Monday, 14 March 2016

உடுமலையில் பட்டப் பகலில்........

உடுமலையில் பட்டப் பகலில்  அந்தோ கொடுமை! கொடுமை!!
ஜாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டதால் கொலை வெறித் தாக்குதல்
வடக்கே‘லவ்ஜிகாத்';தமிழ்நாட்டில் ‘கவுரவக்கொலை’யா?

தமிழர் தலைவர் கடும் கண்டனம்!
மூன்றாவது மொழி என்றபெயரால் பிஜேபி அரசில் சமஸ்கிருதம் நுழைகிறது
உடுமலையில் ஜாதிமறுப்புத் திருமணம் செய்து கொண்டவர்கள்மீது கொலை வெறித் தாக்குதல் நடைபெற்று சங்கர் என்ற தாழ்த்தப்பட்ட தோழர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டம், குமாரலிங்கம் சாவடியைச் சேர்ந்த திரு. வேலுச்சாமி என்பவருடைய மகன் சங்கர் (வயது 22) கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டுள்ளார்.
ஜாதி மறுப்புத் திருமணம்
திண்டுக்கல் மாவட்டம் பழனியைச் சேர்ந்த சின்னசாமி என்பவரின் மகள் கவுசல்யாவை (19) காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். திருமணம் நடந்து 8 மாதங்களாகி விட்டது.
திருமணம் முடிந்து குமரலிங்கம் என்னும் ஊரில் வாழ்ந்து வந்தனர். கவுசல்யா தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைக்குச்  சேர்ந்தார்.
பட்டப்பகலில் பகிரங்க படுகொலை!
இவர்கள் இருவரும் நேற்று (13.3.2016) உடுமலைப்பேட்டையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று கயவர்கள் அரிவாளால் வெட்டிச் சாய்த்துள்ளனர். பட்டப் பகலில் பேருந்து நிலையம் அருகில் இந்தப் படுகொலை நடந்துள்ளது. சங்கர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட வழியிலேயே மரணம் அடைந்தார். தடுக்கச் சென்ற கவுசல்யாவுக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது அவர் கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொலை செய்த கொடியவர்கள் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் மோட்டார் சைக்கிளில் ஏறி அரிவாளைத் தோளில் தொங்கப் போட்டுச் சென்றுள்ளனர். கண்காணிப்புக் கேமராவில் இவையெல்லாம் பதிவாகியுள்ளன.
திருமணம் செய்து கொண்ட இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள், இதில் சங்கர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்.
இந்தப் பின்னணியில் தான் இந்தப் படுகொலை என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது.
கவுரவக் கொலைகளா?
இத்தகு கொடுமைகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளன. தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க   தயங்குவது ஏனோ?
அசிங்கத்துக்குப் பொட்டு வைத்ததுபோல, இதற்குக் ‘கவுரவக் கொலை’ என்றும் வேறு மகுடம் சூட்டுகின்றனர் ஜாதி வெறியர்கள். இந்த நிகழ்வுகள் இந்த ஆட்சியில் சர்வ சாதாரணமாகவே நடந்து வருகின்றன.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு படும்பாடு!
நாள்தோறும் ஏடுகளைப் புரட்டினால் கொலை, கொள்ளை, திருட்டு, சங்கிலிப் பறிப்பு என்பது ஏராளம் இடம் பெற்று வருகின்றன. இந்த லட்சணத்தில் சட்டம் - ஒழுங்கு தமிழ்நாட்டில் தான் சிறப்பாக இருப்பதாக முதல் அமைச்சர் கூறுகிறார். இதென்ன நாடா? காடா?
காதலித்துத் திருமணம் செய்து
கொள்வது என்பது குற்றமா?
வட மாநிலங்களில் ‘லவ்ஜிகாத்’  என்று சொல்லி, மதம் மாறித் திருமணம் செய்து கொள்பவர்களுக்கு எதிராக பிஜேபிஆட்சியின் துணையோடு சங்பரிவார்கள் வன்முறை வெறியாட்டம் போடுகின்றனர். தமிழ்நாட்டில் ஜாதியை முன்னிறுத்தி அரசியல் நடத்த விரும்புபவர்கள் பிரச்சாரத்தால், செயல்பட்டால் ஜாதி மறுப்புத் திருமணங் களைச் செய்து கொள்வோர் உயிருக்கு உலை வைக்கப்படுகின்றது.
அரசு செயல்படட்டும்!
இது கடும் கண்டனத்துக்கு உரியது. கட்சிகளைக் கடந்து கண்டிக்கப்பட வேண்டியதாகும்.
தமிழ்நாடு அரசு இதனை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. காலந் தாழ்த்தவும் கூடாது; குற்றவாளிகள் உரிய தண்டனைக்கு ஆளாக வேண்டும்.
தருமபுரியில் ஜாதிக் கலவரம் ஏற்பட்டு, ஊரே கொளுத்தப்பட்டது - தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளவரசன் மரணம் இன்னும் மர்மமாகவே இருக்கிறது. பெரும்பாலும் கொலைதான் என்ற கருத்து நிலவுகிறது.  இது நடந்து நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. அதை தொடர்ந்து நடைபெற்ற கோகுல்ராஜ் படுகொலையும் வேதனைக்குரியது.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி தானே! குற்றவாளிகளை காலந்தாழ்த்தாது கண்டுபிடித்து தண் டனையைப் பெற்றுத் தருவதில் காவல்துறை வேகத்தையும், விவேகத்தையும் காட்டுமாறு வலியுறுத்துகிறோம்.


கி. வீரமணி
தலைவர்,  திராவிடர் கழகம்


சென்னை
14.3.2016 

Friday, 11 March 2016

உரிமைக் கோரிக்கை நாள்

அந்த மதம்
இந்த  மதம்
எல்லா மதங்களும்
ஆண்களால்
ஆண்களுக்காக
சொல்லப்பட்டவை .....

அப்படி வழிபடு
இப்படி வழிபடு
எல்லா வழிபாடுகளும்
பெண்களை
அடிமைப்படுத்த
ஆண்களால்
எழுதப்பட்டவை...

அந்தச் சட்டம்
இந்தச் சட்டம்
கடவுள் பெயரால்
காட்டப்படும்
எல்லாச்சட்டங்களும்
பெண்களை
வீட்டிற்குள் பூட்டிவைக்க
இயற்றப்பட்டவை.....

உங்களை ஒன்றுதிரட்ட
ஆண்களுக்கு
ஆன்மிகம் மிக
எளிய கருவியாய் இருக்கிறது ....


அது ஆதி பராசக்தியோ
வாழும் கலையோ
அல்லலோயாவோ
எதுவாயினும்
ஆன்மிகத்தின் பேரால்
பெண்களை
அணி திரட்டுவது
எளிதாக இருக்கிறது ஆண்களுக்கு....


இரும்புக்கூடு அது
எனத் தெரியாமலேயே
மாட்டிக்கொள்ளும்
கிளிகள் போல
ஆன்மிகக்கூட்டுக்குள்
உங்களை அடைத்துவைத்தல்
மிக எளிதாக இருக்கிறது
ஆண்களுக்கு .....

அக்கா ..அக்கா எனும்
கிளிகள் போல
புரிந்த மொழியோ
புரியாத மொழியோ
ஆன்மிகத் தலங்களில்
சொல்லப்படுவதை
திரும்பத் திரும்ப
சொல்வது
எளிதாக இருக்கிறது உனக்கு...

ஆன்மிகம் மறு !
அச்சம் தவிர் !
கேள்விகள் கேட்கப் பழகு
ஆன்மிகம் என்றாலும்
ஏன் எந்த இசம் என்றாலும்
கேள்விகள் கேட்கப்பழகு...


எங்களுக்கு மட்டும் ஏன்
இத்தனை கட்டுப்பாடு ?
எங்களுக்கு மட்டும் ஏன்
இத்தனை விதிமுறைகள்?
விதிமுறை மீறல்களுக்கு
ஏன் இவ்வளவு வன்மத்திலான
வன்முறைகள்?
கேள்விகள் கேள்....பெண்ணே..
கேள்விகள் கேள்...
கேளிக்கை நாளல்ல பெண்ணே!
உரிமைக் கோரிக்கை நாள்
மார்ச்  8


Thursday, 10 March 2016

தென்னிந்தியா விலேயே முதல் பிஎச்டி முடித்த பார் வையற்ற பேராசிரியர்......

சிறப்பாக வாழமுடியும் என்று வாழ்வில் பிடிமானத்தைக் கற்றுக் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள்
பார்வையிழந்த கல்லூரி வரலாற்றுத் துறைத் தலைவர் ராதாபாய்


புதுக்கோட்டை மார்ச் 8-_ புதுக்கோட்டை பகுதியில் அனைவராலும் அறியப்பட்ட, கேள்விப்பட்ட பெயர் ராதாபாய். அவர் பணியாற்றும் புதுக்கோட்டை கேகேசி என்று சொல்லப்படும் கலைஞர் கருணா நிதி மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் அம்மா என்று பேராசிரியர் ராதாபாய் அவர்களைத்தான் அன்போடு அனை வரும் அழைக்கிறார்கள்.  தென்னிந்தியா விலேயே முதல் பிஎச்டி முடித்த பார் வையற்ற பேராசிரியர் என்பது அவருக் கான சிறப்பு.
55 வயதாகும் இவர் புதுக்கோட்டை அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி யில் வரலாற்றுத்துறைப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். சிறுவயது முதல் நடந் ததை அவரே விவரிக்கிறார்... நான் பிறந் தது தேனிமாவட்டம் உசிலம்பட்டி. அப்பா கிருஷ்ணமூர்த்தி. அம்மா முத்து லெட்சுமி. என் பெற்றோருக்கு ஆறாவது குழந்தையாகப் பிறந்தேன். நான்கு வயதுவரை நன்றாகத்தான் இருந்தேன்.
நான்கு வயதில் பார்வைக்குறைபாடு வந்ததை உணர்ந்தேன். எனக்கு வந்திருந் தது ரெட்டினைட்டீஸ் பிக்மண்டோஸா எனும் நோய். இது லட்சத்தில் ஒருத் தருக்குத்தான் வரும். அது எனக்கு வந்து விட்டது. என் தந்தையிடம் சொன்ன போது, அவரும் உணர்ந்து கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் சொன்ன தோடு அவர் தமிழாசிரியராகப் பணி புரிந்த பள்ளிக்கு என்னையும் கூடவே அழைத்துச் சென்றார். அவர் கொடுத்த ஊக்கத்தில் எந்த வயதில் எதைக் கற்றுக் கொள்ள வேண்டுமோ அவற்றை அந் தந்த வயதில் கற்றுக் கொள்ளத் துவங் கினேன். எனக்குள் நானே நம்பிக்கையை வளர்த்துக் கொண்டேன். அவர் மற்ற மாணவ, மாணவியருக்குக் கற்றுக் கொடுத் ததை அப்படியே செவியில் பெற்று கவனத்தில் உள்வாங்கிக் கொண்டேன். மற்ற குழந்தைகளுக்கு இணையாக நானும் கற்றுக் கொண்டேன். இப்படி யாக மூன்றாம் வகுப்புவரை அரசுப் பொதுப் பள்ளியில் படித்தேன்
அதன்பிறகு சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளி யில் சேர்க்கப்பட்டேன். அதுவரை மிக வும் சிரமப்பட்டுக் கொண்டிருந்த எனக்கு, நம் வாழ்க்கை முடிந்து போகவில்லை; நல்ல ஒளிமயமான எதிர்காலம் இருக்கு என்கிற நம்பிக்கை கிடைத்தது. என் னைப்போலவே இன்னும் நிறையப்பேர் இருக்கிறார்கள் என்பதையும் உணர்ந்து கொண்டு கூடுதல் பலம் பெற்றேன்.
பிரெய்லி புத்தகங்கள் டெய்லர் பிரேம் என்று சொல்லப்படும் கணக்கு சிலேட்டு எல்லாம் எனக்கு மிகப் பெரிய உற்சாகத்தை அளித்தது. ஆர்வமாகவும் ஆவேசமாகவும் கற்றுக்கொண்டேன். அங்கு எஸ்எஸ்எல்சிவரை படித்து 600_-க்கு 427- மதிப்பெண்கள் பெற்று பள்ளியின் முதல் மாணவியாகத் தேர்வு பெற்று வெளியில் வந்தேன். அப்போது 1977 ஆம் ஆண்டு.

அதன்பிறகு பார்வையற்றோருக்கான கல்விக்கூடங்கள் கிடையாது என்பதால் ஏதாவது சிறு தொழில் செய்து பிழைக்க வேண்டும் என்று நினைத்தேன். கார ணம்,  அந்த நேரத்தில் அப்பா பணி நிறைவு பெற்று விட்டார். அண்ணன்கள் வேலை செய்யும் நிலையில் இல்லை. அக் காள்கள் ஆசிரியர் பயிற்சிக்குப் படித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது வேலை தேடியபோது திருச்சியில் விழியிழந்த மகளிர் மறுவாழ்வு இல்லம் இருப்பது அறிந்து அங்கு சென்றேன். டாக்டர் ஜோசப் மகள் பிரியா தியோடர் என் பவர்தான் நடத்திக் கொண்டிருந்தார்.
விழியிழந்த மகளிருக்கு கவர் மேக்கிங் டைலரிங் மாதிரி நிறையப் பயிற்சி கொடுத்துக் கொண்டிருருந்தார்கள். பிரியா அம்மாவை நான்போய்ப் பார்த் தேன். அதுதான் எனது வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்பு முனையாக அமைந்தது. பிரியா அம்மா என்னிடம் இவ்வளவு படித்து விட்டு மேலே கற்றுக் கொள்ளாமல் இருக்கக் கூடாது. செலவை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லி திருச்சி சீதாலெட்சுமி ராமசாமி கல்லூரிக்கு அழைத்துச் சென்ற போது அங்கு என்னைச் சேர்த்துக் கொள்ள மறுத்து விட்டார்கள்.
எனக்காக பிரின்ஸிபலிடம் சிரமப் பட்டுப் பேசி சீட் வாங்கிக் கொடுத்தார் கள். நார்மல் பிள்ளைகள் படிக்கும் கல் லூரியில் பார்வையிழந்த பெண் படிக்க முடியாது என்பதால் அவர்கள் மறுத்தி ருக்கிறார்கள். ஒரு வழியாகச் சேர்ந்து படிக்கத் துவங்கினேன்.
வகுப்பறையில் நடத்தும் பாடத்தை பிரெய்லிமுறையில் குறிப்புகள் எடுத்துக் கொள்வேன். அப்போது அன்னம் நாரா யணன் என்பவர் ரீடர்ஸ் அசோசியேசன் பாரத பிளையண்ட் என்ற அமைப்பு ஒன்றை நடத்தினார்கள். அவங்ககிட்டே பாடப்புத்தகங்களைக் கொடுத்தா கேசட் டில் பதிவு செய்து கொடுப்பார்கள். அது வும் நிறையப் பயனுள்ளதாக இருந்தது. சில நேரங்களில் விடுதி மாணவியர் படித்துக் காட்டும்போது குறிப்பெடுத்துக் கொள்வேன். அப்போது பியுசி படித்த 104 -பேரில் நான்தான் முதல் மதிப்பெண் பெற்றேன்.
மேலும் படிக்க விரும்பினேன். எந்த பிரின்ஸ்பல் சீட் தர மறுத்தாரோ அவரே மேற்படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாகச் சொல்லி வேறு சிலரிட மிருந்தும் உதவிகள் பெற்றுத் தந்தார். பி.ஏ. முதல் மாணவியாகக் கற்றுத் தேர்ந்தேன். எம்.ஏ.வில் பல்கலைக் கழக அளவில் இரண்டாமிடம் பெற்றேன்.
படிப்பின் மீது இருந்த தாகம் அடங்கவே இல்லை. பொருளாதாரப் பிரச்சினை வந்ததால் பிரியா மேடம் அவர்கள் கவுன்சிலர் என்றொரு பணியிடத்தை உருவாக்கி சம்பளமும் கொடுத் தார்கள். அப்போது பாரதிதாசன் பல் கலைக் கழகத் துணைவேந்தராக இருந்த மணிசுந்தரம் அவர்கள் என்னைப் பற்றிக் கேள்விப்பட்டு அழைத்துப் பாராட்டி னார்கள். அவரிடம் பி.எச்டி படிக்க விரும்புவதைச் சொன்னவுடன் நேரடி யாக பிஎச்டி படிக்க சிறப்பு அனுமதியும் கொடுத்தார்கள்.
அப்போது திருச்சி ஈவெரா பெரியார் கல்லூரி பேராசிரியர் அப்துல்ரஹீம் எனக்கு வழிகாட்டியாக வந்தார். என்னைப் போலவே பார்வையில்லாதவர்களைப் பற்றியே ஆய்வு செய்யத் துவங்கினேன்.
இந்தியாவில் பார்வையற்றோர் மறு வாழ்வுப் பணிகளைப் பற்றிய வரலாறு எனும் தலைப்பை எடுத்துக் கொண்டு இந்தியா முழுவதும் அலைந்தேன். பார் வையிழந்தோர் அமைப்புகளுக்குப் போய் செய்திகள் சேகரித்தேன். சாருபாலா என்கிற பெண் உதவியாளராக வந்தார். எட்வர்டு ஜோனர்த்தன் என்ற சமூக ஆர்வலர் அனைத்துப் பயணங்களிலும் கூடவே வந்து உதவிகள் செய்தார்.
டெராடூன் சென்றேன். அங்குதான் 1888- ஆம் ஆண்டு இந்தியாவிலேயே பார்வையிழந்தோருக்கான முதல் தொடக் கப் பள்ளியிருந்தது. அது தேசிய பார் வையற்றோர் நிறுவனமாக இருக்கிறது. இரண்டாவது பள்ளி பாளையங்கோட் டையில் 1890- ஆம் ஆண்டு ஏற்படுத்தப் பட்டது. மும்பையில் லூயி பிரை மெமோரியல் ஆய்வு மய்யம் அமைக்கப் பட்டுள்ளது. இப்படி அனைத்து இடங் களுக்கும் சென்று ஆய்வுகள் செய்தேன்.
அப்போது புத்தகங்கள் எடுத்து கொண்டு வந்து படிக்கச் சொல்லிக் கேட்டு பிரெய்லி முறையில் எழுதி வைத் துக் கொண்டு மனதில் பதிவு செய்து டைப்ரைட்டரில் நானே டைப் செய்து ஆய்வை சமர்ப்பித்தேன். இரண்டு ஆண் டுகள் தீவிரமான ஆய்வு செய்தபிறகுதான் எனக்கு பிஎச்.டி கொடுத்தார்கள்.
எனக்கு முன்னால் மத்தியப்பிரதேசத் தில் உஷா பாலேராவ் என்னும் பெண் 1975-ஆம் ஆண்டு பிஎச்.டி முடித்திருக் கிறார்கள். தென்னிந்தியாவில் பார்வையிழந்த முதல் பிஎச்டி பட்டம் பெற்ற பெண் என்று என்னை அறிவித்தார்கள். படிப்பு முடிந்தபிறகு கோவை அவினாசிலிங்கம் மனையியல் கல்லூரியில் பணி கிடைத்தது. 1994-ஆம் ஆண்டு தமிழக முதல்வரின் சிறப்பு அரசாணையின் மூலம் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பணியமர்த்தப்பட் டேன். 2008 ஆம் ஆண்டில் வரலாற்றுத் துறைத்தலைவராக ஆனேன். இன்று வரை பணிபுரிந்து வருகிறேன்.
இந்தக் கல்லூரிக்கு வரும் மாணவிகள் கிராமப்புறத்தில் இருந்து வருகிறார்கள். அவர்கள் கற்றுக் கொள்ள வருகிறார்கள். அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கத்தான் நாங்கள் இருக்கிறோம். எனக்கு இது தான் தெரியும் என்று இருந்துவிடக் கூடாது. அதனால் நிறைய ஆடியோ புத்தகங்கள் சேகரித்து வைத்திருக்கிறேன். பிரெய்லி முறையிலும் நிறையச் சேக ரித்து வைத்துப் படித்து விட்டுத்தான் வகுப்பறைக்குள் நுழைகிறேன். மாணவி களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவே இப்பொழுதும் படித்து வருகிறேன் என்றார்.
அதற்காகவே அவரது கம்ப்யூட்டரில் என்.வி.டி.ஏ. என்ற சாப்ட் வேர் பதிவு செய்து வைத்துக் கொண்டு இணைய தளத்தில்கூட மாணவியருக்காகத் தேடிக் கொண்டு வந்து பிரிண்ட் எடுத்து வழங் குகிறார். தினமும் தேடல்கள் தொடர் கின்றன.
பார்வையில்லாமல் இருப்பது பற்றி எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்ட போது...
மற்றவர்கள் என்ன கற்றுக் கொள் கிறார்களோ அதைத்தான் நானும் கற்றுக்கொண்டு செய்கிறேன். இதில் வியப்புக்கு ஒன்றுமில்லை. தந்தை பெரியார் என்று சொல்லும்போது அவரை வெறும் கடவுள் மறுப்பாளராக மட்டும் புரிந்து கொள்கிறார்கள். அவர் பெண்களுக்குச் செய்ததைப் போல் இது வரை யாரும் செய்ததில்லை. அவர் பெண் களின் நம்பிக்கை நட்சத்திரம். தந்தை பெரியாரைப் பற்றி அறிந்ததால்தான் நான் இந்தளவிற்கு உயர முடிந்தது.
நான் சிறுமியாக இருந்தபோது எனது தந்தையார் கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உன்னால் முடியாதது யாராலும் முடி யாது. யாராலும் முடியாதது உன்னால் முடியும் என்று நம்பிக்கை கொடுத்து வளர்த்தார் என்றால் அதற்கு மேலும் இன்றளவும் நம்பிக்கையோடு வாழ்வதற் குக் காரணம் தந்தை பெரியார்தான். ஆம். இவ்வளவு செய்ததாகச் சொல்லிக் கொள்ளும் எனக்கு திருமண வாழ்வும் வந்தது. அவ்வாறு வாழ்க்கைத்துணையாக வந்தவருடன் எனக்கு கருத்து வேறுபாடு வந்து விட்டது. எங்களது வாழ்வில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. பெயர் பிரபாவர்சினி. இப்போது எட்டாம் வகுப்புபடித்துக் கொண்டிருக்கிறாள்.
திருமண வாழ்வில் வெறுப்பு வந்த போது கணவர் என்னைவிட்டுப் பிரிந்து விட்டார். அதனால் முறையாக நீதி மன்றத்தை அணுகி வழக்குத் தொடர்ந்து விவாகரத்து பெற்று விட்டேன். நானும் மகளும் வாழ்ந்து வருகிறோம். எந்த ஒரு பெண்ணுக்கும் திருமணப் பிரிவு என்ப தும் கணவரைப் பிரிந்து வாழ்வது என்பதும் மிகப் பெரிய இழப்பாகக் கருதப் படும். இது போன்ற பிரச்சினைகள் வந்தபோது எத்தனையோ பெண்கள் வாழ்வின் இறுதி எல்லைவரை சென்றி ருக்கிறார்கள். ஆனாலும் சிறப்பாக வாழ முடியும் என்று வாழ்வில் பிடிமானத்தைக் கற்றுக் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள். பலரும் அது இல்லாமல் வாழ முடியாது இது இல்லாமல் வாழ முடி யாது என்று சொல்வார்கள். ஆனால் தந்தை பெரியார் அவர்கள் இல்லாத ஓர் உலகத்தை எண்ணிப் பார்ப்பது கடினம். அவர் இல்லையென்றால் நானே இந்தளவிற்கு உயர்ந்திருப்பேனா என்பது சந்தேகம்தான்.
இப்போதும் என்னைப் பார்க்கும் போது நிறையப் பெண்களுக்கு நம்பிக்கை வருவதாகச் சொல்கிறார்கள். பெண் களின் முன்னேற்றம்தான் எனது லட் சியமும் கனவும். வாழ்நாள் முழுவதும் அதற்காக உழைப்பேன். பணி நிறைவுக் குப் பின் நிறைய புத்தகங்கள் எழுத எண்ணியிருக்கிறேன். இப்போது என் னைப்போலவே நிறையப் படிக்க வேண் டும் என்று திண்டுக்கல்லில் இருந்து ஒரு பெண் வந்து இங்கேயே தங்கிப் படித்து வருகிறார். என் குடும்ப உறுப்பினராகவே இருக்கிறார். எங்களைப்போன்றவர்க ளுக்கு உதவி செய்வது தந்தை பெரியாரின் அறிவுரைகளும் அறிவியல் வளர்ச்சியும் தான் என்றார்.
இவர் பார்வையிழந்தோருக்காக வள் ளுவன் பார்வை என்ற இணைய தளத் தையும் நடத்தி வருகிறார். இவரைப் போல் உள்ளவர்கள் இணைப்பில் இருந்துகொண்டு நிறைய எழுதுகிறார் கள். தங்களது கருத்துகளைப் பரிமாறிக் கொள்கிறார்கள்.
விடுதலை என்றவுடன் தனது ஆர் வத்தையும் வெளியிட்டார். அதாவது பிரெய்லி முறையில் விடுதலை நாளிதழ் கிடைத்தால் எங்களைப் போன்றவர் களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். வரும் காலத்தில் கொண்டுவர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
- --ம.மு.கண்ணன்.
மகளிர் நாள் 8.3.2016 
நன்றி : விடுதலை 08.03.2016

Sunday, 6 March 2016

குறிப்பறிதல்......

குறிப்பறிதல்......

மின்னெலென
வந்து 
'வாருங்கள், வாருங்கள்'
என்று சொல்லி
மறைந்த அக்கணமே
உள்ளுணர்வு சொல்லியது 
ஏதோ சிக்கலென

ஒரு அறையில் 
நீ அமர்ந்து எனை
உபசரித்த நேரம்
சமையலறைக்குள்
இருந்து வந்த
'டொப், டொப் ' சத்தம்
இன்னும் அதனை 
உறுதிப்படுத்தியது ....

'உண்ணுங்கள், உண்ணுங்கள்'
என என்னை நோக்குங்கால்
முகம் மலர்ந்தும்
உன்னை நோக்குங்கால்
முகம் திரிந்தும்
உனது மனைவி  
முகம் மலர்ந்தும் 
முகம் திரிந்தும் 
வேற்றுமை காட்டிய
முகக்குறிப்பில் 
தெரிந்து போனது அத்தனையும்....

நோயுற்ற போதும்
நோயற்ற போதும் 
எப்போதும்
உறவு வீடுகளில் 
உண்ணுவதைவிட
உணவு விடுதிகளில்
உண்ணுவதே
உவப்பானது என
எண்ணியபடியே 
வீட்டை விட்டு 
வெளியேறும் நேரம் 

அருகில் வந்த 
உனது மகள்
'அங்கிள் தப்பாக
எடுத்துக்கொள்ளாதீர்கள்
அம்மாவிற்கும் 
அப்பாவிற்கும் 
இரண்டு நாளா சண்டை ...
வீட்டிற்கு வராமல்
இருந்து விடாதீர்கள் '
என்ற போது 
குழந்தைக்கும் உண்டு
குறிப்பறிதல் 
எனும் உண்மை 
புலர்ந்தது எனக்கு.....

கணவனை 
மனைவியை
கவனித்த என்னை
குழந்தை கவனித்ததை
நான் அறியவில்லை போலும்...
உங்கள் இருவருக்காக
அல்ல
உறவுக் குழந்தைக்காக
மீண்டும் வீட்டிற்கு
வரவேண்டுமென தோன்றியது....

                                                      வா. நேரு , 06.03.16

தோழமை பிறக்கிறது .....

தோழமை பிறக்கிறது .....


எப்போதும் ஒரு 
தோழமை பிறக்கிறது
அவரைக் காணும் 
நேரமெல்லாம் !

நெடு நாளாய் ஒரே
துறையில் பணி என்றாலும்
எங்கு பிறந்தவர்
எங்கு வளர்ந்தவர்
எவரோடு வாழ்பவர்
எனும் தரவுகள்
எதுவும் இல்லை என்றாலும்
தோழமை பிறக்கிறது
அவரைக் காணும் 
நேரமெல்லாம் 

நம்மால் முடிந்த 
உதவிகளை அவருக்கு 
செய்திடல் வேண்டும் 
எனும் உணர்வு பிறக்கிறது
அவரைக் காணும் 
நேரமெல்லாம்

என்னைப்போலவே
அவரும் துன்பப்பட்டவர்
இருதயத்தை கழட்டி
செயற்கை வால்வைப் பொருத்தி
இன்னுமொரு வாழ்க்கையைப் 
பெற்றவர் என்பதாலோ
என்னவோ
எப்போதும் ஒரு 
தோழமை பிறக்கிறது
அவரைக் காணும் 
நேரமெல்லாம் ....

இருவரைப் பிரிப்பதற்கான
கோபங்கள்
இருப்பது போலவே
இருவரை இணைப்பதற்கான
புள்ளிகளும் 
வித விதமாய் 
இருக்கின்றன.....

                             வா.நேரு , 06.03.2016

Friday, 4 March 2016

மதம் ஒழிந்த மனிதனே, சமுதாயத்திற்கு பயன்படுவான்....

மதம் ஒழிந்த மனிதனே, சமுதாயத்திற்கு பயன்படுவான்


)
ஏசுவானவர் பாவிகளை ரட்சிக்கும் பொருட்டு தனது உயிரைத் தியாகம் செய்தார் என்று கிறித்துவப் பாதிரிமார்கள் உபன்யாசம் செய்கிறார்கள். “ஏழைகளைக் காப்பாற்றும் பொருட்டு தனது ரத்தத்தைச் சிந்தினார்” என்று பிரசங்கம் செய்கிறார்கள். நமது ஜனங்களும் அதை நம்புகிறார்கள். எப்படியோ 60 லட்சம் கிறிஸ்துவர்களும் இந்தியாவில் சேர்ந்து விட்டார்கள். அதைப்பற்றி நமக்கு எள்ளளவும் கவலை கிடையாது.
ஏனெனில் இந்த 60 லட்சம் பேர்களும் இந்துமதத்தில் இருந்து சாதித்ததைவிட அதிக மாகவோ, குறைவாகவோ கிறிஸ்துமதத்திலும் சாதித்து விடப் போவதில்லையென்பதே நமது அபிப்பிராயம்.
வேண்டுமானால் இந்து மதத்தில் இருந்ததைவிட சற்று மதவெறி அதிகம் பிடிக்கும் பதில் சொல்ல முடியாவிட்டால் எதற்கெடுத்தாலும் சைத்தான் என்று சொல்லி விடலாம் இதைத் தவிர வேறு பகுத்தறிவோ அனுபவ முதிர்ச்சியோ கிறிஸ்துமதத்தில்  அதிகமாய்க் கிடைத்துவிடும் என்று நாம் சிறிதுகூட சந்தேகிக்கவில்லை.
ஆகவே கிறிஸ்து மதத்திற்கு இருக்கும் பணக் கொழுப்பும் அரசாங்க ஆதரவும் இருக்கும் வரையில் அது அவ்வளவு பயமில்லாமல் இருக்கலாம்!. இருந்து விட்டு போகட்டும் ஒன்றும் மூழ்கிப் போகாது ஆனால் நாம் கேட்பதெல்லாம் ஒரு விஷயந்தான். கிறிஸ்துவர்கள் சொல்லுகிறபடி நடக்கிறார்களா?
உனது ஒரு கன்னத்தில் அறைகிறவனுக்கு மற்றொரு கன்னத்தையும் காட்டு என்று வேதநூல் .. உனது மேலங்கியை எடுத்துக்  கொண்டவனுக்கு உனது கோட்டையும் கொடுக்கத் தயங் காதே என்று கூறுகிறது ஆனால் என்ன நடக்கிறது? எவ னாவது பாதிரிமார்கள் புரட்டை எடுத்துச் சொன்னால் அவன்மீது மான நஷ்ட வழக்கு தொடரலாமா அவனது ஆயுதத்தைப் பிடுங்கலாமா அவனைக் கஷ்டப்படுத்தலாமா என்று யோசனை போகிறதே தவிர யோக்கியமாய், நாணயமாய், மனுஷத் தன்மையோடு சுயஅறிவோடு பதில் சொல்லும் தைரியம் இருக்கிறதா?
மிஸ். மேயோ இந்து மதத்தைப் பற்றி இடித்துக் கூறியபோது இந்துமதப் பித்தர்கள் எப்படி தலைகால் தெரியாமல் காய்ச்சின எண்ணையில் போட்ட எள்ளுப் பொட்டணம் மாதிரி துள்ளினார்களோ அதைப்போலவே தான் நமது கிறிஸ்துவ சகோதரர்களும் குதிக்கிறார்கள். சக்கரைகளுக்கும், ஜோசப்பு களுக்கும், செல்வங்களுக்கும், அற்புத ஆரோக்கியசாமி களுக்கும் ஆவேசம் வந்து விட்டது. ஒரு மதத்திலும் சேராத நம்மைப் போன்றவர்களுக்கே, எங்கே 2ஆவது ஏசு  கிறிஸ்து திடீரென்று வந்து எல்லோரையும் அழித்து விடு வாரோ என்று பயமாயிருக்கிறது! பாவம்!
ஆஹா என்ன வேடிக்கை பல நூறு வருஷங்களா பரம் பரையாய் கிறிஸ்துவர்களாக இருந்த தேசங்களும் மக்களும் கிறிஸ்து மதத்தை புறக்கணித்து விட்டு சும்மாயிருக்கும்போது நேற்று செட்டியாராயிருந்தவர்களும் 2 நாளைக்கு முந்தி உடையார்களாய் இருந்தவர்களும் இன்றும் கூட அந்த அநாகரீகப் பட்டங்களை தங்கள் புனித மார்க்கத்தைச் சேர்ந்த பெயர்களோடு கட்டித் தொங்கவிட்டுக் கொண்டிருக்கி றவர்களும் ஏதோ உலகத்திற்கே அபாயம் வந்துவிட்டது போல் சீறிவிழுவதும் தலைவிரி கோலமாய் ஆடுவதும் ஒரு வெட்ககரமான காரியமாகவே இருக்கிறது.
கிறிஸ்துவத் தலைவர்களே! பாதிரிமார்களே! ஏன் இத்தனை ஆத்திரம்? உங்கள் மதத்தில் சிறிது கூட அப்பு அழுக்கு இல்லையென்றால் எந்த காலத்திற்கும் எல்லா மக்களுக்கும் உபயோகப்படக்கூடியது என்றால் எல்லா உண்மைகளும் உடையது என்றால் புனிதமான மார்க்க மென்றால், கடவுள் அருள் பெற்றவர்களாலேயே ஸ்தாபிக்கப் பட்டது என்றால் இந்த சுயமரியாதை இயக்கமோ இந்த பகுத்தறிவு இயக்கமோ, இந்த ரஷியாவோ இன்னும் எவ்வளவு பேர் வந்தாலும் அதை ஒரு அங்குலமாவது நகர்த்த முடியுமா?
அப்படியிருக்க உங்களுக்கென்ன ஆவேசம்? அன்று மோஸசைப் போல் ஒரு ஆள் கடவுளுக்குத் தூதுபோகக் கிடைக்கமாட்டானா? அன்றி கிறிஸ்துவக் கடவுள் கொஞ்சம் கண் திறந்து பார்த்தால் (இப்போது கண்ணை மூடிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லவில்லை) போதாதா? இந்த  அறிவு இயக்கத்தார் எல்லாம் அழிந்துவிட மாட்டார் களா? அப்படியிருக்க நமது நாடார்,
முதலியார், வாண்டையார், உடையார் கிறிஸ்துவர்களுக்கு மாத்திரம் ஏன் இத்தனை ஆத்திரம் வரவேண்டுமென்பது நமக்கு விளங்கவில்லை கிறிஸ்து மதமே உண்மையான கொள்கைகளையுடைய மதமென்றால் தானாகவே நிலை பெற்று விடுமல்லவா?
ஓ! ஒரு வேளை இப்படியிருக்கலாம்! கடவுளின் பத்துக் கட்டளைகளுள், நான் ஒரு பொறுமையான கடவுள், மற்றொரு கடவுளை மனிதர் வணங்குவதைப் பொறுக்க மாட்டேன். ஒருவன் இவ்வாறு செய்தால் அவனுடைய மூன்றாவது நான்காவது தலைமுறைவரையில் துன்பப் படுத்துவேன் என்று கிறிஸ்துக் கடவுள் சொல்லியிருக்கிறாரல்லவா? அத னால் தான் கிறிஸ்துப் பாதிரிகளும் தலைவர்களும் பதறுகிறார்கள்.
மதம் ஒழிந்த மனிதனே, மனித சமுதாயத்திற்குப் பயன்படுவான்.
(1931 - புதுவை முரசிலிருந்து)
நன்றி : விடுதலை 04.03.2016

Wednesday, 2 March 2016

இந்தி எதிர்ப்பு என்பது வெறும் மொழிக்காக அல்ல

தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு என்பது வெறும் மொழிக்காக அல்ல மொழியின் பெயரால் திணிக்கப்படும் பண்பாட்டுப் படையெடுப்பை மய்யப்படுத்தியதுதான்!

எழுத்துரு அளவு Larger Font Smaller Font
தந்தை பெரியாரின் இந்தி எதிர்ப்பு என்பது வெறும் மொழிக்காக அல்ல
மொழியின் பெயரால் திணிக்கப்படும் பண்பாட்டுப் படையெடுப்பை மய்யப்படுத்தியதுதான்!
மொழிப்போர் தியாகி அய்யம்பாளையம் வீரப்பன் படத்திறப்பு விழாவில் தமிழர் தலைவர் கருத்து விளக்கம்

கரூர், மார்ச் 2- தந்தை பெரியார் அவர்களின் இந்தி மொழி எதிர்ப்பு என்பது அம்மொழியின் பெயரால் திணிக்கப்படும் பண்பாட்டுப் படையெடுப்பை முறியடிக்கும் நோக்கம்தான் என்றார் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
30.1.2016 அன்று தியாகச் செம்மல் மறைந்த அய்யம்பாளையம் வீரப்பன் அவர்களின் படத்திறப்பு  விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
அவரது உரை வருமாறு:
மறைந்தவர் அல்ல; எப்பொழுதும்
தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவர்
மிகுந்த நெகிழ்ச்சியோடு நடைபெறக்கூடிய தியாகச் செம்மல் ஆசிரியர் வீரப்பன் அவர்களின் நினைவைப் போற்றி அவர்களுடைய பெயரால், அவருடைய ஈகையைப் போற்றி, அவர் மறைந்தவர் அல்ல; எப்பொழுதும் தமிழர்களின் நெஞ்சில் நிறைந்தவர் என்கிற பெருமைக்குரியவராக, தமிழுக்காகத் தியாகம், தன்னலம் மறுப்பாளர்களை, தன்னுயிர் ஈந்த பெருந்தகையாளர்களை நினைவூட்டுகின்ற மொழிப் போர் தியாகிகள் என்கிற வரிசையில், ஒப்பற்ற தன்னலமறுப்புடன் இந்த சமுதாயத்திற்கு, தன்னை அழித்துக் கொண்டாலாவது மக்கள் திரும்பிப் பார்க்கமாட்டார்களா? தமிழர்களுடைய உறக்கம் குறைந்துவிடாதா? அல்லது தீர்ந்துவிடாதா? என்ற உணர்ச்சியோடு தன்னை அழித்துக்கொண்டு, இந்தி மொழி என்பதை எதிர்த்து, செஞ்சியில் வென்ற - இருந்த - என்றும் வாழ்கின்ற நம்முடைய வீரப்பனார் அவர்களுடைய நினைவைப் போற்றி, அவர்கள் பணியாற்றிய இந்த சிறிய ஊரிலே - பெரிய போரினை நிகழ்த்தியிருக்கிற பொதுமக்களை - தோழர்களை - ஒத்துழைத்தவர்களை - அதற்கு முனைப்பாக நின்ற புலவர் கடவூர் மணிமாறன் அவர்களையும் - ஊராட்சி மன்றத் தலைவர் அவர்களையும், மற்றும் அவருக்கு உறுதுணையாக இருக்கக்கூடியவர்களையும் பாராட்ட வார்த்தைகளே இல்லை என்ற அந்தச் சொல்லை முதலில் வைக்கிறேன்.
இந்த ஊர் சிறிய ஊர் என்று சொன்னார்கள்; நான் முதல்முறையாக இந்தப் பகுதிக்கு வருகிறேன். இந்த ஊரைப்பற்றிச் சொல்லும்பொழுதே அச்சுறுத்தக் கூடிய அளவில் சொன்னார்கள். திருச்சியிலிருந்து உங்கள் பயணம் இரண்டரை மணிநேரத்திற்குக் குறையாமல் இருக்கும் என்றார்கள். நான் திருச்சியில் காலையில்  ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றுவிட்டு, அங்கேயிருந்து  உடனே புறப்பட்டுவிட்டேன் 4 மணிக்கெல்லாம் இங்கே வரவேண்டும் என்பதற்காக.
கேட்டுத் திருந்தக் கூடியவர்களாக இருந்தால், அங்கே பேசுவதுதான் பயனுடையதாக இருக்கும்
இங்கே காணுகின்ற உணர்ச்சிதான் மிக முக்கியம். சிறிய  ஊர், சிறிய கூட்டம் என்றெல்லாம் சொன்னார்கள். நான் பெரியார் தொண்டன். சிறிய கூட்டமாக இருந்தாலும், அவர்கள் கேட்டுத் திருந்தக் கூடியவர்களாக இருந்தால், அங்கே பேசுவதுதான் பயனுடையதாக இருக்குமே தவிர, பெரிய திருவிழா கும்பலில், பெரிய அளவில் ஆடம்பரமாக கூடினார்கள், கலைந்தார்கள் அவர்கள் எடுத்து கொண்டது எதுவுமில்லை என்று சொல்லக்கூடிய வாய்ப்பைப் பெறக்கூடாது.
நகரங்களில் பேசுவதைவிட, கிராமங்களில் பேசுவதும், மக்களை சந்திப்பதும்தான் பயன்படும். நகரங்களில் கூட்டம் கூடுவார்கள், வேடிக்கைப் பார்ப்பார்கள், விளம்பரங்கள் கிடைக்கும், ஆடம்பரங்கள்தான் அங்கே இருக்கும். ஆனால், எங்கே மிகப்பெரிய ஒரு கருத்து ஈர்ப்பு இருக்கும் என்றால், அது உள்ளபடியே நமது கிராமத்துப் பொதுமக்கள் மத்தியில் இருக்கும் என்பதுதான் பொது உண்மையாகும். அந்த வகையில் இங்கே நிறைய தாய்மார்கள் வந்திருக்கிறார்கள்.
நாம் இங்கே மிக்சி, கிரைண்டர் கொடுக்கவில்லை; அல்லது இலவசங்களை வாரி இறைக்கவில்லை. இலவசமாக வழங்கக்கூடிய ஒரே ஒரு செய்தி என்னவென்றால், அறிவு, பகுத்தறிவு, தன்மானம் - இதைத்தான் நீங்கள் கேட்காமலே கொடுக்க வந்திருக்கின்றோம் நாங்கள். நீங்கள் ஏற்காவிட்டாலும், நாங்கள் விடப்போவதில்லை என்பதுதான் மிக முக்கியமாகும்.
இந்த இயக்கமே அப்படிப்பட்ட இயக்கம்தான். வள்ளலார் அவர்கள் சொன்னார்கள்,
கடை விரித்தேன், கொள்வாரில்லை
கட்டிவிட்டேன் என்று.
ஆனால், பெரியார் சொன்னார்,
கடை விரித்தேன், நீங்கள் கொள்ளும்வரை
என் கடையை கட்டமாட்டேன் என்றார்.
மொழி உணர்வாளர்களுக்கு
நாம் நன்றி சொல்லவேண்டும்
வீரப்பன் அவர்களைப்பற்றி அதிகமாக நான் கேள்விப்படவில்லை. இன்றைக்கு நடந்திருப்பது ஒரு பெரிய வரலாற்று மீட்டுருவாக்கம். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்கூட, மற்றவர்களை நாம் நினைவு கூர்கிற அளவிற்கு தள்ளிப் போய்விட்டது - தொலைதூரத்தில் இருக்கிறது என்பதற்காக - அந்தப் பட்டியலில் அவருக்குக் கிடைக்கவேண்டிய இடம் இன்றைக்குத்தான் முறையாக - தெளிவாக ஆக்கப்பட்டிருக்கிறது. அதற்காக ஆயிரம் நன்றிகளை கடவூர் மணிமாறன் அவர்களுக்குச் சொல்லவேண்டும். உங்களுக்குச் சொல்லவேண்டும். இதற்குப் பாடுபட்ட அரும் இன உணர்வாளர்கள், மொழி உணர்வாளர்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும்.
பொதுவாக பகுத்தறிவுக் கண்ணோட்டத்தோடு பார்த்தால், ஏன் உயிரை மாய்த்துக் கொள்ளவேண்டும் என்றுதான் தோன்றும். நியாயம்கூட அதில் இருக்கிறது.
புரட்சிக்கவிஞர்கூட சொன்னார்,
சாகின்றாய் தமிழா! சாகின்றாய்
சாகச் செய்வானைச் சாகச் செய்யாமல்
சாகின்றாய் தமிழா சாகின்றாய்’
என்று சொன்னார்.
அதனைப் பார்க்கும்பொழுது நமக்கு மிகுந்த வேதனை. மொழிக்காக எத்தனை பேர் உயிரை மாய்த்திருக்கிறார்கள். மணிமண்டபம் மிக அற்புதமாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு தனி அமைப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இதில் எந்த சிக்கலும் இல்லை. அரசாங்கத்திற்கும் சொல்லிக் கொள்கிறேன், ஏதோ ஒரு பொதுவான விதியை வைத்துக்கொண்டு அவர்கள் இதனை நோக்கியிருக்கக் கூடும். ஆனால், அவர்களுக்கே அது தெளிவாகும்.
ஜனவரி 25: மொழிப் போர்
தியாகிகள் நாள்!
ஏனென்றால், இந்த ஒரு செய்தியில்தான், ஆளுங்கட்சி - எதிர்க்கட்சி என்று சொல்லக்கூடியவர்கள் - எதிரும் - புதிருமாக ஒரே அமைப்பிலே இருக்கக்கூடிய திராவிடர் இயக்கம் என்று சொல்லிக் கொண்டிருக்கக் கூடியவர்கள் - அதிலும் அண்ணா பெயரில் கட்சி நடத்திக் கொண்டிருக்கக் கூடியவர்கள். மொழிப் போர் தியாகிகள் நாள் என்று ஜனவரி 25 ஆம் தேதி இந்தப் பக்கத்திலும் நடக்கிறது, அந்தப் பக்கத்திலும் நடக்கிறது  என்று சொல்லிக் கொண்டு, ஒரு மொழிப் போர் தியாகியினுடைய சிலையை வைப்பதற்கு வாய்ப்பில்லை என்று சொன்னால், அது யாருக்குச் சங்கடம்? யாருக்கு வேதனை? என்றால், அது அரசாங்கத்திற்குத்தான் முதலில் அவப்பெயரை உருவாக்கக்கூடிய ஒரு செய்தியாக முடியும். ஆக, அவர்கள் சரியான கண்ணோட்டத்தோடு பார்த்தால், இதில் ஒரு சிக்கலும் இல்லை என்று தெரியும்.
நாங்கள் இந்திக்கு எதிர்பக்கம் இருக்கிறோம்! தமிழுக்கு ஆதரவான பக்கத்தில் இருக்கிறோம்!
வருகிறவர்கள் யார் என்று பார்க்கக்கூடாது. செய்த தியாகம் எதற்காக என்பதைத்தான் பார்க்கவேண்டும். ஆனால், அவர்கள் தலைகீழாக இந்நிகழ்வில் கலந்து கொள்கிறவர்கள் யார்? என்று பார்த்திருக்கக் கூடும். அவ்வளவுதானே தவிர, வேறொன்றும் இல்லை. இவர்கள் எந்தப் பக்கம் - எந்த அணியில் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கிறார்கள். நாங்கள் எந்தப் பக்கம் இருக்கிறோம் என்றால், இந்திக்கு எதிர்பக்கம் இருக்கிறோம்; தமிழுக்கு ஆதரவான பக்கத்தில் இருக்கிறோம். பகுத்தறிவுக்குப் பக்கத்தில் இருக்கிறோம். மனிதநேயம் பக்கத்தில் இருக்கிறோம். வீரப்பன் எங்கள் பக்கத்தில் இருக்கிறார். எனக்குக்கூட ஒரு சந்தேகம் - வீரப்பன் சிலை என்று சொன்னவுடன், ஆசிரியர் வீரப்பனை வேறு வீரப்பன் என்று குழப்பிக் கொண்டார்களோ என்று. ஏனென்றால், அப்படி குழப்பம் வரக்கூடிய சூழல் இப்பொழுது இருக்கிறது.
ஆக, அந்த சூழ்நிலையில், இது தனியார் அமைப்பு - அவர்கள் மேலே சொல்லியிருப்பார்கள் - காவல்துறை அதிகாரிகளைப் பொறுத்தவரை அவர்கள் நமக்கு எதிரிகளோ - அல்லது அவர்கள் நமக்கு விரோதமான சிந்தனை உடையவர்களோ அல்ல - அவர்களும் தமிழின உணர்வாளர்கள்தான் - தமிழர்கள்தான்.
நாம் எப்பொழுதும் ஒரு கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவர்கள். அந்தக் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு, இன்றைக்கு படத்திறப்பை  வைத்திருக்கிறார்கள். இதனால் யாருக்கும் எந்தவிதமான இடையூறும் இல்லை. மொழிப் போர் தியாகிகளுக்கு வீர வணக்க நாள் என்று ஜனவரி 25 ஆம் தேதி கொண்டாடுகின்ற நேரத்தில், அந்த மொழிப் போர் தியாகியாக - ஒப்பற்ற தியாகிகள் - வரிசையாக ஒரு பட்டியல் போட்டிருக்கிறார்கள்.
தியாகம் செய்பவர்களுக்கு குறுகிய
ஜாதிப் பார்வை கிடையாது!
தாளமுத்து நடராசன் என்று சொல்லிப் பழக்கப்பட்ட காரணத்தினால், அதை ஒரு பிரச்சினையாக்கி, சிலர் உள்ளே நுழையலாம் என்று நினைத்து, ஜாதீயப் பார்வையெல்லாம் பார்த்தார்கள். தியாகம் செய்பவர்களுக்கு மொழி, இனம் என்று சொல்லும்பொழுது, குறுகிய ஜாதிப் பார்வையெல்லாம் கிடையவே கிடையாது.
இங்கே நாங்கள் எல்லாம் வந்திருக்கிறோம். கவுதமன் அவர்கள், புலவர் வகுப்பில் படிக்கும்பொழுதே சாதனையாளர். அது என்னவென்றால், திருப்பனந்தாளில் நடைபெற்ற போட்டியில் முதல் பரிசு வாங்கியவர் நம்முடைய கவுதமன் அவர்களாவார். அவருடைய தந்தையார் அவர்கள் தீவிரமான பெரியார் தொண்டர்; தீவிர சுயமரியாதை வீரர்.
அதேபோன்று இந்த மேடையில் இருக்கின்ற எல்லோரையும் பாருங்கள். முகுந்தன் அவர்களை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். அதேபோன்று ஆசிரியர் புலவர் அவர்கள். என்னை அவர்களுக்கு சிறு பிள்ளையில் இருந்து தெரியும். ஆனால், நான் என்ன ஜாதி என்று யாருக்காவது தெரியுமா? என்றால், தெரியாது.
நாங்கள் இனத்தால் திராவிடர்கள்; மொழியால் தமிழர்கள்;  வழியால் தமிழர்கள்; விழியால் திராவிடர்கள்.
இந்த உணர்வுதான் நம்மையெல்லாம் ஒன்று சேர்க்கவேண்டுமே தவிர, நமக்கு வேறு உணர்வுகள் வரவேண்டிய அவசியமே கிடையாது.
மொழிப் போர் தியாகிகளின் பட்டியல்!
இங்கே வெளியிடப்பட்ட மலரில் ஆசிரியர் புலவர் அவர்கள் ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளார்.

கீழப்பழுவூர் சின்னசாமி 25.1.1964
கோடம்பாக்கம் சிவலிங்கம் 25.1.1965
விருகம்பாக்கம் அரங்கநாதன் 27.1.1965
கீரனூர் முத்து 11.2.1965
அய்யம்பாளையம் ஆசிரியர் வீரப்பன் 11.2.1965
சத்தியமங்கலம் முத்து 11.2.1965
மயிலாடுதுறை சாரங்கபாணி 15.3.1965
துப்பாக்கிச் சூட்டில் மாண்டோர் - 27.1.1965 அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் சிலையாக இருக்கக்கூடிய சிவகங்கை ராசேந்திரன்
10.2.1965 அன்று கோவை குமாரமங்கலம் வெள்ளக் கோவில், திருப்பூர், மணப்பாறை முதலிய 40 இடங்களுக்கு மேல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 100-க்கும் மேற் பட்டோர் மாண்டனர்.
இவையெல்லாவற்றையும் இங்கே வெளியிட்டுள்ள மலரில் பதிவு செய்திருக்கிறார்கள்.
பொதுமக்களின் மறதியை மூலதனமாகக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்
அந்தப் பதிவுகள் மிகவும் அவசியம்; ஏனென்றால், தமிழர்களுக்கு மறதி அதிகம். பல இயக்கங்கள், பல அரசியல் தலைவர்கள், பல பொதுவாழ்க்கைக்காரர்கள் வாழ்வதே, பொதுமக்களின் மறதியை மூலதனமாகக் கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனவே, அவர்களுக்கு இதனை நினைவூட்டவேண்டியது அவசியமான கடமையாகும்.
அந்த வகையில், 12.2.1965 ஒரே நாளில் நூற்றுக்கணக் கானோர் படை வீரர்களால் சுடப்பட்டு, குவியல் குவியலாய் உடல்கள் குழிக்குள் தள்ளப்பட்டு, மறைக்கப்பட்ட ஊர் பொள்ளாச்சி.
நஞ்சுண்டு மாண்டோர் -
விராலிமலை சண்முகம் 1965
2.3.1965 கோவை பீளமேடு தண்டபாணி
இப்படி எண்ணற்றவர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்திருக்கிறார்கள். எதற்காக? வெறும் மொழிக் காகவா - வெறும் மொழிப் பிரச்சினை மட்டும்தான் இதில் இருக்கிறதா என்பதை வீரப்பன் அவர்களுடைய நினைவை நாம் போற்றுகின்ற நேரத்தில் நினைத்து, ஆழ்ந்து சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கிறோம்.
அகில இந்திய காங்கிரசு தலைவராக இருந்த சீதாராம் கேசரி
ஒருமுறை நான் டில்லிக்குச் சென்றிருந்தபொழுது, அகில இந்திய காங்கிரசினுடைய நீண்ட நாள் பொருளாளராகவும், பிறகு அகில இந்திய காங்கிரசிற்கு - சோனியா காந்தி அம்மையார் வருவதற்கு முன் வரையில், தலைவராக இருந்த சீதாராம் கேசரி அவர்கள், பெரியார் பற்றாளர் அவர். பெரியார் அவர்களுடைய கட்டுரைகளை ஆங்கிலத்தில் படித்துவிட்டு,  பெரிய அளவிற்கு அடிக்கடி சந்தேகங்களைக் கேட்பார். அவர் நேரு காலத்திலிருந்து பொருளாளராக இருந்தார் அந்த இயக்கத்திற்கு. நம்பிக்கையான ஒரு தலைவர் - அவர்களுடைய அமைப்பிற்கு.
பெரியாரைப்பற்றி சந்தேகம் கேட்பார், டில்லியிலிருந்து தொலைபேசி வாயிலாகவே அந்த சந்தேகத்தைக் கேட்பார்.
பெரியார் அவர்கள் வெறும் மொழிக்காக மட்டும் இந்தியை எதிர்த்திருப்பாரா?
ஒருமுறை அவர் அப்படி கேட்கும்பொழுது, பெரியார் ஒரு பகுத்தறிவுவாதி. அவர் வெறும் மொழிக்காக மட்டும் - இந்தி மொழியை எதிர்த்திருப்பார் என்று எனக்குத் தோன்றவில்லை. இன்னும் அதற்கு ஆழமான காரணம் இருந்திருக்கவேண்டும். ஆகவே, உங்களைக் கேட்டால், அது தெளிவாகும் என்று என்னிடம் கேட்டார்.
நான் தெளிவாக சொன்னேன், ஒரு பண்பாட்டுப் படையெடுப்பு - ஒரு இனத்தின் பண்பாட்டை - நீண்ட காலமாக, பாரம்பரியமாக இருக்கக்கூடிய ஒரு பண்பாட்டை அழிப்பதற்கு, இன்னொரு பண்பாட்டினுடைய படை யெடுப்பு - அது இந்தி என்ற ஆயுதத்தின் மூலமாக, கருவியின் மூலமாக, பயன்படுத்துகின்ற காலம் என் பதை பெரியார் உணர்ந்தார்; பெரியாருடைய இயக்கம் உணர்ந்தது; திராவிடர் இயக்கம் உணர்ந்தது. ஆகவேதான், அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். அதற்கு உதாரணம் உங்களுக்குச் சொல்லவேண்டுமானால் என்று பல்வேறு  செய்திகளை எடுத்துச் சொல்லிவிட்டு, இந்திய அரசியல் சட்டத்திலேயே சூதாக அவர்கள் சட்டத்தை இயற்றியவர்கள் - அதிலே ஆட்சி மொழி என்று போடுகிற நேரத்தில், அவர்கள் இந்தி என்று மட்டும் போடவில்லை. இந்தி அதிகாரப்பூர்வமாக ஆட்சி மொழியாக இருக்கும். பிறகு போராடிய பிறகு, மக்கள் விரும்புகிறவரை ஆங்கிலம் நீடிக்கவேண்டும் என்கிற நேருவினுடைய உறுதிமொழி சட்ட ரீதியானது என்று அதைக் கொள்ளவேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் கொடுத்தது. வெறும் தனிப்பட்ட நேரு அல்ல. இந்தியப் பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதிமொழி கொடுத்தார். அதற்கு என்ன பின்னணி என்று ஒருபக்கத்தில் இருந்தாலும், இன்னொரு பக்கத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒரு செய்தி உண்டு.
அரசியல் சட்டத்தை எழுதியவர்கள் மிக சாமர்த்தியமாக என்ன எழுதியிருக்கிறார்கள் என்றால்,
Hindi - that is in devnagri script என்று எழுதியிருக்கிறார்கள்.
இந்துஸ்தானி என்பது உருது கலந்த இந்தி - அதுதான் இந்துஸ்தானி. வடநாட்டில் உருது கலந்த இந்துஸ்தானிக்கும், தேவநகரி என்று சொல்லக்கூடிய சமஸ்கிருதம் கலந்ததற்கும் - பண்பாட்டுப் போராட்டம். ஆரிய - திராவிட போராட்டம் போன்று. நிறைய பேருக்கு இது தெளிவாகத் தெரியாது.
எப்படி என்று சொன்னால், தேவநகரி என்றால் இந்தியில் என்ன அர்த்தம் என்றால், கடவுள் எழுத்து. சமஸ்கிருத மொழியை தேவபாஷை என்றார்கள். அதற்கு நேர் எதிராக தமிழை நீஷ பாஷை என்றார்கள்.
மந்திரம் சொல்லுங்கள், மந்திரம் சொல்லுங்கள் என்று சொல்கிறார்கள்
தமிழ் மொழியை ஏன் கோவிலில் விடமாட்டேன் என்கிறார்கள். இன்னமும் நம்முடைய தமிழர் வீட்டுத் திருமணங்கள் சமஸ்கிருதத்தில் நடத்தப்படுகிறது. யாருக்காவது அது புரியுமா? மணமக்களுக்குப் புரி யுமா? ஒருவருக்கும் புரியாது. ஆனால், அய்யரே மந் திரம் சொல்லுங்கள், மந்திரம் சொல்லுங்கள் என்று சொல் கிறார்கள்.
அய்யரோ, சமஸ்கிருத மொழியில் மந்திரங்களைச் சொல்கிறார்.
திருமணங்களில் கூறும் மந்திரத்தின்
அர்த்தம் என்ன தெரியுமா?
திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதப் பார்ப்பனர் சமஸ்கிருதமாகிய வடமொழியில் தான் திருமணத்திற்குரிய மந்திரங்களைக் கூறுவார். அப்படித் திருமணங்களில் கூறப்படும் மந்திரங்களில் ஒன்று.
மணப் பெண்ணைப் பார்த்துக் கூறுவதாவது: சோமன் (சந்திரன்) முதலில் இவளை அடைந்தான். பிறகு கந்தர்வன் இவளை அடைந்தான். உன்னுடைய மூன்றாம் கணவன் அக்னி. உன்னுடைய நான்காம் கணவன் மனித ஜாதியில் பிறந்தவன்.
சோமன் உன்னைக் கந்தர்வனுக்குக் கொடுத்தான். கந்தர்வன் அக்னிக்குக் கொடுத்தான். அக்னி தேவன் இவளுக்குச் செல்வத்தையும் மக்களையும் கொடுத்து, பிறகு எனக்குத் தந்தான்.
இவ்வாறு அர்த்தம் கொண்ட கீழ்க்காணும் சமஸ்கிருத சுலோகங்களை மணமகனின் சார்பில் புரோகிதர் சொல்லுவார்.
ஸோம: ப்ரதமோ விவிதே
கந்தர்வோ விவித உத்தர:
த்ருதீயோ அக்நிஷ்டே பதி:
துரீயஸ்தே மநுஷ்யஜா.
ஸோமோ (அ)தத் கந்தர் வாய கந்தர்வோ (அ)தத் அக்நயேர
யிஞ்ச புத்ராகும்ச அதாத்
அக்நிர் மஹ்யமதோ இமாம்
இதைத்தான் நம் ஆள்கள் சொல்லுங்க சாமி, சொல்லுங்க சாமி என்று சொல்கிறார்கள். சமஸ்கிருதத்தில் சொல்வதால், நம் ஆள்களுக்குப் புரியவில்லை. இதுபோன்று தமிழில் சொன்னால், அவரை வெளியில் விடுவார்களா? என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.
- தொடரும்
நன்றி : விடுதலை 02.03.16

அண்மையில் படித்த புத்தகம் : முடிவிலும் ஒன்று தொடரலாம்..ஜெயந்தி சங்கர்

அண்மையில் படித்த புத்தகம் : முடிவிலும் ஒன்று தொடரலாம்- குறுநாவல் தொகுப்பு
 நூல் ஆசிரியர்                  : ஜெயந்தி சங்கர்
 பதிப்பகம்                        :  சந்தியா பதிப்பகம், சென்னை-83
முதற்பதிப்பு                                 : டிசம்பர்-2005
விலை                                          :    ரூ 80, $ 10, மொத்த பக்கங்கள் 160
மதுரை நூலக எண்                     :  166324

                                        மூன்று குறுநாவல்களை உள்ளடக்கமாகக் கொண்ட புத்தகம் . நூலகத்தில் எடுப்பதற்காக புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தபொழுது எழுத்தாளர் பிரபஞ்சன் " விசயங்களைத் தேர்ந்தெடுக்கும் கூர்மை, அவைகளைச்சிதறாமல் எழுதும் நம்பிக்கை, அலங்காரமற்ற மொழி , எல்லாவற்றுக்கும் மேல் நல்ல மனம், எழுத்தாளர் ஜெயந்தி சங்கருக்கு இருக்கின்றன. இந்த மேம்பாடு , இக்கதைகளிலும் இருக்கின்றன "  எனக் குறிப்பிட்டிருந்த முன்னுரை இப்புத்தகத்தை எடுக்க வைத்தது. கதைகளைப் படித்து முடித்தபோது பிரபஞ்சனின் கருத்துக்கள் முழுவதும் உண்மை எனப் புரிந்தது.

                               முதன்முதலில் 'வேண்டியது வேறில்லை' என்னும் குறு நாவல்.ஒரு வீட்டில் வேலை செய்யும் செல்வி என்னும் பெண்ணே இந்தக் குறு நாவலின் முதன்மைப் பாத்திரம். செல்வியை விரும்பும் சரவணன், சிங்கப்பூரில் வாழும் ரகு, ப்ரியா தம்பதிகள்- அவர்களின் குடும்பச்சண்டைகள், அவர்களின் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் செல்வி, சரவணன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்தல், அவனின் அகால மரணம் என விவரிக்கப்படும் கதை, ப்ரியா-ரகு வாழ்வில் அடிக்கடி சண்டை வரக்காரணமாகும் தீபக் , தீபக்கின் கெட்ட எண்ணத்தைப் புரிந்த கொண்ட செல்வி, தன் எஜமானியம்மாவிடம் அதனை உணர்த்தி, ரகு-ப்ரியா வாழ்வில் மீண்டும் மகிழ்ச்சி ஏற்படக்காரணமாக அமைவது என்னும் கருவைக்கொண்டதுதான் இந்த நாவல். சிங்கப்பூர், அதன் வாழ்வியல், மிஞ்சும் உணவைக் கொடுத்து சாப்பிட்டவர்களுக்கு பிரச்சனை என்றால் போலீஸ்காரர்கள் வருவார்கள் என்ற விவரிப்பு என சிங்கப்பூருக்கு இதுவரை வராத என்னைப்போன்றவர்கள் கூட அந்த நாட்டின் சில பழக்கங்களை , சட்டங்களை, பண்பாட்டைப் புரிந்து கொள்ளும் வகையில் விவரித்து  உள்ள பாங்கு அருமை.

                           குடும்ப வாழ்வில் பிரச்சனை வரும், அதனை எதிர்கொண்டு பிரச்சனைகளைத் தீர்த்து இன்பமாக வாழலாம் என்பது முதல் குறு நாவலான 'வேண்டியது வேறில்லை ' என்றால், ஒரு பெண் சேர்ந்தே வாழமுடியாத உளவியல் பிரச்சனை உள்ள ஒருவனைப் பற்றிய நாவல் 'முடிவிலும் ஒன்று தொடரலாம் ' என்பது. இப்படியும் மனிதர்கள், கணவர்கள் இருப்பார்களா என்று படிப்பவர்களை அதிரவைக்கும் ' கிஷோர் ' என்னும் கதாபாத்திரம் இந்தக் குறுநாவலைப் படித்து முடித்தபின்பும் சிந்திக்க வைக்கிறது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் , இப்படிப்பட்ட ஒருவனிடம் தன் மகள் மாட்டிக்கொண்டாள், திருமணம் என்னும் பெயரால் என்ன ஆவது என்று கவலைப் படவைக்கும் கதாபாத்திரம். கதாநாயகனாக நடிக்கும் ஆனால் வில்லனாக நடக்கும் கிஷோரிடம் மாட்டிக்கொண்ட லாவண்யா தன் கணவன் என்னும் மிருகத்திடமிருந்து விலகி வாழ்வது என்பதுதான் இந்தக் கதையின் முடிவு. படிக்கும் எத்தகைய பழமைவாதியும் கூட லாவண்யாவின் முடிவு சரி என்பதனை சொல்லவைக்கும் வகையில் கதையின் போக்கும் விவரிப்பும், கதாபாத்திரங்களும் அமைந்துள்ளன.

                         சீனப்பெற்றோருக்கு பிறந்து , பெற்றோரின் இறப்பால் ஒன்றரை மாதக்குழந்தையாய் இருந்ததிலிருந்து தமிழ்க்குழந்தையாய் வளரும் அலமேலுவைப் பற்றிய கதைதான் 'குயவன் ' என்னும் மூன்றாவது குறு நாவல். 1941-ஆம் ஆண்டு மலேசியாவைப் பற்றிய வர்ணனைகளோடு ஆரம்பிக்கும் குறு நாவல் ராஜமாணிக்கம் , தஞ்சை அம்மாப்பட்டியில் பிறந்த அவரது
மனைவி சரஸ்வதி, ஜப்பான் நாட்டினரின் அராஜகம், சீனர்களைக் குறிவைத்து அவர்கள் தாக்கியவிதம் , அதில் இறந்து போன அலமேலுவின் பெற்றோர், அவர்களின் நண்பரான கணபதி பச்சைப் பிள்ளையைக் கொண்டு வந்து தமிழ்ப்பெயர் வைத்து தமிழச்சியாய் வளர்க்கும் விதம், அலமேலுக்கு தமிழ் மொழி மேல் இருக்கும் ஆர்வம், அவரின் ஆசிரியப்பணி, சீனப்பெண் போல இருக்கிறீர்கள், ஆனால் தமிழ் ஆசிரியராய் இருக்கின்றீர்கள் என்னும் கேள்வியை அலமேலு சமாளிக்கும் விதம், அவருக்கு தமிழை நன்றாக கற்றுக்கொடுத்தற்காக சிறந்த ஆசிரியர் என்னும் விருதை அரசாங்கம் கொடுத்து , விருது வாங்கிவிட்டு அவர் கொடுக்கும் பேட்டியோடு இந்த குறு நாவல் முடிகின்றது.மூன்று குறு நாவல்களைப் படித்து முடித்தபின்பு சிங்கப்பூர், மலேசியா சார்ந்த பல செய்திகளைத் தெரிந்தகொண்ட உணர்வு தோன்றியது.

                                மொத்தத்தில் மதுரையில் பிறந்த இவரின் எழுத்து ஆற்றல் இயல்பாகவும் ஆற்றொழுக்காகவும் இருக்கின்றது. குடும்பங்களை மையமாக வைத்து சிறப்பாக இந்த குறு நாவல்களைப் படைத்துள்ளார். படித்து முடித்துவிட்டு, இணையத்திற்குள் சென்று பார்த்தால் இவரைப் பற்றிய தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றது. ஆனால் தமிழ் பத்திரிக்கைகளில் இவரைப் பற்றி அதிகம் வந்ததாகத் தெரியவில்லை. இல்லை வந்து நான் படிக்கவில்லையா எனத்தெரியவில்லை. இணையத்தில் எடுத்த இவரைப் பற்றிய அறிமுகம் இதோ
"மதுரையில் பிறந்து இந்தியாவெங்கிலும் பள்ளிப் படிப்பை முடித்து, திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லு}ரியில் 1985ல் இயற்பியல் பட்டம் பெற்றவர். 1995 முதல் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வந்துள்ள ஜெயந்தி சங்கர் 17 வருடங்களாக சிங்கப்பூரில் பொறியாளரான கணவர் மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். எழுத்து தவிர இசையிலும் இவருக்கு ருசியுண்டு. ஓர் எழுத்தாளராகத் தான் உருவாக முக்கிய காரணம் தனது தொடர்ந்த வாசிப்பும,; அதற்கு உறுதுணையாக அமைந்த சிங்கப்பூரின் நூலகங்களுமே என்கிறார். எளிய எதார்த்த நடையில் எழுதும் இவர் சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டிருக்கிறார். நிறைய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் மற்றும் நாவல் போன்றவற்றை எழுதியுள்ள இவர் ஏராளமான பரிசுகள் வாங்கியுள்ளார். உலகளாவிய வாசகர்களைப் பெற்ற இவர் சிங்கப்பூரை களமாகக் கொண்ட, இவரின் புனைவுகளுக்காக பரவலாக அறியப் பெறுபவர். 2006 வரை வெளியான இவரின் 8 நு}ல்கள் - 'நாலேகால் டாலர்', 'முடிவிலும் ஒன்று தொடரலாம்', 'ஏழாம் சுவை', 'பெருஞ்சுவருக்குப் பின்னே', 'பின் சீட்', 'வாழ்ந்து பார்க்கலாம் வா' மற்றும் 'நியாயங்கள் பொதுவானவை', 'சிங்கப்பூர் வாங்க'. இவரின் ஒவ்வொரு நு}லும் ஒவ்வொரு வகையில் கவனிக்கத் தகுந்தவை. 'தமிழ்க்கொடி 2006' என்ற ஆழி பதிப்பகத்தின் ஆண்டு மலர் போன்ற பல்வேறு நு}ல்களிலும் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவரது எழுத்துக்கள் சிங்கப்பூரின் தமிழ் இலக்கியத்தின் பக்கம், உலகத் தமிழர்களின் பார்வையைத் திருப்பக் கூடியவை."

                                    நீங்களும் இவரின் எழுத்துக்களை வாசித்துப்பாருங்கள். நன்றாக இருக்கிறது எனச்சொல்வீர்கள்.