Wednesday, 1 June 2016

பேச முடியாதவர்களுக்காகப் பேசும் குரல்.......

வருமானத்தை நோக்காது தமிழர்களின் தன்மானத்துக்காகப் பாடுபடும் 
82 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் விடுதலையின் சந்தாதாரர் ஆகுங்கள்!

‘விடுதலை’யை வாழ்த்துங்கள் - நம்மை அழிக்க நினைக்கும் சக்திகளை வீழ்த்துங்கள்!

‘விடுதலை’ ஆசிரியர் விடுத்துள்ள ‘விடுதலை’பற்றிய அறிக்கை

81 ஆண்டுகள் கடந்து 82 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ‘விடுதலை’ நாளேட்டை வாழ்த்துங்கள் - சந்தாதாரர் ஆகுங்கள் என்று ‘விடுதலை’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடான நமது ‘விடுதலை’ நாளேட்டிற்கு இன்று (1.6.2016) 82 ஆவது பிறந்த நாள் விழா!

பகுத்தறிவுப் பகலவன் தந்த அறிவுக்கொடைகளான சுயமரி யாதை இயக்கம், ‘குடிஅரசு’, ‘விடுதலை’,  ‘பகுத்தறிவு’, ‘ரிவோல்ட்’, ‘தி மாடர்ன் ரேசனலிஸ்ட்’ போன்ற அறிவாயுதங்கள் ஏராளம்.

வீரஞ்செறிந்த விவேகப் பணிகள்!

அவற்றைக் கொண்டே சுமார் 90 ஆண்டுகால சுயமரியாதை இயக்க வரலாற்றில், அறியாமை,  ஜாதி, பெண்ணடிமை, மதவெறி, மூடநம்பிக்கை, பண்பாட்டுப் படையெடுப்பு போன்றவற்றை உளப்பூர்வமாக, விளைவுகள் எதுவரினும் சற்றும் அஞ்சாமல், நடுங்காமல், பின்வாங்காமல் பீடுநடை போட்டு, எதிர்த்து சமூகநீதியை,  பல்வேறு சமூக உரிமைகளை நிலைநாட்டியுள்ளோம் - ‘விடுதலை’யின் வீரஞ்செறிந்த விவேகப் பணிமூலம்!

நார்வே நாட்டின் தலைசிறந்த பகுத்தறிவாளரான

லெவிஃ பிராகல் அவர்கள் இந்தியத் தலைநகரான புதுடில்லியில் முழங்கினார்:

‘‘உலகின் வேறு எந்த நாட்டிலும் பகுத்தறிவாளர்களால் ஒரு நாளேடு நடத்த இயலவில்லை; தமிழ்நாட்டில் - அதுவும் தந்தை பெரியார் துவக்கிய இயக் கத்தினால் மட்டுமே தொடர்ந்து இந்நாளேடு - மூடநம்பிக்கைகளை எதிர்த்து முழு மூச்சுடன் அறிவுப் போர் நடத்தி, வெற்றி பெற்று வருகிறது’’ என்று குறிப்பிட்டார்!
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை முழக்கம்!

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை முழக்கம் ‘விடுதலை’ நாளேடு.

பேச முடியாதவர்களுக்காகப் பேசும் குரல் இந்த ‘விடுதலை’ நாளேடு!

ஆமையாய், ஊமையாய் அடங்கிக் கிடந்த பெண்ணினத்தின் விடுதலைக்கு உழைக்கும் நாளேடு ‘விடுதலை’ நாளேடு!

சமூகநீதிக்காக சமர்புரியும்
பேராயுதமானது இந்த ‘விடுதலை’ போராயுதம்!

எத்தனையோ பலங்களை - சூழ்ச்சி பலம், அதிகார பலம், பத்திரிகை ஊடக பலம், அதிகாரவர்க்க பலம் எல்லா வற்றையும் பெற்ற சகலகலா சாமர்த்தி யங்களை எதிர்த்துப் போர்க்களத்தில் நின்று போராடும் அறிவு பலம் கொண்ட சாமான்யர்களின் சரித்திர நாளேடு நம் ஏடு ‘விடுதலை’!

லட்சக்கணக்கில் அச்சாகிடும் ஏடு களைக் கண்டு அஞ்சிடாத அரசுகள், எதிரிகள்  இந்த லட்சிய ஏட்டின் கருத்து வீச்சு களை - தங்கள் கோட்டையின்மீது விழும் வெடிகுண்டுகளாகக் கருதி  நடுநடுங்கும் வண்ணம், யாராலும் விலைக்கு வாங்கப்பட முடியாத ஏடு நம் ‘விடுதலை’ நாளேடு!

இதற்கு நாளும் உழைப்பதைவிட யாம் பெறும் இன்பம் இவ்வையகத்தில் வேறு எதுவும் இல்லை. இல்லவே இல்லை!

தந்தை பெரியார் கொடுத்த பொறுப்பு!

1962 இல் நம் அறிவு ஆசான் தந்தை பெரியார் தனது அறிவுச் சுரங்கமான இந்த விடுதலையை இந்த எளிய தொண்டனின் பொறுப்புக்கு விட்டார்!
அலுப்பு, சலிப்பின்றி 54 ஆண்டு களாக கழகக் கொள்கைக் குடும்பத் தவரின் அரிய ஒத்துழைப்புடன் - கைம் மாறு கருதாது உழைக்கும் ‘விடுதலை’ப் பணிக் குடும்பத்தினரின் அரிய கூட்டு உழைப்பினாலும், ‘விடுதலை’ வளர்ந்து வருகிறது!  இணையத்தில் முதல் தமிழ் நாளேடாக இன்றும் இணையத்தில் 189 நாடுகளில் வாசகர்கள் நாள்தோறும் படிக்கின்றனர்.
‘விடுதலை’ கண்டறியாதவை!

எதிர்ப்புகள் - அரசுகளின் ஆதரவின்மை என்னும் கடும் வெப்பத்திற்கிடையே பல லட்சக்கணக்கான ரூபாய் பொருள் நட்டத்தினையும் ஏற்று அய்யா தந்த அருட்கொடையாக இன்னும் இது நெஞ்சை நிமிர்த்தி, நேர்கொண்ட பார்வையுடன், எவருக் கும்  அஞ்சாத வீரத்துடன் மனிதகுல மாண்புக்கும் உரிமைக்கும் போர் முரசு கொட்டி வருகிறது!

தன்மானம், இனமானம் இவைகளுக்காகவே தன் வருமானத்தைத் துறந்த நிலையிலும் என்றும் தன் முழக்கத்தை நிறுத்துவதில்லை.

ஜோதிட மூடநம்பிக்கைகள், திரைப்பட செய்திகள், வருமானத்தைப் பெருக்க விறுவிறுப்பு செய்திகள் - இவை ‘விடுதலை’ கண்டறியாதவை!

அண்ணா ஆசிரியராக இருந்த விடுதலைக்கு அண்ணா பெயரில் உள்ள ஆட்சி- நூலகங்களில்
தடை விதிக்கலாமா?


அறிஞர் அண்ணா ஆசிரியராக இருந்த நாளேடான இந்த ‘விடு தலை’யை அண்ணா அரசு என்று பெயர் தாங்கிடும் கட்சி - ஆட்சி நூலகங்கள் வாங்கியதை நிறுத்திட்ட கொடுமை! இனியும் இம்முறையும் நீடிக்கலாமா?

அரசு நிதி - அனைவருக்கும் பொது, அதில் கட்சிக் கண்ணோட்டத்திற்கு ஏது இடம்?

அரசு விளம்பரங்களில் ‘விடுதலை’ புறந்தள்ளப்பட்ட ‘‘புதிய தீண்டா மையால்’’ ஒதுக்கப்படும் கொடுமை - இன்னமும் நீடிக்கலாமா?
கருத்துச் சுதந்திரத்திற்கு இவ்வளவு கடும் விலை நியாயம்தானா?
தமிழக ஆட்சியாளர்கள் சிந்திக் கட்டும்!

சந்தாதாரர் ஆவீர்!

நமது கழகக் குடும்பத்தவர்களுக்கும், ‘‘கண்ணுக்குத் தெரியாத உறுப்பினர் களான நமக்குப் பேராதரவு தரும் அன்பர்களுக்கும்’’ நமது வேண்டு கோள், ஒவ்வொருவரும் மற்ற இருவரை சந்தாதாரர்களாக்கி, எங்கள் பணிக்கு உரமிட்டு வளர்க்க உதவுங்கள்!

எமை நத்துவாயென எதிரிகள் கோடி இட்டழைத்தாலும் தொடாத இவ்வேடு, என்றும் எந்நிலையிலும் பீடுநடை போடும்!

வீதிகளில் துண்டை விரித்தேனும் விடுதலை தன்  தொண்டைத் தொடர இருக்கவே இருக்கிறது எங்கள் கருஞ்சட்டைப்படை! ‘விடுதலை’யை வாழ்த்துங்கள்! ஒத்துழையுங்கள்!!
நம்மை அழிக்க நினைக்கும் வீணர்களை வீழ்த்துங்கள்!

என்றும் உங்கள் தொண்டன்


கி.வீரமணி
ஆசிரியர்,
விடுதலை

சென்னை  
1.6.2016

No comments:

Post a Comment