமும் – முனைவர் வா.நேரு

 உலகம் முழுவதும் கவிதையைக் கொண்டாடும் நாளாக மார்ச் 21- கடைப்பிடிக்கப்படுகிறது. மார்ச் 21 உலகக் கவிதை நாள் என்று 1999-ஆம் ஆண்டு யுனெஸ்கோ அறிவித்தது. அந்த ஆண்டு முதல் மார்ச் 21 என்பது கவிதையை வாசிக்க, எழுத, வெளியிட ஊக்கம் அளிக்கும் நாள் என உலக முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.



கவிதையை உருவாக்க ஒரு தேவையும் நோக்கமும் வேண்டும். ஆம், “எல்லோருக்கும் எல்லாம்” என்பதே திராவிட இயக்கத்தின் நோக்கம்.. அந்த நோக்கத்தை அடையத் தேவை ஜாதி ஒழிந்த, பெண்ணடிமைத்தனம் ஒழிந்த சமத்துவ சமுதாயம் ஆகும். அந்த சமத்துவ சமுதாயத்தை அடைவதற்குத்தான் தந்தை பெரியார் தன் வாழ்நாள் எல்லாம் உழைத்தார்.. தந்தை பெரியாரின் வழிவந்த தொண்டர்கள், தலைவர்கள் எல்லாம் அந்த நோக்கத்திற்காக உழைத்தனர்; உழைக்கின்றனர்.

ஒரு நோக்கத்திற்காக உழைப்பவர்களுக்கு கையில் இருக்கும் மிகப்பெரிய ஆயுதம் கவிதை.கவிதை இசையோடு அமைந்த பாடலாக உருவெடுக்கும்போது எளிய மனிதர்களின் மனங்களில் ஊடுருவுகிறது.இசையில்லை என்றாலும் கூட மீண்டும் மீண்டும் கவிதை வரிகளை நாம் சொல்கிறபோது மனதிலே உணர்ச்சி எழுகிறது; எழுச்சி உருவாகிறது.அந்த வகையில் திராவிட இயக்கத்தின் முதன்மைக் கவிஞர் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஆவார்கள்.

எல்லோரும் கவிதைக்குப் பொழிப்புரையாக உரைநடையை எழுதுவார்கள். ஆனால், தந்தை பெரியார் பேசிய உரையை எல்லாம் கவிதையாக மாற்றியவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ஆவார்.

தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புக் கருத்தை, பெண்ணடிமை ஒழிப்புக் கருத்தை,பெண்ணுக்கு கல்வி வேண்டும் என்னும் கருத்தை, விதவை மறுமணம் வேண்டும் என்னும் கருத்தை, நாத்திகத்தின் கடைசி எல்லை பொதுவுடைமை என்னும் கருத்தை எல்லாம் கவிதைகளாகப் படைத்துக் கொடுத்தவர் புரட்சிக் கவிஞர் ஆவார்.நூறு ஆண்டுகளைக் கடந்து நடைபோடும் திராவிட இயக்கப் பேச்சாளர்கள் ஊர்தோறும் முழங்கிய கவிதைகள் புரட்சிக் கவிஞரின் கவிதைகள். 90 வயதில் 80 ஆண்டுகள் பொது வாழ்க்கைக்குச் சொந்தக்காரரான திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் அனைத்து உரைகளிலும் புரட்சிக் கவிஞரின் கவிதை வரிகள் இன்றும் இடம் பெறுவதைக் காண்கின்றோம்.

புரட்சிக் கவிஞரின் நேரடி மாணவனாக,அவரிடம் கல்வி பயின்றது மட்டுமல்லாது, கவிதையையும் பயின்றவர் கவிஞர் வாணிதாசன்.ரங்கசாமி என்னும் இயற்பெயர் கொண்ட வாணிதாசன் புரட்சிக் கவிஞரைப் போலவே இயற்கையைப் பற்றிப் பாடியவர்.வாணிதாசன் கவிதைகள் என்னும் தொகுப்பு இயற்கையைப் பாடி பெரும் புகழ் பெற்ற நூல். அதனாலேயே ‘தமிழ் நாட்டின் வேர்ட்ஸ்வெர்த்’ என்று அறிஞர்களால் பாராட்டப்பட்டவர் வாணிதாசன். பகுத்தறிவையும் இயற்கையையும் பாடிக் குவித்த கவிஞர் வாணிதாசன்.

புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கவிதைகளில் உவமைகளுக்குப் பஞ்சமே இருந்தது இல்லை. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்களின் இயற்பெயரான கனக சுப்புரத்தினம் என்னும் பெயரைச் சுருக்கி சுரதா (சுப்புரத்தினதாசன்) எனப் புனை பெயர் வைத்துக்கொண்ட இராசகோபாலன் அவர்கள் உவமைக் கவிஞர் சுரதா என்றே அழைக்கப்பட்டார்.கொட்டும் அருவி போல கவிதைகளுக்குள் உவமையையும் உருவகத்தையும் வைத்துப் பாடியவர் சுரதா.பகுத்தறிவையும் சாதி ஒழிப்பையும் மிகச்சிறப்பாக பாடியவர்.

 

டாக்டர் கலைஞர் அவர்கள் கட்டடங்-களுக்குள் நடத்தப்பட்ட கவியரங்குகளை ஆயிரக்கணக்கான மக்களின் மத்தியில் தெருவில் நடத்தியவர்.
‘பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம் / ஈரோட்டுப் பூகம்பத்தால் இடியுது பார்…” எனப் பாடியவர்.
இதைப்போல கவிஞர் கருணானந்தம்,புலவர் குழந்தை, கவிஞர் வேழவேந்தன்,புலவர் புலமைப்பித்தன், கவிஞர் குலோத்துங்கன் எனப் பல கவிஞர்கள் நம் கண்முன்னே வருகின்றனர்.கவிதையைப் படைத்து பகுத்தறிவுப் பாய்ச்சலுக்கு வழிவகுத்த, வழி வகுக்கும் பல கவிஞர்களை திராவிட இயக்கம் தந்து கொண்டே இருக்கிறது.

இன்றைக்கு திராவிடர் கழகத்தின் துணைத்-தலைவர் அய்யா கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களின் கவிதை ‘‘ஆடுமயிலே! பாடு குயிலே! அறிவு பிறந்தது ஈரோடு என்று’’ தமிழ்நாட்டின் தெருக்கள் தோறும் இசைப்பாடல்களாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.
மரபுக் கவிதைகள் வழியாக மட்டுமல்ல, புதுக்கவிதைகளில் வழியாகவும் திராவிட இயக்கத்தைச் சார்ந்தோர் கவிதைகளைப் படைத்துப் பரப்பிக் கொண்டுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி கருணாநிதி, கவிஞர் சல்மா, நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்,ம.வீ.கனிமொழி போன்றோர் அற்புதமான நவீனக் கவிதைகளைப் படைக்கின்றனர். கவிஞர் கலாப்பிரியா, கவிஞர் கவிதைப் பித்தன்,கவிஞர் ஈரோடு தமிழன்பன் என இன்று கவிதை படைக்கும் திராவிட இயக்கக் கவிஞர்களின் பட்டியல் பெரியது.

அண்மையில் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்கள் கடலைப் பார்த்துக்கொண்டு அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் மிக அதிக அளவில் பகிரப்-பட்டது.அந்தப் படத்தைப் பார்த்து கவிதை எழுதச்சொல்லி பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக போட்டி வைக்கப்பட்டது.உலகின் பல பகுதிகளில் இருந்தும் கவிதைகள் எழுதி அனுப்பினர்.மகிழ்ச்சியாக இருந்தது.

“நாட்டில் இலக்கியங்கள் இருந்தால் அதுநாகரிகத்திற்கு ,அறிவு வளர்ச்சிக்கு ,புரட்சிக்கு, முற்போக்கு மாறுதலுக்கு உதவிடவேண்டும்” என்றார் தந்தை பெரியார். (விடுதலை 3.9.96). கவிதை என்பது கூர்வாள் போன்றது. எளிதில் அறியாமையைக் கிழித்து அகற்றி விடும் தன்மை கொண்டது.சில வரிகளில் பெரும் கருத்துகளை மனிதர்களிடத்தில் பரப்ப வல்லது. மீண்டும் மீண்டும் மனிதர்கள் தனக்குத்தானே சொல்ல வைக்கும் ஆற்றல் மிகுந்தது.

இணையம் இன்றைக்கு பலருக்கும் கவிதையை வெளிப்படுத்தும் ஊடகமாக இருக்கிறது. ஜாதி ஒழிப்பு குறித்தும்,பெண் உரிமை குறித்தும் கவிதைகள் நிறைய வருகின்றன.உலகம் முழுவதும் இருக்கும் பெண்கள் கவிதைகள் படைக்கின்றனர். உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நேஹா சிங்ரத்தோர் போன்ற படைப்பாளிகள், கவிதைகளைப் படைத்து,இசை அமைத்து பாடி இந்துத்துவ அரசுக்கு மிகப்பெரும் பயத்தைக் கொடுக்கின்றனர். இசையும் கவிதையும் இணையமும் இணைந்து எளிய மக்களின் உணர்வை, வேதனையை உலகெங்கும் விதைக்கின்றன.

கவிதை என்பது சிறு உளியைக் கொண்டு பெரும் மலைகளை உடைக்கும் சாதனம்.எனவே, மார்ச்21 உலகக் கவிதை நாளைக் கொண்டாடும் அதே நாளில் திராவிட இயக்கக் கவிஞர்களை நினைவில் கொள்வோம். அவர்களின் கவிதைகளை மனதில் கொள்வோம்.கவிதைகளைப் படைப்போம்.

நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் மார்ச் (16-31)-2023


திராவிட இயக்கக் கவிஞர் பொன்னிவளவன் அவர்கள்..விளக்கம் கமெண்ட் காலத்தில் பார்க்க...





Wednesday, 15 March 2023

வாருங்கள் நண்பர்களே,வாருங்கள் தோழர்களே

 அன்னை மணியம்மையார் அவர்களின் நினைவு நாள் இன்று.தனக்காக வாழாமல் தந்தை பெரியாருக்காகவும் ,திராவிடர் கழக இயக்கத்திற்காகவும் தன் வாழ்வை அர்ப்பணித்து மறைந்த பெருந்தகையின் நினைவு நாள் இன்று.அம்மையார் அவர்களின் நினைவைப் போற்றி வணங்கி அவர்களை நினைவு கூறுவோம்.நாளை மாலை 6.30 மணிக்கு இணைய வழியாக நடைபெறும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற நூல் ஆய்வரங்கக் கூட்டத்தில் தோழர் வழக்கறிஞர் அருள்மொழி அவர்கள் தோழர் ஓவியா அவர்கள் எழுதிய 'கருஞ்சட்டைப்பெண்கள் ' என்னும் புத்தகம் பற்றிப் பேசுகிறார்.அந்தப் புத்தகத்தில் மிகச்சிறப்பாக கருஞ்சட்டை அணிந்து அந்தக் காலகட்டங்களில் களத்தில் நின்ற முன்னோடிகள் பற்றியும் குறிப்பாக அன்னை ம்ணியம்மையார் அவர்கள் பற்றியும் மிகச்சிறப்பாக தோழர் ஓவியா அவர்கள் பதிவு செய்திருப்பார்.தன்னுடைய நாவன்மையால் எதிரிகளையும் தன்பக்கம் ஈர்க்கும் சொல்வன்மை மிக்க சோர்விலா வழக்கறிஞர் தோழர் அ.அருள்மொழி அவர்களின் சீரிய உரை வழியாக அந்த நூல் பற்றி அறிய ஓர் வாய்ப்பு.இந்த நிகழ்விற்கு பெரியார் பன்னாட்டு அமைப்பினைச்சார்ந்த அம்மா மருத்துவர் சரோஜா இளங்கோவன் அவர்கள் தலைமை ஏற்று உரையாற்ற இருக்கிறார்.வாருங்கள் நண்பர்களே,வாருங்கள் தோழர்களே...அழைக்கின்றது பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.



Thursday, 2 March 2023

அனைத்துலக பெண்கள் நாள் மார்ச் 8 – முனைவர் வா.நேரு

 பெண்மக்கள் அடிமையானது ஆண் மக்களாலேயேதான் ஏற்பட்டது என்பதும், அதுவும் ‘ஆண்மை’யும் ‘பெண் அடிமையும் ‘கடவுளாலேயே ஏற்படுத்தப்பட்டதாக எல்லா ஆண்களும் கருதிக்கொண்டு இருக்கிறார்கள் என்பதும், அதோடு பெண் மக்களும் இதை உண்மையென்றே நினைத்துக் கொண்டு வந்த பரம்பரை வழக்கத்தால், பெண் அடிமைக்குப் பலம் அதிகம் ஏற்பட்டிருக்கின்றது என்பதும், நடு நிலைமைப் பெண்களுக்கும் ஆண்களுக்கும் யோசித்துப் பார்த்தால் விளங்காமல் போகாது’’ என்றார் தந்தை பெரியார். (“குடி அரசு’’ 22-.12-.1929)



தந்தை பெரியாரின் சொல்லாடலைக் கவனியுங்கள்.தந்தை பெரியாரின் மேற்கண்ட உரைக்கு விளக்கம் கொடுப்பது போல் அண்மையில் வெளி வந்திருக்கும் ‘அயலி ‘என்னும் இணைய வலைத் தொடர் (திரைப்படம்) அமைந்திருக்கிறது.ஏறத்தாழ 4 மணி நேரம் ஓடும் இந்த வலைத்தொடர், பெண்கள் கல்வி கற்பதை எப்படி ஒரு கடவுள் நம்பிக்கை தடுக்கிறது என்பதைக் காட்டுகிறது. கிராமம், கிராமச் சொல்லாடல், கிராமக் கோயில் என்ற பெயரில் இருக்கும் கட்டுப்பாடுகள், பெண் கல்விக்குத் தடையாக இருக்கும் உளவியல் காரணங்கள் எனப் பல கோணங்களைப் பேசுகிறது இந்த ‘அயலி’.


பெண்களுக்கு இயற்கையாக ஏற்படும் முதல் முறை மாதவிடாய் என்பது பெண்களின் கல்வியைத் தடுக்கும் காரணியாக எப்படி மாற்றப்படுகிறது என்பதையும்,கடவுள் கட்டளை என்னும் பெயரால் நடக்கும் இளம் வயது திருமணங்களையும், அதனால் வாழ்நாள் முழுவதும் துன்பப்படும் இரண்டு தலைமுறைப் பெண்களையும் எதார்த்தமாக எடுத்துக்காட்டுகிறது.


கடவுளின் பெயரால் ஏற்படுத்தப்பட்ட புனிதம், புடலங்காய் எல்லாம் எப்படி விழிப்புணர்வு பெற்ற ஒரு பெண்ணால் தூள் தூளாகிறது என்பதுதான் ‘அயலி’ சொல்லும் செய்தி. கல்வி என்பது எவ்வளவு அவசியம் என்ற புரிதல் இருந்தால் முன்னேறுவதில் இருக்கும் தடைகளைப் பெண்களால் தகர்க்க முடியும் என்பதை இந்த ‘அயலி’ மிக அழகாகக் காட்டுகிறது.. ‘உன் அறிவுக்கு எது சரி என்று படுகிறதோ அதைச் செய்’ என்னும் தந்தை பெரியாரின் கருத்து அழுத்தம் திருத்தமாகச் சொல்லப்படுகிறது.தந்தை பெரியாரும் திராவிட இயக்கமும் தொடர்ச்சியாகச் சொல்லிவரும் பெண் கல்வி ஏன் தேவை என்பதை மிகச்சிறப்பாக காட்டியிருக்கிறார்கள். இப்படிப்பட்ட தொடர்கள், தந்தை பெரியாரின் கருத்தை அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் ‘அயலி’ போன்றவை தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு பெண்ணையும் எட்டுவது மட்டுமல்ல, இந்தத் தொடர் போன்றவை இந்தி மற்றும் வடமாநில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் பரப்பப்படவேண்டும். பல நாடுகளின் மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு உலகம் முழுவதும் இருக்கும் பெண்களைச் சென்றடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் பெண்களுக்கு, தங்கள் விடுதலைக்கான விடை என்பது எதில் இருக்கிறது என்பது புரியும்.


மதுரை லேடி டோக் பெருமாட்டி கல்லூரியின் 75ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, அந்தக் கல்லூரியின் தமிழ் உயராய்வு நடுவத்தின் வேயாமுற்றம் சார்பாக, நாடகப் பேராசிரியரும், ‘கலகக்காரர் தோழர் பெரியார்’ நாடகத்தை தமிழ்நாடு எங்கும் நடத்திய தோழருமான மு.இராமசாமி அவர்களின் எழுத்து-நெறியாளுகையில் ‘பெண் ஏன் அடிமையானாள்:’ -‘கலகக்காரர் தோழர் பெரியார் 2’ என்னும் நாடகம் 15.02.2023 ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த நாடகத்தை பேரா.சுப.வீரபாண்டியன் அவர்கள் தொடங்கி வைத்தார். அந்த நாடகத்தில் நடித்தவர்கள் அனைவருமே அந்தக் கல்லூரியின் மாணவிகள். சுமார் ஒன்றரை மணி நேரம் நடைபெற்ற இந்த நாடகத்தில் நடித்த 25 பேரும் கருப்பு உடை அணிந்து நடித்தனர். இந்த நாடகத்தின் தொடக்க விழாவிற்கு அழைப்பின் பேரில் நான் நேரில் சென்று கலந்து கொண்டபோது வியப்பின் உச்சிக்கே சென்றேன். தந்தை பெரியாரின் கருத்துகளை எப்படி அந்தக் கல்லூரியின் மாணவிகள் உள்வாங்கி நடித்தார்கள் என்பது மட்டுமல்ல, தந்தை பெரியாரின் கருத்துகளை நாடகத்தில் நடித்த பெண்கள் பேசியபோது, பார்வையாளர்களாக இருந்த மாணவிகள் தரப்பில் இருந்து எழுந்த கைதட்டல், உற்சாகம், அவர்களின் உணர்ச்சிமயமான ஈடுபாடு உண்மையிலேயே கலந்துகொண்ட நம்மைப் போன்றவர்களுக்கு இன்ப அதிர்ச்சியைக் கொடுத்தது.


இந்த நாடகம் பெண் இன்று எப்படி குடும்ப வன்முறைக்கு ஆளாகிறாள்? எப்படி வளர்ப்பிலேயே பெண் குழந்தைக்கும் ஆண்குழந்தைக்கும் பாகுபாடு காட்டப்படுகிறது? மனு நீதி சுலோகங்கள் எப்படியெல்லாம் பெண்களை இழிவுபடுத்துகிறது? ஒரு பெண் எப்படி தந்தை, கணவன், மகன் ஆகியோருக்குக் கட்டுப்பட்டு வாழவேண்டும் என்பது வலியுறுத்தப்படுகிறது? என்பதை எல்லாம் மிக விளக்கமாக அப்படியே _ நடப்பவற்றை கண்முன்னே காட்சிப்படுத்தி_ அந்தக் கல்லூரிப் பெண்கள் நடித்துக் காட்டினார்கள்.


1929- செங்கல்பட்டில் நடந்த முதல் சுயமரியாதைப் பெண்கள் மாநாட்டிற்கு தந்தை பெரியார்,’ தனித்து வாழும் பெண்கள், விதவைகள், விபசாரி என்று அழைக்கப்படும் பெண்கள் _ இவர்கள் எல்லாம் கலந்து கொள்ள வேண்டும்’ என்று விடுத்த அழைப்பு, அதனுடைய முக்கியத்துவம், அந்தக் காலகட்டத்தில் அது எப்பேர்ப்பட்ட மனித நேய அழைப்பு என்பதையெல்லாம் நடித்துக் காட்டினார்கள்.


விதவை மறுமணம், ஜாதி மறுப்புத் திருமணம், சுயமரியாதைத் திருமணம் என்று தந்தை பெரியார் நடத்திக் காட்டிய திருமணங்களின் சிறப்பைப் பட்டியலிட்டு அந்தப் பெண்கள் உணர்ச்சிகரமாக நடித்துக் காட்டினார்கள். பெண் எப்படி அடிமையானாள் என்பதை வரலாற்றின் அடிப்படையில் ராகுல சாங்கிருத்தியாயன் எழுதிய ‘வால்கா முதல் கங்கை வரை’ புத்தகத்தை வைத்துப் பெண்கள் பேசி விளக்கினார்கள். ’பொம்பளை சிரிச்சா போச்சு’ என்ற பழமொழிக்கு மாற்றாக நாடகத்தில் அடிக்கடி ஒரு பெண் வெடிச்சிரிப்பு சிரித்து’ இந்த ஆம்பளைங்க நம்மளை அடிமைப்படுத்துறதுக்கு இந்தக் கம்பி கட்டுற கதை எல்லாம் எப்படி எப்படி சொல்லி வச்சிருக்கானுங்க, பாரு‘ என்று பேசியபோது அரங்கத்தில் எழுந்த கைதட்டல் அடங்க வெகு நேரம் ஆனது.


இந்த நாடகம் அந்தக் கல்லூரியில் பல்வேறு கல்லூரி மாணவ-மாணவியர்களுக்காகத் தொடர்ந்து 6 முறை அரங்கேற்றப்பட்டது. பொது

மக்களுக்காக என்று ஒரு முறை அரங்கேற்றப்-பட்டது. ஆயிரக்கணக்கான மாணவ_ -மாணவியர் கலந்து கொண்டு பார்த்து, பெரியாரியலைப் பற்றியும்,, பெரியாரியப் பார்வையில் பெண்ணிய விடுதலையைப் பற்றியும் உள்வாங்கிய நிகழ்வாக இந்த நாடக நிகழ்வு அமைந்தது.

மதவாதிகள் ஒரு பக்கம் இன்னமும் ‘சொர்க்கம்- நரகம் ‘என்னும் கற்பிதங்களை வைத்து பெண்களை அடக்க முயற்சி செய்து கொண்டே இருக்கிறார்கள்.தொலைக்காட்சித் தொடர்களில் மூட நம்பிக்கைகளைப் புகுத்தி பெண்களை இன்னமும் அடிமைத் தனத்தில் வைத்திருக்க பெரும் முயற்சி செய்கிறார்கள். இன்னொரு பக்கம் பெண்கள் தங்கள் விடுதலைக்கான விடைகளை பெரியாரின் வழி நின்று சிந்திக்கவும், பேசவும், செயல்படவும் தொடங்கி இருக்கிறார்கள்.அதற்கு நாடகம், திரைப்படம்,இணைய வலைத்தொடர்கள் என்று பல்வேறு வடிவங்களை கைகளில் எடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்… மகிழ்ச்சியாக இருக்கிறது.


அனைத்துலக பெண்கள் நாள் – மார்ச் 8 என்பது, கடவுள் என்னும் பொய்மையை பெண்கள் கட்டுடைத்து வெளிவர வேண்டிய நாள்! மதம் என்பது பெண்களை ஒடுக்குவதற்காக மிகத் திட்டமிட்டு, ஆண்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு கருவி.


மதம் என்பது நம்மை ஒடுக்கும் கருவி என்பதைப் பெண்கள் புரிந்து கொள்ள உதவும் நாளாக இந்த அனைத்துலக பெண்கள் நாள் அமையவேண்டும்.


நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் மார்ச் 1-15,2023,