Sunday, 18 April 2021

மதுரையில் திராவிடப்பொழில் குறித்து எழுச்சியுடன் நடைபெற்ற விடுதலை வாசகர் வட்ட சிறப்புக்கூட்டம்

 


மதுரை யானைக்கல்லில் உள்ள எஸ்.ஏ.எஸ். அரங்கில் 11.04.2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 முதல் 7.30 வரை விடுதலை வாசகர் வட்டம் சார்பாக சிறப்புக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்று தோழர் அழகுபாண்டி உரையாற்றினார்.தலைமையேற்ற மதுரை,விடுதலை வாசகர் வட்டத்தின் தலைவர் இராசேசுவரி இராமசாமி அவர்கள் 'திராவிடப்பொழில்' என்னும் இந்த ஆய்வு இதழ் இன்றைய தேவை என்றும் ,தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலில் ,திராவிடப்பொழிலின் முதல் இதழ் மிகச்சிறப்பாக இருப்பதாகக்குறிப்பிட்டு கட்டுரைகளைப் பற்றி உரையாற்றி,விடுதலை வாசகர் வட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்துவோம் என்று குறிப்பிட்டார். 'திராவிடப்பொழில் ' முதல் இதழின் சிறப்பு என்ற தலைப்பினில் உரையாற்றிய தோழர் பா.சடகோபன் அவர்கள் இதழின் வடிவமைப்பு மிக அழகாகவும் நேர்த்தியாகவும் இருப்பதாகக் குறிப்பிட்டார். 

அய்யா ஆசிரியர் அவர்களின் வாழ்த்துரை என்பதே ஓர் ஆய்வுக் கட்டுரையாக இருப்பதைக் குறிப்பிட்ட அவர்,ஆய்வுச்செய்திகள் பல அந்தக்கட்டுரையில் இருப்பதை விளக்கமாகக் குறிப்பிட்டார். அய்யா பேரா.ப.காளிமுத்து அவர்களின் கட்டுரையைக்குறிப்பிட்டு வரலாற்றுத்தகவல்களோடு 'தமிழ் நாடு ' என்னும் பெயர் குறித்து அறிந்துகொண்டோம் எனக்குறிப்பிட்டு மற்ற கட்டுரைகளைப் பற்றியும்  உரையாற்றினார்.

வாழ்த்துரை வழங்கி உரையாற்றிய திராவிடர் கழகத்தின் அமைப்புச்செயலாளர் வே.செல்வம் அவர்கள் தனது உரையில், "நமது வணக்கத்துக்குரிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் சிந்தனையில் தோன்றி, அதற்கு செயல்வடிவம் உருவாக்கி அப்பணியை, பேராசிரியர் குழுவினர் ஒன்றிணைந்து செயலாற்றி, குறித்த காலத்தில் வெளியீட்டு விழா நடந்தேறியது. உலகம் முழுவதும் தந்தை பெரியாரின் கருத்துக்களை கொண்டு செல்லும் வகையில் திராவிடப் பொழில் என்ற ஆராய்ச்சி காலாண்டு மின்னிதழ் ஏடு, பகுத்தறிவு, பண்பாடு, வரலாறு,கலை, நாகரீகம், மொழி, மனிதம், போன்றவற்றை பற்றி பல கண்ணோட்டங்களில் சிறந்த ஆய்வாளர்களின் ஆய்வு கட்டுரைகளால் நிரப்பப்பட்ட இதழ். கடுகைத்துளைத்து ஏழ்கடலைப் புகுத்தி குறுகத்தறித்த குறள் என்பதைப் போல் திராவிட பொழில் மின்னிதழ், அச்சிதழ் என்னும் இரண்டு வடிவங்களில் அரங்கேறி உலகம் முழுவதும் வலம் வந்து கொண்டிருக்கின்றது. அதன் சிறப்புகளை அசைபோட்டு பார்க்க...பகிர்ந்து கொள்ளவே..அத்தலைப்பில் இவ்வாசகர் வட்ட கூட்டம் நடைபெறுகிறது. " என்று குறிப்பிட்டார்.

திராவிட இயக்கத்தமிழர் பேரவையின் பொறுப்பாளர் வழக்கறிஞர் இராம.வைரமுத்து ,பகுத்தறிவாளர் கழகத்தின் மதுரை மாவட்டத்தலைவர் சரவணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.


நிறைவாக 'திராவிடப்பொழில் ' என்னும் தலைப்பினில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் தலைவர் முனைவர் வா.நேரு உரையாற்றினார்.அவர் தனது உரையில், அய்யா ஆசிரியர் அவர்களின் எண்ணத்தில் உதித்த இந்த திராவிடப்பொழில் என்னும் இதழின் தோற்றம் குறித்தும் ,முதல் வெளியீட்டு விழா குறித்தும் குறிப்பிட்டார். உலகத்தில் வெவ்வேறு இடங்களில் இருந்து ஆய்வு அறிஞர்கள் ஐந்து பேர் இந்த இதழைப் பெற்றுக்கொண்டதையும், முன்னாள் துணைவேந்தர் அவர்கள் திராவிடப்பொழில் இதழை வெளியிட்ட செய்தியையும் குறிப்பிட்டார்.

பிப்ரவரி மாதம் நடந்த திராவிடப்பொழில் ஆய்வரங்கம் குறித்தும்,அதில் உரையாற்றிய அய்யா டாக்டர் சோம.இளங்கோவன் அவர்கள்,  பொட்டல் காடாகக் கிடந்த வல்லதில் உள்ள இடம், அய்யா ஆசிரியர் அவர்களின் தொலை நோக்குப்பார்வையால் இன்றைக்கு பெரியார் மணியம்மை நிகர் நிலைப் பல்கலைக்கழகமாக வளர்ந்து மேலோங்கி நிற்கிறது என்னும் வரலாற்றைக்குறிப்பிட்டதையும். அந்த பெருமை மிகு பல்கலைக்கழகத்தின் பெரியார் உயராய்வு மையத்தின் சார்பாக இந்த திராவிடப்பொழில் ஆராய்ச்சி இதழ்  வெளிவருகிறது என்று குறிப்பிட்டதையும்  குறிப்பிட்டார். தொடர்ந்து திராவிடப்பொழிலின் முதல் இதழில் உள்ள  ஒவ்வொரு கட்டுரையையும் எடுத்துக்கொண்டு உரையாற்றிய வல்லுநர்கள் பற்றியும்,3 மணி நேரத்திற்கு மேல் நடந்த அந்த ஆய்வரங்கில் முழுமையாகக்கலந்து கொண்டு நிறைவாக அய்யா ஆசிரியர் அவர்கள் ஆற்றிய உரையையும், விளக்கங்களையும்   குறிப்பிட்டார். உலகத்தின்,இந்தியாவில், தமிழகத்தில் இருக்கும் கல்வி நிறுவனங்களுக்குள் இந்த ஆராய்ச்சி இதழ் சென்றிருப்பது குறித்து உரையாற்றியதோடு,தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களைப் பார்க்கும் நமது தோழர்கள் எல்லோரும் தொடர்ச்சியாக இந்த இதழுக்கான சந்தா மற்றும் நன்கொடைகளைக் கொடுப்பதைப் பற்றியும் உரையாற்றினார்.
அய்யா ஆசிரியர் அவர்கள் திராவிடப்பொழில் என்னும் இதழ் பற்றிய அறிவிப்பினை விடுதலையில் வெளியிட்டது முதல் இன்றுவரை நடந்து இருக்கும் திராவிடப்பொழில் இதழின் வரலாற்றைக் குறிப்பிட்டார்.வரும் ஏப்ரல் 14-ந்தேதி திராவிடப்பொழிலின் இரண்டாம் இதழ் வெளிவருகிறது. திராவிடப்பொழில் இதழின் ஆசிரியர் குழுவில் இருக்கும், இதழின் சிறப்பு ஆசிரியர் பாரீசில் இருக்கும் கல்வியாளர் முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர், முன்னாள் துணைவேந்தர் ஜெகதீசன்,பேரா.ப.காளிமுத்து,பேரா.நம்.சீனிவாசன்,சிகாகோ டாக்டர் -பெரியார் பன்னாட்டு மைய இயக்குநர் அய்யா சோம-இளங்கோவன் அவர்களைப் பற்றிய சிறப்புகளை அவையில் எடுத்துவைத்தார். அவர்களோடு இப்போது ஆசிரியர் குழுவில் சிங்கப்பூர் கல்வியாளர் அய்யா சுப.திண்ணப்பன் அவர்களும் இணைந்திருப்பதைக் குறிப்பிட்டார்.

திராவிடப்பொழில் என்பது திராவிட இயக்கத்தின் அடுத்த கட்டப்பாய்ச்சல்,உலகம் முழுவதும் இருக்கும் கல்வியாளர்களிடம் திராவிட இயக்கத்தின் கருத்துகளைக் கொண்டு சேர்க்கும் முயற்சி.'திராவிடபொழில்,அய்யா ஆசிரியர் அவர்கள் குறிப்பிடுவதைப் போல 'எல்லோருக்கும் எல்லாம்' என்னும் திராவிடத்தை உலகக் கல்வியாளர்களிடம் கொண்டு சேர்க்கும் இந்த முயற்சிக்கு அனைவரும் உதவிட வேண்டும். திராவிடப்பொழில் என்று இணைய தளம் உள்ளது. மிக அருமையாக இந்த இணைய வடிவம் அமைக்கப்பட்டிருக்கிறது. திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் அண்ணன் வீ.அன்புராஜ்,மாணவரணி பொறுப்பாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், விடுதலை மேலாளர் சரவணன் ஆகியோர் உள்ளிட்ட  ஒரு பெரிய குழு இந்த இதழுக்காக உழைப்பை அளித்துக்கொண்டுள்ளனர். தயவுசெய்து இந்த திராவிடப்பொழில் என்னும் இணையதளத்திற்குள் சென்று பாருங்கள். இதழைப் படியுங்கள்.மற்றவர்களுக்கும் இந்த இணையதளத்தைப் பற்றிக்கூறுங்கள்.

உங்களால் ஆராய்ச்சி கட்டுரைகள் எழுத முடியவில்லை என்றால், எழுதக்கூடியவர்களை அடையாளம் கண்டு இந்த இதழைக் கொண்டுபோய்ச்சேர்க்க உதவுங்கள், உயர் கல்வி மாணவர்கள்,பேராசிரியர்கள் மத்தியில் இந்தத் திராவிடப்பொழிலை கொண்டு செல்ல உதவி செய்யுங்கள், அப்படிப்பட்டவர்களிடம் சந்தா சேகரித்துத் தாருங்கள்.மதுரையில் கேட்டவுடன் பத்தாயிரம் அளித்த இராசேசுவர் இராமசாமி அவர்களுக்கும்,திராவிடர் கழகக் காப்பாளர் அய்யா சே.முனியசாமி அவர்களுக்கு நன்றி தெரிவித்து , சந்தா அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து,இன்னும் நிறைய சந்தாக்களை சேர்ப்பதற்கு உதவி செய்யுங்க்ள்,நீங்கள் படிப்பதோடு முதுகலை, முது அறிவியல், ஆராய்ச்சிப் பட்டப்படிப்பு படிக்கும் மாணவ,மாணவிகளிடம் இதழைக் கொண்டு போய்ச்சேர்க்க உதவி செய்யுங்கள்  என்று கேட்டுக்கொண்டு, உரையாற்றினார்.
நிறைவாக எல்.ஐ.சி. அதிகாரி செல்ல.கிருட்டிணன் அவர்கள் நன்றி கூறினார்.கூட்ட நிகழ்வினை திராவிடர்கழகத்தின் மாவட்டச்செயலாளர் கவிஞர் சுப.முருகானந்தம் அவர்கள் ஒருங்கிணைத்தார்.நிகழ்வில் முனைவர் பேரா. சி.ரமசு அவர்களும் ,ஜெயப்பிரகாசு அவர்களும் திராவிடப்பொழில் இதழுக்கான ஒரு ஆண்டு சந்தாவினை வழங்கினர்.


No comments:

Post a Comment