Tuesday, 29 October 2013

நிகழ்வும் நினைப்பும் (7) : உடல் வலியும் உள வலிமையும்

இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருக்க வேண்டிய நிலை. சிறு நீரகக் கல் இருக்கிறது என்று மருத்துவப்பரிசோதனையில் தெரிந்து அதனை எடுப்பதற்காக மருத்துவமனையில் இருந்த நேரம். மயக்க மருந்தைக் கொடுத்து ,க்ல்லை உடைத்து  பின்பு அறையில் வந்து போட்டிருந்தார்கள். மயக்கம் தெளிந்த பின்பு , சிறு நீர் போகும் பாதையில் ஒரு குழாயை மாட்டி அதன் வழியாக சிறு நீர் கழிக்கும் நிலமை. பெரிய வேதனையாக இருந்தது. உடைக்கப்பட்ட கல் துகள்கள், ஒவ்வொரு முறையும் சிறு நீரோடு கழிந்து போகும்போது கொடுக்கும் வேதனை , மரண வேதனையாக இருந்தது. அதனைப் போல எழுந்து நடப்பது, படிப்பது, படுத்து தூங்குவது என்று ஒவ்வொரு நிலையும் மிகப்பெரிய துன்பமாக இருந்தது,

                                அருகில் இருந்த எனது இணையர் சொர்ண்ம் வலி அதிகமாக இருக்கிறதா என்றார் . ஆமாம் என்றேன். இந்த நிலையில் வெளியில் போவது, அல்லது இதோடு  பொது நிகழ்வில் கலந்து கொள்வது நினைத்துப்பார்க்கமுடியுமா ? என்றேன். எப்படி போக முடியும் ?என்றார். தந்தை பெரியார் போயிருக்கின்றார். ஆண்டுக் கணக்கில் போயிருக்கின்றார். குழாயை மாட்டிக்கொண்டு, அது போய்ச்சேர ஒரு மூத்திரச்சட்டியையும் வைத்துக்கொண்டு போய் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். வேதனையோடு சில நேரங்களில் வலியால் சத்தமிட்ட நிலையிலும் பேசியிருக்கின்றார். 10 நிமிடம் , 15 நிமிடம் அல்ல, 3 மணி நேரம் 4 மணி நேரம் பேசியிருக்கின்றார். எதனைப்பற்றியும் கவலைப்படாமல், வரக்கூடிய எதிர்ப்புக்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பேசியிருக்கின்றார். எப்போது செத்தாலும் பரவாயில்லை, எப்படி செத்தாலும் பரவாயில்லை என்று 100 சதவீத கமிட்மெண்ட் என்று சொல்வார்களே அந்த உணர்வோடு பேசியிருக்கின்றார் என்றேன்.

                                    நினைத்துப்பார்த்தால் மலைப்பாக இருக்கிறது. எம்பதி எம்பதி என்று சொல்கின்றார்களே, அதனை நடைமுறையில் நடத்திக்காட்டியவர் தந்தை பெரியார். இப்படி சதிகாரர்களில் வலைகளில் சிக்கி நமது மக்கள் துன்பச்சகதியில் உழல்கிறார்களே, இவர்களுக்கு உண்மையைச்சொல்ல வேண்டும். இதிகாச, புராண, பண்டிகைப்புரட்டுக்களை மக்க்ளிடம் பிட்டுப்பிட்டு வைக்க வேண்டும். சாதி என்னும் இழிவினைச் சமூகத்தில் இருந்து துடைக்க வேண்டும் என்ற உணர்வோடு பயணித்த அவரின் பயணம் மிகக் கடினமானது. பார்ப்பனர்களால் விளைந்த கேடுகளை விட அவருக்கு , அவர் யாருக்காக பாடுபட்டரோ அவர்களிடம் இருந்து கிடைத்த கேடுகள்,குறுக்கீடுகள்  அதிகம் . எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிச்சாதித்தவர்களின் சாதனை எளிது. ஆனால் இந்தச் சாதி வெறி பிடித்த முட்டாள்களின் மத்தியில், உடல் வேதனையைப் பற்றிக் கவலைப்படாமல் உள வலிமையோடு பயணித்த அவரின் பயணமும் , அவர் அடைந்த வெற்றியும் நினைக்கும் போதெல்லாம் தெம்பு ஊட்டக்கூடியதாய் இருக்கின்றது.  நமக்கு ஏற்படும் சின்னச்சின்ன வலிகளை மறக்க வைப்பதாக  இருக்கிறது 

நிகழ்வும் நினைப்பும் (6) --கடவுளான என் மீது ....

"நித்யானந்தா இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 100 குழந்தைகளை எந்தவிதமான பாடத்திட்டமும் இல்லாமல் நித்யானந்தா பாடத்திட்டம் என்ற ஒரு பாடத்திட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு மாநில அரசு என எந்த அரசுகளின் கல்வித்துறையின் அனுமதியில்லாமல், ஒரு உள்ளூர தங்கும் பள்ளியை நடத்தி வருகிறார். அதன் மூலம்அவர் கோடிக்கணக்கான அமெரிக்க டாலர்களை சம்பாதிக்கிறார். இது சட்ட விரோதம் என உமேஷ் ஆரத்தியா கூறியுள்ளார்.

உமேஷ் ஆரத்தியாவின் அறிக்கையை தொடர்ந்து, நித்யானந்தாவின் பிடதி ஆசிரமம் மேல் நடவடிக்கை எடுக்கும் முடிவுக்கு கர்நாடக அரசு வந்துள்ளது என தெரிகிறது. இதைத் தெரிந்து கொண்ட நித்யானந்தா கர்நாடக முதல் அமைச்சர் சித்தராமையாவை, கண்டபடி திட்டி தனது இணையதளத்தில் பேசியுள்ளார். என் மேல் நடவடிக்கை எடுத்த முதல்வர்கள் காணாமல் போனார்கள். என் மேல் நடவடிக்கை எடுத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, சதானந்த கவுடா ஆகியோர் இருக்கும் இடம் தெரியாமல் போய்விட்டனர். கடவுளான என் மீது காவல்துறையை ஏவும் முதல்வர் சித்தராமையா விரைவில் சின்னாபின்னமாகிவிடுவார் என சாபமிட்டார்."  நக்கீரன்  செய்தி.

                                 நித்யானந்தா ஜெயிலுக்குள் கம்பி எண்ணாமல்  வெளியில் தெரிவதும், மீண்டும் தொலைக்காட்சிகளில் பிரசங்கம் செய்வதும், அதைப் படித்தவர்கள் பல பேர் கன்னத்தில் போட்டுக்கொண்டு பார்ப்பதும் என்ன கொடுமையடா இது ? என்று யாரும் கேட்க மாட்டேன் என்கிறார்களே !. நானே கடவுள் என்று சொல்லும் தைரியம் நித்யானந்தாவிற்கு எப்படி வந்தது ?  கடவுளான என் மீது .... என்று சொல்கின்றாரே இந்த ஆள் ? யார் இவர்? இவர் பூர்வீகம் என்ன ? எப்படி பிரபல்யம் ஆனார் ? இப்படி நானே அல்லா என்று ஒரு முஸ்லீம் அல்லது நானே பரமபிதா என்று ஒரு கிறித்துவர் சொன்னால் அந்த மதத்தைச்சேர்ந்தவர்கள் விட்டு விடுவார்களா? இப்படிச்சொல்லும் நித்யானந்தாவிற்குப்பின்னால் இந்து மதத்தைக் காப்பாற்றப்போகிறோம் என்று சொல்பவர்கள் - இராம கோபாலன் போன்றவர்கள் இருக்கின்றார்களே ? எப்படி ? தப்பித்தவறி கூட இதைப்பற்றி ஜெயமோகன்கள் - குருமூர்த்திகள் பேச மாட்டேன் என்று மெளனம் சாதிக்கின்றார்களே ? ஏன் ?  தமிழ் இந்து பேப்பர் எழுதுவதற்கு தமிழகத்தில் வேறு யாருமே இல்லாதது போல ஜெயமோகன் கட்டுரைகளாகவே நிறைய வெளியிடுகிறதே ? ஏன் ?  எதிர்ப்பது போல் காட்டிக்கொள்ளும் இவர்களை எல்லாம் இணைக்கும் மையப்புள்ளி எது ?

Monday, 21 October 2013

என்று மாறும் இந்நிலை ? - வா.நேரு

சுவரில் காந்தி
சிரித்துக்கொண்டிருந்தார்
பொக்கை வாயைத்
திறந்தபடி - அவரின்
பொன்மொழிகள்
ஆங்கிலத்திலும்
தமிழிலும்
வாடிக்கையாளரே
முக்கியமானவர் எனப்
பறைசாற்றியபடி !

வங்கி மேலாளர் முன்
வெகு நேரமாய்
நின்று கொண்டிருக்கிறேன்
ஏதோ ஒன்று எதிரில்
நிற்கிறதே எனும்
உணர்வு கூட இன்றி
கணினியைப் பார்ப்பதும்
பேப்பரைப் பார்ப்பதுமாய்
வெகு நேரமாய்
செய்யும் பம்மாத்து !

பொறுக்க முடியாமல்
சார் என்றேன்
என்னங்க என்றார்
அவசரத்தில்
வெடுக்கெனப்பிடுங்கும்
நாயின் குரலில் !
கிராமத்து வங்கிகளுக்கு
எப்படித்தான்
இப்படி ஆட்களாய்
பொறுக்கி வந்து
போடுகிறதோ அரசாங்கம் ?


அகம் நிறையக்
கடுப்பும்
முகம் சுளிக்கும்
பேச்சும்
எவருக்கும் உதவா
இயல்பும்
கொண்டவராய்
எங்கள் ஊரின்
வங்கி மேலாளர் !

பேருந்து கூட்டத்தில்
அறுந்து போன
செருப்பு காலில்
நிற்காமல்
கலவரம் செய்தது !
தைத்து வரலாம் என
மிதிவண்டியில்
பீபிகுளம் போனேன் !

செருப்புத்தைக்கும்
கடை திறந்திருந்தது
ஆளைக் காணோம்
கடை என அழைக்கப்படும்
துணிப்பந்தலுக்கு
அருகே நின்றிருந்தேன்

கையில் டீ டம்ளரோடு
ஓடி வந்தார் அவர்
அய்யா, கொடுங்கள்
தைக்கிறேன் என்றார்
டீ ஆறிவிடும்
முதலில் குடியுங்கள்
பின்பு தையுங்கள் என்றேன்
இல்லை ,இல்லை !
கொடுங்கள் என்றார்

நான் செருப்பில்
சுமந்து வந்த
அழுக்கை அகற்றி
ஊசியால் குத்தி
மேலும் தோலைச்சேர்த்து
அற்புதமாய்த் தைத்துத்
தந்தார் தோழர் அவர் !
அன்பு நிறை அவசரமும்
கனிவு நிறை கவனிப்பும்
மெய் சிலிர்க்க
வைத்தது என்னை !

எனது இரத்த வழிச்
சொந்தம் சிலபேர்
இவரைத் தொடாதே என்கிறான் !
வங்கி மேலாளரைச்
சாமி என வணங்குகிறான் !
என்று மாறும் இந்நிலை ?

எழுதியவர் : வா.நேரு
நாள் : 11-Oct-13, 7:13 pm
Nantri: Eluthu.com 

Thursday, 10 October 2013

அண்மையில் படித்த புத்தகம் : : கனவு ஆசிரியர்

அண்மையில் படித்த புத்தகம் : : கனவு ஆசிரியர்
தொகுப்பாசிரியர்                          திரு. க. துளசிதாசன்.
 வெளியீடு                                     : புக்ஸ் பார் சில்ரன் -பாரதி புத்தகலாயத்தின் ஓர் அங்கம் ,சென்னை-18
முதல் பதிப்பு                               : மே 2012  விலை ரூ 90 - மொத்த பக்கங்கள் : 144

                                                மதுரையில் நடைபெற்ற . புத்தகச்சந்தையில் கிடைத்த புத்தகம் . படித்து முடித்த பின் , படித்த நாள்  முழுவதும் புத்தகத்தில் இருக்கும் கருத்தைப் பற்றி யோசிக்க வைத்த புத்தகம். புகழ்பெற்ற  ஆளுமைகளிடம், அவர்களின் கனவு ஆசிரியர்கள் எப்படிப்பட்டவர்களாக இருப்பார்கள் எனக் கேட்டு, அந்த புகழ் பெற்ற  ஆளுமைகளின் கட்டுரைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார்கள். ஒவ்வொருவரின் கட்டுரையும்  தனித் தன்மையாக உள்ளது. எந்தக் கட்டுரையும் மற்றொரு கட்டுரையைப் போல இல்லை. சிலர் தங்கள் கனவு ஆசிரியரை வர்ணிக்க, பலர் தங்கள் அனுபவங்களைத்  தங்களை  ஆற்றுப்படுத்திய, வழி காட்டிய  ஆசிரியரை அடையாளம் காட்டக் கிடைத்த வாய்ப்பாக இக்கட்டுரைகளை ஆக்கியுள்ளார்கள். 
 
                                   முதல் கட்டுரையாளர் எழுத்தாளர் அசோகமித்திரன். அவர்  'பிஸினஸ் லைன் ' பத்திரிக்கையைச்சுட்டிக் காட்டி, அதில் 8க்கு 6 பேர், தங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான வழிகாட்டியாக பள்ளி ஆசிரியரைத்தான் சுட்டுகின்றார்கள் என்பதனைச்சுட்டிக் காட்டுகின்றார்.

                                  எழுத்தாளர் பிரபஞ்சன் தனது கட்டுரையில் ' ஐயா , நான் தங்களுக்குக் கடன் பட்டவன் ' என்று தனது தமிழ் ஆசிரியர் திருநாவுக்கரசைக் குறிப்பிடுகின்றார்.தமிழகத்துப் பள்ளிகளுக்கும், பிரெஞ்சுப் பள்ளிகளுக்குமான வேறுபாட்டைச்சுட்டிக் காட்டுகின்றார். ஏன் பிள்ளை படிக்கவில்லை என்று பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் கேட்கலாம், அதற்கு அவர்கள் பதில் சொல்வார்கள் பொறுப்பாய் என்று குறிப்பிடுகின்றார்.'என் தமிழ் ஆசிரியர் வணக்கத்திற்குரிய வித்வான் திருநாவுக்கரசு அவர்கள் ஒரு நாள் என் கட்டுரை நோட்டைப் பார்த்து, என்னை என்னிடம் இருந்த எழுதுகிறவனைக் கண்டு பிடித்தார். நான் ஏழாம் வகுப்பில் இருந்தேன்....ஆசிரியர்கள் என்பவர்கள்,  மூடிய கதவுகளைத் தட்டித் திறப்பவர்கள். வெளிகளின் காற்றை உங்களுக்கு நமக்கு சுவாசிக்க கற்றுத் தருபவர்கள். எங்கள் இருட்டை அவர்கள் திறந்து எங்களுக்கு ஒளி தந்தவர்கள். அவர்கள் கைகளில் விளக்குகள்  இல்லை. அவர்களே தீபங்களாக இருக்கிறர்ர்கள், எரிகிறார்கள் ... " பக்கம் 16 . " கற்கத் தொடங்குகிறவன் மாணவன், கற்றுக்கொண்டே இருக்கிறவன் ஆசிரியன் " எனக் குறிப்பிடும் பிரபஞ்சனின் கட்டுரை ஆழமான விமர்சனங்களைக் கொண்ட கட்டுரை இத்தொகுப்பில்.

                               எழுத்தாளர்  பொன்னீலன் கல்வித்துறையில் உயர் அதிகாரியாகப் பணியாற்றிவர். தான் வியந்த ஆசிரியரையும் அந்தச்சூழலையும் அவர் விவரிக்கும் பாணி அலாதியானது,வியப்பூட்டக் கூடியது அந்த ஆசிரியரின் வகுப்பில் மாணவர்கள் எவ்வளவு ஈர்ப்பாய்,ல்யித்து செயல்முறை மூலமாக கற்றுக்கொண்டார்கள் என்பதனை நன்றாக விவரிக்கின்றார். அவர் வியந்ததைச்சொன்னவுடன் நமக்கும் கூட அந்த வியப்பு தொற்றிக்கொள்கின்றது.. " இதுவரை சேமிக்கப்பட்ட அறிவைத் தன்வயப்படுத்திக் கொள்ள வேண்டியவர்கள் மட்டுமல்ல குழந்தைகள், அவற்றைத் தன் வயப்படுத்திக்கொண்டு , நாளைய தேவைகளுக்கான அறிவை உருவாக்க வேண்டியவர்களும் அவர்கள். இந்தப் பேருண்மையை உணர்ந்து செயல்படவேண்டியவர்கள் ஆசிரியர்கள் " எனப் பொன்னீலன் குறிப்பிடுகின்றார் (பக்கம் 25) .

                                                               'கிள்ளுவது ,கொட்டுவது, பிரம்பால் அடிப்பது போன்ற கொடுமைகள் நான் பள்ளியில் படித்தபோது சர்வசாதாரணம். இன்று அது மிகவும் குறைந்து விட்டது'  எனச்சொல்லும் தியடோர் பாஸ்கரன், முன்னாள் அஞ்சல் துறை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல்.  வன்முறை என்பது உடலளவில் வருத்துவது மட்டுமல்ல, வாய்ப்பேச்சு வன்முறையும் பயங்கரமானதுதான் என்பதனைச்சுட்டிக்காட்டி டில்லியில் தனது மகள் வகுப்பில் நடந்த நிகழ்வைச்சுட்டிக் காட்டுகின்றார். மேலும் " மக்களிடையே மத ரீதியில் ,மொழி ரீதியில் ,ஜாதி ரீதியில் உள்ள வேறுபாடுகளை ஏற்றுக்கொண்டு ,அவைகளை மதிக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கலாம் அந்தப்புனித வாய்ப்பு அவர்க்ளுக்கு இருக்கின்றது " என்றும் குறிப்பிடுகின்றார்(பக்கம் 29).

                                                          தமிழ் இலக்கியத்தில் இளங்க்லை,முதுகலை பயின்று,இந்திய ஆட்சிப்பணியில் இருக்கும் ஆர்.பாலகிருஷ்ணன் 'கடவுள் பதவிகள் காலியாய்க் கிடப்பது எதனால் ? ' எனும் கேள்வியைத் தலைப்பாக்கி தனது கட்டுரையைத் தந்துள்ளார். : "கற்பித்தல் என்பது ஒரு வகையில் கண்டுபிடிக்கும் கலை, கண்டுபிடிப்பில் உதவும் கலை, பலருக்கு தங்களின் பலம் எதுவென்று கூடத் தெரிவதில்லை. நல்ல ஆசிரியர்கள் மாணவர்கள் தங்களின் தனித்திறனை, பலத்தைக் கண்டுபிடிக்க உதவுகின்றார்கள். எனது சொந்த அனுபத்திலிருந்தே சொல்கிறேன். 'என்னை','எனக்கு','அடையாளம்' காட்டி 'அறிமுகம்' செய்து வைத்ததே எனது ஆசிரியர்தான். எனக்கு மேடையில் பேசும் திறமை உள்ளது என்று கண்டுபிடித்து ,என்னைப் பேசவைத்து, கைதட்டல், பரிசுகள் பாராட்டுக்கள் வாங்கிக் கொடுத்த அவரே என்னைக் கண்டு பிடித்த 'விஞ்ஞானி ' " எனக்குறிப்பிடுகின்றார்.ஆனால் அந்த ஆசிரியரின் பெயரை திரு.ஆர்.பாலகிருஷ்ணன் அவர்கள் குறிப்பிடவில்லை. குறிப்பிட்டிருந்தால் இவரை உருவாக்கிய ஆசிரியரின் பெயரையும் உலகம் தெரிந்திருக்கும்.

 " ஆசிரியப் பணி என்பது மற்ற எல்லா வேலைகளைப் போன்ற இன்னொரு 'வேலை' அல்ல. ஊதியத்தை மட்டும் கருதும் உழைப்பும் அல்ல. விரும்பிச்செய்வது, இன்னும் சொல்லப்போனால் விரும்புவர்கள் மட்டுமே செய்ய வேண்டியது(பக்கம் 32) எனச்சொல்லும் ஆர்.பாலகிருஷ்ணன் ஆசிரியப் பணியின் அடிப்படைகள், நல்ல ஆசிரியர் நல்ல மாணவர், நல்லாசிரியர் தாயுமானவர் , நல்லாசிரியரின் சமூகப்பொறுப்பு, நம்பிக்கையை விதைப்பவர், யார் கனவு ஆசிரியர் எனத் தலைப்புகள் கொடுத்து, ஒவ்வொரு தலைப்பிற்கு கீழும் தனது கருத்துக்களை கொடுத்துள்ளார். முடிவில் " எந்தப் பஞ்சத்தையும் இந்தப்பாரத  தேசம் தாங்கும். நல்ல ஆசிரியர்களுக்கான பஞ்சத்தைத் தவிர" என முடிக்கின்றார்.

                                                               'நல்ல ஆசிரியருக்கு அடிப்படை நல்ல மனிதராக இருப்பதுதான்' எனத் தன கட்டுரையில் குறிப்பிடும் பேரா. ச.மாடசாமி 'கலங்கிய கண்களைக் கண்டுபிடிப்ப்து முக்கியமானது ' எனத் தலைப்பிட்டு தனது கட்டுரையைத் தந்துள்ளார். அதற்கான எடுத்துக்காட்டுக்களாக  தான் பேராசிரியராக இருந்தபொழுது நடந்த நிகழ்வுகளை எடுத்துக்காட்டியுள்ளார்.'எனக்குரிய இடம் எங்கே? ' என்று புத்தகத்தின் ஆசிரியர் பேரா.ச,மாடசாமியிடம் இன்னும் அதிகமாக நான் எதிர்பார்த்தேன். ஏமாற்றம்தான் எனக்கு.ஒரு ஆசிரியர் எவ்வாறு இருக்கவேண்டும் என்பதனை பேரா,இரத்தின நடராசன் , இப்படி இப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்று தான் எண்ணும் 10 எண்ணங்களைப் பட்டியலிட்டு உள்ளார். பக்கம் (50-51) .

                                                              எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ' ஒவ்வொரு ஆசிரியரின் முகத்திலும் கனவு ஆசிரியரின் முகத்தைத் தேடுகிறேன் ' என்னும் தலைப்பிட்டு தனது கட்டுரையைக் கொடுத்துள்ளார். 'டோட்டோ ஜான் -ஜன்னலில் ஒரு சிறுமி என்கிற புத்தகத்தை வாசிக்காத ஆசிரியர் கனவு ஆசிரியராவது அப்புறம், ஓரளவுக்கு நல்ல ஆசிரியராகக்கூட இருக்க முடியாது " என்று கூறுகின்றார். பக்கம் 55. பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, நாம் கனவு ஆசிரியராகக் கூட நினைக்கமுடியாத ஒரு உண்மையான ஆசிரியரைப் பற்றிய ஜப்பான் மொழிப் புத்தகம் அது. பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகம். அதனை வாசித்திருப்பது ஒரு ஆசிரியருக்கான இலக்கணம் என்று அழுத்தம் திருத்தமாக இந்தப் புத்தகத்தில் கூறுகின்றார். 

என் கனவு ஆசிரியர் சாதி உணர்வு இல்லாதவராக ,எல்லாச்சாதி குழ்ந்தைகளையும் சமமாகப் பாவிக்கிறவராக அதே சமயம் சமூக நீதிப்போராட்டத்தின் வரலாற்றை அறிந்தவராக இருப்பார் என்று கூறும் ச.தமிழ்ச்செல்வன் அறிவியல் பாடம் எடுப்பவர் வெறும் அறிவியல் பாடம் எடுப்பவராக மட்டும் இருந்தால் போதாது, அறிவியல் மனப்பான்மை உள்ளவராக இருக்கவேண்டும் என்றும் கூறுகின்றார். மற்றவர்கள் யாரும் தொடாத கருத்துக்களை துணிந்து கூறும் கட்டுரையாக ச,தமிழ்ச்செல்வனின் கனவு ஆசிரியர் கட்டுரை உள்ளது கவனிக்கத்தக்கது.

                                                நாடகக் கலைஞர் பிரளயனின் கட்டுரை கல கல என அவரின் கடந்த் கால நிகழ்வுகளால் சிரிப்பும் சிந்தனையும் வரவைக்கும் கட்டுரை. அவருக்கு நான்காம்  வகுப்பு நடத்திய வடிவேலு வாத்தியார் சந்திர கிரகணம் பற்றி நடத்தியதையும், தமிழ்ப்பாடத்தின் பாடல் பகுதிகளை சொல்லித்தரும்போது 'தத்தகாரத்தோடு சொல்லித்தந்ததையும் நன்றாக ,சுவை பட விளக்கியுள்ளார். 'ட்ர்ர டும்ம டர்ரடும்/ டர்ர டும்ம டர்ரடும் எனப் பாடிக்கொண்டே வீட்டிற்கு போவோம் என்பதனைச்சொல்லும்போது , நாமே ஏதோ நாலாம் வகுப்பில் படித்துக்கொண்டு இந்தப் பாடலைப் பாடுவதுபோல ஓர் உணர்வு வருகின்றது. முடிவில் அன்று அவர் படித்த காலத்தில் இருந்த ஆசிரியர்கள்,சமூகம் இன்றைய காலத்தில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள் ,சமூகம் பற்றிய ஒப்பீடும், மதிப்பீடும் மிக எதார்த்தமாக, நடைமுறைச்சிக்கல்களை எடுத்துக்காட்டுவதாக உள்ளன.  

                                        எழுத்தாளர் பாமா, ஓர் ஆசிரியையாக இருப்பவர். தனது ஆசிரியருக்கு கடிதம் எழுதுவதுபோலத் தனது கட்டுரையை 'இந்த் டீச்சருகிட்ட அடிக்க மாட்டாங்க ' என்னும் தலைப்பில் கொடுத்திருக்கின்றார். தனது சிறுவயதுக் கனவு ஓர் ஆசிரியை ஆக வேண்டும் என்பதும் அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று தனது ஆசிரியை பற்றிக் குறிப்பிடுகின்றார். தனது ஆசிரியை சொல்லிக் கொடுத்த சில பாடல்கள் இன்றும் நினைவில் இருப்பதாகக் குறிப்பிட்டு , அந்தப் பாடல்களைக் குறிப்பிடுகின்றார். சாதி அடிப்படையில் தன்னை இழிவுபடுத்திய தலைமை ஆசிரியர் பற்றிக் குறிப்பிடுகின்றார். " என்னைப் பதப்படுத்திய உருவாக்கிய ஊக்கமூட்டிய பல ஆசிரியைகளின் கைவண்ணந்தான் இப்போது இருக்கும் இந்த 'நான்' .இவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டவை ஏராளம் ...." பக்கம் 81 என்று குறிப்பிடும் பாமா இத்தனைக்கும் ஆதிமூலமான உங்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன் என்று தனது பல ஆசிரியர்களை நினைவுபடுத்தி அவர்களைப் பாமா வணங்குகின்றார்.
                    
                                         பத்திரிக்கையாளர் ஞாநி , 'நான் பள்ளி ஆசிரியனாக இருந்தால்' என்று தனது கனவு ஆசிரியரைப் பற்றிய எண்ணங்களைப் பகிர்ந்துகொள்கின்றார். ' என்னைச்சுற்றியுள்ள இன்றைய உலகம் புத்திசாலி மனிதர்களின் அயோக்கியத்தனங்களாலும் , நல்ல மனிதர்களின் முட்டாள்தனங்களாலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது " என்று குறிப்பிடும் ஞாநி, இந்த நிலையை மாற்றக்கூடியவர்கள் தன் வகுப்பறையில் இருப்பதாக தான் ஆசிரியராக இருந்தால் நம்புவேன்  என விவரிக்கின்றார்.  

                             இந்த கனவு ஆசிரியர் நூலில் மிகவும் குறிப்பிடத்தக்க கட்டுரை ஆயிஷா இரா, நடராஜனின் 'எங்கள் ஆசிரியரிடம் ஒரு பயாஸ்கோப் இருந்தது ' என்னும் கட்டுரை. நிறைய அறிவியல் நூல்களை இன்று எழுதும் நடராஜன் , தனக்கு அறிவியல் மனப்பான்மை வரக்காரணமாக இருந்தவர் பெரியசாமி வாத்தியார் என்பதனை மிக்க நன்றி உணர்ச்சியோடும், உணர்வோடும் எழுதுகின்றார். ஆறாம் வகுப்பில் " என் வாழ்வின் மொத்த அர்த்தத்தையும் மாற்றித் திசை திருப்பும் பெரிய சக்தியாக அங்கே போன மூன்றாம் நாள் பெரியசாமி சார் அறிவியல் ஆசிரியராய் எங்கள் வகுப்பறைக்குள் நுழைந்தார் ' என்று விவரிக்கும் இரா.நடராஜனின் கட்டுரை இன்றைய அறிவியல் ஆசிரியர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை.

                    ஓவியரான டிராட்ஸ்கி மருது 'அப்பாதான் எனது கனவு ஆசிரியர்' என்று தனது சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கின்றார். 'உலகம் மிகப்பெரிய வகுப்பறை ' என்ற தலைப்பில் எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் தனது எண்ண ஓட்டங்களை வாசகர்களிடம் தெரிவிக்கின்றார். 'பொறுமைதான் ஆசிரியருக்கான அடிப்படைப் ப்ண்பு ' எனச்சொல்லும் எஸ்.இராமகிருஷ்ணன், 'கற்றுக்கொள், கற்றுக் கொடு,கற்றதை செய்ல்படுத்து ' என்று குறிப்பிடுகின்றார்.

                                   ஆயிஷா இரா.நட்ராசன் தன் அறிவியல் வாத்தியாரைச்சொல்லி  கலக்குகிறார் என்றால் எழுத்தாளர் த.வி.வெங்கடேஸ்வரன் தனது கணக்கு வாத்தியாரைச்சொல்லி கலக்குகிறார். த.வி.வெங்கடேஸ்வரன் தனது உயர் நிலைப்பள்ளி கணித ஆசிரியர் சங்கரன் சார் பற்றி ' காதலைத் தூண்டி விட்ட எனது கணித ஆசிரியர் '  என்னும் கட்டுரையை எல்லோரும் படிக்க வேண்டும். புதுமையான, எளிமையான சங்கரன் சார் அவர்கள் கணிதப்பாடத்தை நடத்திய விதம் அறியவாவது நீங்கள் இந்தப் புத்தகத்தை வாங்கிப் படிக்கலாம்.

                                         " அந்நிய சூழல், அன்பற்ற ஆசிரியர்கள்,கழுத்தை அறுக்கும் போட்டி, தலைசுற்றும் வீட்டுப்பாடம், நாளொரு தேர்வு என்று அவர்கள் (மாணவர்கள்) வெளியே வரத் தெரியாத மாயப்பாதையில் மாட்டிக்கொண்டு அவதியுறுகிறார்கள்.குழ்ந்தைகளின் படைப்பாக்கத்திறன் மிக நேர்த்தியாக நசுக்கப்பட்டு அவர்கள் நெஞ்சங்களில் தங்கப்பதக்கங்கள் தவழ்கின்றன.அவர்களின் கருத்துக்கள் குருத்துக்களிலேயே வெட்டப்பட்டுவிடுகின்றன" பக்கம் 118 என்று கூறும் வெ.இறையன்பு இலட்சிய ஆசிரியர்களுக்கான 10 படிகளை வரிசைப்படுத்திக்கூறுகின்றார்.

                                            எழுத்தாளர் கீரனூர் ஜாகீர்ராசா 'நீங்களும் மருதமுத்து அய்யாவாக விரும்புகிறேன் ' என்று தனது கட்டுரை தலைப்பையே தனது ஆசிரியர் பெயரால் கொடுத்திருக்கின்றார். தனது தந்தை, தாய். ..பள்ளி இறுதித்தேர்வில் தோல்வி ...,அதற்காக கலங்கிய தன் தந்தையின் கண்களும், அதன் தொடர்ச்சியாக தூக்கம் தொலைத்த இரவுகளும் என விவரித்துச்செல்கின்றார். மருதமுத்து அய்யா போதித்த தமிழுணர்வு, பகுத்தறிவு,பொதுவுடமை மட்டுமல்ல , நீ பின்னாளில் எழுத்தாளனாகவோ,பேச்சாளனாகவோ வருவாய் எனும் கணிப்பு போன்றவற்றை எழுதிச்செல்லும் கீரனூர் ஜாகீர்ராசா தன் வாழ்வின் நிகழ்வுகளை முன்னிறுத்தி எழுதியுள்ள கட்டுரை எதார்த்தமாக உள்ளது. எழுத்தாளர் பவா.செல்லத்துரையின் கட்டுரை பல கசப்பான அனுபங்களையும் , பல ஆசிரியர்களின் இழிவுகளை  தன் எளிய கம்பீரத்தால் துடைத்த தனது ஆசிரியர் எ.அ.ஜெயக்குமார் பற்றிக் குறிப்பிடுகின்றார். முடிவில் இந்தப் புத்தகத்தின் தொகுப்பு ஆசிரியர் க.துளசிதாசன் அவர்களின் கட்டுரையும் முடிவில் ஆப்ரஹாம் லிங்கன் தனது மகன் படித்த தலைமை ஆசிரியருக்கு எழுதிய கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது.

                                                        சில கட்டுரைகளை மிக விரிவாகப் பேசலாம். குறிப்பாக ச.தமிழ்ச்செல்வன், ஆயிஷா இரா.நடராசன், த,வி,வெங்கடேஸ்வரன், கீரனூர் ஜாகீர்ராசா ஆகியோரின் கட்டுரைகள் ஒவ்வொன்றைப்பற்றியும் பல பக்கங்கள் எழுதலாம் .விவாதிக்கலாம். இந்தப் புத்தகத்தை வாங்கி வீட்டில் கட்டாயம் வைத்திருங்கள். படியுங்கள். கண்ணில் படுகின்ற ஆசிரியர், ஆசிரியைகளிடம் கொடுத்து படிக்கச்சொல்லலாம். இந்தப் புத்தகத்தின் சில கட்டுரைகளை ஆசிரியர்களுக்குப்பாடம் எடுப்பவர்களிடம் கொடுத்து விவாதிக்கச்சொல்லலாம். பல ஆண்டுகள் கழிந்த பின்னும் மாணவர்களின் மனதில் மாமனிதர்களாய் அமர்ந்திருக்கும் ஆசிரியர்களின் குண நலன்கள் என்ன என்பதனை உணரச்செய்யலாம். ( அகில இந்திய வானொலி- புத்தக அறிமுகத்திற்காக எழுதியது  )
.

                                                             




                               

                                       

Saturday, 5 October 2013

நிகழ்வும் நினைப்பும் (5) : சாப்டூர் கல்வி அறக்கட்டளை

சாப்டூரில் இருக்கும் எனது உறவினர் பெ.நேரு, நேரு பெரியசாமி என்னும் பெயரில் பேஸ் புக்கில் இருக்கின்றார். சாப்டூரில் படித்து வெளியூரில் வேலைபார்க்கும், அல்லது சாப்டூரை சொந்த ஊராகக் கொண்டவர்கள் சிலரை  பேஸ் புக்கில் இணைத்து ஒரு குழுவை உருவாக்கி இருக்கின்றார். அனைத்து சாதியைச்சேர்ந்தவர்களையும் இணைத்து உருவாக்கி உள்ள ஒரு குழு.அந்தக் குழு. பாராட்டப்பட வேண்டிய பணி, இந்த இளைஞரின் பணி.  அண்ணன் ஜோதி மதிவாணன் அவர்கள் சாப்டூரில் படித்து வெளி நாட்டில் வேலை பார்க்கும் பொறியாளர். தன்னுடைய இளமைக் கால நினைவுகளை இக்குழுவில் நிறைவாகப்  பகிர்ந்து கொண்டார்.

                                     சில நாட்களுக்கு முன்னால், எனது பெரியம்மாவின் இறப்பிற்காக சொந்த ஊருக்குப்போயிருந்த பொழுது, என்னை பெரியசாமி நேரு சந்தித்தார். ஊரைப் பற்றி நிறையப்பேசிக்கொண்டிருந்தோம். கோவிலுக்கு நமது ஊரில் நிறையச்செலவழிக்கின்றார்கள். ஆனால் கல்வி பற்றிய விழிப்புணர்வு இருந்தாலும், கோவிலுக்கு நன்கொடை வாங்குவது போல யாரும் வாங்குவது இல்லை என்றார். தாராளமாக வாங்கலாம். கொடுப்பார்கள் உறுதியாக. ஆனால் சில விதிகளை நாம் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றேன்.

1. கணக்கு வழக்கு மிக வெளிப்படையாக இருக்க வேண்டும். யார் யார் எவ்வளவு கொடுத்தார்கள் என்பதும், அதனைப் பெற்ற பயனாளிகள் யார் என்பதும் உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிய வேண்டும். நன்கொடை கொடுப்பவர்கள் மட்டுமே இதன் உறுப்பினர்கள், பொறுப்பாளர்கள். இதற்கு முன் உதாரணமாக திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரி முன்னாள் முதல்வர் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் பெயரால் , நன்கொடை பெற்று நடக்கும் கல்வி அறக்கொடை டிரஸ்ட். இதன் தலைவராக எனது ஆசிரியர் பேரா.கி.ஆழவார் அவர்கள் இருப்பதையும் அதன் வெளிப்படையான தன்மை பற்றியும் கூறினேன் . அதனைப் போல நாமும் செயல்படலாம். என்றேன்.

2. மாணவ் மாணவிகளுக்கு கொடுக்கும் உதவி படிப்பு கட்டணமாகவோ, விடுதிக் கட்டணமாகவோ இருக்கலாம். பெற்றோர்களிடம் கொடுப்பதைவிட செக்காக அந்த நிறுவனங்களுக்கு மாணவ், மாணவியர்கள் சார்பாக கொடுக்கலாம்.நமது ஊரைச்சார்ந்த அனைத்து ஜாதி, மதத்தினருக்கும்- பொருளாதாரம் இல்லாமல் கல்வியைத் தொடர முடியாத மாணவ், மாணவிகளுக்கு இந்த உதவியைச்செய்ய வேண்டும்.

                    இதனைப் போலவே சில விதிமுறைகளை உருவாக்கிக்கொண்டு, கொடுக்கும் பணம் கொடுக்கும் காரியத்திற்கு மட்டுமே பயன்படும், தவறுகள் இருக்காது எனத்தெரிந்தால், கொடுப்பவர்கள் நிறைய இருக்கின்றார்கள். அதுவும் சாப்டூரில் படித்தவர்கள் உலகம் முழுவதும் இருக்கின்றார்கள். நிறைய உயர் பதவிகளில் இருக்கின்றார்கள். நம்மால் வசூல் செய்ய முடியும்,உதவி செய்ய முடியும்  என்றேன்.
                      பெ. நேரு, அதனை செயல்படுத்தும் விதமாக "நமது சாப்டூர் அரசுமேல்நிலைப்பள்ளியில் பயின்ற செல்வி பி.ரஞ்சிதா என்ற மாணவி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 471 மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றார். சக மாணவ-மாணவிகள் தன்னலம் கருதி தனியார் பள்ளிகளை நோக்கி சென்றபோதும், நமது பள்ளியிலேயே பயின்று முதல் மதிப்பெண்(969) பெற்று பள்ளியின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கும், பின்வரும் மாணவ-மாணவிகளுக்கு முன் மாதிரியாகவும் திகழ்ந்துள்ளார். தற்போது மதுரை மீனாட்சி கலைக்கல்லூரியில் BA(English) பயின்று வருகிறார். " என்று குறிப்பிட்டு அறக்கட்டளையின் முதல் பயனாளியை அடையாளப்படுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். எனது பங்களிப்பு இந்த அறக்கட்டளைக்கு பணத்தாலும் கரத்தாலும் உண்டு.எங்கள் ஊர் இளைஞர்களின் உருப்படியான முயற்சி. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள். 10000 மைல் பயணம் முதல் அடியில் இருந்து தான் தொடங்குகின்றது. முதல் அடி எடுத்து வைத்திருக்கும் பெ.நேருவுக்கும் அவரது தோழர்களுக்கும் உளமார்ந்த பாராட்டுக்கள்.

Wednesday, 2 October 2013

நிகழ்வும் நினைப்பும் (4)-ப்ரண்டலைன் பத்திரிக்கையும் மூட நம்பிக்கை தொழிற்சாலைகள் கட்டுரையும் :...

நிகழ்வும் நினைப்பும் (4)- ப்ரண்டலைன் பத்திரிக்கையும் மூட நம்பிக்கை தொழிற்சாலைகள் கட்டுரையும் :

                                திராவிடர் கழகத்தின் சொற்பொழிவாளர், வழக்கறிஞர் பூவை புலிகேசி அவர்கள் இன்று (02,10.2013) காலை அலைபேசியில் அழைத்து, அய்யா ப்ரண்டலைன் பத்திரிக்கை(அக்டோடபர் 4) வாங்கிப் படித்துப்பாருங்கள் என்றார். தி ஹிந்து பத்திரிக்கை குழுமத்தில் இருந்து வரும் மாதம் இருமுறை பத்திரிக்கை, தலைப்பே 'Superstition Industry '- மூட நம்பிக்கை தொழிற்சாலை என்று தலைப்பிட்டு வந்திருந்தது. வாங்கிப் படித்துப்பார்த்தால் , ஆச்சரியம். நடமாடும் கடவுள்கள் எனப்படும் சாமியார்களைப் பற்றிய விரிவான கட்டுரைகள், ஆசிரமம் பாபு என்றழைக்கப்படும், 16 வய்துப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக சிறையில் இருக்கும் ஆசிரமம் பாபு, அந்தக் கிரிமனலோடு மேடைகளைப் பகிர்ந்து கொண்ட அதவானி, உமாபாரதி படங்கள், தங்களைத் தாங்களே கடவுள் என்று அழைத்துக்கொள்ளும் சாமியார்கள்,அவர்களுக்குத் துணை நிற்கும் அரசு இயந்திரங்கள், அரசு, அரசியல் தலைவர்கள், அரசியல் தரகர்கள், கார்பரேட் நிறுவனங்கள் .இவர்களெல்லாம் இணைந்து எப்படி , பக்தி என்ற பெயரில் சாதாரண மனிதர்களை சுரண்டுகிறார்கள் என்பதனை விரிவான கட்டுரைகளாக கொடுத்துள்ளார்கள். திராவிடர் கழகத் தலைவர் அய்யா ஆசிரியர் வீரமணி அவர்கள் ஊடகங்கள் எப்படியெல்லாம் மூட நம்பிக்கைகளைப்  பரப்புவதற்கு துணை போகின்றார்கள் என்பதனையும் அவர்களின் போக்கு மாறவேண்டும் என்பதனையும் அவரது பேட்டியில் கொடுத்திருக்கின்றார். பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வீ.குமரேசன் அவர்கள் பகுத்தறிவாளர் கழக, திராவிடர் கழகத்தின் பணிகளைப் பற்றியும், அறிவியலுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான முரண்பாடுகள் பற்றியும், மூட நம்பிக்கை ஒழிப்பினை எந்தெந்த முறையில் எல்லாம் , எந்தெந்த் வடிவங்களில் எல்லாம் எடுத்துச்சென்று கொண்டிருக்கின்றோம் என்பதனைக் குறிப்பிட்டிருக்கின்றார்.அகில இந்திய நாத்திகக்கூட்டமைப்பின் தலைவர் பேரா.நரேந்திர நாயக், ஆந்திரா நாத்திக மையத்தின் தலைவர் டாக்டர் விஜயம், மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டம் கொண்டுவரப்பாடுபட்டதிற்காக கொல்லப்பட்ட நரேந்திர தபோல்கரின் பேரன் சுகாத் தபோல்கர், கேராளவைச்சேர்ந்த சானல் இடமருகு- இவர்களிடம் எல்லாம் பேட்டி கண்டு வெளியிட்டிருக்கின்றார்கள். 'திராவிட நிலத்தில்' எனத் தலைப்பிட்டு   தந்தை பெரியாரின் பணியையும் இன்றைய திராவிடர் கழகத்தின் பணியைப் பற்றியும் நன்றாகவே விரிவாகவே வெளியிட்டிருக்கின்றார்கள். பாராட்டப்பட வேண்டிய கட்டுரைகள். ஏறத்தாழ 21 பக்கங்களை மூட நம்பிக்கை ஒழிப்பு சம்பந்தமாக வெளியிட்டிருக்கின்றார்கள். உளமாற பாராட்டுகிறோம்..மனதார பாரட்டுகின்றோம். ஒவ்வொரு இதழுக்கும் சில பக்கங்களை இப்படி ஒவ்வொரு பத்திரிக்கையும் ஒதுக்கினால் ,நிச்சயமாக 'நாடு ஒளிரும்'..   கட்டுரை மட்டுமல்ல, கட்டுரைக்கு போடப்பட்டிருக்கும் சில கமெண்ட்ஸ் நன்றாக உள்ளது.
http://www.frontline.in/cover-story/in-the-name-of-faith/article5137396.ece
http://www.frontline.in/cover-story/asarams-empire/article5137420.ece
http://www.frontline.in/cover-story/thriving-business/article5137608.ece
சில பேர் இந்தக் கட்டுரைகளுக்காக ப்ரண்ட்லைன பத்திரிக்கையை குற்றமும் சொல்கின்றார்கள். படித்துப்பாருங்கள்.