Wednesday, 20 April 2016

நடைபாதைக் கோயில்களை அகற்றக்கோரி உச்சநீதிமன்றம் 2006இல் உத்தரவிட்டும் அகற்றாதது ஏன்?.....

புதுடில்லி, ஏப்.20- நடைபாதைக் கோயில்களை அகற்ற வேண்டும் என்று உச்சநீதிமன்றம் 2006இல் உத்தரவிட்டும் அகற்றாதது - ஏன்? மாநில அரசின் தலைமைச் செயலாளர்கள் நீதிமன்றத்திற்கு நேரில் வந்து பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தர விட்டது.

சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமாக எழுப்பப்பட்டு உள்ள மத வழிபாட்டுத் தலங்களை அப்புறப்படுத்தாதது ஏன்? என்று மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.இந்த விவகாரம் தொடர்பாக இரு வாரங்களுக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாடு முழுவதும் சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்து சட்டவிரோதமான முறையில் வழிபாட்டுத் தலங்கள், கட்டடங்கள் கட்டப்பட்டு இருப்பதாகவும், அதை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிடக் கோரியும் கடந்த 2006-இல் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இது தொடர்பாக அவ்வப்போது மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவுகளைப் பிறப்பித்து வந்தது.ஆனால் மாநில அரசுகள் உறுதியானநடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. தங்களின் நடவடிக்கை குறித்து, பிரமாணப் பத்திரத்தையும் மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.கோபால கவுடா மற்றும் அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு, இந்த வழக்கு நேற்று செவ்வாயன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாமல் இருந்ததற்காக மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், மாநில அரசுகளின் இத்தகைய அலட்சிய மனப்பான்மையை நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறிய நீதிபதிகள், சாலைகள் மற்றும் பொது இடங்களை ஆக்கிரமித்து எழுப்பப்பட்ட மத வழிபாட்டுத் தலங்கள், சட்டவிரோத கட்டடங்களை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டும் அதை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இந்த விவகாரத்தில் மாநில அரசுகளுக்கு கடைசி வாய்ப்பாக இரு வாரங்களுக்குள் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் சம்பந்தப்பட்ட மாநில அரசுகளின் தலைமைச் செயலாளர்கள் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தின் உத்தரவைப் பின்பற்றாததற்கான காரணத்தை விளக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கண்டிப்பு காட்டியுள்ளனர்.
நன்றி : விடுதலை 20.4.16

No comments:

Post a Comment