கடந்து போன காலங்கள்(1) .......
அய்ம்பத்து இரண்டு
ஆண்டுகள் ஓடி
மறைந்திருக்கின்றன
நாளைக்(31.05.2016) காலை
அய்ம்பத்து மூன்று
பிறக்கின்றது .....
முதல்பத்து ஆண்டுகள்
பெரும்பாலான நினைவுகள்
நினைவுகளில் இல்லை !
ஓரீரண்டைத் தவிர ....
எனது அப்பா
இறந்த வீட்டில்
அவரது பிணம்
பொது வீட்டில்
சுவற்றில் சாத்திக்கிடக்க
பசிக்கிறதே என்று
அழுதேனாம்.....
சாப்பிட்டு பலமணி நேரம்
ஆனதால் நான்
பசி ! பசி என்றழுக
செத்த வீட்டிற்கு
வந்த பலரும்
எனைப் பார்த்து
பார்த்து அழுதார்களாம்....
நீர்மாலை எடுத்துவர
எங்கள் சாப்டூரின்
சந்தணக்கிணற்றில்
குளித்தபோது
பின்னர் தற்காலிகமாக
போடப்பட்ட பூணூலோடு
சிரித்துக்கொண்டே
நடந்தேனாம்
பார்த்தவர்களில் சிலபேர்
இன்னும் கூடச்சொல்வார்கள் ....
அறியா வயதில்
அப்பனை பறிகொடுத்துவிட்டோம்
என்பது கூட
அறியாது சிரித்த வயது அது .....
ஆனால் ஒன்று
மட்டும் எனது
நினைவில் அப்படியே
இருக்கிறது ....
ஆறடிக் குழி தோண்டி
ஆறடி உயரமுள்ள
அப்பாவை பிணமென்று
உள்ளே போட்டு
மண்ணை அள்ளிப்
போடச்சொன்னதும்
பின்பு
பெரிய பெரிய
கல்லைப் போட்டு
அப்பாவின் சவக்குழியை
மூடியதும்
இன்னும்கூட
மனதிற்குள் இருக்கிறது .....
பெத்த அப்பாவின் மேல்
ஏழு வயதில்
கல்லையும் மண்ணையும்
போட்டு மூடும் கொடுமை
எனது எதிரிகளின்
பிள்ளைகளுக்குக் கூட
வாய்க்கலாகாது
என மனதில் ஓடுகிறது.....
மொட்டமச்சு
மெத்தில் ஏறி
காய்ந்த விறகை
எடுத்துப்போடச்சொல்ல
ஏணிப்படிஏறிப்போய்
விறகை எடுத்து
எடுத்துப்போட்ட நான்
முடிவில் விறகு மட்டும்
பறந்து செல்கிறது
நாம் மட்டும் ஏன்
படியில் செல்லல் வேண்டும்
என விறகோடு
கீழே விழுந்தேனாம்....
பிறவியிலேயே
ஆராய்ச்சியாளன்
உங்க அப்பா
என்று என் பிள்ளைகளிடம்
இன்றும்கூட
கேலி செய்வார்
எனது மூத்த அண்ணன் .....
----வா. நேரு---- 30.05.16
53 ஆவது பிறந்தநாள் காணும் முனைவர் வா.நேரு அவர்களுக்கு எனது உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteஅய்யா, நன்றி.
Deleteஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ஐயா
ReplyDeleteஅய்யா, நன்றி.
ReplyDelete