Sunday, 8 May 2016

அண்மையில் படித்த புத்தகம் : பெஞ்சமின் ஃபிராங்க்ளின்



அண்மையில் படித்த புத்தகம் : பெஞ்சமின் ஃபிராங்க்ளின்
தமிழில்                                      :  பாலு சத்யா
பதிப்பகம்                                   : கிழக்கு (Prodigy)
முதல் பதிப்பு                             : ஜனவரி 2008, 80 பக்கம் , விலை ரூ 25
மதுரை மைய நூலக எண்       :  183274

                                                            பெஞ்சமின் ஃபிராங்களின் வாழ்க்கை வரலாறு சிறு புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. சாதனை மனிதர்களின் வாழ்க்கை வரலாறு எப்போதுமே படிப்பவர்களுக்கு உத்வேகம் அளிப்பது. அந்த வகையில் 'அற்புதமான மனிதரின் அசத்தல் வாழ்க்கை வரலாறு ' என புத்தகத்தின் பின் பகுதியில் போட்டிருக்கின்றார்கள்.உண்மைதான்.

                                                           சாதாரண வியாபாரியின் மகனாகப்பிறந்து , இளம் வயதில் பல கொடுமைகளையும் வறுமையையும் அனுபவித்து பின் தன் முயற்சியால் புகழ்பெற்ற பெஞ்சமின் ஃபிராங்களின் வாழ்க்கை வரலாறு ஒரு செய்தியை மிக அழுத்தமாகச்சொல்கிறது. அது அவருக்கு புத்தகத்தின் மீது இருந்த தீராத பற்றும், வாசிப்பு பழக்கமுமே அவரின் உயர்வுக்கு அடிகோலியிருக்கிறது என்பதாகும்.' அவர் பட்ட அனுபவங்கள்தான் அவருக்கு வாழ்க்கையைக் கற்றுக்கொடுத்தது என்றால் அது மிகையில்லை, அந்தப்பாடங்கள் அவரை உயரத்துக்கு கொண்டு சென்றன. அரசியலிலும் ,அறிவியல் கண்டுபிடிப்புகளிலும் ஒரு தனித்தன்மை வருவதற்கு காரணமாக இருந்தது ' எனச்சொல்கின்றார் இந்த நூலின் மொழி பெயர்ப்பு ஆசிரியர் பாலு சத்யா.

                                1706- ஜனவரி 17-ல் பிறந்து 1790 -ஆண்டு ஏப்ரல் 17 வரை வாழ்ந்து மறைந்த பெஞ்சமின் ஃபிராங்களின் ஒரு அரசியல் தலைவராக உருவான வரலாறும், ஒரு  அறிவியல் அறிஞராக வாழ்ந்த வரலாறும் சுருக்கமாகவும் தெளிவாகவும் கொடுக்கப்பட்டிருக்கின்றது, தனது அண்ணனே தனது எழுத்தின் மீது நம்பிக்கை வைக்காதபோது , கட்டுரைகளை பெயரை மறைத்து எழுதியதையும், வேலைக்காகவும் உணவுக்காகவும் நாடு நாடாக , ஊர் ஊராக அலைந்த கதையும் ஈர்ப்பாகவே உள்ளது.


                           பெஞ்சமின் ஃபிராங்களின் நண்பருக்கு எழுதிய ஒரு கடிதம் அவரின் அரசியல் வாழ்க்கைக்கு அடிகோலியது என்பதும் அரசியலில் அவர் பங்கு பெற்ற நிகழ்வுகளும் , பின்னர் இடிதாங்கி, பை போலார் மூக்குக்கண்ணாடி போன்றவற்றை அவர் கண்டு பிடித்ததும் சொல்லப்பட்டிருக்கிறது.

                                                     " அறிவியல் அறிஞர், அரசியல் மேதை, அரசுத்தூதுவர்,ஒரு மாகாணத்தின் அதிபர் என அமெரிக்காவில் பல பதவிகளில் இருந்தாலும் ஒரு சாதாரண பிரிண்டர் என்று தன்னை அழைத்துக்கொண்ட எளிமையான மனிதர் "
பெஞ்சமின் ஃபிராங்களின் வரலாறு இளைஞர்கள் படிக்கவேண்டிய வரலாறு.
                                                         ஒருவரைப் பற்றிய சிறு புத்தகம் அவரின் பல்வேறு சிறப்புகளைக் கூறி , அவரைப் பற்றி மேலும் அறிவதற்கும் தேடுவதற்கும் தூண்டுதல் செய்தாலே போதுமானது . அந்த செயலை இந்தப்புத்தகம் சிறப்பாகவே செய்திருக்கிறது.

                                                         


No comments:

Post a Comment