அண்மையில் படித்த புத்தகம் : முள்
நூலின் ஆசிரியர் : முத்து மீனாள்
வெளியீடூ : ஆழி பப்ளிஷர்ஸ், சென்னை-24
மூன்றாம் பதிப்பு : ஆகஸ்ட் 2009
மொத்த பக்கங்கள் : 108, விலை ரூ 50
இது ஒரு பெண்ணின் சுய சரிதை. அவர் சாதனை புரிந்தவரல்ல, வேதனையில் வளர்ந்தவர். தொழு நோய் - இன்றும் கூட அந்த நோயின் பெயரைக் கேட்டவுடனே ஒதுங்குபவர்கள் நிறைய உண்டு. இந்த நூலின் ஆசிரியர் முத்து மீனாள் அந்த நோயின் அறிகுறியால் , இளம் வய்திலேயே வீட்டை விட்டு வெளியேறி தொழு நோய்களுக்கான விடுதியில் சேர்கின்றார். அவரின் பிறப்பு முதல் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்வுவரையிலான பதிவாக இந்த நூல் அமைகின்றது.
எழுத்தாளர் பாமா ஒரு நிறைவான முன்னுரையை 'எளிமையும் நேர்மையும் நிறைந்த எழுத்துக்கள் ' எனக் கொடுத்திருக்கின்றார். " தொழு நோய் பற்றிய விவரிப்புகள் ,சிகிச்சை முறைகள், சமுதாயப் பார்வை , உடனுறைபவர்களின் உளவியல், பாலியல், உடலியல் சிக்கல்கள், கன்னியர்களின் கனிவு, கண்டிப்பு, கருணை, விடுதியின் விதிமுறைகள் அவற்றை எதிர்கொண்டு வாழ்ந்த முறை அனைத்தையும் வெகு இயல்பாக ,எளிமையான ந்டையில் கூறுகிறார். தனிமையின் கொடுமை, கால் அறுவைச்சிகிச்சையின் போது ஏற்பட்ட அனாதை உணர்வு, உடல் வலியோடு சேர்ந்து உலுக்கிய உள்ளத்து வேதனை, உடனிருப்பவர்கள் அனுபவித்த துயரங்கள், மனக்காயங்களை மிகவும் நுட்பமாக , ஆழமாக , அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார். " எனப் பாமா விவரிக்கும் முன்னுரை, புத்தகத்தைப் பக்கம் பக்கமாகப் படித்து உள்வாங்கி , பாமா முத்து மீனாளாக மாறி எம்பதி எனும் மன உணர்வோடு பதிந்த பதிவாக உள்ளது.
பின்னுரை எழுத்தாளர் சுகுமாரன் 'இந்தியா டுடே ' பத்திரிக்கையில் எழுதிய நூல் விமர்சனம். "தமிழில் பொது வாசிப்புமுறை இன்று பெரிதும் மாறியிருக்கிறது. கதைகள், கவிதைகள் போன்ற இலக்கிய வடிவங்களை விடவும் அவையல்லாத பிற ஆக்கங்கள் அதிகமாக வாசிக்கப்படுகின்றன, குறிப்பாக சாதாரணமானவர்கள் என்று நாம் கருதும் மக்களின் வாழ்க்கைக் கதைகள் விருப்பத்துடன் வாசிக்கப்படுகின்றன."(பக்கம் 105 ) என்று சுகுமாரன் குறிப்பிடுகின்றார். உண்மைதான். முதல் தலைமுறை, சாதாரணமானவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படித்திருக்கின்றார்கள், சிலர் பட்டம், பதவி பெற்றிருக்கின்றார்கள். அவர்கள் தங்களைப் போன்றவர்களின் கதைகள் வரும்போது விரும்பி வாசிப்பது மட்டுமல்ல, பல இடங்களில் தங்கள் வாழ்க்கை அக்கதைகளில் பிரதிபலிப்பதைக் காண்கின்றார்கள். எனவே விரும்பி வாசிக்கின்றார்கள் , விரும்பி அப்படிப்பட்ட புத்தகங்களை வாங்குகின்றார்கள் எனலாம். " முத்து மீனாளின் பிள்ளைப் பருவத்திலிருந்து தொடங்கி அவரது திருமணம் வரையிலான வாழ்க்கை நிகழ்ச்சிகளைச்சொல்லுகிறது இந்தப் புத்தகம் ....நம்மை ஒரு முறை மதிப்பிட்டுக்கொள்ள இந்தப் புத்தகம் உதவும் என்பதுதான் இதை முக்கியமானதாகக் க்ருத என் வசமிருக்கும் காரணம் . " எனச்சுகுமாரன் குறிப்பிடுகின்றார்.
முன்னுரையும் பின்னுரையும் புத்தகத்தின் உள்ளடக்கத்தை சுருக்கமாகச்சொல்லிவிடும் அதே நேரத்தில் , உள்ளே சென்று நாம் புத்தகத்தை வாசிக்கிற போது முத்து மீனாளை மட்டுமல்ல, முத்து மீனாளை சுற்றி உள்ள கிராமப்புறத்துப்பெண்கள் அனுபவிக்கும் துன்பங்களை, அவர்களின் துன்பகரமான வாழ்க்கை நிலைகளச்சொல்லிச்செல்கின்றார். மாமியாவால் சாகும் மருமகள்களைத் தெரியும் , கிராமத்தில் அம்மா கொடுமையால் சாகும் மல்லிகா ஒரு அழுத்தமான பாதிப்பை படிக்கும் நம் மனதில் ஏற்படுத்துகின்றார். மதுரைக்குப் பக்கத்தில் உள்ள அரிட்டாபட்டியில் 1970-ல் பிறந்தவர் என்று நூல் ஆசிரியரின் குறிப்பு கூறுகின்றது என்றால் கதைக்குள் இருக்கும் பல நிகழ்வுகள் கிராமப்புறத்தில் இருக்கும் நமது சகோதரிகளின் வாழ்க்கை துன்பக்குறிப்புக்களைக் கூறுகின்றது.
" ஆஸ்பத்திருக்கு வரும் மதர் மதுரையிலிருந்து வருவார்கள். அவர் இத்தாலி நாட்டைச்சேர்ந்தவர். அவருக்குத் தமிழ் தெரியாது. எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சேவை எண்ணத்தோடு நடந்து கொள்வார். மதரை நான் அம்மா என்று அழைப்பேன். ...ஒரு வருடத்தில் என் முகத்தில் இருந்த படை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வந்தது. பெரியப்பா என்னை மருத்துவமனை நிரிவாகியிடம் அழைத்துச்சென்றார். நான் தொடர்ந்து படிக்க ஆசைப்பட்டேன். நான் படிக்க விரும்புவதைப் பெரியப்பா நிர்வாகியிடம் சொன்னார்.
அப்போது நான் அவர் காலில் விழுந்தேன். இனிமேல் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று அவர் அறிவுரை கூறினார். பின்னர் டாக்டரும் நான் படிப்பதற்கு ஒப்புக்கொண்டு அனுமதியளித்தார் " பக்கம் 26. இந்தப் பகுதி படிக்கும்போது என்னை வெகுவாகப் பாதித்தது. நம் கிராமத்துப் பிள்ளைகள் எப்படியாவது படிச்சுப்போட மாட்டமா? இப்போது இருக்கிற சூழலில் இருந்து மாறிவிட மாட்டோமா? படிப்பினால் நமது வாழ்க்கையில் ஒரு மாற்றம் வரும் என்ற நம்பிக்கையோடுதான் இருக்கின்றார்கள் என்பதற்கு மேலே சொன்ன பகுதி எடுத்துக்காட்டு.கும்பகோணம் சென்று தொழு நோய்க்கு மருத்துவத்தோடு படிப்பும் கிடைத்ததுதான் முத்து மீனாளின் வாழ்க்கையில் திருப்புமுனை. அந்த நிகழ்வே இந்தப் புத்தகத்தை எழுதும் அளவிற்கு அவருக்கு கிடைத்த வாய்ப்பின் தொடக்கம்
சில ஆண்டுகள் மருத்துவம் பார்த்து மாத்திரை சாப்பிட்டவுடன் முத்து மீனாள் முழுமையாக தொழு நோய்த் தாக்கத்திலிருந்து மீள்கின்றார். இது இந்த நூலின் மிகப்பெரிய செய்தி. இன்றைக்கும் கிராமப்புறங்களில், தொழு நோய் என்பது முன் ஜென்மப் பலன், இந்த நோய் குணமாகாது என்ற மூட நம்பிக்கை இருக்கிறது. முத்து மீனாளின் வாழ்க்கை அந்த மூட நம்பிக்கையை முறியடித்து தூக்கி எறிகின்றது,படிப்பவர்கள் மத்தியில், தனக்குத் தெரிந்த குடும்பங்களில் யாருக்காவது தொழு நோய் அறிகுறி இருந்தால் , முறையான் மருத்தவம் எடுத்துக்கொண்டால் சில வருடங்களில் முழுமையான விடுதலை தொழு நோயிலிருந்து கிடைக்கும் என்பதனை அழுத்தமாகச்சொல்வதற்கு அடிப்படையாக இருக்கின்றது.கிராமம் சார்ந்த பல செய்திகளை இந்தப் புத்தகத்தில் முத்து மீனாள் பதிந்திருக்கின்றார்.படித்துப்பாருங்கள். தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் வலியையும் , உள வலியையும் மிக எளிதாக இந்தப்புத்தகம் உங்களுக்கு உணரவைக்கும்.
//தொழு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் வலியையும் , உள வலியையும்//
ReplyDeleteநேரிடையாக உணர்ந்தவன்.அவர்களின் இன்னல் மன அழுத்தத்தை போக்கியவன் என்ர முறையில் இந்நூலின் முக்கியத்துவத்தை உணகிறேன். மிக அருமையக நூலை விமர்சித்துள்ளீர்கள். தொழுநோய் குணப்படுத்தக்கூடியதே. நன்றி அய்யா
நன்றி தோழரே
Deleteஅருமை அய்யா...! முள்ளும் மலரும் (எண்ணங்களும்)...!
ReplyDeleteநன்றி தோழரே
Deleteதெருவில் உட்கார வைத்து டியூசன் சொல்லித்தருவது. ஊர்த் திருவிழாக்களின் போது நாடகம் போடுவது என மிகச் சிறந்த ஆளுமையோடு நோயைப் பற்றி முழுதான புரிதலோடு, எங்கள் பகுதியில் வாழ்ந்து மறைந்த அய்யா அம்பலவாணரின் நினைவு வருகிறது.
ReplyDeleteஅண்ணன் அவர்களுக்கு நன்றி !
Delete