Tuesday, 14 February 2012

மனதுக்கு உகந்த நாளாக இந்த நாள்

மதுரையில் உள்ள ராம் நல்லமணி யாதவ பெண்கள் மேல் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவிகளுக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியினை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஏற்பாடு செய்திருந்தார். ஏறத்தாழ 200 பெண் குழ்ந்தைகளிடம் பேசும் வாய்ப்பு கிடைத்தது. எனது பையனின் வயதுள்ளவர்கள், 11-ஆம் வகுப்பு படிப்பவர்கள் என்பதால் அவர்களின் பிரச்சனைகள் பற்றிய புரிதல் எனக்கு இருந்தது. ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்வியை முன்வைத்து ஆரம்பித்தேன், ஒவ்வொருவரும் ஒவ்வொரு பதிலை சொன்னார்கள். ஏன் படிக்க வேண்டும், எப்படி படிக்க வேண்டும், படிப்பதை நினைவில் வைப்பது எப்படி, நினைவில் வைப்பதை தேர்வில் எழுதுவது எப்படி போன்றவற்றைச் சொன்னேன். போட்டித்தேர்வுக்கும் , பள்ளித் தேர்வுக்கும் உள்ள வேறுபாடு , போட்டித்தேர்வில் வெற்றி பெற்று பதவி பெற்றால் கிடைக்கும் சமூக அங்கீகாரம், சமூகத்திற்கு நம்மால் செய்யக்கூடிய உதவி, பாதகம் செய்பவர்களுக்கு எதிராக எப்படி நல்ல முறையில் நமது பதவியைப் பயன்படுத்தலாம், அந்தக் காலத்தில் பெண்கள் இருந்த நிலைமை ,இன்றைக்கு மாறியிருக்கும் நிலமை போன்ற செய்திகளை சொன்னேன். கவிஞர் இளம்பிறை ஒரு பேட்டியில் சொன்ன அவரின் வரலாறு போன்ற பலரின் வரலாறுகளை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. எனது பள்ளி தலைமை ஆசிரியர் திரு.வீரிசெட்டி அவர்களைப் பற்றியும், எனது கல்லூரி முதல்வர் திரு. கனகசபாபதி அவர்களைப் பற்றியும் சொன்னேன். நல்ல புத்தகங்களை, நல்ல மனிதர்களை பயன்படுத்த தெரிய வேண்டும், " படிப்பதே சுகமே" எனும் திரு வெ.இறையன்பு அவர்களின் புத்தகம், "இளைய தலைமுறைக்கு" என்னும் தங்கவேல் மாரிமுத்து அவர்களின் புத்தகங்கள் பற்றி சொன்னேன். ஏறத்தாழ ஒரு மணி நேரம் பேசிவிட்டு பின்பு அவர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொன்னேன். புத்தகத்தூதன் திரு.பா.சடகோபன் அறிமுக உரை ஆற்றினார். மிகவும் மனதுக்கு உகந்த நாளாக இந்த நாள் அமைந்தது. பொருளாதார ரீதியாக எதுவும் எனக்கு வேண்டாம் என முன்பே சொல்லி விட்டேன். ஆனால் ஒரு 10000 ரூபாய் உழைத்துக் கிடைக்கும் மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சி கொடுக்கும் நாளாய் இந்நாள் அமைந்தது.

No comments:

Post a Comment