Monday, 21 October 2013

என்று மாறும் இந்நிலை ? - வா.நேரு

சுவரில் காந்தி
சிரித்துக்கொண்டிருந்தார்
பொக்கை வாயைத்
திறந்தபடி - அவரின்
பொன்மொழிகள்
ஆங்கிலத்திலும்
தமிழிலும்
வாடிக்கையாளரே
முக்கியமானவர் எனப்
பறைசாற்றியபடி !

வங்கி மேலாளர் முன்
வெகு நேரமாய்
நின்று கொண்டிருக்கிறேன்
ஏதோ ஒன்று எதிரில்
நிற்கிறதே எனும்
உணர்வு கூட இன்றி
கணினியைப் பார்ப்பதும்
பேப்பரைப் பார்ப்பதுமாய்
வெகு நேரமாய்
செய்யும் பம்மாத்து !

பொறுக்க முடியாமல்
சார் என்றேன்
என்னங்க என்றார்
அவசரத்தில்
வெடுக்கெனப்பிடுங்கும்
நாயின் குரலில் !
கிராமத்து வங்கிகளுக்கு
எப்படித்தான்
இப்படி ஆட்களாய்
பொறுக்கி வந்து
போடுகிறதோ அரசாங்கம் ?


அகம் நிறையக்
கடுப்பும்
முகம் சுளிக்கும்
பேச்சும்
எவருக்கும் உதவா
இயல்பும்
கொண்டவராய்
எங்கள் ஊரின்
வங்கி மேலாளர் !

பேருந்து கூட்டத்தில்
அறுந்து போன
செருப்பு காலில்
நிற்காமல்
கலவரம் செய்தது !
தைத்து வரலாம் என
மிதிவண்டியில்
பீபிகுளம் போனேன் !

செருப்புத்தைக்கும்
கடை திறந்திருந்தது
ஆளைக் காணோம்
கடை என அழைக்கப்படும்
துணிப்பந்தலுக்கு
அருகே நின்றிருந்தேன்

கையில் டீ டம்ளரோடு
ஓடி வந்தார் அவர்
அய்யா, கொடுங்கள்
தைக்கிறேன் என்றார்
டீ ஆறிவிடும்
முதலில் குடியுங்கள்
பின்பு தையுங்கள் என்றேன்
இல்லை ,இல்லை !
கொடுங்கள் என்றார்

நான் செருப்பில்
சுமந்து வந்த
அழுக்கை அகற்றி
ஊசியால் குத்தி
மேலும் தோலைச்சேர்த்து
அற்புதமாய்த் தைத்துத்
தந்தார் தோழர் அவர் !
அன்பு நிறை அவசரமும்
கனிவு நிறை கவனிப்பும்
மெய் சிலிர்க்க
வைத்தது என்னை !

எனது இரத்த வழிச்
சொந்தம் சிலபேர்
இவரைத் தொடாதே என்கிறான் !
வங்கி மேலாளரைச்
சாமி என வணங்குகிறான் !
என்று மாறும் இந்நிலை ?

எழுதியவர் : வா.நேரு
நாள் : 11-Oct-13, 7:13 pm
Nantri: Eluthu.com 

8 comments:

  1. இன்றை நடைமுறை வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டியுள்ளீர்கள் . நன்றி

    ReplyDelete
    Replies
    1. படித்து கருத்தினை பதிவு செய்த தங்களுக்கு நன்றி .

      Delete
  2. மனித நேயம் எளியோரிடம் மட்டுமே உள்ளது மேலும் ஒரு எடுத்துக்காட்டு

    ReplyDelete
    Replies
    1. நன்றி கீதா அவர்களே ! உங்கள் முகமும் , ஊரும் அறியேன். படித்து , கருத்தினை பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி .

      Delete
  3. எப்போதும் போல இப்போதும்......உண்மை மட்டுமே.."உணர்ச்சிக்குத் தலைவாரிப் பூச்சூட்டுங்கள். அது தான் கவிதை" என்றானே ஒரு அறிஞன். அது இது தானோ...வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் போல தாராளமாய் பாராட்டியிருக்கின்றீர்கள். நன்றி !


      Delete
  4. உடைகளை பார்த்து மனிதனை மதிக்கிற போக்கால் தான் டி.வி.ல இவ்வளவு விளம்பரங்கள்.ஆனால் விருப்பத்தோடு வேலைசெய்யும் இவர்களை சமூகம் எப்படி நடத்துகிறது என தெளியவைக்கும் உங்கள் கவிதை அட்டகாசம் சார்

    ReplyDelete
  5. நன்றி ! படித்து தங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு.

    ReplyDelete