சுயமரியாதைத்திருமண முறை-மதச்சார்பற்ற தன்மை
(முனைவர் வா.நேரு, தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்)
உலகமெல்லாம் உள்ள பகுத்தறிவாளர்கள் சந்திக்கும் பிரச்சனை சடங்குகள் மறுப்பு ஆகும்.ஒவ்வொரு மதத்திற்கும் ஓராயிரம் சடங்குகளை வைத்திருக்கின்றார்கள். அந்தச்சடங்குகள் மூலமே தங்கள் மதத்தைச்சார்ந்தவர்கள் இவர்கள் என அடையாளம் காட்டுகின்றார்கள். காலமெல்லாம் 'கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லவே இல்லை ' என முழங்கினாலும் மேலை நாடுகளில் நாத்திகர்களுக்கென தனிக்கல்லறைகள் இல்லை. ஆத்திகர்கள் அடக்கம் செய்யப்படும் கல்லறைப் பகுதிகளிலேயே நாத்திகர்களும் அடக்கம் செய்யப்படும் நிலை, ஆத்திகர்களுக்கு கடைசிச்சடங்குகள் செய்யும் மதவாதிகளே நாத்திகர்களுக்கும் செய்யும் நிலை. என்னதான் நாத்திகம் பேசி வாழ்ந்தாலும் கடைசியில் 'இறைவன் இருக்கும் இடத்தில் இவர் சேருவாராக ' என மதக் குருக்கள் நாத்திகர்களுக்கும் சொல்லும் நிலை மேலை நாடுகளில் நிலவுகிறது.அதேபோலவே வாழ்க்கைத்துணை நலம் ஏற்கும் நிகழ்வுகள். மணமக்கள் இருவரும் நாத்திகர்களாக இருந்தாலும் கூட நாத்திக முறைப்படி திருமணம் செய்ய முடிவதில்லை. நாத்திகர்கள் தலைமை தாங்கி நடத்திவைக்கும் திருமணங்கள் செல்லுவதில்லை ., நாத்திகர்கள் நாங்கள், எங்களுக்கு மதச்சடங்குகள் வேண்டாம் என ஒதுக்கினாலும் சட்டத்தின்படி அவை செல்லுபடியாகும் திருமணங்களாக இல்லாத நிலை இன்றைக்கு மேலை நாடுகளில் நிலவுகிறது.
நீயும் ,நானும் இணைந்திருப்போம், சேர்ந்து வாழ்வோம், சேர்ந்து உறங்குவோம் என்பதற்கு எந்தவிதமான தடைகளும் சொல்லாத மேலை நாடுகள்,ஆணும் பெண்ணும் பழகுவதை ,சேர்வதை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாத மேலை நாடுகள் திருமண ஒப்பந்தம் என்று வரும்போது மட்டும் மதத்தின் அடிப்படையில்தான் இணைய வேண்டும் எனத்தடைகள் விதிக்கின்றன. மதக்குருக்கள் செய்து வைக்கும் திருமணங்கள் மட்டுமே செல்லும் என சட்டம் இயற்றி வைத்திருக்கின்றன.
அண்மையில் செண்டர் பார் என்கொயரி(Centre for Inquiry...) என்னும் அமெரிக்காவைச்சார்ந்த மதச்சார்பின்மை அமைப்பு வாழ்வின் முக்கியமான தருணங்களை தலைமை தாங்கி நடத்திவைத்திட பயிற்சி தருகின்றோம் என்று அறிவித்திருக்கிறது.அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல், பகுத்தறிவை பரப்புதல், எதையும் காரண காரியங்களோடு மட்டுமே ஏற்றுக்கொள்ளுதல்,மனித நேயத்தை வளர்த்தல் போன்றவற்றை அடிப்படைக்கொள்கையாகக் கொண்ட அந்த அமைப்பு புதுவிதமான ஒரு பயிற்சியை அறிவித்திருக்கிறது. பயிற்சி அளித்து, சான்றிதழ் தருகின்றோம், அவர்கள் மதமறுப்பாளர்களின் இல்ல நிகழ்வுகளை நடத்திவைக்கலாம், அது சட்டப்படியாக செல்லுபடியாகும் என்று அறிவித்திருக்கின்றது.திருமணம், பிள்ளைகளுக்கு பெயர் சூட்டுதல், இறப்பு போன்ற நிகழ்வுகளுக்கு தலைமை தாங்கி நடத்திடஇந்த மதச்சார்பற்ற பயிற்சி பெற்ற வல்லுநர்களைஅழைத்துக்கொள்ளலாம் என அறிவித்து அவர்களின் முகவரியை எல்லாம் இணையதளத்திலே அறிவித்திருக்கின்றார்கள்..
ஏன் இப்படிப்பட்ட ஒரு தேவை எனக் குறிப்பிட்டு அந்த அமைப்பினர் அவர்களின் இணையதளத்தில் செய்திகளை வெளியிட்டுள்ளனர். அமெரிக்காவில் இப்போது 20 சதவீதம்பேர் கடவுள் நம்பிக்கையில்லாதவர்கள். கடவுள் நம்பிக்கையற்றவர்களாக இருந்தாலும் வீட்டில் நடைபெறும் நல்லது கெட்டது அனைத்திற்கும் மதக்குருக்களைத்தான் அழைக்கவேண்டியிருக்கிறது.ஒரு நாத்திகவாதி தனது திருமணத்தில் தான் விரும்பிய மேற்கோள்களை சுட்டிக்காட்டி பேசவோ, அல்லது தனக்கு விருப்பமானவற்றை அச்சடித்து கொடுக்கவோ இப்போதிருக்கும் மத அமைப்புகள் அனுமதிப்பதில்லை.ஏதோ ஒரு மதகுருவை அழைத்து வந்து திருமணத்தை நடத்திக்கொள்கிறார்கள்.
மதகுருவுக்கு மணமக்களைப்பற்றியோ, மணமக்களின் பெற்றோர் பற்றியோ தெரியாது. மணமக்கள் தங்களுக்கு விருப்பமான ஒருவர் தங்களது திருமணத்தை நடத்திவைக்கவேண்டும் என்று விரும்பினால், அவ்வாறு நடத்திக்கொள்ள சட்டத்தில் இடமில்லை. இப்போது அப்படி ஒரு சட்ட வடிவை சில அமெரிக்க மாநிலங்கள் முன்வைத்திருக்கின்றன. பயிற்சி பெற்ற நாத்திகரும் , மணமக்கள் விரும்பினால் அவர்கள் விருப்பப்படி திருமணத்தை நடத்திவைக்கலாம் என்ற சட்டத்தை நாம் அனைவரும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். நமது வீட்டு நிகழ்வுகள் மதகுருக்கள் இல்லாமல் நடைபெற வேண்டும் அதற்காகவே இந்த ஏற்பாடு என மிக விளக்கமாக விவரித்துள்ளனர்.
இந்த இணையதளத்தின் செய்திகளைப் படித்துவிட்டு தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதியுள்ள 'சுய மரியாதைத் திருமணம்-தத்துவமும் வரலாறும் ' என்னும் புத்தகத்தைப் படித்தேன். ஏற்கனவே படித்த நூல் என்றாலும் இந்த இணையதளத்தின் செய்திகளைப் படித்தவுடன் தந்தை பெரியாரின் சுயமரியாதைத் திருமணத்தின் தத்துவத்தையும் வரலாற்றையும் படிக்கவேண்டும் எனத்தோன்றியது. மீண்டும் படித்து முடித்தபொழுது வியப்படைந்தேன்.
எவ்வளவு பெரிய தொலை நோக்காளர் தந்தை பெரியார் அவர்கள். ஏறத்தாழ 90 ஆண்டுகளுக்குமுன்னால் மதவாதிகளான பார்ப்பனர்கள் நடத்தி வைத்தால் மட்டுமே செல்லும் என்று சமூகம் இருந்த காலத்தில் , சுயமரியாதைத் திருமணத்தை நடத்திவைக்கத் துணிந்து, அன்றைக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்றாலும் ஆயிரக்கணக்கான தோழர்களும், தோழியர்களும் அத்திருமண முறையை ஏற்றுக்கொண்டதும், வாழ்வில் இணைந்து வாழ்ந்ததும் ,தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கன் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ் நாட்டின் முதல்வரான உடனே சுயமரியாதைத் திருமணத்தை சட்டப்படி செல்லுபடியாகும் என்பதற்கான சட்டம் இயற்றியதையும் படித்தபொழுது உண்மையிலேயே பெரியாரின் தொண்டன் என்ற வகையில் உவகையும் உற்சாகமும் அடைந்தேன். இன்றைக்கு 2017-ல் மிக முன்னேறிய நாடென சொல்லிக்கொள்ளும் அமெரிக்காவினர் யோசிக்கும் செயலை, நடைமுறைப்படுத்திட பல்வகை உத்திகளைக் கைக்கொள்ளும்வேளையில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் தமிழ் நாட்டில் செயல்படுத்திட்ட தந்தை பெரியாரை எப்படிச்சொல்லி மகிழ்வது நாம்....
இன்றைக்கும்கூட சில திராவிட இல்லத்திருமணங்கள் ஆரியர்களால் நடத்திவைக்கப்படுகின்றன. நம்மை இழிவுபடுத்தும் அந்தத் திருமண மந்திரங்கள் அன்னிய மொழியில் கூறப்படுகின்றன. அவர்கள் கூறுவது என்னவென்று விளங்காமல்தான் நூற்றக்கணக்கான மக்கள் திருமண மண்டபங்களில் உட்கார்ந்திருக்கின்றார்கள். அதிலும் திடீர் பணக்காரரான சிலர் இரண்டு ஆரியர்களுக்குப்பதில் நாலு ஆரியப்பார்ப்பனர்களை அழைத்துக்கொள்கின்றனர் திருமணத்தை நடத்திவைக்க.அன்றைக்கு இந்த இழி நிலையைத்துடைத்திட எண்ணிய தந்தை பெரியார் எத்தனை ஆயிரம் சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்தார். அவரின் வழிவந்த திராவிடர்கழகத்தலைவர் அய்யா கி.வீரமணி அவர்கள் எத்தனை ஆயிரம் திருமணங்களை நடத்திவைத்துக்கொண்டு இருக்கின்றார். பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், டாக்டர் கலைஞர் என எத்தனை தலைவர்கள் தலைமையிலே எத்தனை ஆயிரம் சுயமரியாதைத்திருமணங்கள் தமிழகத்திலே நடைபெற்றன, இன்று நடந்து கொண்டிருக்கின்றன.
இப்படிப்பட்ட திருமணங்களை நடத்திக்கொள்ளவேண்டும் என இளைஞர்களுக்கு வழிகாட்டியவர் தந்தை பெரியார், இப்படித்தான் இந்தத் திருமணங்களை நடத்தி வைக்க வேண்டும் எனத் திசைகாட்டி பயிற்சி அளித்து இந்த மண்ணை பண்படுத்தியவர் தந்தை பெரியார் அல்லவா?மேலை நாடுகளில் இன்று சிந்திக்கும் செயலை, ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் சிந்தித்தவர், செயல்படுத்தியவர் தந்தை பெரியார். அதற்கான காரணம் என்ன? தேவை என்ன என்பதனை அறிந்துகொள்ள இந்த 'சுயமரியாதைத் திருமணம்- தத்துவமும் வரலாறும் ' என்னும் நூலைப் படிக்கவேண்டும்.
இந்த சுயமரியாதைத் திருமணம்-வரலாறும் தத்துவமும் என்னும் நூலை 'அன்புடன்' எனத் தலைப்பிட்டு தனது அன்புத்துணைவியார் அம்மையார் மோகனா அவர்களுக்கு என அர்ப்பணித்துள்ளார் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். 'மிசா காரணமாக நான் சிறைப்பட்ட காலத்தில் ,வெளியிலிருந்து தனிக்குடும்பச்சிறையை அனுபவித்தும்,கலங்காது எப்போதும் எனது துன்பங்களையும்,துயரங்களையும், அவதூறுகளையும் தனதாக்கிக்கொண்டு, பொதுவாழ்க்கையில் நான் தடையின்றி ,நடைபோட எல்லாச்சுமைகளையும் ஏற்று 39 ஆண்டுகளாக இயக்கமே என் குடும்பம், உலகப்பகுத்தறிவுக் குடும்பமே எனது நெருக்க உறவுக்குடும்பம் என்பதைக் கருதி , நான் நாளும் உழைத்திட, எனக்குத் துணை புரிந்துவரும் எனது அன்புத்துணைவியார் மோகனா அவர்களுக்கு ' என ஆசிரியர் குறிப்பிட்டுள்ளார்.
'சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லாது ' என அறிவிக்கப்படவும் பின்னர் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லும் என நீதிபதிகள் அறிவிக்கவும் காரணமாக இருந்த வழக்குக்கு உரிய குடும்பத்தினைச்சார்ந்தவர் என்ற வகையில் மட்டுமல்ல தங்கள் தந்தை, தாய் திருமணமே சுயமரியாதைத்திருமணம் செய்ததால் செல்லாது என்று சொல்லப்பட்ட நிலையில் ,தனது திருமணத்தையும் சுயமரியாதைத்திருமணமாக நடத்திக்கொண்டவர் என்றவகையிலும் அம்மையார் மோகனாவீரமணி அவர்கள் மிக முக்கியமானவர் இந்தப் புத்தகத்தைப்பொறுத்த அளவில்,சுயமரியாதைத் திருமண வரலாற்று நிகழ்வுகள் அடிப்படையில்.
" இது(சுயமரியாதைத்திருமணம்) ஒரு தனித்தன்மையான திருமண முறை அல்லவா? 1992-ல் அகில உலக மனித நேயர்களின் மாநாடு நெதர்லாண்ட் நாட்டின் தலை நகரான ஆம்ஸ்டர்டாமில் 43 நாடுகளின் பேராளர்கள் கலந்துகொண்ட அனைத்துலக மாநாட்டில் சில மணித்துளிகள் நமது சுயமரியாதை இயக்கச்சாதனைகள் பற்றி எடுத்துக்கூறும் வாய்ப்புக்கிட்டியபோது ,தந்தை பெரியார் அவர்கள் செய்த இந்த அமைதிப்புரட்சி- சுயமரியாதைத் திருமணங்கள் எப்படிக்கருவாகி,உருவாகி,தவழ்ந் து, எதிர்ப்புக்களை எதிர்கொண்டு,இறுதியில் அவரது சீடர்களால் சட்டவடிவத்திற்கு ஆளாகி வளர்ந்தோங்கி நிற்கிறது என்பதை விளக்கியபோது ,வியந்து பாராட்டி எழுந்து நின்று கரவொலி(Standing Ovation) தந்து மகிழ்ந்தனர் " என ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 'நூலைப் படிக்கும்முன் ' பகுதியில் குறிப்பிடுகின்றார்.
இந்த சுயமரியாதைத்திருமண முறை கருவாக மனதில் தந்தை பெரியார் மனதில் உருவானதற்குக் காரணம் என்ன என்பதனை 'சுயமரியாதைத் திருமணம் ' புத்தகம் விவரிக்கிறது, 'பெண்ணடிமை நாட்டும் புனிதக்கட்டு' என்னும் தலைப்பில் மிக விரிவாக. தமிழகத்தில் எப்படி இந்த சுயமரியாதைத் திருமண முறை உருவானது என்பதனை சுயமரியாதைத் திருமணத்தத்துவம் என்னும் இரண்டாம் அத்தியாயம் விவரித்துச்சொல்கிறது. 'இனமானமும் பெண்மானமும் ' என்னும் தலைப்பில் எப்படி இந்தத் திருமணமுறை தவழ்ந்தது என்பதனையும், எதிர்ப்புக்களை எப்படியெல்லாம் எதிர்கொண்டது இந்தத் தத்துவம் என்பதனை 'சுயமரியாதைத்திருமணம் சட்டப்படி செல்லாது ' என நீதிமன்றம் அறிவித்ததையும், செல்லுபடியாக்க என்னென்ன முயற்சிகள் நடந்தது , பின் பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றதும் முன் தேதியிட்டு இந்தத் தத்துவம் எப்படி வெற்றிபெற்றது என்பதனை எல்லாம் ஆசிரியர் படிப்படியாக சொல்லிச்செல்கின்றார்
.மலேசிய நாட்டில் தந்தை பெரியார் அவர்கள் வருகையும், கொள்கை பரப்பும் எப்படி அயல்நாட்டில் 'சுயமரியாதைத் திருமணமும்' அந்த நாட்டின் சட்டப்படி திராவிடர் கழகமும் நடைபெறுகிறது என்பதனை விவரிக்கின்றார்.'தமிழ்த்திரு மணம் தமிழர் திருமணம் ஆகுமா?' என்னும் கேள்வியை எழுப்பி சுயமரியாதைத் திருமணத்தின் சிறப்புகளை ஆசிரியர் அவர்கள் பட்டியலிடுகின்றார்
செண்டர் பார் என்கொயரி இணையதளம் சில புத்தகங்களை, கையேடுகளை மனித நேயத்திருமணங்களை நடத்திட விரும்புகிறவர்களுக்கு பரிந்துரைத்திருக்கின்றார்கள். 'Sharing the future' by Jane Wynes Willson, 'Naming Ceremonies ' , A 'A humanist Divorce Ceremony ' 'Funerals Without God ' போண்ற வெளியீடுகளை வெளியிட்டு இருக்கின்றார்கள். வாழ்க்கைத்துணையை ஏற்றுக்கொள்வது, குழந்தைக்கு பெயர் வைப்பது, கடவுள் கருத்து இல்லாமல் இறுதி ஊர்வலம், மனித நேய விவாகரத்து விழா எனப் பலதலைப்புகளில் வெளியீடுகளையும் கட்டுரைகளையும் கொடுத்திருக்கின்றார்கள்.மதம் வேண்டாம் என நினைப்பவர்கள் இதனைப் பின்பற்றுங்கள் எனக்குறிப்பிடுகின்றார்கள்.
சுயமரியாதைத் திருமணம் புத்தகம் பின்னினைப்பாக ,
பழந்தமிழர் திருமண முறை ஆரியர்களை அழைக்காமல், இழிவு இல்லாமல் நடத்தப்பட்ட வரலாறு கூறப்படுகின்றது.அதற்கு ஆதாரமாக இருக்கும் தமிழ்ப்பெரியோர்கள் கருத்துக்கள்,சுயமரியாதைத் திருமணம் எப்படி நடைபெற வேண்டும் என்பதனை புரட்சிக்கவிஞர் எப்படிச்சொல்கின்றார் என்பதனை விளக்கும் புரட்சிக்கவிஞரின் 'புரட்சித்திருமணத் திட்டம்', சுயமரியாதைத் திருமணங்கள் பற்றிய கருத்துக்கோவை(சட்ட வல்லுநர்களின் கருத்துக்கள்),சுயமரியாதைத்திரு மணங்கள் பற்றி அறிஞர்தம் கருத்துக்கள் பின்னர் ஆரியர் வகுத்த திருமண முறைகள், ஆரியப்பண்பாடு பற்றி அறிஞர்தம் கருத்துக்கள்,சுயமரியாதைத்திரு மண ஒப்பந்த உறுதிமொழிப்படிவம்,பேரறிஞர் அண்ணாவால் இயற்றப்பட்ட சுயமரியாதைத்திருமணச்சட்டம்,சட் டப்படி செல்லுபடியாகும் எனும் தீர்ப்பு,1929-ல் தந்தை பெரியார் அவர்களால் நடத்தப்பட்ட முதல் சுயமரியாதைத்திருமணம் பற்றிய விவரிப்பு, முதல் சுயமரியாதைத்திருமணத் தம்பதிகளின் பேட்டி,சுயமரியாதை மணமக்களுக்கு தந்தை பெரியாரின் அறிவுரை, புரட்சிக்கவிஞரின் 'சுயமரியாதை எக்காளம்' என்னும் கவிதை, சுயமரியாதைத் திருமணம் பற்றி 'சோ'வின் கேள்விகளுக்கு வீரமணி பதில்,பின்னர் சுயமரியாதைத்திருமணம் வரலாற்றில் நிற்கும் புகைப்படங்கள் என அந்தப் புத்தகம் விரிகின்றது.
சுயமரியாதைத் திருமணத்தால் 'வீட்டுக்கு மட்டுமல்ல! நாட்டுக்கும் ஏற்பட்ட பலன் ' எனப் பக்கம் 120-ல் குறிப்பிடப்பட்டு
1) மற்ற பெரும்பாலான திருமணங்கள் மதமுறைகளைச்சார்ந்தவைகளாக உள்ள நிலையில் சுயமரியாதைத்திருமண முறை-மதச்சார்பற்ற தன்மை(Secularising the Marriage System)யை புகுத்தியதாக அமைந்துள்ளது மூலம் எல்லோருக்கும் பொதுவாக உள்ளது. ...6) சாதியின் அடித்தளம் அதிரும் நிலை ! மற்ற மதச்சடங்குகளை அந்தந்த மதவாதிகள்தான் நடத்திட முடியும். சுயமரியாதைத்திருமணத்திற்கு எம்மதத்தவர்,எம்மதமும் சாராதவர்-எவராயினும் தலைமை ஏற்கலாம்-....
தந்தை பெரியாரின் 'மண்டைச்சுரப்பை உலகு தொழும் 'என்றார் புரட்சிக்கவிஞர். அந்த மண்டைச்சுரப்பில் எழுந்த மதவாதிகள் அற்ற வாழ்க்கைத்துணை நல ஒப்பந்தத்தினை,குழந்தைகள் பெயர் சூட்டலை, மதவாதிகளை மறுத்த இறுதி நிகழ்வுகளை- இன்றைக்கு நடத்துவதற்கு பயிற்சி அளிக்கிறோம் என்னும் மேற்கத்திய நாடுகளின் பகுத்தறிவு அமைப்புக்களின் அறிவிப்புக்களை ஒப்பிட்டு நோக்கும்போது ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னால் இதனை எண்ணியவர், கருத்தாக உருவாக்கியவர், ஆயிரக்கணக்கான விழா நடத்துநர்களை-தலைவர்களை தனது இயக்கத்தின் மூலமாக உருவாக்கியவர் தந்தை பெரியார் என்பதனை உணர்கின்றபோது மகிழ்கின்றோம்.'மண்டைச்சுரப்பை உலகு தொழும் ' நிலை கண்டு பெருமிதம் கொள்கின்றோம்.
உதவிய இணையதளம் :
நன்றி : விடுதலை 21.04.2017
பெரியாருக்காக பெருமிதப்பட இப்படிப் பல நிகழ்வுகள் இருக்கின்றன. அற்புதமானதோர் இடுகை.
ReplyDeleteசுயமரியாதை வழியில் பெயர் சூட்டும் விழா பற்றி நான் கேள்விப்பட்டதில்லை. அம்முறை பற்றி ஏதும் தகவல் இருந்தால் குறிப்பிடவும்.
நன்றி
அய்யா, வணக்கம். தங்கள் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி. தமிழர் வீட்டுப்பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுதல் என்பது தந்தை பெரியாரால் என்பதனைச்சுட்டும் விதத்தில் குறிப்பிட்டிருந்தேன். சாரங்கபாணி வீரமணி ஆனதும் நாராயணசாமி - நெடுஞ்செழியன் ஆனதும், இராமையா - அன்பழகன் ஆனதும், சோமசுந்தரம் - மதியழகன் ஆனதும் எனத் திராவிட இயக்கத்தினர் தங்கள் பெயரை மாற்றியதை பெயர் சூட்டுதல் விழா எனக்குறிப்பிட்டிருந்தேன்....நன்றி...
ReplyDelete