Sunday, 27 October 2019

பாலியல் விடுதலையே ...பெண் விடுதலை...

பாலியல் விடுதலையே ...பெண் விடுதலை

               முனைவர் வா.நேரு, தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்.



'பெண் ஏன் அடிமையானாள் ?' என்னும் தந்தை பெரியாரின் புத்தகம் இலட்சக்கணக்கில் விற்பனை ஆகியிருக்கின்றது. அந்தப் புத்தகம் ஆங்கிலம் போன்ற பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.பல மேடைகளில் மேற்கோள்களாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது, சுட்டிக்காட்டப்படுகின்றது. ஆனால் அந்தப் புத்தகத்தின் கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு தனது வாழ்க்கை அனுவங்களையும் இணைத்து ஒருபுத்தகம் வருமா? அதுவும் ஒரு பெண்ணால் எழுதப்படுமா? என்னும் எதிர்பார்ப்பு நம்மைப் போன்றவர்களுக்கு இருந்தது. அந்த எதிர்பார்ப்பினை நிறைவு செய்யும் விதமாக ஒரு புத்தகம் வெளிவந்திருக்கிறது. அந்தப்புத்தகத்தின் தலைப்பு 'அக விடுதலையே பெண் விடுதலை' என்னும் புத்தகம். புத்தக ஆசிரியர் ஓய்வு பெற்ற கல்லூரிப்பேராசிரியர்  முனைவர் நா.நளினிதேவி அவர்கள். ஓய்வு பெற்ற பல கல்லூரிப் பேராசிரியர்கள் பெண்களை அப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்க வேண்டும் எனும் வெற்று போதனைகளால் நிரப்பிக்கொண்டிருக்கும் வேளையில் 'பாலியல் விடுதலையே பெண் விடுதலை ' எனும் நோக்கத்தில் பேசாப் பொருளை நான் பேசத் துணிந்தேன் என்று துணிவாக விரிவாக எழுதப்பட்டிருக்கும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.சென்னை, கைத்தடி பதிப்பகம் வெளியிடப்பட்டு அண்மையில் வெளிவந்துள்ள நூல் .



இந்த நூல் வெளிவர இருந்த நிலையில் தன்னுடைய முக நூல் பக்கத்தில் "" அக விடுதலையே பெண்விடுதலை" எனும் நூலின் நோக்கம் என்ன ? இதோ! "மற்றவர்கள் திருப்தியிலும் சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதற்கெல்லாம், "இது காதல்அல்ல, "அது "காதலுக்கு விரோதம்", அது "காம இச்சை," இது "விபச்சாரம் " என்பது போன்ற அதிகப் பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒருவிதப் பொறுப்பும் இல்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப்பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்றுப் பார்த்து விடலாம் என்றே இதைப் பற்றி எழுதலானோம்" என்ற பெரியாரின் நோக்கமே இந்நூலின் நோக்கம்!( பெண் ஏன் அடிமையானாள்?) என்று நோக்கத்தை மிகத் தெளிவாக வரையறுத்துக்கூறுகின்றார்.அதனால்தான் நூலுக்கு அணிந்துரை அளித்துள்ள தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் "'பெண் விடுதலை பற்றி வந்துள்ள நூல்களில் ஆழம் மிக்கதாகவே ஒளிர்கிறது. ஒரு பெண்ணே பெண் விடுதலை பற்றி எழுதுவதுதான் சரியானது...." என்று குறிப்பிடுகின்றார்.




யானை விடுதலை பெற வேண்டுமானால் தன்னை எதனால் கட்டிப்போட்டிருக்கிறார்கள் என்னும் புரிதல் யானைக்கு வேண்டும்.சிறுவயதில் போடப்பட்ட கயிற்றினாலோ, சிறு சங்கிலியாலோதான் நம்மைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள் என்று யானை புரிந்துகொண்டால், தனக்குப் போடப்பட்டிருக்கும் தளைகளை ஒரு நொடியில் உடைத்துக்கொண்டு வெளியேற முடியும். அப்படி பெண்களை இந்தச்சமூகம் எதனால் பூட்டுப்போட்டு பூட்டியிருக்கிறது,எப்படி எப்படி எல்லாம் பூட்டுப்போடுகிறது  என்பதனையும் அதனை எப்படி உடைத்து வெளியே வரவேண்டும் என்பதனையும் 'ஐம்புலன் பூட்டும் கட்டுடைத்தலும் ' என்னும் முதல் தலைப்பில் விரிவாக எழுதியிருக்கின்றார்.சமூகத்தில் நிலவும் பாலியல் கட்டுப்பாடுகளை  பெண்களே, அறிவீர்களா நீங்கள் ? உங்களை (பெண்களை) எல்லா வகையிலும் பாலியல் நோக்கில் அடிமைப்படுத்தியிருக்கிறது ஆண்களால் ஆன இந்தச்சமுதாயம். 'பெண்ணானவள் தன் காதலையும் காமத்தையும் பேசக்கூடாது என்றும் அது குறித்த எண்ணங்களையும் உணர்வுகளையும் உரியவர்களிடம் கூட வெளிப்படுத்தக்கூடாது என்றும் பெண்ணின் ஐம்புலனுக்கும் பூட்டு போடப்பட்டிருக்கிறது' என்று குறிப்பிட்டு 'பெண் விடுதலைக்கு  இடையூறான சிக்கல் இரண்டு பிரிவுகளாகக் கிளைத்து நிற்கின்றது. ஒன்று அகச்சிக்கல்,மற்றொன்று புறச்சிக்கல்.' என்பதனைச்சுட்டி அவை எவையெவை என்பதனை அழுத்தமான சொற்களால் எழுதியிருக்கின்றார்.

'பெண் தனக்காக படைக்கப்பட்டவள் என்று ஆண் எண்ணுவது போலவே ,பெண்ணும் தான் ஆணுக்காகவே பிறந்தவள் என்றே நம்புகிறாள்' என்பதனைக் குறிப்பிட்டு 'பெண் ,எவ்வளவு படித்திருந்தாலும் ,எவ்வளவு உயரிய பணியில் இருந்தாலும் ,பெரும் பணம் படைத்தவராக இருந்தாலும் திருமணம் ஆகவில்லை என்றால் அவளுக்குச்சமுதாயத்தில் உரிய மதிப்பு இல்லை என்று சிலர் நினைக்கிறார்கள்.' என்று குறிப்பிட்டு, பெண்கள் வெறும் 'பிள்ளை பெறும் எந்திரமாக' மட்டுமே சமூகத்தால் பார்க்கப்படுகின்றார்கள் என்பதனையும் எல்லாவற்றையும் விடவும் பெண்கள் தாம் அடிமைகளாக இருக்கின்றோம் என்ற உணர்வே இன்றித் தாம் எந்த வகையிலும் ஆணால் பாதுகாக்கப்படவேண்டிய ஒரு பொருளாகவே கருதுகின்றனர். கற்பு என்ற கற்பனைச்சிலுவை அவள் மீது சுமத்தப்பட்டுள்ளதே இதற்கெல்லாம் காரணம் ." என மிகச்சரியாகவே குறிப்பிடுகின்றார். 'அறியாமையும் ஆணவமும்', 'கற்பின் விளக்கமும் கற்பனை இறுக்கமும்',' திரைகளும் சுவர்களும்', 'ஆரவாரப்பட்டங்களும் அடிமை வாழ்வும்', 'கேலி,கிண்டலும் கிளர்ந்தெழும் சினமும்' என்னும் உட்தலைப்புகளில் விவரிக்கும் கருத்துக்களில் கனல் தெறிக்கிறது..ஏன் இப்படி பெண்கள் அடங்கிப்போய்க்கிடக்கிறார்கள் என்னும் கோபமும் சொற்களாய் வெடித்திருக்கிறது.

'இலக்கியங்களையும் புராணங்களையும் இதிகாசங்களையும் புனைந்தவர்கள் ஆண்கள். எனவே அவற்றின் அடிக்குரலாக பெண்ணியத்துக்கு எதிரான குரலே இழைகின்றது.ஆண்களை உயர்த்தியும் பெண்களைத் தாழ்த்தியும் இவர்களால் படைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன ' எனக் குறிப்பிட்டு பெண்களுக்கு எதிரான படைப்புகளைப் பட்டியலிட்டு எழுதுகின்றார். மகாபாரதக் கதையில் வீட்டுமன்(பீஷ்மன்) உடன் போராடி அவன் சாகக் காரணமான அம்பை, இராமயணக்கதையில் இராம,இலக்குவர்களை எதிர்த்து போரிட்ட தாடகை, அய்யம் கொண்ட இராமனை விட்டுத் தம் குழந்தைகளுடன் மீண்டும் காட்டிற்கே திரும்பிய சீதை,தன்னை கொல்லக்கருதிய துணைவனைக் கொன்ற குண்டலகேசி என எதிர்க்குரல் எழுப்பிய படைப்பு மாந்தர்களை வரிசைப்படுத்திக் கொடுத்துள்ளார். மறு வாசிப்பு வாசிக்கலாம் இந்தப்பெண்களின் கண்ணோடத்தில் காப்பியங்களை, கதைகளை. தமிழ்ப்பேராசிரியர் என்பதால் நிறையப் படைப்புகளை பெண்ணியமும் இன்றைய பெண் படைப்பாளரும் என்னும் தலைப்பில் கொடுத்துள்ளார். பாரதிதாசன் கூடப்பெண் ஆண் துணையின்றி வாழமுடியும் என்று பாடவில்லை, பாரதி ஆரியம் உயர்வு என்ற கருத்துடன் ,வேதங்களில் பற்றுக்கொண்டவனாகவே இருந்தான். ஆரியமும், வேதமும் பெண்ணுக்கு எதிரானவை என்பதை சுட்டிக்காட்டுகின்றார்.தான் மனுசி,தனி ஓர் அலகு,தனக்கென்று ஓர் இருப்பு உள்ளது என்ற விழிப்புணர்வைப் பெண் கவிஞர்களின் கவிதைகளில் காண முடிகிறது எனக்குறிப்பிட்டு, பெண் கவிஞர்கள் சங்கரி,சன்மார்க்கா,சிவரமணி,சுபத்திரா,நர்மதா,பாரதி கண்ணம்மா,வத்சலா,வித்யா,றஞ்சனி,ஜெயராணி போன்றவர்களின் கவிதைகளைக் குறிப்பிட்டு 'மானமிகு வாழ்வே ஊனமற்ற உயிர் வாழ்க்கை ' எனக்குறிப்பிடுகின்றார்.

'அவிழும் முடிச்சுகள் ' எனக்குறிப்பிட்டு 'பெண் சமுதாயத்தில் ஏற்பட்டு வரும் சிந்தனை மாற்றங்கள்,அவர்களுக்கு வகுக்கப்பட்டிருந்த இலக்கணங்களை உடைக்கத்தொடங்கி விட்டன. அவர்களுக்கு  மறுக்கப்பட்டிருந்த வெளியுலகின் வாசல்,அவர்கள் முன் தன் கதவுகளைத் திறந்துள்ளமையால்,புதிய காற்றையும் புதிய உலகையும் காணத்தொடங்கிவிட்டனர் ' எனக்குறிப்பிடுகின்றார்.' நாட்டைக்காக்கும் படையிலிருந்து விண்கலம் வரை அனைத்துத் துறையிலும் பெண்கள் தம் ஆற்றலை வெளிப்படுத்துகின்றனர்.ஆனாலும் ...ஆண்களை விடவும் பெண்களுக்கு ஊதியம் குறைவு,பணி செய்யும் இடங்களிலும் பாலியில் தொல்லை,மிகுதியான வேலை எனப் பல நூறு சிக்கல்கள் ' என்பதனை விவரித்துக்கூறியிருக்கின்றார். 'பாலியல் சின்னம் என்பதற்கு அப்பாற்பட்டுப் பெண்ணும் தம்மைப்போன்ற மனிதரே என்ற மனநிலை உருவாக வேண்டும். அப்போதுதான் வீடுகளில்,தெருக்களில் பொது இடங்களில்,பேருந்துகளில்,கோயில்களில்,தொடர்வண்டிகளில் பெண்கள் எந்தச்சிக்கலும் இன்றிச்சமன்மை நிலையுடன் உலவ முடியும். ஆண்களால் இன்னலுக்கு ஆளான பெண்கள் எந்தச்சமுதாய அவதூறும் அச்சமும் இன்றி வாழும் நிலையே பெண் விடுதலையின் ஒரு கூறு ஆகும் ' எனப் பெண் விடுதலை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதைச்சொல்கின்றார்.

இத்தனை காலமாகப் பெருகிவரும் கல்வியும் அறிவியல் வளர்ச்சியும் பெண்ணுக்கு விடுதலை தரவில்லை என்றால் அவை எல்லாம் எங்கே போகின்றன? என்ன ஆயின? அவற்றால் என்ன பயன் ? பெண் விடுதலை என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொள்வதிலேயே பல சிக்கல்கள்! பெண் எல்லா நிலையிலும் எல்லா வகையிலும் ஆணைப்போன்று அனைத்து உரிமைகளையும் எந்த ஒரு சமுதாய அவதூறோ,சமுதாய அச்சமோ இன்றிச்சமமாக இருக்கவேண்டும் என்று கொள்ளலாம். இந்த எல்லா வகையிலும் ,எல்லா நிலையிலும் என்பதில் பாலியல் நழுவி விடுகின்றது,அல்லது விடப்பட்டு விடுகின்றது. " எனக்குறிப்பிட்டு பெண்விடுதலையும் பாலியல் தளையும் என்பதனை விவரிக்கின்றார். 'பாலுணர்வு இயற்கையும் கற்புக்கல்லறையும்' என்று தலைப்பிட்டு. 'பாலுணர்வு,பாலியல் என்றாலே சொல்லக்கூடாத சொற்கள்,பேசக்கூடாத பொருள் என்றே கொள்ளப்பட்டு வருகின்றது. ஒரு பக்கம் இழிவு, மற்றொரு பக்கம் தூய்மை என்னும் இரட்டை முகங்கள்! பசி, நீர்,வேட்கை,உறக்கம் போன்றதே வெகு இயல்பான ஒன்று பாலுணர்வு. கட்டுப்படுத்தப்பட்டு மறைவாகவும், மறையாகவும் வைத்திருப்பதால் '....சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை, பெண் அடிமைக்கு அடிகோலும் மடத்தனத்தை 'பாலுணர்வும் சுரப்பியும்'; 'பூப்பு நீராட்டு விழாவும் இழிவும்',பாலியலும் எதிர்மறை விளைவும்' போன்ற உட்தலைப்புகளுக்குள் விவாதங்களாக வைத்திருக்கின்றார். 

" பெண் விடுதலைப் போராளிகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். மரபின் அடிப்படையில் ,கற்பின் அடிப்படையில் பெண் விடுதலை வேண்டுபவர் ஒரு சாரார். தாவது ஆணுக்கும் பெண்ணுக்கும் கற்பு பொதுவாக்கப்படவேண்டும் என்பவர். மற்றொரு சாராரோ பெண்மொழி எனத்தாமும் ஆணின் கொண்டு தம் உடலையும் ஆணின் உடலையும் புனைந்து உரைத்துக்கொண்டு,கலவி இன்பக்கூறுகளை விரிவாகக் கூறியும்,ஆண்களை வெறுத்தும் பழித்தும் எழுதுகின்றனர்.ஆனால் இருசாராருக்கும் பொதுவான இவ்வுணர்வை ஆணுக்குப் போலவே தமக்கும் உரிமை என்ற முறையில் உரிமையுடன் வெளியிட்டு வளப்படுத்தும் முறையைக் கூறவில்லை.ஆண்,பெண் உறுப்புகளைப் புனைந்து பாடுவது காதலும் அன்று ; விடுதலையும் அன்று " என்பதனை உணர்த்துகின்றார்.

" சமுதாயக் கட்டமைப்பு ,சமுதாய நிறுவனம் எனும் பெயர்களில் திருமணம் புதைகுழியாகவும்,குடும்பம் உயிருடன் பெண்கள் புதைக்கப்படும் கல்லறையாகவும் இருப்பதை மாற்ற வேண்டும். முன்பின் அறியாத ஆண்,பெண் திருமணத்தைத் தடுத்தால் பல பெண்களின் மன அழுத்தம் ,கொலை,தற்கொலை,பொய்யான வாழ்க்கை மறையும். பெண் தன் அகவுணர்வுகளைத் தயக்கமின்றி வெளிப்படுத்தித் தன்னிச்சையுடன் வாழவேண்டும்.' என்று குறிப்பிடும் இந்த நூலின் ஆசிரியர் முனைவர் நளினிதேவி 'கற்பு ' என்னும் கோட்பாட்டை,குடும்பம் என்னும் அமைப்பை அடித்துத் துவைத்து கருத்துக்களால் வெளுத்து வாங்கியிருக்கிறார். நூலின் இறுதியில் பெண் விடுதலைக்கான முழுமையான தீர்வுகளைக் கண்டறிய என்று தனது கருத்துக்களைத் தொகுத்து கொடுத்துள்ளார்.

புத்தகத்தைப் படித்துமுடித்து விட்டு திராவிடர் கழகத்தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொடுத்துள்ள அணிந்துரையை மீண்டும் படித்தபொழுது " அறிவுச்சாளரத்தை  அடைத்துள்ள அழுக்குப் பொருள்களைக் கழுவி ,வெளியேற்றிப் படித்தால் ,இதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடியும்,....வெறும் அறிவு மட்டும் போதுமானதல்ல துணிவும் இதற்குத் தேவையாகும். விமர்சனங்களை எதிர்கொள்ளும் தெம்பும் தேவைப்படும். துணிச்சலும் அறிவும் கைகோத்து இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது....தந்தை பெரியாரின் கருதுகோளினை நூலாசிரியர் துணைக்கழைத்துக்கொண்டது மிகச்சரியான பார்வையே !....இந்த சூழலில்தான் பெரியார் தம் கைத்தடியை ஊன்றிக்கொண்டு நம்மை வழி நடத்துகிறார்....சுருக்கமாகச்சொல்லப்போனால் தந்தை பெரியார் அவர்களின் மூலக்கருத்துக்கு பொழிப்புரை எழுதி இறுதியாகக் கருத்துக்களை எழுதியதுபோல் உள்ளது இந்நூல்.பாராட்டுகள்.!
பெண்கள் மத்தியில் பெரும் பாய்ச்சலோடு பரவ வேண்டும் இந்நூல் என்பதே நமது கருத்து. பாராட்டுகள் ....." எனும் பாராட்டுரை புத்தகத்தை அப்படியே படம் பிடித்து காட்டியது போல் இருந்தது. ஒரு துணிச்சலான பெண்மணியால்  மிகச்சரியான பார்வையோடு எழுதப்பட்டுள்ள நூலான 'அக விடுதலையே பெண் விடுதலை' என்னும்  இந்த நூலைப் படிப்போம். பரப்புவோம். விவாதிப்போம்.பெண் விடுதலையின் தேவையைப் புரிந்துகொள்வொம்.



நன்றி : விடுதலை 24.10.2019 

3 comments:

  1. மானமிகு முனய்வர்,24.10.19 விடுதலய் இரண்டாம் பக்கத்தில் வெளியாயிருந்த நளினிதேவி அவர்கள் எழுதிய -பொத்தகத்தின் தங்களது நெடிய விமர்சனக் கட்டுரய்யினய்ப் படித்து முடித்த கய்யோடு இந்த கட்செவி மடல் ! அக விடுதலய்யே பெண் விடுதலய் புத்தகத்தினய் நானும் என் குடும்பத்துப் பெண்களும் படித்து,மனதிலிறுத்தி,நூலக சேமிப்பாக வய்கத்தக்கதாக (புவன் வீட்டில்) வி.பி.பி.அஞ்சலில் அனுப்பித்தர இயலுமா ?(தமிழ் அரசிக்கு தனிப்படி) //இப்பொடியொரு பொத்தகம் வெளிவராதா? என ஏங்கிக் கொண்டிருந்தவர்களில் நானும் ஒருவன்- திரூவூர் கோரா- கட்செவியில்

    ReplyDelete
  2. தோழர், வணக்கம். தங்களின் மதிப்புரை படித்ததும். அறிவுத்தினவு எடுக்கிறது. நூல் கிடைக்கும் வழிவகைகளை தெரிவித்து உதவுங்கள். நன்றி. முனைவர் பூ.மணிமாறன்.

    ReplyDelete
  3. சிறந்த புத்தகத்திற்கு அருமையான திறனாய்வு.

    ReplyDelete