Thursday, 27 July 2017

கால்களில் செருப்பில்லாமல்.......



அனல் பறக்கும்
சாலைகளில்
கடக்கும்போதும்
கூலி வேலை செய்யும்
ஆட்களைத் தாண்டும்போதும்
எப்போதும் கால்களைக்
கவனிக்கிறேன்......
செருப்பு அணிந்திருக்கிறார்களா?
எனக் கண்கள்
கவலையோடுதான்
கவனிக்கின்றன.....
எல்லோருக்கும் எல்லாம்
என்பதெல்லாம்
இந்த நாட்டில்
கானல் நீர்தானோ?.....

அன்றொரு நாள்
செவக்காட்டிற்கு
நானும் தங்கையும்
தம்பியுமாய்
அதிகாலையில்
சென்றுவிட்டு
வெயில் ஏறிய நேரத்தில்
கால்களில் செருப்பில்லாமல்
திரும்பிய நேரத்தில்

சுட்ட தரையும்
கொதித்த மணலுமாய்
கால்களில்
தீப்பற்ற......
தாள இயலாமல்
செவக்காடு முதல்
ஓட்ட ஓட்டமாய்
அழகாபுரிச்சாலைவரை
மூவரும்
ஓட்டப்பந்தயத்தில்
ஓடி வந்ததுபோலவே
ஓடி வந்தது நினைவிருக்கிறது.....

அய்நூறு அறநூறு
எனப் பிள்ளைகளுக்கு
புதுச்செருப்பு
வாங்கும் நேரமெல்லாம்
கால்களில் செருப்பில்லாமல்
ஓடி வந்த நினைவு
மனதிற்குள் ஓடுகின்றது
நீளும் நினைவுகளாய்.....

                                                           வா.நேரு.....27.07.2017


2 comments:

  1. எல்லோருக்கும் எல்லாம்
    என்பதெல்லாம்
    இந்த நாட்டில்
    கானல் நீர்தான்.. அய்யா

    ReplyDelete
  2. கானல் நீராகவே போய்விடுமா? பொறுத்திருப்போம்..மாறுமொரு நாள் உறுதியாக. அய்யா நன்றி, வருகைக்கும்,கருத்திற்கும்.

    ReplyDelete