Sunday, 14 October 2018

அண்மையில் படித்த புத்தகம்: தீண்டாமைக்குள் தீண்டாமை: புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்...

அண்மையில் படித்த புத்தகம்: தீண்டாமைக்குள் தீண்டாமை: புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும்...

ஆசிரியர்கள்               : சி.லட்சுமணன் &கோ.ரகுபதி..

வெளியீடு                 : புலம், திருவல்லிக்கேணி, சென்னை-5 98406033499

முதல்பதிப்பு              : ஜூன் 2016, மொத்த பக்கங்கள் 120 , விலை ரூ 100....


அண்ணல் அம்பேத்கர். “சாதி என்பது இந்துக்கள் கலந்து உறவாடுவதற்குத் தடையாக உள்ள கல்சுவரோ, கம்பி வேலியோ அல்ல; சாதி என்பது ஓர் எண்ணம், ஒரு மனநிலை. எனவே சாதியை ஒழிப்பது ஒரு பவுதிகத் தடையை அழிக்கும் செயல் அல்ல, மக்களின் எண்ணத்தில் மாற்றம் ஏற்படுத்தும் செயல்’’ எனக் கூறினார்.அந்தச் சாதிய  மனநிலை பார்ப்பனர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா...இல்லை,இல்லை, இடை நிலைச்சாதியினர் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறது என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை கூற இயலும். அந்த சாதிய மனநிலை ஒடுக்கப்படுகிற மக்களாகிய பட்டியல் இனத்தவரிடம் இருக்கிறதா ? என்ற கேள்விக்கு பதில் தரும் புத்தகமாக ஒரு புத்தகம் வந்திருக்கிறது. அதுதான் 'தீண்டாமைக்குள் தீண்டாமை : புதிரை வண்ணார் வாழ்வும் இருப்பும் " என்னும் புத்தகம்.



அண்மையில் வெளிவந்துள்ள புத்தகங்களுள் மிக முககியமானது என நான் நினைக்கின்றேன்.கள ஆய்வுகளாக பல்வேறு ஊர்களில் வசிக்கும் புதிரை வண்ணார் சாதியில் பிறந்தவர்களின் பேட்டியும் மனக்குமுறலும் நடைமுறையில் உள்ள சாதியக்கொடுமை விவரிப்பும்...எழுத்தாளர் இமையம் அணிந்துரையில்  சொல்வதைப்போல " தமிழக, இந்திய சாதிகளைப் புரிந்து கொள்வதற்கு கூடுதல் வெளிச்சத்தைத் தந்துள்ள " புத்தகம் இது..சாதி ஒழிப்பில் விருப்பம் உள்ள அனைவரும் படிக்கவேண்டிய ,மனதில் இருத்திக்கொள்ள வேண்டிய புத்தகம் இது.

"இப்போதெல்லாம் யார் சாதி பார்க்கிறார்கள் அதெல்லாம் ஒரு காலத்தில்தான் இருந்தது' என்று ஒருவர் சொன்னால் அவர் நடிக்கிறார் என்று பொருள்.பள்ளர், பறையர், அருந்ததியர் எங்கே குடியிருக்கவேண்டும் , எந்தப்பாதையில் நடக்கவேண்டும் , எந்தப்பாதையின் வழியாகப்பிணத்தை எடுத்துச்செல்லவேண்டும், எந்தத்தெருவில் தேரை ஓட்டவேண்டும் , எங்கே நின்று சாமி கும்பிடவேண்டும் , எங்கே பிணத்தைப்புதைக்க வேண்டும், எங்கே தண்ணீர் எடுக்கவேண்டும் , எந்தப்பள்ளியில் படிக்கவேண்டும் , எந்த ரேஷன் கடையில் பொருள் வாங்கவேண்டும்  என்பதெல்லாம் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது.இந்த வரையறையின்படிதான் சமூகம் இன்றுவரை இயங்கிக்கொண்டிருக்கிறது.உயர் வகுப்பினரும் இடைநிலை.வகுப்பினரும் பறையர், பள்ளர், அருந்ததியர்களுக்கு என்னென்ன விதமான சமூகக் கட்டுப்பாடுகளை ஒழுக்கவிதிகளை , வரையறைகளை வகுத்துள்ளனரோ, எவற்றையெல்லாம் பின்பற்றக் கட்டாயப்படுத்தப்படுகின்றனரோ அவற்றையெல்லாம் அப்படியே புதிரை வண்ணார் சமூகத்தினர் பின்பற்றவேண்டும் என்று பறையர், பள்ளர், அருந்ததியர் சமுகத்தினர் கட்டாயப்படுத்துகின்றனர்...தாழ்த்தப்பட்டவர்கள்கூட , பிறப்பின் அடிப்படையிலான நிரந்தரமான அவமானத்தைச் சந்திக்கிறவர்கள்கூட , மற்றவர்களைப் பிறப்பின் அடிப்படையில் அவமானப்படுத்துவதில் , இழிவு செய்வதில் எவ்வளவு மகிழ்ச்சி கொள்கிறார்கள் என்பது ஆச்சரியமான உண்மை...ஒடுக்குவது,சுரண்டுவது,இழிவு செய்வது இதுதான் சாதிக்குரிய பெருமைகளாக,அடையாளங்களாக இருக்கின்றன  " என இமையம் தொடர்ந்து எழுதுகின்றார். மிகவும் கவனித்தில் கொள்ள வேண்டிய அணிந்துரை இமையத்தின் அணிந்துரை.மிக விரிவாக அணிந்துரை அளித்திருக்கின்றார்.

இந்த நூலின் முன்னுரையில் ஆய்வுகளை எதன் அடிப்படையில் மேற்கொண்டோம் என்பதனை நூல் ஆசிரியர்கள் விளக்கியுள்ளனர். முதல் அத்தியாயம் " அதிகாரமற்றோரின் படிநிலை- 'அதிகார நிலைப்பாடு' என்னும் தலைப்பில் உள்ளது. இதில் புதிரை வண்ணார் என்ற சாதியின் படிநிலை பற்றியும் அவர்களின் வாழ்நிலை பற்றியும்,அடிமை போன்ற வாழ்க்கை பற்றியும் -'குடும்ப ஒழுங்கு,ஊர் ஒழுங்கு, அடிப்படை உடமைகள், கொத்தும் ஊர்ச்சோறும், அடிமை முறைக்கு ஒப்பான இணைப்பு என்னும் தலைப்புகளின் கீழ் மிக விரிவாக ஆய்வாளர்கள் நேர்முகப்பேட்டிகளோடு கொடுத்துள்ளனர்.

அடுத்த அத்தியாயம் ' தீண்டாமையும் ஒடுக்குமுறையும் சேரியும் வண்ணாக்குடியும் ' என்ற தலைப்பில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது,புதிரை வண்ணார்கள் நடமாட்டமே தடை செய்யப்பட்ட வெளிக்குள் இருந்தது,பண்பாட்டு ஒடுக்குமுறை,தண்ணீரும் தீண்டவண்ணாரும்(புதிரை வண்ணார்),பொருட்களைத் தொட்டாலும் தீட்டு,மரியாதையின்றி அழைத்தல்,பாலியல் ஒடுக்குமுறை,சொத்துரிமை மறுப்பு போன்ற தலைப்புகளில் வரும் செய்திகள் புதிய செய்திகள் மட்டுமல்ல ,சாதி என்பது எவ்வளவு கொடூரமானது என்பதனை புரிந்துகொள்ள உதவும் செய்திகள்.

மூன்றாவது அத்தியாயமாக இருப்பது ' இயக்கமும் போராட்டமும் ' என்னும் தலைப்பில் இருக்கிறது. புதிரை வண்ணார்களுக்கென ஒரு சங்கம் 1940-களில் தொடங்கப்பட்டது என்னும் செய்தி தொடங்கி சாதிச்சான்று பெறுவதற்கு இன்றும் கூட அந்த புதிரை வண்ணார் சாதியைச்சார்ந்தவர்கள் படும் துன்பங்கள் விரிவாக, கள ஆய்வுகளோடு தரப்பட்டிருக்கின்றன.சாதிச்சான்று தருவதற்கு வருவாய்த்துறையைச்சார்ந்த அதிகாரிகள் " உன் வீட்டில் வெள்ளாவி இல்லை, கழுதை இல்லை, துணிகள் இல்லை, நீ வண்ணான் என்று கூறினால் நாங்கள் எப்படி நம்புவது ? " (பக்கம் 66) என்று கேட்டார்கள் என்பதுவும் அதனைத் தொடர்ந்து குலத்தொழில் செய்பவர்களுக்கு மட்டும்தான் புதிரை வண்ணார் என்னும் சாதிச்சான்றிதழ் தருவோம் என்று சொல்வதையும் ஆதாரங்களோடு புத்தகத்தில் பதிவு செய்திருக்கின்றார்கள். " ஒருவர் சாதிச்சான்று பெறுவதற்கு அடிப்படையான தகுதி அந்தச்சாதியில் பிறந்திருப்பதா? அல்லது தன்னுடைய பாரம்பரியத் தொழிலைச்செய்வதா ? " பக்கம் 72 என்னும் கேள்வியையும் எழுப்பியிருக்கின்றார்கள். " சான்றிதழ் பெறுவது என்பது அவர்களின் சாதி அடையாளத்தை மீட்கும் செயல் அல்ல.மாறாக அது ,உயிர் வாழ்வதற்கான போராட்டம் " எனக்குறிப்பிடுகின்றார்கள்.

தொடர்ந்து மதமாற்றம்,இடம் பெயர்வு, வெளி மாநிலம் சென்று பிழைத்தல், வெளி நாடு சென்று பிழைத்தல் போன்றவைகள் மூலமாக எப்படி அவர்கள் அந்தச்சாதி இழிவிலிருந்து மாறிவிட நினைக்கின்றார்கள், அது எவ்வளவு தூரம் சாத்தியமாயிருக்கிறது என்பதையெல்லாம் எடுத்துக்காட்டுகளோடு கொடுத்துள்ளார்கள்.மறைமுகப்போராட்டம்,நிலரிமைப்போராட்டம்,அரசியல் பங்கேற்பு,உற்பத்தி மாற்றம் ஏற்படுத்திய தாக்கம் போன்ற பலவித தலைப்புகளில் கொடுத்துள்ள தகவல்கள் சாதியின் தாக்கத்தை முழுமையாக அறிந்துகொள்ள முடிகின்றது.

காந்தியார் " நாமே துவைக்க வேண்டும், நாமே முடி திருத்திக்கொள்ள வேண்டும் :" போன்று சொன்னபோது தந்தை பெரியார் அனைத்திற்கும் எந்திரங்கள் வரவேண்டுமென்றார். வாசிங்மெசின் என்னும் இயந்திரம்  பல வீடுகளில் வந்தபிறகு புதிரை வண்ணார்கள் வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்களை எண்ணத்தக்கவை. மேல் ஜாதிக்கு வெளுக்கும் வண்ணார்கள் ஆற்றில் மேல்பகுதியில் துவைக்கவேண்டும், அவர்கள் துவைக்கும் பகுதியிலிருந்து வரும் தண்ணீரில்தான் தீண்டவண்ணார் துவைக்க போன்ற கட்டுப்பாடுகள் இருந்தன என்பதெல்லாம் நான் அறியாத செய்திகள். இப்படி நிறைய செய்திகள் இந்த நூலில் உள்ளன.

முடிவாக ஒரு கருத்தை அழுத்தமாக சொல்கின்றார்கள். சாதி இந்துக்கள் தாங்கள் செய்யும் சாதியை அடக்குமுறையை நியாயப்படுத்துவதற்கு இந்த மாதிரியான புத்தகங்களை பயன்படுத்த பார்ப்பார்கள். அவர்களுக்கு " படிநிலை வர்ணாசிரம முறையில் இருக்கின்ற ஒடுக்குமுறையும் (அல்லது தலித் அல்லாத பிற சாதிய அமைப்புகளிடம் உள்ள படி நிலை ஒடுக்குமுறையும் ) தலித் இனக்குழுவில் உள்ள ஏற்றத்தாழ்வும் சமமானதல்ல.அப்படிச்சமமாகப் பார்க்கவும் கூடாது,பார்க்கவும் முடியாது.ஏனெனில் தலித்துகள் மீது தலித் அல்லாதவர்கள் கொண்டுள்ள ஆதிக்கமும்,ஒடுக்குதலின் தன்மையும் வீரியமும் மிகக் கொடுமையானது " பக்கம்(104) எனக்குறிப்பிடுகின்றனர். உண்மைதான் இந்தப்புத்தகம் சாதியை ஒழிப்பதற்கான போராட்டத்தில் இருப்பவர்கள் இன்னும் கூடுதலாக சாதி அமைப்பை, அதன் படி நிலைத்தன்மையை புரிந்து கொள்வதற்கு உதவும் புத்தகம்.

பின் இணைப்பாக ஓம்பிரகாஷ் வால்மீகி அவர்கள் எழுதிய 'சவ ஊர்வலம் ' என்னும் சிறுகதை இடம்பெற்றிருக்கிறது. இந்த நூலின் கருத்துக்களை புரிந்துகொள்வதற்கு அந்தச்சிறுகதை உதவுகிறது. மிகுந்த துயரத்தோடுதான் கதையை வாசித்து முடிக்க நேர்கிறது. இதுதான் எதார்த்தமான நிலை. இந்தச்சாதி என்னும் இழிவை நமது மக்கள் எப்போது முழுமையாக புரிந்துகொள்வார்கள் என்பது பெரிய கேள்விக்குறிதான் என்றாலும் அந்தக் கேள்விக்குறிகளுக்கு பதில் இது மாதிரியான புத்தகங்களே எனச்சொல்லலாம். 

பார்ப்பனர்களுக்கு பிறப்பிலேயே உயர்வைத்தரும் இந்த சாதி அமைப்பை கட்டிக்காக்க வேண்டும் என குருமூர்த்தி போன்ற அய்யர்கள் தவிக்கிறார்கள்.ஆயிரம் உண்டிங்கு சாதி என பம்மாத்தாய் எழுதுகிறார்கள்.இழித்தவாயனாய் கிடைக்கும் பிற்படுத்தப்பட்டவர், தாழ்த்தப்பட்டவர்கள் சிலரை வைத்து சாதி வேண்டும் எனச் சொல்லவைக்கின்றார்கள்.எந்த நிலையிலும் மக்கள் தொகையில் 80,90 சதம் இருக்கும் பிற்படுத்தப்பட்டவர்களும், தாழ்த்தப்பட்டவர்களும் ஒன்றிணைந்து விடக்கூடாது என மிகக் கவனமாக காயை நகர்த்திக் கொண்டிருக்கின்றார்கள். இந்த நிலையில் " ஒடுக்குமுறையை மட்டுமே மேற்கொள்கிற ஒரே சாதி பார்ப்பனர்கள்தான் " என்பதனைப் புரிந்துகொள்ளவும் "ஆதிக்கத்திற்குள்ளாகின்ற சாதியே மற்றொரு புறத்தில் ஆதிக்கம் செலுத்தும் சாதியாகவும் இருக்கிறது " என்பதனைப் புரிந்து கொண்டு அனைவரும் ஒன்றிணைவதற்கான புரிதலையும் இதைப் போன்ற புத்தகங்கள் கொடுக்கின்றன.படிக்க வேண்டிய புத்தகம்.

No comments:

Post a Comment