Thursday, 2 April 2015

புகழாரம் சூட்டப்பட்ட பேரா. நம்.சீனிவாசனின் நூல்....

                           புகழாரம் சூட்டப்பட்ட பேரா. நம்.சீனிவாசனின் நூல்


                                       பத்து வயதில் பகுத்தறிவுப்பணியைத்தொடங்கி, 82 வயதிலும் இருபது வயது இளைஞராய் தந்தை பெரியாரின் பணியைத்தொடரும் தமிழர் தலைவர் கி.வீரமணி தனித் தன்மை மிக்கவர். பன்முகத்தன்மை கொண்டவர். பேச்சுப்போட்டிகளில் பரிசுகளை வாங்கிக் குவித்தவர் , ஆனால் அந்த ஆற்றலை தன் வளத்திற்காகப் பயன்படுத்தாமல் திராவிடர் வளத்திற்காகப் பயன்படுத்தியவர். ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாதாடுவதில் வல்லவர் நேரில் என்றாலும் ஊடகத்திலும் என்றாலும் நீதிமன்றத்தில் என்றாலும் ஆனால் அந்த வாதத்திறமையைப் பயன்படுத்தி வழக்கறிஞர் தொழிலில் அள்ளிக்குவித்தவரல்ல   விடுதலை ஆசிரியராய் தந்தை பெரியாரின் கட்டளையைக் கேட்டு வந்தமர்ந்து அரை நூற்றாண்டாய் விடுதலைப் பத்திரிக்கையின் ஆசிரயராக உலக சாதனை படைத்தவர், கட்டந்தரைகளாய் கிடந்த இடங்களை எல்லாம் கல்விச்சோலைகளாய் மாற்றிக் காட்டியவர். தனிப்பெரும் தலைவர் தந்தை பெரியாரின் தொண்டர் அய்யா ஆசிரியர் அவர்களின்  வாழ்வை, பணியை தனது முனைவர் பட்ட ஆய்வேடுக்காக எடுத்துக்கொண்டு, கடுமையாக உழைத்து, மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு ஆனால் தமிழர் தலைவரின் தனித்தன்மைகளை இயல் இயலாகப் பிரித்து பிரித்து , ஆதாரங்களை அடுக்கடுக்காகப் பட்டியலிட்டு , அவரின் ஒப்பற்ற தன்மைகளை உலகிற்கு அறிவிக்கும் வண்ணம் ஆய்வேட்டை அளித்து , அதன் மூலம் முனைவர் பட்டம் பெற்றார் மதுரை மன்னர் கல்லூரியின் தமிழ்த்துறைப்பேராசிரியர் நம்.சீனிவாசன்.


அந்த ஆய்வேடு 'தமிழர் தலைவரின் வீரமணியின் வாழ்வும் பணியும் ' என்னும் நூலாக வடிவம் பெற்றது திராவிடர் கழக(இயக்க ) வெளியீடாக. அந்த நூலினை முதன்முதலில் வெளியிடும் பெருமையைப் பெற்றது தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம். அதன் பொறுப்பாளர்கள் தேனியாகச் சுற்றி சுற்றி வலம் வந்து , இந்த வெளியீட்டு நிகழ்வு மூலம் மற்றவர்களுக்கு அந்தத் தேனை அளிக்கும் பெருமை பெற்றனர். அந்த விழா 28.03.2015 சனிக்கிழமை மாலை 6 மணியளவில் , தஞ்சாவூர் குழந்தை ஏசு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.அதில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தஞ்சாவூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்திய இந்த நூல் வெளியீட்டு விழாவின் தொடக்கத்தில் மானமிகு தெற்குநத்தம் பி.பெரியார்நேசன்-குமரவேல், பலகுரல் மன்னன் வே,தமிழ்ச்செல்வன் ஆகியோர் வழங்கிய பல்சுவை கலை நிகழ்ச்சி மிகச்சிறப்பாக நடைபெற்றது. பகுத்தறிவாளர் கழகத்தின்  மாநில துணைத்தலைவர் மா.அழகிரிசாமி நிகழ்வுக்கு தலைமை தாங்கி உரையாற்றினார். தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகச்செயலாளர் கோபு.பழனிவேல் அனைவரையும் வரவேற்றும், ஒருங்கிணைத்தும் உரையாற்றினார். முன்னிலை ஏற்ற தி.க. மாவட்டத்தலைவர் சி.அமர்சிங், மாவட்டச்செயலாளர் அ.அருணகிரி, பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் வ.இளங்கோவன், மாவட்டத்தலைவர் ந.காமராசு, மாவட்ட துணைச்செயலாளர் தங்க.வெற்றிவேந்தன் , மாவட்ட துணைத்தலைவர் VMK வீ.கதிரேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் பாராட்டுரை வழங்கினார். எப்போதும் போல கழகச்செயல்பாட்டில் தஞ்சாவூர் முந்திக்கொண்டுள்ளது என்று பாராட்டிய பொதுச்செயலாளர் "தமிழகத்தில் முதன்முதலாக இந்த நூல் வெளியீடு தஞ்சையில் வெளியிடப்படுவது பெருமை, பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்களுக்கு பாராட்டுகள் , பேரா.நம்.சீனிவாசன் தன்னுடைய எம்.பில். ஆய்வுப்பட்டத்திற்கே , கி.வீரமணியின் சொற்பொழிவுகள் -ஒரு ஆய்வு என்றுதான் ஆய்வு செய்தார். ஒரு அற்புதமான நூல் அது. இன்றைக்கு முனைவர் படத்திகும் அய்யாவின் வாழ்வை, பணியை எடுத்துக்கொண்டு செய்துள்ளார். பாராட்டப்படவேண்டிய பணி அவரின் பணி " என்று புகழாரம் சூட்டினார்.
.
தொடர்ந்து  நூலின் முதல்படியினை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர் முனைவர் ம. இராசேந்திரன் வெளியிட தஞ்சை மருத்துவக்கல்லூரியின் மேனாள் நரம்பியல் துறைத்தலைவர் டாக்டர் இரா.இளங்கோவன் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து திராவிடர் கழக,பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்களும், பெரியார்-மணியம்மை பல்கலைக்கழகப்பேராசிரியர்களும் ,ஊழியர்களும் , பல்துறை சார்ந்த அறிஞர்களும், பல கட்சியினைச்சார்ந்த பொறுப்பாளர்களும் தொடர்ந்து புத்தகங்களைப் பெற்றனர். ஒரே நேரத்தில் 360 புத்தகங்கள் விற்றுத்தீர்ந்தன.

நிகழ்வின் தொடக்க உரையில் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா, நேரு " எவருக்கும் கிட்டாத, பெருமைக்குரிய தலைவர் நமக்கு கிடைத்திருக்கின்றார்.அவரின் தொலை நோக்கு எண்ணி எண்ணி வியக்கத்தக்கது. மக்கள் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் திரு.நல்.இராமச்சந்திரன் அவர்கள் சிறப்பு விருந்தினருக்கு நமது பல்கலைக்கழகத்தை சுற்றிக்காண்பித்து பல்கலைக் கழகத்தின் தனித்தன்மைகளைக் குறிப்பிட்டார். 30 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழர் தலைவர் கண்ட கனவு இன்று நனவாகி இருக்கிறது.    பன்முக ஆற்றல் கொண்ட தலைவர் ஆசிரியர் கி.வீரமணியின் பணியினை, தொண்டற வாழ்வினைத் தொகுப்பாக பேரா. நம்.சீனிவாசன் கொடுத்திருக்கின்றார். அற்புதமான உழைப்பின் மூலம் இந்த அரிய பணியினை நம்.சீனிவாசன் தமிழ்ச்சமூகத்திற்கு அளித்திருக்கின்றார். நம்.சீனிவாசன் மதுரையில் இருப்பவர். மதுரையில் உள்ள கல்லூரியில் பணியாற்றுகிறவர்.தமிழகத்தில் உள்ள தலைசிறந்த ஆளுமைகளை எல்லாம் கல்லூரிக்கு வரவழைத்து பேசவைப்பவர். தன்னை முன்னிலைப்படுத்தாதவர். அடக்கமே உருவானவர். எங்களைப்போன்றவர்களுக்கெல்லாம் முன் மாதிரியாக  இருப்பவர். வானொலியில் பேசுவதற்கு எப்படி தயாரிப்பது என்பதனை அவரிடமிருந்துதான் கற்றுக்கொண்டேன். எளிமையும் இனிமையும் கொண்ட பண்பாளர் நம்.சீனிவாசன் அவர்கள். அவரின் இந்த ஆய்வேடு நூலினை இளைஞர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். திருமணம் மற்றும் விழாக்களுக்கு அன்பளிப்பாக இந்தப்புத்தகத்தை நாம் அளிக்கவேண்டும்.அய்யா ஆசிரியர் அவர்களின் பன்முக தொண்டறப்பணியை அறிமுகப்படுத்துவதற்கு நல்வாய்ப்பாக அமைந்தது இந்த நூல் " எனக்குறிப்பிட்டு  வெகுசிறப்பாக ஏற்பாடுகளைச்செய்த தஞ்சை பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்களுக்கு, கழகப்பொறுப்பாளர்களுக்கு  பாராட்டும் நன்றியும் தெரிவித்தார்.

அறிமுகவுரையை பெரியார் சிந்தனை மையத்தின் துணை இயக்குநர் முனைவர் க.அன்பழகன் ஆற்றினார்." இந்த நூலின் ஆசிரியர்  'நம்' சீனிவாசன் என்று பாராட்டிய அவர், எதை எதையோ எத்தனையோ பேர் ஆராய்ச்சி செய்கின்றார்கள். ஆனால் மக்களின் தலைவரைத் தேர்ந்தெடுத்து மக்களுக்குப் பயன்படக்கூடிய ஆய்வினைக் கொடுத்திருக்கின்றார் நம்.சீனிவாசன்." எனக்கு சொந்த புத்தி இல்லை , தந்தை பெரியார் தந்த புத்திதான் எனக்கு உண்டு " எனத் தொண்டுசெய்யும் தமிழர் தலைவரைப் பற்றிய ஆய்வு இது. 1962-ல் வழக்கறிஞர் தொழிலில் நல்ல வருமானம் வந்த நிலையிலும் அதனை விட்டுவிட்டு , தந்தை பெரியார்  வா என்று சொன்னவுடன்  வந்தவர்.விடுதலை ஆசிரியர் பொறுப்பை ஏற்றவர். தமிழர் தலைவருக்கு திருமண ஏற்பாடு என்பதுகூட தந்தை பெரியார் அவர்கள் அமைத்துக்கொடுத்துதான். கொள்கையா , சொத்தா என வந்த நிலையில் ,தனது மாமனாருக்கு கொள்கைக்கு விரோதமாக கொள்ளிவைக்கமாட்டேன் என்று நின்றதால் பல இலட்சங்களை இழந்தவர். இலட்சியமா, சொத்தா என்று வந்தபோது  இலட்சியமே  என நின்றவர்"    எனக்குறிப்பிட்டு  நூலின் சிறப்புக்களை மிகச்சிறப்பாக அவைக்கு அறிமுகப்படுத்தினார்.

நூலினைப்பெற்றுக்கொண்டு உரை நிகழ்த்திய டாக்டர் இரா.இளங்கோவன் அவர்கள், இது ஒரு அறிவுசார் நிகழ்ச்சி. எனது அண்ணன் இரா.பண்டரிநாதன் ஆசிரியராக இருந்தவர். இந்த நிகழ்வுக்கு தலைமை ஏற்கும் அழகிரிசாமி போன்ற பல பகுத்தறிவாளர்களை உருவாக்கியவர். அவரது தம்பி என்ற தகுதியில் இந்த நூல் வெளியீட்டு விழாவில் நான் நிற்கின்றேன்.  எழுத்தாளர் பொன்னீலன் , பகுத்தறிவாளர் கழக மாநிலத்துணைத்தலைவர் அழகிரிசாமி ஆகியோராடு தனக்கு இருக்கும் தொடர்பினைக் குறிப்பிட்ட டாக்டர் இரா.இளங்கோவன் அவர்கள், எழுத்தாளர் பொன்னீலன் நம்.சீனிவாசன் அவர்களை 'நம்ம சீனிவாசன் , தோழர் ' என மிகப்பெருமையாக குறிப்பிட்டார் எனக்குறிப்பிட்டார். அறிவியல் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. ஆனால் மனிதர்களின் வாழ்வில் என்ன மாற்றம் ?. பல்லக்கினைச்சுமந்து செல்பவர்கள் இன்றைக்கும் இருக்கின்றார்கள். அதனை மனுஸ்கிருமிதிகள் போன்றவை இனறைக்கும் நியாயப்படுத்துகின்றன. 2 000 ஆண்டுகளுக்கு முன்னால் விமானம் இருந்தது என்று சொல்கின்றார்கள். ஏன் அது தொடர்ந்து விடப்படவில்லை? பழம்பெருமை பேசி நம்மை கண்கட்டி, கற்பனையான உலகத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்கின்றார்கள். உலக அளவில் நடந்த தத்துவ மாநாட்டில் தலைமை வகித்த அறிஞர்களிடம் இந்தியாவில்  முன் உதாரணம் இல்லாமல் சுயமாக சிந்தித்த தலைவர் யார் ? என்ற கேள்வி கேட்கப்பட்டது. காந்தி என்றார்கள், பதில் இது இல்லை என்றார்கள். நேரு என்றார்கள் , அவரும் இல்லை என்றார்கள் . யார் என்று கேட்டபோது பெரியார் என்று பதில்சொன்னார்கள். எந்த முன் உதாரணமும் இல்லாமல் சுயமாகச்சிந்தித்த தலைவர் பெரியார். அந்த சுய சிந்தனையோடு இந்த சமூகக்கேடுகளை வேரோடும் வேரடி  மண்ணோடும் மாற்ற வேண்டும் என்று தனிமனிதராகப் புறப்பட்டார்.தன்னுடைய சுய சிந்தனையால் தத்துவங்களுக்கு விளக்கம் சொன்னவர் பெரியார். உலகத்திலேயே களப்பணியையும் , தத்துவப்பணியையும் இணைத்து எழுத்தும் பேச்சுமாகத் தன்னுடைய போராட்டத்தை நடத்தியவர் பெரியார் ..இன்று அந்தப்பணியை திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் கி.வீரமணி செய்கின்றார். அந்தப்பணியை புத்தகமாக எழுதிவிடலாம். ஆனால் ஒரு ஆய்வேடாக, ஒரு பல்கலைக்கழகத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு, ஒரு வரைமுறைக்குள் கொண்டு வரவது மிகவும் கடினம். அந்தப்பணியை பேரா.நம்.சீனிவாசன் செய்திருக்கின்றார். பொதுவாழ்வில் இன்றைக்கு பிரச்சனைகள் நிறைய இருக்கின்றன. பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் இந்த மூன்று பேரின் கொள்கைகளைக்கூறுபவர்கள் ஒன்று சேர்வதன் மூலமே சமூகத்தில் மாற்றம் ஏற்படும் எனக்குறிப்பிட்டார். தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் வாழ்க்கையை, பணியைக் கூறும் இந்த நூல் வெளியீட்டு விழாவில் நான்  நான் கலந்து கொள்வது  மிகப்பெரும் பெருமை  எனக்கு எனக்குறிப்பிட்டு பல்வேறு நிகழ்வுகளை நினைவுகூர்ந்து உரையாற்றினார்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்துணைவேந்தர் நல்.இராமச்சந்திரன் அவர்கள் சரவெடியாய் கருத்துக்களை அவையில் விதைத்தார்.  : வரலாற்று சிறப்பு வாய்ந்த நிகழ்ச்சி இது . தமிழர் தலைவர் ஆசிரியர்  அவர்களைப்பற்றிய அற்புதமான ஆய்வுக்களஞ்சியம் இந்த நூல். இந்த நூல் என்னும்  அற்புதமான பேழையை  எதிர்காலம் மிகப்பெரிய அளவிலே பயன்படுத்திக்கொள்ளவேண்டும் ,நம்முடைய சீனிவாசன்,  'நம் .சீனிவாசன் ', அவர்தான் எம் சீனிவாசன் என்று நாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் பேரா.நம்.சீனிவாசன் . புரட்சிக் கவிஞர் தமிழரின் ஆற்றல் பற்றிக் கவிதை பாடினார்.  அவ்வாற்றல் அமையப்பெற்ற தலைவர்,  தமிழர் தலைவர் நம் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.. முனைவர்  பட்டத்திற்காக பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்கின்றார்கள். ஆனால் முனைவர் ஆய்வை சமூக மேம்பாட்டை நோக்கமாகக் கொண்டு செய்பவர்கள் மிகக்குறைவு. அதனை நம்.சீனிவாசன் செய்திருக்கின்றார்.  .ஒவ்வொரு வீட்டிலுலும் இந்த நூல் இருக்கவேண்டும்.இளைய தலைமுறையை படிக்கச்சொல்லவேண்டும். இளைய தலைமுறை அவசியம் படிக்கவேண்டிய நூல் ,என் இளைய .தம்பியின் மகன் 5-ஆம் வகுப்பு படிக்கிறான.இந்தப் புத்தகத்தைப் பார்த்தான்." ஏய், அப்பா,. ஆசிரியர் தாத்தா பற்றி ஆய்வுப்பட்டம் எனப்போட்டிருக்கிறதே" எனச்சொன்னான்." இன்றைய குழந்தைகளை  நெறிப்படுத்துவது யார் கையில் இருக்கிறது? சமூக சிந்தனையாளர்களிடத்தில் இருக்கின்றது. இளம் தளிர்கள் கூட பெரியார் பிஞ்சுகள் கூடத்தெரிந்துகொள்ளக்கூடிய விதத்திலே தனக்கே உரித்தான இந்த நூலை பேரா. நம்.சீனிவாசன் தந்திருக்கின்றார். 5 இயல்களாகப் பிரித்து  - எப்படியெல்லாம் அய்யாவை அடையாளம் கண்டுகொண்டிருக்கின்றார்கள்.எது போன்ற சிந்தனைகளை எல்லாம் தந்திருக்கின்றார்கள்.வியப்பாக இருக்கிறது.  படித்தேன் என்று சொல்லக்கூடிய அளவிற்கு 'படி'தேனாக, மாமருந்தாக  இந்த நூல்  இருக்கிறது. நண்பர் நேரு அவர்கள் நம்.சீனிவாசன் மதுரையில் வேலை பார்ப்பவர்  என்று சொன்னார். நம்.சீனிவாசன் பக்கத்தில் இருக்கிற வலங்கைமானைச்சேர்ந்தவர். காவிரி ஆற்றின் தண்ணீர் குடித்து வளர்ந்தவர். நமது பல்கலைக் கழகத்தின் இணை துணைவேந்தர் பேரா.தவமணி அவர்கள் ஒரு அருமையான முகவுரை இந்த நூலுக்கு தந்திருக்கின்றார்கள். படித்துப்பாருங்கள். எத்தனை புத்தகங்கள்-தமிழில் ஆங்கிலத்தில் பயன்படுத்தி இந்த ஆய்வினைச்செய்திருக்கின்றார் (பட்டியலைப் படித்தார்) எவ்வளவு குறிப்புகள்... ஒவ்வொரு வார்த்தைக்கும் மேற்கோள்கள, ஆதாரங்கள். மிகச்சிறந்த பேழையாக இந்த நூலைக் கொடுத்துள்ளார்.இன்று மேடையில் மருத்துவர், பேராசிரியர்கள், பொறியாளர்கள், துணைவேந்தர், முன்னாள் துணை வேந்தர் என்று இருக்கின்றோமே , இதற்கெல்லாம் காரணம் தந்தை பெரியார்.விருந்தோம்பலின் பண்பினை நம்.சீனிவாசனின் இல்லத்தில்  கண்டேன். நம்.சீனிவாசனும் அவரது துணைவியார் பேரா.ஜோதியும்  போட்டிபோட்டு அவ்வளவு வகைவகையாகப் பரிமாறினார்கள். அவரது மகள் பொறியாளர் பட்டம் பெற்று  இன்று நல்ல பணியில் இருக்கின்றார். நம் மாணவர். இப்படி எல்லா வகையிலும் சிறப்பாக இருக்கின்ற நம்.சீனிவாசன் நமது பாராட்டுக்குரியவர். போற்றுதலுக்குரியவர். நம்.சீனிவாசன் மேலாய்வுக் களன்கள் என்ற தலைப்பில்ஒன்பது தலைப்புக்களை கொடுத்திருக்கின்றார் மற்றவர்கள் முனைவர் பட்ட ஆய்வு செய்ய விரும்புவர்கள் தமிழர் தலைவரைப் பற்றி ஆய்வு செய்வதற்கு.  முன்வரவேண்டும் எனக்குறிப்பிட்டு  உரையாற்றினார்.மேலை நாட்டைப்போல அரங்கத்தில் உள்ள அனைவரும் எழுந்து நின்று ,பாராட்டினை இந்த நூலின் ஆசிரியர் பேரா.நம்.சீனிவாசனுக்கு தெரிவிக்க வேண்டும் என்று துணைவேந்தர் கேட்டுக்கொள்ள,அரங்கமே எழுந்து நின்று கைதட்டி மகிழ்ந்து பாராட்டியது.

இறுதியாக தெள்ளிய நீரோடையில் ஓடும் நீராய் , அமைதியாய் அமைந்த ஆழமான ஆய்வுரையாக தமிழ்ப்பல்கலைக்கழக மேனாள் துணை வேந்தர் ம.இராசேந்திரன் அவர்களின் சிறப்புரை அமைந்தது. ஊர்ந்து போன மரவெட்டியைப் பற்றிக் கதையைச்சொல்லி அவையைக் கலகலப்பு ஊட்டினார். நூலாசிரியர் நம்.சீனிவாசன் மதுரையா? தஞ்சையா என்றார்கள் . ஆனால   நூலாசிரியர் பிறந்த ஊர் என்பதல்ல, நூல் எவரைப் பற்றிப்பேசுகிறதோ, அந்த நூலுடைய தலைவருக்கும் தஞ்சைக்கும் உள்ள தொடர்பால் இந்த நூல் தஞ்சையில் வெளியிடப்பட்டிருக்கிறது என்றார். 2.3.1977ல் அன்னை  மணியம்மையார் அவர்கள் ஒரு கடிதம் கொடுத்து வைத்திருக்கின்றார். ஐ.ஓ.பி.யில் கடிதம் பத்திரப்படுத்தப்பட்டிருந்தது. தஞ்சை மாவட்டத்தைச்சார்ந்த கா.மா.குப்புசாமி அவர்க்ள் அம்மையார் மறைந்தபிறகு அந்தக் கடிததைக் கொண்டு வந்து  கொடுத்தார்.ஆசிரியர் அவர்களைத் தனக்குப்பின் பொதுச்செயலாளராக்கி அம்மையார் எழுதியிருந்தார்கள். கா.மா.குப்புசாமி அவர்கள் தஞ்சையைச்சார்ந்தவர்.   1946-ல் தஞ்சாவூரில் கருப்புச்சட்டை முதல் மாநாடு நடைபெறுகிறது.13-வய்து பையனாக மேடையில் தமிழர் தலைவர் வீரமணி உரையாற்றுகின்றார். இராமையா என்பவர் அன்றைக்கு ரூ 10த்தினை  மேடையில் ஆசிரியருக்கு பாராட்டிக் கொடுக்கின்றார். ஆசிரியர் அதனை தனதுஆசான் திராவிட மணியிடம் கொடுக்கின்றார்.திராவிடமணி அந்தப் பத்து ரூபாயை கழகத்திடம் ஒப்படைக்கின்றார்.  வாழ்நாள் முழுவதும் தனக்கு கிடைத்த பரிசுப்பொருளை கழகத்திற்கு அளிப்பவர் ஆசிரியர் அவர்கள். அதற்கான தொடக்க நிகழ்வு , 13 வயதில் நிகழந்த இடம் தஞ்சை. உலகத்திலேயே ஒரு தலைவருக்கு  எடைக்கு எடை தங்கம் கொடுத்தது தமிழர் தலைவர் ஆசிரியருக்குத்தான். கொடுத்த இடம் தஞ்சாவூர்தான். அவரது காருக்குக்கூட  தங்கச்சாவி கொடுத்தார்கள். எதைக் கொடுத்தாலும் அதனை இயக்கத்திற்கு அளித்து அதனை மக்களுக்கு பயன்படும் வகையில் ஆக்குகின்றவர் ஆசிரியர் அவர்கள்.  நாத்திகர்கள் இருவர் பெயரில் பல்கலைக்கழகம், தந்தை பெரியார் ,அன்னை மணியம்மையார் பெயரில் பல்கலைக்கழகங்கள் .உலகத்தில் வேறு எங்கும் இப்படி இல்லை. அப்படிப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு இடம் என ஆசிரியர் தேர்ந்தெடுத்தது தஞ்சைக்கு அருகில் உள்ள இடத்தைத்தான். இப்படி ஆசிரியர் அவர்களின் பொது வாழ்வோடு தொடர்புடைய ஊர் தஞ்சை .அதனால்தான் தஞ்சையில் இந்த நூலின் வெளியீட்டு விழா நடைறுகின்றது. போராட்டமே வாழ்க்கையாகக் கொண்ட தலைவரைப் பற்றிய நூல் எந்த நாளில் வெளியிடப்படுகிறது? ஒரு போராட்ட நாளில் வெளியிடப்படுகிறது. தமிழர்களின் உரிமைக்கான போராட்ட நாளில்,காவிரி நீருக்கான போராட்ட நாளில்  திராவிடர் கழகத்தோழர்கள் எல்லாம் கைதான நாளில் இந்த நூல் வெளியிடப்படுவது சிறப்பு.இந்த நூலில் ஏகப்பட்ட வரலாற்றுத்தகவல்கள் உள்ளன. பிற்படுத்தப்பட்டோர்க்கு 33 விழுக்காடு 50 விழுக்காடு ஆனது எப்படி என்பதைப்போன்ற  தகவல்கள்  இதில் சிறப்பாக உள்ளன.ஒவ்வொரு இயலையும் விவரிக்கலாம். சூழ்நிலைக்கு ஏற்ப மாறுபவர்கள் இருக்கிறார்கள், இருக்கிற சூழ்நிலையை மாற்றுபவர்கள் இருக்கிறார்கள். சூழலை மாற்றுகிறவர்கள்தான் சமுதாய முன்னேறத்திற்கு காரணமாக இருக்கிறார்கள். தந்தை பெரியார் அவர்கள் அப்படிப்பட்டவர்கள். அவரே சிந்தித்தார். அவரே அதனை பிரச்சாரம் செய்தார். அதற்காக அவரே போராட்டம் நடத்தி, நடைமுறைப்படுத்தக்காரணமாக இருந்தார். அதனால்தான் .பிரச்சாரம், போராட்டம். இரண்டையும் ஆசிரியர் அவர்களிடம் காண்கின்றோம். அவரின் வாழ்க்கையில் எத்தனை பிரச்சாரப்பயணங்கள், எத்தனை போராட்டங்களில் கைது, அனைத்தும் இந்த நூலில் இருக்கின்றது. ஆசிரியர் அவர்களின் ஆளுமை என்பது கடுமையான உழைப்புத்தந்த நிலை. இப்படியான ஆளுமை உருவாக்கத்திற்கு காரணமாக இருந்தவற்றை இந்த நூலில் பேரா. நம்.சீனிவாசன் கூறுகின்றார். ஆளுமை உருவாக்கத்திற்கு முதல் காரணம் ஆசிரியரின் ஆசிரியர் திராவிடமணி. சாரங்கபாணி என்னும் பெயரை  வீரமணி என்று மாற்றியவர் திராவிடமணி. அந்த வீரமணி என்னும் பெயர் அறிஞர் அண்ணாவின் கலிங்கராணி என்னும் படைப்பில் வந்த ஒரு பாத்திரப்படைப்பு. எனவே வீரமணி என்னும் பெயருக்கு அறிஞ்ர் அண்ணா காரணமாகின்றார். ஆசிரியர் அவர்கள் 6-ம் வகுப்பு படிக்கும்போது, கல்வி ஆய்வாளர் பள்ளிக்கு ஆய்வுக்க்காக வருகின்றார். வகுப்பில் போது யாருக்காவது திருக்குறள் தெரியுமா எனக்கேட்கிறார்.ஆசிரியர் , கட கடவெனத் திருக்குறள்களை ஒப்பிக்கின்றார். மகிழ்ந்து போன கல்வி ஆய்வாளர் ஆசிரியர் வீரமணிக்கு 6-ம் வகுப்பிலிருந்து 11ஆம் வகுப்பு வரை உதவித்தொகை வழங்க ஆணையிடுகின்றார். ஆசிரியரின் வளர்ச்சியில் திருக்குறளுக்கு பங்கு இருக்கின்றது.  ....அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் சேருகின்றார். படிக்க வசதியில்லை. அண்ணா சொல்கின்றார் , காஞ்சிபுரம் வந்து விடு, இங்கு படிக்கலாம் என்று. ஆசிரியர் செல்லவில்லை. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலேயே படிக்க விரும்புகின்றார். ஆனால் படிக்க வசதியில்லை. இந்த இடத்தில்  இயக்கம் எப்படி ஆசிரியரின் ஆளுமை உருவாகக்த்தில் பங்கு வகித்தது என்பதனை நூலில் குறிப்பிடுகின்றார்.. எம்.ஆர்.இராதா நாடகம் போட்டு ஆசிரியரின் படிப்பிற்கு பணம் திரட்டுகின்றார். தந்தை பெரியார் தலைமை தாங்குகின்றார். தந்தை பெரியார் வழிச்செலவுத்தொகை வாங்கவில்லை மேலும் 100 ரூபாய் போட்டுத்தருகின்றார்.எவ்வளவு பெரிய நிகழ்வு. இந்த நூலில் பதிவு இருக்கின்றது. மேலும் படிக்கும் காலத்தில் , பணம் இல்லாமல் ஆசிரியர் துன்பப்படுகின்றார்.  இராகவனந்தம் என்ற நணபர் பெரியாரிடம் கடிதம் எழுதிக் கேட்கச்சொல்கின்றார்.ஆசிரியர் தயங்குகின்றார். முடிவில் கடிதம் எழுதி,  கடனாகக் கேட்கிறார் பெரியாரிடம்.  தனது படிப்பிற்கு இயக்கத்தின் தலைவரிடம் பணம் கேட்கலாமா என்னும் தயக்கம் . கடிதம் அனுப்புகின்றார். பாருங்கள். கடிதத்தைப்பார்த்ததும் பெரியார் தந்தி மணியார்டரில் பணம் அனுப்பியிருக்கின்றார். அன்று தந்தை பெரியாருக்குத் தெரியுமா எதிர்காலத்தில் இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்கப்போகின்றவர் இவர்தான் என்று. ஆசிரியர் திருமணத்தை தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும்  முன்னின்று நடத்துகின்றார்கள் திருமணத்தை முடித்தபின் இதோ மாமியார் வீட்டிற்கு போகப்போகின்றேன். சிறைக்குப் போகத் தயாராகின்றார் ஆசிரியர் .தினத்தந்தி புது மாப்பிள்ளை சிறைக்குப்போகத்தயாராகின்றார் எனச்செய்தி போடுகிறது. இப்படி ஏராளமான தகவல்கள் இந்த நூலில். "நான் சிறைக்குப்போகின்றேன். மணியம்மையார் இயக்கப்பணிகளைத் தொடர்வார். நீ அவருக்கு துணையாகச்செயல்படு" என்று தந்தை பெரியார் கூறுகின்றார். அதனை ஆசிரியர் நடைமுறைப்படுத்துகின்றார் என்னும் செய்தி இந்தப்புத்தகத்தில் உள்ளது.. யாரும் யாரின் மீதும் நம்பிக்கை வைக்கலாம்.ஆனால் அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக, எந்த நம்பிக்கையில் தனக்கு தந்தை பெரியாரும் அன்னை மணியம்மையாரும் பொறுப்புக்களை அளித்தார்களோ , அந்த நம்பிக்கைக்குத் துரோகம் செய்யாமல் வாழ்நாள் முழுவதும் செயல்படும் தலைவரைப் பற்றிய நூலாக இதனைப்பார்க்கின்றேன். பேரா.நம்.சீனிவாசனை மனம்திறந்து பாராட்டுகின்றேன் " எனப்புகழாராம் சூட்டி உரையாற்றினார்.
ஏற்புரையை ஆற்றிய பேரா.முனைவர் நம்.சீனிவாசன் " என்னை எல்லோரும் பேச அழைக்கின்றார்கள் ஏன் என்று ஒரு நண்பர் கேட்டார் . வேறு ஒன்றுமில்லை, சுருக்கமாகப்பேசி அமர்ந்துவிடுவேன் அதனால் என்னை அழைக்கின்றார்கள் என்று சொன்னேன் என்றார். அய்யா ஆசிரியர் அவர்களைப் பற்றி ஒரு அறிமுக அட்டை(விசிட்டிங் கார்டு)தான் இந்த நூல். ஏராளமாக அய்யா ஆசிரியர் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி , பணியைப் பற்றி எழுதலாம். ஆனால் அறிமுக அட்டையைப்போல சிலவற்றை மட்டும் இந்த நூலில் குறிப்பிட்டுள்ளேன். ஆசிரியர் அவர்களைப் பற்றி ஆய்வு செய்ய வாய்ப்பு கிடைத்தது என் வாழ்க்கையில் கிடைத்த பெரும்பேறு " என்று குறிப்பிட்டு உணர்வுமயமாக நன்றி தெரிவித்தார். விழாவின் இறுதியில் தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ச. அழகிரி நன்றியுரையாற்றினார், வந்திருந்த சிறப்பு விருந்தினர்களுக்கெல்லாம் பொன்னாடை அணிவித்தும் , சொற்களால் புகழாரம் சூட்டியும்  சிறப்பு செய்தினர் தஞ்சை மாவட்ட பகுத்தறிவாளர் கழகப்பொறுப்பாளர்கள். விழாவினை ஒருங்கிணைத்து சிறப்பாக நிகழ்வு அமைந்திட வழிகாட்டினார் திராவிடர் கழகப்பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்கள். மனம் நிறைந்த நிகழ்வில், தன்னுடைய அரிய செயலுக்காக  புகழாரம் சூட்டப்பட்ட பேரா.நம்.சீனிவாசனின் ' தமிழர் தலைவர் வீரமணியின் வாழ்வும் பணியும் ' நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நிகழ்வு , பசுமை நிறைந்த நினைவுகளாய் பல்லாண்டுகள் மனதில் நிற்கும் நிகழ்வு, பாராட்டப்படவேண்டிய நிகழ்வு, மற்ற ஊர்களில் எப்படி நடத்தவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நிகழ்ந்த நிகழ்வு. வாழ்த்துக்கள் தோழர்களே, பாராட்டுக்கள் பொறுப்பாளர்களே, பாராட்டுக்கள். பாராட்டுக்கள்.

முனைவர் .வா.நேரு, மாநிலத்தலைவர், பகுத்தறிவாளர் கழகம்.


நன்றி : விடுதலை 2.4.2015


4 comments:

  1. கரந்தை ஜெயக்குமார் :

    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன் ஐயா
    எழுத்துக்களை சற்று பெரிதாக்கினால் படிப்பத்ற்கு சுலபமாக இருக்கும் ஐயா
    நன்றி

    ReplyDelete
  2. நன்றி அய்யா, மாற்றி இருக்கின்றேன். நன்றி.

    ReplyDelete
  3. ஆசிரியரின் வளர்ச்சியில் திருக்குறளுக்கு பங்கு இருக்கின்றது... அரிய தகவல்...!

    ReplyDelete
  4. ஆமாம் செந்தில், இதனைப் போல அரிய பல செய்திகள் ஆதாரங்களோடு இருப்பது இந்த நூலின் சிறப்பு.

    ReplyDelete