Wednesday, 12 December 2012

அண்மையில் படித்த புத்தகம் : காற்றில் அலையும் சிறகு


நூலின் தலைப்பு : காற்றில் அலையும் சிறகு
ஆசிரியர்             : சுப்ர பாரதி மணியன்
வெளியீடு           :  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்
முதல் பதிப்பு      : டிசம்பர் 2005
மொத்த பக்கங்கள் : 130, விலை ரூ 50

                                          காற்றில் அலையும் சிறகு என்னும் இந்தப் புத்தகம் 16 சிறுகதைகளின் தொகுப்பு.ஆனந்த விகடன், தாய், பாக்யா, குங்குமம் போன்ற பல இதழ்களில் வந்த சிறுகதைகள் நம் கையில் மொத்தமாய், புத்தகமாய். எழுத்தாளர் சுப்ரபாரதி மணியன் , தொலைபேசித்துறையில் உதவிக் கோட்டப்பொறியாளர், இப்போது கோட்டப்பொறியாளர் ஆகியிருக்கக்கூடும் . 6 நாவல்கள், 12 சிறுகதைத் தொகுப்புகள், 2 குறு நாவல் தொகுப்புகள், 2 கட்டுரைத் தொகுப்புகள் என அவர் எழுதியிருக்கும் நூல்களின் தொகுப்புகள் நம்மை மலைக்க வைக்கின்றன. பல பரிசுகளை அவர் இலக்கியத்திற்காகப் பெற்றிருப்பது, அவரது துறையைச் சேர்ந்தவன் என்ற வகையில் பெருமையாக இருக்கின்றது.

                                                                                  16 கதைகள் , ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாய் இருக்கின்றன. 'இந்தப் புத்தகத்தின் தலைப்பான காற்றில் அலையும் சிறகு, எப்படி எப்படியோ இருப்பவர்கள் , இப்படி எப்படி ஆனார்கள் என்னும் கேள்வியை எழுப்புவதாக இருக்கின்றது. நிதானத்தை கற்றுக்கொடுக்கும் இரவிச்சந்திரன், ருசிப்பதை, எதையும் ரசிப்பதை கற்றுக்கொடுக்கும் இரவிச்சந்திரனின் மாற்றமும், அவன் கடன் வாங்கி , கடன் வாங்கி  நோயாளியாக மாறுவதையும் கடைசியில்  உணவகத்தில் இரை கண்ட மிருகம் போல அள்ளி அள்ளி சோற்றை விழுங்குவதையும் அழகுற விவரித்துள்ளார் சுப்ரபாரதி மணியன் .இரவிச்சந்திரனைப் பற்றிப் படிக்கும் போது இறந்த போன எனது நண்பன் ஞாபகம் வருகின்றது. ஒரு கதாபாத்திரத்தில் நம்மை ஒன்ற வைப்பதும் அதில் நம்மை இணைத்துப் பார்க்குமளவுக்கு எழுதுவதும்தானே எழுத்தாளனின் வெற்றி.

                                                                பல கெளரவக் கொலைகளுக்கு அடிப்படையான , அண்ணன்களாலும் அப்பாக்களாலும் கொல்லப்பட்ட பல பெண்கள் செய்த தவறு திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாதல்.  ஆனால்   திருமணத்திற்கு முன்னே  கர்ப்பமாகிப் போன தன் பெண்ணை கர்ப்பக்கலைப்பிற்கு அழைத்துப்போகும் அப்பாவின் கதை, இந்த சிறுகதைத் தொகுப்பில்  "வழி". செத்துப்போ என்று சொன்னாலும் , வளர்த்த பாசமும், ஏமாந்து போன தனது மகளின் நிலையும் கடைசியில் "செத்து மட்டும் தொலைச்சுராதே" என்று சொல்லும் அப்பாவின் குரலும் திருப்பூரிலிருந்து ஒலிப்பது எதார்த்தமான குரல்தான். 

                                            பெரிய உணவு விடுதிகளின் முன்னால் பிச்சையெடுக்கும் முதியவர்களைக் கேட்டுப்பாருங்கள், அவர்கள் முன்னால் கிராமத்து கூலி விவசாயிகளாக இருப்பார்கள், அதுவும் ஒடுக்கப்பட்ட மக்களாக இருப்பார்கள். காட்டை விட்டுத் துரத்தப்பட்ட ஆதிவாசிகள், பழங்குடியினரைப் பற்றி மறைந்த பிரதேசம் சிறுகதை பேசுகின்றது.

                                           வேலையற்ற பட்டதாரி இளைஞனைப் பற்றிப் பேசும் 'எல்லோருக்குமான துயரம் " நமக்கும் துயரத்தை ஏற்படுத்துகிறது. எத்தனை அவமானங்களைச் சகித்துக்கொண்டு அவர்கள் துயருற வாழ்கிறார்கள் எனபதனைப் பேசும் சிறுகதை. ஆம், இந்த நாட்டின் துயரம்தான் இது, படித்தவனுக்கு வேலை இல்லை என்பது...

                                          இதைப் போல ஒவ்வொரு கதையையும் சொல்லமுடியும் என்றாலும் தனி மனித அவலங்களை, சமுக அவலங்களை சுட்டிக்காட்டும் கதைகளாக இக்கதைகள் இருக்கின்றன. துறவி என்று ஆனாலும் குடும்பக்கடமைகள் விடாது துரத்தும் , உறவினர்கள் விடாது பொருளாதார ஆதரவுக்காக துறத்துவர் என்பத்னை துறவி கதை சொல்கின்றது. மகளின் திருமணத்திற்காக சிறுநீரகத்தை பணத்திற்க்காக விற்கப்போய் ஏமாந்து வெறுமனே சிறுநீரகத்தை இழ்ந்து வந்த கதை என்று வாழ்வின் எதார்த்தை சுட்டுவதாக பல கதைகள் உள்ளன.

                                             "கதை எழுதறுதும் ,சாப்பிடறதும் ஒண்ணுதான். நிதானமானது ரெண்டும்." ( பக்கம் 9) .ஆம்,உண்மைதான். சுப்ரபாரதிமணியன் கதைகள் நிதானமாக சாப்பிடும் சாப்பாடாகவே இருக்கின்றன. கதைகளில் மிகப்பெரிய திருப்பங்கள், சஸ்பென்ஸ் அப்படி இப்படி என்றெல்லாம் ஒன்றும் இல்லை. ஆனால் நம்மைச்சுற்றி நிகழும் அவலங்கள் இருக்கின்றன-. ஏன் இந்த அவலங்கள் என்னும் கேள்வியை எழுப்புகின்றன. படித்து , யோசித்து யோசித்து அசை போடும் பல விசயங்கள் சில பக்கங்களில் சிறுகதையாகக் கொடுக்கப்பட்டுள்ளன். படித்து அசை போட்டுப் பாருங்கள். 




1 comment:

  1. நேரு! இவரது அணைத்து புத்தகங்களையும் எனக்கு வாங்கிக் கொடுங்கள்.

    ReplyDelete