Thursday, 30 April 2015

வாழிய நின் புகழ் !...


எங்களின் புரட்சிக்கவியே !
நீ கொடுத்த எரிதழல்
எரிந்து கொண்டுதான்
இருக்கிறது மனதில்...
இரவும் பகலும்
எரிப்பவற்றை நினைத்தபடி!

வையகம் ஏமாறும்படி
வைத்துள்ள நூற்களை
சில கற்றறிந்தோர்
காமுற்று பேசுகையில்
சினந்து வந்து விழுந்த
உன் கவிதை வார்த்தைகள்
மூளைக்குள் மின்னலென
வந்தமர்ந்து  மறைகிறது !

பக்திக்கு மட்டுமே தமிழ்
என்றறிந்தோர் மத்தியில்
இடியென இறக்கினாய்
' கடவுள் கடவுளென்றதற்கும் 
கதறுகின்ற மனிதர்காள் '
என நாத்திகத் தமிழை !

'உடை வெளுக்கும் தோழரை
கழுதை முன்னேற்றுமா?
கடவுள் முன்னேற்றுமா ? '
எனும் உனது கேள்விக்கு 
இன்றும் பதிலில்லை....
ஆத்திகப்பசப்பல்களுக்கு 
எதிராய் மேடையேறும் 
ஒவ்வொரு மேடையிலும்
உனது வரிகளே எங்கள்
வார்த்தைகளின் கேடயமாய் !



வெளிச்சமிக்க நாடு
எனப் பகற்றியோர் மத்தியில்
' இருட்டறையில் உள்ள நாடு ...
இன்னும் சாதி எனும் சதியால்
சதிராடும் நாடு ' என்றாய்
'ஓடப்பராயிருக்கும் ஏழையப்பர்
உதையப்பர்' ஆவதற்கான
உணர்ச்சியைக் கொடுத்தாய்...

நூறு ஆண்டுகளுக்குப் பின்னால்
வந்தது வாழ்வு என ஆடும்
'நூல்'களின் வாலறுக்கும்
நுட்பங்களை சொற்களாய்
தமிழியக்கமாய் கொடுத்தாய் ...

இளைஞர்கள் கைகளில்
உந்தன் கவிதைகள்
மீண்டும் தவழ்கிறது .....
உணர்ச்சியும்
மகிழ்ச்சியும்
எழுச்சியும் 
ஏற்றமும்  பெறுகின்றார்
உந்தன் கவிதைகளால்...
வாழிய நின் புகழ் !

                  வா. நேரு ....29.04.2015






4 comments:

  1. பாரதிதாசனின் நினைவலைகள் நன்று அய்யா

    ReplyDelete
  2. அருமை...அண்ணே...

    ReplyDelete