Sunday, 19 June 2016

வடக்கயிற்றில் கூனையைக் கட்டி.......

                                                                கடந்து போன காலங்கள்(9)


எங்கள் வயக்காடு
பொதுக்காடு
முறை வைத்து முறைவைத்து
வாரத்தில் ஒரு நாள்
தண்ணீர் பாய்ச்சல் வேண்டும்

கூனையில் நீரை மோந்து
கமலையில் தண்ணீர் இறைக்கும்
விவசாய முறை
இன்றைய தலைமுறையில்
எத்தனை பேருக்குத் தெரியும்
எனத்தெரியவில்லை !

வடக்கயிற்றில்
கூனையைக் கட்டி
கூனை உருள்வதற்கு ஒரு
உருளை அமைத்து
கூனையை இணைக்கும்
வடக்கயிற்றை
மேக்காலில்  கட்டி
மேக்காலின் இருபக்கமும்
மாட்டைக் கட்டி
மாடுகளும் மனிதனும்
நடந்து நடந்து
நாள் முழுக்க
தண்ணீரை இறைக்கும் முறை

பின்னால் வரும்போது
மாட்டோடு நடந்தும்
கூனையில் தண்ணீரை
மோந்து முன்னால் வரும்போது
வடக்கயிற்றில் உட்கார்ந்து
மாடுகளை விரைவுபடுத்தியும்
முன்னும் பின்னுமாய்
மாட்டோடு நடந்து நடந்து
காலை முதல் மாலைவரை
தண்ணீர் இறைத்தால்
எங்களுக்குரிய கால் ஏக்கர்
பயிர்கள் தண்ணீரில் நனையும்

எங்கள் ஊரில்
இப்போது மாடுகளே
அரிதாக ....
உழவுக்கே மாடுகள்
இல்லா நிலையில்
கமலை இறைக்க மாடுகளா...
சாத்தியமில்லை....

மின்சார சுவிட்சு
போட்டவுடன்
மோட்டார் பம்பில்
தண்ணீர் அடிக்கும்
இக்காலங்களில் அவை
தேவையுமில்லை....

மாட்டோடு கமலையில்
நீர் இறைத்த  தருணங்கள்....
நீர் இறைக்கும் நேரங்களில்
அண்ணன் மறைந்துபோன
'பாட்டுக்கார பரம்சிவம் 'போல
நீரோடையாய்
தங்கு தடையின்றி ஓடிவரும்
நாட்டுப்புற பாடல்களோடு
நீர் இறைத்த
எங்களுக்கு மூத்த
 தலைமுறையினர்....
கடந்து போன காலங்கள்
இனிப் பார்க்க இயலா
அழிந்து போன ஓவியங்கள்.....


                                         வா.நேரு - 19.06.2016



No comments:

Post a Comment