அண்மையில் படித்த புத்தகம் :நிலவுக்குத் தெரியும்
நூல் ஆசிரியர் : சந்திரா இரவீந்திரன்
முதல் பதிப்பு : நவம்பர் 2011
வெளீயீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., நாகர்கோவில்
மொத்த பக்கங்கள் : 119 ,விலை ரூ 120
மதுரை மைய நூலக எண் : 193157
நூல் ஆசிரியர் : சந்திரா இரவீந்திரன்
முதல் பதிப்பு : நவம்பர் 2011
வெளீயீடு : காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ் (பி) லிட்., நாகர்கோவில்
மொத்த பக்கங்கள் : 119 ,விலை ரூ 120
மதுரை மைய நூலக எண் : 193157
தமிழ் ஈழ எழுத்தாளர் சந்திரா இரவீந்திரன் அவர்களின் சிறுகதை தொகுப்பு நூல் இது.தற்செயலாக மதுரை நூலகத்தில் கண்ணில் பட்டது. இந்த நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள உமா வரதராசன் அவர்களின் அறிமுகத்தை சில வரிகள் படித்து, அது பிடித்துப்போனதால் எடுத்துவந்து படித்த புத்தகம். " இந்த நூலின் ஆசிரியை( சந்திரா இரவீந்திரன்) ஒரு கட்டத்தில் தவிர்க்க இயலாத சூழலில் துயரங்களை மனத்தில் சுமந்துகொண்டு நாட்டை விட்டு வெளியேறியவர். இந்த வகையில் அவருடைய கதைகளுக்கு இன்னொரு பரிமாணமும் கிடைக்கின்றது. அவருடைய கதைகள் மூன்று வகையான நிலப்பகுதிகளுடன் தொடர்புபடுகின்றன. அவர் பிறந்து,வளர்ந்த யாழ்ப்பாண மண்.புகலிடம் நோக்கிய பயணத்தில் இடைத்தங்கல் நாடாக அமைந்த நைஜர்,இறுதியாக அவர் சென்றடையும் ஐரோப்பாவில் லண்டன். இந்த அனுபவம் எல்லா எழுத்தாளர்களுக்கும் வாய்ப்பதில்லை.வாய்த்தாலும் அநேகமான எழுத்தாளர்களின் அனுபவங்கள் இலக்கியப்படைப்புகளில் சிறப்பாக வெளிப்படுவதில்லை "ஆம், 9 சிறுகதைகள் என்றாலும் உமா வரதராசன் அவர்கள் சொல்வதுபோல மூன்று நிலப்பகுதியிலும் நடந்த சம்பவங்களின் விவரிப்பாகவே இச்சிறுகதைத் தொகுப்பு அமைந்திருக்கிறது.ஏழு கதைகள் ஈழத்து மண்ணில் ,இரண்டு கதைகள் வெளி நாட்டில் என அமைந்திருக்கிறது இத்தொகுப்பு.
கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக வெளி நாட்டில் வேலை பார்த்தாலும்,தான் பிறந்த மண்ணை விவரிக்கும் பாணி தனித்தன்மையாக இருக்கிறது. 'பால்யம்' கதையில் ஆலமரத்தை விவரிக்கும் வர்ணனையில் ஆரம்பிக்கும் அவரின் கவித்தன்மையான எழுத்து ,கடைசிக் கதை வரை அத்தன்மையிலே தொடர்கிறது. எவ்விடத்திலும் செயற்கை அலங்காரமாக இல்லை. " ஒரு வாழ்க்கையை வாழ்ந்து எழுதியமைக்கும், கற்றறிந்து எழுதியமைக்கும் ,கற்பனையில் கிறுக்கியமைக்கும் ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளன.செயற்கைப் பூவை அடையாளங்காண இயலாத தோட்டக்காரன் எங்காவது இருப்பானா? உயிர்த்துடிப்புடன் ,அனுபவ வாசனையைப் பரவவிட்ட ஈழத்து எழுத்தாளர்கள் வெகு சொற்பம். இந்தக் கதைகள் மூலம் அந்த சொற்பமானவர்களில் ஒருவராக சந்திராவை அடையாளங் காண இயலும். அவருடைய கதையுலகத்தை அனுபவ ஒளி பிரகாசிக்கச்செய்கின்றது. ஓர் இலக்கிய வாசிப்பின் முக்கிய அம்சமே இதுதான்.தன் அனுபங்களை இரத்தமும் சதையுமாகப் பகிர்தல். யதார்த்தமான உலகமொன்றுக்குள் வாசகனுடன் சேர்ந்து பயணித்தல்,சந்திராவின் பெரும்பாலான கதைகள் அவற்றுக்கு உதாரணங்களாக அமைகின்றன. " இதுவும் முன்னுரை அளித்த உமா வரதராசன் அவர்களின் வார்த்தைகள்தான். முன்னுரையே உண்மைகளை கன்னத்தில் அறைந்து சொல்வது போல இருக்கிறது. இலக்கியம் என்ற பெயரில் நடிக்காதீர்கள் என்று நறுக்கென சொல்லியிருக்கிறார்
'பால்யம் ' என்பது முதல் கதை. "கோவில் வீதி ,ஆலம்பழங்களோடு ஆட்டுப்புழுக்கைகளும் கலைந்து சிதறிக்கிடக்க ...மிதிபட்ட புற்களோடு புழுதி படிந்து ,காய்ந்து நொறுங்கிய சருகுகள் கலக்க, ...காற்றில் அசைந்தாடி வந்து விழும் பழுத்த அரசிலைகளின் பட்டு விரிப்பில் வழமையான ஊர்வாசனை பறைசாற்றப்பட்டுக்கொண்டிருக்கும்! " இது ஒரு பத்தி எழுத்து வர்ணனைத் தேன் இப்படியே பத்தி பத்தியாய் ஈழுத்து எழுத்து தமிழில்..பத்மாவதி என்னும் பெண்ணின் அறிமுகம். அவளுக்கு நேரும் அவலம்.விசாலி என்னும் பாத்திரப்படைப்பு மூலம் விவரிக்கப்படுகிறது. பத்மாவதி இப்படிக்கூறுகிறாள்.." ஆம் போகாட்டில் ...அம்மா அடிப்பா,விறகில்லாட்டில் அப்பா அம்மாவை உதைப்பான். சொல்லுக் கேக்கல்லை யென்று அண்ணன்கள் எல்லாம் மாறி மாறி குத்துவான்கள் " அவள் வீட்டில் நிகழும் அவலத்தை இந்த் மூன்று வரிகளில் முழுவதுமாக நூல் ஆசிரியர் சொல்லிவிடுகின்றார் ....பின்பு "பத்மாவதி சமைந்து போனாள் மட்டும் இந்த ஊருக்குத் தெரியும்.சமையும் முன்பே அவள் வாழ்வு கரைந்து கொண்டிருப்பது யாருக்குத் தெரியும் ? " என்று கேள்வியைக் கேட்டுவிட்டு தன் நினைவுகளை இன்றைய மீ டூ போலக் கூறுகின்றார். " எனக்குக் கண்கள் முட்டி வழிந்தன,பயம் உணர்வுகளை மேவி ,உடலையும் பற்றிக்கொண்டது.என் சித்தப்பன் பெரியப்பனிலிருந்து கணக்குப் பாடம் சொல்லித்தரும் கமலநாதன் வாத்திவரை அத்தனை பேரின் விலங்கு முகங்களும் என் முன்னால் நின்று கோமாளிக் கூத்தாடுவது போலிருந்தன. ஸ்பரிசம்...அணைப்பு....நசிப்பு....முத்தம்...பிடுங்கல்....ஓட்டம்...கலைப்பு....களைப்பு....பயம் இவையே பால்யப்பருவத்தின் நிகழ்ச்சி அட்டவணைகளாய் நிர்ப்பந்தகளாய்......." என அவரின் விவரிப்பும் பனைக்காட்டிற்குள் சென்று பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகும் பத்மாவதியோடு தன்னையும் ஒப்பிட்டு விசாலி என்னும் பாத்திரப்படைப்பு பார்ப்பதே 'பால்யம் ' என்னும் சிறுகதை. நீ ஒடுக்கப்பட்ட சாதியென்றாலும்,உயர்ந்த சாதி என்றாலும், ஏழை என்றாலும் பணக்காரி என்றாலும் பாலியல் தொந்தரவு என்பது பெண்களுக்கு பால்யத்தின் கொடுமை என்பதனை விவரிக்கும் கதை.
'தரிசு நிலத்து அரும்பு' என்னும் கதையில் வரும் ராசன் அன்பை அள்ளி வழங்கும் கதாபாத்திரம். புள்ளி வாழைக்கும் கப்பல் வாழைக்கும் வேறுபாட்டை எளிமையாக விளக்கும் விவரம், ஆனால் அடையாள அட்டை என்று ஒன்று இல்லாமல் அப்பா இல்லாமல், அம்மா இருப்பது தெரியாமல் அவள் இறந்த பிறகே தனக்கு அம்மா இருந்தாள் என்று தெரியவந்த ராசன் மனதில் நிற்கிறான் கடைசியில் சிவப்பு கடுதாசிகளோடு சைக்கிளில் செல்லும்போது....
'என் மண்ணும் என் வீடும் என் உறவும் " மற்றும் 'முறிந்த பனை ' இரண்டும் இந்திய அமைதிப்படை ஈழத்தில் இருந்தபோது நிகழ்ந்தவைகளை விவரிக்கும் கதைகள்.'துயரத்தின் வடிவம் ஒப்பாரியாகத்தான் இருக்க வேண்டுமென்பதில்லை.மனதில் உறைந்துபோன கண்ணீரின் பாறைகளாகவும் இருக்கக்கூடும் " ஆம் படிப்பவரையும் உறையவைக்கும் கதைகள். தன் மகனை இழந்த துயரத்தைக் கூட சத்தம் போட்டு அழ முடியாமல் தவிக்கும் தாயும் அந்த சூழலைப் பற்றிச்சொல்லும் 'முறிந்த பனை ', அக்காவும் தங்கையும் இந்திய அமைதிப்படையிடம் பட்டு அல்லல் உறும் நிகழ்வுகளும், அவர்களின் துயரங்களும் கடைசியில் தலைமைப்பொறுப்பில் உள்ள 'சிங்'கால் அந்த கொடுமையான இக்கட்டிலிருந்து தப்பும் கதை சொல்லும் 'என் மண்ணும் என் வீடும் என் உறவும் ' என்னும் கதையும் மிகக் கனமான கதைகள் இத்தொகுப்பில்....கண்ணீரை வரவழைக்கும் கதைகள் மட்டுமல்ல, இவ்வளவு இன்னல்பட்ட பின்பும் தமிழெனுக்கென்று ஒரு நாடு என்னும் தமிழ் ஈழம் கனவாய் இருக்கும் எதார்த்தமும் நெருப்பாய் சுடுகிறது.களத்தில் நின்ற தம்பியின் தம்பிகளின் தியாகங்களைப் புரிந்துகொள்ள இக்கதைகள் உதவுகின்றன.2009-க்கு முன்பு எழுதப்பட்ட கதைகள் இவை.
'நெய்தல் நினைவுகள் ' என்னும் கதை கடல் அலைகளை, அதன் அழகை, ஆழி அலையாய் உயிர்களைச்சுருட்டிய் கோரத்தை மொத்தமாக ஒரு உரைநடைக் கவிதையாய் சொல்லும் கதை. இவரின் கதைகளைப் படிக்கிறபோது அண்மையில் மறைந்த தமிழ்க் கவிஞர் நா.காமராசன் நினைவுக்கு வருகிறார். அவ்வளவு உவமைகளும் ஒப்பிடுகளும்..
'காற்று ' என்னும் கதை அவர் இடையில் தங்கிய 'நைஜீரியா ' நாட்டின் அனுபவமாக இருக்கக்கூடும்.பள்ளிவாசல்கள், பெண்கள், இடைத்தரகர்கள்,அவர்களைப் பற்றிய விவரணைகள்,நைல் நதி எனத் தனி அனுபவ விவரிப்பாக இக்கதை இருக்கிறது.
இலண்டன் மாநகரம் பற்றியும் அதில் நிகழும் நிகழ்வைகளைப் பற்றியும் சொல்லும் கதை 'கண்ணில் தெரியும் ஓவியங்கள்' ....கண்ணில் தெரிந்த ஓவியத்தைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ள முடியாமல்,புரிந்து கொள்ள முயற்சிக்கும் வேளையில் தன் மகன் 'அருணை'க் காணவில்லை என்று பதறுவதில் இருந்து ஆரம்பிக்கும் கதை புரிந்து கொள்ள முடியாமல் இருக்கும் சில மனிதர்களைப் பற்றிய விவரிப்பாக விரிகின்ற ஒரு வேறுபட்ட கதை.
இக்கதைகளை பொழுதுபோக்காக வாசிக்க இயலாது,வாசித்து முடித்தபின்பு நம்மையும் ஒரு குற்ற உணர்ச்சிக்கு உள்ளாக்கும் கதைகள் இவை.தமிழ் நாட்டிற்கும் தமிழ் ஈழத்திற்கும் தூரம் வெகு குறைவு என்றாலும் நடந்த நிகழ்வுகளை அறிந்து கொள்வது கடல் அளவு தூரமாக இருக்கிறது. இத்தூரத்தைக் குறைக்கும் ஒரு நல்ல முயற்சியாக 'நிலவுக்குத் தெரியும் ' என்னும் இந்தச்சிறுகதைத் தொகுப்பு எனக்குப் படுகின்றது..
வா.நேரு அவர்களுக்கு அன்பு வணக்கம்.
ReplyDeleteதங்கள் வலைத்தளத்தில் எனது நிலவுக்குத் தெரியும் தொகுப்பு பற்றி மிக நுணுக்கமானதும், ஆழமானதுமான பார்வையொன்றை பதிய விட்டிருக்கிறீர்கள். மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
தமிழ்நாட்டு இலக்கியவாதிகளில் முக்கியமான ஒருவரின் பார்வையில் அத்தொகுப்பு மிகுந்த புரிந்துணர்வுடன் தெளிவாக அலசப்பட்டிருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது.
மிக்க நன்றி.
அன்புடன்
சந்திரா இரவீந்திரன்