வா. நேரு
உலகம் முழுவதும் பண்டிகைகள்
கொண்டாடப்படுகின்றன. அந்தந்த மதத்தைச்சேர்ந்தவர்கள், தங்கள் மதத்தைத்
தோற்றுவித்தவரின் பிறந்த நாளையோ அல்லது மதப் பிரச்சாரம் சம்பந்தப்பட்ட
நாட்களையோ தங்கள் மதப் பண்டிகைகளாக கொண்டாடுகின்றார்கள்.
நாம் அறிந்த வரையில் பிறந்த நாளுக்குப்
பதிலாக இறந்த நாளை எவரும் கொண் டாடுவதாகத் தெரியவில்லை. ஆனால் இந்தியாவில்
தீபாவளி என்னும் பண்டிகை நரகாசுரன் என்பவர் இறந்ததாகவும், அவரே தன்னுடைய
இறந்த நாளைக் கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும் அதனால் அந்த
நாளை தீபாவளி என்று கொண்டாடுவதாகவும் பார்ப்பனர்கள் நம் மக்களுக்கு கதை
சொல்லி வைத்திருக்கின்றார்கள். நம் மக்கள் , திராவிடர்களே தீபாவளி இனாம்
கொடுங்கள், போனஸ் கொடுங்கள் என்று ஒவ்வொருவரிடமும் கேட்டுக் கொண்டு தீபாவளி
கொண்டாட தயாராக இருப்பதைப் பார்க்கின்றோம்.
இந்த தீபாவளி கொண்டாடுவதற்கான கதை என்ன
என்பதனை நம் மக்கள் முழுமையாகப் புரிந்து கொண்டால், உணர்ந்து கொண்டால்
கட்டாயமாக தீபாவளியைக் கொண்டாட மாட்டார்கள். தீபாவளி கொண்டாடுவதற்கான கதையை
முழுமையாக உண்மை நோக்கில் விளக்கும் புத்தகத்தை அண்மையில் படித்தேன்.
அப்புத்தகத்தின் தலைப்பு "நரகாசுரப் படுகொலை -ஓர் அரிய ஆராய்ச்சி நூல் "
என்னும் புத்தகமாகும். 1947-இல் வெளி வந்த இந்தப் புத்தகத்திற்கு முன்னுரை
எழுதிய தந்தை பெரியார் அவர்கள் ,' பொதுமக்கள் இதை இந்தப் புத்தகத்தின்
உதவியைக் கொண்டு நன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்து தீபாவளி கொண்டாட
வேண்டியது அவசியம் என்றுபட்டால் அந் தப்படி செய்யுங்கள்" என்று அடக்கத்தோடு
குறிப்பிடுகின்றார்.இந்த நூலின் முதல் பகுதி தந்தை பெரியாரின் முன்னுரை.
அடுத்ததாக ஆக்கியோன் முன்னுரை. அடுத்து பக்கம் 7 முதல் பக்கம் 56 வரை நூல்
ஆசிரியரின் கருத்து விளக்கம். முதல் பகுதி நரகாசுரப் படுகொலை என்னும்
தலைப்பில் கொடுக்கப்பட்டிருக்கிறது. 'சில நூறு ஆண்டுகளாகத் தீபாவளிப்
பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிற தென்பதை எல்லோரும் அறிவர். இந்தப் பண்டிகை
எதற்காக கொண்டாடப்படு கிறது? இதனால் யாருக்கு என்ன விதமான நன்மை
ஏற்படுகிறது? இதைக் கொண் டாடாமல் நிறுத்தி விட்டால் என்ன கேடு வந்து
விடும்? இந்தப் பண்டிகையை ஆதியில் ஆரம்பித்தவர்கள் யார்? அவர்கள் இதை
ஆரம்பித்த நோக்கம் என்ன? இப்போது இந்தப் பண்டிகையை யார் யார்
கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள்?
இந்தப் பண்டிகையைக் கொண்டாடக்
கடமைப்பட்டவர்கள் யார் ? இந்தக் கொண் டாட்டம் அறிவுடைமையான கொண்டாட்
டம்தானா?" என்று நிறையக் கேள்வி களோடு ஆரம்பிக்கும் இந்த நூல் , கேள்
விக்கான பதில்களை வரிசையாகக் கொடுக்கின்றது.
தீபாவளிப் பண்டிகைக்கு முக்கிய
ஆதாரமாக விளங்குவது விஷ்ணு புராணங்களில் ஒன்றான பாகவதமாகும்.
இதிகாசங்களில் ஒன்றான பாரதத் தையும் ஒரு
துணை ஆதாரமாகக் கொள்ள லாம் என்று கூறும் நூல் ஆசிரியர் சைவ மதப் புராணங்களை
ஆராயும்போது வைணவ புராணங்களையும், வைணவ புராணங்களை ஆராயும்போது சைவ
புராணங்களையும் ஆதாரமாக வைத்துக் கொண்டால் உண்மை விளங்கும் என்று
குறிப்பிடுவது நல்ல ஆராய்ச்சித்தன்மை உடையதாகும். நரகாசுரன் வரலாறு என்று
குறிப்பிட்டு சைவ புராணம் சொல்வதையும், வைணவப் புராணம் சொல்வதையும்
ஒப்பிட்டு நகைச்சுவையோடு கதையை விவரிக்கின்றார். விஷ்ணுப் பன்றி பூமா
தேவியைப் புணர்ந்ததால் பிறந்தவன் நரகா சுரன் என்று இரண்டுமே
குறிப்பிடுகின்றன என்பதனைக் குறிப்பிடுகின்றார். நரகா சுரன் காலம்
எனக்குறிப்பிட்டு, புராணப்படி 54,43,20,000 (54 கோடியே 43 இலட்சத்து
,இருபது ஆயிரம் ) ஆண்டுகள் நரகாசுரன் வாழ்ந்ததாக
குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இத்தனை கோடி வருசம் வரை நரகா சுரன் உயிரோடு
இருந்திருக்க முடியுமா ? என்னும் கேள்வியை நூல் ஆசிரியர் கேட் கின்றார்.
பூமி சுருண்ட விதம் எனக் குறிப்பிட்டு, பூமியின் மொத்த பரப்பளவு, நீளம்,
அகலம் போன்றவைகளைக் குறிப் பிட்டு எப்படி இதனப் பாயைப் போலச்சுருட்ட
முடியும்? சுருட்ட முடியுமென்றால் பூமியைப் போல எத்தனை மடங்கு பலசாலியாக
சுருட்டுபவர் இருக்க முடியும் ? போன்ற கேள்விகளைக் கேட்கின்றார்.
ஆரியர்களின் கட்டுக்கதைகள் இவை என்பதனை
படிப்ப வர்கள் மனதில் நிலை நிறுத்துகின்றார். இந்தியாவைத் தவிர்த்த எல்லா
தேசத்தாருக்கும் கீழ்க்கண்டபடி எழுதிக் கேட்டுப்பாருங்கள்:- "ஒரு
காலத்தில், இரண்யாக்ஷ்ன் என்கிற அசுரன் நாம் வாழுகின்ற
பூமியைச்சுருட்டிக்கொண்டு போனதாகவும், அதை எங்கள் மகா விஷ்ணுக் கடவுள்
மீட்டுக்கொண்டு வந்த தாகவும் எங்களுடைய தெய்வீகப்புராணங் கள் கூறுகின்றன.
இப்படிப்பட்ட சம்பவம், எப்பொழுதாவது உலகத்தில் நடந்ததாக, உங்கள்
நாட்டுச்சரித்திரங்களில் காணப் படுகிறதா? என்று எழுதிக் கேட்டுப்
பாருங்கள்" பக்கம் (22) என்று குறிப்பிடு கின்றார். அடுத்த பகுதி
நரகாசுரன் யார்? என்னும் பகுதியாகும். "நரகாசுரன் யார்? அவன் எந்த
இனத்தைச்சேர்ந்தவன்? என்பவைகளை ஆராய வேண்டுமானால், முதலாவது அவன் வாழ்ந்த
நாடு எது? அந்த நாட்டில் அக்காலத்தில் எந்த இனத் தார்
வாழ்ந்ததாகச்சரித்திரங்கள் கூறு கின்றன? ....புராணங்களில் வரும் சூசக மான
குறிப்புகளை வைத்துக் கொண்டு தான் சரித்திர ஆராய்ச்சியில் நுழைய வேண்டும் "
பக்கம் (23) என்று குறிப்பிடும் நூலாசிரியர் தற்போதையை அஸ்ஸாம்
மாகாணத்தில் இருக்கிற ஒரு பகுதியை ஆண்ட திராவிட அரசன் நரகாசுரன் என்று
குறிப்பிடுகின்றார் பல ஆதாரங்களோடு. ஆரியப்புலவர்கள் எப்படி திராவிட
மன்னர்களை அரக்கர்கள் எனக்குறிப்பிட்டு இழிவு படுத்தினார்கள் என்பதனையும்
,கொலை செய்தார்கள் என்பதனையும் குறிப்பிடுகின்றார்.
" நண்பர்களைப் போல, அடிமைகளைப் போல நடந்து
உளவறிந்து, சமயம் வாய்த்த போது ,அடையாளம் காண முடியாமல் மாறுவேடமிட்டுக்
கொண்டு ,திறமை மிகுந்த திராவிட மன்னர்களைக் கொலை செய்துவிட்டு, கொலையுண்டு
இறந்த திராவிட மன்னர்கள் மீது, ஆரியர் களுக்கு மட்டும் விளங்கத்தக்க
விதத்திலும், வெறுப்புண்டாக்கும் விதத்திலும் ,இழிவான புனைபெயர்களிட்டு
....மகாவிஷ்ணு என் கிற ஆரியன் , பன்றி வேடமிட்டுச்சென்று இந்தியாவை ஒரு
குடையின் கீழ் அர சாண்ட இரண்யாக்ஷ்ன் என்கிற திராவிட மன்னன், வேட்டையாடவோ,
வேறு காரண மாகவோ தனித்து வந்து, காட்டிலுள்ள ஏதோ ஒரு பள்ளத்தில் நிற்கும்
சமயம் பார்த்துத் திடீரென்று தாக்கிக் கொலை செய்துவிட்டு, அவனுடைய
அரசாட்சியைக் கைப்பற்றிக்கொண்ட கதை..." பக்கம் 26 என்று விவரித்து,
ஆரியர்கள் சூழ்ச்சியால் திராவிட மன்னனைக் கொன்ற நாள்தான் தீபாவளி என்பதனைக்
குறிப்பிடுகின்றார்.
நரகாசுரன் செய்ததாக சொல்லப்படும்
குற்றங்கள் அதிதியின் குண்டலம், வருணன் குடை, இந்திரனின் மணிகூட பர்வதம்
போன்றவற்றைக் குறிப்பிட்டு, ஒரு மன்னன் செய்ததாகச்சொல்லப்படும்
குற்றச்சாட்டுகள் சிறுபிள்ளைத்தனமானது என்பதனையும், ஆரியர்களின் மனித
நேயமற்ற யாகத்தை, சடங்குகளை, சம்பிர தாயங்களை எதிர்த்ததால் வஞ்சகமாக
ஆரியர்களால் கொல்லப்பட்ட திராவிடன் நரகாசுரன், அவனது இயற்பெயர் வேறாக
இருக்கும், அவனை இழிவுபடுத்தவே இப்படிப்பட்ட பெயரைச் சுட்டியிருக்கிறார்
கள் எனக் குறிப்பிடுகிறார். கிருஷ் ணாவதாரம் எனக்குறிப்பிட்டு கிருஷ்ண
வதாரத்தின் வண்டவாளங்களைத் தோலு ரிக்கின்றார் பக்கம் 45 முதல் 54 வரை
.பகைவர்களை வஞ்சித்துக்கொலை செய்வதற்காக ,ஆரிய மன்னர்கள் முதலில்
அவர்களுடைய மனைவிமார்களைக் கொண்டு, காதல் வலை வீசச் செய்து, அந்த வலையில்
பகைவர்கள் வீழ்ந்திருக் கும் சமயம், பக்கத்தில் மறைவாக் இருந்து கொன்று
விடுவார்கள் என்பதேயாகும் .இவ்விதமாகவே . கிருஷ்ணன் சத்தியபாமையுடன் நள்ளி
ரவில் சென்று நரகாசுரனைக் கொன்றி ருக்கிறான் (பக்கம் 53) .நரகாசுரனைக்
கொன்ற கிருஷ்ணன், நரகாசுரன் மனை வியரை எல்லாம் சிறை எடுத்துக்கொண்டு வந்து
தனக்கு மனைவியராக்கிக் கொண் டதாகப் புராணம் கூறுவதையும் குறிப்பிடு
கின்றார். "கிருஷ்ணன் என்பவன் கடவுள் அவதாரமல்ல, அவன் ஓர் ஆரியன்.ஆரியன்
மட்டுமல்ல, ஆரியர்களின் தலைவன், தலைவன் மட்டுமல்ல, திராவிடர்களின் பரம
விரோதி ....இந்தக் கொடியவன் , நம் குலத்தைக் கொலை செய்த கொண்டாட்ட
நாளைத்தான் நாமும் மான வெட்கமின்றிக் கொண்டாடி வருகின்றோம். தீபாவளி
என்றால் அது திராவிடர்களை வீழ்த்திய நாள் என்று அர்த்தம். நரக சதுர்த்தசி
என்றால் அது,இந்த நாட்டு மக்களை நாசம் செய்த நாள் என்றுதான் அர்த்தம். "
(பக்கம் 54) முடிவில் ஒரு கேள்வி கேட்கின்றார் நூல் ஆசிரியர். "அமெரிக்க
நாட்டு அணுகுண் டினால், அழகிய நகரங்கள் தரை மட்ட மாக்கப்பட்டு,
அமெரிக்காவுக்கு அடி பணிந்த ஜப்பானிய வீரர்கள், அந்த நாளை நல்ல நாளென்று
கொண்டாடுவார்களா? " என்று கேட்டு, திராவிடர்களாகிய நீங்கள் மட்டும்
தீபாவளியைக் கொண்டாடுகின் றீர்களே, சரியா என்று கேட்கின்றார்.
இந்த நூலின்
முன்னுரையை தந்தை பெரியார் கொடுத்திருக்கின்றார். அவர் தமது முன்னுரையில்
"நரகாசுரப் படுகொலை என்னும் இப்புத்தகத்திற்கு, நான் முகவுரை எழுத வேண்டும்
என்று, எனது நண்பர் ஒருவர் வேண்டிக்கொண்டார். மகிழ்ச்சி யோடு சம்மதித்து
எழுதுகிறேன்.
நரகாசுரன் என்பதாக ஒருவன் இருந் தானோ,
இல்லையோ என்பதும், நரகாசுரன் வதை சம்பந்தமான கதை, பொய்யோ, மெய்யோ
என்பதும்பற்றி, நான் கவலை எடுத்துக் கொள்ளவில்லை.
இப்படிப்பட்ட கற்பனைகளைச் செய்து,
ஆரியர்கள் அவற்றை நம் தலையில் சுமத்தி, நம்மை அதற்கு ஆளாக்கி, தங்கள்
உயர்வுக்கும், நமது இழிவுக்கும், தங்கள் வாழ்வுக்கும், நமது தாழ்வுக்கும்,
அவர்கள் நலத்திற்கும், நமது கேட்டிற்கும், அவர்கள் சமர்த்துக்கும், நம்
முட்டாள் தனத்துக்கும், நிரந்தர ஆதரவாக்கிக் கொண்டு, பாடும்,
கவலையுமில்லாமல் சுகபோகிகளாய் இருந்து, நம்மைச்சுரண்டி வருகிறார்களே
என்பதற்காகவே, நான் கவலைப்பட்டு இதன் தன்மையை, நம் திராவிட மக்க ளுக்கு
உணர்த்துவதற்கு ஆக பொது வாகவே, ஆரிய சாஸ்திர புராண இதி காசங்களின்
ஆபாசங்களையும், காட்டு மிராண்டித் தனங்களையும், விளக்கும் தொண்டை எனது
வாழ்வின் முக்கிய தொண்டுகளில் ஒன்றாகக் கொண்டு, பணியாற்றி வருகிறேன்.
அதனாலேயே இப்படிப்பட்ட புத்தகத்திற்கு என்னை முகவுரை எழுதக் கேட்டார்கள்
என்பதாகக் கருதியே, எழுதச் சம் மதித்தேன்.
திராவிட மக்கள் அருள் கூர்ந்து, நரகா சுரன் வதைப் புராணத்தை, சற்று பகுத் தறிவோடு சிந்திக்க வேண்டும்
ஆரியக் கற்பனையாகிய இக்கதையில் உள்ள முக்கிய சில குறிப்புகளை மாத்திரம் குறிப்பிடுகிறேன்.
1. இரணியாட்சன் என்கிற இராக்கதன், பூமியைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு சமுத்திரத்திற்குள் போய் பாதாளத்தில் ஒளிந்து கொண்டது.
2. மகாவிஷ்ணு என்கின்ற கடவுள், பன்றி
உருவம் எடுத்து, சமுத்திரத் திற்குள் புகுந்து, இராக்கதனைக் கொன்று, பூமியை
எடுத்துக் கொண்டு வந்து விரித்துவிட்டது.
3. இந்த விஷ்ணுப் பன்றியைக் கண்டு, பூமிதேவி காம விகாரப்பட்டுப் மோகித்துக் கலவி செய்தது.
4. இக்கலவியின் பயனாய் ஒரு பிள்ளை
பிறந்து, அப்பிள்ளை ஓர் அசுரனாக ஆகி, ஒரு இராஜ்ஜியத்தை ஆளும், அரக்கனாகி,
தேவர்களுக்கு (ஆரியர்களுக்கு, தன் தாய் தந்தையான கடவுளுக்கும்) கேடு
செய்தது.
5. பிறகு, அந்த நரகாசுரனைக் கடவு ளும் கடவுள் மனைவியும் கொன்றது.
6. அந்தக் கொலைக்கு, மக்கள் மகிழ் வது.
7. அந்த மகிழ்ச்சிக்குப் பேர்தான் தீபாவளிக் கொண்டாட்டம்.
என்பனவாகிய இந்த ஏழு விஷ யங்களை திராவிட மக்கள் மனித புத்தி கொண்டு சிந்திக்க வேண்டும் என்பதே, இப்புத்தகம் எழுதியவருடைய ஆவல்.
ஆதலால், பொதுமக்கள் இதை இந்தப்
புத்தகத்தின் உதவியைக் கொண்டு நன்றாய் ஆராய்ச்சி செய்து பார்த்து தீபாவளி
கொண்டாட வேண்டியது அவசியம் என்றுபட்டால் அந்தப்படி செய் யுங்கள். " .என்று
சொல்கின்றார். நூலைப் படித்து முடிக்கும் எந்தத் திராவிடருக்கும் ,
தலைமுறைக்கும் தீபாவளி கொண்டாடத் தோன்றாது. புத்தகத்தின் தலைப்பு :
நரகாசுரப்படு கொலை -ஓர் அரிய ஆராய்ச்சி நூல்
ஆக்கியவர் : அருப்புக்கோட்டை எம்,.எஸ்.இராமசாமி.
வெளியீடு : திராவிடர் கழக் (இயக்க) வெளியீடு, பெரியார் திடல், சென்னை-7
மறுபதிப்பு : அக்டோபர் 2012 , விலை ரூ 25.
***நன்றி : விடுதலை -1-10-13****
நல்ல பதிவு!
ReplyDeleteஎல்லோரயையும் சென்றடையவேண்டும்!
நன்றி அய்யா ! விதைத்துக்கொண்டே இருப்போம். ஒரு நாள் ஊர் முழுக்க தானியம் இருக்கும்.
DeleteDiwali celebration should be banned
ReplyDeleteதடை செய்வதைவிட, மக்களின் மனமாற்றத்தினால் காணாமல் போகச்செய்யவேண்டும்.
ReplyDeleteநல்ல பதிவு தோழர். இன்றைய தலைமுறைக்கு இவற்றை மீண்டும் மீண்டும சொல்ல வேண்டும்
ReplyDeleteசிறந்த நூலை உரிய நேரத்தில் அறிமுகப்படுத்தி, பரப்ப வேண்டிய கருத்துகளை வழங்கியுள்ளீர்கள்!
ReplyDeleteஅருமை அய்யா தெளிவான விளக்கம்
ReplyDeleteநன்றி...
ReplyDeleteதீபாவளிப் பட்டாசுகள் இப்போதே வெடிக்கத் தொடங்கிவிட்டன. இந்நேரத்தில் இக்கட்டுரையை மறுபடியும் கவனத்திற்குக் கொண்டுவந்திருப்பது பாராட்டுக்குரியது.
ReplyDeleteஆரியவழி வந்தவர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்த அந்த நாட்களில் இத்தகைய
புராணக்கதைகளை எடுத்துக்கொண்டு அவற்றின் உண்மைத் தன்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்தது பெரியாரின் தொண்டு. இவ்வாறு அதிரடியாக எதிர்க்கருத்துகளை முன்வைக்க வேண்டிய தேவையும் சூழலும் அன்றிருந்தன.
அவருடைய பாதையில் வருகிற நாம், இன்றைய வளர்ச்சி நிலைகளுக்கு ஏற்ப, இக்கதைகளை உண்மை வரலாறுகளோடு இணைத்துச் சொல்வது ஒரு முக்கியத் தேவை என்று கருதுகிறேன். பெரியார் அதைத்தான் எதிர்பார்ப்பார்.
நிலத்தின் பயன்பாடு உணரப்பட்டு அதை உடைமையாக்கிக்கொள்கிற ஆரிய சூழ்ச்சிகள் தொடங்கின. நிலவுடைமைச் சமுதாயம் தோன்றியது. அப்போது, காடுகளைக் கைப்பற்றத் தடையாக இருந்தவர்கள் அங்கே வாழ்ந்துகொண்டிருந்த திராவிடப் பூர்வகுடிகள். அவர்களை வேட்டையாடி வீழ்த்தினார்கள் ஆக்கிரமிப்பாளர்கள். அவ்வாறு வீழ்த்தப்பட்டவர்களில் ஒருவனாக, அவர்களின் தலைவனாக இருந்தவன் நரன்.
துரோகத்தால் அவனைக் கொன்றார்கள். மக்களிடையே அவனுக்கு இருந்த நற்பெயரைக் கண்டு, அவனைக் கொன்றது தெரிந்தால் தங்களையும் மக்கள் விரட்டியடிப்பார்கள் என்ற அச்சத்துடன், அவன் சாவதற்கு முன் தன் இறப்பை மக்கள் கொண்டாட வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்துவிட்டுச் செத்ததாகப் பரப்பினார்கள்.
மதநிறுவனமாகக் கட்டமைக்கப்பட்டபோது, இத்தகைய நிகழ்வுகள் புராணமயமாக்கப்பட்டு, மிகையான கற்பனைகள் கொட்டப்பட்டன. நரன் என்ற மக்கள் நேய மன்னன் நரகாசுரன் என்ற கொடியவனாக மாற்றப்பட்டான்.
இதை நான் ஒரு கட்டுரையாக எழுதியிருக்கிறேன். எழுத்தாளர் ச. சுப்பாராவ் அந்தக் கட்டுரையின் தாக்கத்தில் ஒரு சிறுகதையும் எழுதினார்.
புராணக் கதை பற்றிய பகடிகளுடன், சிந்திக்கத் தூண்டும் கேள்விகளுடன், பகுத்தறிவோடு யோசித்தால் பொருத்தமானவையாகப் புரியவரக்கூடிய நிகழ்வுகள் பற்றிய முன்மொழிவுகளையும் எடுத்துச்சொல்ல வேண்டும் என்பதே என் விருப்பம்.
நன்றி தோழர்...தீக்கதிர் இதழின் மேனாள் ஆசிரியரான தங்களின் கருத்து மிகவும் முக்கியமானது. எடுத்துச்சொல்வோம்.
ReplyDeleteநன்றி
ReplyDelete