Saturday, 23 May 2015

நிகழ்வும் நினைப்பும் (37) : எனது தாயாரின் இரண்டாம் நினைவு நாள்

நிகழ்வும் நினைப்பும் (37) : எனது தாயாரின் இரண்டாம் நினைவு நாள்

                               எனது தாயார் திருமதி சு.முத்துக்கிருஷ்ணம்மாள் அவர்களின் இரண்டாவது நினைவு நாள் இன்று (23.05.2015). காலம் வெகுவேகமாக ஓடுகிறது. இழப்புக்களை காலம்தான் மறக்கச்செய்யும் என்பார்கள் ஆனால் என்னைப்பொறுத்த அளவில் அவ்வளவு எளிதாக மறக்க இயலாமைதான் உள்ளது.




                              தனது வாழ்க்கை முழுவதும் ஒரு எதிர் நீச்சல் வாழ்க்கையாக வாழ்ந்தவர் எனது தாயார். 8-ம் வகுப்பு படிக்கும்போது , தனது தாய் மாமனான , தன்னை விட 12 வயது மூத்த  எனது அப்பாவிற்கு உறவுகளால் கட்டிவைக்கப்பட்டவர். திருமணத்திற்குப்பின் முதல் மகனைப்பெற்ற பின்பு ஆசிரியர் பயிற்சியில் சேர்ந்து ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியையாகப் பணியாற்றியவர். வரிசையாக 5 குழ்ந்தைகள் நாங்கள் பிறந்த நிலையில் , எனது அப்பா இறந்தபொழுது எனது அம்மாவிற்கு வய்து 30தான்.

                               தைரியம் என்றால் அப்படி ஒரு தைரியம். சண்டை என்றால் சண்டை , சமாதானம் என்றால் சமாதானம் என்று உறவுகளோடு வாழ்ந்தவர். பயப்படாதவர். தோசை சுட்டுக்கொண்டிருக்கும்பொழுதே தோசைக்கரண்டியால் பக்கத்தில் வந்த் பாம்பை வெட்டிப்போடுவார். தன்னுடைய கருத்தை சொல்வதற்கு எப்போதும் பயந்தவரல்ல. ஆசிரியர்கள் தொழிற்சங்கத்தில் , மன்றம் என்ற தி.மு.க். தொழிற்சங்கத்தில் பொறுப்புகள் வகித்தவர். ஜாக்டி நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டு சிறையில் இருந்து வந்தவர். நன்றாக சொல்லித்தருவார். படிக்கவில்லையென்றால் நன்றாக வகுப்பில் அடிக்கவும் செய்வார். நானும் அவரிடம் அடிவாங்கியிருக்கிறேன்.

                           நான் 6-ம் வகுப்போ , ஏழாம் வகுப்போ படிக்கும்போது , ஒரு நிச்சயதார்த்தம் நிகழ்ச்சிக்கு உறவினர் வீட்டிற்கு , மிகவும் அவர்கள் வருந்தி அழைத்த நிலையில் சென்று வந்த எனது தாயார் அவர்கள் திடீரென்று வீட்டிற்குள் வந்து குமுறிக் குமுறி அழுதார். நான் மட்டும் வீட்டில் இருந்த நிலையில் அம்மா ஏன் அழுகிறீர்கள் என்று கேட்டபோது, விதவை என்பதற்காக அந்த விசேட வீட்டில் அவமானப்படுத்தப்பட்ட கதையைச்சொன்னார் .நடந்ததை சொல்லிக்கொண்டேகுமுறிக் குமுறி அழுதார்கள்.அதற்கு பின் அப்படி அவர்கள் அழுததை நான் வாழ்க்கையில் பார்க்கவில்லை,  நான் மிகவும் கண்கலங்கிய நேரம் அது. நான் 3-ம் வகுப்பு படிக்கும்போதே எனது தந்தை இறந்து விட்டார். எனக்கு விவரம் தெரிந்த் நிலையில் எனது  தாயார் அவர்கள் அழுத் அழுகைதான், இந்த சமூகப்பழக்கங்களின் மீது முதன்முதலாக எனக்கு வெறுப்பு தோன்றிய இடம். திருவாரூரில் ஒரு கருத்தரங்கத்தில் நானும் தி.மு.க. முன்னணி பேச்சாள்ர்களில் ஒருவரான அண்ணன் திருச்சி சிவா எம்.பி. அவர்களும் கலந்து கொண்டபோது   , தனது தாயாருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை அவர் மேடையில் பகிர்ந்து கொண்டார்.பின்பு அவரோடு பேசிக்கொண்டிருந்தபொழுது எனக்கும் சின்னவயதில் எனது தாயாருக்கு ஏற்பட்ட அவமதிப்புதான் திராவிட இயக்கத்தின் மீதான் ஈர்ப்புக்கு தொடக்கம் என்று சொன்னேன்.

                        கடவுளை நம்பாதவராக , கடவுள் நம்பிக்கை இல்லாதவராக எனது தாயார் இருந்தார். சிறுவய்தில் ஏன் இப்படி என்று கேட்டால், 'டேய் , உங்க அப்பா கும்பிடாத கடவுளா, அவருக்கு பட்டப்பெயரே ஊரில் ஆண்டவர்தான் , அவர மாதிரி நல்ல மனுசன் ஊரில் எவண்டா , அப்படி ஒரு அற்ப வயசில் ஏன் செத்தார் , கடவுள் என்றெல்லாம் ஒருவனும் இல்லடா ' என்பார். நான் பகுத்தறிவாளர் கழகத்தில் பொறுப்பாளராக ஆன பின்பு வீட்டிற்கு வரும் 'விடுதலை ' பத்திரிக்கையை வரிவிடாமல் படிப்பார். பக்கத்திற்கு பக்கம் இவ்வளவு ஆழமாக இருக்கும் இந்தப்பத்திரிக்கையை வாங்கி நம்ம ஜனங்கள் படிக்க மாட்டேங்கறாங்களே ' என்பார். கோவிலுக்கு வரி, நன்கொடை என்று எவர் வந்தாலும் மறுத்து விடுவார். தரமாட்டார். எவரும் வீட்டிற்கு கேட்டும் வரமாட்டார்கள். சாமி ஆடும் தெருப்பெண்களிடம்-உறவினர்களிடம்தான் வாக்குவாதம் செய்வார். "இவ்வளவு ஆட்டம் ஆடுறியே , அப்படியே ஆடிக்கிட்டே போய் கரண்ட் கம்பியை பிடி பார்ப்போம் " என்பார். சாமி வந்த பெண்கள் அம்மாவைப் பார்த்தால் அடங்கிபோவதை நானே பார்த்திருக்கிறேன்.

                    படிப்பதில் அப்படி ஒரு ஆர்வம் உண்டு அவருக்கு. காலையில் 4 மணிக்கு எழுந்து , மாடுகளுக்கு த்ண்ணீர் வைத்து, பால்காரர்கள் வந்தவுடன் பாலைக்கறந்து பண்ணைக்கு ஊத்திவிட்டு ,பின்பு வீட்டு வேலைகள்,எங்களை பள்ளிக்கு அனுப்புவது, சமையல் செய்வது ,பள்ளிக்கு சென்று பாடம் நடத்துவது பின்பு மாலையில் காட்டிற்கு சென்று புல் அறுத்து வந்து மாட்டுக்கு போடுவது, இரவு சாப்பாடு செய்வது என்று உழைக்கும் உயிராய் எங்களை ஆளாக்குவதற்காக அத்தனை பாடுபட்ட நிலையிலும் கிடைக்கும் சின்னச்சின்ன நேரங்களில் புத்தகங்களைப் படிப்பார். அதிலும் ஜெயகாந்தன் நூல்களை மிக விரும்பிப்படிப்பார். அவருக்காக நூலகம் செல்பவனாக, புத்தகங்களை எடுத்து வந்து கொடுப்பவனாக
நான்தான் இருப்பேன். எடுத்து வந்து கொடுத்த புத்தகங்களை படித்துவிட்டு விமர்சனம் செய்வார். எனக்கு நன்றாக இருக்கிறது. மாக்சிம் கார்க்கியின் ' தாய் ' நாவலை தொடர்ச்சியாக படித்தார்.படித்துவிட்டு, புத்தகம் நன்றாக இருக்கிறது தம்பி, நம்ம நாட்டுக்கெல்லாம் இது ஒத்து வருமா என்று தெரியவில்லை என்றார். இதைப்போல பல புத்தகங்களின் விமர்சனங்களை அவரிடம் கேட்டிருக்கிறேன். இன்னும் நிறைய நினைவுகள் நீள்கின்றது ..... எனது அம்மாவின் நினைவு நாள் செய்தியை புகைப்படத்தோடு
வெளியிட்ட 'விடுதலை' நாளிதழுக்கு நன்றி. செய்தி கீழே.....
                           

மதுரை மாவட்டம்,பேரையூர் வட்டம்,சாப்டூர் க.வாலகுரு ஆசிரியர் அவர்களின் மனைவியும்,பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் முனைவர்.வா.நேரு அவர்களின் தாயாருமாகிய சு.முத்துக்கிருஷ்ணம்மாள் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை(23.05.2015) முன்னிட்டு திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 2000 நன்கொடை வா.நேரு மற்றும் அவரின் குடும்பத்தினர் நே.சொர்ணம்,சொ.நே.அன்புமணி,சொ.நே.அறிவுமதி சார்பாக அளிக்கப்பட்டது. 
நன்றி : விடுதலை 23.05.2015
       

13 comments:

  1. உங்கள் அம்மாவின் நினைவுகளில் நானும் கரைந்து போனேன். அம்மாவுக்கு எனது கண்ணீர் அஞ்சலி.

    ReplyDelete
  2. அய்யா வணக்கம். நன்றி ...

    ReplyDelete
  3. பெண்களுக்கு முன் மாதிரியாக வாழ்ந்துள்ளார்கள் அய்யா உங்கள் அம்மா....பெருமையாக உள்ளது..வெற்றி பெற்ற அம்மாவை எண்ணி

    ReplyDelete
  4. பெண்களுக்கு முன் மாதிரியாக வாழ்ந்துள்ளார்கள் அய்யா உங்கள் அம்மா....பெருமையாக உள்ளது..வெற்றி பெற்ற அம்மாவை எண்ணி

    ReplyDelete
  5. அண்ணே மிகவும் நெகிழத்தக்க பதிவு. எனக்கு இப்படி ஒரு அம்மா இல்லையே என ஏங்குகிறேன்.

    ReplyDelete
  6. மனம் நெகிழ்ந்து போயிருக்கிறது ஐயா
    வீட்டிற்கு ஒரு தாய், தங்கள் தாயைப் போல இருந்துவிட்டால்,
    நினைக்கவே நெஞ்சம் இனிக்கிறது ஐயா

    தாயின் நினைவலைகளைப் போற்றுவோம்

    ReplyDelete
  7. வீட்டிற்கு வரும் 'விடுதலை ' பத்திரிக்கையை வரிவிடாமல் படிப்பார். பக்கத்திற்கு பக்கம் இவ்வளவு ஆழமாக இருக்கும் இந்தப்பத்திரிக்கையை வாங்கி நம்ம ஜனங்கள் படிக்க மாட்டேங்கறாங்களே ' என்பார்... வைரவரிகள்...!

    ReplyDelete
  8. நேரு! காலம் வெகுவாக உருண்டோடுகிறது. ஆனால் , அது பறித்து சென்ற விட்ட சந்தோசங்களின் சுவடுகள் மட்டும் மனதில் ஆழமாக தங்கி விடுகின்றன. "தாயின் இழப்பு என்பது தாங்க முடியாத துயரம் தான் இருந்தாலும் தாங்கிக் கொள்கிறேன் எனக்கும் ஒரு நாள் மரணம் வரும் என்பதால் " என்று எழுதியவன் நீ! உனக்கு கடமைகள் பல உண்டு . அதனால் சோர்ந்து விடாமல் நிமிர்ந்து நில்.

    ReplyDelete
  9. "உனக்கு கடமைகள் பல உண்டு . அதனால் சோர்ந்து விடாமல் நிமிர்ந்து நில்". சோர்ந்தெல்லாம் போகமாட்டேன். நினைவலைகள் எழுப்பிய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டேன். அவ்வளவுதான். நமது சொந்தக் கதையை எழுதலாமா என்று ஒரு தயக்கம் மட்டும் இருந்தது. அண்ணே, மிக்க நன்றி.

    ReplyDelete
  10. "பெண்களுக்கு முன் மாதிரியாக வாழ்ந்துள்ளார்கள் அய்யா உங்கள் அம்மா....பெருமையாக உள்ளது." நன்றி தோழியர் கீதா அவர்களே....

    ReplyDelete
  11. நினைவில் வாழும் உங்கள் தாய்க்கு வணக்கங்கள் !

    ReplyDelete
  12. பாலகுமார் சார், மிக்க நன்றி. திரு.மேடத்துரை அவர்களுக்கும் நன்றி.

    ReplyDelete