Saturday, 27 May 2017

தி இந்து ' தமிழ் நாளிதழில் 'பெண் இன்று .....

இன்றைய(மே 28,2017)  'தி இந்து ' தமிழ் நாளிதழில் 'பெண் இன்று ' என்னும்  இணைப்பைக் கொடுத்திருக்கின்றார்கள். இதில் இருக்கும் பல கட்டுரைகள் மிகச்சிறப்பாக இருக்கின்றன. அதனால்தான் வலைப்பதிவு. பெண்கள் போராட்டத்திற்கு வந்தால் எத்தகைய அடக்குமுறைகள் இருந்தாலும் அது தூள், தூளாவாது தொழிற்சங்க இயக்கங்கள் கற்றுக்கொண்ட பாடம். அதனைப்போலத்தான் சமூகப்போராட்டங்களும். முதல் பக்கத்தில் 'போராட்டத்தைக் கையில் எடுக்கும் பெண்கள் ' என்று தலைப்பிட்டு டாஸ்மார்க் கடைகளுக்கு எதிராக பெண்கள் கையிலெடுக்கும் மதுப்பாட்டில்கள் உடைப்பு போராட்டத்தை கொத்தமங்கலம் என்னும் புதுக்கோட்டை மாவட்ட கிராமத்தில் நடந்ததை எடுத்துப் போட்டிருக்கின்றார்கள். அதில் பங்குபெற்ற இந்திராணி என்பவர் மிகத்தெளிவாக பேட்டி கொடுத்திருக்கின்றார்.

'குடும்பம் ' என்ற அமைப்பே ஒழியவேண்டும் என்றார் தந்தை பெரியார். பல பெண்களுக்கு இன்று காதலுக்காக மரணதண்டனை கொடுக்கும் பலிபீடங்களாக குடும்பங்கள் மாறிக்கொண்டிருக்கின்றன. இந்த குடும்ப கவுரவம் என்பது பெண்ணின் உயிரைவிட அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததா? எனக் கடைசிப்பக்கத்தில் கவிஞர் சல்மாவின் கேள்விகளோடு 'வீழ்ந்து கிடக்க அல்ல வாழ்க்கை ' என்னும் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. எல்லா மதங்களும் அடிப்படையில் பெண்ணை அடிமையாக்க உருவாக்கப்பட்டவையே என்பது நமது கருத்து என்றாலும் அது கவிஞர் சல்மா தனது மதத்து அடிப்படையில், குடும்ப கவுரவம் என்னும் பெயரில் 13 வயதில் படிப்பு நிறுத்தப்பட்டதை இன்று கேள்விக்கு உள்ளாக்கும்விதம் அருமை.

எழுத்தாளர் ஓவியாவின் தொடரான 'பெண்ணும் ஆணும் ஒண்ணு ' என்னும் தொடர் பல கேள்விகளை தொடர்ச்சியாக வைத்துக்கொண்டிருக்கின்றது. இந்தவாரம் தெய்வங்கள் எல்லாம் ஏன் ஆண் வடிவத்திலேயே இருக்கிறது.என்னும் கேள்வியை எழுப்புகின்றார். பெண் கடவுள்கள் இடம் எப்படி ஆண் கடவுள்களால் நிரப்பப்பட்டது என்பதனை வரலாற்றின் அடிப்படையில் ஆதாரங்களைக்கூறி விளக்கங்களைக் கூறியிருக்கின்றார்.பிரித்து பிரித்து படிக்கவைப்பதால் மட்டும் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிடுமா ? என்னும் கேள்வியை எழுப்பியிருக்கின்றார். பாடத்திட்டம் முதல் மக்களின் மன நிலைவரை பெண்களை இரண்டாந்தரமாக ஆக்குவதற்காகவே என சமூகத்தில் நிகழ்கிறது என்பதனை கோடிட்டுக் காட்டியிருக்கின்றார்.

பெண் அரசியல் என்னும் தலைப்பில் தோழியர் பாலபாரதி, முன்னால் சட்டமன்ற உறுப்பினர் கட்டுரை எழுதியுள்ளார். சட்டமன்ற அனுபவங்களை சமூகப்பிரச்சனைகளொடு கோடிட்டுக் காட்டுவதாக அவரின் கட்டுரைகள் தொடராக 'பெண் அரசியல் ' என்னும் தலைப்பில் 'தி இந்து ' தமிழ் நாளிதழிலில்  வருகின்றது.அரசியலுக்கு அப்பாற்பட்டு தன்னுடைய எளிமையாலும், சமூக நோக்காலும் அனைவரின் நன் மதிப்பைப்பெற்றுள்ள பாலபாரதியின் கட்டுரைகளும் ஒரு புதிய நோக்கைச்சுட்டிக்காட்டுகின்றது.

புலிவலம் சி.செல்வராஜ் அவர்களின் கட்டுரை 'எதிர்வினை ' என்னும் தலைப்பிட்டு ,'மகளே நீ உயர்ந்தவள் ' என அடித்துச்சொல்கிறது. ஆண்களும் பெண்களும் இயல்பாகப் பழகவேண்டும் என்பதனை தனது மகளை வைத்தே விவரித்துள்ளார். 'எனக்கும் என் மனைவிக்கும் குழந்தை வளர்ப்பில் மனப்பக்குவம் இருக்கக்காரணம் எங்கள் பெற்றோர் இருவரும் தந்தை பெரியாரின் கொள்கைகளைக் கடைப்பிடித்து வாழ்ந்தவர்கள். ஆனால் எல்லாப்பெற்றோரும் இப்படி இருப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது.மதமும் சாதிய அமைப்பும் தாயானாலும் மகளாயினும் இளக்காரமாகப் பார்க்கும்படிதான் நம்மை வளர்த்து வந்திருக்கிறது' எனும் வார்த்தைகள் மிக வலிமையானவை.

ஒரே ஒரு கவிதைத் தொகுப்பை வெளியிட்ட,ஆனால் உலகப்புகழ் பெற்ற  கவிஞர் அன்னா மார்கொலினின் வாழ்க்கையும், அவரின் மொழி பெயர்ப்புக்கவிதைகள் மூன்றும் 'மொழியின் பெயர் பெண் ' என்னும் தலைப்பில் வெளியிடப்பட்டுள்ளது. பக்கத்திற்கு பக்கம் மிகவும் கவனமாகவும், பெண் விடுதலை, பெண் சமத்துவம் என்னும் நோக்கில் உருவாக்கப்பட்ட இதழாக இன்றைய 'பெண் இன்று ' என்னும் இணைப்பு இருக்கிறது. மனமார்ந்த வாழ்த்துகள். பெண்களுக்கு இணைப்பு என்று வெறும் கோலமும்,சமையல்குறிப்பும் மட்டுமே கொடுக்கும் பத்திரிக்கைகளுக்கு நடுவில் இன்றைய 'தி தமிழ்' இந்து நாளிதிழனின் 'பெண் இன்று ' இணைப்பு நம்பிக்கை தருகிறது. தொடரட்டும் இந்தத் தொடர்களும் , சின்னச்சின்ன குறிப்புகள் என்றாலும் செழுமையான குறிப்புகளும்,பேஸ் புக் பதிவுகளும்......

4 comments:

  1. பாரட்ட வேண்டியதை உடனே பாராட்டி பெரியார் தொண்டர் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள்

    ReplyDelete
  2. அனைவருக்கும் வாழ்த்துகள்...

    ReplyDelete
  3. அய்யா கரந்தை ஜெயக்குமார் அவர்களுக்கும் திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும்,அண்ணன் ஆனந்தம் அவர்களுக்கும் நன்றி....

    ReplyDelete