Wednesday, 27 September 2017

எங்கள் அரசுப்பள்ளிக்குள்

கடந்து போன காலங்கள்(14)


பசுமை நிறைந்த
நினைவுகளாய்
பாடித்திரிந்த
பறவைகளாய்
வலம் வந்த
எங்கள் சாப்டூர்
அரசுப்பள்ளிக்குள்
மிக நீண்ட நாட்களுக்குப்பின்
செல்லும் வாய்ப்பு...

அந்தப் பள்ளிக்குள்
நிகழ்ந்த அனுபவங்களை
தொகுக்க இயலுமா தெரியவில்லை
ஆனால் ஒவ்வொரு நிகழ்வையும்
மறக்க இயலவில்லை......

துவக்கப்பள்ளியில் இருந்து
பட்டை தீட்டப்படாமல்
வரும் மாணவர்களை
உருப்படியாக்க
தனது உதிரம் கொட்ட
உழைத்த மூக்கையா வாத்தியார்

அருகில் இருக்கும்
ஊரான செம்பட்டியிலிருந்து வந்த
தர்மக்கண்ணு வாத்தியார்.....


எனது அப்பாவின் நண்பர்
சுப்பிரமணிய வாத்தியார்
அவரின் அன்பொழுகும்
வார்த்தைகளும்
சதுரங்க விளையாட்டில் இருந்த
அளப்பரிய ஆற்றலும்

கடுமையான
மதக்கோட்பாட்டால்
காய்ச்சலுக்குக் கூட
மருந்து எடுக்க மறுத்த
எம்மி டீச்சர்

அறிவியல் பாடம் எடுத்த
அவரது இயற்பெயர் இராமசாமி
என்றாலும்
கண்ணாடி வாத்தியார் என்று
சொன்னால் மட்டுமே
எங்களுக்குப் புரியும்

ஒன்பதாம் வகுப்பில்
வரலாறு புவியியல்
பாடம் எடுத்த
கூடலிங்கம் ஹெட்மாஸ்டர்

ஒரு வித பெருமையோடும்
எதிர்ப்பு பேச்சுகளோடும்
ஆனால் மாணவர்களை
விளையாட்டில் ஊக்கப்படுத்திய
பி.டி.வாத்தியார் ஆறுமுகம்

புன்சிரிப்பு தவழும் முகமும்
டேய், உனக்கு மதிப்பெண்ணைக்
குறைத்து குறைத்துப் பார்க்கிறேன்
இருந்தாலும் நிறைய
மதிப்பெண் எடுக்கிறாய்
எனத்தட்டிக்கொடுத்து
எனது தமிழ் ஆர்வத்திற்கு
வலுச்சேர்த்த
தமிழய்யா குழந்தைவேலு

கிராப்ட் தவசி வாத்தியார்
உசிலை தையல் டீச்சர்
பேரையூர் பெருமாள் வாத்தியார்
கணக்குப் பாடம் நடத்திய
முத்துப்பேயத்தேவர்
கோதண்டராமன் ஆசிரியர் என
பல ஆசிரியர்களின் முகங்கள்
எல்லாம்
எனது மனத்திரைக்குள் ஆடின.....

எல்லாவற்றிற்கும் மேலாக
எனது பத்தாம் வகுப்பில்
தலைமை ஆசிரியராக
வந்து சேர்ந்த
வீரி செட்டி சார்
அவரால் வந்த மாற்றங்கள்
எனக்குள்ளும் பள்ளிக்குள்ளும்
என நினைவுகள் விரிந்தன......

உடன்படித்த
பெண்களும் ஆண்களும்
ஒரு நிமிடம் வந்து வந்து
போனார்கள்....

கபடியில் கலக்கிய
ஒத்தப்பேரன் குருசாமி
முடி திருத்தும் கடைவைத்திருந்த
அண்ணனின் தம்பியாய்
என்னால் எப்போதும் மறக்க
இயலா நண்பன் கண்ணன் என்னும்
நவநீதகிருஷ்ணன்
இவர்கள் எல்லாம் இப்போது
உலகில் இல்லை எனும்
நினைவுகளும் ஓடியது
துயரமும் நெஞ்சிற்குள் நிறைந்தது.....

ஒரு பள்ளிக்குள் நுழைந்ததற்கு
இத்தனை நினைவுகளா
எனும் நினைவுகளோடு
படிப்பிற்காக பட்ட பாடும்
தெரியாதைத் தெரிவதற்காக
அலைந்த அலைச்சலும்
மின்சார விளக்குக்காக
இரவில் அரசுப்பள்ளியில்
படித்த நினைவுகளுமாய் ஓடியது......

                                                                             வா.நேரு, 27.09.2017 இரவு 9.50




4 comments:

  1. நாம் சின்னஞ்சிறு வயதில் படித்த பள்ளிகளுக்குச்
    செல்லும்போது ஏற்படும் நினைவலைகளில்
    நீந்திக் கழிப்பது சுகமான சுகம் ஐயா

    ReplyDelete
  2. நினைவலைகளில்
    நீந்திக் கழிப்பது ....ஆமாம்,ஆமாம். அய்யா, நன்றி,வருகைக்கும் கருத்திற்கும்

    ReplyDelete
  3. நானும் சமீபத்துலதான் நான் படிச்ச பள்ளிக்கூடத்துக்கு போய் வந்தேன். எனக்கும் ராமசாமின்னு ஒரு சார் உண்டு

    ReplyDelete
  4. மகிழ்ச்சி...நன்றி,வருகைக்கும்,கருத்திற்கும்

    ReplyDelete