Saturday, 7 June 2025

அறிவு முதலீடு- முனைவர் வா.நேரு

 



அனுபவங்கள்தான் புத்தகங்கள் ஆகின்றன. ஒவ்வொரு நூலுக்குள்ளும் ஓராயிரம் அனுபவங்கள் புதைந்து கிடக்கின்றன.ஆயிரக்கணக்கான புத்தகங்கள் இருக்கும் நூலகங்களுக்குள் நுழைந்து, நாம் அங்கிருக்கும் புத்தகங்களை வாசிக்க ஆரம்பிக்கும்போது, பல ஆயிரம் பேர்களின் அனுபவங்களை நாம் அறிந்துகொள்ளவும், புரிந்துகொள்ளவும் வாய்ப்புகள் ஏற்படுகின்றன.

அதுவும் திராவிட இயக்க எழுத்தாளர்களின் புத்தகங்கள் எதிர்ப்பில் எழுந்தவை. அறிவில் முகிழ்த்தவை. களத்தில் விளைந்தவை.காலத்திற்கும் அறிவையும் ஆற்றலையும் விதைப்பவை. எனவேதான் திராவிட இயக்க எழுத்தாளர்களின் புத்தகங்களை மறைத்து வைக்கவே நமது பரம்பரை எதிரிகள் அன்றுமுதல் இன்றுவரை
விரும்புகிறார்கள். மறைக்கிறார்கள். ஆனால், நமது தலைவர்கள், நமது திராவிட இயக்கப் புத்தகங்கள் எளியவர்களின் கைகளில் சென்றடைய வேண்டும் என விரும்பினார்கள்,
விரும்புகிறார்கள். ஆதலால்தான், தந்தை பெரியார் காலந்தொட்டு, குறைந்த விலையில் நமது கருத்து நூல்கள் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நட்டம் என்றாலும் பரவாயில்லை என்று அச்சடித்துக் கொடுக்கிறார்கள்.

‘ஞானசூரியன்’ வெளிவந்தவுடன், ‘குடிஅரசு’ இதழில் அதுபற்றி அறிமுகம் வெளியாகியுள்ளது. அவை பின்வருமாறு:

‘‘ஞானசூரியன் என்ற புத்தகம் கானாடுகாத் தான் திருவாளர் வயி.சு.சண்முகம் செட்டியார் அவர்களின் வேண்டுகோளின் பேரில்  சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்களால் எழுதப்பட்டது. இது முழுதும் ஆரியர்களின் வேதம், சாஸ்திரம், புராணம், சாமி என்பவைகளின் புரட்டுகளை வெளியாக்கும் கருத்துக் கொண்டே எழுதப்பட்டதாகும். இதில், பெரும்பாலும் வேதத்திலும் மற்றும் பல ஆரிய ஆதாரங்களிலும் உள்ள சுலோகங்களை எடுத்து எழுதி அவற்றுக்கு ஏற்பட்ட பொருள்களையும் எழுதி அப்படி ஏன் அவர்கள் எழுதி வைத்துக் கொண்டு நம்மை நம்பச் செய்து வருகிறார்கள் என்பதற்கு உள்ள அவ்வாரியர்களின் சூழ்ச்சியும் கெட்ட எண்ணமும் சுயநலமும் பளிங்கு போல் வெளியாக்கப்பட்டிருக்கின்றன.’’ (ஆசிரியர் அவர்கள்,வாழ்வியல் சிந்தனைகள், உலகின் தனித்த புத்தகப் புரட்சி இதோ(3)
– ‘விடுதலை’ 28.04.2025).

சுவாமி சிவானந்த சரஸ்வதி அவர்கள் இந்த நூலில்தான் 16 வருடங்களாக ஆராய்ந்து, இந்தியா முழுவதும்,நேபாளம்,காஷ்மீரம் (அப்போது தனி நாடாக இருந்தது),சிலோன் முதலிய பல தேசங்களுக்குச் சென்று முற்கால, தற்கால வழக்க ஒழுக்கங்களை அறிஞர்களை நேரில் கண்டும் கேட்டும், தமிழர்கள் ஏமாந்து கிடக்கும் தன்மையை அறிந்து இந்த நூலை எழுதியதாகக் குறிப்பிடுகின்றார்.

‘ஞான சூரியன்’ போன்ற 169 புத்தகங்கள் திராவிட இயக்கத்தவர்க்கு அடையாளம் காட்டப்பட்டுள்ளன. ‘ஏப்ரல் 23, உலகப் புத்தக நாளை முன்னிட்டு, 8 நாட்களுக்கு  10% முதல் 50% சிறப்புத் தள்ளுபடியில், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் மற்றும் திராவிடர் கழக(இயக்க) வெளியீடுகள் விற்கப்பட்டன. தந்தை பெரியார், ஆசிரியர் கி.வீரமணி, கவிஞர் கலி.பூங்குன்றன், மஞ்சை வசந்தன் உள்ளிட்ட பலரின் படைப்புகள், 169 புத்தகங்கள் 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் கொடுக்கப்பட்டன.

ரூபாய் 9665 மதிப்புள்ள குடிஅரசு தொகுதிகள் 5000 ரூபாய்க்கும், ரூபாய் 3650 மதிப்புள்ள வாழ்வியல் சிந்தனைகள்-18 தொகுதிகள் ரூபாய் 2500க்கும் இன்னும் பல தொகுப்புகளாகப் புத்தகங்கள் விற்கப்பட்டன.இவையெல்லாம் நமது தோழர்கள் தங்கள் வீடுகளில் நூலகம் அமைக்க வேண்டும் என்னும் அடிப்படை நோக்கத்தில் விற்கப்பட்டவை – விற்கப்படுபவை. திராவிடர் கழகத்துத் தோழன் என்றால் அவரிடம் சில புத்தகங்கள் கட்டாயம் இருக்கும் என்ற நம்பிக்கை தோழமைக் கட்சியினரிடம் இருக்கிறது. அதனை இன்னும் வலுப்படுத்தும் விதமாக இப்படிப்பட்ட விற்பனைகள் அமைகின்றன. எவ்வளவு சிறிய வீடாக இருந்தாலும் நமது இயக்கப் புத்தகங்கள் இருக்கும் சிறிய நூலகம் அந்த வீட்டுக்குள் இருப்பது என்பது நமது தோழரின் வீடு என்பதைப் பறைசாற்றும்.

மதுரைத் தோழர்களில் புத்தகங்கள் மீது அளவற்ற ஆசையும் கவனிப்பும் காட்டுபவர் தோழர் ப.சடகோபன் அவர்கள். பல ஆண்டுகள் மதுரையில் நடமாடும் புத்தக நிலையமாக யாழ் வாடகை நூலகம் வைத்திருந்தவர். தான் படித்த இயக்கப் புத்தகங்களை, மற்ற தோழர்களும் படிக்கவேண்டும் என்பதற்காக நிறைய மெனக்கிடுபவர். சென்னை பெரியார் திடலில் அமைந்திருக்கும் பெரியார் பகுத்தறிவு நூலகம் & ஆய்வகம் வாசலில் ப.சடகோபன் அவர்கள்  அச்சிட்டு வெளியிட்ட, புத்தகங்களை எப்படிப் பாதுகாக்க வேண்டும், பயன்படுத்த வேண்டும் என்னும்  துண்டறிக்கை ஒட்டப்பட்டுள்ளது. அந்தத் துண்டறிக்கையை அங்கு பார்த்தவுடன் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது.

‘‘தமிழ்நாட்டில் வீட்டுக்கு ஒரு நூலகம் (புத்தகசாலை) வைக்கவேண்டும் என்று கனவு கண்டவர் பேரறிஞர் அண்ணா.அவர்கள்.’’ பாதுகாப் பான அறை – படுக்கை அறை சமையலறை – பூஜையறை – இவை எல்லாம் இருக்கும் – புத்தகம் உள்ள இடம், படிப்பதற்கென்று ஓர் அறை தேடிப்பாருங்கள் மிகமிகக் கஷ்டம்.
பல வீடுகளிலே தூண்களின் மீது சாளரங்களின் இடுக்கில், பிள்ளையார் மாடத்தில் சில புத்தகங்கள் இருக்கும். ஆனால் புத்தகசாலை உண்டா? என்று கேளுங்கள் – பதில் கூறமாட்டார்கள்; ஒரு புன்னகை தோன்றும். பைத்தியக்காரா! இது வீடு நீ என்ன இங்கு வந்து புத்தக சாலை கேட்கிறாயே, என்று பொருள் அந்தப் புன்னகைக்கு…

வீட்டுக்கோர் புத்தகசாலை நிச்சயம் வேண்டும் – வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடம், அலங்காரப் பொருள்களுக்கும், போகப் போக்கியப் பொருள்களுக்கும் தரப்படும் நிலை மாறி, புத்தகசாலைக்கு அந்த இடம் தரப்படவேண்டும். உணவு, உடை, அடிப்படைத் தேவை – அந்தத் தேவையைப் பூர்த்தி செய்தானதும், முதல் இடம், புத்தகசாலைக்குத் தரப்பட வேண்டும். என்றார் பேரறிஞர் அண்ணா.’’

திராவிட இயக்கத்தவர் என்றால் அவர், திராவிடர் கழகமாக இருந்தாலும் திராவிட முன்னேற்றக்கழகமாக இருந்தாலும் அல்லது மற்ற திராவிட இயக்கங்களைச் சார்ந்தவர்களாக இருந்தாலும், அடிப்படையில் அவர்களின் இல்லங்களிலே இருக்கவேண்டியது நூலகமே. அந்த நூலகத்தில் முதலில் இடம் பெறவேண்டியவை தந்தை பெரியாரின் நூல்கள்.பின்பு மற்ற திராவிட இயக்க நூல்கள், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், புரட்சிக்கவிஞரின் கவிதைத் தொகுப்புகள் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் நூல்கள் போன்றவை.கட்டாயம் இருக்கவேண்டும்.இவற்றைச் சிறுகச் சிறுகச் சேகரிக்கவேண்டும்.

புத்தகம் என்பது அறிவு முதலீடு. நமக்கு மட்டுமான முதலீடு மட்டுமல்ல; நமது குழந்தைகள்,அவர்களின் குழந்தைகள் என்று  நமது பரம்பரைக்கு உண்மையாக  நாம் போட்டு வைக்கும் முதலீடு என்பது நல்ல புத்தகங்கள். நாம் நமது திராவிட இயக்கத்தில் இருக்கிறோம், பணியாற்றுகிறோம் என்று சொன்னால் அதற்கு அடையாளமாக இருப்பது நமது வீட்டில் இருக்கும் புத்தகங்கள் வைத்திருக்கும். சிறு நூலகம்தான். எனவே, வீட்டில் சிறு நூலகம் வைப்பதை நமது  இயக்கக் கடமைகளில் ஒன்றாகக் கொள்வோம். நூலகங் களில் இருப்பது போல நம் வீட்டில் இருக்கும் நூல்களைப் பட்டியலிடுவோம்.அதனைக் கணினியில் அல்லது ஏடுகளில் எழுதி, முறைப்படுத்தி வைப்போம். அந்த நூல்களைப் பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வோம்.






நன்றி : உண்மை மாதம் இருமுறை இதழ் ஜூன் 1-15,2025

12 comments:

  1. செய்யவேண்டிய பணி..சிறப்பான வலியுறுத்தல் ...நன்றி அண்ணே!

    ReplyDelete
  2. மிக்க நன்றி.மகிழ்ச்சிங்க அண்ணே.

    ReplyDelete
  3. நான் வீட்டில் சிறு நூலகம் வைத்துள்ளேன். 200 புத்தகங்கள் இருக்கும்

    ReplyDelete
  4. வணக்கம்.மிக்க மகிழ்ச்சி.தங்கள் பெயர் வரவில்லை.பெயரைக் குறிப்பிடுங்கள்(அய்யா/அம்மா)

    ReplyDelete
  5. சு.கருப்பையா7 June 2025 at 09:32

    நல்ல கட்டுரை நேரு. சடகோபனை நினைவில் வைத்து பாராட்டியுள்ளீர்கள். மிகவும் நன்று. 💐🙏

    ReplyDelete
  6. மிக்க நன்றியும் மகிழ்ச்சியும் அண்ணே...

    ReplyDelete
  7. பாக்யலெட்சுமி பெரியசாமி,மாநில மகளிரணி துணைச்செயலாளர்,திராவிடர் கழகம்.7 June 2025 at 19:16

    வணக்கம் தோழர் .சிறந்த பதிவு .மகிழ்ச்சி தோழர்

    ReplyDelete
  8. ஆ.செல்லப்பாண்டியன்,தொலைத்தொடர்பு தொ.மு.ச.8 June 2025 at 10:16

    மிகவும் சிறப்பான ஆழமான சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் அமைந்த அருமையான பதிவு! வாழ்த்துக்கள்! திராவிட இயக்க நூல்களை சேமிப்போம் சிதையாமல் அழியாமல் பாதுகாப்போம்.அதுதான் நமது தலையாய கடமை! நன்றி தங்களுக்கு!

    ReplyDelete
  9. Periyarselvi V.K.Ramu8 June 2025 at 12:23

    அருமையான பதிவு. மிகவும் அவசியமான பதிவு அய்யா. சிறப்பு.

    ReplyDelete
  10. @Periyarselvi V.K.Ramu
    மிக்க நன்றிங்க அம்மா. என் வலைத்தளத்தில் முதன்முதலாக தங்களின் கருத்தைத் தெரிவித்து இருக்கிறீர்கள்.தொடர்ந்து வந்து வாசியுங்கள். மகிழ்ச்சி.

    ReplyDelete