Friday, 7 March 2014

நிகழ்வும் நினைப்பும் :(19) திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் முதல்வர்-டாக்டர் இரா.கனகசபாபதி


 நிகழ்வும் நினைப்பும் :(19)
2003 மார்ச்  8 வரை  மார்ச்-8  எனபது மகளிர் தினம் மட்டுமே என்பது போய் எனது வாழ்வின் முக்கிய ஆளுமைகளில் ஒருவரை இழந்த தினமாகவும் ஆகிப்போனது. எத்தனைதான் நாம் நேர்மையை, ஒழுக்கத்தை, மேன்மையை புத்தகங்களில் படித்தாலும், நேரிடையாக அப்படி வாழ்பவர்களைப் பார்க்கும்போதுதான் நமக்கு உந்துதலும் உத்வேகமும் கிடைக்கிறது என்பது உண்மை . அப்படி என் வாழ்வில் சந்தித்தவர்களில் மிக முக்கியமானவர் திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியின் முன்னாள் முதல்வர் எங்கள் பிரின்ஸ்பால் திரு. டாக்டர் இரா.கனகசபாபதி அவர்கள்.

1981-முதல் 1984-வரை திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்தபோது எங்களின் கல்லூரி முதல்வராக இருந்தவர் திரு. இரா.கனகசபாபதி அவர்கள். அப்படி ஒரு மரியாதை கலந்த பயம் மாணவர்களுக்கு அவரிடம் இருந்தது. ஆசிரியர்கள், பணிபுரிபவர்கள் எல்லோருக்கும் அப்படித்தான் அவரிடம். மிக அதிகமாகப் பேசமாட்டார். மிகத் தெளிவான முடிவுகளை எடுப்பார். மனித நேயத்தோடு மாணவர்களை அணுகுவது,உதவுவது  என்பது அவரின் பிறவிக் குணமாக இருந்தது.

                                  முதலாம் ஆண்டு , முதல் செமஸ்டரில் நல்ல மதிப்பெண் எடுத்தவுடன் அவரது அறைக்கு அழைத்தார். எனது குடும்ப விவரங்களையெல்லாம் கேட்டுக்கொண்டார். வீட்டில் நாங்கள் 5 பேர். அம்மா மட்டும்தான் ஆசிரியராக இருக்கின்றார்கள். அப்பா இறந்து விட்டார் என்பதையெல்லாம் அறிந்து கொண்ட அவர், எந்த ஹாஸ்டலில் இருக்கின்றாய் என்றார். ' காந்தி விடுதி ' என்றேன். நல்லது , அங்கேயே இருந்து தொடர்ந்து படி என்றார். பகுதி நேரமாக வேலை பார்க்கின்றாயா? ஹாஸ்டலில் பணம் கட்டுவதற்கு வசதியாக இருக்கும் என்றார். சரி என்றேன். முதல் முதலில் எனக்கு உழைப்பின் மூலம் கிடைத்த பணம் , சம்பளம் என்பது திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் நூலகத்தில் பகுதி நேரமாக வேலை பார்த்துக் கிடைத்துதான். கல்லூரி 4 மணிக்கு முடியும். மாலை 4 முதல் 6 மணிவரை கல்லூரி நூலகத்தில் வேலை. மாணவர்கள், ஆசிரியர்கள் கொண்டுவரும் புத்தகங்களை பதிவது, புத்தகங்களை அடுக்கி வைப்பது, பிரித்து அடுக்குவது போன்ற வேலைகள். கல்லூரிக் காலத்தில் நூலகத்தில் இருந்ததும், நூல்களை அடுக்கியதும் .அந்த வேலைகள் மூலமாக கல்லூரிக்கு பணம் கட்டியதும் டாக்டர் இரா,கனகசபாபதி அவர்கள் இல்லையென்றால் இல்லை.

                                            காந்தி ஹாஸ்டல் என்றும், மெயின் ஹாஸ்டல் என்றும் இரண்டு ஹாஸ்டல் அன்று திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இருந்தது. மெயின் ஹாஸ்டலில் மாத மெஸ் பில் 600 என்றால் காந்தி ஹாஸ்டலில் 200 ரூபாய்தான் வரும் , ஏழை மாணவர்கள் தங்கிப் படிக்க ஓர் அருமையான அமைப்பை கல்லூரி நிர்வாகத்தோடு கலந்து ஏற்படுத்தி இருந்தார். அளவு சாப்பாடுதான் என்றாலும் பணம் நிறையக் கட்ட முடியாதவர்களுக்கு மிகப்பெரிய வாய்ப்பாக காந்தி ஹாஸ்டல் இருந்தது. அதில் படித்தவர்கள் இன்று உலகம் முழுவதும் மிகப்பெரிய பதவிகளில் இருக்கின்றார்கள். ஏழை மாணவர்கள் தங்கள் ஏழ்மையை உணர்ந்து படிப்பதற்கான இடமாக் அன்றைக்கு அந்த ஹாஸ்டல் இருந்தது,ஹாஸ்டலில் கண்டிப்பு இருக்கும் , ஆனால் கெடுபிடிகள் இருக்காது. 

                                 முதலாம் ஆண்டின் முடிவில்  விடுமுறை இரண்டு மாதங்கள். வகுப்பில் முதல் இரண்டு,மூன்று இடங்களுக்கு மார்க் எடுத்தவர்களுக்கு ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது,.அது தினத்தந்தி அலுவலகத்தில் வேலை பார்ப்பது. எனக்கு மதுரை தினத்தந்தி அலுவலகத்தில் வேலை பார்க்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. மூன்று நேரமும் தினத்தந்தி அலுவலகத்தில் சாப்பிட்டுக் கொள்ளலாம். அப்போது இரண்டு மாதம் வேலை பார்த்தற்கும் ஒரு சம்பளம் போட்டுக் கொடுத்தார்கள், மீண்டும் அது படிப்புச்செலவுக்கு உதவியது. இது எனது வாழ்வில் நிகழ்ந்த நிகழ்வுகள். இப்படி ஏழ்மையோடு திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் படித்த ஒவ்வொரு மாணவர் வாழ்வு உயர்விலும் டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் பங்களிப்பு என்பது மகத்தானது. மறக்க முடியாதது. எனது கல்லூரி வாழ்வில் ,பெரியாரியலை எனக்கு முறையாக அறிமுகப்படுத்திய பேரா.கி.ஆழ்வார் அவர்களின் பங்களிப்பும் மகத்தானது.டாக்டர் இரா.கனகசபாபதி அவர்கள் கடவுள் நம்பிக்கை உள்ளவர். ஆனால் பேரா.கி.ஆழ்வார் அவர்கள் பெரியாரிஸ்ட். ஆனால் அவர்கள் இருவருக்கும் ஒருவருக்கொருவர் அவ்வளவு மரியாதையும், அன்பும் இருந்தது.

                              மூன்றாம் ஆண்டு , கடைசி செமஸ்டர் முடிய இன்னும் இரண்டு மாதங்கள் இருந்தன. எனது அண்ணன் திரு வா.ஜெயராஜூ அவர்கள் எனக்கு தொலைபேசித்துறையில் வேலை கிடைத்திருக்கும் கடிதத்தோடு நேரிலே வந்து கொடுத்து , வேலையில் போய்ச்சேர். உன்னை விட மூத்தவர்கள் ,இரண்டு பேர் இருக்கின்றோம். எங்களுக்கு அரசு வேலை கிடைக்கவில்லை, உனக்கு கிடைத்திருக்கிறது,போய்ச் சேர்ந்தால் நல்லது , ஆனால் நீ மூன்று வருடம் படித்த படிப்பிற்கு , டிகிரி வாங்க முடியாதடா என்றார். நேரே போய் பிரின்ஸ்பாலைப் பார்த்தேன். அரசு வேலை வந்திருக்கின்றதா, வேலை கிடைப்பது அரிது, நீ நல்லாப் படிக்கிற, எம்.எஸ்.ஸி படிச்சு, போட்டித்தேர்வுகள் எல்லாம் நீ எழுதினால் வெற்றி பெறுவாய். ஆனால் உனது குடும்பம் இப்போ இருக்கிற நிலைமையில், நீ வேலைக்குப்போவது உனக்கு மட்டுமல்ல, உனது குடும்பத்திற்கும் நல்லது என்று சொல்லி, போய் அட்ட்ண்டன்ஸ் ரிஸிஸ்டரை வாங்கி வா என்றார். வாங்கி வந்தேன் . 45 நாள் கல்லூரி நடந்திருந்தது,45 நாளும் நான் வந்திருந்தேன்.  90 நாள் கல்லூரி நடக்கும், அதில் 45 நாள் வந்திருந்தால் பரீட்சை எழுதலாம் . போ, போய் வேலையில் சேர், அங்கு போய் உட்கார்ந்து படி. வந்து கெமிஸ்டரி பிராக்டிகல் பரீட்சையையும் , செமஸ்டர் தேர்வையும் எழுதிச்செல் என்றார் அப்படித்தான் , நான் பி.எஸ்.ஸி கெமிஸ்டரியை  நல்ல மதிப்பெண்கள் பெற்று , முடித்தேன். வேலைக்குப் போனாலும் தொடர்ந்து படித்துக்கொண்டே இரு என்றார். 1984-முதல் 1998 வரை  நெருங்கிய தொடர்புகள் இல்லை.

                               மதுரை தொலைதொடர்புத் துறையில் வேலை பார்த்துக்கொண்டிருநதபோதுதான், 1996-ல்  பிரின்ஸ்பால், மதுரையில் ஸ்பார்க் செண்டர் பார் ஐ.ஏ.எஸ். என்னும் நிறுவனத்தை அற்க்கட்டளை நிறுவி நடத்தப்போகின்றார் என்று தெரியவர, நானும் தொலைபேசித்துறையில் வேலை பார்த்த நண்பர் இரா.சீனிவாசனும் அவரைப் போய் பார்த்தோம். மதுரையில் இருந்த திருச்செந்தூர் கல்லூரி பழைய மாணவர்கள் பல் பேரைச்சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. மதுரை பெயிண்டிங் கம்பெனி உரிமையாளர்-திருச்செந்தூர் கல்லூரியின் முன்னாள் பேரா. திரு. டி.கல்யாணசுந்தரம், பேரா. திரு,மச்சக்காளை, பேரா.திரு. ஆண்டியப்பன், திரு.சுடலை போன்றவர்களின் நட்பும், தொடர்பும் கிடைத்தது.எனக்கு கற்றுக்கொடுத்த கணிதப்பேராசிரியர் சேகர் சார்,தமிழ்ப்பேராசிரியர் அய்யா இராமச்சந்திரன்,இயற்பியல் பேராசிரியர் இராமசேகரன் சார் எனப் பழைய பேராசிரியர்களோடு பழகும் வாய்ப்புக் கிடைத்தது.  தொடர்ந்து திரு.இரா,கனகசபாபதி அவர்களின் மாணவன் நான் என்று அறிமுகம் செய்து கொள்வதில் பெருமை கொள்பவனாகத் தொடர்கிறது வாழ்க்கைப் பயணம்.

                            பெரியாரியல் அடிப்படையில் நான் இணையரை அமைத்துக்கொண்டதும், நல்ல நிம்மதியான வாழ்க்கை நடத்திக் கொண்டுவருவதும் மிக்க மகிழ்ச்சி அவருக்கு. எனது குழந்தைகளை பேரன் அன்புமணி என்ன செய்கிறான், பேத்தி அறிவுமதி என்ன செய்கிறாள் என்றுதான் கேட்பார். அப்படி ஒரு பிரியம் தன்னுடைய மாணவர்களின் பிள்ளைகள் மீது. நண்பர் இரா.சீனிவாசன் , அவனது மகள் பாரதி மீதும் அதேமாதிரியான பாசம் பொழிந்தார் ,மதுரையில் வசித்த காலங்களில்.

                      மதுரை ஸ்பார்க் செண்டர் பார் ஐ.ஏ.எஸ். சார்பாக நானும்,மற்ற நண்பர்களும் இணைந்து பல கல்லூரிகளில் சென்று பேசியிருக்கின்றோம். எங்களுக்கு எல்லாம் பயிற்சி கொடுக்கும் ஆசிரியராக அவர் திகழ்ந்தார். கல்லூரி மாணவ், மாணவிகளிடம் என்ன பேசுவது, எப்படி பேசுவது, அவர்களிடம் இருக்கும் சோர்வை, அறியாமையை எப்படி நீக்குவது, போட்டித்தேர்வுகள் எழுதுவதை எப்படி அவர்களிடம் ஊக்கப்படுத்துவது போன்ற பல செய்திகளைச்சொல்லுங்கள் என்பார்.சொன்னதன் அடிப்படையில் மாணவ, மாணவியர்கள் கொடுக்கும் மறுமதிப்பீடை( பீட்பேக்), ஒவ்வொரு தாளாகப் படித்து எங்களுக்கு ஆலோசனைகளை, பாராட்டுக்களைச்சொல்வார்.  மாணவ, மாணவியர்கள் நலனில் தனது கடைசி மூச்சுவரை பாடுபட்டவர் அவர். அவரது மாணவர்களில் மச்சேந்திரநாதன் போன்ற ஐ.ஏ.எஸ்.கள். மகாலிங்கம் போன்ற ஐ.ஆர்.எஸ்.கள், பேராசிரியர்கள், பல்கலைக் கழ்க ஊழியர்கள் என்று பரந்து விரிந்து இருக்கின்றார்கள். . பல பொறுப்புகளில், பல நாடுகளில் இருக்கின்றார்கள்.அவரிடம் படித்த ஒவ்வொருவரின் முன்னேற்றத்திலும் அவரது பங்களிப்பு நேரடியாக  இருக்கும்.

                                         நானும் நண்பர்களும், சார் , உங்கள் அனுபவங்களை ஒரு புத்தகமாகப் பதிவு செய்தால் என்ன என்று கேட்டபோது ,முதலில் மிகவும் தயங்கினார். சரி என்று முடிவுசெய்து ,அவர் தன்னுடைய அனுபவங்களை எழுத ஆரம்பித்தபொழுது அசந்து போனோம். அத்தனை பைல்கள். தான் பிரின்ஸ்பாலாக வேலை பார்த்த 26 ஆண்டுகளின் அனுபவங்களையும் பைல்களாக, தனித்தனி பதிவுகளாக வைத்திருந்தார். அவற்றையெல்லாம் இணைத்து ' How to develop a college in a rural area "  என்று ஒரு புத்தகமாக கொண்டு வந்தார். அற்புதமான புத்தகம். பல கல்லூரிகளில் ரெபரென்ஸ் புத்தகமாக உள்ள புத்தகம். மாணவர்கள் உள்ளம், அவர்க்ள் புறச்சூழல் அதன் விளைவாக அவனுக்கு இருக்கும் அகச்சூழல், பிற்படுத்தப்பட்ட தன்மை என்பது எப்படி அவனது மூளைக்குள் இருக்கின்றது, அதனை எப்படி நீக்குவது, ஆசிரியர்கள் கடமை என்ன, நிர்வாகத்தின் கடமை என்ன, பெற்றோர்களின் கடமை என்ன என்று தனது அனுபவத்தை எல்லாம் இணைத்து அந்த நூலைக் கொண்டு வந்தார். மறுபதிப்பு கொண்டு வரவேண்டும், அதனை தமிழில் மொழி பெயர்க்க வேண்டும் என்று பழைய மாணவர்களின் நினைப்பு இன்னும் நினைப்பிலேயே இருக்கின்றது.

                                          மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் சிண்டிகேட் உறுப்பினராக இருந்து பல மாற்றங்களுக்கு காரணமாக இருந்தார். பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக ஒரு நாள் அவர் ஆவார் என்பது எங்கள் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் அது நடக்கவில்லை.  மார்ச்-8 என்பது எங்கள் பிரின்ஸ்பால் திரு.டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின்  நினைவு நாள்:, அவரது இறுதி அடக்கத்தில் குலையன்கரிசலில் நேற்றுத்தான் கலந்து கொண்டது போல் இருக்கின்றது. 11 ஆண்டுகள் ஓடிவிட்டது. ஆம் அவர் மறைந்த நாள் மார்ச்-8 , 2003 . திருச்செந்தூர் என்ற பெயர் கண்ணில் பட்டாலே எனது நினைவுகளில் ஓடுவது டாக்டர் இரா.கனகசபாபதி அவர்களின் நினைவுகள்தான்.  மண்ணில் வாழ்ந்த மகத்தான மனிதர்கள் புத்தகங்களில் மட்டுமல்ல, நம்மைச்சுற்றியும் இருக்கின்றார்கள், இருந்தார்கள்...இருப்பார்கள்.                           

19 comments:

  1. ஒரு நல்ல ஆசிரியருக்கு மாணவரின் அழகான, ஆழமான நன்றியுணர்வு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி தருமி அவர்க்ளே. 'கலங்கரை விளக்கத்திற்கு நினைவஞ்சலி 'என்று டாக்டர் இரா. கனக்சபாபதி அவர்களுக்கு நினைவு நாள் கூட்டம் திருச்செந்தூரில் இன்று (8.3.2014 ) நடக்கிறது என்னும் அழைப்பிதழ் இப்போது கிடைத்தது. பழைய மாணவர்கள் மற்றும் உடன் பணி புரிந்தவர்களால் நடத்தப்படுகின்ற கூட்டம் அது. அமைப்பாளராக பேரா.கி.ஆழ்வார் அவர்களும், ஒருங்கிணைப்பாளராக டாக்டர் மா.இராமச்சந்திரன் அவர்களும் இணைந்து டாக்டர் இரா.கனகசபாபதி நினைவு நிதி என்னும் கல்வி உதவித்தொகையை மாணவ, மாணவிகளுக்கு வழ்ங்குகின்றார்கள். எனக்கு வந்த கடிதம் " வணக்கம். புகழ்மிக்க கல்வியாளர் டாக்டர் இரா.கனகசபாபதி(முன்னாள் முதல்வர் ஆதித்தனார் கல்லூரி) அவர்களின் நினைவாக அவர்கள் வழியில் திருச்செந்தூர் வட்டாரப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்குக் கல்வி உதவித் தொகை கடந்த பத்து ஆண்டுகளாக வழங்கி வருகிறோம். கடந்த கல்வி ஆண்டில் கல்வி உதவித்தொகை வழங்கத் தாங்கள் நிதி உதவி புரிந்தமைக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஆண்டும் இந்த கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் தொடர்ந்து பங்கெடுத்துக்கொள்ள விழைகிறோம் - தங்கள்ன்புள்ள --கி.ஆழ்வார் " என்று எனது பேரா. கி.ஆழ்வார் அவர்களின் கையொப்பத்தோடு கடிதம் வந்துள்ளது.

      ஏறத்தாழ 4 லட்சம் ரூபாய் நன் கொடை கிடைத்துள்ளது. கொடுத்தவர்க்ள் விவரம், எவ்வளவு கொடுத்தார்கள் என்னும் விவரம், நன்கொடையைப் பெற்றுக்கொண்ட மாணவ மாணவிகள் விவரம் என்று ஒரு திறந்த புத்தகமாக , இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. திரு. டாக்டர் இரா.கனகசபாபதி அவர்கள் எப்படி அவர் இருந்தால் வரும் நன்கொடையை தேவையானவர்களுக்கு பிரித்து கொடுப்பாரோ அப்படி கொடுக்கக்கூடிய ஒரு குழு திருச்செந்தூரில் உள்ளார்கள். நன்கொடை கொடுத்தவர்களுக்கு நன்றி. பெற்றுக் கொண்டவர்க்ள் இன்னும் தீவிரமாக்ப் படித்து நல்ல நிலமைக்கு சென்று , படிக்கும் ஏழை மாணவ், மாணவர்களுக்கு உதவுவதே டாக்டர் இரா. கனகசபாபதி அவர்களுக்குச்செய்யும் நன்றிக்க்டனாக், அவரை நினைவு கொள்வதாக இருக்கும் என்பது என் கருத்து,

      Delete
  2. என்றும் அவர் உங்களின் மனதில் வாழ்கிறார்... வாழ்வார்...

    ReplyDelete
    Replies
    1. என் மனதில் மட்டுமல்ல, அவரிடம் படித்த பல மாணவர்களின் மனதில் இருக்கின்றார். என்னைப் போல அவர்களும் எழுதினால் பெரிய பெரிய புத்தகமாக போடத்தக்க அளவிற்கு அவரின் பணியும், மனித நேயமும் பதியப்ப்டும். நன்றி தனபாலன் அவர்களே.

      Delete
  3. வியக்கவைத்த மாமனிதர்!

    இப்பேற்பட்ட வழிகாட்டிகள் அமைவது வாழ்க்கையில் கிடைக்கிற வரம். .

    ReplyDelete
  4. உண்மைதான் சுந்தரா அவர்களே, இப்படி ஒருவர் வாழ்ந்தாரா என்று நினைத்து வியக்கும் அளவுக்கு வாழ்ந்து மறைந்த மாமனிதர் அவர்.

    ReplyDelete
  5. 'கிராமங்களில் கல்வி முறையை வளர்ப்பது எவ்வாறு ...' என்ற அவரின் நூல் மூலமாக அவர் வாழ்க்கையின் குறிக்கோளை பதிவு செய்து உள்ளார். இதன் வழி எளியோர் அறிவுச்செல்வம் பெற உறுதி ஏற்ப்போம். பகிர்ந்தமைக்கு நன்றியும் வணக்கமும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி செந்தில், வருகைக்கும் கருத்திற்கும்.

      Delete
  6. நல் ஆசிரியரின் மாணவராய்
    நல் ஆசிரியையின் மகனாய்
    அறிவு ஆசானின் தொண்டனாய்
    நன்றி மறக்கா நல் மனிதனாய்
    ஆசிரியர் வீரமணி வழி கண்டு
    பகுத்தறிவின் உழைப்பாய்
    பல்லாண்டு உழைக்கும்
    எளிமையின் சின்னமே
    உன் பதிவு கண்டு மகிழ்ந்தோம்
    நன்றி செய்யும் மாணவர்க்கும்
    உம்மைப் போன்ற நல்லவர்க்கும்
    மனித நேய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. அய்யா, மிக்க நன்றி. புனை பெயர் என்பதால், யார் என்று தெரியவில்லை. தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி. திரு.டாக்டர் இரா.கனகசபாபதி அவர்க்ள் ஆத்திகர் என்றாலும் தந்தை பெரியார் இடத்தில் மிகப்பெரிய மதிப்பும், நன்றி உணர்ச்சியும் இருந்தது. அவர் இல்லையென்றால் நாங்களெல்லாம் படித்திருக்க முடியுமா ? என்பார். தந்தை பெரியார் அவர்கள் குலக்கல்வி முறைக்கு எதிராக கையில் தீப்பந்தம் வைத்துக்கொள்ளுங்கள் என்று 1952-ல் சென்னையில் பேசிய பேச்சு ,நேரடியாக நான் கேட்டேன்.இன்னும் என் காதில் ஒலித்துக்கொண்டிருக்கின்றது என்பார். என்ன வீரம் பேச்சில், மறக்கவே முடியாது அந்தப் பேச்சை என்பார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைப் பற்றிக் கேட்பார். ஆசிரியர் அவர்களும் அவரைப் பற்றி சந்திக்கும் நேரங்களில் கேட்பார். அவருடைய சகோதரர் வழக்கறிஞர் திரு. நடன்சபாபதி அவர்களை நன்றாக அறிவேன். அவர் மூலம் உங்கள் பிரின்ஸ்பால் திரு. கனகசபாபதி அவர்களையும் நான் அறிவேன் என்று அய்யா ஆசிரியர் அவர்க்ள் சொல்வார்கள், தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் போலவே, மிக்க நகைச்சுவை உணர்வு மிக்கவர் திரு. கனக்சபாபதி அவர்கள். அவர் அடிக்கும் டைமிங் ஜோக் பல ஆண்டுகளுக்கு மறக்காமல் இருக்கும். நன்றி,ந்ன்றி.

      Delete
  7. 1980 களில் , ஏன் 1990 வரை வாழ்ந்த கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் தன்னலமற்றவர்களாக, வழிகாட்டிகளாக, உதாரணமானவர்களாக வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்களிடம் கற்ற மாணவர்களில் சிலர் இன்றும் அவர்களின் வழித்தோன்றல்களாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது, பள்ளி மற்றும் கல்லூரிகளைப் பார்க்கும் போது, பணம் சம்பாதிக்கும் நிறுவனமாகவே தெரிகிறது. அங்கே பணம் சம்பாதிப்பதை மட்டுமே கற்றுத் தர இயலும். மாணவர்களுக்கு , சமூகப்பார்வையும் , தொண்டினையும் யார் கற்றுத் தருவார்கள்? . நிறைய மாற்றம் வர வேண்டும். அதற்கு, உங்களுக்கு கிடைத்த ஆசிரியர்கள் ஐயா கனகசபாபதி மற்றும் வீரிசெட்டி போன்றவர்கள் அதிகம் தேவை. இல்லையென்றால் மனிதம் அழிந்து போகும்.

    ReplyDelete
  8. 1980 களில் , ஏன் 1990 வரை வாழ்ந்த கல்லூரி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் தன்னலமற்றவர்களாக, வழிகாட்டிகளாக, உதாரணமானவர்களாக வாழ்ந்து வந்துள்ளார்கள். அவர்களிடம் கற்ற மாணவர்களில் சிலர் இன்றும் அவர்களின் வழித்தோன்றல்களாக வாழ்ந்து வருகிறார்கள் என்பதும் உண்மை. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது, பள்ளி மற்றும் கல்லூரிகளைப் பார்க்கும் போது, பணம் சம்பாதிக்கும் நிறுவனமாகவே தெரிகிறது. அங்கே பணம் சம்பாதிப்பதை மட்டுமே கற்றுத் தர இயலும். மாணவர்களுக்கு , சமூகப்பார்வையும் , தொண்டினையும் யார் கற்றுத் தருவார்கள்? . நிறைய மாற்றம் வர வேண்டும். அதற்கு, உங்களுக்கு கிடைத்த ஆசிரியர்கள் ஐயா கனகசபாபதி மற்றும் வீரிசெட்டி போன்றவர்கள் அதிகம் தேவை. இல்லையென்றால் மனிதம் அழிந்து போகும்.

    ReplyDelete
  9. மறுபதிவு எனினும் இப்போதுதான் பார்க்கிறேன் அய்யா திரு இரா.க. அவர்களின் அன்பின் ஆழத்தை நெகிழ்வாகச் சொல்லியிருந்த விதம் மனதைத் தொட்டது. நன்றி. அவர்களின் துறை என்ன? துறைசார் பணிகள் பற்றியும் எழுத வேண்டுகிறேன் வணக்கம்

    ReplyDelete
  10. அருமையான பதிவு.நல்லவர்களாலே இவ்வுலகம் நிலைத்திருக்கிறது.

    ReplyDelete
  11. https://a1tamilnews.com/Tamilnadu/Is-he-still-a-Prime-Minister-Alumni-spreading-fame-!!/cid6683175.htm

    ReplyDelete
    Replies

    1. தம்பி முனைவர்
      நேரு பொரித்துள்ள
      பொன்னெழுத்துகளும், அதனைச்சார்ந்த
      நண்பர்கள்
      வாழ்த்துக்களும் பேருவகையை தருகின்றது.
      1974 இல் வேதியியல் பட்டப்படிப்பு முடித்த பின்னர், மும்பையில் தபால் அலுவலகத்தில் பணிபுறியும்போது,
      பிரின்சிபல்
      அவர்களை
      இரண்டு முறை,
      மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்
      சந்தித்து நலம் விசாரிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதனைஇப்போது நினைத்தாலும்
      மிகவும் மகிழ்ச்சியாகவும்
      அதே சமயத்தில் அவர் இன்று இல்லையே என்பதை நினைத்து வருத்தமாகவும் இருக்கிறது.
      அவர்கள் அன்புதான் என் வாழ்க்கையில் உந்து சக்தியை கொடுத்தது என்று கூறினால் மிகையாகாது.
      அவர்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும் என்பது திண்ணம். இந்த 11 வது நினைவு நாளில்,
      அவர்களுடைய ஆன்மா அமைதி அடைய இறைவனை பிரார்த்திப்போமாக.
      ஜெ மரிய சாமுவேல்

      Delete
  12. மிக்க நன்றிங்க அண்ணே..உங்களைப் போன்றவ்ரகளின் தொடர்பு கிடைக்கக் காரணம் நம்ம கல்லூரியும் நமது பிரின்ஸ்பாலுமே...

    ReplyDelete
  13. நன்றி நமது முதல்வர் Prof Dr. கனகசபாபதி ஐயா அவர்களுக்கு உரியது என்பதில் ஐயமில்லை, ஐயமில்லை. தம்பி நேரு வாழ்க வளமுடன்.

    ReplyDelete