துக்கம்....
....சிறுகதை....வா.நேரு
அலைபேசியில் பேசும்போதே அழுதுகொண்டேதான் சொன்னாள் தங்கம்.
"மீராவா? நம்ம காந்தி மகள் மீராவா??" செல்வம் திரும்பத் திரும்ப கேட்டான்.
"ஆமாங்க..."
அதிர்ச்சி என்றால் அப்படி ஒரு அதிர்ச்சியாக இருந்தது செல்வத்திற்கு.
'சாகும் வயதா மீராவுக்கு? வயது 22,23 க்குள்தான் இருக்கும். அவளது திருமணத்திற்கு இப்போதுதான் போய் வந்தது போல் இருக்கிறது.ஒரு வருடம் இருக்கும். அதற்குள் இறந்து போனாளா?' அதிர்ச்சியில் உறைந்த செல்வம் எப்படி இறந்தாள் என்று தன் மனைவி தங்கத்திடம் கேட்டான்.
"அந்தப் பிள்ளை மாசமா இருந்துச்சாம், இப்போத்தான் அவங்க வீடு நம்ம பக்கத்துல இல்லையே,இருந்தாலும் அடிக்கடி பார்த்திருக்கலாம்.மாசமா இருந்த பிள்ளைக்கு மஞ்சக்காமாலை உள்ளுக்குள்ளுயே இருந்திருக்கு,கவனிக்கல போல இருக்கு. சோர்வா இருக்கிறது மாசமா இருக்கறதுன்னாலே என்று நினைச்சுட்டு இருந்துருக்காங்க…
பின்னாடி கண்டுபிடிச்சு மருத்துவமனையில் சேர்த்துப் பார்த்தும் காப்பாத்த முடியலையாம்…
இப்போதுதான் நம்ம ஆபிஸ் பிச்சை எனக்கு போன் பண்ணி சொன்னார்"
"சரி…"போனை வைத்தான் செல்வம். சென்னைக்கு வந்திருந்த செல்வத்திற்கு இன்னும் ஒரு மாதம் சென்னையில் வேலையிருந்தது. மதுரைக்குப் போனவுடன் காந்தியின் வீட்டிற்கு போக வேண்டும், மீரா இறந்த துக்கத்தை விசாரிக்க வேண்டும். காந்தியோடு சேர்ந்து தானும் கொஞ்ச நேரமாவது கதறி அழ வேண்டும் என்று செல்வத்திற்கு தோன்றியது.
மதுரை கோரிப்பாளையம் பகுதியில் வசித்தபோது அறிமுகமானவர் காந்தி.கோரிப்பாளையம் சின்னக்கண்மாய் தெருவில் இருந்த ஒரு காம்பவுண்டில் குடியிருந்தபோது அறிமுகமானவர்.சின்னக்கண்மாய்த் தெருவில் பல வீடுகளை வாடகைக்கு விடும் நோக்கில் கட்டப்பட்ட சில காம்பவுண்டுகள் இருந்தன. பக்கத்திலேயே தபால் அலுவலகம்,தொலைபேசி நிலையம்,மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம்,இராஜாஜி மருத்துவமனை எனப் பல துறைகளில் வேலை பார்ப்பவர்கள் அந்தத் தெருவில் குடியிருந்தனர்.பக்கத்திலேயே மார்க்கெட்,மருந்துக்கடை,உணவு விடுதி என அந்தத் தெருவில் அருகிலேயே அனைத்தும் கிடைக்கும் தெரு அது.ஆதலால் சின்னச்சின்ன வீடுகளாக இருந்தாலும் பலரும் விரும்பி அந்த வீடுகளில் வாடகைக்கு குடியேறினர்.அப்படி ஒரு காம்பவுண்டில் குடியிருந்தபோது அறிமுகம் ஆனவர் காந்தி.
ஒரே அலுவலத்தில் வேலை,ஒரே காம்பவுண்டில் குடியிருப்பு என்பதால் குடும்பத்தோடு நெருக்கமானவராக மாறினார் காந்தி. மிக வெளிப்படையான மனிதர். மனதில் எதையும் வைத்துக்கொள்ளத்தெரியாது.எல்லாவற்றையும் பேசிவிடுவார்.பக்கத்து வீடு,ஒரே அலுவலகத்தில் வேலை என்ற நிலையில் குடும்ப நண்பராக மாறிப்போனார் காந்தி.
காந்தியின் மனைவி அரசியும் செல்வத்தின் மனைவி தங்கமும் நெருக்கமானார்கள்.அப்படித்தான் குழந்தைகளும் நெருக்கமானார்கள். செல்வத்தின் மகன் அரசன் தாய்த்தமிழ்ப் பள்ளியில் எல்.கே.ஜி.,யு.கே.ஜி. படித்தான். அவன் படித்த பள்ளியில் அந்த வகுப்புகளுக்கு மொட்டு,மலர் என்று பெயர் வைத்திருந்தார்கள்.எல்லாவற்றையும் தனித்தமிழில் பேசும் அரசனை,பேச வைத்துக் கேட்பதற்கென்றே ஒரு ரசிகர் கூட்டம் இருந்த்து.
அதில் மிக முக்கியமானவள் மீரா.செல்வத்தின் மகன் அரசனைவிட 6,7 வயது மூத்தவள்.அரசன் மொட்டு வகுப்பு படிக்கும்போது ,மீரா 6-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தாள்.மதுரையின் வடக்கு பகுதியில் இருக்கும் அந்தப் புகழ்பெற்ற பள்ளியில் படித்த மீரா ,வீட்டில் இருக்கும் நேரங்களில் பெரும்பாலும் செல்வத்தின் வீட்டில் இருப்பாள்.4 வயதாக இருக்கும் அரசனோடு பேசுவது மீராவுக்கு மிகவும் பிடிக்கும்.
அரசனக்கு ,க,கா,கி,கீ என்னும் உயிர்மெய் எழுத்துகளை வரிசையாகச்சொல்வதற்கு அவன் படித்த தாய்த்தமிழ் பள்ளியில் சொல்லிக் கொடுத்திருந்தார்கள். க என்று ஆரம்பிக்கும் அரசன் வரிசையாக அந்த 216 எழுத்துகளையும் வரிசையாக சொல்லித்தான் முடிப்பான். அரசன் அப்படிக் க,கா,கி,கீ,கு,கூ என்று 216 தமிழ் எழுத்துகளையும் சொல்லி முடிப்பதை கண்களை அகல விரித்து வைத்து அவ்வளவு ஆர்வமாக மீரா கேட்டுக்கொண்டிருப்பாள். நிறையக் கேள்விகளை மீராவிடம் அரசன் கேட்பான்.
ஒரு நாள் ‘நாம் இருக்கும் தெருவுக்குப் பெயர் சின்னக்கண்மாய் தெரு, அப்படியென்றால் பெரிய கண்மாய்த் தெரு எங்கே இருக்கிறது? ‘ என்று மீராவிடம் கேட்டான்.
அதற்கு அவள் முழித்த முழி இன்றைக்கும் கூட செல்வத்திற்கு நினைவில் இருக்கிறது. செல்வத்திடம் வந்து ,"மாமா,உங்க மகன் அரசன் ,கேள்வியாக் கேட்கிறான் "என்றாள். செல்வம் சிரித்துக்கொண்டே 'கேள்வி கேட்டால்,பதில் சொல்லு " என்றான்.
அப்படித்தான் ஒரு நாள் மீராவிடம் சென்ற அரசன், ‘அக்கா ,எனக்கு அழிப்பான் வேண்டும் ‘ என்றான். மீராவுக்கு ஒன்றும் புரியவில்லை.
"என்னடா வேண்டும்?"
"அக்கா ,எனக்கு அழிப்பான் வேண்டும்" அரசன் மீண்டும் சொன்னான்.
அவள் ஒன்றும் புரியாமல் முழித்தாள்.
அதைப்பார்த்து விட்டு அரசன் அவளது பள்ளிக்கூடப் பையைக் கேட்டான்.
மீரா கொடுத்தவுடன் அதில் இருந்த பென்சில் பாக்கெட்டில் இருந்து ரப்பரை எடுத்தான்.
"அக்கா,இதுதான் அழிப்பான்,இது தெரியாதா உங்களுக்கு?"
"டேய் இதுக்கு பேரு ரப்பர்டா" கலகலவென்ற சிரிப்புடன் சொன்னாள் மீரா.
"இல்லை,இல்லை இதுக்குப் பெயர் அழிப்பான்" அரசன் மீண்டும் மீண்டும் சொல்ல,அன்று முதல் அரசன் அவளுக்கு அழிப்பானாகிப் போனான். வீட்டிற்குள் வரும்போது ‘அரசன் இருக்கிறானா? ‘என்று கேட்க மாட்டாள்.
’அழிப்பான் ‘ இருக்கிறானா என்று கேட்டுவிட்டுத்தான் வருவாள்.
மீராவுக்கு ஒரு தங்கை இருந்தாள்.தம்பி இல்லை.அரசனைத் தன் தம்பியாகவே நினைத்து அவ்வளவு அன்பு அரசன் மேல் செலுத்தினாள் மீரா.பெரும்பாலும் அரசன் வீட்டில் இருக்கும் நேரங்களில் மீராவும் உடன் இருப்பாள். காந்தியின் வீட்டிற்கும் அரசன் சென்று விளையாடி விட்டு வருவான்.
மீரா பின்பு 10வது படிக்கும் போது காந்திக்கு வெளியூருக்கு மாற்றல் வந்தது. மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு மாற்றலாகி காந்தி போனபோது,தொடர்பு கொஞ்சம் குறைந்தது.
எப்போதாவது,மதுரைக்கு வரும் காந்தி,வரும்போது போனில் பேசுவார். செல்வம் வீட்டில் இருந்தால் வீட்டிற்கு வருவார்.அரசனிடம் பேசுவார்.
‘அப்பா,அழிப்பானை பார்த்து விட்டு வாருங்கள் ‘ என்று மீரா சொல்லி விட்டிருக்கிறாள் என்று அரசனிடம் வம்பு இழுத்துக்கொண்டு இருப்பார் காந்தி.
கொஞ்சம் கொஞ்சமாக தொடர்பு குறைந்தாலும்,இரண்டு குடும்பத்திற்கும் இடையே இருந்த அன்பு தொடர்ந்து கொண்டு இருந்த்து. தொலைபேசியின் வாயிலாகப் பேசிக் கொள்வது தொடர்ந்தது.
சில வருடங்கள் கழித்து மீண்டும் மதுரைக்கு மாற்றலாகி வந்திருந்தார் காந்தி.மதுரையின் வடக்குப் பகுதியில் தபால் தந்தி நகரைத் தாண்டி புது வீடு கட்டினார். வளர்ந்து வரும் பகுதி அது.தனித்தனியாக வீடுகள். அங்கேயே குடி போனார்.காந்தி செல்வம் எப்போதும் போல சின்னக்கண்மாய் தெருவிலேயே குடியிருந்து கொண்டு இருந்தான்.
பொறியியலில் முதுநிலைப் பட்டம் முடித்த மீராவுக்கு சென்ற வருடம்தான் திருமணம் நடைபெற்றது. மீரா காதலித்த பையனுக்கே தன் பெண்ணை மணம் முடித்துக்கொடுத்தார் காந்தி. மதுரையில் நடைபெற்ற திருமணத்திற்கு தான்,தன் மனைவி,தன் பிள்ளைகள் என நால்வரும் சென்றிருந்தனர்.
மணமேடையில் அமர்ந்திருந்த மீரா,சிரித்துக்கொண்டே செல்வத்தின் பக்கத்தில் இருந்த அரசனைப் பார்த்து
"வாடா,அழிப்பான் வாடா" என்றாள்.
தன் பக்கத்தில் அமர்ந்திருந்த மணமகனிடமும் அரசனைப் பற்றி ஏதோ கூற.. அவர் சிரிக்க,இப்போது வளர்ந்து 12-ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த அரசன் வெட்கப்பட்டுக்கொண்டு ,செல்வத்தின் பின்னால் வந்து ஒட்டி மறைந்து நின்றது எல்லாம் நினைவுக்குள் ஓடியது செல்வத்திற்கு.
மீராவைப் பற்றிய சிந்தனைகளே ஓடிக்கொண்டிருந்த்து செல்வத்திற்கு. குழந்தையை இழப்பது என்பது எவ்வளவு பெரிய துன்பம்? அய்யோ,இந்தத் துன்பத்தை காந்தியால் எப்படி தாங்க முடியும்?மீராவின் மேல் உயிரையே வைத்திருந்தாரே மனுசன்…எங்கே போனாலும்,சின்னப்பிள்ளையாக இருக்கும்போது மீராவைக் கூப்பிட்டுக்கொண்டே அலைவாரே,அவளின் படிப்பிற்காக தனிப்பயிற்சிக்காக எங்கெல்லாம் மனிதன் அழைத்துச்செல்வார் என்று மீராவைப் பற்றியும் அவரது தந்தை காந்தியைப் பற்றியுமே நினைவு ஓடிக்கொண்டிருந்தது செல்வத்திற்கு.
மதுரைக்குச் சென்றவுடன்... காந்தி வீட்டிற்குச்செல்ல வேண்டும். இந்த இறப்பைக் கேட்கவேண்டும் என்று முடிவு செய்து வைத்திருந்தான் செல்வம்.அதே போல ஒரு மாதம் கழித்து ரயிலில் வந்து இறங்கியவுடன்,வீட்டிற்கு வந்தவன் உடனே காந்தியின் வீட்டிற்கு கிளம்பினான்.தங்கத்தையும் அழைத்துக்கொண்டு,மதுரை தபால் தந்தி நகரில் இருக்கும் காந்தியின் வீட்டிற்குச்சென்றவன்,வீடு பூட்டிக் கிடப்பதைப் பார்த்து திகைத்தான்.
காந்தி ஒரு வருடத்திற்கு முன்புதான் ஓய்வு பெற்றிருந்தார்.அவர் ஓய்வு பெறும் மாதத்திற்கு முந்தைய மாத்த்தில்தான் மீராவுக்கு திருமணம் நடந்த்து. ஒரு மகளின் திருமணத்தையாவது,தன்னுடைய சர்வீஸ் காலத்திலேயே நட்த்தி விட்டோம் என்னும் திருப்தி காந்திக்கு இருந்தது.காந்தியின் பக்கத்து வீட்டில் விசாரித்தபோது,காந்தி தன் மகள் மீரா இறந்த 10 நாளிலேயே வீட்டைப் பூட்டி விட்டுச்சென்று விட்ட்தாகவும்,இப்போது எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் சொன்னார்கள்.
'சே,என்ன இப்படி ஆகிவிட்டது,ஒரு இறப்பைக் கூட உடனே வந்து நம்மால் கேட்க முடியவில்லையே' என்று நொந்துபோனான் செல்வம்.
'நீயாவது உடனே போய் கேட்டிருக்கலாம் அல்லவா?' என்று தன் மனைவி தங்கத்திடம் பாய்ந்தான்.
‘ஏங்க ,அந்த நேரத்தில் எனக்கே மிகுந்த மனவேதனையாகத்தான் இருந்தது.அந்தக் கொடுமையை என்னத்த போய்க் கேட்க ? என்று நான் போகவில்லை’ தங்கத்திடமிருந்து வந்த பதில் இதுவாக இருந்தது.
காந்தியைக் கண்டு பிடிக்க முடியவில்லை செல்வத்தால். அவரது அலைபேசி தொடர்பில் இல்லை என்று பதில் வந்தது.
‘வேறு எண் மாற்றி விட்டாரோ,என்னவோ ? ‘என்றாள் தங்கம்.
மீரா இறந்த துக்கத்தைப் போலவே காந்தியைப் பார்க்க முடியாததும் மிகப்பெரிய துயரமாக இருந்தது செல்வத்திற்கு.
போன முறை ,தான் பிறந்த கிராமத்திற்குப் போனபோது,செல்வத்தின் தாய் மாமன்,’டேய் ,அந்த வீட்டு இறப்பைக் கேட்டு விட்டாயா?’ என்றார்.
’இல்லை மாமா, நாளாகிப் போச்சு,இப்போ போய் கேட்டா ஒரு மாதிரி இருக்காதா?’ என்று கேட்டான் இவன்.
’அவர் இறந்தபிறகு இப்போதுதானே ஊருக்கு வர்ற,போய்க் கேட்டு வந்திரு, நல்லதுக்கு வரலைன்னாலும் பரவாயில்லை,கெட்ட்துக்கு வந்திரணும்.வர முடியலைன்னா,வர்ற சமயத்திலே கேட்டுறனும் ‘என்று சொன்னார்.அதனைப் போலவே அந்த இறப்பு வீட்டில் போய் இழவைக் கேட்டு வந்தான் செல்வம்.
எப்போதோ ஒரு புகழ்பெற்ற பேச்சாளர்,தனது ஒரே மகனைப் பறிகொடுத்த அந்தப் பணக்காரரை தான் ஆறுதல் படுத்திய விசயத்தை செல்வத்திடம் பகிர்ந்து இருந்தார்.
பெரிய பணக்காரர்.வீடு,வாசல்,நில புலன் என்று மிகச்செல்வாக்கு உள்ள மனிதர்.அவரது ஒரே மகன் மோட்டார் பைக் விபத்தில் சிக்கி ,உயிரிழந்த போது அப்படியே கவலைப் படுக்கையில் படுத்து விட்டார்.
நான் இலக்கிய எடுத்துக்காட்டுகளைச்சொல்லி அவரைத் தேற்றினேன் என்று அந்தப் பேச்சாளர் சொல்லியதெல்லாம் நினைவுகளில் ஓடியது செல்வத்திற்கு.
காந்தியைப் பார்த்தவுடன் அவரிடம் என்னவெல்லாம் சொல்லி அவரை எப்படியெல்லாம் தேற்ற வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருந்தான் செல்வம்...
ஒருநாள் தல்லாகுளம் கருப்பணசாமி கோவில் அருகில் உள்ள வங்கியின் முன்னால் காந்தி நிற்பது தெரிந்தது செல்வத்திற்கு.
மதுரை கீழமாசி வீதிக்குப் போகவேண்டும் என்று போய்க்கொண்டிருந்த செல்வம், டக்கென்று மோட்டார் சைக்கிளை ஓர் ஓரமாக நிப்பாட்டி விட்டு ,காந்தி நின்ற இடத்தில் பார்த்தான்.காந்தியைக் காணவில்லை.
'இப்போதுதானே பார்த்தோம்? அதற்குள் காணவில்லையே…' என்று சுற்றி முற்றி,சுற்றி சுற்றிப் பார்த்தான். பின்பு தான் பார்த்தது வேறு ஆளாக இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டே வண்டியை எடுத்துக்கொண்டு போய்விட்டான்.
அன்றைக்கு திருமங்கலம் டவுன் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து,மதுரை தல்லாகுளத்திலிருந்து திருமங்கலத்திற்கு போய்க்கொண்டிருந்தான்.மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றது. அடுத்த பிளாட்பார்மில் காந்தி நிற்பது தெரிந்தது செல்வத்திற்கு.
திருமங்கலம் போவதைப் பாதியிலேயே நிறுத்திவிட்டு,அரக்க பரக்க இறங்கி,அடுத்த பிளாட்பாரத்திற்கு ஓடினான் செல்வம். கண நேரத்தில் காந்தியைக் காணவில்லை.சுற்றி சுற்றிப் பார்த்தான்.காணோம்.செல்வம் இறங்கிய திருமங்கலம் வண்டி ஏற்கனவே போயிருந்தது.அடுத்த பேருந்தைப் பிடித்து திருமங்கலத்திற்குப் போனான்.
இன்றைக்கு மதுரை காந்தி மியீசியத்திற்குப் போயிருந்தான். அங்கு இருக்கும் நூலகம் செல்வத்திற்கு எப்போதும் பிடிக்கும்.மாதம் ஒரு முறை நூல் அறிமுகம் செய்வார்கள்.காந்தியாரின் நினைவுச்சொல்லும் பெரும் பரப்பிடம் அது. தூரத்தில் காந்தி நிற்பது போலத் தெரிந்தது செல்வத்திற்கு.
பின்னால் இருந்து பார்த்த செல்வத்திற்கு,அவர் காந்தி மியூசித்தைப் பார்த்தவண்ணம் ,முன்னால் பார்த்தவாறு இருப்பதுபோலத் தெரிந்தது.எதுவும் சொல்லாமல் காந்தியின் அருகில் சென்ற செல்வம் ‘காந்தி ‘ என்று சொல்லி மெல்லக் காந்தியைத் தொட்டான்.
பின்னால் திரும்பிப் பார்த்த காந்தி செல்வத்தைப் பார்த்தவுடன் ஓவென்று அழுதுவிட்டார்.
"ஏய்யா,என்னை இப்படித் துரத்தித் துரத்திக் கொல்ற,என் மகள் இறந்த துக்கத்திலிருந்து என்னாலே விடுபடவே முடியலை.வேறு வீடு மாறி,2,3 மாதம் வீட்டுக்குள்ளேயே கிடந்தேன்.இப்போத்தான் வெளியில வர்றேன்… உன்னையைப் பாத்தா என் மகள் ஞாபகம்தான் வருது.ஒவ்வொரு இடத்திலயும் உன்னையைப் பார்த்துப் பார்த்து ஒளியறனே,என்னையை விடாம துரத்திரயே இப்படி" அழுதுகொண்டே, நிறுத்தியிருந்த தன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார் காந்தி. திகைத்து நின்றான் செல்வம்.
மிக
ReplyDeleteஅருமையான
சிறுகதை என்று சொல்வதா பலரின் வாழ்க்கை கதை என்று முடிப்பதா தெரியவில்லை. மனதில் மிகவும் ரணத்தை ஏற்படுத்திவிட்டது இச்சிறுகதையின் வாசிப்பு. கதையை வாசிக்க ஆரம்பிக்கும் போது சிரித்துக்கொண்டே ஆரம்பித்தேன் செல்வம் தங்கம் அரசன் அளிப்பான் என்ற பெயர் தெரிவுகள். அப்பளுக்கற்ற அன்பும் அலாதியான நேசங்களும் மனித வாழ்க்கையின் உயிர்ப்புக்கு காரணமாக இருக்கிறது. மிகவும் அருமை
அர்ஷா மனோகரன்...முக நூலில்...
மிக்க நன்றி தங்கள் கருத்திற்கு...வா.நேரு
நான் மதுரையில் பார்த்த இடமெல்லாம் இருக்கு. அண்ணா நகர், இன் கம் tax ஆபீஸ், வடமலையான் ஆ ஸ்பிடல் மட்டும் இல்லை .
ReplyDeleteசார், கதை சூப்பர்
சபா.ரத்தினம்.....முக நூலில்.
கதை வாசிப்பிற்கும்,கருத்திற்கும் நன்றிங்க சார்....வா.நேரு
Touching Story Sir.Very nice.
ReplyDeleteஎழுத்தாளர் வாசுகி தேவராஜ்
வாட்சப்- மூலமாக
நன்றிங்க...வா.நேரு
துக்கத்தை விட துக்க விசாரிப்பு துக்கத்தை அதிகரிக்கவே செய்கிறது எனும் நுண்ணுர்வை மெல்லியதாய் எடுத்து சொல்லும் கதை.
ReplyDelete(பி.கு. பெரியார் புக் பற்றி ஏதும் இல்லை மை லார்ட் 😊😊)
எழுத்தாளர் வாசுகி தேவராஜ்
வாட்சப்- மூலமாக
நன்றிங்க...வா.நேரு
துக்கம் சிறுகதை தொடக்கத்தில் ஆர்வமாக ஆரவாரமான நடையில் இருந்தாலும் முடிவு அதிர்வலைகளை ஏற்படுத்தி விடுகிறது.
ReplyDeleteஇக் காலத்தில் தான் எவ்வளவு நோய்கள் புதிது புதிதாக. அவை என்னவென்று ஆராய்ந்து முடிப்பதற்குள் உயிர் முடிந்து போகிறது.
நமக்கு வேண்டியவர்கள் மரணம் நம்மை வெகுவாக பாதித்து விடும். அவர்களுக்கு ஆறுதல் சொல்லலாம் என்று நினைத்தால் அதுவே அவர்களுக்குப் பெரும் துயரை உண்டாக்கி விடுகிறது. உங்கள் கதைகள் உணர்வுப் பூர்வமான மிகவும் எதார்த்தமான நடையில் இருக்கிறது.கதை படிப்பது போல் அல்லாமல் பக்கத்து வீட்டில் நடப்பதை நேரில் பார்ப்பது போன்ற எண்ணமே வருகிறது.
சில நேரங்களில் அழாதீங்க என்று சொல்லும் போது தான் ஏனோ அதிக அழுகை வருகிறது. அப்படித்தான் ஆறுதல் வார்த்தைகள் கூட.
மிகுந்த பாராட்டுக்கள் சகோ...
எழுத்தாளர் சுசிலா,நூலகர்,புதுக்கோட்டை.
கருத்திற்கு நன்றி.வா.நேரு
அண்ணா அருமையான சிறுகதை. ஒரு உறவின் இழப்பு என்பது மிகவும் கொடுமையானது. இழந்தவர்களுக்கு மட்டும் அதன் வலி புரியும்.
ReplyDeleteஇளமதி ,மதுரை.,முக நூலில்
நன்றி .....வா.நேரு
இழப்பின் வலி இழந்நவர்களுக்கு மட்டுமே தெரியும்... நல்ல தொய்வில்லாத நடை...
ReplyDeleteகவிஞர் சுப.முருகானந்தம் ...முக நூலில்
நன்றிங்க அண்ணே...வா.நேரு
ஆம்... உண்மைதான். ஆற்றுப்படுத்துதல்.... தேற்றுதல் என்பதெல்லாம் பல நேரங்களில் பலரால் ரணங்களை கிளரவே உதவியாக இருக்கிறது. இது ஓரளவுக்கு புரிந்ததாலோ... என்னவோ, என்னைப் போன்ற சோம்பேறிகள் அதிகமாக துக்க விசாரிப்புகளில் ஈடுபடுவதில்லை. ஒரு வாழ்வியல் குறும்படத்திற்கான கதை சார் இது. அதையும் முயன்றுதான் பாருங்களேன்.பாராட்டுக்கள், அனுபவம்... இவற்றோடு வெற்றியும் கிட்டலாம்!
ReplyDeleteகதையைப் படித்து கருத்து கூறியமைக்கு நன்றிங்க சார்.அடுத்த கட்டத்திற்கான ஆலோசனைக்கும் நன்றி..
ReplyDeleteகதையைப் படித்து கருத்து கூறியமைக்கு நன்றிங்க சார்.அடுத்த கட்டத்திற்கான ஆலோசனைக்கும் நன்றி..
ReplyDeleteமிகவும் அருமையான வாழ்வியல் கதை. முடிக்கையில் மனதில் ஏறிய துக்கம் விலகவில்லை..கதையாசிரியராக உங்களைப் பார்க்கையில் பெருமிதம்..
ReplyDeleteவளர்க மேலும் 👍
தூப்புக்காரி நாவல் புகழ் எழுத்தாளர் மலர்வதி அவர்கள் வாட்சப்பில்..
மிக்க நன்றி..மகிழ்ச்சி தங்கள் கருத்திற்கு...வா.நேரு