அண்மையில் படித்த புத்தகம் : மாக்ஸிம் கார்க்கி- வாழ்க்கைக்கதை
நூலின் தலைப்பு : மாக்ஸிம் கார்க்கி- வாழ்க்கைக்கதை
ஆசிரியர் : எம்.ஏ.பழனியப்பன்
பதிப்பகம் : செண்பகா பதிப்பகம் -சென்னை -17
இரண்டாம் பதிப்பு :ஆகஸ்ட் 2012
மொத்த பக்கங்கள் : 296 விலை ரூ 150.00
மாக்ஸிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாறாய் அமைந்த நூல் இது. மாக்ஸிம் கார்க்கியின் சுய சரிதை நூல்களான " எனது குழந்தைப் பருவம்", " யான் பெற்ற பயிற்சிகள் ", " யான் பயின்ற பல்கலைக் கழகங்கள் " என்ற மூன்று நூல்களை இணைத்து , இந்த நூலின் ஆசிரியர் இடை இடையே கொடுக்கும் வர்ணனைகள், கருத்துக்களோடு இணைந்து, படிப்பதற்கு தொய்வு இல்லாமல் , ஆர்வமாக நாம் படிக்க கொடுக்கப்பட்டிருக்கும் ஒரு புத்தகம் இந்தப் புத்தகம்.
பிறந்த சில வருடங்களிலேயே தந்தையை இழக்கும் கார்க்கி, தந்தை இறந்து விட்டார், இனி வரமாட்டார் என்னும் அறியா வயதிலேயே தந்தைக்கு இறுதிச்சடங்கு செய்யும் கார்க்கி, தாய் இன்னொருவரை மணந்து கொண்டு சென்று விட , முரடனான தனது தாத்தாவோடு வாழ்ந்து அடியும் உதையும் பட்டு வாழ்வைக் கழிக்கும் கார்க்கி, பிச்சைக்காரியின் மகளான தனது பாட்டி சொல்லும் கடவுளர் கதைகளை, பிரார்த்தனைகளை கேட்டு வளரும் கார்க்கி, சூதாட்டக்காரனான தனது இரண்டாவது கண்வனால் கைவிடப்பட்ட கார்க்கியின் தாயும் சிறு வயதிலேயே இறந்து போக, அப்பா- அம்மா இல்லாமல் சாப்பிடுவதற்காக பல நூறு வேலைகள் செய்யும் கார்க்கி என அவரது குழந்தைப் பருவம் நம் கண்களில் நீர் வர வைக்கும் அளவுக்கு கொடுமையானதாய் , இரக்கமற்றதாய் அமைந்ததை இந்த நூல் ஆசிரியர் திரு.எம்.ஏ.பழனியப்பன் அவர்கள் மிகக்கோர்வையாகக் கொடுத்திருக்கின்றார்.
தொழில் பயிலும் இளைஞனாய் கார்க்கி, கானகத்தில் சென்று பறவைகளைப் பிடித்து அதைத் தன் பாட்டியிடம் கொடுத்து அவர் விற்று வருவதால் வயிற்றைக் கழுவும் கார்க்கி, தெருத்தெருவாய் குப்பைகளைப் பொறுக்கி விற்கும் காக்கி, குப்பைகளைப் பொறுக்கிவிட்டு குளித்து விட்டு உடை மாற்றி பள்ளிக்கூடம் போனாலும் நாத்தம் அடிக்கிறது என்று சொல்லி மற்ற மாணவர்கள் ஒதுக்கியதால் நொந்து போன கார்க்கி, படிக்கும் வாய்ப்பு குறுகிய காலத்தில் பறி போக மீண்டும் வீட்டு வேலைகளுக்குச்செல்லும் கார்க்கி, கப்பலில் பயணிகள் சாப்பிடும் தட்டைக் கழுவி வைக்கும் கார்க்கி இப்படி பல கார்க்கிகளை நம் கண் முன்னே நிறுத்துகிறார் இந்த நூலின் ஆசிரியர் எம். ஏ . பழனியப்பன்.
கப்பலில் வேலை செய்யும் போது இரண்டு திருடர்கள் பிடிபடுகிறார்கள். .." உணர்விழக்கும் வரையில் திருடர்கள் அடிக்கப்பட்டு இருக்கின்றனர். அடுத்த துறைமுகத்தில் அவர்களைப் போலிசாரிடம் ஒப்படைத்தபோது , அவர்களால் எழுந்து நிற்கக்கூட முடியவில்லை.
ஜனங்கள் உண்மையில் நல்லவர்களா? - கெட்டவர்களா? பணிவானர்களா?- அச்சுறுத்தக்கூடியவர்களா? என்று ஆச்சரியப்படத்தக்க வேதனை அளிக்கும் இத்தகைய பல நிகழ்ச்சிகள் நிகழ்ந்தன. ஜனங்கள் ஏன் இப்படிக் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள் ? என்று எனக்குள் நானே(மார்க்சிம் கார்க்கி) கேட்டுக்கொண்டேன். இதைப் பற்றி நான் சமையல்காரனிடம் கேட்ட பொழுது அவன் என்ன கூறினான் தெரியுமா?
" அதைப் பற்றி நீ ஏன் கவலைப்படுகிறாய்? உனக்கென்ன மனிதாபிமானம் அளவு கடந்து இருக்கின்றதா? ஜனங்கள், ஜனங்கள் தான் ! ஒருவன் சமர்த்தியசாலி ; மற்றவன் முட்டாள், மூளையைக் குழப்பிக் கொள்வதை நிறுத்திவிட்டு , புத்தகங்களைப் படி! உன் கேள்வி சரியானதாக இருந்தால் , அதற்குப் பதில் புத்தகத்தில் இருக்கும் " என்று கூறினான் அவன், அவன் கூறியது என் சிந்தனையைக் கிளறி விட்டது " பக்கம் (130 ) . மனிதர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள புத்தகங்களைப் படி என்று ஒருவன் சொன்னதால் புத்தகங்களைத் தேடிப்படிக்க ஆரம்பிக்கின்றார் கார்க்கி.
புத்தகங்களைத் தேடி அலைகின்றார். ஒரு வீட்டில் அனைத்து வேலைகளையும் செய்யும் வேலைக்காரனாய் (13 வயது) கார்க்கி இருக்கின்றார். ஒரு தையல்காரரின் மனைவி நல்ல புத்தகங்களை கார்க்கிக்கு கொடுத்துப் படிக்கச்சொல்கின்றார். ஆனால் அதனை படிக்க வேலைக்காரனாய் இருக்கும் வீட்டு எஜமானி அனுமதி மறுக்கிறாள் வீட்டு வேலைகளை எல்லாம் முடித்து விட்டு இரவில் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கின்றார். மெழுகுவர்த்தி செலவு ஆகிறது என்று எஜமானியம்மாள் திட்டுகிறாள். படிக்கக்கூடாது என்பதற்காக மெழுகுவர்த்தியை குச்சியால் அளந்து வைக்கிறாள் . அதனையும் தாண்டி புத்தகத்தைப் படிக்கின்றார். புத்தகம் படிப்பதற்காக கார்க்கி பட்ட இன்னல்களைப் பார்க்கிறபோது, அந்த மாபெரும் எழுத்தாளன் இளமையில் பட்ட துன்பங்களே பின்னாளில் அவரின் மனிதாபிமானம் மிக்க எழுத்தக்களாய் வந்தது என்பது புரிகின்றது.ஒரு மாதிரியாய் இருக்கும் ஒரு சீமாட்டி நல்ல புத்தகங்களைக் கொடுக்கின்றாள் . அதனை வாங்கிப் படிக்கின்றார். புத்தகத்திற்கும், சாப்பாட்டிற்காக உழைத்து விட்டு நேரம் கிடைக்குமா . கொஞ்சம் படிக்க என அவர் அலைந்த அலைச்சலையும் இன்றைய தலைமுறைக்கு கொஞ்சம் சொல்ல வேண்டும்.
வீடு முழுக்க புத்தகங்களால் நிறைத்திருக்கிறார் ஒரு நண்பர். அவரின் வாரிசுகள் அந்தப் புத்தகத்தின் பக்கமே செல்ல மறுக்கின்றன, நொந்து போகும் அவரைப் போன்றவர்களின் பிள்ளைகள் மாக்சிம் கார்க்கி புத்த்கம் படிப்பதற்காக பட்ட பாட்டை படிக்க வேண்டும். கையில் கிடைக்கும் அறிவுப் புதையல்களை அலட்சியப் படுத்துகிறோமே என்னும் உணர்வு வரும்.
கார்க்கி சொல்கின்றார். " நான் தொடர்ந்து பல புத்தகங்களைப் படித்து வந்தேன். அவற்றின் மூலம் மனித வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை நான் அறிந்து கொண்டேன். பல தீமைகளிலிருந்து புத்தகங்கள் என்னைக் காத்தன என்பதை என்னால் நிச்சயமாகச்சொல்ல முடியும் . ! குறிப்பாக ,ஜனங்கள் காதலுக்காக எவ்வளவு துன்பங்களை அனுபவித்தார்கள் என்னும் தகவல் , விபச்சார விடுதிக்குச்செல்வதிலிருந்து என்னைத் தடுத்தது....சந்தர்ப்பத்தால் ஏற்படும் சூழ்நிலையைப் பற்றின்றி எதிர்க்கும் கலையை புத்தகங்கள் எனக்குக் கற்றுக் கொடுத்தன . (பக்கம் 170)
" நான் புத்தகங்களைத் தேடி அலைந்தேன். கிடைத்த புத்தகங்களில் உள்ள விஷ்யத்தைத் தொழிலாளர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு அப்புத்தகங்களை அவர்களுக்குப் படித்துக்காட்டினேன். இப்படிப் படித்துக்காட்டிய மாலை நேரங்கள் என் வாழ்வில் மறக்க முடியாதவை. ....நான் வாசக சாலையில் அங்கத்தினராக இல்லையாதலால் புத்தகங்கள் சேகரிப்பது எனக்குச் சிரமமாக இருந்தது. பிச்சைக்காரனைப் போல் எல்லோரிடமும் கெஞ்சி நான் புத்தகங்களை வாங்கினேன். " பக்கம்(181)
விக்கிரகத் தொழிற்சாலையில் வேலையாளாக சேர்கின்றார். இவரின் சேவையைப் பாராட்டி , பாராட்டு விழா நடக்கின்றது. அவருடைய தொழிலாளி நண்பர் ஸிக்காரெவ் " நீ யார் ? பதின்மூன்றே வயதான அனாதைச்சிறுவன். .எனினும் வாழ்க்கையிலிருந்து தப்பியோடாமல், வாழ்க்கையுடன் மல்லுக்கட்டும் உன்னை,உன்னை விட 4 மடங்கு வயதான நான் புகழ்கிறேன். பாராட்டுகிறேன். இதுதான் சரியான மார்க்கம். சதா வாழ்க்கையுடன் மல்லிட வேண்டும் " என்றான் எனச்சொல்கின்றார் (பக்கம் 184)
பல்கலைக் கழகத்தில் சேர்வது. புதிய நட்புகள், புரட்சிக்காரர்களோடு தொடர்பு, அறிவு வளர்ச்சி மன்றத்தில் உறுப்பினராவது, ரொட்டிக் கடையில் வேலை பார்த்துக்கொண்டே தகவல் தொடர்பு பரிமாற்றம் செய்வது, கிராமத்தில் வாழ்வது , நகரத்தில் வாழ்வது, கிராம வாழ்க்கையின் போலித்தனம், முட்டாள்தனம் போன்றவற்றைப் பற்றிய விமர்சனங்கள் , முதன் முதலில் கவிதைப் புத்தகம் வெளியிடுவது போன்ற செய்திகளும் , கடைசி அத்தியாத்தில் மார்க்சிம் கார்க்கியின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கைக்குறிப்புகள், லெனினுக்கும் அவருக்கும் ஏற்பட்ட தொடர்பு, லியோ டால்ஸ்டாயைச்சந்தித்து, "தாய் " நாவல் மற்றும் அவரது படைப்புகள் பட்டியல் என்று இணைக்கப்பட்டிருக்கின்றது.
தாய் நாவல் நான் பத்து ,இருபது ஆண்டுகளுக்கு முன்னால் படித்தது. அவரது சிறுகதைத் தொகுப்பையும் வாசித்திருக்கிறேன், ஆனால் அவரது துயரமிக்க குழந்தைப்பருவ, இளைமைப்ப்ருவ வாழ்க்கையை நான் அறிந்ததில்லை. ஒரு மாபெரும் எழுத்தாளன் எப்படி சோதனைகளை எல்லாம் கடந்து அன்பே பிரதானம் என்று நம்பியதால் வாழ்க்கையில் நம்பிக்கை ஒளியோடு வாழ்ந்தான் , இரசியா என்னும் நாட்டின் மபெரும் மாற்றத்திற்கு எப்படி பங்களித்தான் என்னும் சரித்திரத்தை இந்தப் புத்தகத்தின் மூலம் அறியலாம். ஆனால் மார்க்சிம் கார்க்கி என்னும் எழுத்தாளனின் 30,35 வய்துக்கு மேற்பட்ட எழுத்தாளர் வாழ்க்கை இப்புத்தகத்தில் விரிவாக இல்லை. அப்படி ஏதேனும் புத்தகம் இருந்தால் சொல்லுங்கள் நண்பர்களே, நானும் படித்துக்கொள்கின்றேன்.