எனது தோழர்கள் : மாகாளிபட்டி மா.பாலகிருஷ்ணன் அவர்கள்....
மதுரை பெரியார் பெருந்தொண்டர் மாகாளிபட்டி அண்ணன் மா.பாலகிருஷ்ணன் அவர்கள் நேற்றிரவு(9.3.2022 ) மறைந்தார்.அவருக்கு வயது 77. அந்தப்பகுதியில் இருக்கும் அண்ணன் கேசவன் அவர்களும் ,பாலகிருஷ்ணன் அவர்களும் இரட்டையர்கள் போல. திராவிடர் கழக,பகுத்தறிவாளர் கழக நிகழ்ச்சி என்றால் இருவரும் இணைந்தே வருவார்கள்.இரட்டையர்கள் போல இருப்பார்கள்.அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்களின் தந்தை கே.மாணிக்கம் அவர்கள் திராவிடர் கழகத்தில் இருந்தவர்.தந்தை பெரியாரின் காலத்தில் இயக்கப்பணி ஆற்றியவர்.அதனால் அண்ணன் பாலகிருஷ்ணன்-விஜயலெட்சுமி திருமணத்தைத் தந்தை பெரியார் நடத்தி வைத்திருக்கிறார். எப்போதுமே தந்தை பெரியார் தலைமையில் வாழ்க்கைத்துணை நலத்தை ஏற்றுக்கொண்டவர்கள், என்னைப்போன்றவர்கள் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற திருமணத்தைச்சொல்வது போல பெருமைபடச் சொல்வார்கள்.அப்படி அடிக்கடி தன்னுடைய திருமண நிகழ்வு,அந்த நிகழ்வில் தந்தை பெரியார் பேசிய பேச்சுகள் போன்றவற்றை நினைவு கூர்ந்து தோழர்களோடு பகிர்ந்து கொள்வார்.மகிழ்ச்சி கொள்வார்.
மிக எளிமையாக இருப்பார்.பெரிய பொருளாதார வசதிகள் இல்லை. ஆனால் தன்னால் முடிந்த நன்கொடையை இயக்க நிகழ்ச்சிகளுக்கு மனமுவந்து கொடுப்பவர்.தனது தந்தை கே.மாணிக்கம் அய்யா வழிகாட்டுதலில் இளமையில் இருந்தே கருப்புச்சட்டைக்காரராக வளர்ந்தவர்.வாழ்ந்தவர்.அய்யா நீறுகாத்தலிங்கம் அவர்கள் மதுரை மாவட்டத்தலைவராக இருந்த காலத்திலிருந்து,கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிடர் கழகத்தின் ஏதேனும் பொறுப்புகளில் இருந்து பணியாற்றியவர்.தல்லாகுளத்தில் தந்தை பெரியார் சிலை திறப்பு வரலாற்று நிகழ்வு.அந்த நிகழ்விற்கு மதுரை மாநகர் முழுவதும் திராவிடர் கழகக் கொடிகளைக் கட்டும் பொறுப்பை ஏற்று சிறப்பாகக் களப்பணியாற்றியவர்.
அய்யா ஆசிரியர் அவர்களின் இரங்கல்
மதுரை மாநகரில் விடுதலை பத்திரிக்கை வழங்கும் பணியை மேற்கொண்டவர். மிதிவிண்டியில் ஏறி மிதித்து,மதுரை மாநகர் முழுவதும் வலம் வந்து விடுதலைப் பத்திரிக்கையை சந்தாதாரர் வீடுகளில் வழங்கியவர். மாநில அமைப்புச்செயலாளர் அண்ணன் வே.செல்வம் அவர்கள் "விடுதலை சந்தா சேர்ப்பு பணி, மாநாடு, கழக நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள்,எது நடந்தாலும் அவரும் கொடுத்து நண்பர்களிடத்திலும் நன்கொடை பெற்றுக்கொடுக்கும் கொடையுள்ளம் கொண்டவர்.இயக்கப்பணி காரணமாக சந்திக்கும் போதெல்லாம் புன்முறுவலோடு வரவேற்று தன்னிடம் உள்ள சிறிய தொகையை வழங்கி மகிழ்ந்து மிகுந்த உற்சாகப்படுத்துவார்.அமைதியாகவும் கனிவாகவும் பேசக்கூடியவர். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் மீது எல்லையற்ற அன்பு கொண்டவர்.ஆசிரியர் அவர்களை சந்திக்கின்றபோது என்ன பாலகிருஷ்ணன் நலமாக இருக்கின்றீர்களா ? என்று ஆசிரியர் அவர்கள் கேட்டவுடன் உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் ததும்ப அய்யா நீங்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழவேண்டும் அய்யா என்று படபடத்தகுரலில் சொல்லியது இன்றும் நம் செவிகளில் ஒலிக்கிறது." என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டிருந்தார்.
எனது கருப்புச்சட்டைத் தோழர்கள் எளிமையானவர்கள். ஆனால் இனிமையானவர்கள்.பொதுத்தொண்டில் மான அவமானம் பாராதவர்கள். தொண்டறத்தில் முன் நிற்பவர்கள்.எத்தனையோ எதிர்ப்புகள் வந்தாலும் ,தந்தை பெரியார் கொள்கையைப் புரிந்து கொண்ட காரணத்தால் கொள்கை ரீதியாக களத்தில் எதிர்த்து நிற்பவர்கள்.உண்மையை உரக்க சொல்ல அஞ்சாதவர்கள்.அதே நேரத்தில் மிகப்பெரிய மனித நேயமிக்கவர்கள்.அவருடைய இணையர் விஜயலெட்சுமி அவர்கள். ,அவரது மகன் எழிலரசன்,பொறியாளராக இருக்கிறார்.ஒரே மகனை நன்றாகப் படிக்கவைத்து நல்ல பொறுப்பில் இருக்க வைத்திருக்கிறார் அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்களின் உடல் இன்று(10.03.2022) மாலை 3.30 மணி அளவில் ..கழகத்தோழர்களின் இரங்கல் உரைக்குப் பின்பு "வீரவணக்கம்! வீரவணக்கம்! பெரியாரின் பெருந்தொண்டர் அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு வீரவணக்கம்" என்னும் முழக்கத்தோடு வேனில் ஏற்றப்பட்டு,கீரைத்துறை மின் மயானத்தில் எரியூட்டப்பட்டது.எந்த வித மூடச்சடங்குகள் இல்லாமல் இறுதி நிகழ்வு நடந்தது. ஒத்துழைத்த அண்ணன் பாலகிருஷ்ணன் அவர்களின் உறவினர்களுக்கு நன்றி.
தந்தை பெரியாரின் தொண்டர்கள் மறைந்தாலும் தாங்கள் வாழ்ந்த காலத்தில் கடைப்பிடித்த மனித நேய அணுகுமுறையால் இறப்பிற்குப் பின்னும் முன் உதாரணமாக வாழ்கிறார்கள்.நெஞ்சுரமும்,தந்தை பெரியாரின் கொள்கையில் பிடிப்பும்,இன்றைய தலைவர் அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மீது வற்றாத பாசமும் அன்பும் கொண்ட அண்ணன் மாகாளிபட்டி மா.பாலகிருஷ்ணன் அவர்கள் இறந்தாலும்.நமது நெஞ்சங்களில் என்றும் வாழ்வார். வீரவணக்கம் அண்ணன் மாகாளிபட்டி மா.பாலகிருஷ்ணன் அவர்களுக்கு....
No comments:
Post a Comment