நல்லாசிரியார்கள்
நாம் வாழும் நாட்கள் முழுவதும்
நம்மோடுதான் வாழ்கிறார்கள்
இருந்தாலும் இறந்தாலும்....
அவர் எனக்கு கல்லூரியில்
முதல்வராக இருந்தது
ஏறத்தாழ 38 ஆண்டுகளுக்கு
முன்னால் திருச்செந்தூரில்....
அவர் மறைந்தது 2003-ல்
ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்கு முன்னால்
இருந்தாலும் மார்ச்-8 என்றால்
அவரின் நினைவுகள் அலை
அலையாய் மோதுகிறது....
நெருக்கமாய்ப் பழகியவர்கள்
அறிவார்கள் அவரை
சில நேரம் நெருப்பாகவும்
சில நேரம் ஆழ்கடலாகவும்
உரையாடலில் வல்லவர் அவர்....
எதையும் அவர் பெற்ற பிள்ளைகளுக்கு
பெரிதாய்ச்சேர்த்து வைக்கவில்லை
ஆனால் எங்கள் வாழ்வும் வளமும்
உங்களால் பிரின்ஸ்பால் என
உளமாற வணங்கும் முன்னாள்
மாணவர்கள் உலகம் முழுக்க இருக்கிறார்கள்...
இளம் அறிவியல் முடித்துவிட்டு
மேலே படிக்க பணமில்லாமல்
ஆடு மேய்த்தவரை அழைத்துவந்து
முதுஅறிவியல் படிக்கவைத்து
கல்லூரியிலே வேலை கொடுத்து
ஐ.ஆர்.எஸ். ஆக்கி அழகு பார்த்தவர் அவர்....
தனக்கு உதவிய மாமனிதரை மறவாமல்
தான் பெற்ற பிள்ளைக்கு
தன் ஆசிரியர் பெயரான கனக எனும்
பெயரைச்சேர்த்து நன்றி சொன்ன
இந்நாள் சிவகாசியின்
பெரும் தொழிலதிபர்....தனசேகரன்
எங்கள் கல்லூரி முதல்வரின் மாணவர் அவர்..
தன் வாழ்வில் கிடைத்திட்ட
தன்னம்பிக்கைக்கு விதை அவர்
பேராசிரியர் பதவியை உதறித்தள்ளி
துணிவாய்த் தொழில் தொடங்கி
சுயமாய் வளர எனக்கு
சுய நம்பிக்கை தந்தவர் அவர்
என முன்னாள் மாணவர்
மதுரை கல்யாணசுந்தரம் வணங்கிய
எங்கள் கல்லூரி முதல்வர் அவர்...
எதிர்மறையாக வாழ்வை
வீணாக்கிச் சுற்றி
படிக்காத மாணவனைக் கூட
தான் காட்டும் அன்பால்
நேர்மறையாக மாற்றிய பண்பாளர்....
பல ஐ.ஏ.எஸ்.,ஐ.பி.எஸ்..கள்
உருவாகக் காரணமாய் களம் அமைத்தவர் அவர்..
உயர் பதவிகளைப் பற்றிக்
கனாக் கூட காணாத
கிராமத்து மாணவர்களை
உயர் பதவிகளில் அமர வைத்தவர் அவர்..
எப்போதும் மாணவர்கள்
மாணவர்கள் எனச்சிந்தித்தவர் அவர்...
அதற்கு மாற்றாக எவர் செய்தபோதும்
தன் வாழ்வை என்னாது
எதிர்க்குரல் கொடுத்தவர் அவர்.....
நிறுவனத்தை வளர்த்தெடுக்கும்
கைதேர்ந்த பொறியாளர் அவர்..
பின் தங்கிய பகுதிகளில்
கல்லூரியை வளர்ப்பது எப்படி?
அது அவர் எழுதிய புத்தகம்தான்.....
அவரின் அனுபவத்தின்
மொத்த சாரமது...
முப்பதாண்டுகள் கல்விப்பணியை
பிழிந்திட்ட கல்விச்சாறு அது...
இன்றும்கூட தனது கல்லூரியை
வளர்த்தெடுக்க விரும்பும்
எவருக்கும் கல்வி சாசனம் அது....
தனித்துவமிக்க காந்திய முதல்வர் கனகசபாபதி
எனும் புத்தகம் எழுதி தனக்கு முன்னால்
முதல்வராக இருந்தவரின் புகழை
எழுத்தில் வடித்த ஆதித்தனார் கல்லூரியின்
முன்னாள் முதல்வர்
டாக்டர் மா.பா.குருசாமி அவர்கள் இல்லை இன்று...
ஆனால் அவர் வடித்த புத்தகத்தின்
ஒவ்வொரு பக்கமும் தனித்துவத்துவத்தின்
தன்மை பேசும் பக்கங்களாய்
தனித்துவ காந்தியவாதிதான் அவர்
ஆனால் காலெமெல்லாம்
அவர் வாழ்ந்த காலத்தில்
அருகில் இருந்தவர்கள் பெரியாரியல்
பேசும் பேராசிரியர் கி.ஆழ்வாரும்..
இஸ்லாம் மார்க்கப்படி வாழ்ந்திட்ட
பேராசிரியர் இரசாக்கும்தான்....
சாதியென்றோ மதமென்றோ
ஆத்திகன் என்றோ நாத்திகன் என்றோ
தள்ளிவைக்கா மனித நேய இதயம்
துடிக்க மறந்திட்ட நாளிது...
மார்ச்-8 என்றாலே
தாயாய் ,தாரமாய் ,தோழியராய் அமைந்திட்ட
பெண்கள் இல்லாது நம் வாழ்க்கை இல்லை என
மகளிர் தினத்தை வாழ்த்தும் கையோடு
கல்விக்கு உயர்வாய் மாணவர்களுக்கு கனிவாய்
நடந்திட்ட எங்கள் கல்லூரி
முன்னாள் முதல்வர் டாக்டர்
இரா.கனகசபாபதி அவர்களின்
நினைவுகள் நீரோட்டமாய் ஓடும் நாளிது!....
வாழ்க உங்கள் புகழ்! வாழிய உங்கள் நினைவு !
வா.நேரு,08.03.2020
நன்றி உணர்வோடு எழுதப்பட்ட கவிதை.
ReplyDeleteவெகு சிலருக்கே நல்ல ஆசிரியர்கள் கிடைக்கிறார்கள்.
உங்கள் முதல்வர் கனகசபாபதி ஐயாவை வணங்குகிறேன்.
சம்பிரதாயத்திற்காக கொண்டாடப்படும் மகளிர் தினத்தின் மீது எனக்கு எந்த ஈர்ப்பும் இல்லை....
அண்ணன் சு.கருப்பையா...வாசிப்போர் களம் வாட்சப் குருப்பில்
மிக்க நன்றி...
ReplyDeleteCongratulation sir, today 9th March is my birthday sir 09 03 1973
ReplyDelete