Monday, 27 October 2014

தாத்தாவின் நினைவு நாளில் ....அப்பாவின் கோரிக்கை ..

என் தந்தை கரம்பற்றி
நான் நடந்ததாக
எனக்கு நினைவில்லை !

அதை வாங்கிக் கொடுங்கள்
இதை வாங்கிக் கொடுங்கள்
என என் தந்தையிடம்
நான் கேட்டதாக
நினைவுகள் இல்லை !

அப்பாவின் முதுகில்
அமர்ந்து யானை
சவாரி செய்ததாகவோ
அவர் ஓட்டும்
வண்டியில் அமர்ந்து
பள்ளிக்குச்சென்றதாகவோ
எந்த வித நினைவுகளும் இல்லை !

ஏழு வயதில்
அப்பாவின் பாடையோடு
இடுகாட்டிற்குப்போனது
மட்டுமே ஞாபகத்தில் இருக்கிறது !

ஆறடி உயரமுள்ள
அப்பாவை
ஆறடி உயரமுள்ள
குழிக்குள் உள்ளே இறக்கி
கல்லைப் போடு
கல்லைப் போடு
மண்ணைப் போடு
மண்ணைப் போடு
என்று மற்றவர்கள் சொல்ல
கல்லைப் போட்டு
மண்ணைப் போட்டு குழியை
மூடியது மட்டுமே
நினைவுகளில் இருக்கிறது !

கங்காரு போலவே
பிள்ளைகளைச்
சுமந்து கொண்டே
அலைகின்றாய் என
நண்பர்கள் திட்டியபோதும்
அவரவராய் வளரட்டுமே
எனப் பலர் அறிவுறுத்தியபோதும்
உங்களோடு இருப்பதிலே
உள்ளபடியே மகிழ்ச்சிதான் !

நான் இழந்ததை
உங்களுக்கு தருவதற்காக
எனை வருத்திக்கொள்வதை
எனது பலவீனமாய்
எடுக்க மாட்டீர்கள்
எனும் நம்பிக்கை
எனக்கு உண்டு
என் குழந்தைகளே !

ஆண்டு தோறும்
திதி அன்று திவசம் என்று
தந்தையை இழந்தவர்கள்
உழைக்காதவர்கள்
உண்பதற்கு
இழவு வரி அளிக்கும்
ஏற்பாட்டில் எனக்கு
உடன்பாடில்லை !

என் தந்தை நினைவுநாளில்
முதியோர் இல்லத்தில்
நுழைகின்றேன்
அங்கிருப்போர்
என் தந்தை வயதிலிருப்போர்
இருகரம் கூப்பி
எழுந்து நின்று வணங்கும் போது
என் தந்தையும் உயிரோடு
இருந்திருந்தால்
இவர் வயதில் இருப்பாரோ
எனும் எண்ணம் ஓட
அவர்களுக்கு வணக்கம்
சொல்லிபடியே நுழைகின்றேன் !
என்னால் முடிந்ததை
அவர்களுக்கு செய்கின்றேன் !

என் குழந்தைகளே !
தாத்தாவின் நினைவு நாளில்
அப்பாவின் கோரிக்கை ....
எதிர்காலத்தில்
என வழியைப் பின்பற்றுங்கள் !
அர்த்தமற்ற சடங்குகளை
ஆழக்குழி தோண்டிப்
புதையுங்கள் !
பெற்றோரின் நினைவு நாளில்
எளியோருக்கு உதவுங்கள் !



  • எழுதியவர் : வா.நேரு
  • நாள் : 28-Oct-14, 8:29 am
Nantri: Eluthu.com
எனது தந்தை சாப்டூர் க.வாலகுரு ஆசிரியர் அவர்கள் மறைந்து 43 ஆண்டுகள் ஓடிவிட்டன. அவரின் நினைவு நாள் இன்று (28.10.2014) . அவர் மறைந்த நாள் 28.10.1971. முதியோர் இல்லம் போய் வந்தவுடன் தோன்றிய நினைவுகளால் எழுந்த கவிதை. .... வா. நேரு 

26 comments:

  1. கவிதை ... தொட்டது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி, நன்றி , தங்களின் வருகைக்கும், கருத்திற்கும்.

      Delete
  2. // அர்த்தமற்ற சடங்குகளை
    ஆழக்குழி தோண்டிப்
    புதையுங்கள் //
    கருப்பு சட்டையின் சாயலோடு இருபினும் கவிதை யோசிக்கவும் வைத்துள்ளது..தொடர்ந்து எழுதுங்கள் அண்ணே..

    ReplyDelete
  3. நன்றி தம்பி, சொந்த ஊரிலிருந்து கருத்து இட்டமைக்கு. தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
  4. //பெற்றோரின் நினைவு நாளில்
    எளியோருக்கு உதவுங்கள் !// நினைவுகளையும், உணர்வுகளையும் புரிந்து கொண்டு உங்கள் வேண்டுகோளை நிறைவேற்றுவார்கள் அய்யா.

    ReplyDelete
    Replies
    1. நன்றி , தமிழ் ஓவியா , வருகைக்கும், கருத்திற்கும்

      Delete
  5. அய்யா, நன்றி. எனது வலைத்தளத்திற்கு வருகைக்கும், பாராட்டிற்கும்.

    ReplyDelete
  6. நல்ல அறிவுரை...பிள்ளைகளுக்கு மட்டுமல்ல ...பல அப்பாக்களுக்கும் கூட......பாராட்டுக்கள்...

    ReplyDelete
    Replies
    1. அண்ணே, நன்றி, வருகைக்கும், கருத்திற்கும். தொடர்ந்து கருத்துக்களை விதைத்துக்கொண்டே இருப்போம்,கவிதையாகவோ, கட்டுரையாகவோ.....-ஏதேனும் ஒரு இலக்கிய வடிவத்தில்.

      Delete
  7. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிகழ்வும் நம்மை செதுக்கும் உளியாக அமைவது இயற்கை. இயற்கை உருவாக்கி தந்த சிற்பத்தை உணந்து வாழும் மனிதர்களின் வாழ்க்கை என்றும் படம் தான். உங்களின் வரிகள் அருமை ஐயா. நன்றி.....

    ReplyDelete
  8. அருமை, அருமை!!!! சிறப்பு தோழர்
    ///அப்பாவின் கோரிக்கை ....
    எதிர்காலத்தில்
    என வழியைப் பின்பற்றுங்கள் !
    அர்த்தமற்ற சடங்குகளை
    ஆழக்குழி தோண்டிப்
    புதையுங்கள் !
    பெற்றோரின் நினைவு நாளில்
    எளியோருக்கு உதவுங்கள் !///
    👏👏👏

    ReplyDelete
  9. நினைவைப் போற்றுவோம்!

    ReplyDelete
  10. வலிக்கிறது அண்ணே.
    இருக்கும் போது உணர முடியா சூழல்.
    இல்லாத பொழுது....புரியும் போது...
    தங்களது வரிகளின் வழியில் வலிக்கிறது...

    ReplyDelete
  11. நன்றி சுரேசு..வலியையும் பதிவு செய்துதான் நமக்கு நாமே ஆறுதல் கொடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது.

    ReplyDelete
  12. இதயம் கனக்கிறது!

    ReplyDelete
  13. எளியோருக்கு உதவிட சொல்லும்போதே... வறிய பல்லுயிர்களுக்கும்... மனித நாகரிகம் தோன்றிய காலம் தொட்டு நம்மோடு பயணிக்கும் அனைத்து உயிர்களுக்கும் உதவிட சொல்வோம் Sir. தேவை மனித நேயம் உள்ளடக்கிய உயிர்நேயமும்

    ReplyDelete
  14. நன்றிங்க சார்,வாசிப்பிற்கும் கருத்திற்கும்...

    ReplyDelete
  15. தோழர் மனம் கனத்தது. குழந்தைகளுக்கு அருமையான செய்தி

    ReplyDelete
  16. நன்றி தோழர்...தங்கள் பெயர் இல்லை...

    ReplyDelete
  17. வா.நேரு28 October 2024 at 10:40

    நன்றி தோழர்...

    ReplyDelete
  18. ஸ்ரீதேவி28 October 2024 at 10:42

    மனதை தொடும் பதிவு ஐயா..

    வயதான அப்பாக்களை பார்க்கும் போது ,தாங்கள் கொடுத்து வைத்தவர்கள் என்று சிந்திக்க வைக்கும் பதிவு..

    ReplyDelete
  19. @ஸ்ரீதேவி.. நன்றிங்க...

    ReplyDelete