அண்மையில் படித்த புத்தகம் : சாக்ரடீஸின் சிவப்பு நூலகம்
நூல் ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம், சென்னை-18
முதல் பதிப்பு : டிசம்பர் 2014, விலை ரூ 50, மொத்த பக்கங்கள் 55
நூல் ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு : உயிர்மை பதிப்பகம், சென்னை-18
முதல் பதிப்பு : டிசம்பர் 2014, விலை ரூ 50, மொத்த பக்கங்கள் 55
அண்மையில் சாகித்ய அகாதமி விருது பெற்றுள்ள எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு எனது சார்பாகவும் தமிழ்நாடு பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாகவும் வாழ்த்துக்கள். அவர் எழுதிய புத்தகம் 'சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் '. குழந்தைகளுக்கான நாவல் வடிவலான புனைவு இலக்கியம் இந்த நூல். எஸ்.ராமகிருஷ்ணன் எனத் தலைப்பிட்டு அவரைப் பற்றிக் குறிப்பிட்டுள்ள இரண்டு பக்க குறிப்புகள் பிரமிக்க வைக்கின்றன. சிறுகதைத் தொகுப்புகள்,நாவல்,கட்டுரைத் தொகுப்புகள், திரைப்பட நூல்கள், குழந்தைகள் நூல்கள்,உலக இலக்கியப் பேருரைகள்,வரலாறு,நாடகத் தொகுப்பு, நேர்காணல் தொகுப்பு,மொழி பெயர்ப்புகள்,தொகை நூல்,ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள நூல் என அவரின் படைப்புகளின் பட்டியலே ஒரு சிறிய நூல் அளவில் இருக்கின்றது. அவரின் குழந்தைகள் நூலில் ஒன்றுதான் இந்த சாக்ரடீஸீன் சிவப்பு நூலகம்.
முழுக்க முழுக்க சிறுவர்களுக்குப் புத்தகத்தின் முக்கியத்துவத்தை, பெருமையை விளங்கவைக்க முயலும் ஒரு புத்தகம். பள்ளி விடுமுறை, நூலகத்திற்கு விருப்பமில்லை எனினும் அம்மாவால் அழைத்துச்செல்லப்படும் நந்து,அங்கு கிடைக்கும் காமிக்ஸ் புத்தக வாசிப்பு, அதனை வாசிப்பதால் ஏற்படும் ஈர்ப்பு,அதனை முடிக்க விடாமல் நூலகர் கதவைப் பூட்ட, வீட்டிற்கு வந்த பின்பு கதையின் முடிவாக என்னவாக இருக்கும் என யோசிக்கும் நந்து, நீயே முடிவுகளை கற்பனை செய் என ஊக்கமூட்டும் அம்மா,மறுநாள் தனது கற்பனை முடிவே புத்தகத்தில் இருப்பதை வாசிக்கும் நந்து,நூலகத்தில் கிடைக்கும் நண்பன் பெனி, அவர்கள் இருவரும் இணைந்து செல்லும் மாய உலகமான சிவப்பு நூலகம் எனக் கதை விறுவிறுவெனச்செல்கின்றது.
மாய உலகமான சாக்ரடீஸின் சிவப்பு நூலகத்தின் விதிகள் " நூலகத்தில் உள்ள புத்தகங்கள் விசித்திரமானவை, அவை உங்களோடு பேசக்கூடியவை, சில புத்தகங்கள் உங்களை சரியாக வழிகாட்டும், சில தவறுகள் செய்யத் தூண்டும். எனவே புத்தகங்களைக் கவனமாகக் கையாளுங்கள்.... " இப்படி புத்தகம் முழுக்க பல இடங்களில் புத்தகங்களைப் பற்றிய செய்திகள் வருகின்றன. மாய நூலகத்தில் 8 வாசல்கள் 1.கதை 2.கவிதை 3. வரலாறு 4. விஞ்ஞானம் 5. வாழ்க்கை வரலாறு 6 .பொருளாதாரம் 7. தத்துவம் 8 கணிதம்... எந்த வாசல் வேண்டும் என்பதை படிப்பவரே தீர்மானிக்க வேண்டும் என்று மாய நூலகத்தில் வரும் கோமாளி சொல்கின்றான், " ... உனக்காகப் படி,உன்னைத் தெரிந்து கொள்வதற்காகப் படி. தன்னை அறிந்து கொள்வதற்கு மனிதனுக்கு புத்தகங்களைத் தவிர வேறு துணையில்லை ...." என்று வரும் பகுதிகள் கவனிக்கத்தக்கவை. கதை என்னும் வாசல் வழியே செல்வது என நந்துவும் பெனியும் முடிவு செய்து மாய நூலகத்திற்குள் போகின்றார்கள்.
சாகும் நிலையில் உள்ள புத்தகங்கள், அந்தப் புத்தகங்களைக் காப்பாற்றும் கிழவன், புத்தகத்தைப் படித்துக்கொண்டே பேசும் ஆடு,மிதந்து கொண்டே படித்துக்கொண்டிருக்கும் தொப்பி போட்ட எலி, மீன்கள்- மீன் கொத்திப்பறவைகள், தேன் கதை சொல்லும் ஆமை, புலியைக் கொன்ற கழுதையின் கதை எனத் தொடர்ந்து குழந்தைகளுக்கு ஆர்வமூட்டும் வகையில் கதை செல்கின்றது ஆனால் பேசும் எல்லா விலங்குகளும் புத்தகத்தின் பெருமையையும் சேர்த்தே பேசுகின்றன. கடைசியில் நந்து இவற்றையெல்லாம் கனவு கண்டதாக கதை நீள்கின்றது ." நிறையப் படிச்சா இது போல நிறைய கதை, கட்டுரை எல்லாம் எழுதலாம் " எனப் பாராட்டுகின்றாள் அம்மா. அப்பாவும் பாரட்டுகின்றார். " நந்துவும் பெனியும் ...நூலகத்திற்குப் போய் தவறாமல் படிக்கிறார்கள். நந்து இப்போது வீட்டில் தனக்காக ஒரு நூலகத்தை உருவாக்கிக் கொண்டான். பெனி இப்போது இனிய சொற்களை மட்டுமே பேசுகிறான். பெனியும் நந்துவையும் போல நீங்கள் எப்போது படிக்கத் துவங்குவீர்கள் ?
எப்போது எழுதத் துவங்குவீர்கள் ?
உலகில் உள்ள எல்லா நூலகமுமே மாய நூலகமே.அதற்குள் யாருக்கு என்ன விந்தை கிடைக்கும் என சொல்லவே முடியாது " எனப் புத்தகம் முடிகின்றது.
முன்னுரையில் முதன் முதலில் தான் தனது அப்பாவோடு நூலகத்திற்கு போன அனுபவத்தை விவரித்துள்ளார் எஸ்.ராமகிருஷ்ணன். " இந்தப் புத்தகம் ஒரு சாகசப்பயணம் போல ரகசிய நூலகம் ஒன்றிற்குள் பிரவேசிக்கும் இரண்டு சிறுவர்களைப் பற்றியது. அவர்கள் புத்தகத்தின் முக்கியத்துவத்தை தாங்களே தேடி உணர்கிறார்கள். விந்தையான இந்த அனுபவம் படிப்பவருக்கு சுவராஸ்யம் அளிப்பதுடன் புத்தகங்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்பதே எனது ஆசை " என்று கூறியிருக்கின்றார். எஸ்.ரா. அவரின் விருப்பம் இந்தப் புத்தகத்தில் நிறைவேறியிருக்கிறது.
நமக்குத் தெரிந்த குழந்தைகளிடம் இந்தப் புத்தகத்தைக் கொடுத்து படிக்கச்சொல்லலாம். இந்த நூலை 5,6,7 போன்ற வகுப்புகளில் படிக்கும் குழந்தைகளிடம் கொடுத்து வகுப்பறைகளிலேயே வாசிக்கச்செய்து கலந்துரையாடல் வைக்கலாம். எப்படியேனும் இன்றைய குழந்தைகளைப் படிக்கவைப்பதற்கு சாக்ரடீஸின் சிவப்பு நூலகம் என்னும் இந்தப் புத்தகம் உதவும். பெரியவர்களும் இந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள புத்தக வாசிப்பின் சிறப்புகளைத் தெரிந்து கொள்வதற்கு வாசிக்கலாம்.
நன்றி ஐயா
ReplyDeleteஅவசியம் வாங்கிப் படிப்பேன்
மிக்க நன்றி...படிக்க வேண்டிய புத்தகம் அய்யா...
ReplyDelete