Tuesday, 30 May 2017

பிணத்தை எப்போ கரைக்கிறாங்க?.........

பிணத்தை எப்போ கரைக்கிறாங்க?.........

பிணத்தை எப்போ எடுக்குறாங்க, புதைக்கிறாங்களா, எரிக்கிறாங்களா என்பது இயல்பாக கிராமங்களில் கேட்கப்படுவது....இனி வரும் உலகத்தில் எப்போ பிணத்தை கரைக்கிறாங்க..... என்னும் கேள்வி வரும்போல் தெரிகின்றது. இதுபற்றிய பி.பி.சி.யின் செய்தி இது. படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. ஒரிஜினல் பி.பி.சி.வலைத்தளத்தில் நிறைய படங்களோடு உள்ளது.

"
இறந்த பிறகு எரிப்பதா அல்லது புதைப்பதா எனும் சர்ச்சை தொன்றுதொட்டு தொடரும் ஒன்று.இடுகாடுகளிலும் இடப்பற்றாக்குறை அதிகரித்து வருகிறது
இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளிவைக்கும் நோக்கில் மாற்றுவழி ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.

அதாவது காரத்தன்மையுடைய திரவத்தில் சடலத்தைக் கரைத்துவிடுவது.
தற்போது அமெரிக்கா மற்றும் கனடாவில் இந்த மூன்றாவது வழிமுறை உள்ளது. விரைவில் அந்த தொழில்நுட்பம் பிரிட்டனுக்கு வரவுள்ளது.

பசுமை தகனம்
அறிவியல் ரீதியாக அதற்கு 'அல்கலைன் ஹைட்ரோலிசிஸ்' என்று பெயர். ஆனால் சுலபமாகப் புரிந்துகொள்வது என்றால் பசுமை தகனம்.
தீயிலிட்டு தகனம் செய்வதைவிட, சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில், மென்மையான முறையில் இந்த தகனம் நடைபெறும் என்று அதற்கான விளக்கக் குறிப்பு கூறுகிறது.
பொட்டாசியம் ஹைட்ராக்சைட் கொண்ட காரத்தன்மையுள்ள திரவத்தில் உடல் வைக்கப்படும்போது, எலும்புகளைத் தவிர அனைத்தும் கரைந்து, எலும்புக்கூடு மட்டுமே எஞ்சும்.
சுற்றுச்சூழல் மாசடையும் பிரச்சினை
அமெரிக்கா போன்ற நாடுகளில் உடல் புதைக்கப்படும்போது, அது சவப்பெட்டியில் வைத்தே புதைக்கப்படுகிறது. சில சமயம் சவக்குழிகளின் பகுதிகள் சிமெண்ட் கலவையால் பூசப்படுகின்றன. பல சமயங்களில் சவப்பெட்டிகள் உலோகத்தால் செய்யப்படுகின்றன.

சவப்பெட்டிக்கான செலவு சில சமயம் மலைக்க வைக்கும்
அப்படி செய்யும்போது அவை மக்கிப்போவதில்லை.
சரி தகனம் செய்தால் பிரச்சினை தீர்ந்துவிடுமா என்றால் அதுவும் இல்லை. ஏனென்றால் ஒரு உடலை தகனம் செய்யத் தேவைப்படும் வெப்பத்தை வைத்து, மிகவும் கடுங்குளிர் நிலவும் அமெரிக்காவின் மின்னெசோட்டா மாநிலத்தில் உள்ள ஒரு வீட்டை, குளிர்காலத்தில் ஒரு வாரத்துக்கு கதகதப்பாக வைத்திருக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
அறிவியல் சிந்தனை கொண்டவர்களுக்கு அப்பாற்பட்டு, உணர்வுபூர்மாக எவ்வளவுபேர் இரசாயன தகனத்தை விரும்புவார்கள் எனும் கேள்வியும் இதில் உள்ளது.

முற்போக்கு சிந்தனையும், சுற்றுச்சூழலில் ஆர்வம் கொண்டவர்களும் இந்த எண்ணத்துக்கு ஆதரவு தெரிவித்தாலும், பொருளாதாரம் இடம் கொடுக்குமா?
ரசாயன தகனத்துக்கான கட்டுமானத்தை ஏற்படுத்துவதற்கு 7.5 லட்சம் டாலர்கள்-அதாவது சுமார் ஐந்து கோடி இந்திய ரூபாய்- செலவாகிறது என்று அதை அமைத்துள்ளவர்கள் கூறுகின்றனர்.
கரைத்து கரையேற்றும் முறை
இதற்கு பயன்படுத்தப்படும் உலோகப் பெட்டி எஃகால் செய்யப்பட்டது. 6 அடி உயரம், 4 அடி அகலம் மற்றும் 10 அடி ஆழம் கொண்ட அந்தப் பெட்டி பாதுகாப்பு பெட்டகம் போலவுள்ள அறையில் பொருத்தப்பட வேண்டும்.


இரசாயனக் கரைப்புக்காக எடுத்த்துச் செல்லப்படும் உடல்
உடல் முழுவதும் கருப்புத் துணியால் மூடப்பட்ட நிலையில் கொண்டுவரப்படும் சடலம், எஃகுத் தகடில் வைத்து மெல்ல அந்த கரைசல் இயந்திரத்தினுள் செலுத்தப்படுகிறது.

முதல் நிலையில் உடல் இயந்திரத்தினுள் செலுத்தப்படும்
பின்னர் கணினி உதவியுடன் உடல் வைக்கப்பட்டுள்ள அந்தத் தகடு நகராதவாறு பூட்டப்படுகிறது.
அடுத்த கட்டமாக அந்த உடல் எடை போடப்படும். பிறகு அந்த உடல் மூழ்கும் அளவும், அதற்கு எவ்வளவு தண்ணீரும் பொட்டாசியம் ஹைட்ராக்ஸைடும் சேர்க்கப்பட வேண்டும் என்பதும் நிர்ணயிக்கப்படுகிறது.


இரண்டாவது நிலையில் நீருடன் இரசாயனம் கலக்கப்படுகிறது
மிகவும் காரத்தன்மை வாய்ந்த அந்தக்கரைசல் 152 செண்டிகிரேட் அளவுக்கு சூடாக்கப்படும். ஆனால் அந்த இரசாயன திரவம் கொதிநிலைக்கு உள்ளாவதில்லை. அழுத்தம் மூலமாகவே உடல் கரைக்கப்படுகிறது.
விரைவாக உருக்குலையும்
புதைக்கப்படும் உடல் என்னவாகுமோ அதேதான் இந்த முறையிலும் நடைபெறுகிறது. ஆனால் ஒரே வித்தியாசம் புதைத்தால் உடல் உருக்குலைந்து போவதற்கு பல தசாப்தங்கள் ஆகலாம்.


மூன்றாவது நிலையில், இரசாயனக் கலவை சூடாக்கப்படுகிறது
ஆனால் இந்த முறையில் 90 நிமிடங்களிலேயே அது நடந்து முடிந்துவிடுகிறது. பின்னர் பல முறை நீரில் அலசப்படும். அதற்கு மீண்டும் அதே அளவு நேரம் பிடிக்கிறது.
மூன்று அல்லது நான்கு மணி நேரங்களுக்கு பிறகு, மூடிய கதவு திறக்கும். உடலுடன் உள்ளே தள்ளப்பட்ட எஃகுத்தகடு வெளியே இழுக்கப்படும்.
சிதறிய ஈர எலும்புகளும், உடலில் ஏதாவது மருத்துவ உபகரணங்கள் பொருத்தப்பட்டிருந்தால், அவையும், அந்தத் தகடில் எஞ்சி இருக்கும். ரசாயன திரவத்தில் கரைந்த இதர பகுதிகள் வடித்தெடுக்கப்படும்.
மரணம், அடக்கம்


நான்கவது நிலையில், உடலின் தசைப்பகுதிகள் கரைந்து போயிருக்கும்
வடித்தெடுக்கப்பட்ட திரவம் சோப்பு வாடையுடன் இருக்கும். அதில் உப்பும் சர்க்கரையும் கலந்திருக்கும். கழிவாக வெளியேறும் திரவம் சோதிக்கப்படுகிறது.
வெள்ளை சாம்பல்
மனித மரபணுக்கள் ஏதும் இல்லாத அந்த திரவம் பின்னர், மாசு நீர் சுத்திகரிக்கப் பயன்படுத்தப்படும் கட்டமைப்பு போன்ற ஒன்றின் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, வடிகட்டப்படுகிறது. எஞ்சியுள்ளவை நுண்துகள்களாக மாற்றப்படுகின்றன.


கடைசியாக பையில் அள்ளப்படும் சாம்பல்
மரபுரீதியான தகனத்தின் பின்னர் கிடைக்கும் சாம்பல் போலன்றி, பளிச்சென்று வெண்மை நிறத்தில் மாவு போல் இந்த நுண்துகள்கள் இருக்கும்.
இயந்திரத்திலிருந்து எடுக்கப்பட்ட ஈர எலும்புகள் சுத்தம் செய்யப்பட்டு உலர்ந்த பிறகு அலங்காரமான குடுவையில் அடைக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இடப்பிரச்சினை
சரி இதனால் என்ன பலன்? முதலாவதாக இறந்தோரை புதைப்பதற்கான இடுகாடுகள் நிலப்பரப்பில் குறைந்து வருகின்றன. அவற்றை பராமரிக்கும் செலவுகள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன.
ஆகவே இடப்பற்றாக்குறையுடன் பொருளாதார நெருக்கடியும் சேர்ந்துகொள்கிறது.


பல இடங்களில் சடலங்களை ஒன்றின் மேல் அல்லது கீழ் ஒன்றாக புதைக்கும் நிலை ஏற்படுகிறது
இதனால் பல நாடுகளில் இடுகாடுகள் மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மேலும் மேலும் ஆழமாகத் தோண்டப்பட்டு, ஒன்றன் கீழ் ஒன்றாக புதைக்கும் நிலை ஏற்படுகிறது.
புதைப்பதில் இப்படியான பிரச்சினைகள் என்றால், எரிப்பதிலும் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. எரிபொருள் செலவு, அதனால் சுற்றுச்சூழல் மீதான தாக்கம். ஒவ்வொரு தகனத்தின் போதும் 320 கிலோகிராம் கரியமில வாயு வெளியேறுகிறது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி கரியமில வாயுவைவிட நச்சுத்தன்மை கொண்ட வாயுக்கள் தகனம் செய்யப்படும்போது வெளியேறுகின்றன. இப்படியான காற்றை கோடிக்கணக்கான மக்கள் தினமும் சுவாசிக்கும் நிலை ஏற்படுகிறது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் நலன், பொருளாதாரம் போன்ற 18 அளவுகோல்களின்படி, மற்ற எவ்வகையான இறுதிக்கிரியைவிட இராசயன தகனமே சிறந்தது என்று அறிவியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
செலவு?
இரசாயன தகனத்துக்கான செலவு மற்ற இருவகைகளுக்கு ஆகும் செலவில் ஒரு சிறுதுளி மட்டுமே எனவும் ஆய்வுகள் கூறுகின்றன.

சடலம் ஒன்றை புதைப்பதற்கு நிகர செலவு -இந்திய ரூபாய் மதிப்பில் கணக்கிடப்படும்போது 4500ம், அதை எரிப்பதற்கு 3500ம் ஆகின்றன அதை இரசாயன முறையில் கரைப்பதற்கு 300 ரூபாய் மட்டுமே ஆகும் என்றும் கூறப்படுகிறது.
ஆனால், மரபுகளை அறிவியல் எண்ணங்கள் மாற்றுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது."..

நன்றி : பி.பி.சி. தமிழ் 

Saturday, 27 May 2017

தி இந்து ' தமிழ் நாளிதழில் 'பெண் இன்று .....

இன்றைய(மே 28,2017)  'தி இந்து ' தமிழ் நாளிதழில் 'பெண் இன்று ' என்னும்  இணைப்பைக் கொடுத்திருக்கின்றார்கள். இதில் இருக்கும் பல கட்டுரைகள் மிகச்சிறப்பாக இருக்கின்றன. அதனால்தான் வலைப்பதிவு. பெண்கள் போராட்டத்திற்கு வந்தால் எத்தகைய அடக்குமுறைகள் இருந்தாலும் அது தூள், தூளாவாது தொழிற்சங்க இயக்கங்கள் கற்றுக்கொண்ட பாடம். அதனைப்போலத்தான் சமூகப்போராட்டங்களும். முதல் பக்கத்தில் 'போராட்டத்தைக் கையில் எடுக்கும் பெண்கள் ' என்று தலைப்பிட்டு டாஸ்மார்க் கடைகளுக்கு எதிராக பெண்கள் கையிலெடுக்கும் மதுப்பாட்டில்கள் உடைப்பு போராட்டத்தை கொத்தமங்கலம் என்னும் புதுக்கோட்டை மாவட்ட கிராமத்தில் நடந்ததை எடுத்துப் போட்டிருக்கின்றார்கள். அதில் பங்குபெற்ற இந்திராணி என்பவர் மிகத்தெளிவாக பேட்டி கொடுத்திருக்கின்றார்.

'குடும்பம் ' என்ற அமைப்பே ஒழியவேண்டும் என்றார் தந்தை பெரியார். பல பெண்களுக்கு இன்று காதலுக்காக மரணதண்டனை கொடுக்கும் பலிபீடங்களாக குடும்பங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த குடும்ப கவுரவம் என்பது பெண்ணின் உயிரைவிட அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா? எனக் கடைசிப்பக்கத்தில் கவிஞர் சல்மாவின் கேள்விகளோடு 'வீழ்ந்து கிடக்க அல்ல வாழ்க்கை ' என்னும் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. எல்லா மதங்களும் அடிப்படையில் பெண்ணை அடிமையாக்க உருவாக்கப்பட்டவையே என்பது நமது கருத்து என்றாலும் அது கவிஞர் சல்மா தனது மதத்து அடிப்படையில், குடும்ப கவுரவம் என்னும் பெயரில் 13 வயதில் படிப்பு நிறுத்தப்பட்டதை இன்று கேள்விக்கு உள்ளாக்கும்விதம் அருமை.

எழுத்தாளர் ஓவியாவின் தொடரான 'பெண்ணும் ஆணும் ஒண்ணு ' என்னும் தொடர் பல கேள்விகளை தொடர்ச்சியாக வைத்துக்கொண்டிருக்கின்றது. இந்தவாரம் தெய்வங்கள் எல்லாம் ஏன் ஆண் வடிவத்திலேயே இருக்கிறது.என்னும் கேள்வியை எழுப்புகின்றார். பெண் கடவுள்கள் இடம் எப்படி ஆண் கடவுள்களால் நிரப்பப்பட்டது என்பதனை வரலாற்றின் அடிப்படையில் ஆதாரங்களைக்கூறி விளக்கங்களைக் கூறியிருக்கின்றார்.பிரித்து பிரித்து படிக்கவைப்பதால் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிடுமா ? என்னும் கேள்வியை எழுப்பியிருக்கின்றார். பாடத்திட்டம் முதல் மக்களின் மன நிலைவரை பெண்களை இரண்டாந்தரமாக ஆக்குவதற்காகவே என சமூகத்தில் நிகழ்கிறது என்பதனை கோடிட்டுக் காட்டியிருக்கின்றார்.

பெண் அரசியல் என்னும் தலைப்பில் தோழியர் பாலபாரதி, முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கட்டுரை எழுதியுள்ளார். சட்டமன்ற அனுபவங்களை சமூகப்பிரச்சனைகளொடு கோடிட்டுக் காட்டுவதாக அவரின் கட்டுரைகள் தொடராக 'பெண் அரசியல் ' என்னும் தலைப்பில் 'தி இந்து ' தமிழ் நாளிதழிலில்  வருகின்றது.அரசியலுக்கு அப்பாற்பட்டு தன்னுடைய எளிமையாலும், சமூக நோக்காலும் அனைவரின் நன் மதிப்பைப்பெற்றுள்ள பாலபாரதியின் கட்டுரைகளும் ஒரு புதிய நோக்கைச்சுட்டிக்காட்டுகின்றது.

புலிவலம் சி.செல்வராஜ் அவர்களின் கட்டுரை 'எதிர்வினை ' என்னும் தலைப்பிட்டு ,'மகளே நீ உயர்ந்தவள் ' என அடித்துச்சொல்கிறது. ஆண்களும் பெண்களும் இயல்பாகப் பழகவேண்டும் என்பதனை தனது மகளை வைத்தே விவரித்துள்ளார். 'எனக்கும் என் மனைவிக்கும் குழந்தை வளர்ப்பில் மனப்பக்குவம் இருக்கக்காரணம் எங்கள் பெற்றோர் இருவரும் தந்தை பெரியாரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள். ஆனால் எல்லாப்பெற்றோரும் இப்படி இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.மதமும் சாதிய அமைப்பும் தாயானாலும் மகளாயினும் இளக்காரமாகப் பார்க்கும்படிதான் நம்மை வளர்த்து வந்திருக்கிறது' எனும் வார்த்தைகள் மிக வலிமையானவை.

ஒரே ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்ட,ஆனால் உலகப்புகழ் பெற்ற  கவிஞர் அன்னா மார்கொலினின் வாழ்க்கையும், அவரின் மொழி பெயர்ப்புக்கவிதைகள் மூன்றும் 'மொழியின் பெயர் பெண் ' என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. பக்கத்திற்கு பக்கம் மிகவும் கவனமாகவும், பெண் விடுதலை, பெண் சமத்துவம் என்னும் நோக்கில் உருவாக்கப்பட்ட இதழாக இன்றைய 'பெண் இன்று ' என்னும் இணைப்பு இருக்கிறது. மனமார்ந்த வாழ்த்துகள். பெண்களுக்கு இணைப்பு என்று வெறும் கோலமும்,சமையல்குறிப்பும் மட்டுமே கொடுக்கும் பத்திரிக்கைகளுக்கு நடுவில் இன்றைய 'தி தமிழ்' இந்து நாளிதிழனின் 'பெண் இன்று ' இணைப்பு நம்பிக்கை தருகிறது. தொடரட்டும் இந்தத் தொடர்களும் , சின்னச்சின்ன குறிப்புகள் என்றாலும் செழுமையான குறிப்புகளும்,பேஸ் புக் பதிவுகளும்......

Monday, 22 May 2017

இந்த நாளில்தான்

தனது உழைப்பை
எனது தாயார்
நிறுத்திக்கொண்ட
நாளிது..........

ஐந்து குழந்தைகளை
வளர்ப்பதற்காக
அல்லும் பகலும்
உழைத்த
உழைப்பின் உருவம்
நிரந்தரமாய்
ஓய்வு எடுத்துக்கொண்ட
நாளிது.........

காட்டில் களை
எடுக்கும் பெண்ணாய்
மாட்டிற்க்காக
புல் சுமக்கும் சுமையாய்
பள்ளியில் கற்பிக்கும்
ஆசிரியராய்
அதிகாலை 3 முதல்
இரவு வரை அம்மம்மா......
எத்தனை பணிகள்
அத்தனையும்
எங்களை உயர்த்துவதற்காய்.....

உனது உழைப்பால்
எங்களை வசதியாய்
உட்காரவைத்தாய்....
ஒரு நாளும் நீ
உட்கார்ந்ததில்லை..
வசதிகள் வந்தபின்னும்
வாய்ப்பு என
அமர்ந்ததில்லை.....
உழைத்தாய்..உழைத்தாய்
நிரந்தர ஓய்வுவரை
பம்பரமாய் உழைத்தாய்

உறவுகளே
எதிரிகள் ஆனபோதும்
அவர்களைத்
தன் உழைப்பால்தான்
எதிர்கொண்டாய்....
வெற்றிபெற்றாய்....

உழைப்பொன்றே
உயர்வு தரும்.....
எம் பிள்ளைகளுக்கு
நாங்கள் சொல்ல
பாடமானாய் அம்மா.....
இந்த நாளில்தான்
படமானாய் எங்களுக்கு.....

                                        வா.நேரு,23.05.2017








Tuesday, 16 May 2017

மாற்றும் வலிமை மிக்கதாக வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி 12 .......

மாற்றும் வலிமை மிக்கதாக வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி 12 .......








தமிழகம் முழுவதும் திராவிடர் கழகத்தோழர்கள், பகுத்தறிவாளர் கழகத்தோழர்கள், நண்பர்கள் மிக நல்ல முறையில் வாழ்வியல் சிந்தனைகள் 12 ஆம் தொகுதி புத்தக அறிமுகத்தினை முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கின்றார்கள். 10,000 மைல் தூரப் பயணம் ஒரு அடியில்தான் துவங்குகின்றது எனச்சொல்வார்கள். ஆம் 1000 ஆவது வாழ்வியல் கட்டுரையைத் தாங்கி அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய வாழ்வியல் சிந்தனைகள் 12 ஆம் தொகுதி வெளிவந்திருக்கின்றது. வீட்டில் இருக்கும்.
வாழ்வியல் சிந்தனைகள் தொகுதிகளில் முதல் தொகுதியை எடுத்துப் பார்க்கின்றேன். எனது வாழ்க்கை இணையருக்கு 20.3.2004 அன்று பரிசாக அந்தப் புத்தகத்தை அளித்து, ‘முழுமையாக இந்த நூலைப் படிக்கவும். படித்த பின்பு தன்னையும் என்னையும் மாற்ற ஆலோசனைகள் கூறவும்‘ என்று கையொப்பமிட்டிருக்கின்றேன். ஆம். வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்பு என்பது படிப் பவரையும் பக்கத்தில் இருப்பவரையும் மாற்றும் வலிமை மிக்கதாக தொகுதி 1 முதல் தொகுதி 12 வரை இருக்கின்றது.
வாழ்க்கை என்பது முரண்பாடுகளால் நிரம்பி இருக்கின்றது. இன்பமும் துன்பமும் இரண்டு சக் கரங்களாகக் கொண்டுதான் வாழ்க்கைப் பயணம் ஓடிக்கொண்டிருக்கின்றது. புதிய பொருளாதாரக் கொள்கை,தாராளமயம்,தனியார்மயம்என்று ஆகிப்போன வாழ்க்கைக் சூழல் ஒரு நிரந்தத் தன்மை இல்லாத வாழ்க்கையாக இருக்கின்றது. கார்ப்பரேட் நிறுவனங்கள் மேலும் மேலும் வளர, ஏழைகள் மேலும் ஏழைகளாகும் கொடுமை தொடர்ந்துகொண்டிருக்கின்றது.மீண்டும்ஒரு நெருக்கடிநிலைவந்துவிடுமோஎனும்அரசியல் சூழல் நிகழ்ந்து கொண்டிருக்கின்றது. கொள்கை அடிப்படையில்அமைந்தபலவிதமான நூல்கள் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறு வனத்தால்வெளியிடப்படுகின்றன.படிக்கின்றோம். பகிர்கின்றோம்.ஆனால்மிகத்தீவிரமாககொள் கைத் தளத்தில் இயங்கவேண்டிய அதே நேரத்தில் நமது வாழ்க்கையையும் நம்மைச் சுற்றிவாழ்வோர்களின்வாழ்க்கையையும்செம் மைப் படுத்திக்கொள்ள சில நேர்மறைச் சிந்தனைகள் தேவைப்படுகின்றன. அந்த நேர்மறைச் சிந்தனை என்பது எதார்த்தமாகவும், வாழ்வில் ஏற்பட்ட அனுபவங்களாகவும் அமைகின்றபோது மற்றவர் களுக்கு அது படிப்பினையாகின்றது.அப்படிப்பட்ட படிப்பினையை வாசிப்போர்க்கு வழங்குகின்ற அற்புத நூல்களாக அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்வியல் சிந்தனைகள் தொகுதிகள் அமைந்திருக்கின்றன.
வாழ்வியல் சிந்தனைகள் முதல் தொகுதியின் முன்னுரையில் அய்யா ஆசிரியர் அவர்கள், ‘நான் பலவிதமான நூல்களை விரும்பிப் படிப்பவன். தத்துவங்களையும், அரசியல், சமூகவியல், வரலாறு களையும் படிக்கும்போது, அவை மிகுந்த சிந்தனை அலைகளை உருவாக்கும். மிகவும் கருத்தூன்றிப் (சீரியசாக) படிக்கவும் வேண்டியிருக்கும். அவை களிலிருந்து விடுபட்டு இளைப்பாற மென்மையும், இனிமையும், சுவையும் கலந்த நூல்களைப் படிப்பது வாடிக்கை. அத்துடன் பல செய்திகளையும் வாழ்க்கையின் நிகழ்வுகளையும் கூர்ந்து பார்க் கும்போது இதுபற்றி ஏன் தெளிவு படுத்தி எழுதக்கூடாது என்ற எண்ணமும் நமக்குள்ள நிறைகளைவிட, குறைகளை ஆராய நம்முள் ஏன் ஒரு உரத்த சிந்தனை ஏற்படக்கூடாது என்று நினைத்து இக்கட்டுரைகளை விளையாட்டாக எழுதத்தொடங்கினேன்.இதற்கு‘விடுதலை’ வாசக நேயர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு என்னை மலைக்க வைத்தது. பலதரப்பட்ட நண்பர்கள், நலம் விரும்பிகள், சான்றோர்கள் அனைவரும் இதைப்படித்து வரவேற்றனர்; பாராட்டி மேலும் எழுத ஊக்கப்படுத்தினர். சந்தித்த பல இருபால் குடும்ப நண்பர்கள்- இயக்கத்திற்கு அப்பாற்பட்டவர்கள் உட்பட இதுஎங்களுக்காகவே எழுதப்பட்டதுபோல் இருந்தது என்று உளந்திறந்து மகிழ்ந்தனர்’ என்று குறிப்பிட்டுள்ளார். என்னைப் போன்றவர்கள் வாழ்வியல் சிந்தனைகளில் வரும் கருத்துக்களின் செழுமைகளைப் பற்றிப் பேசுகின்றபொழுது 5 ஆம் தொகுதியில் ஏழாம் தொகுதியில் எனத் தொகுதிகளைக் குறிப்பிட்டு பேசுவது வழக்கம்.
ஆனால், பல தோழர்கள் கட்டுரைகளின் எண்களை வைத்துத்தான் பேசுவார்கள். மதுரை மண்டலத் திராவிடர் கழகத் தலைவர் அ.முருகானந்தம்அவர்கள்மதுரையில்மொத்தப் பழக்கடை வைத்திருக்கின்றார். பழங்களோடும் பழங்களை அவரிடம் வாங்கி விற்கும் சிறு வியா பாரிகளோடும்தான்அவரதுவாழ்க்கையின்பெரும் பகுதி கழியும். கடும் உழைப்பால் தான் உயர்ந்தது மட்டுமல்லாமல் தனது உடன் பிறந்தவர்களான அ.வேல்முருகன், அ.இராமமூர்த்தி போன்றவர் களும் வாழ்வில் உயர்வதற்கு காரணமாக இருந்தவர், இருப்பவர்.   நேரம் கிடைக்கும்போதெல்லாம் வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரைகளை மீண்டும் மீண்டும் படிக்கின்றார்.
வாழ்வியல் சிந்தனைகளை அவர் படித்து மனதில் நிறுத்தி வைத்திருக்கும் தன்மை கண்டுநானேவியப்படைந்திருக்கின்றேன் (மதுரை வழக்கில் சொல்வதென்றால் அரண்டு போயிருக்கின்றேன். அப்படி ஒரு உள்வாங்குதல்). தோழர்களோடு பேசும்போது பொது ஒழுக்கம் பற்றிப் பேச்சு வந்தால் வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரை 43 இல் ஆசிரியர் சொல்லியிருக்கின்றார் என்பார். தனது மகன் திருமணத்தில், மணமகளின் அப்பாவிடம் வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரை 378 அய் படியுங்கள் எனக் கொடுத்தவர். கொடுத்து விட்டு ரொக்கம், நகை போன்ற பேச்சுக்கள் பேசு பவர்கள் ‘மணச்சந்தையில் மனமில்லா பிராணிகள்’ என்று எடுத்துரைத்தவர். வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரை 378-த்தான் தன்னை தனது சம்பந்தி புரிந்துகொள்வதற்கு அடிப்படையாக அமைந்த கட்டுரை என்றவர். உங்க ஆயுளில் இன்னும் 20 வருடம் கூட்டவேண்டுமா வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரை 216-அய் படியுங்கள் என்பார். இப்படி பல தோழர்கள் கருத்துகளோடு கருத்துகளைத் தாங்கி நிற்கும் வாழ்வியல் கட்டுரையின் எண்ணையும் மனதில் நிறுத்தி வைத்திருக்கின்றார்கள். அப்படிப் பட்ட தோழர்களுக்கு 1000 ஆவது கட்டுரை வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி 12 இல் வெளிவந்திருக்கின்றது.
திருக்குறள் 1330 குறட்பாக்களை உள்ளடக்கியது. அறத்தைப் பேசும் திருக்குறள் பொருளைப் பேசுகின்றது. பொருளைப் பேசும் திருக்குறள் இன்பத்தைப் பேசுகின்றது. வாழ்க்கையின் நிலை யில்லாத தன்மைபற்றி பேசும் திருக்குறள் நிலைத்து நிற்பவை எவை எவையெனப் பேசுகின்றது. பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு இரு வரிகளால் ஆன திருக்குறள் கருத்துகளுக்கு  வாழ்வியல் நிகழ்வுகளோடு விளக்கம் சொல்லும் கட்டுரைகள் போல வாழ்வியல் சிந்தனைக் கட்டுரைகள் அமைந்துள்ளன. வாழ்வியல் சிந்தனைகள் பேசாத பொருள் இல்லை, தொடாத தலைப்புகள் இல்லை என நம்மைச்சுற்றி நிகழும் நிகழ்வுகளும், நம் மனதிற்குள் நிகழும் நிகழ்வுகளும் இரத் தினச் சுருக்கமாக விவரிக்கப்பட்டுள்ள கட்டுரை களாக வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரைகள் அமைந்துள்ளன. இளையோர் காதல் முதல் முதியோர் காதல்வரை, புத்தகம் முதல் மரணம் வரை, குழந்தைகள் சுதந்திரம் முதல் ‘முதி யோர்களிடம் பரிவு காட்டுங்கள்’ என்பதுவரை இந்த வாழ்வியல் சிந்தனைகள் தொட்டிருக்கும் வாழ்க்கைக்கோடுகள் எண்ண இயலாதவை.
வாழ்வியல்சிந்தனைகள்தொகுதி12இல், பதிப்பகத்தார் வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி-1 முதல் வாழ்வியல் சிந்தனைகள் 12வரைஒவ்வொருதொகுதியிலும்இடம்பெற் றிருக்கும் கட்டுரைகளில் காணப்படும் தனித் தன்மையான பொதுத்தலைப்புகளைப் பட்டியலிட் டிருக்கின்றார்கள்.
அந்தவகையில்12ஆம்தொகுதியை‘இந்த பன்னிரெண்டாம் தொகுதியில்’ எனக் குறிப் பிட்டு,‘மூளையைப்பாதுகாக்கதவிர்க்கவேண் டிய தவறுகள், வள்ளுவர் கூறும் நல வாழ்வி யல், ஊட்டச்சத்து, நடைப்பயிற்சி குறித்த விழிப்புணர்வுக்கட்டுரைகள், துக்கம், கவலை போன்றவற்றிலிருந்து வெளிவருவது எப்படி? நீண்டகாலம்வாழ்ந்தமக்களிடமிருந்துகிடைத்த 12 ரகசியங்கள் எனப்பல் துறைத் தகவல்களைக் கொண்டது’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள்.
நல்ல சரியான ஒரு குறிப்புரையாக பதிப்புரை உள்ளது. வாழ்வியல் சிந்தனைகள் 12 ஆம் தொகுதியில் ‘விந்தன் என்ற விந்தையாளர்- புரட்சி யாளர்’ என்னும் தலைப்பில் மூன்று கட்டுரைகள் உள்ளன. காமுகனும் திருந்தும்வண்ணம் ஏழைப் பெண்ணின் வாழ்வில் ஏற்படும் கொடுமைதனை விந்தனின் கதைமூலம் விவரிக்கும் பாங்கைப் பார்க்கலாம். விந்தன் எனும் எழுத்தாளர் இப்போது இல்லை, மற்றோர் அவரைச்சரியாக அடையாளம் காட்டாதநிலையில்,ஆசிரியர்வாழ்வியல்சிந்த னைகளில் அவரின் அருமையைச் சுட்டிக் காட்டி இன்றைய தலைமுறை அவரின் கதை களைத் தேடிப்படிக்கவேண்டும் என எண் ணத்தை வாழ்வியல் சிந்தனைகள் மூலம் விவரித் திருக்கின்றார். மதுரையில் ‘புத்தகத் தாத்தா’ என்று அழைக்கப்படும், தமிழில் முனைவர் ஆய்வு செய்வோர் அனைவர்க்கும் அரிய நூல்களை வழங்கும் பெருமைக்குரிய அய்யா முருகேசன் அவர்கள் பற்றி கட்டுரை 917 இல் ‘கவலைப்பட நேரமில்லை’ என்னும் தலைப்பில் ஆசிரியர் விவ ரித்திருக்கின்றார். ஆம், அவரது எளிமை, அவரது தொண்டறம் என்பது மதுரையில் பல கல்லூரி மாணவர்களும், பேராசிரியர்களும் அறிந்த ஒன்று.
ஆம்,அடுத்தவர்களுக்குதொண்டறம்செய் வதற்காகத் தனது வாழ்க்கை என்று அமைத்துக் கொண்டவர்களுக்கு கவலைப்பட ஏது நேரம். தன் வீடு... தன் குடும்பம் என எந்த நேரமும் கவலைப்படுபவர்கள் மத்தியில் அடுத்தவர்களுக்கு தொண்டறம் ஏதோ ஒரு வகையில் என்று ஆற்ற முனைந்தால் பின் எங்கே கவலை வாழ்க்கையில்.....
வாழ்வியல் சிந்தனை தொகுதி 12-அய் அறி முகப்படுத்தும் நமது தோழர்கள் நாம் படிப்பதோடு நிறுத்தாமல், பொதுவெளியில் உள்ள பலரிடம் இந்த புத்தகங்கள் சென்றடையப் பணியாற்ற வேண்டும். என்னுடன் வேலை பார்க்கும் ஒரு பெண்மணி, கடவுள் பக்திக்காரர். அவர் ஒருமுறை என்னிடமிருந்து வாழ்வியல் சிந்தனைகள் 5 ஆம் தொகுதியை வாங்கிச்சென்று படித்துவிட்டு, புத்தகம் விலைக்கு வேண்டுமென்றார். கொடுத் தேன். எவ்வளவு கருத்தாழமிக்க புத்தகம் இது. தினந்தோறும் இரண்டு கட்டுரைகளை விடாமல் தொடர்ந்துபடித்துக்கொண்டிருக்கிறேன்என்றார். படிக்கும் எவரையும் ஈர்க்கும் தன்மையுள்ளதாக வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரைகள் அமைந் துள்ளன. நிறைய சென்று சேர்ந்திருந்தாலும் இன்னும் சேர்க்கவேண்டிய எண்ணிக்கை அதிக மாக இருக்கின்றது என்பதைத் தோழர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
வாழ்வியல் சிந்தனைகள் 12 ஆம் தொகுதியின் நுழைவு வாசலில் ‘எண்ணாமல், எண்ணியதை எழுதினேன்’ என ஆசிரியர் எழுதியிருக்கின்றார். அதில்,‘எண்ணிக்கைகாகவோ,எழுதிஇடத்தை நிரப்பவேண்டும்என்பதற்காகவோநான்எழுதிய தில்லை! உணர்ந்தபோதும், உந்தப்பட்டபோதும் தான் ‘வாழ்வியல் சிந்தனைகள்’ வடிவம் எடுத்தன! தாகம் எடுத்துக்கொடுக்கும் தண்ணீருக்குத்தானே பயன் அதிகம்? அதுபோல விளையாட்டு போல தொடங்கி, விளைவுகளை -மாற்றங்களை பலரது வாழ்வில் உருவாக்கிய இக்கட்டுரைகள் மூலம் இவ்வளவு சமூக விளைச்சல் வரும் என்று எதிர்ப்பார்க்கவில்லை. இதை விட ஒரு கருத் தாளனுக்கு  மகிழ்ச்சி, ‘‘மதிப்பூதியம்தான் வேறு எது?’’ என்று குறிப்பிடுகின்றார்.
வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரைகளை வாசித்ததால் எனது வாழ்வில் ஏற்பட்ட மாற்றம், எனது இணையர் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம், எனது நண்பர்கள் வாழ்வில் ஏற்பட்ட மாற்றம் என மாற்றங்களை விவரித்துக்கொண்டே நமது தோழர்கள் செல்கின்றனர். பலன் கொடுக்கும் மரம்தானே நல்ல மரம். அதுவும் தித்திக்கும் இனிப்பும், தெவிட்டாத உடல் நலனுக்கும் உகந்ததாக அந்த மரத்தின் சுளைகள் அமைந்துவிட்டால், எடுத்து எடுத்து சுவைப்பதுதானே நமது வேலை. பலன் கொடுக்கும் நல் மரமாய் நமக்கு வாழ்வியல் சிந்தனைகள் தொகுப்புகள் அமைந்துள்ளன. பயன்படுத்தி நலம் பெறுவோம்,வாழ்வில் வளம் பெறுவோம், மற்றவர்கள் நலம் பெறவும் வளம் பெறவும் வாழ்வியல் சிந்தனைகள் தொகுதி 12 அய் விழாக்களில், நிகழ்வுகளில் பரிசாக அளிப்போம்.

நன்றி : விடுதலை 10.05.2017


Thursday, 4 May 2017

நூலக வாசலில் காத்திருக்கிறார்கள்.......

நூலகத்துறையில் தனிக்கவனம் செலுத்தும் திரு.உதயசந்திரன் ஐ.ஏ.எஸ். அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அவரை ஊக்குவிக்கும் கல்வித்துறை அமைச்சர் திரு. செங்கோட்டையன் அவர்களுக்கும் நமது பாராட்டுக்கள். இப்படி ஒரு நூலகத்தை தன் மனக்கண் முன்னால் நிறுத்தி, அதனை நிறுவி  பயன்பாட்டிற்கு அளித்த முன்னால் முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு நமது மனமார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும். மதுரையில் இப்படி ஒரு வாய்ப்பு மாணவர்களுக்கு கிடைக்குமா, எனது சொந்த ஊரான சாப்டூர் போன்ற கிராமங்களில் உள்ள பொது நூலகங்களைப் பயன்படுத்துபவர்களுக்கும் ஒரு சிறிய அள்விலாது போட்டித்தேர்வு எழுதுபவர்களுக்கு வழிகாட்டல் கிடைக்குமா என்னும் எதிர்பார்ப்புகளோடு இனி பி.பி.சி. செய்தி...........வா.நேரு

அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் சில பகுதிகளைப் பயன்படுத்துவதற்காக அதிகாலை ஐந்து மணி முதலே மாணவர்களும் வாசகர்களும் நூலக வாசலில் காத்திருக்கிறார்கள்.

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்திருக்கும் அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்தியாவின் மிகப் பெரிய நூலகங்களில் ஒன்று. தி.மு.க ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த நூலகம், அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் சரியாகப் பராமரிக்கப்படவில்லையென சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது வழக்கு ஒன்றும் நடைபெற்று வருகிறது.

7 தளங்களில் 5, 70,000 புத்தகங்களுடன் இயங்கிவரும் இந்த நூலகத்தில் கடந்த சில மாதங்களாக சீரமைப்புப் பணிகள் வேகமெடுத்திருக்கின்றன.
இந்த நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை எடுத்துப் பயன்படுத்துவதோடு, வாசகர்கள் வீட்டிலிருந்து தங்கள் புத்தகங்களையும் எடுத்துவந்து இங்கே வைத்துப் படிப்பதற்கான அறைகளும் உள்ளன. இந்த அறைகளில் குளிர்சாதன வசதி, லேப் - டாப், மொபைல் போன்களை சார்ஜ் செய்வதற்கான வசதி ஆகியவையும் வழங்கப்பட்டிருக்கின்றன.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்த அதிகாலை முதலே வரிசை
தரைத் தளத்தில் ஓர் அறையும் முதலாவது தளத்தில் ஓர் அறையும் என இரு அறைகளிலும் சேர்த்து இருநூறு பேர் வரை அமர்ந்து படிக்க முடியும்.
துவக்கத்திலிருந்தே மாணவர்களிடம் பெரும் வரவேற்றைப் பெற்றிருந்த இந்த வசதியைப் பயன்படுத்துவதற்காக தினமும் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் முயற்சிப்பதால், இடத்தைப் பிடிப்பதற்காக அதிகாலை ஐந்து மணிக்கே மாணவர்கள் தற்போது காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.
தங்களுடைய புத்தகத்தை எடுத்துவந்து படிப்பதற்காக வெகுதூரத்திலிருந்தெல்லாம் மாணவர்கள் ஏன் இங்கு வர வேண்டும்?
"வீட்டில் இருந்து படித்தால், திடீரென டிவி பார்க்கத் தோன்றும். படுத்துக்கொள்ளத் தோன்றும். அதனால்தான் இங்கே வந்துவிடுகிறேன்" என பட்டயக் கணக்காளர் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் ராஜேஷ் பிபிசியிடம் தெரிவித்தார். இவர் தண்டையார்பேட்டையிலிருந்து படிப்பதற்காக இங்கே வருகிறார்.

காலை ஆறு மணிக்கே சுமார் நூறு பேர் வரை நூலக வாசலில் திரண்டுவிடுவதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க தற்போது நூலக நிர்வாகம் ஆறரை மணியளவில் பிரதான நுழைவாயிலைத் திறந்து வளாகத்திற்குள் வாசகர்களை அனுமதித்து வருகிறது.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்த அதிகாலை முதலே வரிசை
அதன் பிறகு காத்திருப்பவர்களுக்கு எண்களுடன் கூடிய டோக்கன் வழங்கப்படுகிறது. பிறகு எட்டு மணியளவில் எண் வரிசையின் அடிப்படையில் வாசகர்கள் வரிசையில் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.
நூலகம் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரைதான் இயங்கும் என்றாலும் இந்த வசதி காலை எட்டு மணி முதல் இரவு 9 மணிவரை வழங்கப்படுகிறது.
"காலை ஆறு மணிக்கே இந்த அறைகளைத் திறந்தால் நன்றாக இருக்கும். அதேபோல, கூடுதலான மாணவர்கள் படிக்கும் வகையில் அறைகளை அதிகப்படுத்த வேண்டும். பல சமயங்களில் தரையில் அமர்ந்து படிக்க வேண்டியிருக்கிறது" என்கிறார் கொட்டிவாக்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா. இவர் மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக்காகத் தயாராகி வருகிறார்.

பல மாணவர்களுக்கு இந்த நூலகம் கிட்டத்தட்ட இரண்டாவது வீட்டைப்போலவே மாறிவருகிறது. தற்போது இங்குள்ள உணவகமும் செயல்பட ஆரம்பித்திருக்கும் நிலையில், எதற்காகவும் வீடு திரும்பத் தேவையில்லாத நிலையில் மாணவர்கள் அதிகாலையில் வந்துவிட்டு இரவில்தான் வீடு திரும்புகிறார்கள்.

"இப்போதாவது பரவாயில்லை. போட்டித்தேர்வுகள் நெருங்குவதால் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதத்தில் காலை நான்கு மணிக்கெல்லாம் வர வேண்டியிருக்கும்" என்கிறார் குரூப் 1 தேர்வுக்குத் தயாராகிவரும் சுரேஷ்.
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை பயன்படுத்த அதிகாலை முதலே வரிசை
வெளியிலிருந்து புத்தகங்களைக் கொண்டுவந்து படிப்பதற்கான இடத்தை அதிகப்படுத்து நூலக நிர்வாகம் தயங்குகிறது. பிரதானமாக இது நூலகமாகவே இருக்கவேண்டுமென நிர்வாகம் நினைக்கிறது.

"நூலகம் என்பது வாசகர்கள் வந்து செல்லும் இடமாக இருக்கும். வெளியிலிருந்து புத்தகங்களை எடுத்துவந்து நாள் முழுவதும் இருந்து படிப்பதென்பது சரியாக இருக்காது. இருந்தாலும் மாணவர்கள் ஆர்வமாக இருப்பதால் கூடுதல் இடங்களை ஒதுக்க முடியுமா என்று பார்த்து வருகிறோம்" என பிபிசியிடம் தெரிவித்தார் பள்ளிக் கல்வித் துறையின் செயளாலர் உதயசந்திரன்.

சென்னை அண்ணா நகரில் மாநில அரசால் நடத்தப்பட்டு வந்த ஐஏஎஸ் பயிற்சி மையமும் தற்போது கோட்டூர்புரத்திற்கு மாற்றப்பட்டிருப்பதால், நூலகத்திற்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
"பல சமயங்களில் நூலகத்தை ஆயிரம் பேருக்கு மேல் பயன்படுத்துவார்கள். இந்தியாவில் வேறு எந்த நூலகத்தையும் ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு மேல் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை" என்கிறார் இங்கு பணிபுரியும் பெயர் வெளியிட விரும்பாத ஓர் அதிகாரி.

சென்னையில், அண்ணா நூற்றாண்டு நூலகம் தவிர, ரஷ்ய கலாசார மையத்திலும் இந்த வசதி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அந்த நூலகம் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே இயங்கும். ஆனால், அண்ணா நூற்றாண்டு நூலகம், வருடம் முழுவதும் விடுமுறையின்றி இயங்கும் வகையில் நிர்வகிக்கப்பட்டுவருகிறது.

நன்றி : பி.பி.சி. 05.05.2017
(படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. )


Wednesday, 3 May 2017

மாதவிடாய் காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் பெண்கள்.....

மாதவிடாய் காலத்தில் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் பெண்கள்
நடுத்தர செங்குத்து குன்றுகள் வழியாக, பனிமூடிய இமயமலைத் தொடரில் இருந்து இறங்கும் புவியியல் படிக்கட்டு போன்ற நேபாளத்தின்நேபாளத்தின் நிலவமைப்பு தெற்கிலுள்ள பசுமையான சமவெளிக்கு இட்டுசெல்கிறது. அந்நாட்டின் தொலைதூர மேற்கு பகுதியில், அதன் மத்திய பகுதியில் பல தசாப்தங்களாக மக்களின் வாழ்க்கை சிறிதளவே மாறியுள்ளது.
ஈஸ்வரி ஜோசியும், லக்ஷிமியும்
Image caption
ஈஸ்வரி ஜோசியும், லஷ்மியும்
18 வயதான ஈஸ்வரி ஜோசிக்கு தன்னுடைய தாய் மற்றும் பாட்டி செய்ததையே தானும் கடைபிடித்து வருகின்ற எண்ணம் தான் வருகிறது. அது தான் மாதவிடாய் காலத்தில் வீட்டை விட்டு வெளியே சென்று தங்கும் வழக்கம்.
இந்த வழக்கம் "சஹௌபாடி" என்று அழைக்கப்படுகிறது. பெண்களின் மாதவிடாயை குறிக்கும் இந்த சொல், அத்தகைய காலத்தில் இவர் சுத்தமற்றவர் என்ற பொருளையும் தருகிறது.
ஈஸ்வரி ஜோசிக் 15 வயதானபோது தான் முதல்முறையாக மாதவிடாய் வந்தது. அப்போது 9 நாட்கள் வீட்டுக்கு வெளியே தங்கியதாக அவர் தெரிவிக்கிறார்.
"வீட்டுக்கு வெளியே தூங்க வேண்டும்"
ஈஸ்வரி வாழும் தாமிலெக் கிராமம் இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக, குறுக்கும் நெடுக்குமாக ஓடும் இரு ஆறுகளால் தாழ்வான, பசுமையான பள்ளதாக்காக காணப்படுகிறது.
ஏறக்குறை 100 குடும்பங்கள் அங்கு வாழ்கின்றன. மண்ணால் பூசப்பட்ட மூன்று அடுக்குமாடி கட்டடத்தில் இந்த மக்கள் வாழ்கின்றனர். தரை தளத்தில் கால்நடைகள் அடைக்கப்படுகின்றன. குடும்பத்தினர் நடுத்தளத்தில் தங்க, மேல்தளம் சமையலுக்கு பயன்படுத்தப்படுகிறது.
"திருமணத்திற்கு முன் கருத்தரித்ததால் சாவதற்கு தீவில் விடப்பட்டேன்"
இங்குள்ள பெண்கள், தங்களின் மாதவிடாய் காலத்தின்போது, வீட்டை விட்டு வெளியேறி தனிப்பட்ட வகையில் கட்டப்பட்டுள்ள குடிசைகளில் தங்கியிருக்க வேண்டும்.
சரியான படுக்கை வசதி இல்லாமல் இருக்கின்ற இந்த சிறிய பகுதி பல குடும்பத்தினால் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.
அவ்வாறு தனியாக தங்கியிருக்கும் பெண்கள் சமைக்க முடியாது, ஊட்டச்சத்து மிக்க உணவு சாப்பிட முடியாது. கிராம நீர் ஆதரங்களில் இருந்து நீர் அருத்த மற்றும் குளிக்க கூடாது.
வரைபடம்
தாவரங்களை, கால்நடைகள் அல்லது ஆண்களை தொட கூடாது என்றும் தடை இருக்கிறது.
"நாங்கள் பசுவை தொட்டுவிட்டால், அவை பால் கொடுக்காது என்று கூறப்பட்டது" என்கிறார் ஈஸ்வரியின் தோழி நிர்மலா
முன்னாள் கணவரை அடைய முகம் தெரியாத நபருடன் பாலுறவு கொள்ளும் முஸ்லிம் பெண்கள்
இதுபோல நடந்ததை நாங்கள் பார்த்ததில்லை. ஆனால் எங்களுடைய மூத்தோர் நாங்கள் பசுவை தொடக்கூடாது என்கின்றனர்"
நான்கு நாட்கள் இந்த குடிசையில் தங்கியிருந்த பின்னர், ஒரு மணி நேரம் நடந்து சென்று நீரூற்றில் நீராடுவர். பின்னர் லஷ்மிபசுவின் சிறுநீரால் சுத்தமாக்கப்படுவர்.
இவ்வளவுக்கும் பின்னர், தான் அவர்கள் சாதாரண வாழ்க்கைக்கு திரும்ப முடியும்.

Image caption
"நான் அந்த இடத்திற்கு போகமாட்டேன். ஏன் போக வேண்டும்?" - லஷ்மி
மாதவிடாய் காலத்தில் வெளியேற எதிர்ப்பு
இதற்கு எதிராக எழும் பெண்களும் இல்லாமல் இல்லை.
45 வயதாகும் கல்பனா ஜோசி மாதவிடாய் காலத்தில், தன்னுடைய கடைக்கு அடியில் இருக்கும், இந்த சஹௌ குடிசைக்கு செல்வதில்லை.
அவ்வாறு செய்தால் விலங்குகள் மற்றும் குடிகார ஆண்களால் தாக்கப்படலாம் என்று அச்சமுறும் இளம் பெண்களுக்கு "அப்படி எதுவும் நடக்காது" என்கிறார் கல்பனா.
"நான் அந்த இடத்திற்கு போகமாட்டேன். ஏன் போக வேண்டும்? நான் என்னுடைய பெற்றோரிடம் சொல்லிவிட்டேன்" என்கிறார் 22 வயதான லஷ்மி.
மாதவிலக்கு காலத்தில் பெண்கள் தூய்மை இழக்கிறார்களா?
"பெற்றோர் கோபப்பட்டனர். என்னுடைய சகோதரர்கள் புரிந்து கொண்டனர். நான் வீட்டில் இருப்பதை அவர்கள் ஒரு பொருட்டாக எடுத்துகொள்வதில்லை" என்று லஷ்மி கூறுகிறார்.
ஆனால், திருமணமாகி கணவன் வீட்டுக்கு சென்ற பின்னர் இந்த நிலை நீடிக்குமா? என்பதில்லஷ்மிக்கே சற்று சந்தேகம்தான்.
அவர்கள் இப்படி தான் நடக்க வேண்டும் என்று சொன்னால், நான் வீட்டிற்கு வெளியே தூங்க வேண்டியது தான் என்று அவர் கூறுகிறார்.
யோக்யா ஜோசி,
Image caption
"பாரம்பரியம் தொடர வேண்டும். ஆனால் வேறுபட்ட காரணத்திற்காக" - யோக்யா ஜோசி
மாதவிடாய் ரத்தம் ஒரு விஷம்
தாமிலெக் கிராமத்திற்கு சாலை வசதி போடப்பட்டு, போக்குவரத்து சீரானபோது, மூட்டை தூக்கி வாழ்க்கையை கழித்து வந்தோர் வெளியூர், வெளிநாடுகள் சென்று செல்வம் ஈட்ட தொடங்கினர்.
எனவே, முந்தைய அதே பரப்பிலான விவசாயத்தை கவனித்து, அறுவடை செய்ய வேண்டிய பொறுப்பு பெரும்பாலும் பெண்களையே சேர்ந்தது.
திருமணம் முறிந்தால் மறுதுணை தேடுவது என் உரிமை: பெண்களின் மனநிலை மாற்றம்
அத்தகைய நிலைமையிலும், ஆண்கள் சஹௌபாடியின் அவசியத்திலும், சக்தியிலும் நம்பிக்கை கொண்டு தான் இருக்கின்றனர்.
"என்னுடைய மனைவி மாதவிடாய் காலத்தில் என்னை தொட்டால் நான் சுகவீனம் அடைந்துவிடுவேன்" என்று 74 வயதான ஷங்கர் ஜோசி கூறுகிறார்.
இளைஞரான யோக்யா ஜோசி, "பாரம்பரியம் தொடர வேண்டும். ஆனால் வேறுபட்ட காரணத்திற்காக" என்கிறார்.
நாரணயள் பிராசாத் போக்ஹாரெல்
Image caption
நாரணயள் பிரசாத் போக்ஹாரெல் குரு
"முற்காலத்தில், கடவுள்கள் கோபம் அடைவதாக எண்ணி இந்த வழக்கம் பின்பற்றப்பட்டது" என்று அவர் கூறுகிறார்.
ஆனால், மாதவிடாய் ரத்தத்தை தோய்த்து எடுக்க துண்டு துணிகளையே கிராம பெண்கள் பயன்படுத்துவதை சுட்டிக்காட்டி, சுத்தமான சுற்றுச்சூழலை மற்றும் சுகாதாரத்தை பராமரிக்கவும், வீட்டில் பாதுகாப்பு நிலவவுமே இந்த வழக்கம் என்றும் நம்புவதாக அவர் தெரிவிக்கிறார்.
"மாதவிடாய் ரத்தம் ஒரு விஷம்" என்று அவர் கூறுகிறார்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் அசுத்தமானவர்களா?
மாதவிடாய் காலம் பெண்கள் அசுத்தமாக இருக்கும் காலம் என்கிற கருத்து எப்படி தோன்றியது? என்று யாரும் குறிப்பிட்டு சொல்ல முடியாது. ஆனால், இந்து மத புனித நூற்களே பெரும்பாலும் காரணமாக கூறப்படுகிறது.
நாரணயள் பிரசாத் போக்ஹாரெல் போன்ற குருக்களின் வழிகாட்டுதல்களையும் மக்கள் பெறுகின்றனர். அவர் மாதவிடாய் புனிதமானது. ஆனால் ஆபத்தானதும் கூட என்கிறார்..
"பெண் தன்னை கட்டுப்படுத்தி கொள்ளாவிட்டால், அவருடைய உடலில் இருக்கும் அசுத்தங்கள் உடலுறவின்போது ஆணுக்கும் பரவி கெடிய நோய்கள் ஏற்படலாம்" என்று அவர் எச்சரிக்கிறார்.
பிமா லாக்கி
Image caption
பிமா லாக்கி
தவறுதலாக ஒரு ஆண் மகனை தொட்டுவிட்டதற்கும், சுற்றுச்சூழலை மாசுபடுத்தியதற்கும் வருந்துகிற மத சடங்குகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன.
ரிஷி பஞ்சமியின்போது, பெண்கள் உண்ணாநோன்பிருந்து, புனித நீரில் நீராடுகிறார்கள்.
சமூக வழக்கமாக...
மதத்தின் புனித நூற்களில் சஹௌபாடி அதன் வேர்களை கொண்டிருக்கலாம். ஆனால், பரவலாக கடைபிடிக்கப்படும் சமூக நடைமுறையாக அது ஆகியிருக்கிறது
"மதத்தின் காரணமாக இந்த வழக்கத்தை பலர் கடைபிடிக்கின்றனர். பிறர், தாங்கள் வாழும் பகுதியிலுள்ள மக்கள் கடைபிடிப்பதால் கடைபிடிக்கின்றனர். அனைவரும் கடைபிடிப்பதால், பௌத்தர்கள் கூட இதனை கடைபிடிக்கும் வழக்கமும் உள்ளது" என்கிறார் சிறப்பு இனப்பெருக்க சுகாதரா வளர்ச்சி பணியாளர் பிமா லாக்கி.
2005 ஆம் ஆண்டு நேபாள உச்ச நீதிமன்றம் சஹௌபாடியை சட்டத்திற்கு புறம்பான வழக்கமாக அறிவித்தது. ஆனால் அந்த நாட்டின் தொலைதூர பகுதிகளில் மாற்றங்கள் மிகவும் மெதுவாகவே நடைபெறுகிறது.
நகர பெண்கள்
தாமிலெக் கிராமத்தின் செங்குத்து குன்று பக்கத்தில் இருந்து மக்கள் அதிகமாக வாழும் தலைநகரான காட்மண்டுவுக்கு நூற்றுக்கணக்கான மைல்கள் உள்ளன.
அங்கு குழந்தைகள் மாதவிடாய் பற்றி கற்றுகொள்கின்றனர். சுகாதார பாதுகாப்பு பட்டையை எளிதாக வாங்கிகொள்ள முடிகிறது.
ஆனால், மாதவிடாய் பற்றிய எதிர்மறை கருத்துக்கள் இங்கும் முழுமையாக அகன்றுவிடவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
நிர்மலா லிம்பு மற்றும் திவ்யா ஷாரெஸ்தா இருவரும் 20 வயதுகளில் இருக்கின்ற பட்டதாரிகள்.
நிர்மலா லிம்பு மற்றும் திவ்யா ஷாரெஸ்தா
Image caption
நிர்மலா லிம்பு மற்றும் திவ்யா ஷாரெஸ்தா
"இந்த விதிகள் எனக்கு எந்த பொருளையும் தரவில்லை. எனது தாய் நான் தாவரங்களை குறிப்பாக பழங்கள் காய்க்கும் மரங்களை தொடக்கூடாது என்பார். நான் அவற்றை தொடர்ந்து தொட்டு வருகிறேன். அவை பட்டுவிடவில்லையே" என்று நிர்மலா கூறுகிறார்.
ஆனால், திவ்யாவுக்கோ, மாதவிடாய் என்பது, மத பண்டிகையில் கலந்து கொள்வதை தடுப்பதாக பொருள்படுகிறது.
நாள் முழுவதும் வழிபாட்டிற்கு தயாரித்து கொண்டிருக்கையில், எனக்கு மாதவிடாய் என்று சொல்லிவிட்டால் போதும், நான் தொடுகிற எல்லாவற்றையும் சுத்தம் செய்தாக வேண்டும் என்று கூறிவிடுவர்" என்று வருத்தத்தோடு கூறுகிறார் திவ்யா.
நேபாள சமூகம் மாறிக்கொண்டிருக்கிறது. நிர்மலாவும், திவ்யாவும் சில கட்டுப்பாடுகளை சந்தித்தாலும், அவர்களின் தாய்மார் சந்தித்ததை விட இவை மிகவும் லேசானவைதான்
"எங்களுக்கு மாதவிடாய் என்றால் இழிவாக பார்த்தார்கள். தனியாக ஒதுக்கி வைத்துவிடுவார்கள். தனி தட்டு, வேறுபட்ட ஆடைகள். யாரும் தொடமாட்டார்கள்" என்று திவ்யாவின் தாய் சுதா ஆதங்கத்தை தெரிவிக்கிறார்.
சுதா, திவ்யாவை பெற்றெடுத்தபோது, தான் அனுபவித்த கொடுமையை தன்னுடைய மகள் அனுபவிக்க கூடாது என்று பெரிய அளவில் கட்டுப்பாடுகள் இல்லாமல் வளர்த்தார்.
அதுவே தன்னுடைய தன்னம்பிக்கையை வளர்த்தாக தெரிவிக்கிறார் திவ்யா.
லக்ஷிமி மாலா
Image caption
லக்ஷிமி மாலா
திவ்யாவை போல மாதவிடாய் பற்றிய எதிர்மறை கருத்துக்களை ஊட்டி வளர்க்கப்படாத பல பெண்கள் அந்த சமூகத்தில் உள்ளனர்.
ஆனால், பழைய நடைமுறைகள் நகரங்களிலும் மாறுவது என்பது மிகவும் கடினமாக உள்ளது என்கிறார் இனபெருக்க சுகாதார திட்டத்தை நடத்தி வரும் பிமா லாக்கி.
சில படித்த பெண்களே மறைமுகமாக எதிர்மறை கருத்துக்களை வளர்த்து வருவதாக அவர் கூறுகிறார்.
மாறுகின்ற மனங்கள்
நேபாளத்தின் தெற்கில் சுகாதரா பணியாளர் லஷ்மி மாலா சஹௌபாடியை முடிவுக்கு கொண்டுவர உறுதியான பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.
தெராய் என்ற பகுதியில் இருக்கும் இதற்கான சிறிய குடிசைகள் மேலே திறந்தே இருப்பவை அல்லது வைக்கோல், பதரால் கூரை அமைக்கப்பட்டவை. பழைய துணிகளை பயன்படுத்தி பல பெண்கள் ஒரேநேரம் தூங்கும் நிலைமையும் அங்குள்ளது.
பருவ மழையின்போது பாதுகாப்பு இல்லை. புற்களுக்கு மத்தியில் வாழும் பாம்புகளால் ஆபத்து அதிகம்.
தாங்காடி என்ற இடத்தில் வக்ஸிமி பணிபுரிகிறார். சுகாதரா துண்டுகள் விற்கப்பட்டாலும், அவை விலை உயர்ந்தவை. ஆனால், பழைய துணிகளை பெண்கள் பயன்படுத்துகின்றனர்.
மாஜ்ஹிகாகௌன் கிராம வீடு
Image caption
மாஜ்ஹிகாகௌன் கிராம வீடு
அவற்றை சுகாதாரமான முறையில் துவைத்து, பாக்டீரியாவை கொல்லும் அளவுக்கு சூரிய ஒளியில் நன்றாக காயவைத்து, மறுபடியும் பயன்படுத்துவதை அவர் அனைவருக்கும் சொல்லிகொடுக்கிறார்.
இந்த முயற்சி மிகவும் கடினம் தான். மக்கள் சண்டையிட்டனர். சபிக்கவும் செய்தனர். காவல்துறையினரோடு கிராங்களுக்குள் சென்ற நாட்களும் உண்டு.
ஆனால், நாட்கள் செல்ல செல்ல மக்கள் மாதவிடாய் காலத்தில் பெண்களை வீட்டிற்கு வெளியே சென்றுதூங்கச் சொல்வதில்லை.
இன்னும் ஓராண்டில் இந்த வழக்கம் முற்றிலும் நின்றுவிடும் என்கிறார் லஷ்மி நம்பிக்கையுடன்.
குடிசைகள் உடைப்பு
நேபாளின் மேற்கில் வெகுதொலைவில் இந்த சஹௌபாடி வழக்கத்தை முடிவுக்கு கொண்டுவர இன்னொரு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, உள்ளூர் அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் உதவியால், மாஜ்ஹிகாகௌன் கிராமத்தின் இத்தகைய குடிசைகளை எல்லாம் உடைக்கும் பரப்புரை தொடங்கியது.
இதற்கான ஒருங்கிணைப்பு குழுவில் இருப்பவர் தான் தேவகி ஜோசி.
முற்காலத்தில் மக்கள் குளிப்பது குறைவு. ஆடைகளை துவைப்பது குறைவு. அதனால் இத்தகைய வழங்கங்கள் தொடங்கியிருக்கலாம்.
ஆனால், இப்போது அவை மாறிவிட்டன. பள்ளியில் கூட சுகாதார துண்டுகளை வழங்க தொடங்கியுள்ளனர் என்று அவர் கூறுகிறார்.
மாமியாருடன் சியுதாரி சுனார்.
Image caption
மாமியாருடன் சியுதாரி சுனார்.
ஆனாலும், எல்லோருமே இதனை ஏற்று கொண்டார்களா?
எருமைகள் இருக்கின்ற புதியதொரு இடத்தை சுட்டிக்காட்டி "இன்னும் அதே வழக்கத்தை நாங்கள் தொடர்வோம்" என்கிறார் சியுதாரி சுனார்.
பழைய சஹௌதாடி வீடுகள் இடிக்கப்பட்டதும் புதியதொரு இடத்தை அதற்கு அவர்கள் ஒதுக்கியுள்ளனர்.
தேவகி இந்த பணித்திட்டத்தின் வெற்றியில் ஆர்வத்துடன் இருந்தாலும் பெரியோர் சிலர் மனங்களை மாற்றிக் கொள்வதற்கு தயங்குவதை ஒப்புக் கொள்கிறார்,
சஹௌபாடி வழக்கம் முற்றிலும் அழிந்து போவதற்கு இன்னொரு தலைமுறை காலம் பிடிக்கும் என்கிறார். அரசின் உள்ளூர் தலைவர் லீலா காலெ. அதற்காக ஆண்கள், பெண்கள், மாந்திரீகர்கள் என அனைவரோடும் சோந்து உழைத்து வருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்,
நேபாள பெண்கள் தங்களுடைய மாதவிடாயை கொண்டாட வேண்டும் என்கிறார் லீலா காலெ.
"நம்முடைய ரத்தத்தில் சக்தி இருக்கிறது என்று அவர்களுக்கு கூறுவோம்" என்கிறார் லிவா காலெ.

நன்றி : பி.பி.சி. 01.05.2017
(படங்கள் தவிர்க்கப்பட்டுள்ளது)