Thursday, 24 February 2022

ஆழினி....

 தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க் கெல்லாம் இனிது.


பெற்றோரைக் காட்டிலும் பிள்ளைகள் அறிவிற் சிறந்து விளங்கினால், அது பெற்றோருக்கு மட்டுமேயன்றி உலகில் வாழும் அனைவருக்கும் அக மகிழ்ச்சி தருவதாகும். -டாக்டர் கலைஞர் அவர்களின் உரை.

எனது மகன் சொ.நே.அன்புமணி,எனது மகள் சொ.நே.அறிவுமதி இருவரும் வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதும்,எழுத்தில் தடம் பதிப்பதும் மிகுந்த மகிழ்ச்சி தருவதாகும். எனது மகன் அன்புமணி ஏற்கனவே அமேசான் இணையதளத்தில் தனது புத்தகங்களைப் பதிவேற்றி இருக்கின்றான்.

எனது மகள் சொ.நே.அறிவுமதி ,தமிழில் முதுலை முடித்துவிட்டு,முனைவர் பட்டத்திற்கு பதிவு செய்திருக்கின்றார். கொரனா காலகட்டத்தில் வீட்டில் இருந்த நேரத்தில்,அப்பா ஒரு கதை எழுதுகிறேன் என்றார். மகிழ்ச்சி என்றேன். ஆனால் முழுமையாக வாசித்துப் பார்த்தபிறகு எனக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.மேற்கோளாகக் காட்டியிருக்கும் குறள் நினைவுக்கு வந்தது. உறுதியாகச்சொல்கிறேன். இப்படி ஒரு நாவலை என்னால் எழுத முடியாது. அணிந்துரைக்காகக் கொடுத்தபோது, அய்யா முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்களும்,சிங்கப்பூர் பேராசிரியர்(ஓய்வு) ஸ்ரீலட்சுமி அவர்களும் வெகுவாக அறிவுமதியைப் பாராட்டி அணிந்துரை கொடுத்தது மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.எமரால்டு/எழிலின் பதிப்பகத்தின் உரிமையாளர்கள் நல்லினி அவர்களும் அண்ணன் ஒளிவண்ணன் அவர்களும் படைப்பை பதிப்பிக்க ஒத்துக்கொண்டதோடு,பத்தே நாளில் மூன்று முறை திருத்திக்கொடுத்ததை செம்மைப்படுத்தி 'ஆழினி 'என்னும் அந்த நாவலை அழகிய நூலாக கொண்டு வந்து கொடுத்து விட்டார்கள்.





நாளை மாலை 5 மணிக்கு ,சென்னை புத்தகக்கண்காட்சியில் ,எப்-6 ,எம்ரால்டு/எழிலின் பதிப்பக அரங்கில், திராவிடர் கழகத்தின் பொருளாளர்,எங்கள் குடும்பத்திற்கு எப்போதும் நல்வழி காட்டிடும் நண்பராக இருக்கக் கூடியவர் அண்ணன் வீ.குமரேசன் அவர்கள் வெளியிட,வாருங்கள் படிப்போம் என்னும் குழுவின் மூலமாக வாரம் இரண்டு புத்தகங்களை நல்ல ஆளுமைகளை வைத்து விமர்சனக்கூட்டம் நடத்துகின்ற பேராசிரியர் உமா.மகேஸ்வரி அவர்கள் ஆழினி நூலை பெற்றுக்கொள்கிறார்கள்.பதிப்பாளர் அண்ணன் கோ.ஒளிவண்ணன் அவர்களும்,வாருங்கள் படிப்போம் குழுவில் உள்ள ஆளுமைகளும்,திராவிடர் கழகத்தினைச்சார்ந்த தோழர்களும் கலந்து கொள்ளும் இனிய நிகழ்வு இது. வாருங்கள்.புத்தகத்தை வாங்குங்கள்.படித்துப்பார்த்து உங்கள் கருத்துகளையும் கூறுங்கள்.நன்றி.



No comments:

Post a Comment