Wednesday, 28 December 2016

பிபிசியின் ''100 பெண்கள் '' சிறப்பு தொகுப்பு ....வறுமையில், பாரலிம்பிக்ஸ் தங்கப்பதக்கம் வென்ற வீரரை உருவாக்கிய சாதனைத் தாய்

வறுமையில், பாரலிம்பிக்ஸ் தங்கப்பதக்கம் வென்ற வீரரை உருவாக்கிய சாதனைத் தாய்
விபத்தில் கால் சேதமடைந்த மகனின் விளையாட்டு சாதனைக் கனவுக்காக வாழ்க்கையில் போராடிய ஏழைத்தாய் சரோஜாவை பிபிசி தமிழுக்காக சந்தித்தார் பிரமிளா கிருஷ்ணன்
பரபரப்பான சேலம் நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள அமைதியான தீவட்டிப்பட்டி கிராமத்திற்குக் கடந்த செப்டம்பர் மாதம் புதிய ஒரு அடையாளத்தைத் தந்தார் பாரலிம்பிக்ஸில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு.


மாரியப்பனின் தாய் சரோஜா
பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரத்தில் பாரலிம்பிக் போட்டிகளில் அவர் உயரம் தாண்டுதல் போட்டியில் விளையாடியபோது, அவரது ஒரே நம்பிக்கையாக இருந்தவர் அவரது தாய் சரோஜா. மாரியப்பன் விளையாட்டில் தங்கப் பதக்கம் வென்ற தருணத்தில், சரோஜா அவரது வாழக்கையில் வென்று விட்டதை தீவட்டிப்பட்டி கிராமம் ஒப்புக்கொண்டது.
பிபிசியின் ''100 பெண்கள் '' சிறப்பு தொகுப்பு
மகன் அடையவிருக்கும் வெற்றிக்கான பயணச் செலவாக, வெறும் பத்து ரூபாயை மட்டும் தர முடிந்த சரோஜா தனித்து வாழும் ஒரு சாதனைப் பெண்.
தனது இளம் வயதில் வாழ்வதற்கான போராட்டம், தனது மூன்று ஆண் குழந்தைகளையும் வளர்க்க எதிர்கொண்ட சிக்கல்கள் பற்றி பிபிசி தமிழிடம் பேசினார்.
''திருமண வாழ்க்கையில் சந்தித்த தோல்வி என்னைத் தனித்து வாழும் பெண்ணாக மாற்றியது. ஒலிம்பிக்ஸ் போட்டி பற்றி எனக்கு தெரியாது. ஆனால் என் மகன் உலக அளவில் பாராட்டு பெற வேண்டும் என்பதில் எனக்குச் சந்தேகம் இருந்ததில்லை. எனது மகன் பாரலிம்பிக்ஸ் போட்டிக்காகச் சென்றது எங்கள் ஊரில் பலருக்கும் தெரியாது.தொலைக்காட்சியில் மாரியப்பன் தங்கம் வென்றதைப் பார்த்த பலருக்கு அதை நம்ப முடியவில்லை,''' என்றார்.

ஆரம்பத்தில் ஒரு மாற்றுத் திறனாளி குழந்தை இருந்ததால் வாடகை வீடு கிடைப்பதில் கூடச் சிரமப்பட்டதாக அவர் கூறுகின்றார். ''உறவினர்கள் பலரும் ஒதுக்கி வைத்தனர். செங்கல் சுமக்கும் வேலை, விவசாய கூலி வேலையில் கிடைத்த காசு, எனக்கும் எனது மூன்று மகன்களுக்கும் ஒரு வேளை உணவை உறுதி செய்தது. அவர்கள் என்னிடம் எதையும் வாங்கித் தர கேட்டதில்லை,'' என்றார் சரோஜா.

மாரியப்பனின் தாய் சரோஜா
மாரியப்பனின் ஐந்து வயதில் ஒரு விபத்தில் அவரது வலது கால் பாதத்தின் பெரும்பகுதி சிதைந்தது. விளையாட்டில் ஆர்வம் கொண்ட தனது மகனுக்கு உற்சாகம் மட்டுமே அளிக்கமுடிந்தது என்றார் சரோஜா. ''மாரியப்பன் மற்றும் அவனது தம்பிகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதை நான் அனுமதித்தேன். அவர்களுக்கு அளிக்கும் சுதந்திரம் மட்டும் தான் என்னால் தர கூடிய ஒன்றாக இருந்தது. வளரும் போது, அவன் பரிசு வாங்கும் நிகழ்ச்சிகளுக்குச் செல்ல கூட எனக்கு நேரம் இருந்ததில்லை,'' என்கிறார்.

கடந்த சில மாதங்களில் தனது உடல் பலம் முழுவதையும் இழந்து, மன வலிமையையும் இழந்த சரோஜா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்தார். ''தற்கொலை தான் தீர்வு என நினைத்தேன். எனது மகன் மாநில அளவு மற்றும் தேசிய அளவில் பரிசுகளை குவித்திருந்தாலும், எங்கள் குடும்பத்திற்கு உதவ யாரும் முன்வரவில்லை. இந்த ஒலிம்பிக் பரிசு எங்களுக்கு புதிய பாதையை அமைத்துக் கொடுத்துவிட்டது,'' என்றார் சரோஜா.

மாரியப்பன் ஒலிம்பிக்ஸ் பதக்கத்தை வென்ற பிறகு
தமிழக அரசு கொடுத்த இரண்டு கோடி ரூபாய், மத்திய அரசு வழங்கியுள்ள 75 லட்சம், பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் கொடுத்த நிதி எனப் பல பரிசுகள் சரோஜாவின் இல்லத்தில் குவிந்துள்ளன. ஆனால் சரோஜாவுக்கு, அடுத்தமுறை தனது மகன் விளையாட்டு போட்டிக்கு செல்லும் போது, கை நிறைய பணம் தர முடியும் என்பது பெரிய மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.

நன்றி : பி.பி.சி.தமிழ்


No comments:

Post a Comment