Wednesday, 2 March 2016

அண்மையில் படித்த புத்தகம் : முடிவிலும் ஒன்று தொடரலாம்..ஜெயந்தி சங்கர்

அண்மையில் படித்த புத்தகம் : முடிவிலும் ஒன்று தொடரலாம்- குறுநாவல் தொகுப்பு
 நூல் ஆசிரியர்                  : ஜெயந்தி சங்கர்
 பதிப்பகம்                        :  சந்தியா பதிப்பகம், சென்னை-83
முதற்பதிப்பு                                 : டிசம்பர்-2005
விலை                                          :    ரூ 80, $ 10, மொத்த பக்கங்கள் 160
மதுரை நூலக எண்                     :  166324

                                        மூன்று குறுநாவல்களை உள்ளடக்கமாகக் கொண்ட புத்தகம் . நூலகத்தில் எடுப்பதற்காக புத்தகங்களைப் புரட்டிக்கொண்டிருந்தபொழுது எழுத்தாளர் பிரபஞ்சன் " விசயங்களைத் தேர்ந்தெடுக்கும் கூர்மை, அவைகளைச்சிதறாமல் எழுதும் நம்பிக்கை, அலங்காரமற்ற மொழி , எல்லாவற்றுக்கும் மேல் நல்ல மனம், எழுத்தாளர் ஜெயந்தி சங்கருக்கு இருக்கின்றன. இந்த மேம்பாடு , இக்கதைகளிலும் இருக்கின்றன "  எனக் குறிப்பிட்டிருந்த முன்னுரை இப்புத்தகத்தை எடுக்க வைத்தது. கதைகளைப் படித்து முடித்தபோது பிரபஞ்சனின் கருத்துக்கள் முழுவதும் உண்மை எனப் புரிந்தது.

                               முதன்முதலில் 'வேண்டியது வேறில்லை' என்னும் குறு நாவல்.ஒரு வீட்டில் வேலை செய்யும் செல்வி என்னும் பெண்ணே இந்தக் குறு நாவலின் முதன்மைப் பாத்திரம். செல்வியை விரும்பும் சரவணன், சிங்கப்பூரில் வாழும் ரகு, ப்ரியா தம்பதிகள்- அவர்களின் குடும்பச்சண்டைகள், அவர்களின் பிள்ளைகளைப் பார்த்துக்கொள்ளும் செல்வி, சரவணன் இன்னொரு பெண்ணை திருமணம் செய்தல், அவனின் அகால மரணம் என விவரிக்கப்படும் கதை, ப்ரியா-ரகு வாழ்வில் அடிக்கடி சண்டை வரக்காரணமாகும் தீபக் , தீபக்கின் கெட்ட எண்ணத்தைப் புரிந்த கொண்ட செல்வி, தன் எஜமானியம்மாவிடம் அதனை உணர்த்தி, ரகு-ப்ரியா வாழ்வில் மீண்டும் மகிழ்ச்சி ஏற்படக்காரணமாக அமைவது என்னும் கருவைக்கொண்டதுதான் இந்த நாவல். சிங்கப்பூர், அதன் வாழ்வியல், மிஞ்சும் உணவைக் கொடுத்து சாப்பிட்டவர்களுக்கு பிரச்சனை என்றால் போலீஸ்காரர்கள் வருவார்கள் என்ற விவரிப்பு என சிங்கப்பூருக்கு இதுவரை வராத என்னைப்போன்றவர்கள் கூட அந்த நாட்டின் சில பழக்கங்களை , சட்டங்களை, பண்பாட்டைப் புரிந்து கொள்ளும் வகையில் விவரித்து  உள்ள பாங்கு அருமை.

                           குடும்ப வாழ்வில் பிரச்சனை வரும், அதனை எதிர்கொண்டு பிரச்சனைகளைத் தீர்த்து இன்பமாக வாழலாம் என்பது முதல் குறு நாவலான 'வேண்டியது வேறில்லை ' என்றால், ஒரு பெண் சேர்ந்தே வாழமுடியாத உளவியல் பிரச்சனை உள்ள ஒருவனைப் பற்றிய நாவல் 'முடிவிலும் ஒன்று தொடரலாம் ' என்பது. இப்படியும் மனிதர்கள், கணவர்கள் இருப்பார்களா என்று படிப்பவர்களை அதிரவைக்கும் ' கிஷோர் ' என்னும் கதாபாத்திரம் இந்தக் குறுநாவலைப் படித்து முடித்தபின்பும் சிந்திக்க வைக்கிறது. பெண் பிள்ளைகளை பெற்றவர்கள் , இப்படிப்பட்ட ஒருவனிடம் தன் மகள் மாட்டிக்கொண்டாள், திருமணம் என்னும் பெயரால் என்ன ஆவது என்று கவலைப் படவைக்கும் கதாபாத்திரம். கதாநாயகனாக நடிக்கும் ஆனால் வில்லனாக நடக்கும் கிஷோரிடம் மாட்டிக்கொண்ட லாவண்யா தன் கணவன் என்னும் மிருகத்திடமிருந்து விலகி வாழ்வது என்பதுதான் இந்தக் கதையின் முடிவு. படிக்கும் எத்தகைய பழமைவாதியும் கூட லாவண்யாவின் முடிவு சரி என்பதனை சொல்லவைக்கும் வகையில் கதையின் போக்கும் விவரிப்பும், கதாபாத்திரங்களும் அமைந்துள்ளன.

                         சீனப்பெற்றோருக்கு பிறந்து , பெற்றோரின் இறப்பால் ஒன்றரை மாதக்குழந்தையாய் இருந்ததிலிருந்து தமிழ்க்குழந்தையாய் வளரும் அலமேலுவைப் பற்றிய கதைதான் 'குயவன் ' என்னும் மூன்றாவது குறு நாவல். 1941-ஆம் ஆண்டு மலேசியாவைப் பற்றிய வர்ணனைகளோடு ஆரம்பிக்கும் குறு நாவல் ராஜமாணிக்கம் , தஞ்சை அம்மாப்பட்டியில் பிறந்த அவரது
மனைவி சரஸ்வதி, ஜப்பான் நாட்டினரின் அராஜகம், சீனர்களைக் குறிவைத்து அவர்கள் தாக்கியவிதம் , அதில் இறந்து போன அலமேலுவின் பெற்றோர், அவர்களின் நண்பரான கணபதி பச்சைப் பிள்ளையைக் கொண்டு வந்து தமிழ்ப்பெயர் வைத்து தமிழச்சியாய் வளர்க்கும் விதம், அலமேலுக்கு தமிழ் மொழி மேல் இருக்கும் ஆர்வம், அவரின் ஆசிரியப்பணி, சீனப்பெண் போல இருக்கிறீர்கள், ஆனால் தமிழ் ஆசிரியராய் இருக்கின்றீர்கள் என்னும் கேள்வியை அலமேலு சமாளிக்கும் விதம், அவருக்கு தமிழை நன்றாக கற்றுக்கொடுத்தற்காக சிறந்த ஆசிரியர் என்னும் விருதை அரசாங்கம் கொடுத்து , விருது வாங்கிவிட்டு அவர் கொடுக்கும் பேட்டியோடு இந்த குறு நாவல் முடிகின்றது.மூன்று குறு நாவல்களைப் படித்து முடித்தபின்பு சிங்கப்பூர், மலேசியா சார்ந்த பல செய்திகளைத் தெரிந்தகொண்ட உணர்வு தோன்றியது.

                                மொத்தத்தில் மதுரையில் பிறந்த இவரின் எழுத்து ஆற்றல் இயல்பாகவும் ஆற்றொழுக்காகவும் இருக்கின்றது. குடும்பங்களை மையமாக வைத்து சிறப்பாக இந்த குறு நாவல்களைப் படைத்துள்ளார். படித்து முடித்துவிட்டு, இணையத்திற்குள் சென்று பார்த்தால் இவரைப் பற்றிய தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றது. ஆனால் தமிழ் பத்திரிக்கைகளில் இவரைப் பற்றி அதிகம் வந்ததாகத் தெரியவில்லை. இல்லை வந்து நான் படிக்கவில்லையா எனத்தெரியவில்லை. இணையத்தில் எடுத்த இவரைப் பற்றிய அறிமுகம் இதோ
"மதுரையில் பிறந்து இந்தியாவெங்கிலும் பள்ளிப் படிப்பை முடித்து, திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லு}ரியில் 1985ல் இயற்பியல் பட்டம் பெற்றவர். 1995 முதல் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வந்துள்ள ஜெயந்தி சங்கர் 17 வருடங்களாக சிங்கப்பூரில் பொறியாளரான கணவர் மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். எழுத்து தவிர இசையிலும் இவருக்கு ருசியுண்டு. ஓர் எழுத்தாளராகத் தான் உருவாக முக்கிய காரணம் தனது தொடர்ந்த வாசிப்பும,; அதற்கு உறுதுணையாக அமைந்த சிங்கப்பூரின் நூலகங்களுமே என்கிறார். எளிய எதார்த்த நடையில் எழுதும் இவர் சீனக் கலாசாரத்தின் மீது தனி ஆர்வத்தினை வளர்த்துக் கொண்டிருக்கிறார். நிறைய சிறுகதை, கட்டுரை, குறுநாவல் மற்றும் நாவல் போன்றவற்றை எழுதியுள்ள இவர் ஏராளமான பரிசுகள் வாங்கியுள்ளார். உலகளாவிய வாசகர்களைப் பெற்ற இவர் சிங்கப்பூரை களமாகக் கொண்ட, இவரின் புனைவுகளுக்காக பரவலாக அறியப் பெறுபவர். 2006 வரை வெளியான இவரின் 8 நு}ல்கள் - 'நாலேகால் டாலர்', 'முடிவிலும் ஒன்று தொடரலாம்', 'ஏழாம் சுவை', 'பெருஞ்சுவருக்குப் பின்னே', 'பின் சீட்', 'வாழ்ந்து பார்க்கலாம் வா' மற்றும் 'நியாயங்கள் பொதுவானவை', 'சிங்கப்பூர் வாங்க'. இவரின் ஒவ்வொரு நு}லும் ஒவ்வொரு வகையில் கவனிக்கத் தகுந்தவை. 'தமிழ்க்கொடி 2006' என்ற ஆழி பதிப்பகத்தின் ஆண்டு மலர் போன்ற பல்வேறு நு}ல்களிலும் இவரது கட்டுரைகள் வெளியாகியுள்ளன. இவரது எழுத்துக்கள் சிங்கப்பூரின் தமிழ் இலக்கியத்தின் பக்கம், உலகத் தமிழர்களின் பார்வையைத் திருப்பக் கூடியவை."

                                    நீங்களும் இவரின் எழுத்துக்களை வாசித்துப்பாருங்கள். நன்றாக இருக்கிறது எனச்சொல்வீர்கள்.

No comments:

Post a Comment