Wednesday, 27 June 2012

அண்மையில் படித்த புத்தகம் : அனுராதா



நூலின் தலைப்பு : அனுராதா

வங்க மொழியில் எழுதியவர் : சரத் சந்திரர்

தமிழ் மொழிபெயர்ப்பு : சு.கிருஷ்ண்மூர்த்தி

வெளியிட்டவர்கள் : சந்தியா பதிப்பகம், நியூடெக் வைபவ், 57-A,53-வது தெரு,
                                             அசோக் நகர் ,சென்னை-83  பேச : 044-24896979/55855704.
முதல் பதிப்பு : 2005
விலை ரூ 60
மொத்த் பக்கங்கள் : 144

                                             சரத் சந்திரர் என்னும் வங்க எழுத்தாளரை அறிமுகப்படுத்த "தேவதாஸ் " என்னும் கதாபாத்திரத்தை சொன்னாலே புரியும். இப்பொழுதும் யாராவது தாடி வைத்துக்கொண்டு அலைந்தால் என்ன தேவதாஸ் மாதிரி அலைகிறாய் என்று சொல்வதைப் பார்க்கின்றோம். திரைப்படமாக வந்து கூட வருடக்கணக்கில் ஓடிய கதை அது . அப்படிப்பட்ட சரத் சந்திரர் எழுதிய 5 சிறுகதைகளின் தொகுப்புதான் " அனுராதா " என்னும் தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளது.

முத்ல்கதை , "வழக்கின் முடிவு", இரண்டாவது கதை "அபாகியின் சுவர்க்கம்", மூன்றாவது கதை " ஏகாதாசி பைராகி", நாலாவது கதை " அனுராதா", ஐந்தாவது கதை " மகேஷ்" . . ஒரு 150 ஆண்டுகளுக்கு முன்னால் நிலவிய ஜமீந்தாரிய ஆட்சிமுறை, அதில் சாதாரண மக்கள் பட்ட துயரங்கள், துன்பங்கள், கொடுமையான ஜாதிய முறை அதில் ஒடுக்கப்பட்ட மக்களின் துயரம் - இவைதான் பொதுவான கதைக்கரு என்று எடுத்துக்கொள்ளலாம்.

எடுத்துக்காட்டாக் 5-வது கதையான மகேஷ் என்னும் கதை ஓர் எருதுவைப் பற்றிய கதை . கபூர், அவரது மகள் அமீனா, அந்த ஊரின் பிராமண ஜமீந்தார், அவரது வெலையாட்கள் - மகேஷ் என்னும் மாடு இவர்கள்தான் கதையின் மாந்தர்கள்.  கிராமத்தில் நிலவும் வறுமை, குடிக்கத் தண்ணீர் இல்லாமல் அலையும் நிலைமை, ஜமீந்தார் வீட்டுக்கு மட்டும் தனிக்கிணறு ஆனால் மற்றவர்கள் அதில் தண்ணீர் எடுக்க முடியாது, அமீனா முஸ்லீம் என்பதால் பொதுக்கிணற்றில் போய் எடுக்க முடியாது, யாராவது பிடித்து ஊற்ற வேண்டும், யாரும் ஊற்ற வில்லையென்றால் நின்று கொண்டே இருக்க வேண்டியதுதான் போன்ற அந்தக்கால் சமூக நிலைமைகள் மனித நேயத்தோடு சொல்லப்பட்டிருக்கும் விதம் நம்மை நெகிழ வைக்கிறது. அடுத்த வேளைக்கு அல்லாடும் குடும்பத்தில் இருக்கும் மகேஷ் என்னும் பெயர் கொண்ட  மாட்டுக்கு போட வைக்கோல் இல்லை, குடிக்க வைக்க த்ண்ணீர் இல்லை ,விளைந்த வைக்கோல் அனைத்தையும் ஜமீந்தார் ஆட்கள் கடனுக்காக எடுத்துக்கொண்டு போய் விட்டார்கள். அடி மாடாக விற்க சம்மதித்து அட்வான்ஸ் பணம் வாங்கி பின்பு மாட்டை பிடிக்க வந்தவனை திட்டி அட்வான்ஸ் பணத்தை திருப்பிக்கொடுத்து விடுகிறான் கபூர்.மாடு அவிழ்த்துக்கொண்டு ஓடி  அடுத்தவன் காட்டில் மேய்ந்ததால் அடியும் அவமான்மும் படுகிறான்.மூக்கைத் தரையில் தேயத்துக்கொண்டே தரையில் சுற்றி சுற்றி நடப்பது என்னும் தண்டனை என்று சொல்கின்றார் கதாசிரியர். முடிவில் அரும்பாடுபட்டு தன் மக்ள் கொண்டுவரும் தண்ணீரை மகேஷ் தட்டி விடுவதால் கலப்பையைக் கொண்டு அடிக்க, மகேஷ் இறந்து விடுகிறது. ஜமிந்தாருக்கு கட்ட வேண்டிய அபராதப் பணத்திற்கு பயந்து அப்பா கபீரும் , மகள் அமீனாவும் கிராமத்தை விட்டு இரவோடு இரவாக வெளியேறுகிறார்கள். அல்லா மீது நம்பிக்கை கொண்ட கபூர் கடைசியில் சொல்வது " அல்லா , நீ எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் சரி ! ஆனா என்னோட மகேஷ் தாகத்தோடு செத்துப்போயிடுச்சு . அது மேயறதுக்குக் கொஞ்ச நெலங்கூட யாரும் மிச்சம் வைக்கல்லே. நீ கொடுத்த பூமியிலே வெளையற புல்லையும் நீ கொடுத்த தண்ணியையும் அதுக்குக் குடுக்காதவனோட குற்றத்தை மட்டும் நீ ஒருபோதும் மன்னிக்காதே " . இன்றைக்கும் கிராமங்களில் மாடுகளுக்கும் மனிதர்களுக்கும் நல்ல தண்ணீர் குடிக்க கிடைக்கவில்லை. மாடுகளுக்கு தீவனுமும் இல்லை. வறுமையில் இருக்கும் விவசாயி மாடுகளை வித்தால் , பசு புனிதமானது அடிமாட்டுக்கு விற்கக்கூடாது என்று மதவாதிகள் வந்து விடுகின்றார்கள். சமீபத்தில் தர்மபுரி பக்கத்தில் வியாபாரிகளை  வாங்கிச் சென்ற மாடுகளை லாரியில் இருந்து கட்டாயமாக இறக்கி வாங்கிச் செனறவர்களை விரட்டியிருக்கிறார்கள் சில பேர்.மனிதர்கள் வாழவும் , அவர்கள் வளர்க்கும் மாடுகள் வாழவும் வழியில்லாத நிலைமை ஏன்? என்று சிந்திக்க மறுக்கும் மதவாதிகள் கட்டாய்ம படிக்க வேண்டிய கதை இது.
 
                             இரண்டாவது கதையான "அபாகியின் சுவர்க்கம் " இறந்த பின்பு சுடுகாட்டில் நிலவும் சாதியத்தை சொல்லும் கதை. ஒரு பார்ப்பணப் பெண் இறக்கிறார். அவரது உடலை  சந்தனக் கட்டைகளால் அடிக்கி வைத்து எரிக்கிறார்கள். அந்தப் பெண் எரிக்கப்படுவதை தாழ்த்த்ப்பட்ட பெண்ணான அபாகி பார்த்துக்கொண்டிருக்கிறாள். ஒரு விழா போல செய்யப்படும் சடங்குகளை விவரிக்கிறார் எழுத்தாளர், அபாகியின் பக்கத்தில் வரும் தன் மகனிடன் தான் இறந்தால் , சந்தனக் கட்டைகளை வைத்து எரிக்க வேண்டாம் , நமக்கு வசதி கிடையாது, ஆனால் நம்து வீட்டின் முன்னால் நாம் வளர்க்கும்  மரத்தினை வெட்டி அக்கட்டையை வைத்து எரிக்க மகனை கேட்டுக்கொள்கிறாள். அபாகி இறந்த அன்று அந்த மரத்தை வெட்ட அனுமதி ஜமீந்தார் ஆட்களால் மறுக்கப்படுகிறது. இந்த ஜாதிக்கு கட்டையை வைத்து எரிக்க ஆசையா . அதெல்லாம் கூடாது என்று மறுக்கப்படுகிறது. தனது அம்மாவின் கடைசி ஆசையை நிறைவேற்ற அலையும் மகன், அதனை சாதி அடிப்ப்டையில் மறுக்கும் சமூகம் , கடைசியில் கட்டை இல்லாமல் எரிக்கப்படும் அம்மா - இதுதான் கதை . ஜாதியக்கொடுமையை , இல்லாதவர்களின் ஆசை எப்படி நகைப்புக்கு உள்ளாகப்படுகிறது என்பதும் சொல்லப்படுகின்றது.

                                     மனதை நெகிழ வைக்கும் கதைகளாக இவைகள் உள்ளன. சரத் சந்திரரைப் பற்றிய முழுமையான அறிமுகம் இப்புத்தகத்தின் முன்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. பிறப்பால் பார்ப்பனர் என்றாலும் ஜாதிய ரீதியான கொடுமைகளை மிக நுட்பமாகவும், கூர்மையாகவும் பதிவு செய்கிறார் சரத் சந்திரர். அவரின் ஊர் சுற்றிய தன்மையே அவரது எழுத்தின் வெற்றிக்கு காரணம் எனலாம்.மொழி பெயர்ப்பு செய்த சு,கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு மொழி பெயர்ப்பு நூல் என்ற உணர்வே நமக்கு வராத அளவுக்கு இயல்பாக மொழி பெயர்த்திருக்கிறார்.

                                          படிக்க வேண்டிய சிறுகதைத் தொகுப்பு "அனுராதா" . மதுரை சிம்மக்கல் பொது நூலகத்தின் எண்  166328 . வீட்டு நூலகத்தில் வாங்கி வைக்க வேண்டிய புத்தகம்.

1 comment:

  1. அறுபதுகளில் சரத் சந்திரரின் பல நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டன. இப்போது அவைகளெல்லாம் கரையான் அரித்து நூலகங்களின் ஒதுக்குப் புறமான பகுதிகளில் குவித்துவைக்கப் பட்டிருக்கும். பதிப்பக துறையில் இருப்பவர்கள் யோசித்தால் பல அரிய நூல்கள் மறுபதிப்பாகும். இந்த நூலை வசிக்க முயலுகிறேன் .

    ReplyDelete