அம்மா,உனது
நினைவு நாளை
எப்படி எப்படியெல்லாம்
நினைவுகொள்வது ....
வாழ் நாளெல்லாம்
ஒரு கலகக்காரியாய்
உறவுகளுக்கு
தோற்றம் தந்த
நினைவுகளாலா !
டேய், இளவயதில் என்
கணவர் இறந்தார் !
வளர்த்துக்காட்டுகிறேன்
என் பிள்ளைகளை
உங்கள் கண்முன்னால்
என உறவுகளுக்கு
முன்னால் வளர்த்துக் காண்பித்த
வைராக்கியத்தாலா !
காலை நாலுமுதல்
இரவு பத்துவரை
உழைப்பைத் தவிர
ஒன்றும் அறியா
உழைப்பாளி என்னும்
குறியீட்டீலா ....
கிடைக்கும் சில
நிமிட நேரங்களில்
நூலக புத்தகங்களில்
மூழ்கி எழும்
உனது புத்தக வாசிப்பிலா ?
சாமி வந்து ஆடும்
சொந்தக்காரிகளை
நேருக்கு நேராய்
அப்படியே சாமி
ஆடிக்கிட்டே
கரண்ட கம்பியை
பிடிங்கலா... பார்ப்போம்
எனும் நேரடிக் கேள்விகளாலா ?
..
தேவையில்லாமல்
பேசிய தன்
மேலதிகாரியை
பள்ளிக்கூடத்து வளாகத்திலேயே
செருப்பைக் கழட்டி
அடித்த சுயமரியாதையாலா ....
அஞ்சி அஞ்சிச் சாகும்
சில பெண்களைப்
போல அல்லாது
வரும் பாம்பையும்
அடித்து தூக்கி எறியும்
நெஞ்சுரத்திலா ......
அழியா நினைவுகள்
அலை அலையாய் மனதில்....
அம்மா, உனது நினைவு நாளை
எப்படி ? எப்படியெல்லாம்
நினைவு கொள்வது ......
-- வா.நேரு----
நன்றி : விடுதலை - 23.5.2016(வெளியூர்)
..
வாழுமிவ் வாழ்வு வழங்கிய தாயின்பேர்
ReplyDeleteநாளும் துதிப்போமே நாம்.
ஆம் அண்ணே..நினைவுகளில் எப்போதும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார்கள்
ReplyDeleteஅம்மாவின் நினைவிற்கு அருமையான பரிசு வாழ்த்துக்கள்
ReplyDelete