Wednesday 18 November 2020

செவக்காடு.....நாவல் வா.நேரு அத்தியாயம் இரண்டு...

 செவக்காடு.....நாவல்

           வா.நேரு

அத்தியாயம் இரண்டு...


        இரவு சாப்பிட்டு விட்டுப் படிக்கலாம் என்று நினைத்தான் சந்திரன். வீட்டிற்குள் இருந்த அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் படிப்பது துன்பமாக இருந்தது. சந்திரனின் வீட்டிற்கு முன்னால் தெருவிளக்கு இருந்தது. கொஞ்சம் கொசுக்கடி இருந்தாலும் பரவாயில்லை என்று நினைத்துக்கொண்டு  மொட்டை மெச்சுவின் வடமேற்கு மூலையில் உட்கார்ந்தான். தெருவிளக்கு நன்றாக வெளிச்சமாக இருந்தது. +1 பாடங்களை எடுத்து படிக்க ஆரம்பித்தான்.வேதியியல் பாடம்.வேதியியல் பாடம் நடத்தும் வாத்தியார் மாணவர்களைப் போலவே இருந்தார். நல்ல உயரமாய்,கருப்பாய்,ஒல்லியாய்.முதல் நாள் அவர் வந்தவுடன் நடந்த நிகழ்வு மனதிற்குள் வந்தது.சிரித்துக்கொண்டான்.முதல் நாள் வந்தவுடன், அறிமுகம் எல்லாம் முடிந்தவுடன் பாடம் நடத்த ஆரம்பித்தார். ஆங்கில வழி என்பதால் முழுமையாக ஆங்கிலத்தில் நடத்த ஆரம்பித்தார்.கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்த சந்திரனுக்கு அவர் நடத்தும் வேகம்,அவர் நடத்தும் வேதியியல் பாடம், ஒன்றும்  பிடிபடவில்லை."உக்காலி,என்னடா நடத்துருறா,ஒரு எழவும் புரியல' என்றான்.மெல்லத்தான் சொன்னான். அவருக்கு கேட்டு விட்டது. பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு 'ஏதோ ஒரு தெய்வீகக் குரல் கேட்டதே, யாரது? " என்றார். ஒருவரும் பதில் சொல்லவில்லை. ஆனால் நிறையப் பேர் சந்திரனைப்பார்க்க 'ராசா,நீங்கதானா? எந்திருங்க " என்றார் சந்திரனைப் பார்த்து. "எந்த ஊர் ? " என்று கேட்க,ஊர்ப்பேரைச்சொன்னான்.'இது தனியார் பள்ளிக்கூடம். கொஞ்சம் ஒழுக்கக்குறைவு என்றாலும்,டி.சி.யைக் கொடுத்து பள்ளியை விட்டு அனுப்பிவிடுவார்கள், கவனம்" என்றார். பின்பு அவருக்கே ஒரு குழப்பம் வந்தவர் போல " எப்படி நடத்த வேண்டும் " என்று கேட்க, கொஞ்சம் தமிழில் புரியும்படி சொல்லி பின்பு ஆங்கிலத்தில் சொல்லுங்கள் என்றான். 10-ம் வகுப்பு போல அவ்வளவு ஆர்வமாக படிப்பு ஓடவில்லை.இந்தப் படிப்பு ஏனோ பயமுறுத்துவது போல இருந்தது.மெச்சுமேல் உட்கார்ந்துகொண்டு, தெருவிளக்கு வெளிச்சத்தில் உட்கார்ந்து படித்துக்கொண்டிருந்தான் சந்திரன். கிழக்குப் பக்கம் மின்னல் அடிப்பது போல் இருந்தது..தொடர்ந்து இடி இடிக்கும் சத்தமும் கேட்டது. அம்மா கீழே இருந்து கூப்பிடும் சத்தம் கேட்டது." டேய் சந்திரா, இடி இடிக்குது..கீழே வாடா" என்றவுடன், "சரிம்மா" என்று சொல்லிவிட்டு புத்தகங்களை எடுத்துக்கொண்டு மெத்தில் இருந்து  ஏணி வழியாக கீழே இறங்கினான் சந்திரன்.கீழே இறங்கியவுடன், மழை என்றால் அப்படி ஒரு மழை.இடியும் மின்னலுமாய் கொட்டு,கொட்டுவென்று கொட்டிய மழை தெரு முழுக்க தண்ணீர் ஆறாக ஓடியது. ஒரு பக்கம் மகிழ்ச்சியைக் கொடுத்தாலும் மறுபக்கம் என்ன இப்படிப்பெய்கிறதே என்று எண்ணிக்கொண்டிருந்தான் சந்திரன்.


காலையில் எழுந்தவுடன் செவக்காட்டுக்கு போக ஓடுவது போல காட்டை நோக்கி நடந்தான். சந்திரன்.ஊரைத்தாண்டியவுடன் அழகாபுரிச்சாலை வந்தது.அழகாபுரிச்சாலையில் வேகமாக நடந்து கொண்டிருந்த சந்திரனை யாரோ அழைப்பது போல இருந்தது.நின்று திரும்பிப்பார்த்தான்.அவனது செவக்காட்டுக்கு அருகில் இருக்கும் காட்டுக்காரர் வெற்றிமணி. அவர் பக்கத்தில் வரும்வரை நின்றான். " ஏய், மாப்ள, எவ்வளவு நேரமா, மாப்ள, மாப்ளன்னு பின்னாலேயே கூப்பிட்டுக்கிட்டே வாரேன், நீ என்னமோ ஓட்டப்பந்தயத்திலே ஓடுறவன் மாதிரி இந்த வேகத்திலே போற..." என்றார் வெற்றிமணி. வெற்றிமணிக்கு 50 வயது இருக்கும். இவனுக்கோ 15 முடிந்து 16 நடந்துகொண்டிருந்தது. வெற்றிமணி நல்ல பருமனான உடல். சின்ன தொந்தி.நல்ல வளர்த்தியா சுருள் சுருளான முடியோடு எடுப்பான தோற்றம் உடையவர்.ஊரில் சேவுக்கடை வைத்திருக்கும் அவர் சில ஆண்டுகளுக்கு முன் இவனது செவக்காட்டுக்கு அருகில் இருக்கும்  காட்டை விலைக்கு வாங்கியிருந்தார்.4 குழந்தைகள் வளர்ப்பு,சேவுக்கடை அதோடு இந்த செவக்காட்டில் விவசாயம் என்று பரபரப்பாக இயங்கக்கூடியவர். இவர் வேறு ஜாதியைச்சார்ந்தவர் என்றாலும் இவன், இவனது சொந்தக்காரர் எல்லோருமே உறவுமுறைதான் சொல்லி அழைத்துக்கொண்டிருந்தனர்.

" மாமா, நீங்க கூப்பிட்டது காதில கேக்கல மாமா, கேட்டவுடனே நின்னுட்டனே " என்றான் சந்திரன். 

" என்ன 3 கிலோ மீட்டர் தூரம் தனியா நடந்து போறதுக்கு,உன்னோட போனா பேசிக்கிட்டே போகலாம்ன்னுதான் கூப்பிட்டேன் " என்றார் வெற்றிமணி..

" அதுக்கு என்ன மாமா, பேசிக்கிட்டே போவோம். " என்று சொல்லிய சந்திரன் அவரோடு சேர்ந்து நடக்க ஆரம்பித்தான்.

'உக்காலி, சரியான மழை மாப்ள,இராத்திரி, வெளுத்து வாங்கியிருச்சில" என்ற வெற்றிமணியிடம் 'ஆமாம் மாமா, நானும் மெத்தில உக்காந்து படிச்சுக்கிட்டிருந்தேன்.இடி இடிச்சவுடன் அம்மா கீழ கூப்பிட்டுச்சு, கீழே இறங்கி வந்தவுடனே ,அடிச்சு ஊத்துச்சு பாருங்க , இப்படி மாசத்துக்கு இரண்டு மழை பேஞ்சா போதும் " என்றான் சந்திரன்.

" ஆமா, உலகத்தில மனுசங்க நடக்குற நடப்புக்கு, மாசத்துக்கு இரண்டு என்ன பத்து மழை பேயும் இப்படி " என்றார் நக்கலாக,


வெற்றிமணி மிக மிகக் கல கலப்பான மனிதர். பேச்சில் ஆரம்பித்து விட்டால் ,எதைச்சொல்வது, எதைச்சொல்லக்கூடாது என்றெல்லாம் தெரியாது.சின்னவன் கிட்ட பேசுறோம்,பெரியவங்க கிட்ட பேசுறோம் என்னும் நாசுக்கெல்லாம் இருக்காது. கொட்டிக் குமித்து விடுவார்.ஆனால் கேட்க அலுப்பாக இருக்காது.அவரோடு பேசுவது சந்திரனுக்கும் புடிக்கும். வயசு வித்தியாசம் இல்லாம ஏதோ நண்பர்கிட்ட பேசுவது மாதிரியே சந்திரனிடமும் பேசுவார் வெற்றிமணி. 

" உங்க அக்கா, வீட்ல சண்டை போடுறா மாப்ள" என்றார் இவனிடம் ஏதோ பெரிய மனிதரிடம் சொல்வது போல...

"எதுக்கு அக்கா உங்க கூட சண்டை போடுது, அதுதான் ஒத்துமையாத்தானே இரண்டு பேரும் இருப்பீங்க " என்ற சந்திரனிடம் " அந்தக்கதையை ஏன் கேட்கிற மாப்ள, என் பொண்ணுக்கு இப்பவே கல்யாணத்தைப் பண்ணி வைன்னு ஆரம்பிக்கிறா " என்றார். அவரின் மகள் முனியம்மா, சந்திரனோடுதான் 5-ஆம் வகுப்பு வரை படித்தாள். பின்பு படிப்பை நிறுத்தி விட்டார்கள். சில நாட்களுக்கு முன்புதான் சடங்கு வைத்தார்கள்.சந்திரனின் வயதுதான் அவளுக்கும், 15 வயதில் திருமணமா? என்று யோசித்துக்கொண்டே வெற்றிமணியோடு நடந்தான் சந்திரன்.

" ஏன் மாமா, முனியம்மாவை நீங்க ஹைஸ்கூலுக்கு அனுப்பி படிக்க வைத்திருக்கலாம். பாவம் நல்லா படிக்கிற பிள்ளைதான்..இப்போ படிச்சிருந்தா என்னை மாதிரியே 10-வகுப்பு முடிச்சிட்டு , 11-ஆம் வகுப்பு படிச்சிகிட்டிருப்பா...அதுக்குள்ளே அவளுக்கு ஏன் கல்யாணம் ? :" என்றான் சந்திரன்.

" மாப்ள, உனக்கு தெரியும்ல, என் மகளை விட 10,12 வருசம் மூத்தவன் என் மச்சின..அவனுக்கு கட்டி வைன்னு ,ஒத்த கால்ல நிக்கிறா மாப்ள ,அதனாலேதான் சண்டை " என்றார். அவரது மைத்துனரும் காட்டுக்கில்லாம் வருவார். சந்திரனின் அம்மா, அவங்க அப்பா,அம்மாவை தாய்மாமனை,வயசுலே மூத்தவரை கட்டி வைத்ததுக்கு திட்டியது ஞாபத்துக்கு வந்தது சந்திரனுக்கு. " ஏன் மாமா, வயசு வித்தியாசம் நிறைய இருக்கும், பிள்ளை வேற சின்னப் பிள்ளை " என்றான் அவரிடம்.

"ஊகூம் ,அதெல்லாம் ஒன்னும் நடக்காது மாப்ள,கால காலத்திலே கல்யாணத்தைப் பண்ணி வச்சாத்தேன் எனக்கு ஒழுங்கா சோறு கிடைக்கும் வீட்டில " என்றார் சிரித்துக்கொண்டே. அவர் சிரித்துக்கொண்டே சொன்னதைக் கேட்டு மிக வருத்தமாக இருந்தது சந்திரனுக்கு. 15 வயசுல வாக்கப்பட்டு, 16 வயசுலே ஒரு குழந்தைக்கு தாயாகி அப்புறம் 32,33 வயசுலேயே பாட்டியாகிப் போகும் தன்னுடைய ஊர்ப்பெண்களை பற்றி யோசித்துக்கொண்டே வெற்றிமணியோடு நடந்து கொண்டிருந்தான் சந்திரன்.


பேச்சை மாத்த நினைத்தாரோ என்னவோ, " இந்த ரோட்டல இருக்கிற புளிய மரத்தாலதான் நாம வெயில் தெரியாம பகல்ல கூட நடந்து போக முடியுது ,வர முடியது " என்றார். சாலையின் இரண்டு பக்கமும் பச்சைப் பசேரென்று இருக்கும்  புளிய மரங்கள் மிகப்பெரிய வாய்ப்பு நடப்பவர்களுக்கு.,வரிசையாக ...நல்ல நிழல்..பகல் வேளைகளில்.ஒரு இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடப்பதே தெரியாமல் ஆக்கும் இந்தப் புளியமரங்கள். சில நேரம் மொத்தமாக இலைகளை உதிர்த்துவிட்டு மொட்டையாகக் காட்சி அளிப்பது போல இருக்கும். பின்பு நல்ல பச்சைப்பசேரென்று இலைகளோடு காட்சி அளிக்கும். சின்னச்சின்ன பூக்களோடு சில காலம். அப்புறம் புளியம்பழங்களோடு கொஞ்ச காலம் .இவன் படித்த பள்ளிக்கூடம் இந்தச்சாலையில்தான் இருக்கிறது. 6-ஆம் வகுப்பிலிருந்து 10 வகுப்பு வரை ஒரு நாளைக்கு நான்கு நேரம் நடந்து நடந்து ,புளிய மரங்கள் எல்லாம்  ஏதோ சொந்தக்காரர்கள் மாதிரி ஆகியிருந்தது சந்திரனுக்கு.


" ஆமாம் மாமா, இந்தப் புளிய மரங்கள் எல்லாம் எப்ப,யாரு வச்சாங்க? " என்றான் சந்திரன் வெற்றிமணியிடம். "எல்லாம் நம்ம ஊர்க்காரர்கள்தான் வைத்திருப்பார்கள். நான் சின்னப்பிள்ளையா இருந்த காலத்தில இருந்து இந்தச்சாலையில புளிய மரங்கள் இருக்கு,யாரு வைத்தார்கள் என்று கேட்கவேண்டும்  " என்றார்.

நடந்து கொண்டே வந்தபோது, அவர்களின் இடதுபுறம், சந்திரன் படித்த பள்ளிக்கூடம் வந்தது. பள்ளிக்கூடத்திற்கு முன்னால், 'அரசினர் உயர் நிலைப்பள்ளி' என்று இவனது ஊர்ப்பெயரோடு பெயர்ப்பலகை இருந்தது.அந்த பள்ளிக்கூடம் ஒரு இருபது ஏக்கர் நிலத்தில் கட்டப்பட்டு, விளையாட்டு மைதானத்தோடு இருந்தது. பள்ளிக்கூடத்தைச்சுற்றி, கருவேலஞ்செடிகள் வளர்க்கப்பட்டு, நன்றாக வெட்டி விடப்ப்பட்டு சுற்றுச்சுவர் போல இருந்தது. பள்ளிக்கூடத்தைப் பார்த்துக்கிட்டே நடந்து கொண்டிருந்தபோது, " என்ன மாப்ள, நம்மூரு பள்ளிக்கூடத்து ஹெட்மாஸ்டரை மாத்திட்டாங்களாமே " என்றார். 'ஆமாம் மாமா, நாங்க பத்தாவது படிக்கும்போதுதான் இந்தப் பள்ளிக்கூடத்திற்கு வந்தார்.ஒரு பத்து வருடத்தில செய்ய வேண்டிய வேலையை பத்து மாசத்தில செஞ்சார். இந்த வருடம் அவரை மாற்றி விட்டார்கள்..போய்விட்டார் " என்றான்.


பள்ளிக்கூடத்தைத் தாண்டியவுடன் இடது பக்கம் ஓடையில் தண்ணீர் நன்றாக வந்து கொண்டிருந்தது. "மாப்ள, ஊருக்குள்ள மழை பேஞ்சதுபோல ,மலையிலும் நல்லா மழை பேஞ்சுருக்கும் போல,இங்கே பாரு, ஓடையில எவ்வளவு தண்ணீர் வருது " என்றார். " ஆமாம், மாமா, நாலைஞ்சு சின்ன சின்ன ஓடையெல்லாம், ஒண்ணாச்சேந்து, கண்மாய்க்கு போற ஓடையில்லையா,அதனால தண்ணீர் நிறையவே போகுது " என்றான் சந்திரன்.


அப்படியே மெல்ல நடந்து போய்க்கொண்டிருந்தபோது, வலது பக்கம் கெடை ஆடுகள் கூடாரம் இருந்தது. கூடாரத்துக்கு முன்னால் நின்று வேப்பங்குச்சியால் பல்லை விளக்கிக்கொண்டிருந்த கீதாரி, " என்னங்கய்யா காட்டுக்கு இவ்வளவு வெள்ளனத்திலேயே கிளம்பியாச்சு " என்றார். " ஆமாம் கீதாரி, நல்ல மழை, காட்டைப் போய் பாத்து, ஏதாவது உடப்பு, கிடப்பு இருக்கான்னு பாத்துட்டு வரணும்ல" என்ற வெற்றிமணி

" ஏய்யா, இந்த மழையிலே எந்தக் காட்டில நீ கெடை போட்டிருந்தே" என்றார் நின்று. "அய்யா,அழகாபுரி மகராசன் காட்ல போட்டிருந்தேங்கய்யா, மழை கொட்டு கொட்டுன்னு கொட்டுச்சு, ஆடுகள் பூராம் இடிக்கு மிரளுது..நான் ஒரு ஒத்தக்கொடய புடிச்சுகிட்டு இருந்தவன்,பயந்து போய் அவரு மோட்டார் ரூம்க்கு பக்கத்துல போய் ஒண்டி உட்கார்ந்திருந்தேன்  " என்றார்.

" அப்படியா, மழை நேரத்தில பாத்து ஒதுங்குய்யா" என்ற வெற்றிமணி,

"சரி கீதாரி, நான் காட்டுக்கு கிளம்புகிறேன்" என்று சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார். நின்று கொண்டிருந்த சந்திரனும் நடக்க ஆரம்பித்தான்.

" ஏன் மாமா, இவங்க எல்லாம் நம்ம பக்கத்து ஊர்க்காரங்களா ? " என்றான்.

" இல்லை மாப்ள, இராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து கெடை போடுவதற்காக ஆடுகளைப் பத்திக்கிட்டு வந்திருங்காங்க. நாடோடி வாழ்க்கைதான் இவர்கள் வாழ்க்கை. நம்ம ஊர்ல இரண்டு மூணு மாசம் இருப்பாங்க. இருக்கும்போது இந்தக் கூடாரங்களைப் போட்டிருப்பாங்க.பெண்கள்,குழந்தைகள் பெரும்பாலும் இரவில் இந்தக் கூடாரங்களில் தங்குவார்கள்.சின்ன ஆட்டுக்குட்டிகள், ஈன்று இரண்டு மூன்று நாளிலிருக்கும் ஆட்டுக்குட்டிகளும் கூடாரத்துக்குள் இருக்கும் " என்றார்.

 " ஏன் மாமா, ஓடைக்கு பக்கத்திலேயே கூடாரத்தை  போட்டிருங்காங்கலே, பாவம் நேத்து பேஞ்ச மழையிலே என்ன பாடு பட்டங்களோ தெரியலையே " என்றான் சந்திரன். "" ஆமாம், மாப்ள, கொடுமையான பிழைப்பு..ஊர் ஊரா ஆட்டைப் பத்திக்கிட்டு போய்,கூடாரம் போட்டு, கேக்குற காடுகளுக்கு கெடையைப் போட்டு,அதில வர்ற காசில கஞ்சி குடிக்கணும்" என்றவர் " ஆனா, ரொம்ப சரியா இருப்பாங்க மாப்ள " என்றார் . " அப்படியா மாமா " என்று சொல்லிக்கொண்டே அந்தக் கூடாரங்களைக் கவனித்தான்.

" ஏன் மாமா, பெரிய  கொடை மாதிரி ,நார்ல பின்னிய பெரிய கம்பியில்லாத கொடை மாதிரி இருக்கே மாமா, காத்து உள்ளே போகுமா ? "என்றான்

"மாப்ள, நீ படிக்கிற ஆளு. காத்து போகலைன்னா உயிர் வாழ முடியுமா? காத்து  உள்ளே போகுற மாதிரிதான் இந்தக்கூடாரம் இருக்கு " என்றார். 


கிடை ஆட்டுக்கூடாரங்களைத் தாண்டி கொஞ்ச தூரம் வந்தவுடன் ஓடை வந்தது. ஓடைக்குள் இறங்கி இருவரும் நடக்க ஆரம்பித்தார்கள். ஓடைக்குள் முழங்கால் அளவு தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. ஓடையின் இருபக்க கரைகளிலும் அடர்த்தியாக இலந்தைப்பழச்செடிகள் இருந்தன.நல்ல சின்ன சின்னக் காய்களாக இலந்தைக் காய்கள் காய்த்துக்கிடந்தன. இன்னும் கொஞ்ச நாளில் பழமாகி விடும். பறித்து திங்கலாம் என்ற எண்ணம் சந்திரனுக்கு ஓடியது. இலந்தைப்பழச்செடியோடு சின்ன சின்ன வேப்பஞ்செடிகள், கருவேலஞ்செடிகள் வரிசையாக நல்ல செழிப்பபோடு  இருந்தன.

தண்ணீருக்குள் நடந்து போவது சுகமாக இருந்தது சந்திரனுக்கு. " ஏய் ,சில இடத்துல ஓடைக்குள்ள பள்ளம் கிடக்கும், பாத்து வா சந்திரா " என்று சொல்லிக்கொண்டே கொஞ்சம் முன்னால் வெற்றிமணி நடக்க அவருக்கு பின்னாலேயே சந்திரன் நடந்து கொண்டிருந்தான். திடீரென்று ஒரு பக்க கரையில் சரட்டென்று சத்தம் கேட்டது . சுத்தமான வெள்ளை நிறத்தில் முயல் ஒன்று படாரென்று அந்த புதருக்குள் இருந்து ஓடி மறைந்தது. " மாப்ள, சரட்டுன்னு ஓடிருச்சு. கொஞ்சம் சுதாரிச்சிருந்தா  முயல் கறி இன்னைக்கு சாப்ட்டிருக்கலாம் " என்றார் வெற்றிமணி..


"ஆமாம் மாமா முயல் கறி நல்லா ருசியா இருக்கும் " என்றான் சந்திரன்." எனக்கு முயல் கறி பிடிக்கும். உங்க அக்காவுக்கு பிடிக்காது. முயலைக் கொண்டுபோய்க் கொடுத்து போன தடவை சமைன்னு சொன்னப்ப மாட்டேன்னு சொல்லிட்டா மாப்ள ... " என்று வெற்றிமணி சொன்னவுடன், இவர் என்னடா எதைச்சொன்னாலும் வீட்டுச்சண்டையைப் பத்தியே சொல்லிக்கிட்டு வர்றாரே என்று யோசித்தான் சந்திரன். ஆனால் வெற்றிமணியிடம் ஒன்றும் சொல்லவில்லை.


ஓடையிலிருந்து மேலே ஏறினால் சந்திரனின் செவக்காடு வந்துவிடும். ஆனால் வெற்றிமணி இன்னும் கொஞ்சதூரம் ஓடைக்குள் நடந்து போனால்தான் அவரின் காடு வரும். "மாப்ள ஓங்காடு வந்திருச்சு,போய்யா, நான் அப்படியே ஓடைக்குள்ளே போய் என் காட்டுக்கு போயிறேன் " என்றார் வெற்றிமணி. சரி என்று சொன்னவுடன் ஓடை வழியாகவே நடக்க ஆரம்பித்தார் வெற்றி மணி. ஓடைக்குள் இருந்து வெற்றிமணி கூட பேசிக்கொண்டிருந்ததைப் பற்றி பேசியதை நினைத்துக்கொண்டே தனது காட்டுக்குள் மேட்டில் ஏறி உள்ளே நுழைய நடந்த சந்திரனின் கால்கள் திடிரென்று நின்றன. என்னடா நடந்து போய்க்கொண்டிருந்த கால் திடீரென்று பிரேக் போட்டது மாதிரி நிற்கிறதே என்று நினைத்துக்கொண்டே முன்னால் பார்த்த சந்திரன் அரண்டு பின் வாங்கினான். அவனுக்கு முன்னால் நல்ல கறு கறு நிறத்தில்,அவனது வீட்டில் கம்பு இடிக்கப் பயன்படுத்தும் உலக்கை அளவுக்கு கரு நாகம் படம் எடுத்து நின்று கொண்டிருந்தது.


                                                 தொடரும்.....


 




No comments: